திருப்பூரில் உலகத் தமிழர்களின் கதைகள் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலாய் வெளியீடு!

- சுப்ரபாரதிமணியன் -இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா  மற்றும உலகெங்கும் பரந்திருக்கும், ஆளுமை கொண்ட தமிழ் எழுத்தாளர்களின், தேர்ந்தெடுக்கப்பட்ட 43 சிறு கதைகள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கும் நூல் “Unwinding”.இதில்  திருப்பூரைச் சார்ந்த சுப்ரபாரதிமணியனின் கதையும் இடம்பெற்றுள்ளது .இதன் வெளியீடு அறிமுகம் திருப்பூர் புத்தகக் கண்காட்சியில்  ( NCBH. NBT )    திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில்  முகப்பில் நடைபெற்றது. சென்னையைச் சார்ந்த மூத்த பத்திரிக்கையாளர் மா ப கணேசன் வெளியிட சுப்ரபாரதிமணியன் பெற்றுக்கொண்டார்.நிகழ்ச்சிக்கு பி ஆர் நடராஜன் (    ( திருப்பூர் மாவட்ட செயலாளர் , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ) தலைமை வகித்தார். சண்முகம் (( திருப்பூர் மாவட்ட  தலைவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ) நன்றியுரை அளித்தார்.

பத்திரிக்கையாளர் மா ப கணேசன் பேசுகையில் “ தமிழில் 1960கள் வரை மொழிபெயர்ப்பு நூல்கள் இலக்கியம் மற்றும் பிற துறைகளில் சிறப்பாக வெளிவந்தன. அந்த வகையில் பல படைப்பாளுமைகள் பணிபுரிந்தனர் . அதற்குப்பின் தொயவு உள்ளது, ஆனால் கடந்த 10 ஆண்டுகளில மொழிபெயர்ப்பு நூல்களைப் படிக்கும் ஆர்வம் வளர்ந்துள்ளது ஆரோக்கியமானது. மொழிபெயர்ப்புத்துறை இளைஞர்களுக்கு நல்ல வருமானம் தரும் பணியாக இன்றைய தொழில் நுட்ப உலகில் மலர்ந்துள்ளதை புதிய தலைமுறையினர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”  என்றார்

“Unwinding”.  ரூ 500 வெளியீடு
Emerald Publishers
15A, I Floor, Casa Major Road, Egmore,
Chennai 600008.
Ph: 044 – 28193206, 42146994
Mail: info@emeraldpublishers.com
https://www.emeraldpublishers.com

செய்தி : சண்முகம் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்…திருப்பூர் 2202488


Unwinding – ஒரு முன்னோட்டம்

தமிழ் சிறுகதை வடிவம் எடுத்து ஒரு நூற்றாண்டு கடந்திருக்கிறது. இத்தருணத்தில் உலகெங்கும் பரந்திருக்கும், ஆளுமை கொண்ட தமிழ் எழுத்தாளர்களின், தேர்ந்தெடுக்கப்பட்ட 43 சிறு கதைகள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கும் நூல் “Unwinding”.

தமிழின் முதல் சிறுகதையான வ.வே.சு. ஐயரின் “குளத்தங்கரை அரச மரம்”, 1914-ஆம் ஆண்டிலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அது முதல் அவ்வப்போது தமிழ்க் கதைகள் ஆங்கிலத்திலும் வந்து கொண்டிருந்தன. இப்போது ஒரு குறிப்பிடும் முயற்சியாக இந்நூல். இந்த அசாத்தியப் பணியை, கடும் சவால்களுக்கிடையில், சில வருடங்கள் கடந்தாலும், தளராமல் சாத்தியப்படுத்தியவர், சிங்கப்பூர் வாழ் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) அவர்கள்.

புலம் பெயர்ந்தவர்களின் கதைகளையும் உள்ளடக்கி, உலகத் தளத்தில், உலகத் தரத்தில், தமிழ் சிறுகதைத் தொகுப்பு, ஆங்கில மொழிபெயர்ப்பில் அற்புதமாக வந்திருக்கிறது. திருப்பூரைச் சார்ந்த சுப்ரபாரதிமணியனின் கதையும் இடம்பெற்றுள்ளது

முதல் முத்தான கதையே அ. முத்துலிங்கத்தினுடையது (Appadurai Muttulingam). கிரேக்க எல்லையில், அந்நாட்டு காவலரிடம் மாட்டிக் கொள்ளும் இலங்கைத் தமிழன்… துருக்கி, பிரேசில், சுவிட்சர்லாந்து.. ஜெர்மனி, இத்தாலி… என தன் பயண வாழ்க்கைக் கதையைச் சொல்ல, அதைக் கேட்டுக் காவலர் மலைக்க, நமக்கும் அந்நிலையே.

கடைசி வரி திருப்பத்தை தன் கதையின் மூலதாரமாய் வைக்கும் சத்யராஜ்குமாரின் (Sathyarajkumar Krishnasamy) அமெரிக்க மண்ணின் கதை, அசல் ஆங்கிலக் கதையாகவே புலப்படுகிறது.

சில கதைகளின் ஆசிரியரும் மொழிபெயர்ப்பாளரும் வேறு வேறு. சிலவற்றை ஜெயந்தி சங்கரே மொழிபெயர்த்திருக்கிறார். சில கதைகளின் ஆசிரியரும் மொழிபெயர்ப்பாளரும் ஒருவரே. குறிப்பாக இரா. முருகன் (EraMurukan Ramasami) தன் இளைப்பாறுதல் (http://www.eramurukan.in/?p=3191) கதையைத் தானே மொழிபெயர்த்துத் தர, அதுவே “Unwinding”. இந்நூலிற்கு மிகப் பொருத்தமான தலைப்பாக அமைந்திருக்கிறது.

இது போன்றவை மொழி பெயர்ப்பின் சூட்சுமங்களையும், தர்மங்களையும் மிக அழகான பாடங்களாய்த் தருகின்றன. மொழிபெயர்ப்பின் போது, மூல மொழியின் சில பத்திகள், இலக்கு மொழிக்குத் தக்கபடி சுருங்கவோ, விரியவோ செய்யும். உதாரணமாக, Unwinding-ல், ஜப்பானிய புராஜெக்ட் மேனேஜர் தன் குழுவினரிடம் கடந்த இரவின் கலவியைக் குறித்து எழுப்பப்படும் கேள்விகள்… தமிழில் ஒரு வரி மிகுந்தாலும் விரசமாகிவிடும். ஆனால் ஆங்கிலத்தில் முறுவலிக்கும் விதமாய் சில வரிகளைச் சேர்த்திருக்கிறார் இரா. முருகன். இது ஒரு பால பாடம்.

மூல மொழியின் ஜீவனை, இலக்கு மொழியில் அப்படியே தருவிப்பது பெரும் பணி. ஒவ்வொரு கதையின் ஒவ்வொரு வரியையும், ஒவ்வொரு பதத்தையும் சரிபார்த்தல் பெரும் சவால். அதற்கான போராட்டங்களை சளைக்காமல், சலிக்காமல் செய்து சாத்தியப்படுத்திய ஜெயந்தி சங்கரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.( காஞ்சி ரகுராம் )

ரூ 500 வெளியீடு: