துணிவும் தீரமும் கொண்ட பெண் எழுத்தாளர் அம்பை!

துணிவும்  தீரமும் கொண்ட பெண் எழுத்தாளர் அம்பை!மிழ் எழுத்தாளர்களுள் நீண்டகால வரலாற்றில் ஆண்களே முதன்மை வகித்து வந்துள்ளனர்.  ஆனால் சில பெண் எழுத்தாளர்களும் தங்கள் எழுத்தாற்றலால் தமது நிலையை இலக்கிய உலகில் தக்க வைத்துள்ளனர். பெண்களை இரண்டாம் படியில் வைத்துப் பார்ப்பவர்கள் இந்திய மரபுவாதிகள். இந்தியப் பாரம்பரியத்தின் விளைவாக பெண்கள் இயல்பு வாழ்க்கையில் காலடியெடுத்துவைத்தால் தானுண்டு தன் குடும்பம் உண்டு என வாழப் பழகிக் கொள்வார்கள். கணவன். பிள்ளைகள்,  பெற்றோர் என அவர்களின் நலன் சார்ந்து வாழவேண்டியவர்களால் ஆக்கப்பட்ட சமுதாய கட்டுக்கோப்பை மீறமுடியாதவர்களாக குடும்பத்தோடு இணைந்து விடுவார்கள். இந்தியரில் விரல் விட்டு எண்ணக்கூடிய பெண் தமிழ் எழுத்தாளர்களே இருந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையின் மத்தியில் சடங்கு, சம்பிரதாயம் என அவற்றிற்குக்கட்டுப்பட்டு வாழ்ந்தவர்களின் மத்தியில் ஒரு சிலர் அந்த நிலைமைகளை மீறிக்கொண்டு வெளியே வந்துள்ளனர்.

லஷ்மி என்னும் இயற்பெயர் கொண்டவர் அம்பை. அவர் தென்னகத்துத் திராவிடர் பெண் தெய்வமாம் அம்பையின் பெயரைச் சூடிக்கொண்டு எழுத்துலகில் பிரவேசித்தவர். அவரைப்பற்றி பிரபல  எழுத்தாளரும் விமர்சகருமான வெங்கட சாமிநாதன் அவர்கள் குறிப்பிடும்போது “வேடிக்கையான முரண்தான், லஷ்மி என்ற பெயர் கொண்ட, ஒரு தீவிர பெண்ணியவாதி பழமையின் நினைவலைகளை எழுப்பும் வகையில் அம்பை என தனக்குப் புனைபெயர் சூட்டிக்கொண்டது. ஆனால் அந்தப் பெயர் பெங்களூரில் தன் பாட்டியின் கவனிப்பில் வளர்ந்து வந்த ஒரு பள்ளிச் சிறுமி தானும் தமிழில் கதை எழுதுகிறேன் என்று மற்ற பெண் எழுத்தாளர்களைப் போல ஒப்புக்கொள்ளப்பட்ட வரம்புக்குள் ‘நல்ல’ கதைகள் எழுதத் தொடங்கியபோது சூட்டிக் கொண்ட பெயர்.  எழுதும் திறமையும் ஆசையும் தான் அம்பையுடையது. அவர் கதைகள் நமக்குப் காட்டிய உலகமோ அம்பையின் பாட்டியும் அம்மாவும் கொண்டிருந்த பாரம்பரிய நம்பிக்கைகளும் அம்பைக்கு அவர்கள் சொல்லிக் கொடுத்ததும் தான். அந்த உலகம் தான் அம்பைக்கு அந்த வயதில் படிக்கக் கிடைத்த எழுத்துக்களும்.” என்று குறிப்பிடுகின்றார்.

இந்திய சமுதாயத்தில் பெண்களுக்கான இரண்டாந்தர நிலை பற்றி அம்பை சிந்தித்து தனது எழுத்துக்களில் அவற்றிற்கான விடைகளைத் தேடியுள்ளார். பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை மிகத் துணிந்து தனது கதைகளில், எழுத்துக்களில் வடித்து வெற்றி கண்டவர். பள்ளி மாணவியாக இருக்கும்போதே எழுத ஆரம்பித்த அம்பை தனது புரட்சிகர எழுத்துக்களைப் பிரசுரிக்க பல பத்திரிகைகளை நாடிய போதிலும் அவை அவருக்குக் கைகொடுக்க முன்வரவில்லை அவரது எழுத்துக்கள் இந்திய சமுதாய மரபுமுறைகளுக்கு மாறானவையாக அவற்றைக் கண்டிப்பனவாக அமைந்தமையே அதற்குக்காரணமாக அமைகின்றது.  பெண் என்றால் அவள் கணவனை இழந்தாலோ அன்றி அவனால் கைவிடப்பட்டாலே வீட்டு மூலையில் ஒதுங்கி இருக்கவேண்டியவள் என்ற அடிப்படை வேதாந்தத்தை உடைத்தெறியும் பாங்கில் எழுதத் தொடங்கியமையே பிரபல பத்திரிகைகள் அவரது படைப்புக்களை பிரசுரிக்க மறுத்ததற்கான காரணங்கள் ஆகும்.

பெண் எழுத்தாளர்களின் வரவு அதிகரிக்கத்தொடங்கிய காலகட்டத்தில் தான் அம்பையும் வந்திருந்தார் எனினும் மற்றைய எழுத்தாளர்களிலிருந்து தன்மை வேறுபடுத்திக் காட்டும் வகையில் அமைந்தது அவரது கதைகள். ‘அந்தி மாலை’ (நாவல்) ‘சிறகுகள் முறியும்’ (1976) – (முதலாவது தொகுதி – ஓர் பெண்ணின் வாழ்வில் ஏற்படும் பலவிதமான சம்பவங்களை சம்பிரதாயங்களை பேசும் கதைகள்), ‘வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை’ (1988) ‘காட்டில் ஒரு மான்’ (2000) ‘சக்கர நாற்காலி’, ‘ஸஞ்சாரி’, ‘தண்ணியடிக்க’, ‘வற்றும் ஏரியின் மீன்கள்;’ (2007), ‘பயணப்படாத பாதைகள்சொல்லாத கதைகள்’ (சுதந்திரப் போராட்டத்தில் பங்குபற்றிய பெண்கள், தலித்எழுத்தாளர்கள் ஆகியவர்களின் வாய்மொழி வரலாற்றுப்பதிவு) என்பன அம்பையின் வெளிவந்த தமிழ் நாவல்கள்.

அம்பையின் எழுத்துலகிற்கு ஊக்கம் தந்து அவரை எழுத்துலகில் துலங்கவைத்த அல்லது ஒளிவிட வைத்த நாவல் “அந்தி மாலை”.  அந்த நாவல்  கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசுப்போட்டியில் சாதனைபடைத்த நாவலாகப் பரிசினைத் தட்டிக்கொண்டமையால், அம்பையின் பெயர் வாசகர் மத்தியில் மட்டுமன்றி எழுத்தாளர்கள் மத்தியிலும் பேசப்படும் பொருளாக மாறி, அவரை தொடர்ந்து கதை எழுத ஊக்கம தந்த சம்பவமாக அமைந்தது. கலைமகள் பத்திரிகையின் பரிசினை ஒரு பெண் எழுத்தாளர் அதுவும் பாரம்பரிய வரட்டு வேதாந்தங்கள், சமுதாயக் கொடுவினைகளுக்கு எதிராக எழுதப்பட்ட ஒரு நாவலுக்கு வழங்கப்பட்டமை ஒரு பேசு பொருளாக ஆனது. அவரது நாவலுக்கு வழங்கபட்ட பரிசு அவரை மிகவும் பிரபலமான எழுத்தாளராக மாற்றிவிட்டது.

சிறகுகள் முறியும்” என்ற நீண்ட நாவலை எழுதிவைத்துவிட்டு அதனைப் பிரசுரக்க முடியாது அம்பை கிடப்பில் போட்டுவிட்டார். ஒரு குடும்பம் பற்றிய அந்த நவீனம் கணவன் மனைவிக்கிடையே எழும் விடயங்கள் பற்றியதாக அமைந்த போதிலும், அதில் வேலையில்லாத கணவன், பெண்ணின் அபிலாசைகளைத் தீர்க்கமுடியாத நிலையில் அவளைச் சிந்திக்கத்தூண்டுகின்றது. தாம்பத்திய உறவுதான் வாழ்க்கையா என்று  எண்ணும் பெண்ணின் கதையாக அது அமைந்துவிட்டமையால் அதனைப் பிரசுரிக்க பததிரிகைகள் முன்வரவில்லை என்பது அம்பையின்  ஆதங்கம்.

எழுத்தாளர் மல்சௌமி ஜேக்கப் அவர்களால் தொடுக்கப்படட கேள்விக்கு விடையளிக்கும் போது பின்வருமாறு பதிலளிக்கின்றார் அம்மை.: “நான் ஒரு சடப்பொருளாலான பெண் என நினைக்கவில்லை, நீங்கள் பார்க்கும் பெரும்பான்மையான பெண்கள் கிரான் பேடி. அல்லது இந்திரா நூயி போன்றவர்களைப் போலானவர்கள். ஆனால் நான் எனது வாழ்வில் என்னென்ன வேண்டுமோ அதையெல்லாம் செய்துள்ளேன் என்று என்னால் சொல்ல முடியும். நான் அவற்றை பெரும் சிரமங்களுக்கு மத்தியிலேயே செய்தேன், ஆனால் நான் அவற்றை மிக்க மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் செய்துள்ளேன். எனது முயற்சிகளில் கிடைத்த தோல்விகள் எனக்குப் படிப்பினையாக அமைந்தன.  ஆய்வுள் எழுத்துகள் என்னால் மேற்கொள்ளப்பட்வை, அவற்றை என்னால் தனித்தனியாகப் பிரிக்கமுடியாது, ஏனெனில் நான் மேற்கொண்ட பெண்கள் பற்றிய ஆய்வுகள் மற்றும் எழுத்துகள் எனது  மனித வாழ்க்கை பற்றிய  எண்ணங்களேயாகும். பெண்கள் சார்ந்துள்ள தந்தையர், கணவன்மார், சகோதரர்கள், பற்றிய மிகச் சுவையான சம்பவங்கள் என்னிடம் உள்ளன. இவை தாம் நான் மிகவும் முக்கிய அழுத்தம் கொடுக்கும் விடயங்கள் ஆகும். அவர்களின் வாழ்கைக்கதைகள், குறிப்பிடத்தக்க  வகையான விழுமிய முறைமை பெண்களை அடக்கிவைத்திருக்கின்றது. ஆண்கள் பெண்களை அடக்கிவைத்திருப்பதல்ல.” எனத் தான் சந்தித்த கதாபாத்திரங்கள், சமுதாய நிலைமைகள்  பற்றிய கருத்தினை அவர் கொண்டுள்ளமை புலனாகின்றது.

வெங்கட் சாமிதான் அவர்கள் அம்பையைப் பற்றிக்குறிப்பிடும்போது “இந்தப் பிராபல்ய ஆலாபங்கள் எதுவும் அம்பையைக் கவர்வதாக இருக்கவில்லை. அம்பைக்கு தனக்கென சொல்வதற்கு இருப்பதைச் சொல்ல எழுத நினைப்பவர். ஒரு சிறு பெண் தனக்கு சமூகத்தினால் கொடுக்கப்பட்ட இடம் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியவர். அம்பை சிறகுகள் முறியும் என்று ஒரு நீண்ட கதை எழுதினார். ஒரு கணவன் மனைவிக்கு இடையே எழுந்த உறவுச் சிக்கல் பற்றி. தன் மனைவியையும் குழந்தையையும் கவனிக்க கணவனுக்கு நேரமும் இல்லை. சம்பாத்தியமும் இல்லை. கணவனின் அன்புக்கும் கவனிப்புக்கும் ஏங்கும் மனைவிக்கு அது கிடைக்காது போகவே இந்த தாம்பத்ய உறவுக்குத்தான் என்ன பொருள் என்ற கேள்வி அவள் மனத்தில் எழுகிறது. ஆனால் அதற்காக அவள் உறவை முறித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறவில்லை. தனக்கு விதிக்கப்பட்டது இது தான் என்று அவள் சமாதானம் செய்து கொள்கிறாள். இந்தக் கதையை வைத்துக் கொண்டு அம்பை அணுகிய எந்தப் பத்திரிகையும் அதைப் பிரசுரிக்க மறுத்து விட்டது. பின் பல வருடங்கள் பிரசுரமாகாது கிடந்த அந்தக் கதை கணையாழி என்னும் ஒரு இடைநிலை பத்திரிகையில் பிரசுரமானது. அந்தக் கதையில் வரும் சாயா மாத்திரம் புனிதமான தாம்பத்திய உறவு அர்த்தமற்றுப் போய்ற்றே என்று தனக்குள்ளே கூட நினைத்த பாவத்திற்காக தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ அல்லது வேறு எவ்விதத்திலாவது அவள் உயிர் துறந்திருந்தாலோ அக்கதையை நிராகரித்த எந்தப் பத்திரிகையும் தடை சொல்லாது பிரசுரித்திருக்கும் என்று கேலிப் புன்னகையோடு அம்பை சொல்கிறார்” எனக் குறிப்பிடுவதில் இருந்து அம்பை தனக்கெனத் தனி வழி வகுத்துக் கொண்டு தனது எழுத்துக்களைத் தொடுத்தவர் என்பது வெளிப்படை.

சமூகநோக்கும், பொதுவுடமைக் கொள்கையின்பால் தன்னை இணைத்துக்கொண்டவர், கீழ்மட்டத்தில் உள்ளவர்களையும் குறிப்பாக அடக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட பெண்களைப்பற்றிய கதைகளை அவர் முன்வைத்து பல எதிர்ப்புக்களின் மத்தியிலும் வெற்றிநடை போட்டவர், போட்டு வருபவர் அம்பை என்பது பலருக்கும் தெரிந்த விடயமே.

avan.siva55@gmail.com