தீ தின்ற தமிழர் தேட்டம்: நூல் அறிமுகக் குறிப்பு

- என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன் -ஒரு தேசத்தின் வரலாறு எப்போதும் வென்றவர்களாலேயே எழுதப்படுகின்றது. இன்று நாம் வாசிக்கும் ஆரம்பகால உலக வரலாற்று நூல்களைக் கூர்ந்து நோக்கினால் அவை ஆக்கிரமிப்பாளர்களாலும்ää காலனித்துவ ஆட்சியாளர்களாலும்,  அவர்களின் சிந்தனைப் பள்ளிகளில் மூளைச்சலவை செய்யப்பட்ட சுதேசிகளாலும் எழுதப்பட்டனவாகவே பெருமளவில் இருப்பதை அவதானிக்கலாம். ஆளும்வர்க்கத்தின்  பார்வையில் அமைந்த இத்தகைய வரலாற்று நூல்கள்  எதிர்காலம் எதைத் தெரிந்துகொள்ளவெண்டுமென அவர்கள் தீர்மானித்தார்களோ அவற்றையே உள்ளடக்கமாகக் கொண்டிருப்பது வழமை. தம்மால் தோற்கடிக்கப்பட்டவர்களின் நியாயங்கள்ää தியாகங்கள் எல்லாம் அவற்றில் மழுங்கடிக்கப்பட்டிருக்கும். வென்றவர்கள் இருந்தால் தோற்றுப் போனவர்களும் இருக்கவே செய்வர். இது இயற்கையின் விதி. அப்படியாயின், வரலாற்றில் அடக்கப்பட்டவர்களின் பக்க நியாயங்களை எடுத்துக் கூறும் வரலாறுகள் எங்கே புதையுண்டு போயின என்று தேடும்போது எமக்கு அவர்களால் அவ்வப்போது எழுதிவைக்கப்பட்ட ஆக்க இலக்கியங்களே பார்வைக்கு எஞ்சியிருக்கின்றன. அது நாட்டாரிலக்கியமாகலாம், கவிதையாகலாம், நாவலாகலாம்ää சிறுகதையாகலாம், ஏன் கடிதங்களாகவும்கூட இருக்கலாம். அந்த இலக்கிய வரிகளுக்குள் கூர்ந்து பார்த்தால் சொல்லப்படாத செய்திகளாக வரலாற்றுத் தகவல்கள் பல உருமறைப்புச் செய்யப்பட்டு ஒரு வரலாற்று மாணவனின் வருகைக்காகக் காத்திருப்பதைக் கண்டுகொள்ளலாம்.

பண்டைய இலக்கியங்களில்கூட பெருமளவில் ஆளும்வர்க்கத்தின் பெருமைபேசும் இலக்கியங்களே பாதுகாப்பாகச் சந்ததிவழியாகப் பெருமையுடன் கடத்தப்பட்டு வந்திருக்கின்றன. ஆளும்வர்க்கத்தால் பாதிக்கப்பட்ட குடிமக்களின் இலக்கியங்கள் அண்மைக்காலம் வரை வாய்மொழி இலக்கியங்களாகவே காலம்காலமாக கர்ணபரம்பரையாகக் கடத்தப்பெற்று நின்று நிலைத்துவந்துள்ளன.

இராஜராஜ சோழனின் ஆட்சியை பொற்காலமாக வர்ணித்து அவனால் கட்டப்பட்ட தஞ்சைப் பெரியகோவிலைப் பெருமையுடன் அண்ணாந்து பார்க்கும் வரலாற்றுக் குறிப்புகள் ஏராளம் உள்ளன. போரில் தோற்றவர்களிடமிருந்தும் வரிகட்டமுடியாதுபோன அப்பாவிக் குடியானவர்களிடமிருந்தும் தகுதியான பெண்களைத் தெரிவுசெய்து, உடலில் சூடும் போட்டு, கல்வெட்டுகளில் அவர்களின் பெயரையும் பதிவுசெய்து சுமார் 400பேரை பெரியகோவிலில் தேவதாசிகளாக்கிய இராஜராஜன், மீதமிருந்த பெண்களை பெரியகோவிலின் கொட்டாரத்தில் நெல்குற்ற அனுப்பினான் என்ற அவல வரலாறு பெரிதுபடுத்தப்படவில்லை. இவை கல்வெட்டுகளின் வழியாகவும் பிற இலக்கியங்களின் வழியாகவுமே பின்னைய காலத்தில் வரலாற்றாசிரியர்களின் தேடலில் அகப்பட்டு சோழசாம்ராச்சியம் பற்றிய அவர்களது வரலாற்றுப் பார்வையை விரிவாக்கியது. இந்தப் பின்புலத்திலேயே நாம் யாழ்ப்பாண நூலகத்தின் வரலாற்றையும் பார்க்கவேண்டும் என்று கருதுகின்றேன்.

1981 மே 31இன் நள்ளிரவுக்குப் பின்னர் ஆளும் வர்க்கத்தினால் தீக்கிரையாக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகம் பற்றிய துயர்மிகுந்த வலிகளை இன்றைய மீள்கட்டமைப்பினால் “சரிக்கட்டி” விடலாம் என்ற உணர்வு ஆளும்வர்க்கத்தினரை “புத்தகமும் செங்கல்லும்”, “வெண்தாமரை இயக்கம்” போன்ற திட்டங்களை அமுலாக்கத் தூண்டியிருக்கலாம். அதன் வெளிப்பாடாகவே இன்று யாழ்ப்பாண நூலகம் தென்னிலங்கை மக்களுக்கு நல்லதொரு காட்சிப்பொருளாக கைமாறியுள்ளது. முன்னர் போரின் சாட்சியமாக நின்ற அதே நூலகம் கால மாற்றத்தால் நல்லிணக்கத்தின் தூதுவனாகக் காட்சியளிக்கின்றது.

காலக்கிரமத்தில் புதிய சந்ததிகள் யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் புது வளர்ச்சியின் வேகத்தில், அதன் கம்பீரமான தோற்றத்தில் தமது முன்னோரின் வேதனைகளைக் கண்டுகொள்ளாத நிலை எழக்கூடும். போர்க்கால யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சன்னங்களினால் துளையிடப்பட்ட யாழ்ப்பாண நூலகக் கட்டிடத்தின் துவாரங்கள் பூசிமெழுகிப் புதுமெருகூட்டப்பட்டு அவற்றின்பழைய சுவடே தெரியாது மறைக்கப்படலாம். அன்று நூலகத்தைக் கட்டியெழுப்ப களியாட்டவிழாக்கள்ää கொடித் தினங்களின் மூலம் ஊரெங்கும் திரிந்து ஊனுறக்கமின்றி நிதிதிரட்டிய எம்மவர்களின் உண்டியல்களின் சில்லறைக் குலுக்கல் ஒலி, இன்று பன்னாட்டு நிறுவனங்கள் யாழ்ப்பாண நூலகத்துக்கு அள்ளிக்கொடுக்கும் பெருநிதியின் கனதியில் ஒருவேளை அடிபட்டுப் போய்விடலாம். ஆனால் இந்த நூலகத்தை உயிரினும் மேலாக நேசித்த எம்மக்களின் அக உணர்வுகள் என்றுமே மழுங்கடிக்கப்பட்டுவிடக்கூடாது.
அந்த வகையில் இந்தக் கவிதைத் தொகுப்பு தமது மனதுக்கு நெருக்கமானதொரு அறிவாலயத்தை அநியாயமாகப் பறிகொடுத்த ஒரு இனத்தின் வலிமிகுந்த வரிகளைக் கொண்டுள்ளது. பல்துறை சார்ந்தவர்களாலும்,  பல்வேறு இலக்கியத்தரம் கொண்டவர்களாலும் அவ்வப்போது எழுதப்பட்டவை.
இத்தொகுப்பில் ஈழத்தின் முதுபெரும் கவிஞர்களான முருகையன்,  எம்.ஏ.நுஹ்மான்,  சோ.பத்மநாதன்,  பண்டிதர் விரகத்தி,  சு.வில்வரத்தினம் போன்றோரின் கவிதைகளும் உள்ளன. சாம்பல் குவியலின் நடுவே நின்று தீ தின்ற நூல்களின் பக்கங்களின் கருகிய நெடியைச் சுவாசித்தபடி எழுதப்பட்ட ஒரு அமெரிக்கப் பயணியின் கவிதையும் இதில் அடங்கியுள்ளது. தாயக மண்ணில் வாழ்ந்துவரும் மாணவச் சமூகத்தை நோக்கி யாழ்ப்பாண நூலகம் பற்றிய கவிதை எழுதுங்கள் என்றதும் தாம் நேரில் காணாத போதிலும் கேள்வி ஞானத்தில் அதனைக் கவிதையாக எழுதிய சாதாரண பள்ளி மாணவரின் கவிதைகளும் உண்டு. புலம்பெயர்ந்து வாழ்ந்தபோதும் மனதில் மாறாத வலிகளைச்சுமந்து நிற்கும் புகலிடக் கவிஞர்கள் யுகசாரதி- கருணானந்தராஜா,  இளைய அப்துல்லாஹ்,  வேதா இலங்காதிலகம்,  நகுலா சிவநாதன் போன்றோரின் கவிதைகளும் இதில் அடங்குகின்றன.

மொத்தத்தில் பல்வேறு காலகட்டங்களிலும் பல்வேறு ஊடகங்களிலும் வெளியாகிய கவிதைகளை தரம்பிரித்துத் தேர்வுசெய்யாமல்,  அவரவரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிந்தவரை நிறைவை நோக்கிய ஒரு தொகுப்பாகத் தேடித் தொகுத்து ஒரே நூலில் பதிவுசெய்து வழங்கியிருக்கிறேன். வழமைபோலவே இதனையும் ஒரு முழுமையான தொகுப்பாக என்னால் கூறமுடியாது. முழுமையை நாடியதொரு பணியே இது. இத்தொகுப்பில் இடம்பெறத்தவறிய கவிதைகளைக் கண்டறியும் எவரும் அதனை எனக்கு அனுப்பிவைத்தால் பின்னைய பதிப்புகளில் அவற்றையும் இடம்பெறச்செய்து இத்தொகுப்பினை முழுமையானதாக்க முயற்சிக்கலாம்.

இக்கவிதைகளில் நாம் தேடப்போவது சந்தம்மிகு கவிதைவரிகள் அல்ல. மரபுக்கவிதையின் இலக்கணங்களல்ல. நசுக்கப்பட்ட ஒரு இனத்தின் உணர்வுக் குவியல் மட்டுமே. ஈழத்தமிழரின் பண்பாட்டுக் கருவூலமாக,  அவர்களது கல்வியின் குறியீடாகத் திகழ்ந்து இனவாதத் தீயினால் பொசுக்கப்பட்ட அந்த அறிவாலயத்தை இழந்த வலியின் பதிவுகளாக இவை பத்திரப்படுத்தப்படுகின்றன. காலத்தால் அழியாத அவர்களது உணர்வுகளை இக்கவிதைகள் வரிகள்தோறும் தேக்கிவைத்திருக்கின்றன. இவையே யாழ்ப்பாண நூலகம் பற்றிய அந்த மண்ணின் மக்களின் இதயபூர்வமான மனப்பதிவு. எதிர்காலத்தில் யாழ்ப்பாணப் பொது நூலக வரலாற்றைப் படிக்கப்போகும் புதிய சந்ததியினருக்கு இப்பதிவை சமர்ப்பிக்கின்றேன்.

இந்நூலின்  விலை: ரூபா 350.00
பிரதிகள் கிடைக்குமிடங்கள்:
யாழ்ப்பாணப் பொதுசன நூலகம்
கொழும்பு: குமரன் புத்தக இல்லம்
வெளிநாடுகள்: noolthettam.ns@gmail.com

noolthettam.ns@gmail.com