திக்கு ஒன்றில் செல்லும் தீபாவளியினைத் தேடி அலைந்து வந்தேன்.
திக்கெட்டும் அதன் சவாரி இன்று, என்று, சிலர் சொல்லக் கேட்டேன்.
திக்கு முக்காடி அடிமுடி எல்லாம், அண்டம் முழுதிலும் தேடினேன், யான்.
திக்கு எட்டல்ல, எட்டெட்டு இன்று, அதற்கு, என்று அறிந்து திகைக்கிறேன்.
நரகாசுரன் எனும் நரகத்து அசுரன் மடிந்த திதியே தானா எம் தீபாவளி?
பரதனின் அண்ணன் ராமன் ஈரேழு ஆண்டின் பின்அயோத்தி திரும்பிய அதா?
இரக்கமிலாக் கௌரவரைப் பாரதத்தில் வென்று பாண்டவர் சென்ற அன்றா?
அரசன் விக்கிரமாதித்தன் அரியணை ஏறியது எனச் சொல்லும் அத்-தினமா?
எத்தனையோ பழங் கதைகள் ஊருக்கூர் உண்டெனக் கண்டு கொண்டேன்.
எத்தனையோ திக்குகள் திசைகளிலே தீபாவளி செல்கிறது என்று அறிந்தேன்.
பக்தியுடன் கொண்டாடும் பண்டிகை அல்ல எம் தீபாவளி எனவும் கண்டேன்.
தீபாவளியின் வேர் இந்தியாவில்ளூ இந்து மதத்தின் வைஷ்ணவ அலகில். ஆனால்
இன்று அதைச் சைவர், ஜெயின் மதத்தோர், சீக்கியர் மட்டுமல்ல, உலகில் அவர்
சென்ற இடமெல்லாம்: மலேசியா, சிங்கப்பூர், மேற்கிந்திய மற்றும் பிஜித் தீவுகள்,
அவுஸ்திரேலியா, நியூசீலந்து, ஏன் ஐரோப்பா, அமெரிக்கா, என் பிரிய பிரித்தானியா
என்ற இடங்களை எல்லாம் பாதகன் நரகாசுரன், தன் சாவினால் பிடித்து விட்டான். கார்த்திகைத் தீபாவளியும் விளக்கீடும் நாள் ஒன்றிருந்து ஐந்து வரை போகுமாம்.
பார்த்திருப்பார் மக்களும் இளம் வட்டங்களும். பட்டாசு, புத்தாடை, இனிப்பு வகை.
இருட்டு அகற்றும் ஆயிரக் கணக்கான குப்பித் திரி-விளக்குகள், மெழுகு திரிகள்.
மருட்டும் பரிசுகள் பெண்களுக்கு. மயக்கும் குடிவகையும் இறைச்சிகளும் ஆண்களுக்கு.
வேறென்ன திண்டாட்டம் வீட்டிலே இருந்தாலும் தீபாவளி கொண்டாட வேண்டும்.
நாடென்ன பட்டாலும் நாமென்ன பட்டாலும் புத்தாடை ஒன்று கட்டி ஆடவேண்டும்.
காசில்லாட்டில் கடன் வாங்கு. அல்லது வங்கிச் சுவருள் காட்டைப் போட்டு ஆட்டு.
இதில் எமக்கு மோகம் ஏன்? காதல் ஏன்? கரிசனை ஏன்? தீபாவளி, தீவாளி, பீவாளி…
விதி திணித்த எம் மட நம்பிக்கையா? பிள்ளைப் பருவத்து மூக்குச்சளித் தோஷமா?
பக்கத்து வீட்டான் கிணற்றுக்குள் குதித்தால் நாமும் ஏன்? குதிக்கத்தான் வேண்டுமா?
ஒரு தம்பியனின் தீபாவளிக் கதையைக் கேட்போம், இப்போ:
பட்டாசைச் சுட்டேன் நான். என் கை ஒன்றைச் சுட்டது அது.
விட்டாச்சு விரல்கள் எல்லாம் என் இடக்கையில், என்றார்கள்.
முட்டாசு தந்தார்கள். என் வலக்கையால் வாங்கி உண்டேன்.
ஒட்டாது, வெடிச்சுப் பறந்த என் விரல்கள் என்றார் வைத்தியர்.
முட்டாசும் முடிஞ்சு போச்சு. இடக்கை விரல் ஒன்றும் இல்லை.
பட்டாசைச் சுட்டு தீபாவளி ஒன்றைச் சுகித்த நான், இனிமேல்,
விட்டாச்சு தீபாவளியை. முட்டாசு மட்டும் தருவீரா, நண்பர்காள்?
என் பாதத்தின் மேல்-மடிப்பில் ஒரு இரண்டு பவுண் வட்டம் அளவு தழும்பு உண்டு.
என்னென்று வந்தது அந்தத் தழும்பு? சொல்வேன், என் சொந்தக் கதையை இப்போ!
பத்தாம் வயதினிலே பரிசாகக் கிடைத்தது ஒரு குறி போட்ட கதர் வேட்டி ஒன்று.
நத்தார் விடுதலை முன் தீபாவளியன்று! அதைக் கலாசாலைக்கு உடுத்தேன் நான்,
மற்றக் கிழமை முற்றும்! என் கலாசாலை வீட்டிருந்து இரண்டரை மைல்கள். எல்லாம்
சற்றுக் குறைய எட்டுக் கிலோமீற்றர், நாள் ஒன்றுக்கு. கிழமைக்கு நாற்பது கி. மீற்றர்.
இடுக்கில் இறுக்குமட்டும் இடக்கி இடக்கி நடந்து நாட்டியக்காரனைப்போல் இன்புற்;றேன்!!
அடுத்த கிழமை, இடுக்கில் ஒரு கீறு. சிறு காயம். பெரிதாகிப் புண்ணாகிக் கடைசியில்
அடுத்தடுத்த தீபாவளிக்கே மாறி, எழுபது ஆண்டுகளாய் என் காலில் இன்றும் உண்டு.
சிடுசிடுப்பாய் நான் இன்று தீபாவளியை நோக்குதற்குக் காரணம் புரிகிறதா, நேயர்காள்?
prof.kopanmahadeva@yahoo.co.uk