வரலாறு என்பது கடந்தகாலத்தோடு சமகால மனிதர்கள் மேற்கொள்ளும் உரையாடல்தான் என்ற ஒரு கருத்து உண்டு. ஐம்பது வருடங்களின் முன்னர் எமது வரலாறு பார்க்கப்பட்ட கோணத்திலிருந்து, அதே விடயங்கள் இன்றும் அணுகப்படும் என்பதற்கில்லை. அன்றைய காலத்தில் வரலாற்றோடு பகிர்ந்துகொண்டு பெற்றிருக்கக்கூடியவற்றிலிருந்து வேறுபல தேவைகள் இன்று எம்மைத் தூண்டும் காரணமாகப் புதிய பல விடயங்களை வரலாற்றுப் பக்கங்களிலிருந்து பெறக்கூடியவர்களாக இருப்போம். ஆயினும் இன்றைய எந்தத் தேவையிலிருந்து அதனை எத்தகைய நலன் அடிப்படையிலான கண்ணோட்டத்தில் அணுகுகிறோம் என்ற நோக்குநிலை காரணமாக நாம் வந்தடைகிற முடிவுகள் வேறுபட இடமுள்ளது. பலரும் காணத்தவறுகின்ற அம்சங்கள் சிலரால் உன்னிப்பாகக் கண்டறியப்படவும், அவை அவர்களால் முதன்முதலாய்ப் பேசுபொருளாக்கப்படுவதும் இதன் காரணமாகவே.
ஆங்கில ஏகாதிபத்திய ஒடுக்குமுறையில் குடியேற்ற நாடுகளாய்ச் சிறுமைப்பட்டிருந்த காலத்தில் எமது கடந்தகால வரலாற்றைப் பார்த்த முறை ஒருவகை; அப்போதும் பாரதி பேசாப்பொருள் பலவற்றைப் பெருமுழக்கமாக்கி “பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே, வெள்ளைப் பறங்கியைத் துரையென்ற காலமும் போச்சே” எனப் பிரகடனப்படுத்தினார். இது பலதடவை கவனிக்கப்பட்டு பழங்கதையாகிவிட்ட போதும், இதனுள் ஊடறுத்துக்காண முயற்சிக்காத பார்க்கப்படாத பக்கங்கள் பல இருந்தபடியே உள்ளன. இத்தகைய “பார்க்கப்படாத பக்கங்கள்” தெணியானின் கட்டுரைகளாக ஜீவநதி வெளியீடாகி அண்மையில் எமது கரங்களை எட்டியுள்ளது. கனடாவில் வாழும் க. நவம் தொகுத்து வெளியிட்டுள்ள இந்நூல் 190 பக்கங்களில் வெளிப்பட்டுள்ளது.
பார்ப்பனிய எதிர்ப்பு பாரதிக்குப்பின் மேலும் விரிந்த தளத்தில் இயங்கியுள்ளது; இருபதாம் நூற்றாண்டின் முப்பதாம் ஆண்டுகளில் இருந்து தமிழகத்தில் பெரியாரியமாகவும் மராட்டியத்தில் அம்பேத்கரியமாயும் வளர்ந்திருக்கிறது. இன்று இந்துத்துவ ஆட்சியில் பெரியாரிய – அம்பேத்கரிய எழுச்சி வீறுபெற்று வருவதையும் காண்கிறோம். ஆயினும் பாரதியிடம் இருந்த பார்வை வீச்சு இவற்றிடம் தொலைந்துபோய், பின்னாலே பெரும் பூதத்தை இருக்கவிட்டு, முன்னாலுள்ள சிறு பூச்சாண்டிகளோடு வீராவேசம் காட்டுவதாகவே இவையுள்ளன. ஏகாதிபத்தியம் நவபிராமணியமாகி ஒடுக்கப்பட்ட தேசங்களைச் சுரண்டிக் கொழுக்கும் இன்றைய வரலாற்றுக் கட்டத்தில், ‘பார்ப்பானை ஐயரென்பதும் வெள்ளைப்பறங்கியைத் துரையென்பதும்’ போயொழிந்து, ஆனந்தப்பள்ளுப் பாடும் சுதந்திரம் கைகூடும் என்ற பாரதியின் பிரகடனம் ஆழ்ந்த பொருள் நிறைந்த முழக்கம். அதற்கு மாறான ஒருமுனைவாதப் பார்வையின் இன்றைய முழக்கம், விடுதலையைத் தூரப்படுத்துவதாயுள்ளது. பார்ப்பனியம் என்ற பேரில் கரந்துறையும் பார்ப்பன எதிர்ப்பு பாரதியிடம் இருந்ததில்லை; எட்டுத்திக்கும் சென்று படித்தாக வேண்டிய அந்நியரின் சாதனைகள் பற்றிய புரிதல் பாரதிக்குத் தெளிவாக இருந்தது. ஐயர்- துரை என்று அவர்களைக் கொண்டாடும் எமது அடிமைப் புத்தியைத் தகர்த்து, முழு மானுடத்துக்குமான விடுதலையை இறைஞ்சியவராக பாரதி இருந்தார்.
மாறாக, பார்ப்பனிய எதிர்ப்பை மட்டும் பூதாகாரப்படுத்தி ஏகாதிபத்தியப் பிணைப்பைத் தகர்த்து, சோசலிசத்தை நோக்கி முன்னேறுவதை முதன்மைப் பணியாகக் கொள்ளத் தவறுவதால் பெரியாரியமும் – அம்பேத்கரியமும் வெற்றாரவார முழக்கங்களுடன் நிறைவு காண்கின்றன. மார்க்சியர்களும் அங்கே இன்று தம்மிரு தோள்களில் இவற்றைச் சுமந்தபடிதான்; அவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பையும் சோசலிச நாட்டத்தையும் இலட்சியமாகக் கொண்டபோதிலும், தோள்களின் காவடியில் கவனம் குவியும்போது இதை மறப்பர். இதனைப் பேசுபொருளாக்கும்போது வர்க்கவாத முடக்கமாய் மார்க்சியத்தைக் குறுக்குவர். வைத்தால் கூந்தல், அடித்தால் மொட்டை என்ற நிலைப்பாடு.
விடுதலை பிளவுபடாதது; பாட்டாளி வர்க்கம் தனக்கானதாய் மட்டுமன்றி எதிரியையும் விடுதலை செய்வதற்கான இலட்சியத்தை முன்னெடுத்தது. பார்ப்பனிய எதிர்ப்பு ஒரு சாதியை வெறுப்புக்குரியதாக்கி சாதிவாதத்தினுள் முடங்கும்போது அருகருகேயுள்ள சாதிகளிடையேயும் மோதல்களே பெருகி வருகின்றன. பெரியாரியத்தையும் அம்பேத்கரியத்தையும் மார்க்சியத்துடன் ஒட்டவைப்பதல்ல இன்று அவசியப்படும் பணி; அவையிரண்டையும் கடந்து சாதிச் சமூகத்தில் மார்க்சியத்தைப் பிரயோகிக்க, முதலாளித்துவ நிலைப்பட்ட பெரியாரிய – அம்பேத்கரியத் தவறுகளை விமர்சனத்துக்கு உள்ளாக்கியவாறு, அவற்றிடமிருந்து கற்கவேண்டியவற்றை மட்டும் பெற்று, முன்னேற மார்க்சியர்கள் முயற்சித்தாக வேண்டும், இந்தியாவில்.
இலங்கையில், பெரியார் – அம்பேத்கர் அவசியப்படாமைக்கான காரணம், சாதியத்துக்கு எதிரான போராட்டத்தைப் பாட்டாளிவர்க்க நிலைப்பாட்டிலிருந்து மார்க்சியர்களே இங்கு முன்னெடுத்திருந்தார்கள் என்பதாகும். சாதிவாதத்தின் தவறுகளுள் சிறைப்பட்டவாறு தமிழ் இலக்கியத்தின் மீதான புதிய கோணங்களிலான பார்வைகள் தமிழகத்திலிருந்தும் பேசப்படுகின்றன. அவை சரியான மார்க்சிய அணுகு முறையைத் தவற விடுவதனால் அவற்றால் பார்க்கப்படாத பக்கங்கள் இன்னமும் உள்ளன. வர்க்கப் பார்வையில் சாதிச் சமூகத்து இண்டு இடுக்குகளைக் கண்டு காட்டுகிறார் தெணியான் “பார்க்கப்படாத பக்கங்கள்” என்ற இந்த நூலில். இது இலக்கியச் சிந்தனைகள்(பக்கங்கள் 1-92) கலை-இலக்கிய ஆளுமைகள் (பக்கங்கள் 93-190) என்ற இரு பாகங்களைக் கொண்டுள்ளது.
“தமிழ் இலக்கியங்கள் வெளிப்படுத்தத் தவறிய தமிழர் சமுதாயம்” என்ற முதல் கட்டுரை வர்க்கவாத முடக்கத்தை வெற்றிகொண்டு, வர்க்கப் பார்வையில் சாதிச் சமூக நிதர்சனத்தைக் காண வலியுறுத்துகிறது. இந்தப் பார்வையை வந்தடைய உதவும் பாரதியை மாற்றத்தின் திசைகாட்டியாகக் காட்டுவார். “ஆட்சியதிகார வலுவுடைய மேட்டுக்குடியினர் பற்றிப் பேசும் இலக்கியப் போக்கினில் திடீர்ப் பாய்ச்சலாக ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தவன் மகாகவி பாரதி. 19ம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றி 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை (1882.12.11 – 1921.09.11) வாழ்ந்த பாரதியின் வருகைக்காக தமிழ் இலக்கியம் காத்திருந்தது போலும். தமிழர் சமுதாயத்தில் பெரும்பான்மையினராக இருக்கும் சாதாரண பொதுமக்களைத் தமிழ் இலக்கியத்தினுள் பாரதி கொண்டுவந்தான்.” (ப.04) என்பார். என்ன இருந்தாலும் பாரதி பிராமணன் என்பதால் சொந்தச் சாதியபிமானம் காரணமாக தவறுகள் அவரிடமும் வெளிப்பட்டதை எண்பதாம் ஆண்டுகளில் காணத்தவறினோம், தலித்திய எழுச்சியோடு இப்போது கட்டுடைத்துப் பார்க்கிறோம் எனக்கூறுகிற மார்க்சியர்கள் தமிழகத்தில் உண்டு. அவர்கள் போலன்றி தெணியான் துணிவுடன் பாரதியைப் புதுயுகத்தின் முதற் குரல் எனப் பிரகடனப்படுத்துவது கவனிப்புக்குரியது.
முன்னதாக தமிழகத்தில் மார்க்சியர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில், அவர்களே மிகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் என்ற வகையில் காத்திரமான பணிகளை முன்னெடுத்துள்ளனர். அவை வர்க்கப் பிரச்சனை என்ற பொருளாதாரப் போராட்டங்களாய் அணுகப்பட்டனவே அல்லாமல் சாதிய இழிவுகளுக்கு எதிரானவையாய்ப் போதிய அளவில் இணைக்கப்படவில்லை. முதலாளித்துவ நிலைநின்று பெரியார் – அம்பேத்கர் சாதியெதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தபோது, உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்துவதாயும் ஏகாதிபத்தியச் சார்பானதாயும் முத்திரை குத்தப்பட்டதேயன்றி, ஐக்கியப்பட அவசியமான பக்கங்கள் கண்டுகொள்ளப் படவில்லை; முதலாளித்துவச் சார்பான தத்துவக் குளறுபடிகளுக்கு எதிராக அன்று சரியாகவே போராடியபோது ஐக்கியப்படும் இடங்கள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதுபோன்றே, இன்று ஐக்கியப்பட முனையும்போது அவசியமான தத்துவார்த்தப் போராட்டத்தைக் கைவிடுகிறார்கள், இந்திய மார்க்சியர்கள்.
மாறாக இலங்கையில் கொம்யூனிஸ்ட் கட்சி உதயமான 40 களிலிருந்தே சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த காரணத்தால், ஒருமுனைவாதத் தவறுகளின்றி சாதியமைப்பை வர்க்கப் பார்வையில் காட்ட இயலுமாயுள்ளது தெணியானுக்கு. பாரதி மார்க்சியரல்லாதபோதிலும் பின்னர் மார்க்சியர்கள் வந்துசேரவேண்டியிருந்த பல கோணங்களையும் பார்த்து முதற் குரல்களை எழுப்பியவராக இருந்தார். வெறும் எழுத்தில் அடங்காமல் தன் சொந்த வாழ்விலும் சாதியெதிர்ப்புக் குரலை நடைமுறைப்படுத்தியிந்தார். அதன் காரணமாகவே பாரதிதாசன் “பெரியார் சாதி முறைக்கு எதிராக போராடிய அளவுக்கும் வேகத்துக்கும் ஈடாகப் போராடியவர் பாரதி” எனக் கூறினார்.
அந்தவகையில் பாரதியை இந்திய மார்க்சியர்கள் தூரவீசிவிடுவது – அல்லது அடக்கிவாசிப்பது போலன்றி, தெணியான் இங்கே முன்னிலைப்படுத்துவது அதிசயப்படத்தக்கதல்ல. இங்கே “சாதியின் காவலர்” எனப்பட்ட நாவலரையும் அவருக்கான வரலாற்றுப் பங்களிப்பின் பேரில் மரியாதைக்குரியவராக அடையாளப்படுத்துவதில் தெணியானுக்கான மார்க்சிய அணுகுமுறை துலக்கமுறுவதைக் காண்போம். “தமிழ் நாட்டில் அச்சு இயந்திரசாலை நிறுவி, தமிழுக்கு அருந்தொண்டாற்றிய ஆறுமுகநாவலரையோ, அவரது காலத்துக்குப்பின் வாழ்ந்த ஈழத்துத் தமிழ்ப் பெரியோர்களையோ தமிழ் நாட்டார் கண்டுகொள்வதில்லை. ‘நாவலர் என்றால், நாவலர் நெடுஞ்செழியனைத்தான் எங்களுக்குத் தெரியும்’ என ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் இருந்து தெரிவிக்கப்பெற்ற கருத்தினை இலகுவாக மறந்துபோய்விட முடியாது. ‘ஐந்தாம் குரவர்’ என யாழ்ப்பாணத்தார் தலையில் வைத்துச் சுமந்து கொண்டாடும் ஆறுமுகநாவலர் பற்றி இப்படியொரு கருத்து தெரிவிக்கப்பட்ட பொழுது, இங்கு யாரும் கொதித்தெழுந்துவிடவுமில்லை” (ப.86) எனக் கூறும்போது, ஐந்தாம் குரவர் என்ற கொண்டாட்ட உணர்வில்லை – அந்த விடயத்தில் நாவலரின் சாதி அபிமானத்தின்மீது கடும் விமர்சன அணுகுமுறையுடனேயே இதனைத் தெணியான் கூறுகிறார் என்பதனை அவரை முழுதாகப் படிக்கும்போது தெரிந்துகொள்வோம்.
இத்தகைய சாதிப் புனிதம் எங்கிருந்து வருகிறது? “பல்வேறு சிறப்புக்களை உடைய ஒருவனைப் பின்தள்ளுவதற்கு அவன் பிறந்த குலம் சுட்டிக்காட்டப்பெறுகின்றது. ஒருவன் தன்னை மேன்மைப்படுத்துவதற்கு வேறெந்தச் சிறப்புக்களும் இல்லாத இடத்து, தான் உயர்ந்த சாதியான் எனக் கூறிக்கொள்ளும் இழிகுணம் இன்றும் எம்மிடை உண்டு. இந்த இழிகுணம், சமயத்தின் பெயரால், சமயத்துக்கூடாக வெளிப்படும் அநாகரிகம் இன்னும் அழிந்துபோய்விடவில்லை. சைவ சமயம் இத்தகைய இழிந்த குணத்தினைப் பேணித் தாலாட்டி வளர்க்கும் தொட்டிலாக விளங்குகிறது. சமயச் சார்புடைய தொண்டு நிறுவனங்களுக்கு மத்தியிலும் இன்று இக்குணம் கரந்து உறைகின்றது” எனும் அவர் கருத்துடன் (ப.24) நாவலர் குறித்த மேலேயுள்ள அவதானத்தை இணைத்து நோக்குவது அவசியம்.
யாழ்ப்பாணத்தில் பிராமணர் ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கும் ஒரு சமூகத்தளமாய் இல்லை. அவர்களின் பாத்திரத்தையும் ஏற்ற வெள்ளாளரே ஆதிக்கவாதச் செயற்பாடுகளை முன்னெடுத்தனர். ஏகாதிபத்திய நலனை முன்னிறுத்திய கிறிஸ்தவ ஊடுருவலுக்கு எதிரான போராட்டமாய் எமது பண்பாட்டைப் பாதுகாக்கும் வரலாற்றுப் பணியை முன்னெடுத்த நாவலர், வெள்ளாளப் பிரதிநிதி என்றவகையில் அவரது அன்றையகாலகட்ட முற்போக்கு நிலைப்பாட்டுடன் கூடவே சாதியத்தை வலியுறுத்தும் தவறுகளுக்கும் உரியவராய் வெளிப்பட்டிருந்தார். அதேபோல நவீன அம்சங்களை உள்வாங்குவதில் அன்றைய இயங்கு சக்தியாக இருந்த மேற்குடியினரிடம் இரண்டக நிலை இருந்துள்ளது. பணம் காய்த்துக் கொட்டும் விஞ்ஞானக் கல்வியை வரவேற்ற யாழ்ப்பாண மேற்குடியினர், தமிழின் முதல் நாவலைப் படைக்க இயலாதவர்களாய் இருந்தனர். கிரிஸ்தவ, இஸ்லாமிய ஆளுமைகள் அல்லது யாழ்ப்பாணத்துக்கு வெளியே உள்ளவர்களே ஆரம்பகால நாவல்களைப் படைப்பவர்களாக இருந்தனர்; “நாவலர் வழிவந்தோர் சமயம் வளர்ப்பதற்குப் புராணபடனம், கண்டனப் பிரசங்கம் என்பவற்றிலேயே கவனம் செலுத்தினர்” என்பார் தெணியான் (ப.11).
சாதியொடுக்குமுறை தனியே இந்து சமயத்தில் மட்டும் செயற்படுவதாயில்லை; ஆன்மீகத் தளத்திலும் சாதியத்தைப் புனிதப்படுத்தி நியாயப்படுத்துகிறது இந்து சமயம் என்பது மட்டுமே வேறுபாடு. சாதிமுறை வாழ்வு நிதர்சனமான பின்னணியில் இவ்வாறு மதத்தினால் சாதியக் கருத்தியல் வடிவமைக்கப்பட்டது என்ற காரணத்தாலேயே கருத்தியல் ரீதியாகச் சாதியத்தை ஏற்காத சமயத் தளங்களிலும் சாதி செயலாற்றல் கொள்ள இயலுமாயுள்ளது. “இந்து தமிழ்ச் சமூகம் சாதியப் பண்பாட்டை அடிப்படையாகக்கொண்டு கட்டியெழுப்பப்பட்டது. இந்தப் பண்பாட்டினை கிறிஸ்தவம் உள்வாங்கி இருக்கின்றது. தமிழர்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய போதிலும் சாதியக் கட்டுமானங்களில் இருந்து முற்றாக விடுபடவில்லை” எனக் கூறி (ப.46), ஆரம்பகால கிறிஸ்தவப் பரப்புரையாளர்களான வெள்ளையர்கள் தம்மை ‘ஐயர்’ என அழைத்திருந்தமையை ஆதாரமாகக் காட்டியிருந்தார்.
“பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே – வெள்ளைப் பறங்கியைத் துரையென்ற காலமும் போச்சே’ என சமூக நடைமுறையை ஆக்ரோசமாக நிராகரித்துப் பாடுகின்றார் மகாகவி பாரதியார். பார்ப்பனர்களையே ஐயர் என்று அழைப்பதனை பாரதியார் வெறுத்து ஒதுக்குகிறார். அதேவேளை துரையென்று அழைக்கப்பெற்ற வெள்ளைப் பறங்கி (மேலைத்தேச மதகுரு) எவ்வாறு ஐயர் ஆனார் என்பது மிகச் சுவாரசியமான ஒன்றல்லவா!”(ப.44).
சாதியமைப்புக்கு எதிரான போராட்டத்தில் சித்தர்கள் தம்மளவில் சமூக – இலக்கியத் தளங்களில் செயற்பட்டுள்ளனர். அதன் காரணமாய் அவர்களது காத்திரமான இலக்கியப் பங்களிப்பு உரிய அளவிலான கவனம்பெறாமல் விடப்பட்டுள்ளது என விசனம் தெரிவிக்கும் தெணியான், “சமூக மேலாதிக்க சக்திகளின் நேசர்களாகச் சித்தர்கள் இல்லாத காரணத்தினால் சித்தர் பாடல்கள் அல்லது சித்தர் இலக்கியங்கள் மேலெழுந்துவர இயலாது போயிற்றுப் போலும். தமிழ் இலக்கிய உலகில் சித்தர் இலக்கியங்கள் ‘கறிச் சுவை அறியாத சுட்ட சட்டி சட்டுவங்களாகத்’ தொடர்ந்து இருந்து வருவதனால், யாருக்கும் எந்தவிதப் பயனும் விளையப் போவதில்லை” (ப.35)என்பார்.
இலங்கையில் முப்பதுவருடங்களாய் இரத்தம் சிந்திப் பெற்ற அனுபவங்களின் பின்னரும் தமிழ்த் தேசியத்தில் ஆண்ட பரம்பரை நலன் மேலாதிக்கம் செலுத்த இயலுமாயிருப்பது “மெல்லத் தமிழினிச் சாகும்” அறிகுறியோ என்னவோ! ஆயினும் இதனைத் தகர்க்கும் முனைப்பு பாரதி வழியின் தொடர்ச்சியாய்த் தமிழகத்திலும் உண்டு; இலங்கையில் மேலும் காத்திரமாக மார்க்சியத் தலைமையில் இயங்கிய சாதியத் தகர்ப்புப் போராட்ட வரலாற்று எழுச்சியிலும் இருந்துள்ளது. அதன் சாராம்சம் இந்த நூல். நாற்பதாம் ஆண்டுகளில் கொம்யூனிஸ்ட் கட்சி தொடக்கம் பெற்ற காலம் முதலாயே சாதியத்துக்கெதிரான போராட்டங்களை ஆதரித்ததோடு, தலைமையேற்று முன்னெடுத்தும் வந்தது. அன்று ஒடுக்கப்பட்ட மக்கள் “சிறுபான்மைத் தமிழர்” எனத் தம்மை அடையாளப்படுத்தினர். “அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை” சாதியத் தகர்ப்பின் ஒரு வடிவமாக ஆலயக் கதவுகளைத் திறப்பதற்காக போராட்டங்களை முன்னெடுத்திருந்தது. இன்று வரலாறு மாறியுள்ளது; “சிறுபான்மை இனமான தமிழர்கள்” என்பதாய் ஆண்ட பரம்பரையுங்கூட ஆகியுள்ளது. அன்று ஒடுக்கப்பட்ட மக்களும் முற்போக்கு சக்திகளும் இணைந்து “அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் இந்து ஆலயங்களுக்குள் கௌரவத்துடன் சுதந்திரமாகச் சென்று வழிபடுவதற்காக ஆலயக் கதவுகளைச் சகலருக்கும் திறந்துவிடுதல்” என்பதற்காகக் குரல்கொடுத்து, விட்டுக்கொடுக்காத போராடங்களை முன்னெடுத்தனர். “இலங்கை இராணுவம் கைப்பற்றி முகாமிட்டுத் தங்கியிருக்கும் ஆலயங்களைக் கைவிட்டு வெளியேறி வழிபாட்டுக்காகத் திறந்துவிடுங்கள்” என்பதாக “தாழ்த்தப்பட்டோர் போல” இன்று குரல்கொடுப்பவர்களாய் அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையல்ல – சிறுபான்மைத் தமிழினத்தின் இந்துமகாசபைகளும் இந்துமாமன்றங்களுமே குரல் கொடுக்கின்றன (பக்.48-49).
இந்த நியாயமான கோரிக்கைக்குப் பெரும்பான்மை இனத்தின் முற்போக்கு சக்திகளை வென்றெடுப்பது பற்றிய அக்கறை இன்றுங்கூடத் தமிழ்த் தேசியத்திடம் இல்லை. ஒடுக்கப்படும் இனம் என்ற உணர்வின்றி ஏகாதிபத்தியத்தோடும் சிங்கள ஆதிக்க சக்தியோடுமே அவர்களது ஊடாட்டம். மாறாக ஆதிக்க சக்திகளை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்களும் முற்போக்கு சக்திகளும் இணைந்த போராட்டமாகவே அறுபதாம் ஆண்டுகள் வரையான சாதியத் தகர்ப்புப் போராட்டம் அமைந்திருந்தமையைத் தெணியான் தெளிவுபடுத்தத் தவறவில்லை. இது வெறும் சாதிவாதமாக இல்லாமல் சமகால உலகின் ஒடுக்குமுறைக்கு எதிரான அனைத்து உலகநாடுகளின் போராட்டங்களையும் ஆதரித்ததோடு, இலங்கையினுள் முன்னெடுக்கப்பட்ட வர்க்கப் போராட்டங்களுடன் இணைந்ததாகவும் அமைந்திருந்தமை சிறப்பியல்பாகும். நாற்பதுகளில் இருந்து சரியான கொள்கைவகுப்புடன், மக்கள் விடுதலையை வென்றெடுப்பதற்கான ஏற்புடைய மார்க்கத்தில் ஐக்கியப்படுத்தவல்ல அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து, எழுபதுகளின் தொடக்கம் வரையான முப்பது வருடங்களுக்கு மேலாக முன்னெடுக்கப்பட்ட போராட்ட அனுபவங்கள் முற்போக்கு சக்திகளால் அற்புதமாகப் படைப்பாக்கப்பட்டுள்ளன.
அன்றைய சூழலில் தமிழகத்தின் முற்போக்கு இதழ்களான சரஸ்வதி, சாந்தி, தாமரை போன்றன அதற்கான முக்கியத்துவத்தை வழங்கியிருந்தன. முற்போக்கு அணியில் இணைந்து இயங்காத அன்றைய இலங்கைத் தமிழின் ஏனைய படைப்பாளிகளைத் தமிழ்த் தேசியம் பேசும் தமிழகத்தவர் கண்டுகொண்டதில்லை. அவர்கள் இலங்கைத் தமிழைப் புரிந்துகொள்ளத் தனியகராதி தேவை என்றனர். எண்பதுகளின் பின் ஈழத் தமிழ்த் தேசியத்தின்பால் பெருங்கருணை எழுந்தபோது தமிழகத் தமிழ்த் தேசியர்கள் மஹாகவி போன்றவர்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டதாகக் கூறி நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். அன்று அவர்களால் புரியவில்லை என்ற அசட்டையீனத்துடன் புறந்தள்ளப்பட்ட இலங்கைத் தமிழில் எழுதிய மஹாகவி போன்றோரைத் தமிழகத் தமிழ்த் தேசியர்கள் இருட்டடிப்புச் செய்தனரேயன்றி, இங்கு முற்போக்குப் படைப்பாளிகளோ விமர்சகர்களோ மஹகவி போன்றோருடன் ஐக்கியப்பட்டுச் செயற்பட்டுள்ளனர். போர்க்குணமிக்க முற்போக்குப் படைப்புகள் அன்று கவனம் பெற்ற அளவில் தமிழ்த் தேசிய உணர்வுடன் முற்போக்குப் படைப்பாளிகளுடன் கைகோர்க்கும் அளவில் ‘தமிழ் இடதுசாரிப்பண்பு’ மேவியிருந்த மஹாகவி போன்றோர் முக்கியத்துவம் பெறவில்லையென்றாலும், உரிய அளவில் கவனம்பெற்றிருந்தனர்.
எண்பதுகளின் பின், புலம்பெயர் ஈழத் தமிழரின் டொலரினால் விளங்கவைக்கப்பட்ட இலங்கைத் தமிழ் – புலம்பெயர் படைப்புகளில் அக்கறைகொண்டோர், முற்போக்கு இலக்கியத்தை முழுதாக இருட்டடிப்புச் செய்யவியலும் எனப்பகல் கனவு காண்கின்றனர். இத்தகைய புறக்கணிப்புப் பற்றி தெணியான் இவ்வாறு கூறுவார்: (வெறும் இந்தியத் தமிழின் நிழலாக இருந்த பக்திவிசுவாசப் பாடல்கள் நிறைந்திருந்த சூழலில்) “இத்தகைய கவிதைப் போக்குடையவர்கள் மத்தியில், தமது இலக்கிய ஆளுமை, சமூக நோக்கு என்பவை காரணமாக நீலாவணன், மஹாகவி, முருகையன் ஆகிய கவிஞர்கள் மூவரும் இலக்கிய வரலாற்றில் தங்கள் பெயர்களைப் பதிந்தவர்கள் என விமர்சகர்கள் பல இடங்களிலும் பதிவு செய்திருக்கிறார்கள். கே.பசுபதி, சுபத்திரன் போன்ற கவிஞர்கள், வர்க்க – சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பாடி, போராடி வந்தார்களாயினும், விமர்சகர்களால் அத்தகைய ஓர் இடம் வழங்கப்படவில்லை. எது எவ்வாறாயினும் இவர்கள் மூவருமே தமிழ் நாட்டு இலக்கிய உலகில் அன்று பெருமளவில் அறியப்பட்டவர்கள் என்று கொள்ளுவதற்கு இயலாது” (ப. 89).
இவ்வகையில் தமிழ்ச் சமூக இருப்பின் அடிப்படையை வலியுறுத்தும் வகையில் பார்க்கப்படாத பக்கங்களை எடுத்துக்காட்டும் இந்நூல் முழுமைப் பண்பின் பகுதியாக இதனைக் கருதும் வகையில் தமிழ் இலக்கியச் சூழலின் ஏனைய பொதுப்போக்குகள் மீதும் தன் பார்வையைச் செலுத்தியுள்ளது. அவையனைத்தயும் இங்கு எடுத்துக்காட்டிவிட இயலாது. பன்முக அக்கறையுடனான இந்நூல் ஒவ்வொருவரதும் வாசிப்புக்குரியது என்பதால் உங்கள் கவனத்துக்குக் கொண்டுவந்த மேற்படி அம்சங்கள் இதனைப் படித்தாகவேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கும் என்றே கருதுகின்றேன். விவாதப்பண்புடைய இத்தகைய நூல்மீது எதிர் விமர்சனங்கள் இருக்கவியலாது என்றில்லை. அவை பொதுக் களத்தில் விவாதிக்கப்படுவதே ஆரோக்கியமான கலை – இலக்கிய வளர்ச்சிக்கு அடிகோலும்.
ஒரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்ட இயலும். விமர்சனம், திறனாய்வு என்பவை வெவ்வேறானவை என்பதை விமரிசகர்களே புரிந்துகொள்ளவில்லை என்பார் தெணியான். “விமர்சனமும் திறனாய்வும்” என்ற கட்டுரையில் இதனைக் கூறுகிறவரின் அடுத்த கட்டுரை “பேராசிரியர் கைலாசபதியின் மறைவுக்குப்பின் ஈழத்துத் தமிழ் இலக்கிய விமர்சனம்” என்பதாகும். கைலாசின் காத்திரமிக்க பங்களிப்பை விகசித்துக்கூறி, அவர் மறைவின்பின் தேக்கமுறும் விமர்சனக் கலைபற்றி எடுத்துரைக்கிறார். பிரச்சனை, கைலாஸ் தனது விமரிசனம் குறித்த நூல்களுக்கான தலைப்பை திறனாய்வு என்றே வைத்துள்ளார். ஆக, புரிதலின்மை கைலாசிடமும் இருந்ததா? விமரிசனத்துக்கான ஏற்ற தமிழ்ச் சொல்லாகவே திறனாய்வு என்பதை கைலாஸ் தெரிவுசெய்கிறார். தெணியான் “திறன் ஆய்வு” என்பதை “சிறப்பினை மாத்திரம் ஆய்ந்து” முன்வைப்பதாக கருதுகிறார் (ப.78). திறனை ஆய்வு செய்தல் எனும்போது சிறப்பு – சிறப்பின்மைகளைச் சீர்தூக்கிப் பார்த்தல் என்றுதானே பொருளாகும்? விமரிசனம் ஆய்விலிருந்து வேறானது, திறனாய்வுங்கூட ஆய்வல்ல என்று கூறுதலே பொருத்தமுடையதெனக் கருதுகிறேன். ஒரு வகையில் அணிந்துரை போன்றது திறனாய்வு என்பது தெணியான் கருத்து.
இலக்கியச் சிந்தனையின் பன்முகப் பரிமாணங்களை எடுத்துக்காட்டும் தெணியான், தான் கண்டு பழகி நேசித்த ஆளுமைகள் தெரிவிலும் பல வகைமைகளை வெளிப்படுத்துகிறார். டானியல், க. கைலாசபதி, கனக செந்திநாதன், செ. கதிர்காமநாதன், புலோலியூர் க. சதாசிவம், கா. சிவத்தம்பி, சொக்கன், ராஜ ஸ்ரீகாந்தன், அல்வாயூர் மு. செல்லையா, மிருதங்கக் கலைஞர் வி.வி. காசிநாதன், சிற்பி சரவணபவன், டொமினிக் ஜீவா, கே.எஸ். சிவகுமாரன், மேமன் கவி, யாழ்ப்பாணக்கவிராயர் கே. பசுபதி, ஈழத்து நாடகத் தந்தை எம்.வி. கிருஸ்ணாழ்வார், நந்தி, கலாநிதி த. கலாமணி என்போர் இங்கு இடம்பெறும் கலை – இலக்கிய ஆளுமைகளாவர். மிகுந்த ஆளுமைமிக்க சிறுகதைப் படைப்பாளி என்ற வகையில் ஒவ்வொருவர் குறித்த சித்திரிப்பும் சிறுகதைபோலப் படிக்கும் சுவாரசியத்தைத் தருகின்றன.
முந்திய முப்பது வருடங்களின் சாதியத் தகர்ப்புப் போராட்டங்கள், தொடர்ந்த முப்பது ஆண்டுகளின் தமிழ்த் தேசியப் போராட்டங்கள் என்பவற்றின் அனுபவச் செழுமையுடன் தமிழிலக்கியத்தின் கடந்த காலத்தையும் சமகாலத்தையும் மறுவாசிப்புச் செய்துள்ள இந்நூல், எதிர்காலத்தை எவ்வகையில் முகங்கொள்வது, படைப்பாக்குவது என்பவற்றுக்குமான எடுத்துக்காட்டாயும் அமைந்துள்ளது. அவ்வகையில் சமூக இயங்காற்றல், கலை-இலக்கிய அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல், தெணியானின் “பார்க்கப்படாத பக்கங்கள்”.
‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அனுப்பியவர்: எழுத்தாளர் க.நவம் knavam27@hotmail.com