சமீபத்தில் இலங்கை சென்று திரும்பியிருந்த மெல்பனில் வதியும் இலக்கிய நண்பரும் இளம் படைப்பாளியுமான ஜே.கே. என்ற புனைபெயருடன் எழுதும் ஜெயகுமரன் சந்திரசேகரன் யாழ்ப்பாணத்தில் நண்பர் செங்கை ஆழியானை சென்று பார்த்ததாகச் சொன்னார். ஈழத்தின் மூத்த எழுத்தாளராக அறியப்பட்ட எழுதிக்கொண்டே இயங்கிய செங்கை ஆழியான் சுகவீனமுற்று பேசுவதற்கும் சிரமப்பட்டுக்கொண்டு வீட்டில் முடங்கியிருப்பதை ஜே.கே. சொன்னபொழுது கவலையாக இருந்தது. அவருக்கு நோய்க்குரிய அறிகுறிகள் தென்பட்ட 2010 – 2011 காலப்பகுதியில் சந்தித்த பின்னர் மீண்டும் சந்திப்பதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் செங்கை ஆழியானுக்கு முக்கியமான இடம் இருக்கிறது என்பதை எவரும் மறுக்கமுடியாது. இவரும் செ.கணேசலிங்கன் போன்று நிறைய எழுதியவர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னாள் மாணவராக பேராதனைப் பல்கலைக்கழகம் புகுந்த கந்தையா குணராசா என்ற இயற்பெயர் கொண்டிருந்த செங்கை ஆழியான் சிறுகதை, நாவல், தொடர்கதை, ஆய்வுகள், மற்றும் புவியியல் சம்பந்தப்பட்ட பாட நூல்கள், ஏராளமான கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் மதிப்புரைகள் எழுதியவர். பல இலக்கியத்தொகுப்புகளின் ஆசிரியராகவும் பல நூல்களின் பதிப்பாசிரியராகவும் விளங்கியதுடன் சுறுசுறுப்புக்கும் விடாமுயற்சிக்கும் எடுத்துக்காட்டாகவும் முன்மாதிரியாகவும் திகழ்ந்தவர். இன்றும் எமது நாட்டிலும் தமிழகத்திலும் விமர்சனங்களுக்குள்ளாகிவரும் மகாவம்சம் பற்றிய ஆய்வையும் மேற்கொண்டு நூல் எழுதியிருப்பவர்.
நோயின் உபாதை அவரைப் பேசவும் எழுதவும் முடியாமல் முடங்கவைத்திருக்கிறது. இளமைத்துடிப்புடன் அவர் இயங்கிய காலங்களில் இன்று போன்று கணினி வசதி இருக்கவில்லை. வீரகேசரி பிரசுரமாக வெளியான அவருடைய வாடைக்காற்று நாவலை 1973 காலப்பகுதியில் படித்துவிட்டு, யாழ்ப்பாணம் பிரவுண் வீதியிலிருக்கும் அவருடைய கமலம் இல்லத்தின் முகவரிக்கு கடிதம் எழுதினேன். அவ்வேளையில் அவர் செட்டிகுளம் உதவி அரசாங்க அதிபராக பணியிலிருந்திருக்க வேண்டும். நெடுந்தீவு தொழில் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து அவர் எழுதிய அந்த நாவலில் வரும் பாத்திரங்களை எங்கள் நீர்கொழும்பூர் மீனவ மக்கள் மத்தியிலும் நான் பார்த்திருப்பதனால் அந்த நாவல் எனக்கு மிக நெருக்கமாகவே இருந்தது.
இந்நாவல் விமர்சனம் பெரிய சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது வேறு கதை. பின்னர் இந்த நாவல் திரைப்படமாகியது. “யார் அதன் வசனகர்த்தா.?” என்ற சர்ச்சையும் சிறிதுகாலம் நீடித்து ஓய்ந்தது. சிலர் கே.எம். வாசகர் என்றார்கள். சிலர் செம்பியன் செல்வன் என்றார்கள். திரையில் யாருடைய பெயர் காண்பிக்கப்பட்டது என்பது தற்பொழுது நினைவில் இல்லை. ஈழத்தில் வெளியான குறிப்பிடத்தகுந்த படம் வாடைக்காற்று. அதில் வரும், வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே.. என்ற பாடல் இன்றும் காதுக்கினிய பாடல்தான். அதனைப்பாடிய ஜோசப் ராஜேந்திரனும் அண்மையில் மறைந்துவிட்டார்.
வீரகேசரியின் ஐம்பதாவது பிரசுரமாக அவருடைய காட்டாறு வெளியானது. இது அவருடைய செட்டிகுளம் தொழில் அனுபவம் சார்ந்திருந்தது. அதில் இடம்பெற்ற பல பாத்திரங்கள் நிஜமாகவே அந்தப்பிரதேசத்தில் நடமாடியவர்கள்தான். அதனால் உண்மை பலரையும் சுட்டது. அந்தவகையில் காட்டாறு நாவலும் சர்ச்சைக்குரியதானது. வீரகேசரியின் வெளியீட்டு முயற்சியை நட்டப்படவைக்காமல் அதனை ஊக்குவித்தவர் செங்கை ஆழியான். ஜனரஞ்சகமாகவும் யதார்த்தமாகவும் அவர் கதைகளை புனைந்திருந்தமையும் அதற்கு முக்கிய காரணம்.
1975 இல் வெளியான நூல்களுக்கு சாகித்திய பரிசு கிடைத்தபொழுது செங்கை ஆழியானுடைய வீரகேசரி பிரசுரம் பிரளயம் நாவலுக்கு 1976 இல் கிடைத்தது. அப்பொழுது எனக்கும் எழுத்தாளர் சாந்தனுக்கும் சிறுகதைக்காக கிடைத்தது. எம்முடன் அவ்வேளையில் பரிசு பெற்றவர்கள் மகாஜனா கல்லூரி முன்னாள் அதிபர் த. சண்முகசுந்தரம் மற்றும் ஆத்மஜோதி முத்தையா. மினுவாங்கொடைக்கு சமீபமாக ஸ்ரீமாவின் தேர்தல் தொகுதியான அத்தனகல்லையில் பத்தலகெதர ஆசிரிய பயிற்சிக்கலாசாலை மண்டபத்தில் வெகு கோலாகலமாக நடத்தப்பட்ட அரச சாகித்திய விழாவில் இலங்கையின் முதலாவது ஜனாதிபதி வில்லியம் கொபல்லாவ எங்களுக்கு சாகித்திய பரிசு வழங்கியபொழுது அந்த விழாவில் செங்கை ஆழியான் கலந்துகொள்ளவில்லை. அதனால் அன்றும் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பை இழந்திருந்தேன்.
1976 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அதன் தலைவராகவிருந்த பேராசிரியர் கைலாசபதியின் ஏற்பாட்டில் தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கு நடந்தபொழுது அதற்கு சென்றிருந்தேன். குறிப்பிட்ட ஆய்வரங்கிற்கு தமிழ்நாட்டிலிருந்து மூத்த படைப்பாளி அசோகமித்திரனும் வந்திருந்தார். ஆய்வரங்கிற்கு முதல் நாள் மாலை யாழ். நகராட்சி மன்ற கட்டிடம் ஒன்றில் சாகித்திய பரிசுபெற்ற செங்கை ஆழியானுக்கு பாராட்டுக்கூட்டத்தை அவர் அங்கம் வகிக்கும் யாழ். இலக்கிய வட்டம் ஒழுங்குசெய்திருப்பதாக மல்லிகை ஜீவா என்னிடம் சொன்னதையடுத்து அவருடன் அந்த நிகழ்ச்சிக்கு சென்று அன்றுதான் செங்கை ஆழியானைப் பார்த்தேன். மூத்த எழுத்தாளர்கள் சொக்கன், சு. இராஜநாயகன், வரதர், மல்லிகை ஜீவா உட்பட பலர் செங்கை ஆழியானை பாராட்டிப்பேசினார்கள். அசோகமித்திரனை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆ. சிவநேசச்செல்வனும் சோ. கிருஷ்ணராஜாவும் ஒரு காரில் அழைத்து வந்தார்கள். அன்றுதான் அவர்களையும் முதல் முதலில் சந்தித்துப்பேசினேன்.
எப்பொழுதும் வாழ்வில் நடக்கும் முதல் நிகழ்ச்சிகள் மறக்கமுடியாது அல்லவா….? பல ” முதல்கள் ” ஒவ்வொருவர் வாழ்விலும் இருக்கிறது. செங்கை ஆழியான் அழகான ஆண்மகன். சிரித்த முகத்துடன் அன்று அவர் என்னுடன் உரையாடியதை மறக்கமுடியவில்லை. இன்று அவர் படுக்கையில் இருப்பதை அறியும்பொழுது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. எழுத்துலகில் கடும் உழைப்பாளி. அத்துடன் ஆற்றலும் சுறுசுறுப்பும் அவருக்கிருந்த கொடைகள். பல நூல்களை வரவாக்கியிருப்பவர். ஈழத்து இலக்கிய வளர்ச்சி பற்றி ஆராயப்புகும் எவருக்கும் செங்கை ஆழியான் தொகுத்துள்ள நூல்கள் பலவும் ஊசாத்துணையாகவே திகழும். மல்லிகை, சுதந்திரன், ஈழகேசரி, மறுமலர்ச்சி காலத்து சிறுகதைகளையெல்லாம் தொகுத்திருப்பவர். 1936 முதல் 1950 வரையிலான காலப்பகுதியில் எழுதிய ஈழத்தின் இலக்கிய முன்னோடிகள் சம்பந்தன், வைத்திலிங்கம், இலங்கையர்கோன் உட்பட பலரையும் அறிமுகப்படுத்தி ஆய்வுசெய்திருக்கிறார். 1930 முதல் 2001 வரையில் சுமார் 800 சிறுகதைகளை படித்து ஆய்வுசெய்துள்ளார். அதற்காக இருநூறுக்கும் அதிகமான எழுத்தாளர்களின் நானூறுக்கும் அதிகமான சிறுகதைகளை படித்திருக்கிறார். இதனையெல்லாம் அவர் யாருக்காக செய்தார்…? இன்று சக எழுத்தாளனின் படைப்பை படித்து கருத்துச்சொல்வதற்கும் தயங்குகின்ற காலத்தில், அன்று எந்த நவீன வசதிகளும் இல்லாதபொழுது தேடித்தேடி சேகரித்து வாசித்து அவர் மேற்கொண்ட ஆய்வுகளின் பின்னாலிருக்கும் கடுமையான உழைப்பு போற்றுதலுக்குரியது. ஈழத்து இலக்கியத் தகவல்களை அவர் தமது விரல் நுனியில் வைத்திருந்தார்.
இன்று எதனையும் கணினி கண்டு பிடித்துக்கொடுத்துவிடும். இதழியலில் இன்று Download Journalism பரவிவிட்டது. எல்லாத்தகவல்களும் எளிதாக கிடைத்துவிடுகிறது. ஆனால் செங்கை ஆழியான் அன்று ஒரு நடமாடும் நூலகமாக – தகவல் களஞ்சியமாக வாழ்ந்தவர். அதனால் அன்று பலரும் பயன்பெற்றனர். பலருக்கும் அவரது கட்டுரைகளினால் அறிமுகம் கிடைத்தது செங்கை ஆழியான் தமது தொழில் துறைகளிலும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கியவர். கண்டனங்கள், அவதூறுகளுக்கும் ஆளானவர். அதற்காக அவர் சோர்ந்து துவண்டுவிடவில்லை. உதவி அரசாங்க அதிபராக, யாழ். மாநகர ஆணையாளராக, பல்கலைக்கழக பதிவாளராக, பின்னாட்களில் உலக வங்கியில் இலங்கைக்கான ஆலோசகராகவெல்லாம் பதவி வகித்தவர். முன்னர் இலங்கையில் தமிழில் புவியியல் பாட ஆசிரியர்களாக இருந்த பலருக்கும் செங்கை ஆழியான் என்ற ஆக்க இலக்கிய எழுத்தாளரைத் தெரிந்திருக்காவிட்டாலும் கந்தையா குணராசா என்ற பெயர் நன்றாகத் தெரிந்திருக்கும்.
செங்கை ஆழியானின் கதைகள் ஜனரஞ்சகமாக அமைந்திருந்தமையினால் அதில் இசங்கள் தேடுவோரும் நவீனத்துவத்திற்கு பல பெயர்களை சூட்டியிருப்போரும், இவரை அலட்சியப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அவர் தனக்கென பெரிய வாசகர் கூட்டத்தை வைத்திருந்தார். அவருடைய கையெழுத்தும் அழகானது. விரைந்து எழுதும் ஆற்றல் அவருக்கு கைவந்த கலை. யாழ். நூலகம் எரிக்கப்பட்ட வேளையிலும் அதன் பின்னர் அங்கு நடந்த அநியாயங்களையும் ஒரே இரவில் கண்விழித்து இவர் புனைபெயரில் நூல்கள் எழுதியிருக்கிறார். இலக்கியவாதி வரதரின் வேண்டுகோளை ஏற்று அவர் அந்தப்பணியை செய்தார். இவருடைய அண்ணன் புதுமைலோலன் என்ற எழுத்தாளர் தமிழரசுக்கட்சி கொழும்பு காலிமுகத்திடலில் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது பொலிசாரின் குண்டாந்தடி பிரயோகத்திற்கு இலக்காகி கைமுறிந்து சிகிச்சை பெற்றவர். பின்னாளில் அவருடைய ஒரு மகன் இயக்கப்போராளியாக களத்தில் மரணமுற்றார். சாத்வீகத்தையும் ஆயுதப்போராட்டத்தையும் இணைத்து பின்னாளில் தீம் தரி கிட தித்தோம் என்ற புதினத்தையும் செங்கை ஆழியான் எழுதியுள்ளார்.
ஈழப்போராட்டத்தில் புலிகள், பிரபாகரன் தலைமையில் நடத்திய ஒரு முக்கியமான கெரில்லாத்தாக்குதல் பிரம்படி என்ற இடத்தில் நடந்தது. அதில் பல இந்தியப்படையினர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் பற்றி புலிகளிடம் மாற்றுக்கருத்துக்கொண்டிருந்த ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூலை எழுதியிருந்த புஷ்பராசாவும் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணியில் செங்கை ஆழியான் ஒரு வித்தியாசமான சிறுகதை எழுதியிருந்தார். அதில் கொல்லப்பட்ட இந்திய தளபதியின் மகள் ஒருத்தி தனது தந்தை கொல்லப்பட்ட இடத்தை தேடிவந்து பார்ப்பது பற்றிய சிறுகதை. அத்துடன் இரவுப்பயணிகள் என்ற தலைப்பில் மல்லிகையில் சில போர்க்காலச் சிறுகதைகளையும் – கிளாலிப்பாதை ஊடாக மக்கள் அனுபவித்த சொல்லொனா துயர் பற்றிய கதைகளும் எழுதியவர் செங்கை ஆழியான். செங்கை ஆழியானின் வாடைக்காற்றை படித்துவிட்டு 1973 இல் அவருக்கு ஒரு சிறிய கடிதம்தான் நான் வரைந்தேன். ஆனால் – அவர் 1988 இல் தமிழ்நாட்டில் வெளியான எனது சமாந்தரங்கள் சிறுகதைத்தொகுதியை படித்துவிட்டு மல்லிகை அக்டோபர் இதழில் விரிவான விமர்சனமே எழுதியிருந்தார். அதில் அவருடைய வரிகள் என்னை ஊக்கப்படுத்துவனவாகவே இருந்தன.
இவ்வாறு அவர் பல இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்தவர். அத்துடன் இளம் படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் ஈழத்தின் மூத்த படைப்பாளிகளையும் அவர்தம் படைப்புகளையும் அறிமுகப்படுத்தியவர். இரண்டு தலைமுறைகளுக்கு இடையில் அவர் ஆரோக்கியமான பாலத்தை கட்டி எழுப்பினார். அவர் தமது வீட்டில் பெரிய நூலகம் வைத்திருப்பதாக பலரும் சொல்லி அறிந்துள்ளேன். ஆனால், எனக்கு அதனை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பலரதும் படைப்புகள் அவருடைய சேகரிப்பில் நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கையில் அவரைத் தேடிச்செல்பவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பமாட்டார்கள். முன்னர் இலங்கையிலும் பின்னர் நியூசிலாந்து வந்து இறுதியில் அவுஸ்திரேலியாவில் வசித்து மறைந்த எழுத்தாளர் நித்திய கீர்த்தியின் முதலாவது நாவல் மீட்டாத வீணை வீரகேசரி பிரசுரமாக முன்னர் வந்திருந்தது. அவர் தம்வசம் வைத்திருந்த அந்நாவலின் பிரதியை புலப்பெயர்வில் எங்கோ தொலைத்துவிட்டு கவலையுடன் இருந்தார். எமது அவுஸ்திரேலிய இல்லத்திற்கு 1999 இல் வருகை தந்திருந்த தற்பொழுது ஞானம் இதழை வெளியிடும் அதன் ஆசிரியர் டொக்டர் தி. ஞானசேகரனிடம், நித்தியகீர்த்தி தமது கவலையை வெளியிட்டதும், ” நித்தி…கவலையை விடுங்கள். நிச்சயம் அந்த நூல் எங்கள் செங்கை ஆழியானிடம் இருக்கும், இலங்கை திரும்பிச்சென்றவுடன் முதல் வேலையாக அதன் பிரதியை பெற்று அனுப்பிவைக்கின்றேன் ” என்று வாக்குறுதி அளித்தார் ஞானசேகரன். அவ்வாறே அதனை செங்கை அழியானிடம் கேட்டுப்பெற்று அனுப்பியும் வைத்திருந்தார்.
இவ்வாறு தானும் பயனடைந்து மற்றவர்களுக்கும் பயனுள்ளவாறு வாழ்ந்த சுறுசுறுப்பின் இலக்கணம், இன்று சோர்ந்து விட்டதை அறிந்தபொழுது மனது கனக்கிறது. எழுத்தாளர் கோகிலா மகேந்திரனுக்கும் ஒரு நூல் தேவைப்பட்டபொழுது அவரும் செங்கை ஆழியானைத்தேடித்தான் சென்றுள்ளார். ஆனால், எழுந்து சென்று அதனை சேகரிப்பிலிருந்து எடுத்துக்கொடுக்க முடியாமல் அவர் பட்ட சிரமம் பற்றி கோகிலா ஒரு சந்தர்ப்பத்தில் என்னிடம் குறிப்பிட்டார். பின்னர் கோகிலாவும் செங்கை ஆழியானின் மனைவி கமலாவும் சேர்ந்து தூசு தட்டித்தேடி எடுத்தார்களாம்.
அந்த பெரிய நூலகத்திற்கு பேசும் சக்தி இருந்தால், செங்கை ஆழியானின் உழைப்பையும் தேடலையும் அழகாகச்சொல்லும். அவர் தமது வாழ்வில் எத்தனையோ பணிகளை ஆக்கபூர்வமாகச் செய்தார். பல பரிசுகளும் விருதுகளும் பெற்றார். சாகித்திய ரத்னா விருதும் கிடைத்திருக்கிறது. மல்லிகை, ஞானம் ஆகிய இதழ்களும் அவரை அட்டைப்பட அதிதியாக பாராட்டி கௌரவித்திருக்கிறது. ஆயினும் – கண்திருஷ்டி போன்று ஒரு சம்பவமும் அவர் வாழ்வில் நிகழ்ந்தது துர்நிகழ்வுதான். ஒரு சமயம் யாருடைய தூண்டுதலினாலோ அவரும் சுயேட்சைக்குழுவில் யாழ். மாவட்டத்தில் தேர்தலில் ஈடுபட்டார். வெற்றி பெற்றிருப்பின் அவருடைய வாழ்விலும் பணியிலும் மற்றுமொரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டிருக்கும். ஆனால், அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. 2011 ஆம் ஆண்டு நாம் நடத்திய முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் யாழ்.மாவட்ட ஆலோசனைக்கூட்டம் அவர் தலைமையில் 2010 ஜனவரியில் நல்லூர் ஆதினம் மண்டபத்தில் நடந்தது. அன்று அவருடைய உரையை நீண்ட இடைவெளிக்குப்பின்னர் கேட்டபொழுது அவரிடமிருந்த சோர்வை அவதானிக்க முடிந்தது. எனினும், 2011 இல் மாநாடு கொழும்பில் நடந்தபொழுது வருகை தந்து உரையாற்றினார். அதன் பின்னர் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
2009 ஆம் ஆண்டு மெல்பனில் நடந்த எமது ஒன்பதாவது எழுத்தாளர் விழாவுக்கு அவரை அழைப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, அதற்கான Sponsor கடிதத்தை கொழும்பில் அச்சமயம் நின்ற அவருக்கு அனுப்புவதற்காக தொடர்புகொண்ட பொழுது, அக்கடிதத்தை ஞானம் ஆசிரியரின் இல்லத்துக்கு Fax இல் அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அவ்வாறே அனுப்பினேன். கிடைத்ததும், யாழ்ப்பாணத்தில் குடும்பத்தினரை பார்த்துவிட்டு திரும்பிவந்து கொழும்பு அவுஸ்திரேலியா தூதரகம் செல்வதாகச் சொன்னார். ஆனால் , அவர் யாழ்ப்பாணம் சென்ற வேளையில் ஸ்கூட்டரில் பயணித்தபொழுது சிறிய விபத்திற்குள்ளானமையினால் அவரால் அவுஸ்திரேலியாவுக்கு வர முடியாது போய்விட்டது.
1941 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஒரு சராசரிக் குடும்பத்தில் பிறந்து – வரும் 2016 ஆம் ஆண்டு ஜனவரியில் பவளவிழாவைக்காணும் – கல்வியிலும் இலக்கியத்திலும் பல்வேறு அரச பணிகளிலும் பல சாதனைகளைச் செய்த எங்கள் செங்கை ஆழியான் எமக்கெல்லாம் இலக்கியத்துறையில் முன்னோடியாக இருந்தமை போன்றே – இனிவரும் காலங்களில்…. நாம் கடக்கவிருக்கும் பாதையிலும் முன்னோடியாக வாழ்கின்றார். அவர் நலம்பெறல் வேண்டும் என்பது எமது பிரார்த்தனை.
letchumananm@gmail.com