‘தற்கொலைக் குறிப்பு’ கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

கவிஞர் நிந்தவூர் ஷிப்லியின் தற்கொலைக் குறிப்பு என்ற கவிதைத் தொகுதி இந்தியாவின் பிளின்ட் பதிப்பகத்தினரால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இவர் 2002 இல் சொட்டும் மலர்கள், 2006 இல் விடியலின் விலாசம், 2008 இல் நிழல் தேடும் கால்கள் ஆகிய மூன்று நூல்களை வெளியிட்டவர். 77 பக்கங்களில் வெளிந்துள்ள இந்த நூலானது போர்ச் சூழல் கால கவிதைகளால் நிறைந்திருக்கிறது.கவிஞர் நிந்தவூர் ஷிப்லியின் தற்கொலைக் குறிப்பு என்ற கவிதைத் தொகுதி இந்தியாவின் பிளின்ட் பதிப்பகத்தினரால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இவர் 2002 இல் சொட்டும் மலர்கள், 2006 இல் விடியலின் விலாசம், 2008 இல் நிழல் தேடும் கால்கள் ஆகிய மூன்று நூல்களை வெளியிட்டவர். 77 பக்கங்களில் வெளிந்துள்ள இந்த நூலானது போர்ச் சூழல் கால கவிதைகளால் நிறைந்திருக்கிறது. யுத்தம் விழுங்கிய அத்தனை அப்பாவி உயிர்களுக்காகவுமே இந்த நூலைக் கவிஞர் சமர்ப்பணம் செய்துள்ளார். பதிப்பாளர் உரையில் ஜாபர் ஷாதிக் அவர்கள் எத்தகைய வீரனும் வெல்ல முடியாத ஒன்றான மரணத்தின் கடைசி நுனிவரை சென்று யாரும் அனுபவித்துவிடாத ஒன்றை அனுபவித்திருப்பாரோ என்கிறளவு நினைக்க வைக்கிறது ஷிப்லியின் வரிகள் என்று குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த சேவியர் ஈழம், தமிழன் எனும் வார்த்தைகள் அரசியலுக்காக வெட்டப்படும் சதுரங்கக் காய்கள் எனும் நிலையில் தமிழக (இந்தியா) வீதிகள் வியூகங்கள் வகுத்துக்கொண்டிருக்கின்றன. அந்த வீதியின் அறைகளில் இருந்துகொண்டு ஷிப்லியின் கவிதைப் பக்கங்களை புரட்டப் புரட்ட விரல்களின் நுனிகளிலும் உணர முடிகிறது வழியும் குருதியின் பிசுபிசுப்பை. துயரத்தின் தெருக்களின் வழியாக அலைந்து திரியும் ஒரு பிரமை பிடித்தவனின் மனநிலைக்குள் என்னை இறக்கி வைத்தது ஷிப்லியின் கவிதைத் தொகுப்பு என்றால் அதில் எள்ளளவும் மிகையில்லை என்கிறார். அதே போல் ராஜகவி றாஹிலும் விழிகளில் குருதி வடிய வைக்கும் கவிதைகள் என்ற தனது கருத்தை துள்ளியமாக பதியவைத்துள்ளார். இதே பாணியிலான கருத்தை ஆணியடித்தாற் போல வெற்றி வானொலியின் நிகழ்ச்சிப் பணிப்பாளர் ஏ.ஆர்.வீ. லோஷன் அவர்களும் முன்வைத்துள்ளார்.

நூலாசிரியர் தனதுரையில் ஒரு காலம், தேசம் கொடூரத்தின் உச்சிக் கிளையில் தள்ளாடிய காலம். அது பற்றிய பதிவுகள் இன்னொரு தள்ளாடும் காலத்தை தவிர்க்க உதவும் என்பது என் அசையாத நம்பிக்கை. அந்த நாட்களில் அப்பாவி மக்கள் அல்லலுற்ற கணங்களையும் ஏக்கக் கனவுகளையும் பதிவுகளாக்கும் முயற்சியே இந்நூல். யுத்தம் குறித்தான பல்லாயிரம் கவிதைத் தொகுப்புக்களில் கடைசியாக வெளிவரும் நூலாகவே இந்நூலை உங்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன். இனி இப்படியொரு நூல் வராது. வரவும் கூடாது என்று பிரார்த்திக்கிறார். முதல் கவி என் ப்ரிய அன்னைக்கே என்ற கவிதையில் (பக்கம் 01) அன்னையின் பெருமைகளைப் பின்வருமாறு மீட்டிப் பார்க்கிறார்.

அவள் மரணத்தின் முகவரியை முத்தமிட்டுத் திரும்பிய போதே எனது முகவரி எனக்குக் கிடைத்தது. அவள் குருதியின் முகவரிகளே எனது சுவாசம். கருணையின் முகவரி அவள் கண்களில் உறைகிறது. பொறுமையின் முகவரி அவள் மௌனத்துள் நிறைகிறது.

தாயன்புக்கு ஈடானதொரு அன்பு உலகில் எவரிடமும் கிடைக்காது. ஆனால் அத்தகைய அன்பையும் உதாசீனப் படுத்தும் எத்தனைப் பேரை நாம் அறிந்திருகின்றோம். அன்னையின் அன்பு எதிர்பார்ப்பு இல்லாதது. அரைவாசியில் நிற்காதது.

யுத்தம் முடிவடைந்து போனாலும் அது விட்டுச் சென்ற ரணங்கள் ஆறப் போவதில்லை. ஊரிழந்து உறவினரிழந்து தாயிழந்து தந்தையிழந்து எத்தனைப் பேர் இன்றும் காணாதவர்களைத் தேடித் தவிக்கின்றனர்? உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்றே தெரியாமல் அன்றாடம் அவர்களின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். செல்வச் செழிப்போடு வாழ்ந்த எத்தனைக் குடும்பங்கள் இன்று சுகமாகத் தூங்கவும் வழியின்றி தவிக்கின்றார்கள். அவர்களின் கண்ணீராக வந்து விழுகிறது யாரிடம் போய்ச் சொல்லி அழ என்ற கவிதை (பக்கம் 06)

கனவுகளைக் காணவில்லை
கண்ணிரண்டில் தூக்கமில்லை
இடம்பெயர்ந்த நான் முதலாய்
இன்றுவரை உறக்கமில்லை.

உடையிழந்தோம் உறைவிடமிழந்தோம்
உயிர் சுமந்து உணர்விழந்தோம்
உறவிழந்தோம் உணவிழந்தோம்
உடன்பிறந்தோர் பலரிழந்தோம்

துப்பாக்கிகள் இரண்டுக்கிடையில் மாட்டிக்கொண்டிருக்கும் இக்கட்டானதொரு நிகழ்வை கண்முன் கொண்டு வருகிறது எனக்குப் பின்னால் இன்னொரு துப்பாக்கி என்ற கவிதை (பக்கம் 12)

எனக்கு முன்னால் துப்பாக்கி ஒன்று
நீட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது..
……………….
எனது பின் மண்டையை குறி பார்த்தபடி
இன்னொரு துப்பாக்கி

இரத்ததத்தின் நிறத்தில் எந்த மதமென்று அறிய முடிவதில்லை. கொலை செய்யப்பட்டவரின் இரத்தம், கற்பழிக்கபட்டவளின் இரத்தம், யுத்தத்தில் வழிந்த இரத்தம், அவள் இரத்தம், அவன் இரத்தம் என இரத்தத்துக்கு பேதமில்லை. இரத்த சாசனம் என்ற கவிதை (பக்கம் 24) பின்வருமாறு அமைகிறது.

எந்த வகை இரத்தமென்று
எவருக்கும் தெரியவில்லை
வழிந்தோடும் குருதியாற்றில்
மதபேதம் எதுவுமில்லை

கண்களில் வழியும்
இரத்தக் கண்ணீர் வழியே
எங்கள் வரலாறு
இரத்த சாசனமாய்
எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது

போர்ச் சூழலில் இருந்து பல கவிதைகளால் நிரம்பி வழியும் இந்தக் கவிதை நூலை நீங்களும் வாசித்து உணருங்கள். காத்திரமான வெளியீடுகள் பலவற்றையும் தந்த நூலாசிரியர் நிந்தவூர் ஷிப்லிக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் – தற்கொலைக் குறிப்பு
நூலின் வகை – கவிதைத் தொகுதி
வெளியீடு – பிளிண்ட் பதிப்பகம், இந்தியா
நூலாசிரியர் – நிந்தவூர் ஷிப்லி
முகவரி – இல. 50, ஹாஜியார் வீதி, நிந்தவூர் 18.
தொலைபேசி – 0716035903, 0772301539
மின்னஞ்சல் – shiblymis@gmail.com
விலை – 190 ரூபாய்

poetrimza@gmail.com

www.rimzapoems.blogspot.com
www.rimzapublication.blogspot.com
www.rimzavimarsanam.blogspot.com
www.bestqueen12.blogspot.com