திரும்பிப்பார்க்கின்றேன் – கறுப்பு ஜூலை 83 நினைவு தினக்கட்டுரை: இலக்கிய திறனாய்வாளர் கலா. பரமேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தினம் இன்று

 

” ஞாயிற்றுக்கிழமை  போய்விடுவேன்  என்றார் – அவ்வாறே  போய்விட்டார் இரண்டு  நாள்  இடைவெளியில் சஞ்சரித்த காலமு (னு)  ம்  கணங்களும் “

1_kalaparameswaran.jpg - 12.09 Kbமுருகபூபதிமுப்பத்தியொரு  ஆண்டுகளுக்கு முன்னர் இதே ஜூலை   மாதம்   22   ஆம் திகதி  வெள்ளிக்கிழமை  நள்ளிரவு    யாழ்ப்பாணம்    பலாலி வீதியில் பரமேஸ்வரா சந்தியில்  வந்துகொண்டிருந்த  இராணுவ  ட்ரக்   வண்டி  மீது நிலக்கண்ணி வெடித்தாக்குதல்    நடந்தது.  அச்சம்பவத்தில்  13   இராணுவத்தினர் கொல்லப்பட்டதன் எதிரொலியை  தமிழர்கள்  இன்றும்  கறுப்பு  ஜூலை  என்று அனுட்டித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இலங்கையின்  அரசியலிலும்  அங்கு வாழ்ந்த   பூர்வகுடி தமிழ் மக்களினதும்  வாழ்வில்    பெரும்    மாற்றத்தை ஏற்படுத்திவிட்ட அந்த  1983   ஜூலை   மாதத்தில் யாழ்ப்பாணம் பலாலிவீதியில் ஒரு  இல்லத்தில்  அந்த    கறுப்புஜூலை   ஆழமாகவே பதிந்துவிட்டது. அந்தவீட்டிலிருந்த   முதியவர்    மற்றும்    குடும்பத்தலைவர்    தவிர்ந்த ஏனையவர்களை    வேரோடு    பிடுங்கி    எறிந்து    தேசாந்தரிகளாக்கியது. அப்படியென்றால்  –  அந்த    முதியவரும்    குடும்பத் தலைவரும்    என்ன ஆனார்கள்?    அவர்களின்    உடல்களை    குண்டுகள்    துளைத்து    அவர்கள் பரலோகம்    பயணித்தார்கள். எனது   இனிய    நண்பர்   கலா. பரமேஸ்வரன்   இன்று (24-07-1983)    யாழ்ப்பாணம்   பலாலிவீதியில்    கொல்லப்பட்ட   31    ஆவது    ஆண்டு நினைவு  தினம்.  அந்தத்துயரமே  இந்தக்கறுப்பு ஜூலையில்    இன்றைய  நாளில் எனது துயர்பகிர்வு. அன்று  24  ஆம்  திகதி   ஞாயிற்றுக்கிழமை   ஆடி  ஆமாவாசை – போயாதினம்.    தென்னிலங்கையில்   நாட்டின்    ஜனாதிபதி   உட்பட பௌத்தர்கள்    அனைவரும்   சில்   அனுட்டித்துக்கொண்டிருந்தார்கள்.

வெளியே பதட்டம்   சூழ்ந்திருந்தபோதிலும்    தமது  இல்லத்தில் அமைதியாக   விரதம்    அனுட்டித்தவாறு    எல்லோருக்கும்    எல்லா நன்மைகளும் கிட்டவேண்டும்   எனப்பிரார்த்தனை  செய்துவிட்டு  மதிய உணவின்மேலே    அந்த    இல்லத்தின்    பெரியவர்   தனது    அறையில் பிரவேசித்து  ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். அவரது மகளின் கணவர் மனைவி  குழந்தைகளுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார். வெளியே அந்த இல்லத்தின்  கதவு  தட்டப்படும் சத்தம். மனைவி   –   குழந்தை களை  வீட்டின்  பின்புறத்திற்கு    அனுப்பிவிட்டு அந்தக்குடும்பத்தின்   தலைவ ர்   கதவைத்திறக்கிறார்.  நீட்டிய   துப்பாக்கிகளுடன் சில இராணுவத்தினர் உரத்து சத்தமிட்டு ஏதோ சொல்கின்றனர்.     அந்தக்குடும்பத்தலைவருக்கு    மும்மொழியும் தெரியும். குடும்பத்தலைவர் தனது  இரண்டு கைகளையும்  மேலே  தூக்கி  உயர்த்தி  ஏதோ சொல்ல  முனைந்தார்.   மறுகணம்   அவர்  அங்கு   வந்த சீருடையினரின்  துப்பாக்கிவேட்டுக்களை ஏற்று  தரையில் சரிந்து மடிந்தார். கையை   உயர்த்தினால்  அதன்  பொருள்  சரண்.  ஆனால் – இராணுவத்திற்கு    அதுபற்றி    சொல்லித் தரப்படவில்லையோ? மனைவியும்   குழந்தைகளும்    கதறிக்கொண்டு  ஓடிவருகின்றனர். வந்திருக்கும்    சீருடை    கொலை வெறியர்கள்    அந்த    முதியவர் படுத்திருக்கும்    அறைக்குள்ளும்   சென்று    வேட்டுக்களை    தீர்க்கின்றனர். அந்தப்பெரியவர்   கட்டிலிருந்து    சரிந்து விழுந்து    அவரும்   மடிந்துவிடுகிறார்.

சில    மணித்துளிகளுக்கு    முன்னர்    ஆடி    அமாவாசை   விரதத்திற்காக குளித்து    முழுகி   வேட்டி  அணிந்து    குடும்பத்தினருடன்  பிரார்த்தனை செய்த    அந்தப்பெரியவரும்    அந்தக்குடும்பத்தின்   தலைவரும் இரத்தவெள்ளத்தில்   குளித்து  தரையில்   கிடக்கின்றனர். குடும்பத்தலைவரின்    அருமை   மனைவி  மயங்கிச்சரிகின்றார். குழந்தைகள்    கதறித்துடிக்கின்றன.    அயலவர்கள்   ஓடிவந்து   அதிர்ச்சியில் மௌனிக்கின்றனர்.

அந்தச்சீருடைகள் அடுத்த  வேட்டைக்கு வேட்டுக்களுடன் புறப்பட்டன. எனது   அருமை    நண்பரும்    இலக்கியவாதியும்    தமிழ்    ஆய்வறிஞருமான கலா.    பரமேஸ்வரனின் யாழ்ப்பாணம்  பலாலி  வீதி  இல்லத்தில்   24-07-2014   ஆம்   திகதி   ஞாயிற்றுக்கிழமை    பகல்  பொழுதில்   கறுப்பு  ஜூலை அவ்வாறுதான்   ஆழமாகத்தடம்   பதித்தது. கலா. பரமேஸ்வரனை   இறுதியாக   பேராசிரியர்  கைலாசபதி   அவர்களின் இறுதிச்சடங்கிலேயே     சந்தித்தேன்.   வெள்ளவத்தையில்   கடற்கரைப்பக்கமாக    கின்றோஸ்    அவனியூவில்    கைலாசபதியின்   மாமனார்   மாணிக்க  இடைக்காடர்   அவர்களின்   இல்லத்தில்   கைலாஸின் பூதவுடல்    வைக்கப்பட்டிருக்கிறது. வெளியே   முன்றலில்  நாமனைவரும்  சோகமே  உருவாக  மௌனமாக நிற்கின்றோம்.  எமது    மௌனத்தை  கலைத்தவர்   கலா. பரமேஸ்வரன்.  அவர்  எம்  முன்னே   நின்ற   மல்லிகை  ஆசிரியர் டொமினிக் ஜீவாவைப்பார்த்து –    ‘ கைலாஸின்   உருவப்படத்தை மல்லிகையின்   அட்டையில்   வெளியிட்டிருக்கிறீர்களா? ”   எனக்கேட்கிறார். நான்  முந்திரிக்கொட்டையாக  முந்திக்கொண்டு    ‘  ஆம்.   1972  நவம்பர்  மாத மல்லிகையை  கைலாஸபதிதான்    அலங்கரித்தார்.   ஜீவா    எவரையும் தவறவிடமாட்டார்”. –    எனச்சொல்கின்றேன்.

‘ அட……நல்ல  ஞாபகத்துடன்     சொல்கிறீர்… … அப்படியெண்டால்   நான்  சாக முந்தியும்   என்ற  படத்தையும்   மல்லிகை   அட்டையில்   பிரசுரிக்கும்… என்று    சொல்லுங்கள்”  –  என்றார்   கலா.பரமேஸ்வரன். ‘ என்ன  ஐசே… …இப்படிச்சொல்கிறீர்… ?” –   எனச்சொல்லி   அவரை மென்மையாக   கடிந்துகொண்டேன். இச்சம்பவம்  நடந்து  சரியாக   ஒருவருடத்தில்   மல்லிகை    டிசம்பர்    இதழில்   மரணித்த   இருவரும்   மல்லிகையில் அவர்தம்    நினைவுகளும்    என்ற   தலைப்பில்   நான்   எழுதியிருந்த  கட்டுரையில் இடம்  பெற்றவர்    நண்பர்    கலா. பரமேஸ்வரன்.   மற்றவர் மனிதம்    இதழின்    ஆசிரியர்  நண்பர்    விமலதாசன். கலா. பரமேஸ்வரன்    பலாலிவீதியில்    சுட்டுக்கொல்லப்பட்டார். விமலதாசன் மானிப்பாய்   வீதியில்    சுட்டுக்கொல்லப்பட்டார்.    இரண்டு சம்பவங்களும்    வேறு    வேறு சந்தர்ப்பங்களில்   நடந்தன. குறிப்பிட்ட 1983   ஜூலை அமளியில்    வீரகேசரிக்கு   வேலைக்கும் செல்லாமல்    நீர்கொழும்பு  –  வவுனியா  –   யாழ்ப்பாணம் என்று குடும்பத்துடன்  இடம்பெயர்ந்து ஓடிக்கொண்டிருந்தேன்.   அந்த    ஆண்டு ஜூலையிலிருந்து    டிசம்பர்    வரையில்    ஆறுமாதகாலம் அலைச்சலும் அவதியும்தான்.  இக்காலப்பகுதியில்    பாதுகாப்பு    புலனாய்வுப்பிரிவினர் என்னையும்    தேடுகிறார்கள்    என்ற   வதந்தி  எங்கள் ஊரில் பரவியிருந்தது. அன்றைய   ஜனாதிபதி   மிஸ்டர்   தர்மிஸ்டர்    ஜே.ஆர்.    மக்கள்   விடுதலை முன்னணி  உட்பட    இடதுசாரிக்கட்சிகளை    தடைசெய்திருந்த  காலம்.

அவ்வேளையில்   எனது    அப்பாவும்   அதிர்ச்சியில்   மாரடைப்பு   வந்து காலமானார்.    அவரது   அண்ணன்     சுப்பையா    தொண்டமான்    தமிழ்நாட்டில்   பாளையங்கோட்டையில்   மரணமானார்.    எங்கள் குடும்பத்தில்    ஒரே    மாதத்தில்   இரண்டு    துயரங்கள். இந்தச்சூழலிலும்    மல்லிகையில்   அடுத்தடுத்து    இரண்டு   கட்டுரைகள் எழுதியிருந்தேன்.    ஒன்றின்  தலைப்பு   துன்ப  மேகங்களும்  சமகாலத்  துயரங்களும்.   மற்றது   மேலே   குறிப்பிட்ட  –   மரணித்த   இருவரும் மல்லிகையில்   அவர்தம்    நினைவுகளும்.

இக்கட்டுரையை    படித்துவிட்டு   திருமதி   ரஞ்சனா   பரமேஸ்வரன் – அதில் நான்  குறிப்பிட்டிருந்த..   அப்படியெண்டால்   நான்   சாக   முந்தியும்   என்ற    படத்தையும்    மல்லிகை    அட்டையில்    பிரசுரிக்கும்…   என்று சொல்லுங்கள்…    என்ற   வரிகளை    படித்துவிட்டு    குமுறி    அழுததாக   நண்பர் மௌனகுரு   மல்லிகை   ஜீவாவிடம்   சொன்னாராம். பரமேஸ்வரன் – ரஞ்சனாவின்     பதிவுத்திருமணம்   1974  ஆம்  ஆண்டு அக்டோபர்    மாதம்  23  ஆம்  திகதி  கண்டி   கச்சேரியில்   நடந்தது. பரமேஸ்வரனின்     பல்கலைக்கழக   பேராசான்   சு.வித்தியானந்தன்   அதற்கு   சாட்சி  கையொப்பம்   இட்டார். பரமேஸ்வரனும்    பேராசிரியர்    வித்தியானந்தனின்    அபிமானத்துக்குரிய மாணவர்களில்    ஒருவர்.   வித்தியானந்தன்   பேராதனைப்பல்கலைக்கழகத்தில்    பேராசிரியராக    தமிழ்ப்பீடத்திற்கு நியமனமானதும்   திருகோணமலையில்   அவருக்கு   பாராட்டு நிகழ்வொன்றை    சிறப்பாக    நடத்தியிருக்கும்    கலா. பரமேஸ்வரன் – வித்தியானந்தன்   யாழ். பல்கலைக்கழகத்தின்  துணைவேந்தராக  நியமனம் பெற்றதும்   யாழ்ப்பாணத்திலும்   சிறப்பான    விழா  எடுத்து  தனது பேராசானை  பாராட்டி   மகிழ்ந்தவர்.

கலா. பரமேஸ்வரனின்   எதிர்பாராத    திடீர்   மறைவு    வித்தியானந்தனையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது    இயல்பே. அதனால்தான்   கலா. பரமேஸ்வரன்    ஆயுதப்படையினரால்    கொல்லப்பட்ட பின்னர்    வெளியான   நினைவஞ்சலி   மலரில் —   திருமணப்பதிவுக்கு சாட்சிக்கையெழுத்திட்ட  கையால்    நினைவஞ்சலியுரை    எழுதவா?    என்று மிகவும்  உருக்கமாக   தனது    நினைவுகளை   அதில்    பதிவு செய்துள்ளார்.

அதென்ன அவரை கலா….கலா… என்று  விளிக்கின்றேன்  என இதனைப்படிக்கும்   வாசகர்கள்    கேட்கலாம்.    இதே   கேள்வியை    திருமதி ரஞ்சனா பரமேஸ்வரனிடத்தில் நானும்   கேட்டேன். கலா என்பது கணவரின்  புனைபெயர்   எனச்சொன்னார். பரமேஸ்வரன்    பல்கலைக்கழகத்தில்   இளமாணிப்பட்டமும் முதுமாணிப்பட்டமும் பெற்றவர்.  பேராதனை    பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தின்    வெளியீடான   இளங்கதிர்   ஆசிரியர்   குழுவிலும் இயங்கியவர்.    இந்தப்பல்கலைக்கழகத்தில் பயின்ற   பல    முக்கியமான ஈழத்து    இலக்கிய   ஆளுமைகளின்   சிறுகதைத்  தொகுப்பு  காலத்தின் குரல்.   அதனை   தொகுத்தவரும்  கலா. பரமேஸ்வரன்தான். நாடக  நடிகர்  –  வானொலிக்கலைஞர் –  இலக்கிய   ஆய்வாளர்   முதலான முகங்களுடன்   வாழ்ந்த   பரமேஸ்வரன்    சமூகச்செயற்பாட்டாளருமாவார். 1961   இல்   பண்டாரநாயக்கா    தனிச்சிங்களச் சட்டத்தை அமுல்படுத்தியபொழுது    அதனைக்கண்டித்து     யாழ்ப்பாணம்    கச்சேரிக்கு முன்பாக   சுலோக   அட்டைகளை   தாங்கியவண்ணம்    சத்தியாக்கிரகமும் செய்திருப்பவர்.  இலங்கை    தேசிய   சேமிப்பு    வங்கியின்  யாழ். மாவட்ட மேற்பார்வையாளராகவும்   பின்னர்   சேமிப்பு   பிரசார உத்தியோகத்தராகவும்    பணியாற்றியவர்.    மூத்த    இலக்கியவாதியும் யாழ்.பல்கலைக்கழக   மருத்துவபீட   பேராசிரியருமான   ‘டொக்டர்’  நந்தி அவர்களுக்கு   தேசிய சேமிப்பு  வங்கியில்   ஒரு    சேமிப்புக்கணக்கை தொடக்கிவைத்தவரும்    பரமேஸ்வரன்தான்   என்ற    தகவலை   நந்தி அவர்களும்    தமது    அஞ்சலிக்குறிப்பில்   பதிவுசெய்துவைத்துள்ளார்.

1966     களில்  எனது  அக்கா   குடும்பத்தினர்    பலாங்கொடையில்    வசித்தனர்.  1981   இல்    பலாங்கொடை   உட்பட  சில மலையகப்பிரதேசங்களில்   கலவரம்   வெடித்தது.   அதனால்   அவர்கள் இடம்பெயர்ந்து    வவுனியாவில்   சிறிது  காலம்    வசித்தனர். ஒரு நாள்   அக்காவிடமிருந்து    வந்திருந்த   கடிதத்தில்   வவுனியாவிலிருக்கும்     குடும்பத்திட்டச்சங்கத்தினால்   ஒரு கட்டுரைப்போட்டி    மாவட்ட    ரீதியில்   அறிவிக்கப்பட்டிருப்பதாகவும்   அதில்    தான்    பங்குபற்றவிருப்பதனால்   தனக்கு    சில   குறிப்புகளை   எழுதி அனுப்புமாறும்    கேட்டிருந்தார்.

நானும்   உடனடியாக   எழுதி   அனுப்பினேன்.   அக்கா    தனது கைச்சரக்கையும்   சேர்த்து   எழுதி  அனுப்பி    அந்தப்போட்டியில்   முதல் பரிசுபெற்றுவிட்டார்.    சில    மாதங்களுக்குப்பின்னர்    அக்கா    ஊருக்கு வந்தசமயம்   தனக்கு   பரமேஸ்வரன்    என்ற   குடும்பத்திட்டச்சங்க அதிகாரி    ஒருவர்தான்    பரிசு    வழங்கியதாகவும்    சொன்னார். எனக்கு –   நான்    அறிந்திருக்கும்    கலா.பரமேஸ்வரனும்    அக்கா   குறிப்பிடும்   பரமேஸ்வரனும்   ஒருவர்தான்   என்ற   உண்மை  அதன்பின்னர்    பேராசிரியர்   கைலாஸபதியின்   மரணவீட்டில்   அவரை (இறுதியாக )  சந்திக்கும்   வரையில்   தெரியாது. தமது   39  வயதில்    மரணமான    கலா.பரமேஸ்வரனை    நினைக்கும்தோறும் எனக்கு    சுந்தரராமசாமி   தனது    ஜே.ஜே.  சில  குறிப்புகள்   நாவலின் ஆரம்பத்தில்    பதிவு  செய்துள்ள    வரிகள்தான்   நினைவுக்கு  வருகின்றன. மேதாவிலாசத்துக்கும்  அற்பாயுளுக்கும்  அப்படி   என்னதான்  நமக்கு எட்டாதபடி   ரகசிய   உறவோ?    அதிலும்    இந்த   நாற்பதையொட்டிய வயதுகள்…. தமிழிலும்  பாரதி –  புதுமைப்பித்தன் –   கு.ப.ராஜகோபாலன்  –  கு. அழகிரிசாமி – மு.தளையசிங்கம்    என்று    எத்தனை    இழப்புகள்…. என்று சுந்தரராமசாமி   எழுதுகிறார்.

இவர்களின்   மறைவின்   பின்னணியில்   வறுமை  –  நோய் –  உட்பட இன்னபிறகாரணங்கள்    இருந்தன.    ஆனால் – கலா. பரமேஸ்வரன் வறுமையால்    வாடியவர்    அல்ல.    நோய்    உபாதைகளும்   அவரை அண்டவில்லை.    தான்   நீண்ட    காலம்    வாழ்வேன்   என்ற   திடமான நம்பிக்கையுடன்    வாழ்ந்தவர்.    தனது   மனைவி – குழந்தைகள்   பற்றி   ஒரு குடும்பத்தலைவனுக்கே    உரித்தான    எதிர்காலக்கனவுகளுடன்   வாழ்ந்தவர்.  39    வயதுக்குள்    அவரது   உயிர்    பறிக்கப்பட்டுவிட்டது.

கலா. பரமேஸ்வரன்    குறித்து    எழுதும்   செம்பியன்   செல்வன்  தெரிவிக்கும்    சம்பவத்தையும்   கைலாசபதியின்    மரணவீட்டில்   கலா. பரமேஸ்வரன்    என்னுடன்   உரையாடிய  அந்த இறுதிச்சந்திப்பு சம்பவத்தையும்    ஒப்பிட்டுப்பார்க்கின்றேன். 1983    ஜூலை  மாதம்   22  ஆம்   திகதி   வெள்ளிக்கிழமை.    திருநெல்வேலி சந்தியில்    பரமேஸ்வரனும்    செம்பியன்   செல்வனும்   சந்திக்கின்றனர். சுமார்   ஒன்றரை    மணிநேரம்    இலக்கியம்   ஆய்வு    பற்றியெல்லாம் உரையாடுகின்றனர்.    விடைபெறும்பொழுது   பரமேஸ்வரன்    சொல்கிறார்:- ‘மச்சான்   கனக்கப்பேசவேண்டும்.  என்ர   வீட்டை   ஒருநாளும் வாராயில்லை.    வாவன்.    வாரதென்டால்    ஞாயிற்றுக்கிழமைக்கு   முன்னர்   வா.    நான்   ஞாயிறு   போய்விடுவேன்.”

ஆம்….அவர்   ஞாயிறன்று    நிரந்தரமாகவே   போய்விட்டார்.

வவுனியாவில்   தனது   கடமையை    தொடருவதற்காக    ஞாயிறன்று   ஆடி   அமாவாசை   விரதமிருந்துவிட்டு    புறப்படவிருந்தவரை   காலன் அழைத்துக்கொண்டு   போய்விட்டான்.    அவரை   மட்டுமல்ல   அவரது மாமனாரையும்    (திருமதி  ரஞ்சனா   பரமேஸ்வரனின்  தந்தையார்)    உடன் அழைத்துச்சென்றுவிட்டான்  அந்தக்காலன்.  வழியனுப்பிவைத்தவர்கள்  சீருடைதரித்தவர்கள். வெள்ளிக்கும்   ஞாயிறுக்கும்    இடைப்பட்ட   அந்த   காலமும்  கணங்களும்  எத்தகையன  என்பதை    செம்பியன்   செல்வனின் உணர்வுகள்   பதிவு  செய்கின்றன. கலா.பரமேஸ்வரனின்   பல்கலைக்கழக   ஆய்வேடு   நச்சினார்க்கினியரின்    இலக்கியத்திறனாய்வு.    இதனை   நூலாக வெளியிட்டது   தமிழ்நாடு  சேலம்   குயில் பண்ணை  பதிப்பகம். நச்சினார்க்கினியரின்    இலக்கியக்கொள்கையையும்   திறனாய்வு முறைகளையும்   கலா. பரமேஸ்வரன்    இந்நூலில்   ஆய்வுசெய்துள்ளார். தமக்கு    இந்த    ஆய்வினை    மேற்கொள்ள   ஊக்கமளித்த    தனது பேராசிரியர்கள்    செல்வநாயகம்   வித்தியானந்தன்   ஆகியோருக்கும் ஆலோசனைகள்    வழங்கிய    கலாநிதி   ஆ. வேலுப்பிள்ளைக்கும்   தனது நன்றியறிதலை    தெரிவித்துள்ளார்.

இந்நூலை எமது அவுஸ்திரேலியா   தமிழ்   இலக்கிய  கலைச்சங்கம் சில வருடங்களுக்கு முன்னர் மெல்பனில்  நடத்திய எழுத்தாளர்  விழாவில் அறிமுகப்படுத்தினோம்.  எனது மனைவி மாலதி இந்நூல் பற்றிய தனது நயப்புரையை அன்றையதினம் நூல் வெளியீட்டு அரங்கில் நிகழ்த்தினார்.

நீண்ட இடைவெளிக்குப்பின்னர்    மேற்கு  அவுஸ்திரேலியாவில்  நடந்த தமிழ்  அரங்கு  நிகழ்வில்   திருமதி   ரஞ்சனா    பரமேஸ்வரனை சந்தித்த பொழுது  தனது   கணவர் தான்    எண்பது  வயது    வரையில்  வாழ்வேன் என்று   நம்பிக்கையுடன்   அடிக்கடி   சொல்வார்.   அதில்    பாதியைக்கூட கடக்காமல்    கடந்துசென்றுவிட்டார்.     எனக்குறிப்பிட்டார். ரஞ்சனா   பரமேஸ்வரன்  யாழ்ப்பாணம்    பல்கலைக்கழகத்தில்   நூலகராக முன்னர்    பணியாற்றியவர்.   மேற்கு    அவுஸ்திரேலியாவுக்கு  வந்தபின்னரும் மாநகர   நூல்நிலையத்தில்    பணியாற்றிவிட்டு   ஓய்வுபெற்றுள்ளார்.

கலா. பரமேஸ்வரனின்    புதல்விகள்   செல்வியும்    நிவேதிதாவும் பல்கலைக்கழக   கல்வியை    நிறைவுசெய்துகொண்டு   பணிகளில் இருக்கின்றனர். அந்தக்குடும்பத்தின்   வாழ்க்கைப்பயணத்தில்    அந்த  கறுப்பு ஜூலை அழுத்தமாகவே  படிந்திருக்கிறது. அவர்கள்    குடும்பத்தில்   மட்டுமா….? அன்று   இலங்கையில்   இன்று   காஸாவில்.    உக்ரேயினில். கருப்பு   ஜூலைக்கு    வித்திட்டவர்கள் யார்…?    என்ற    வாதப்பிரதிவாதம் அரசியல்    ஆய்வாளர்களிடம்    இன்றும்    தொடருகின்றது.  உலகெங்கும்    ஆயுதங்கள்    மௌனிக்கும்    காலத்திற்காக ஏங்கிக்காத்திருக்கின்றோம்.