தொடர்கதை: “ஒரு நம்பிக்கை –காக்கப்பட்டபோது…!

அத்தியாயம் ஒன்று!

ஆர்.விக்கினேஸ்வரன்பனிக்காலக்  காற்றின்  பலமான  மோதல்,  பேருந்தின்  யன்னல்  ஓரமாக  இருந்த  எனக்கு,  இலேசான  விறைப்பைத் தரத்  தொடங்கியது. புகைந்து கிடந்த  வானத்திலிருந்து  விழுந்துகொண்டிருக்கும்  இலேசான தூரல்,  இரவுத் திரையில்  கோடுகள்   போடுவதை  அரைமனதுடன்  ரசித்தபடி  கண்ணாடிக்  கதவினை  இழுத்து   மூடினேன்.

“ஏய்…. நீயெல்லாம்  என்ன  ஆம்புளடா….எழுவத்திமூணு வயசு…..மேலுக்கு  ஒரு  சட்டைகூட  போடாமே.., குளிர்ல  நானே நடந்து போறேன்….  இருவத்தியேழு வயசுக்காரன்….  நீ இந்த  நடுங்கு நடுங்குறே..”       பக்கத்து வீட்டுத் தாத்தா என்னை  அடிக்கடி கிண்டல் செய்வது  நினைவில்  வந்தது.  தூங்குவோர்  மீதும் ,  அடிக்கடி  கொட்டாவி  விட்டபடி  அப்பப்போ  நிமிர்ந்து பார்த்துவிட்டு,மீண்டும்  தலையைத்  தொங்கப்போட்டபடி  வீணிர்  வடித்துக்கொள்வோர்  மீதும்  கடுங்கோபத்துடன்.,

காதில்  நுளையச்  சிரமப்படும் கண்ராவிப்  பாடல்  காட்சி  ஒன்றினைக்,   காறி உமிழ்ந்துகொண்டிருந்தது, பேரூந்தின் தொலைக்காட்சிப் பெட்டி. “இடையில்  எங்காவது  நிறுத்தமாட்டார்களா….”

உடலுக்குள்  எழுந்த  உந்தல்  மனதை  ஏங்க வைத்தது.

ஏற்கனவே  ரயிலில்  பயணிக்க  ஏற்பாடு  செய்திருந்தேன்.  இரண்டு நிமிடத்  தாமதம்.,  என்னை  பேருந்தில்  ஏற்றிவிட்டது. சின்னச்சின்னக்  கிராமங்கள்,  கடைத்  தெருக்கள்  மட்டுமல்ல.,நிறைந்த  ஜனப்புழக்கமுள்ள   பகுதிகளில்  தரித்தபோதுகூட.,  தாமதிக்காமல்  கிளம்பிய  பேருந்து.,

ஒதுக்குப்புறமான  பகுதியொன்றில்   தெரு  ஓரமாகச் சற்று  உள்ளே  தள்ளியிருந்த  “உணவகம்”  ஒன்றை  நாடி  நின்றது.

“பஸ்சு  கரெக்டா  அரை  மணி  நேரந்தான்  நிக்கும்… பேஷ்  வாஷிங்  பண்றவங்க., காப்பி  டீ  டிபன்  சாப்பிடுறவங்க  சாப்பிட்டுட்டுச்  சீக்கிரமா வந்திடுங்க…. 
இன்னும்  நாலுமணி நேர  ரண்ணிங்கில  எந்த  ஒரு  ஊரு ஸ்டாப்பிலுமே  நிக்கமாட்டோம்…”       

சொல்லிக்கொண்டே  கீழே  இறங்கினார்  நடத்துனர்.   அவரைத்  தொடர்ந்தார்  ஓட்டுநர்.

திருநெல்வேலி பேரூந்து நிலையத்திலிருந்து புறப்படும்போது இரவு சரியாக எட்டுமணி. “சூப்பர் பாஸ்ட்” பேரூந்தில் செல்வதானால், ஏற்கனவே முன்பதிவு
செய்திருக்கவேண்டும். ரயிலை நம்பியதால் எல்லாம் கெட்டுப்போய்விட்டது.

“மட்ராசில கொண்டுபோய் சேர்க்க, அதிகாலை அஞ்சுமணி ஆக்கிடுவான்….”

பக்கத்து சீட்டிலிருந்தவர் புலம்புவது கேட்டது.

ஒரு சிலரைத்  தவிர,  ஏனைய பிரயாணிகள்  கீழே  இறங்கி விட்டனர். இரண்டு  கைகளையும்  மேலே  உயர்த்திச்  சுதந்திரமாகச்  சோம்பல்  முறித்துக்  கொண்டேன்.
நேரமோ  இரவு  பன்னிரண்டுமணி  ஆகிவிட்டது. கீழே  இறங்கிச்  சுற்றுமுற்றும்  நோக்கினேன்.  சற்றுத்  தொலை  தூரத்தில்  ஓரிரண்டு குடிசைகள்  தெரிந்தன. 
தெருவின்  மறுபுறத்தில்  “ நடமாடும்  உணவகங்கள்” நிற்பது  தெரிந்தது. எனக்குப்  பின்னால்  நின்றுகொண்டிருந்த  சிறுமியொருத்தி,  தன்னை  அழைத்துவந்த  மூதாட்டியிடம்  கேட்டாள்..,

“பாட்டி… நாம  வந்த  வழியிலயெல்லாம்  எத்தினை  கடைங்க  இருந்திச்சில்லையா…!  அங்கையெல்லாம்  நிக்காம  எதுக்குப்  பாட்டி  இங்க  கொண்ணாந்து  

பஸ்சை   நிறுத்தியிருக்கிறானுவ…? “

 

“வேற  என்ன…பஸ்சுக்காரனுகளுக்கு  இந்த  ஓட்டல்காரன்   ஓசில  தீவனம்  போடுறான்  போல…தனிக்கடைங்கிறதால   சாப்பாட்டுக்கு  இவனுக  வைக்கிறதுதான்

வெல…. பசி  உள்ளவன்  திண்ணுதானே  ஆவணும்…”   

]எரிச்சலோடு பேசினாள்  பாட்டி.

அருகே  நின்றுகொண்டிருந்த  வேறொரு  பையன்  குறுக்கிட்டான்.

“பாட்டி… வெளிய  தெருவோரமா  சின்னச்சின்ன  தள்ளுவண்டிலவச்சு,  இட்லி,பொங்கல்,பூரியெல்லாம்  வித்திட்டிருக்காங்க… உள்ளை  வந்தா  இந்தக்  கடைக்காரன்
பெரச்சனை  பண்ணுரான்ணு., அவங்க  அங்கையே  நிண்ணுகிட்டாங்க…” 

வெளியே  தெருவின்  மறுபுறம், கொஞ்சம்  ஒதுக்குப்  புறமாக  இருந்ததனால், அவசரத்துக்கு  ஒதுங்குவோருக்கு ,  முக்கியமாகப்  பயணிகளுக்கு  அது  வசதியாக 
இருந்தது.

அந்தப் பக்கமாகப்  போய்விட்டு  தெருவைக்  கடந்தபோது, தள்ளுவண்டி  உணவு  விற்பவர்களின்  குரல்கள்  போட்டிபோட்டு  வியாபாரத்தில்  மூழ்கின.

வாங்கசார்… சூடா  இட்லி,வடை,ஆப்பம்,பூரி,பொங்கல்  எல்லாமே  இருக்கு…  நல்ல  டேஸ்டா  இருக்கும்  சார்… வாங்க  சார்…. வாங்க….”

அந்த  இட்த்தைக்  கடக்கும்போது,  கேட்ட  அந்தக்  குரல்  ஒரு  பெண்ணுடையது.  கேட்டபடி  சில  அடிகள்தான்  வைத்திருப்பேன்.  என்னை  அறியாமல்  உடம்பே 

உதறியது.

“இது…. இது……….. பழகிய  குரலாயிருக்கிறதே….. யாரு….?  இந்தக் குரலைக்  கேட்கின்றபோது  என் உடல்  ஏன் பதறுகிறது…  திரும்பிப்  பார்ப்பதற்குக்கூட  தைரியமே 

வரமாட்டேனென்கிறதே…. ஏன்…? ”

நொடிப்பொழுதுக்குள்  எனக்குள்  தோன்றிய  கேள்விகளும் , அதற்குப்  பதில்காணும்  செயல்பாடுகளுமாய்…, அவளின்  பக்கம்  திரும்பியபோது,  அவளின்  முகம் 

என்மீது  நிலைகுத்தி  நின்றது.

ஒருவாறு  சமாளித்துக்கொண்டேன்  நான்.

“ நீ….  நீ……. மாலாதானே……? ”

பாதி  ஒலி  தொண்டைக்குள்ளேயே  புதைந்து  போனது.

ஒரு  கணத்துக்குள்  அவளின்  கண்கள்  பனித்துக்கொள்ள,  முகத்திலே  சோகம்  படர்ந்த  புன்னகையைத்  தவழ விட்டாள்.

அப்பப்பா…. நான்கு  ஆண்டுகளுக்குள்  எவ்வளவு  மாற்றம்…!

“நல்லாயிருக்கிறீங்களா  சார்….”

சந்தேகமில்லை.  அவளேதான்.  என்னை  நன்கு  அடையாளம்  கண்டுகொண்டாள்.            

அடித்திருந்தால்கூட  சமாதானம்  கொள்ளக்கூடிய  உள்ளம்,  அவளது  அன்பான  வார்த்தைகளால்  சுக்கு நூறாகி  வலித்தது.
இந்தவலியைவிட,  மோசமான  வலியை  அவர்களின்  குடும்பம்  என்னால்  பட்டுவிட்ட்து. காலங்காலமாக  வாழ்ந்த  ஊரைவிட்டு  இங்கு வர  நானும்  ஒரு 

காரணம்.

மனதுக்குள்   யாரோ  உதைப்பதை  உணர்ந்தேன்.

‘’நீங்க  இந்த  ஊரிலதான்  இருக்கீங்களா…? ராமேஸ்வரத்தில  உங்க வீட்டுக்குப்  போயிருந்தேன்…  ஊரைவிட்டுப்   போயிட்டதாக  தகவல்  மட்டுமே  கிடைச்சிச்சு…. 

இந்த  மூணு  வருசமா  நானும்  முயற்சிபண்ணி   உங்களைக்  கண்டுபிடிக்கப்  பாடுபட்டேன்… முடியல்ல…..”

அவள்  அமைதியாக  நின்றாள். சமாளித்துப் பேசினேன்.

“வீட்டில  அம்மா, அப்பா  எல்லாரும்  நல்லாயிருக்காங்களா….? “

இப்போது அவள்  என்னை  விழுங்கிவிடுவது  போல  பார்த்தாள்.

“அம்மா,அப்பா  பத்தி  விசாரிச்சீங்க…  சந்தோசம்…  ஆனா, கலா  அக்கா பத்தி எதுவுமே  கேக்கலியே…! “

பதில்  சொல்லாமல்  தலை   கவிழ்ந்தேன்.

இப்போது  அவளே  சிரித்துச்   சமாளித்தாள்.

“சரிசரி …. விடுங்க….  நான்  சும்மா  விளையாட்டா  பேசினேன்… அதுக்குப்போயி  எதையோ  துலைச்சமாதிரித்  தரையைப்  பாக்கிறிய….
உடனேயே  பதில்  சொன்னேன்   நான்.

‘’ஆமா… என்  வாழ்க்கையைத்  தொலைச்சிட்டேன்…  இப்போ  தேடிக்கிட்டிருக்கேன்….”

என்  கண்கள்  பனித்தன.

கலைந்துகிடந்த  வான்கூட்டம்  விலகி  வழிவிட  வெண்ணிலவு  சிறிது  எட்டிப் பார்த்தது. அந்த நேரத்திலும்  பனித்துளிகளுடன்  போட்டியாக  என் முகத்தில்  சிறிது 

வியர்வைத் துளிகள்.

கைக்குட்டையால்  முகத்தை  ஒற்றிக்கொண்ட  என்னிடம்  நீண்ட்தோர்  பெருமூச்சு  வெளிப்பட்ட்து.

ஆச்சரியமாக  என்னைப்  பார்த்தாள்  அவள்.

‘’தேடிக்கிட்டிருக்கீங்களா…  அப்பிடீன்னா….  இன்னும்  உங்களுக்கு… ‘’

அவள்  பேசிமுடிப்பதற்குள்…,

“இல்லை.. எதுவும் ஆகல….”  தரையை நோக்கி,  நொந்தபடி  தலையசைத்தேன்.

அவளின்  நெற்றியில்  விழுந்த  சுருக்கங்கள்,  நெஞ்சில்   எழுந்த  கேள்விக்குறியை   எனக்குப்  படம்பிடித்துக்  காட்டின.  புரிந்துகொண்டேன்  நான்.

‘’நீ  நினைக்கிறமாதிரி  இல்லை  மாலா…எத்தினையோ  கலியாணங்கள்  பேசி வந்தாங்க… வீட்டில  உள்ளவங்க  பெரியவங்க  எல்லாம்  எவ்வளவோ  போராடிப்பாத்து,

கடசில “எக்கேடாச்சும்  கெட்டு  ஒழிஞ்சுபோ”ன்னு  கைவிட்டே  ரண்டு  வருசத்துக்கு  மேலாச்சு…”

அவள்  முகத்திலே  கனிவு  தெரிந்தது.  விற்பனைக்காக  கூடையிலே  வைத்திருந்த  பொங்கல்  பொட்டலம்  ஒன்றை  எடுத்து  என்னிடம்  தந்தாள்.
தடுத்தேன்  நான்.

“தப்பா  நெனைக்காத  மாலா…. பஸ்சில  வந்துகிட்டிருக்கிறப்பவே  பழம் பன்னு,பிஸ்கட்டு, பிரெட்டு ன்னு  கஷ்டப்பட்டு மாறி,மாறி தின்னாச்சு…  இதில  பிரெட்டு, பிஸ்கட்டு ன்னு  மிச்சம் வேற கிடக்கு….இந்தா  பாரு…”

கூறியபடி,  எனது  தோளில்  தொங்கிக்கொண்டிருக்கும்  தோல்ப்பையை  எடுத்துத்  திறந்து  காட்டினேன்.

சிரித்தாள்   அவள்.

“ஒடம்புக்கு  கஷ்டம்  வந்திடாம  இருக்கிறத்துக்காகத்தான்  சாப்பிடுரோம் …. ஆனா சாப்பிடுறதையே  கஷ்டப்பட்டு  பண்ணினா, ஒடம்புக்கு  கஷ்டமாகிடும்  இல்லியா…. 

அதனால  இந்த  பிரெட்டு, பிஸ்கட்டு  பார்சல்  உங்களுக்கு  வேணாம்…. ”

தான்  ஒரு  பருவப்பெண்  என்பதையும்  மறந்து,  விளையாட்டுப் பிள்ளையாகப்  பேசியபடி, அந்தப்  பார்சலை  எடுத்துக்கொண்டாள். கையிலிருந்த பொங்கல் பார்சலை

உள்ளே வைத்தாள்.

“காலை டயிம்ல இந்தப் பொங்கலை சாப்பிட்டாலே தூக்கம் கண்ணைச் சொக்கும்…. இப்ப நைட்டுடைம்….. சொல்லவே வேண்டாம்….”  கூறியபடி சிரித்தாள்.

அவளின்  சிரிப்பைக் கண்டபோதுதான்   போன  உயிரே  வந்தது.

வானில்  பளிச்சென்று  பிரகாசித்தது  பெளர்ணமி. படர்ந்திருந்த  குளிருடன்  இப்போது  கலந்திருந்தது  தென்றல்.

அவளிடம்  வீட்டு  விலாசத்தைக்  கேட்டேன்.  செல்பேசி  இலக்கத்தைக்  கொடுத்தாள்.  பதிவு செய்துகொண்டேன்.

“மாலா…. பிரெண்டு  ஒருத்தனின்  கல்யாணம்,  சென்னையில  நாளைக்கு  காலையில  நடக்குது….  நாளக்கு  பொழுது அதிலையே கழிஞ்சிடும்….  நாளை  மறுநாள் 

அதிகாலையிலேயே  நான்  புறப்பட்டிடுவேன்….”

“வர்ரப்போ  போன் பண்ணிடுங்க….  நான்  வெயிட்  பண்ணுறேன்…”

“ஒகே….  ஒகே…..  அப்புறம்  இண்ணிக்கு  கல்யாணவீட்டு  அமளிங்க  முடிஞ்சதுக்கு அப்புறம்  நைட்டு  பத்துமணிக்கு  போன்  எடுப்பேன்….”

பேருந்தின்  சக்கரங்களோ  வரப்போகும்  இடங்களை   நோக்கி  வருடின.

என் – மனவூர்தின்  சக்கரங்களோ  முடிந்துபோன தடங்களை  நோக்கி  நெருடின.

[தொடரும்]

bairaabaarath@gmail.com