1. மறந்த கதை
தலை பெருத்து விழிபிதுங்க
காற்றுப்போன பலூன் போல
உடல் ஒடுங்கி
முதுகெலும்போடு ஒட்டிக்கொள்கிறது,
அரித்துக் கொட்டிய
சுவாசப்பையின் நாளங்கள்
ஆக்சிஜன் காற்றை உள்ளிழுத்து
வைத்துக் கொள்ள முடியாதளவுக்கு
ஆயிரம் ஓட்டைகள்
கணத்தில் விழுந்து விடுகிறது.
ஈக்களும், கொசுக்களும்
புகையடித்து சுருண்டு வீழ்ந்து
துடிக்கும் போது
ரசித்து நகைத்தது போல்
பிஞ்சுகளின் மரண வலியையும்
மூச்சு திணறலையும்
நாசிகளின் பேரன்கள்
தொலைக்காட்சியில் லயித்துக் கொள்கின்றனர்.
மனித குலம் மேம்பட
மறவராய் புறப்பட்ட செம்பட்டை
மாற்றான் தோட்டத்து
மல்லிகைப் பூவை கூட
மலர விடாது தடுத்துவிடுகிறது. கணமும் தினமும்
நாசியத்தை மனச்சட்டியில் வைத்து
எரிக்கும் அயலவன்
முறிந்து விழும் முதுகெலும்புகளை சேகரித்து
சேனை படைக்கு
கவசம் தயாரிக்க தவமிருக்கின்றான்..
மத்திய கிழக்கில்
தொடங்கிய போர்கள்
மூன்றாம் உலக மாகாயுத்தத்திற்கான
அறிகுறியாக இருக்கலாமோ என
யூகிக்க சிரமப்பட்ட போதெல்லாம்
இல்லவே இல்லை
இவை இரண்டாம் உலக மாகா யுத்தத்தின்
நீட்சி தான் என
அறைந்து சொல்கின்றன
இரசாயன குண்டுகள்.
´அவுஸ்விட்ச்´ நாசி வதைமுகாம்
வரலாற்றின் முடிவல்ல,
அது சிரியாவில்
நடமாடும் முகாம்களாக மீளமைக்கப்படுகிறது.
2. ஐ போனில்´சுட்ட வடை
காற்றை கிழித்து
கிழிந்த சட்டை போட்ட
நெளிந்த சைக்கிள்
சிறுவனின் கடிவாளத்தில் கிடுகிடுக்கிறது.
சைக்கிள் பாருக்குள்ளால்
அந்தப்பக்கம் இந்தப்பக்கமுமாக
மூச்சிரைக்கும் தலையும் உடலும்.
வறண்ட வாய்க்கால் மதகில்
படுத்தபடி
உச்சி வெய்யிலுக்கு புகை போடும்
உயர் தர மாணவனைக் கண்டு
வெறுங்காலை டயரில் தேய்த்து
எட்ட நின்று நிதானித்து சைக்கிள்
உருண்டு வந்து கேட்டது
” பொட்டலமா? போத்திலா?” .
எட்டாத ஸீட்டுக்குள்ளிருந்து
`குடு´ பொட்டலம் வெளிவந்து
பணப்பொட்டலம் உள்ளேறிக் குந்தியது.
கொடுத்தும் வேண்டியும்
உயிர் பரிமாறும் காலம் இது.
கிழிந்த சட்டைக்கோ
ஐ போன் வேண்டக் கனவு,
தெளிந்த சட்டைக்கோ
ஐ போன் விட்டு
வெளி நாடு போகக்கனவு.
வீதியால் நெஞ்சை நிமிர்த்தி வந்த
பெரிய வாத்தியார்
கண் காது மூச்சு எல்லாவற்றையும்
உள்ளிளுத்து மரக்கட்டையாய் மாறி
கரையால் ஒதுங்கிப் போனார்.
சந்தியில் பட்ட நால்வரிடம்
`ஊர் கெட்டுப்போச்சு´ என பல்லவி சொல்ல
`ஊரோட மனச்சாட்சி´ என
சரணம் சொன்னது சாராய நாற்றம்.
ஓயாத தேசியம்
ஒழித்துப்போட்ட வேர்கள் இவை.
வறுமையின் இயலாமை
வெறுமையின் நிழலில் துளிர்க்கிறது,
“கறையான் அரித்த தண்டவாளமும்
காண்பாயோ ?,
கண் கெட்டபின்
சூரிய நமஸ்காரமும் செய்வாயோ?”