சமகாலத்தில் இலங்கையிலும் தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தினமும் பேசப்படும் ஊராக விளங்கிவிட்டது புங்குடுதீவு. இந்தத்தீவுக்கு இதுவரை சென்றிராத தென்னிலங்கை சிங்கள மக்களும் மலையக மக்களும், இந்த ஊரின் பெயரை பதாதைகளில் தாங்கியவாறு வீதிக்கு வந்தனர். இலங்கைப்பாராளுமன்றத்திலும் இந்தத்தீவு எதிரொலித்தது. ஜனாதிபதியை வரவழைத்தது. இலங்கையில் மூவினத்து மாணவர் சமுதாயமும் உரத்துக்குரல் எழுப்பும் அளவுக்கு இந்தத்தீவு ஊடகங்களில் வெளிச்சமாகியது. இத்தனைக்கும் அங்கு ஒரு வெளிச்சவீடு நீண்ட நெடுங்காலமாக நிலைத்திருக்கிறது. பதினைந்துக்கும் மேற்பட்ட பாடசாலைகள், 20 இற்கும் மேற்பட்ட குளங்களின் பெயர்களுடன் இடங்கள். 20 இற்கும் மேற்பட்ட சனசமூகநிலையங்கள் ( வாசிகசாலைகள் உட்பட) பல கோயில்கள் எழுந்திருக்கும் புங்குடுதீவில், இதுவரையில் இல்லாதது ஒரு பொலிஸ் நிலையம்தான்.
கலை, இலக்கியம், இசை, ஊடகம், கல்வி, திரைப்படம், நாடகம் முதலான துறைகளில் ஈடுபட்ட பல ஆளுமைகளின் பூர்வீகமான பிரதேசம் புங்குடுதீவு. புங்குடுதீவு எனப்பெயர் தோன்றியதற்கும் பல கதைகள். இங்கு புங்கைமரங்கள் செறிந்து வளர்ந்தது காரணம் என்றார்கள். தமிழ்நாட்டில் புங்குடியூர் எங்கே இருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால், அங்கிருந்தும் மக்கள் இங்கு இடம்பெயர்ந்து வந்திருக்கிறார்கள். தமிழக புங்குடியூரில் ஆங்கிலேயர்களுக்கு முற்பட்ட காலத்தில் இஸ்லாமியர்களினால் நிகழ்ந்த படையெடுப்பினால் மக்கள் இடம்பெயர்ந்து வாழ்வதற்கு இந்தத்தீவுக்கு வந்தனராம். முன்னர் பூங்கொடித்தீவு என்றும் பெயர் இருந்ததாம். ஒல்லாந்தர் இங்கு சங்கு ஏற்றுமதி வர்த்தகத்திலும் ஈடுபட்டிருக்கின்றனர். அதனால் சங்குமாவடி என்றும் இந்த ஊருக்கு முன்னர் பெயர் இருந்ததாம். சப்ததீவுகளுக்கு மத்தியில் புங்குடுதீவு இருந்தமையால் – இதற்கு Middle Burg என்றும் ஒல்லாந்தர் பெயர் சூட்டியிருக்கின்றனர். இந்தத்தீவைச் சேர்ந்த சில எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் , ஆசிரியர்கள், பிரமுகர்கள் எனது நண்பர்களாகவிருந்தும் எனக்கு இந்த ஊருக்குச் செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
1979 இலும் 1980 இலும் இந்த ஊரின் வழியாக குறிக்கட்டுவான் சென்று நயினை நாகபூஷணி அம்பாள் ஆலய தரிசனம் செய்துள்ளேன். பின்னர் யுத்தம் முடிவடைந்ததும் 2010 ஆம் ஆண்டு இந்த வழியால் நண்பர்கள் நடேசன், சூரியசேகரம் ஆகியோருடன் எழுவை தீவுக்குச்சென்றேன். புங்குடுதீவைக் கடக்கும் பொழுதில் எனக்கு அங்கு பிறந்து வாழ்ந்த தொழில்- திருமணம் நிமித்தம் வேறு ஊர்களுக்கு இடம்பெயர்ந்தவர்களும் மு.தளையசிங்கம், சு. வில்வரத்தினம், நாவேந்தன், நாகேசு தருமலிங்கம், மு.பொன்னம்பலம், என்.கே.மகாலிங்கம், நேமிநாதன், கோவிந்தன், இளங்கோவன், தம்பிஐயா தேவதாஸ் முதலான எழுத்தாளர்கள் பலரும் நினைவுக்கு வருவார்கள். இவர்களில் நேமிநாதன் லண்டனிலும், கோவிந்தன் அவுஸ்திரேலியாவிலும் என்.கே. மகாலிங்கம் கனடாவிலும், இளங்கோவன் பிரான்ஸிலும் தம்பிஐயா தேவதாஸ், மு.பொன்னம்பலம் ஆகியோர் கொழும்பிலும் தற்பொழுது இருக்கிறார்கள். முதலில் குறிப்பிட்ட நால்வரும் எம்மைக்கடந்து சென்றுவிட்டனர். அவர்களில் மு.தளையசிங்கம், சு.வில்வரத்தினம் ஆகியோரைப்பற்றி ஏற்கனவே எனது பதிவுகளில் எழுதிவிட்டேன்.
ஏனைய தமிழ்ப்பிரதேசங்களுக்கு கல்வி, கலை, இலக்கியம், சமூகப்பணிகளில் மிகவும் முன்மாதிரியாக திகழ்ந்த புங்குடுதீவு சமகாலத்தில் எம்மவர் வாழ்வில் ஆழ்ந்த கவலைக்குரியதாகிவிட்டது. அடிநிலைமக்களுக்காக குடிநீருக்காக வேண்டி புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தில் சாத்வீகப்போராட்டம் நடத்தி, பொலிஸிடம் அடிவாங்கி, அற்பாயுளில் மறைந்த தளையசிங்கம், சர்வோதய சிந்தனைகளை பரப்புவதில் அவருக்கு பக்கபலமாக திகழ்ந்த கவிஞர் வில்வரத்தினம், தமிழ் உணர்வை தமது பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படுத்திய நாவேந்தன்…. இப்படி சமூகப்பணியாற்றிய பலர் பிறந்த மண், – இன்று அவர்களின் பெயரால் பிரபலமடையாமல் ஒரு இளம்குருத்திற்கு நேர்ந்த வன்கொடுமையினால் உலகப்பிரசித்தமாகியிருக்கும் காலத்தின் கோலத்தை பார்க்கின்றோம்.
னிவருங்காலத்தில் போருக்கு முன்னர் – போருக்குப்பின்னர் ( போ. மு —- போ. பி) என்று வரலாற்று ஆய்வாளர்கள் எழுதும்பொழுது புங்குடுதீவுக்கு முக்கிய அத்தியாயம் பதிவுசெய்யப்படலாம். அந்த வேலையை அவர்கள் செய்யட்டும்.
இந்த இலக்கியப்பிரதியாளன் எழுத மறந்த, எழுதத்தாமதித்த நாவேந்தன் (1932 – 2000) பற்றியதே இந்தத் திரும்பிப்பார்க்கின்றேன் பத்தி. நாவேந்தன் இயற்பெயர் திருநாவுக்கரசு. நாவுக்கரசு என்பதற்கு பொருத்தமான மறுபெயர் நாவேந்தன். ஆசிரியராக அதிபராக யாழ். மாநகர சபையின் பிரதி மேயராக எழுத்தாளராக அரசியல் மேடைப்பேச்சாளனாக பத்திரிகையாளனாக வாழ்ந்தவர்.
நாவேந்தனை முதலில் எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீர்கொழும்பில் வர்த்தகம் செய்துகொண்டிருந்த புங்குடுதீவைச்சேர்ந்த தில்லைநாதன். அவர் தற்பொழுது முதுமையில் நோய் உபாதைகளுடன் எங்கள் நீர்கொழும்பில் நான் வாழ்ந்த அதே சூரியவீதியில் தமது வீட்டில் படுக்கையில் இருக்கிறார். கடந்த பெப்ரவரியிலும் அவரைச்சென்று பார்த்தேன்.
நாவேந்தனை 1974 ஆம் ஆண்டில் தில்லைநாதன் நீர்கொழும்பில் நடத்திக்கொண்டிருந்த உதயகிரி சைவஹோட்டலுக்கு வந்து தங்கியிருப்பது அறிந்து ஒரு நாள் மாலை நண்பர் நிலாமுடன் ( நிலாம் தற்பொழுது தினக்குரல் பத்திரிகையில் சிரேஷ்ட ஊடகவியலாளர்) சென்று அழைத்துக்கொண்டுவந்து எமது வீட்டில் தேநீர் விருந்துபசாரம் வழங்கினேன்.
என்னை அன்று சந்தித்தவுடன் ” என்ன… உமக்கு உமது பெற்றோர் பொம்பிளைப்பெயர் வைத்திருக்கிறார்கள் ” என்றார். முருகபூபதி பெண் பெயரா…? எனக்கேட்டேன். முருகா இல்லையென்றால் அது பெண்பெயர்தான் என்று சொன்ன அவர், தமது மனைவியின் பெயரும் பூபதி என்றார். பின்னாளில் – உண்ணாவிரதம் இருந்து மறைந்த அன்னை பூபதியையும் நினைத்துக்கொண்டேன்.
சில தமிழ்த் திரைப்படங்களில் ஆண்பாத்திரங்கள் அந்தப்பெயரில் இருப்பதையும் சொல்லி அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் அந்தப்பெயரில் ஒரு பாடலும் இருக்கிறது என்று நாவேந்தனிடம் சொன்னேன். தனது எழுத்துலகப்பிரவேசம், ஆசிரியப்பணி அரசியல் பணிபற்றியெல்லாம் சொன்னார். அச்சமயம் அவர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அபிமானியாக மாறிவிட்டிருந்தார்.
முன்னர் தமிழரசுக்கட்சியின் பிரசார பீரங்கியாக இருந்தவர். சுதந்திரனில் நிறைய எழுதியவர். சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி தடுத்துவைக்கப்பட்டிருந்தவர். சிறைக்குச்சென்றவர்கள் எழுத்தாளர்களாயின் என்ன நடக்கும்….? ஒரு நூல் வரவாகும். நாவேந்தனும் விதிவிலக்கல்ல.
ஸ்ரீ அளித்த சிறை என்ற நூலையும் எழுதியிருக்கிறார். செல்வநாயகம், அமிர்தலிங்கம், வன்னியசிங்கம் முதலான தலைவர்களின் அன்பிற்கும் அபிமானத்திற்குமுரியவராக அவர்களின் பாசறையில் வாழ்ந்திருக்கிறார். தமிழ்நாட்டில் கண்ணதாசன் நடத்திய தென்றல், தென்றல் திரை மற்றும் திரையுலகத்தில் நன்கு அறியப்பட்ட ஏ.பி.நாகராஜன் நடத்திய சாட்டை, உமாபதி நடத்திய உமா, இராம. அரங்கண்ணல் நடத்திய அறப்போர் முதலான இதழ்களில் எழுதியிருக்கிறார். தமிழ்க்குரல், சங்கப்பலகை, நாவேந்தன், நம்நாடு முதலான பத்திரிகைகளை வெளியிட்டு அவற்றுக்கு ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார். 1960 களில் கவிஞர் கண்ணதாசன் தி.மு.க.விலிருந்து வெளியேறி ஈ.வி.கே. சம்பத்துடன் இணைந்து தமிழ்த் தேசியக்கட்சி தொடங்கிய வேளையில் இவரது எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் கவனித்துவிட்டு தமிழகத்திற்கு வந்து தம்முடன் பணியாற்றவும் கண்ணதாசன் அழைத்திருக்கிறார். நல்லவேளை நாவேந்தன் தமிழகத்தையும் கண்ணதாசனையும் நம்பிச்செல்லவில்லை. அந்த விபத்திலிருந்து தப்பிவிட்டார். ஆயினும், இலங்கையில் சந்தித்த அரசியல் விபத்துக்களிலிருந்து அவரால் தப்பிக்க இயலவில்லை.
தமிழரசுக்கட்சிக்கு மிகுந்த விசுவாசமாக இருந்தவருக்கு, அங்கு கிடைத்த கசப்பான அனுபவங்களினால் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் தமிழ்க்காங்கிரஸிலும் இணைந்திருக்கிறார். பின்னர் அங்கிருந்தும் வெறுப்புற்று இறுதியாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளனாக மாறியிருக்கிறார். இத்தனைக்கும் அவர் தமது ஆசிரியப்பணியையும் அதன் பின்னர் கிடைத்த அதிபர் பதவியையும் விட்டுவிடவில்லை. இதற்கிடையில் கிறீஸ்தவ மதத்திலும் இணைந்து கிறீஸ்தவ இலக்கியங்களும் நாடகங்களும் எழுதியிருக்கிறார்.
ஒரு ஆளுமையுள்ள மனிதனின் வாழ்வில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள். அவர் பொதுவாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் பல சோதனைகளை சந்தித்தவர்.
எங்கள் வீட்டில் அவருடனான கலந்துரையாடலை நடத்தியபொழுது நானும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளனாகத்தான் இருந்தேன். அவருடைய அரசியல் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம் பற்றிக்கேட்டபொழுது, தமிழரசுக்கட்சியிலும் தமிழ்க்காங்கிரஸிலும் பொருளாதார சிந்தனைகள் இருக்கவில்லை. அதனால் அவற்றிலிருந்து வெளியே வந்துவிட்டதாகச் சொன்னார்.
அன்றையதினம் அவரிடமிருந்து உள்வாங்கிய செய்திகளையும் கருத்துக்களையும் வைத்துக்கொண்டு நீர்கொழும்பில் இலக்கியச்சந்திப்பு என்ற தலைப்பில் ஒரு செய்தியை எழுதி தினகரனுக்கு மறுநாளே அனுப்பிவிட்டேன். செய்தி வெளியானவேளையிலும் அவர் நீர்கொழும்பிலேயே நின்றார். தினகரன் பத்திரிகையை வாங்கிக்கொண்டு உதயகிரி ஹோட்டலுக்கு சென்று அவரிடம் காண்பித்தேன். அவர் அதனைப்படித்துவிட்டு சிரித்துக்கொண்டு சொன்ன பழையசெய்தியை தற்பொழுது நினைத்தாலும் சிரிப்புத்தான் வரும்.
ஒரு சமயம் அவரும் எஸ்.பொ., டொமினிக்ஜீவா, டானியல் ஆகியோரும் யாழ்ப்பாணம் முனியப்பர் கோயிலடியில் ஒரு மாலை வேளையில் அமர்ந்து இலக்கியப்புதினங்களை கச்சான் கடலை கொரித்துக்கொண்டு பரிமாரிக்கொண்டிருந்தனராம். அப்பொழுது அந்த வழியால் ஒரு சிங்களச்சிறுவன் (யாழ்ப்பாணத்தில் ஒரு சிங்களப்பாடசாலையும் இருந்தது. மறந்துவிடாதீர்கள்) பட்டம் விட்டுக்கொண்டு நின்றானாம். அவனை அழைத்து தங்களுக்குத் தெரிந்த உடைந்த சிங்களத்தில் (Broken Sinhala) உரையாடியிருக்கிறார்கள். அன்று இரவே ஒரு செய்தியை எழுதி ஈழநாடு பத்திரிகைக்கு கொடுத்திருக்கிறார்கள். கொழும்பிலிருந்து வந்த ஒரு பிரபல சிங்கள எழுத்தாளருடன் சந்திப்பு என்ற தலைப்பில் அந்தச்செய்தியைப்பார்த்த சில யாழ்ப்பாணம் இலக்கியவாதிகள், கஸ்தூரியார் வீதியில் ஜீவாவிடம் சென்று ” ஏன் தங்களையெல்லாம் அந்தச்சந்திப்புக்கு அழைக்கவில்லை ” என்று வாக்குவாதப்பட்டார்களாம். அப்படி இருக்கிறது முருகபூபதி நீர் எழுதியிருக்கும் இந்தச்செய்தி. சந்தித்தது நாங்கள் மூவர்தான். அதில் நான் பிரதம பேச்சாளன் என்று வேறு எழுதியிருக்கிறீர். வாழ்க… வருங்காலத்தில் இந்த ஊடகத்துறையில் பிழைத்துக்கொள்வீர் என்றார். அவரது ஆசியுடன் நீண்டகாலமாக இந்தத்துறையில் குப்பை கொட்டிக்கொண்டிருக்கின்றேன்.
இதுபற்றி எனது அம்மாவிடம் அன்று சொன்னபொழுது ” துரும்பைத் தூணாக்குவதுதானே பேப்பர்காரர்களின் வேலை ” என்று மட்டும் சொன்னார். இன்று இந்த இணைய உலகிலும் அதுதான் நடக்கிறது. நாவேந்தன் இளம் வயதிலேயே இலக்கியம் படைக்கத்தொடங்கியவர். இவருடைய புனைபெயர்கள் விசித்திரமானவை: ஆம்பலூர் அருணகிரிதாசர், பண்டிதர் பரசுராமமூர்த்தி, காண்டீபன், நக்கீரன்.
அவர் அரசியல் கட்டுரைகளும் எழுதியிருப்பதனால் இந்தப்புனைபெயர்கள் அவரைக்காப்பாற்றிய கவசங்கள் எனவும் கருதலாம். வாழ்வு, தெய்வமகன் ஆகியன அவரது சிறுகதைத்தொகுதிகள். இதில் வாழ்வு இலங்கை சாகித்திய விருதைப்பெற்றது (1964). பின்னாளில் அவரது மறைவைத் தொடர்ந்து அவரது சிறுகதைகள் பலவற்றை தொகுத்து நாவேந்தன் கதைகள் என்ற நூலை சென்னையில் வெளியிட்டிருக்கிறார்கள். பல கட்டுரைகளும் நாடகங்களும் நூல்வடிவம் பெற்றுள்ளன.
1987 இன் பின்னர் நாவேந்தனுடான தொடர்புகள் இல்லாமல் போய்விட்டது. 1997 இல் இலங்கை சென்றவேளையில் வடக்கில் தொடர்ந்தும் போர் மேகம் சூழ்ந்திருந்தமையால் அவரைச்சென்று பார்க்கவும் முடியாமல்போய்விட்டது. தமது 67 வயதில் 2000 ஆம் ஆண்டு காலமானார்.
நாவேந்தன் குடும்பமும் கலை, இலக்கிய, ஊடகத்துறை சார்ந்தது. இவரது சகோதரர்கள் துரைசிங்கம், இளங்கோவன், தமிழ்மாறன். இவர்கள் மூவரும் ஊடகம், இலக்கியம் முதலான துறைகளில் ஈடுபட்டவர்கள். சமீபத்தில் கேர்ன்ஸ் திரைப்படவிழாவில் விருதினை வென்ற தீபன் திரைப்படத்தில் படத்தொகுப்பில் ஈடுபட்ட ஓவியா இளங்கேவன் நாவேந்தனின் சந்ததி. நாவேந்தனின் சிறுகதைகள் மற்றும் எழுத்து சமூகப்பணிகள் பற்றி இலங்கையின் மூத்த படைப்பாளிகள் சிறுகதை மூலவர் சம்பந்தன், இரசிகமணி கனக செந்திநாதன், பேராசிரியர்கள் சிவத்தம்பி, சந்திரசேகரம், மூத்த பத்திரிகையாளர் எஸ்.டி. சிவநாயகம், மல்லிகை ஜீவா, விமர்சகர் கே.எஸ.சிவகுமாரன் உட்பட பலர் விதந்து குறிப்பிட்டுள்ளனர்.
நாவேந்தன் பல துறைகளிலும் ஒரே காலகட்டத்தில் ஈடுபட்டமையினால் சிறுகதைத்துறையில் நன்கு சோபிக்க இயலாமல் போனது துர்ப்பாக்கியம்தான். சிறுகதைக்காக சாகித்திய விருதும் பெற்றிருந்த அவர், சிறுகதை இலக்கியத்தில் சிகரங்களை தொட்டிருக்கவேண்டியவர். ” எழுத்தாளன் எழுதிய படைப்புகளை நாம் மதிப்பீடு செய்யும்பொழுது அவன் தொழிற்பட்ட காலகட்டத்தையும் நாம் கருத்திற்கொள்ளவேண்டும் ” என்று நாவேந்தன் பற்றி எழுதும்பொழுது நண்பர் கே.எஸ்.சிவகுமாரன் சொன்ன கருத்தையும் கவனத்தில் கொள்வோம்.
தாம் பிறந்து வாழ்ந்த புங்குடுதீவு இன்று எப்படி இருக்கிறது…? என்று பார்ப்பதற்கு நாவேந்தனும் தளையசிங்கமும் வில்வரத்தினமும் நாகேசு தருமலிங்கமும் இன்று இல்லை. எஞ்சியிருந்த ஆளுமைகளும் புலம்பெயர்ந்தனர், இடம்பெயர்ந்தனர். இன்று அந்த இடத்தை நிரப்புவதற்கு அரசியல்வாதிகள் படையெடுக்கிறார்கள். காலம் எதற்கும் பதில் சொல்லும்.