பெரியார் ஈ.வே.ராமசாமி தமது குடியரசு இதழ் விநியோகத்திற்கு முதலில் தேர்வு செய்த இடங்கள் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் இருந்த சிகை அலங்கார நிலையங்கள்தான் என்று சொல்லப்பட்டதுண்டு. காரணம்; இங்கு வரும் வாடிக்கையாளர்களின் கண்களில் குடியரசு இதழ்கள் தென்படும். எடுத்துப்படிப்பார்கள். அவ்வாறு தமது சமூகச்சீர்திருத்தக் கருத்துக்களையும் பகுத்தறிவுவாத சிந்தனைகளையும் பெரியார் அக்காலத்தில் சாதாரண மக்களிடம் பரப்பினார். எங்கள் மல்லிகை ஜீவாவுக்கும் பெரியார் ஆதர்சமாகத் திகழ்ந்தவர். அவரை முன்மாதிரியாகக்கொண்டு, தாம் வெளியிட்ட மல்லிகையை இலங்கையில் பல தமிழ் அன்பர்கள் நடத்திய சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கும் விநியோகித்தார். யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் இவ்வாறு மல்லிகையை அவர் விநியோகம் செய்ததை நேரில் பார்த்திருக்கின்றேன். தொடக்கத்தில் அவருடைய யாழ்ப்பாணம் கஸ்தூரியார் விதியில் அமைந்த ஜோசப்சலூனின் பின்னறையிலிருந்து மல்லிகையின் பக்கங்கள் அச்சுக்கோர்க்கப்பட்டன. காலப்போக்கில் ராஜா தியேட்டருக்குப்பின்னால் மல்லிகைக்கென தனியாக அலுவலகம் அமைத்து வெளியிட்டார். வடக்கில் போர் நெருக்கடியினாலும் இயக்கத்தின் நெருக்குவாரங்களினாலும் கொழும்புக்கு இடம்பெயர்ந்து, மல்லிகையை வெளியிட்டார். கடந்த சில வருடங்களாக மல்லிகை வெளிவரவில்லை.
மல்லிகை ஜீவாவுடனும் மல்லிகையுடனும் மல்லிகையின் நண்பர்களுடனும் தொடர்ச்சியாக இணைந்திருந்த முன்னாள் தபால் அதிபர் ரத்தினசபாபதி, அவர்கள் மல்லிகையில் பல ஆக்கங்களை எழுதியிருந்தபோதிலும் அவருடைய முகம் அட்டையில் பிரசுரமாகவேயில்லை. அட்டைப்பட அதிதி என்ற மகுடத்தில் இலங்கை, இந்திய மற்றும் புலம்பெயர்ந்த படைப்பாளிகள், கல்விமான்கள், கலைஞர்கள், சமூகப்பணியாளர்கள், முற்போக்கான அரசியல் தலைவர்கள் பலரும் அட்டைப்பட அதிதிகளாக மல்லிகையில் கௌரவிக்கப்பட்டுள்ளனர். பழைய மல்லிகை இதழ்களை பார்த்தால், எத்தனைபேர் அவ்வாறு கனம் பண்ணப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும். பின்னாளில் அக்கட்டுரைகளை தனித்தனி தொகுதிகளாகவும் மல்லிகைப்பந்தல் வெளியிட்டுள்ளது. அட்டைப்பட ஓவியங்கள் (1986) மல்லிகை முகங்கள் (1996) அட்டைப்படங்கள் (2002) முன்முகங்கள் (2007) முதலான தொகுப்புகள்தான் அவை. இந்த வரிசையில் முதல் வெளியீடான அட்டைப்பட ஓவியங்கள் நூல், தமிழ்நாட்டில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தினால் மற்றும் ஒரு பதிப்பையும் கண்டிருக்கிறது. ஆனால், மல்லிகையின் வளர்ச்சிக்கு பல ஆண்டுகாலம் பக்கத்துணையாக விளங்கிய ரத்தினசபாபதி அவர்களின் படம்தான் மல்லிகையின் முகப்பு அட்டையை அலங்கரிக்கவில்லை. கண்களுக்கு கண்ணின் இமைகள் தெரிவதில்லை. ஆயினும் – ஜீவா ஆரம்பத்தில் வழக்கமாக எழுதும் மல்லிகையின் கொடிக்கால்கள் என்ற பத்தியில் இவரைப்பற்றிய குறிப்பினை பதிவுசெய்துள்ளார் கொழும்பில் மல்லிகை வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான புறக்கோட்டையில் அமைந்திருக்கும் ஓரியண்டல் சலூனுக்கு உரிமையாளரான (அமரர்) தம்பையா அண்ணரும் எழுத்தாளர்தான். இரண்டு நூல்களும் எழுதியிருக்கிறார். முன்னர் மலேசியாவில் வாழ்ந்திருப்பவர். இவருடைய ஊர் யாழ்ப்பாணத்தில் அச்செழு. வீட்டின் வளவில் பசுமையான தோட்டத்தையும் பராமறித்தமையால், இவரை ஜீவா, அச்செழுபண்ணையார் என்றும் அழைத்தார். பின்னாளில் இவருடைய மகளையே ஜீவாவின் ஏகபுத்திரன் திலீபன் மணம் முடித்தார். எனக்கு தம்பையா அண்ணர் பழக்கமானது 1972 ஜூலை மாதத்திற்குப்பின்னர்தான். அந்த மாதம் ஒருநாள் யாழ்ப்பாணத்திலிருந்து ஜீவா வந்திருப்பார் என நினைத்துக்கொண்டு ஓரியண்டல் சலூனுக்குச்சென்றேன். ஆனால், ஜீவா வந்திருக்கவில்லை. அம்மாத மல்லிகைதான் வந்திருந்தது. அதில் எனது முதலாவது சிறுகதையும் வெளியாகியிருந்தது. என்னை அடையாளம் கண்டுகொண்ட தம்பையா அண்ணர், அருகிலிருக்கும் கோல்டன் கபேயிலிருந்து தேநீர் வரவழைத்துத்தந்து, உபசரித்துவிட்டு, அங்கிருந்த வானொலிப்பெட்டியில் ஒரு கஸட்டை செலுத்தினார். அதிலிருந்து ஒரு குரல் ஒலித்தது. அந்தக்குரலுக்குரியவர் யார் என்பது எனக்குத் தெரியாது. எனது முதலாவது சிறுகதை கனவுகள் ஆயிரம் பற்றிய விமர்சனமாக அது அமைந்திருந்தது.
” கதை நடக்கும் களத்தினை முதலில் காட்டி, பின்பு கடலில்வைத்து கதையின் நாயகனை அறிமுகமாக்கி, கதையினைத் துவக்கிவைத்திருப்பது பாராட்டுக்குரியது. எனினும் பிரபல நாவலான செம்மீனின் ஆரம்பத்தை இது ஒத்திருக்கிறது என்று நினையாமல். கேரளத்தில் ஆலப்புழை கடற்கரை என்றால் என்ன, ஈழத்தில் நீர்கொழும்புக்கடற்கரை என்றால் என்ன, மீனவ மக்களின் இயல்புகள் அனைத்தும் ஒன்றுதானே. ஆகவே, இது மீனவக்கதைக்கு அருமையான ஆரம்பமே” என்று அந்த விமர்சனக்குரல் தொடங்கி சிறிது நேரம் ஒலித்தது. எனக்கு அது இன்ப அதிர்ச்சி. ” யாருடைய குரல் ? ” எனக்கேட்டேன். ” மல்லிகை ஆசிரியரின் நண்பர். எழுத்தாளர். தபால் நிலைய உத்தியோகத்தர். பெயர் ரத்தினசபாபதி அய்யர்.” என்று சொன்னார் தம்பையா அண்ணர்.
என்னை தனிப்பட்ட முறையில் அறிந்திராத ஒருவரிடமிருந்து கிடைத்துள்ள நல்ல விமர்சனம், என்னை ஊக்கப்படுத்துவதாக அமைந்திருந்தது. அதுவரையில் நான் தகழியின் செம்மீனும் படித்திருக்கவில்லை. காலம் கடந்து சுந்தரராமசாமியின் மொழிபெயர்ப்பில்தான் அதனைப்படித்தேன். ரத்தனசபாபதியின் அந்த விமர்சனம் மல்லிகையின் ஒகஸ்ட் மாத இதழில்(1972) வெளியாகி பல இலக்கியவாதிகளினதும் கவனத்திற்குள்ளானேன். அவர் தந்த ஊக்கத்தினால், அடுத்தடுத்து இரண்டு மாத காலத்தில் நீர்கொழும்பு மீனவர் சமூகம் சார்ந்த பிரதேச மொழிவழக்குடன் நான்கு கதைகளையும் எழுதிவிட்டேன். மூன்று வருடகாலத்தில் ஒரு தொகுதியும் வெளியிட்டேன். அதிலிருந்து இரண்டு சிறுகதைகள் நாடகமாக இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பாகியது. ஆனால், சற்று காலம் கடந்துதான் ரத்தினசபாபதி அறிமுகமானார். அதுவும் எதிர்பாராத நிகழ்வுதான். ஒரு நாள் மதியம் புறக்கோட்டையில் ராஜேஸ்வரி பவானில்தான் நாம் சந்தித்துக்கொண்டோம். ரத்தினசபாபதி இனிய சுபாவம்கொண்டவர். கலகலப்பானவர். சிரிப்பூட்டும் செய்திகளை சிரிக்காமலே சொல்வதுதான் அவருடைய இயல்பு. பல சுவாரஸ்யமான இலக்கிய உலகப்புதினங்களை அவரிடமிருந்து கேட்டு ரசித்திருக்கின்றேன்.
அவர் யாழ்ப்பாணத்தில் மல்லிகை அலுவலகத்தில் செய்யும் தொண்டு, மெய்சிலிர்க்கச்செய்யும். சிலந்தி ஒட்டறையையும் தூசையும் தட்டி துப்புரவுசெய்துவிட்டு, குவிந்துவிடும் கழிவுகளையெல்லாம் கூட்டிப்பெருக்கி ஒரு கார்ட்போட் பெட்டியில் சேகரித்து வெளியே எடுத்துச்சென்று போட்டுவிட்டு வந்த காட்சியை நேரில் பார்த்திருக்கின்றேன். மல்லிகையில் சில சமயங்களில் ஒப்புநோக்குவார். இவ்வாறு ஒப்புநோக்கும் (Proof Reading) மற்றவர் ஏ.ஜே.கனகரத்னா.
மல்லிகை ஜீவாவுக்கு கடையிலிருந்து உணவுப்பொதி எடுத்துவருவார். பாரதி தன் சேவகனாக கண்ணனை உருவகித்து பாடல் புனைந்தார். அவ்வாறு மல்லிகையின் சேவகனாக வாழ்ந்த ரத்தினசபாபதிக்கு மல்லிகை அட்டைப்பட அதிதி கௌரவம் கூடக் கிடைக்கவில்லை என்பது எனக்கு வருத்தமே. இத்தனைக்கும் ரத்தினசபாபதி சிறுகதை எழுத்தாளர். மல்லிகையில் விமர்சனங்கள், பத்திகள் எழுதியிருப்பவர். தமிழகத்தின் நா. பார்த்தசாரதி வெளியிட்ட தீபம் இதழின் ஈழத்து சிறப்பிதழ் பற்றிய நயப்புரையும் மல்லிகையில் எழுதியிருக்கிறார். நானறிந்தவரையில் அவர் மல்லிகையில் எழுதிய இரண்டு ஆக்கங்கள் மிகவும் முக்கியத்துவமானவை. தென்னிலங்கையில் புகழ்பெற்ற சிங்கள படைப்பாளி மஹகம சேகர. இவருடைய துங்மங் ஹந்திய என்ற கதை திரைப்படமாகியிருக்கிறது. நாவல்கள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எழுதிய பன்முகஆளுமை. இவருடைய நினைவாக தபால்தலையும் வெளியிடப்பட்டது. தருமு சிவராம் இலங்கையிலும் தமிழகத்திலும் மிகுந்த கவனிப்புபெற்ற கவிஞர். விமர்சகர். இந்த இரண்டுபேரையும் பற்றி ரத்தினசபாபதி எழுதிய கட்டுரைகள் தனித்துவமானவை. ஒரு சமயம் இவர் தபாலகத்தில் பணியாற்றியவேளையில் அங்கு வந்த பெண் ஒருவர் புகழ்பெற்ற படைப்பாளி மஹகமசேகரவின் மனைவி குசுமலதா. மஹகமசேகரவின் நினைவாக அரசு வெளியிட்ட தபால் தலை தன்னிடம் இல்லை என்றும் தனக்கு அது தேவையென்றும் அந்தப்பெண்மணி சொன்னதும், அதனைத்தேடி எடுத்துக்கொண்டுவந்து கொடுத்துள்ளார் ரத்தினசபாபதி. தருமுசிவராம் இவருடைய நண்பர். இன்று கொழும்பில் கேந்திரமுக்கியத்துவமாகத்திகழும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் அமைந்துள்ள நிலம் ஒரு காலத்தில் வெறும் பொட்டல்காடு. கவனிப்பாரற்ற அந்த புல்லும் புதரும் மண்டியிருந்த நிலத்தில் ஒரு சிறிய கூடாரத்தில்; முன்னர் தருமுசிவராம் வாழ்ந்திருக்கிறார். பின்னாளில் அவர் ஏகாந்தியாகி கிட்டத்தட்ட ஒரு துறவு வாழ்க்கையையே தமிழகத்தில் தொடர்ந்தபொழுது சிறிதுகாலம் மலைக்குகைகளிலும் வாழ்ந்ததாக சொல்லப்பட்டது. அவரது பூதவுடல் வேலூருக்கு அருகே கரடிக்குடி என்ற புறநகர் மயானத்தில் அடக்கமானது.
தருமுசிவராம் பற்றிய அந்தக்கட்டுரை வெளியான மல்லிகை 35 ஆவது ஆண்டுமலர் பற்றி தமது வாசிப்பு அனுபவத்தை ஆனந்தவிகடனில் கற்றதும் பெற்றதும் என்ற தமது பத்தியில் எழுதியிருந்த சுஜாதா, அக்கட்டுரையை சிலாகித்து குறிப்பிட்டிருக்கிறார். வல்லிக்கண்ணன் மின்அம்பலம் இதழில் அதனை சிறப்பித்து குறிப்பிட்டிருந்தார். தருமுசிவராமின் ரிஷிமூலத்தை அவர்களும் தேடியிருக்கின்றனர் என்பதுதான் அதன் பொருள். அந்த 35 ஆவது மலருக்குப்பின்னர் வெளியான மல்லிகை இதழ்களில் சில வாசகர்களும் தமது கடிதத்தில் ரத்தினசபாபதியின் அந்தப்பெறுமதியான ஆக்கத்தை விதந்திருக்கின்றனர். தருமுசிவராம் பல தமிழக இலக்கிய ஆளுமைகளினால் கவனிப்புக்குள்ளானவர். ஆனால், இலங்கையில் தருமுவைப்பற்றி எழுதியவர்கள் சிலரே. அவர்களில் ஏ.ஜே. கனகரத்தினா, ரத்தினசபாபதி ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். ரத்தினசபாபதியின் துணைவியார் சுலோசனா. அதனால் சில கட்டுரைகளை சுலோ அய்யர் என்ற பெயரிலும் எழுதியவர்.
மலையகத்தில் நாவலப்பிட்டியில் சிறிதுகாலம் பணியாற்றியவேளையில், அருகிலிருக்கும் கம்பளை, ஹட்டன், கினிகத்தேனை முதலான ஊர்களுக்கும் Relief Post Master ஆக பணியாற்றச்சென்றுள்ள ரத்தினசபாபதி, பின்னாளில் மட்டக்களப்பிலும் கொழும்பிலும் பணிதொடர்ந்தவர். பொதுவாக அரசஊழியர்கள், இராஜதந்திரிகள், நீதிபதிகள் ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு இடம்மாறிச்செல்லும்பொழுது அவர்களின் பிள்ளைகளும் கல்வி விடயத்தில் அசௌகரியங்களை எதிர்நோக்குவது இயல்பு. ரத்தினசபாபதியும் பல வருடங்கள் நடோடியாக அலைந்தமையால் அதிகம் படைப்பிலக்கியம் எழுதவில்லை. அவருடைய இரண்டு மகள்மாரும் தமது ஆரம்பக்கல்வியை மலையகத்தில் சில சிங்களப்பாடசாலையில் கற்கநேர்ந்திருக்கிறது. அந்தச்சூழ்நிலையையும் அவர் வெகுரஸனையுடன் ஜீரணித்துக்கொண்டு ” எல்லாம் அனுபவம்தான். மூவின மக்களுடன் வாழும் பாக்கியம்கூட பேறுதான்” என்றார்.
“வடக்கிலேயே தொடர்ச்சியாக பணியாற்றியிருந்தால், மலையகத்தின் பசுமையும் கிழக்கின் மண்வாசனையும் தெரிந்திருக்குமா ? படிக்கும் பிள்ளை எங்கிருந்தாலும் படிக்கும்” என்றார். இவ்வாறு பல ஊர்களுக்கும் இடம்பெயர்ந்து வாழ்ந்திருந்தாலும் தமது பிள்ளைகளின் கல்வி விடயத்தில் அக்கறையுள்ள தந்தையாகவே விளங்கினார். அவருடைய பிள்ளைகள் பானு, பாரதி, திவாகரன் ஆகியோர் முறையே கிழக்குப்பல்கலைக்கழகம், கட்டுப்பெத்தை பல்கலைக்கழகம், பேராதனைப்பல்கலைக்கழகம் முதலானவற்றில் உயர்கல்வி பெற்று பட்டதாரிகளாகி தந்தையின் கனவை நனவாக்கினார்கள்.
மலையக மக்களின் அவல வாழ்வை சித்திரிக்கும் ” அம்மாசி இலங்கைப்பிரஜையானான்” என்ற சிறுகதையையும் மல்லிகையில் எழுதியிருந்தார்.
தமது தபாலதிபர் பணியிலிருந்து ஓய்வுபெற்றபின்னர் சில வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் தமது மகள் குடும்பத்தினரையும் காண வந்திருந்தார். அவ்வேளையில் ஒரு இலக்கிய சந்திப்பை ஒழுங்குசெய்து இங்கிருக்கும் இலக்கிய நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினேன்.
தாயகம் விட்டு புலம்பெயரவிரும்பாது இருந்த இவரை, பின்னாளில் மக்களும் மருமக்களும் வெளிஉலகத்தை காண அழைத்தனர். தற்பொழுது இவருடைய மகள்மார் பானுவும் பாரதியும் மெல்பனிலும் சிட்னியிலும் குடும்பத்துடன் வசிக்கின்றனர். மகன் திவாகரன் குடும்பத்துடன் இங்கிலாந்தில்.
பானுவை எனக்கு கைக்குழந்தையாக இருக்கும்பொழுதே தெரியும். இன்று அவரும் குழந்தைகளின் தாய். காலம்தான் எம்மை முந்திக்கொண்டு ஓடுகிறது. இங்கிலாந்தில் மகன் இல்லத்திலிருந்து அண்மையில் தொலைபேசி ஊடாக அவர் உரையாடியபொழுது கடந்து
சென்ற அந்த வசந்தகாலங்கள்தான் நினைவுக்கு வந்தன.
மீண்டும் இந்த உறவை ஏற்படுத்தித்தந்தவர் மெல்பேனில் வசிக்கும் அவருடைய மருமகனாகிய பல்கலைகழக விரிவுரையாளரும் ஆராய்ச்சியாளருமான கலாநிதி ஸ்ரீகௌரிசங்கர். இவரும் ஒரு இலக்கிய ஆர்வலர். தீவிர வாசகர். அவரை, ரத்தினசாபதி அவர்களுக்கு தப்பாமல் கிடைத்துள்ள மருமகன் என்று நான் குறிப்பிடுவதற்கும் காரணம் இருக்கிறது. இவரும் தமது மாமனார் போன்று கலகலப்பாக பேச வல்லவர். நினைவாற்றல் மிக்கவர். எதனையும் நயத்துடன் அங்கதத்துடன் சிரிக்காமல் சொல்லும் இயல்பு ரத்தினசபாபதிக்குரியது. ” லண்டனில் தற்பொழுது என்ன காலநிலை ? ” எனக்கேட்டால், ” நீங்கள் ஸ்வெட்டரைக்கழற்றும் வேளையில் தான் ஸ்வெட்டர் அணிவதாகச் ” சொல்வார்.தனது படம் ஒன்றை அனுப்பியிருந்தார். லண்டன் குளிரைத்தாங்கும் உடையில் காட்சியளித்தார். தன்னை ” தமிழ் பேசும் தலாய்லாமா” என்றார்.
அந்நாட்களில் மல்லிகை அலுவலகத்திற்கு இவர் வந்தால் அதிகம் உரையாடுவது, மல்லிகையின் அச்சுக்கோப்பாளர் சந்திரசேகரம் அண்ணருடன்தான். சந்திரசேகரத்தை ஏ.ஜே. கனகரத்தினா மல்லிகையின் Editor in chief என்று வேடிக்கையாக அழைப்பார். ஜீவா இல்லாத வேளைகளில் அங்கு வெடிச்சிரிப்புக்கு குறைவிருக்காது. ஜீவா எப்பொழுதும் சீரியசாகத்தான் இருப்பார். அதற்கு அந்நாளைய பொருளாதார நெருக்கடிகளும் ஒரு காரணம். மாலையானதும் அச்சுக்கோப்பாளருக்குரிய ஊதியத்தை தேடிப்பெறவேண்டும். வீட்டுச்செலவுகளை கவனிக்கவேண்டும். ஆயினும் — மல்லிகையின் பொன்னான வசந்தகாலங்கள்தான் அவை. அடிக்கடி எழுத்தாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், ஈழநாடு பத்திரிகையாளர்கள், கம்யூனிஸ்ட் கட்சித்தோழர்கள் சந்திக்கும் இடமாகக்காட்சி அளித்தது மல்லிகை அமைந்திருந்த அந்த குச்சொழுங்கை. ஜீவாவிடம் ஒரு சைக்கிளும் இருந்தது.
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கவேண்டும் என்ற பெருவிருப்பத்திலிருந்து, அது அமைந்ததும் வாழ்த்தி வரவேற்று அதன் முதல் தலைவர் பேராசிரியர் கைலாசபதியையும் நேரில் சென்று வாழ்த்தியவர் மல்லிகைஜீவா. ஆனால், அவருக்குப்பிரியமான அந்த சைக்கிள் ஒருநாள் அதே பல்கலைக்கழக வளாகத்தில் திருட்டுப்போனது. ” பல்கலையில் இந்தக்கலையும் வளருகிறதாக்கும் ” என்று வேடிக்கையாகச்சொல்லி சமாதானம் சொன்னவர் ரத்தினசபாபதி.
1983 கலவரம் வந்து, நானும் யாழ்ப்பாணத்தில் நின்றேன். ஒருநாள் மாலை மல்லிகை வாயிலில் நின்றவாறு, நானும் நண்பர் காவலூர் ஜெகநாதனும் மற்றும் ஒரு நண்பரும் உரையாடிக்கொண்டிருந்தோம். காவலூர் ஜெகநாதன் தான் தனது குடும்பத்துடன் தமிழகம் செல்லத்தீர்மானித்துவிட்டதாகச் சொன்னார். மற்ற நண்பர் தான் அய்ரோப்பிய நாடொன்றுக்குச் செல்லவிருப்பதாகச்சொன்னர். அங்கு சென்று எந்தத்தொழிலும் செய்வேன் என்றார். ( இவ்விடத்தில் ஒரு குறிப்பு : உள்நாட்டு நெருக்கடிகளினால் தாயகம் விட்டுத்தப்பிச்செல்ல முனைபவர்கள், எங்கு செல்வது என்ன செய்வது என்பதும் தெரியாமல், புகலிடம்பெறும் நாட்டில் வாழ்வாதாரத்திற்காக எந்த வேலையாவது செய்து பிழைத்துக்கொள்ளவேண்டும் என்ற மனோபாவத்தை வளர்த்துக்கொண்ட அக்கால கட்டத்தில் எம்மவர்கள் நாட்டைவிட்டு வெளியே செல்வதை ஜீவா விரும்பவில்லை. பின்னாளில் நான் அவுஸ்திரேலியா சென்றதையும் அவரால் ஏற்கமுடியவில்லை. அதனை எனது ஒரு நூலின் அணிந்துரையிலும் பதிவுசெய்திருந்தார்.
வீட்டைவிட்டு புறப்படும்பொழுது எனது அம்மா அழுதார்கள். “பேப்பரும் பேனையும் மாத்திரமே பிடிக்கத்தெரிந்த உனக்கு அவுஸ்திரேலியாவில் என்ன வேலை கிடைக்கும்?” என்றார்கள்.
” அம்மா, அங்கு அப்பிள் மரத்தில் பழம் பொறுக்கியாவது உழைத்து குடும்பத்தை காப்பாற்றுவேன் ” என்றேன்.
இதுதான் எமது அன்றைய நிலை.)
அதனைக்கேட்ட ஜீவா சற்று எரிச்சலுடன், ” போறவங்கள் எல்லாம் போங்கோடா நானும் அய்யரும் சந்திரசேகரமும் இங்குதான் இருப்போம் ” என்றார்.
சற்றும் தாமதிக்காத ரத்தினசபாதி, ” எங்களுக்கு வேறு தொழிலும் தெரியும். நாம் இங்கு பிழைத்துக்கொள்வோம். நீங்கள் போங்கோடா” என்று ஒத்து ஊதினார்.
அந்த இடம் சில கணங்கள் சிரிப்பால் அதிர்ந்தது.
வாழ்க்கையின் துயரங்களில் அங்கதம், நகைச்சுவை என்பனதான் ஒத்தடம் தரும் மருந்துகள். இலக்கிய நண்பர் ரத்தினசபாபதி அவர்கள் எனது இலக்கியவாழ்வின் திசையை தமது ஊக்கமூட்டும் வார்த்தைகளினால் நேர்ப்படுத்தியவர். அன்று 1972 இல் அவர் எனது நேரடி அறிமுகம் இல்லாமலே என்னை வாழ்த்தியவர். அந்த வாழ்த்துடனேயே இன்றும் இலக்கிய உலகில் எனது இருப்பை வெளிப்படுத்தியிருக்கின்றேன். அந்தவகையில் மல்லிகைஜீவாவையும் ரத்தினசபாபதியையும் எனது படைப்புகளை மல்லிகைக்காக அச்சுக்கோர்த்த சந்திரசேகரம் அண்ணரையும் நான் மறக்கமுடியாது.
letchumananm@gmail.com