தம்பா (நோர்வே) கவிதைகள் இரண்டு!

- தம்பா (நோர்வே) -1. இருப்பில் இல்லாத கடன்.

இரண்டு வீடு
மூன்று கார்கள்
இலட்சம் இலட்சமாக பணம்
வங்கி வைப்புகளில் இருந்தும்
நேரத்தை கடன் வேண்டியே
செலவு செய்யும் 
மேலத்தேய பிச்சைக்காரர்கள் நாம்.

நேற்றய தினமும்
நேற்றய முன் தினமும்
இன்றய தினத்திலிருந்து
நேரத்தை திருடி தின்று
ஏப்பம் விட்டு விடுகின்றன..

நாளைய தினத்திலோ
நாளைய மறு தினத்திலோ இருந்து
நேரத்தை கடன் வேண்டியே
செலவு செய்ய வேண்டிய நிலை இன்று.
நாளாந்த கடனாளி மீண்டுவிடுவான்.
நாமோ ஆயுள் கடனாளியாக
சபிக்கப்பட்டவர்கள்.  

நேரம் பொன்னானது தான்,
இந்த பொன்னை மட்டும் தான்
யாராலும் திருட முடிவதில்லை.
நான் மட்டுமே திருட முடிகிற
பாதுகாப்பான வங்கிக்கணக்கு.

எனக்கு நானே கடனாளியாகும்
காலக் கணிதம் இது.
வெளியே சொல்லி சிரிக்கமுடியாத
சோகமானாலும் வசதியாக போகிறது
இந்தக் கடன் மட்டுமே
யாருக்கும் தெரியவராததால்
மானத்தை காத்தும் வைக்கிறது.

வரவையும்  செலவையும்
எந்த கம்ப்யூட்டரினாலும்
விடுவிக்க முடியாதது புதிர்
நேரக்கணக்கு மட்டும் தான்.

அனுமார் வால் போல்
நீண்டு வளர்கிறது நேரக்கடன்.
ஆயினும்
மூன்றாம் உலக நாடுகளை போல்
இதுவும் திரும்பிச் செலுத்தபடாத
அதிசய கடனாகிறது.

நேரக் கடனை வசூலிக்க
எந்தக் கடன் காரர்களும்
என் வீட்டு கதவை தட்டியதில்லை,
எமதர்மராசாவை தவிர..

2. ஓரடி முன்னே, ஈரடி பின்னே.

- தம்பா (நோர்வே) -முக்காலமும்´ டிஜிற்றல் ` பூச்சில்
சுகந்தம் என
உடல் மகிழ்ந்து
சுமைகளோடு மெல்ல மெல்ல
முன்னேறி தவழ்கிறது.

நெருப்பையும், சில்லையும் கண்டறிய 
கற்காலத்திற்கு பறக்கின்ற
தலையின் தீவிர கழிவிரக்கம் இது.

குருகுலம் தொடங்கி
ஆண்டான் அடிமை
சமூகத்தை மீட்டெடுக்கும்
ஆசையில் விக்கி தவிக்கிறது.

குருடர்களுக்கு எல்லாம்
ஒற்றைக் கண்ணன் மட்டுமே
இராஜாவாக முடியும்.

இது விதியன்று
சதியின்  மதியுமன்றோ?