துயரச்சித்திரம்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

அத்தானே அத்தானே!

எந்தன் ஆசை அத்தானே!

கேள்வி ஒன்று கேட்கலாமா…. உனைத்தானே!.. – வான்

ஓலியில் கமழ்ந்து இனித்த  அந்தக் குரலின்

துயரம் என்னை அதிர வைத்தது!

புரட்சியில் வடிவெடுத்து

புது யுகங்களில்…

கலை இலக்கியங்களை

வகைப்படுத்தியவளே!

விதைப்புகள் தகர்ந்ததால்

சடுதியாய்

நிசப்தத்தின் பள்ளத்தாக்கில்

புதையுண்டு முனகினாயோ…

அதிசயமான அதிசயனின்

அரவணைப்பில் ஆழ்ந்தவளே…

உயர்ந்த கருத்துக்களில்

பொங்கிய விழுமியங்கள்

ஆழ்கடலின் மௌனம்போல்

அகவயத்தில் தொலைத்து

பூமியின் மடியில் மௌனித்து ஆழ்ந்தாயோ!

இத்துப் போகின்ற வாழ்க்கையில்

கூண்டுக் கிளிபோல்

கலையின் பிடிப்பை

அடக்கிக் கனத்தாயோ!

பாசப்போராட்டம்…

திட்டமிட்ட பிரயத்தனம்…

உணர்ச்சியில் வரிசையிட்டு

காலமும் நதியும்போல்

முடிவின்றி நீட்டினாயோ!

தானாக இல்லாமல் நீ

தனியாகத் தவித்தாயோ!

சாதிக்காத சிந்தனைகள்

உச்சக் கணங்களாகி உன்னுள்

தேய்ந்து மறைந்ததுவோ!

மரணமோ கவலையல்ல – எல்லோரும் மரணிப்போம்

உறக்கத்தில் இன்று தொட்டுக்கொள்கிறது என்னை…

கலையின் அழகால்

காலத்தை வென்று அர்த்தத்தை ஈர்க்கட்டும்

கவிதைக் கோலங்கள் போட்டு

கமலினியை நினைவில் ஊட்டட்டும்!