திருவிற்கோலம் திரியபுராந்தக ஈசன்

திருவிற்கோலம் திரியபுராந்தக ஈசன்மனிதரை மனிதர் விலக்கி வைக்கும் தீண்டாமை இழிவு தமிழ் வேந்தர் ஆட்சியில் 14 ஆம் நூற்றாண்டு வரை தமிழக கோவில்களில், தமிழகத்தில் வழக்கில் இல்லை என்று காட்ட ஒரு கல்வெட்டைத் தன்னகத்தே வைத்து வா என்று விளக்குகின்றது கூவமான திருவிற்கோலம்.

திருவிற்கோலம் தேவாரப் பாடல் பெற்ற காலத்தில் திருவிற்கோலம் என்ற பெயரில் தான் இருந்தது. பின்னாளில் அங்கே கூவம் ஏரி கட்டப்பட்டதும் திருவிற்கோலம் என்ற பெயர் அருகிய வழக்காகி கூவம் என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது. திருவிற்கோலம் பேரம்பாக்கம் பூந்தன்மல்லி வழியில் பேரம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து திருஇலம்பையன்கோட்டூர், சிவபுரம், நரசிங்கபுரம் ஆகிய கூவ ஆற்று சைவ, வைணவ தளங்கள்  3 – 4 கி.மீ. இடைவெளியில் உள்ளன. இக்கோவில் நல்ல முறையில் பேணப்படுகின்றது. இக்கோவிலில் சற்றொப்ப முப்பது கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு SII XXVI / தென்னிந்திய கல்வெட்டுகள் 26 இல் அச்சாகி வெளிவந்துள்ளன.

கல்வெட்டு எண் 364 கிழக்கு சுவர்

1.   ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ ரா
2.   ஜாதிராஜ தேவற்க்கு யாண்டு ஏழாவது(1169-1170)
3.   ஜயங்கொண்ட சோழமண்டலத்து மணவி
4.   ற் கோட்டத்து கூவமான தியாகசமுத்திர நல்லூ
5.   ர் ஆளுடையார் திருவிற்கோலமுடையாற்கு இவ்வூர்
6.   தும்பூரன் திருவரங்கமுடையார் அகமுடையான்
7.   சங்கம்பை வைத்த திருநுந்தா விளக்கு க ஒன்றுக்கும் இக்கோ
8.   யிலில் சிவப்ராமணவாரணர் கௌஸிகன் செந்நெற்பெற்றானும், கௌத
9.   மன் உடையபிள்ளையும், கௌதமன் திருவலமுடையா
10. (னும்), காஸ்யபன் தேவப்பிள்ளையும், – – –  -கணபதி ப
11. ட்டனும் இவ்வாண்டு அப்பசி மாஸத்து இவ்வனையோமும் கை
12. க்கொண்ட அன்றாடு நற்பழங்காசு 15. இக்காசு பதினைந்து
13. ம் (பொலியூட்டாக) கைக்கொண்டு இத்திருநந்தா விளக்கு ஒன்
14. றும் சந்திராதித்தவரை செலுத்தக் கடவோமானோம் இவ்
15. வனைவோம். இப்படிக்கு கௌஸிகன் செந்நெல்
16. (ந)ற் பெற்றாந் எழுத்து இப்படிக்கு இவை கௌதமன்

விளக்கம் கல்வெட்டு சோழ வேந்தன் ராஜாதிராஜனின் 7 ஆம் ஆட்சி ஆண்டில் (1169-1170) இல்  வெட்டப்பட்டுள்ளது. மணவில் இன்று மணவூர் ஆகிவிட்டது. இக்கோவில் ஈசனுக்கு இவ்வூருடைய தும்பூரன் திருவரங்கமுடையான் அகமுடையான் சங்கம்பை என்பான் நுந்தா விளக்கு எரிக்க அன்றாடம் புழங்கும் 15 பழங்காசுகளை வட்டிக்கு விட தந்து அதன் மூலம் வரும் வட்டிப் பணத்தில் நந்தா விளக்கு எரிக்க கௌஸிகன் செந்நெற்பெற்றான், கௌதமன் உடையபிள்ளை, கௌதமன் திருவலமுடையான், காஸ்யபன் தேவப்பிள்ளை, – – –  -கணபதி பட்டன் ஆகியோரிடம் கொடுத்துள்ளான். இவர்களும் அவ்வாறே செய்வதாக உறுதிமொழி செய்கின்றனர். வைணவரில் பெரிய வாச்சம் பிள்ளை போல அன்று சில சிவ பிராமணரும் பிள்ளைப் பட்டம் கொண்டிருந்தனர் என்று தெரிகின்றது. கல்வெட்டு முழுமையாக முற்றுப் பெறவில்லை.

கல்வெட்டு எண் 354 தெற்கு சுவர்

1.   திருபுவனச் சக்கரவத்திகள் சிறி வீரகண்ட கோபால தேவற்கு
2.   யாண்டு 5 வது (1296 AD) கூவமான தியாகசமுத்திர நல்லூர் உடையார் திருவிற்கோலமுடை
3.   ய நாயநார்க்கு பண்டரங் கிழான் திருவரங்கமுடையார் பாரி உமையாழ்வானேன் சந்தி
4.   ராதி(த்)தவரை எரிக்கக் கடவதாந சந்தி விளக்கு ஒன்றும் எரிப்பதாக கை(க்)கொண்டோம் செநல இவை சோமனாத தே _ _ _ _ _ _
5.   வைத்தாந் பள்ளநும் பொந்நன் பட்டன் உலகாள உடையானும் சோமநாத தேவநும் இமூவர் இவை உலக உடையான் எ – – – – –
6.   ரோம் இப்படிக்கு ச(ம்)மதித்து கை(க்)கொண்ட இமூவரோம் இவை பள்ளன் எழுத்து.

விளக்கம் வீரகண்ட கோபாலனுக்கு 5 ஆவது ஆட்சி (1296 AD) ஆண்டில் திருவிற்கோல இறைவனுக்கு பண்டரம் கிழான் திருவரங்கமுடையான் பாரி உமையாழ்வான் ஒரு சந்தி விளக்கு எரிக்க ஒப்புகிறான்.  பள்ளன் என்ற பெயர் ஈண்டு உற்று நோக்கத்தக்கது. கல்வெட்டின் முக்கியமான இடத்தில் வெற்றிடம் விடப்பட்டுள்ளது.

கல்வெட்டு எண் 362  வடக்கு சுவர்

 

1.   _ _ _ _ யாண்டு இருபத்து எட்டாவது ஜயங்கொண்ட சோழ மண்டலத்து கூவமான தியாகசமுத்திர நல்லூர் ஆளுடையான் திருவிற்கோலமுடைய நாயனார்க்கு இம்மண்டலத்து மணவிற் கோட்டத்து சிவபுரத்து
2.   _ _ _ _ _ பரையன் பக்கல் இக்கோயில் சிவபிராமணரில் கௌதமன் அரசபட்டனும் கௌதமன் தாழிபட்டனும் கௌதமன் திருவல்லமுடையான் உலகாளுடையான் பட்டனும் காசிவன் பொற்கோவில் நம்பி சோமனாத தேவபட்டனும் இவ்
3.   _ _ _ _ _ _  கைக்கொண்ட பணம் பத்து. இப்பணம் பத்துக்கும் ஒரு சந்தி விளக்கு சிந்திராதித்தவரை எரிப்பதாக பொலியூட்டாகக் கைக்கொண்டோம் இவ்வனைவோம் இவை சென்னெல் பெற்றான் அரசபட்டஸ்ய, இவை பொன்னம்பலக் கூத்தன் தாழி பட்டஸ்ய, இவை உலகாளுடைய பட்டஸ்ய இவை சோமநாத தேவபட்டஸ்ய

விளக்கம் வேந்தன் பெயர் கட்டட மறைப்பால் விடுபட்டுள்ளது. சிவபுரத்தை சேர்ந்த (கட்டடத்தில் பெயர் மறைந்துள்ள) பரையன் சந்தி விளக்கு எரிக்க 10 காசுகளை வட்டிக்கு விட பொலியூட்டாக கொடுத்துள்ளான். 10 காசில் வரும் வட்டியில் சந்தி விளக்கு எரிப்பதாக சிவபிராமணர் மூவர் ஒப்புக் கொண்டனர். சந்தி விளக்கு எரிக்கும் முதல் சிலநாளில் இப்பரையர் தாம் மட்டும் அல்லாது தம் உற்றார் உறவினர் சொந்த பந்தம் ஆகியோருடன் கோவிலுக்கு வந்து மற்றவரைப் போல  இறைவனை தொழுதிருக்க வேண்டும்.  அப்படியானால் பரையர்கள் தமிழ் வேந்தர் ஆட்சியில் தீண்டாமைக்கு உட்பட்டிருக்க வில்லை என்று தெரிகின்றது. அப்படியானால் இந்த வழக்கம் பிற்பட்டு ஏற்பட்ட அயலவர் ஆட்சியில், விசயநகர ஆட்சி அல்லது நாயக்கர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும் என்று புலனாகின்றது. இக்கல்வெட்டு சமூக நோக்கில் பரையர் அக்காலத்தே நல்ல முறையில் நடத்தப்பட்டதை தெரிவிக்கின்றது.  ஒரு மிக முக்கியமான கல்வெட்டு.

பார்வை நூல் தென்னிந்திய கல்வெட்டுகள் மடலம் 26

கோவில் தொடர்பான தொடுப்பு https://www.dharisanam.com/temples/sri-thiripuranthakeswarar-temple-at-thiruvirkolam-koovam

sseshadri27@gmail.com