தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை (1)

முன்னுரை

நோயல் நடேசன்கோழிகள் ஒன்றுடன் ஒன்று கொத்தி யார் இந்த கூட்டத்தில் முக்கியமானவர் என்பதை நிலைநாட்டும். அதை பெக்கிங் ஓடர் (Pecking Order) என்போம். ஆனால், உணவில் உப்புக் குறைந்த போது அவை ஒன்றை ஒன்று கொத்திக் காயப்படுத்தும். அதை கனிபலிசம் (Cannibalism) என்போம்.  இரண்டும் வேறு வேறானவை தமிழ் இலக்கியப்பரப்பில் நாவல்களுக்கான வெளி கத்தாளைச் சாற்றைத் தடவியது போன்ற தரை. வழுக்கிக் கொண்டு செல்லக் கூடியது. சிறுகதை, கவிதை போன்றவற்றில் அந்தச் சிக்கல் இல்லை. கவிஞர்கள் சிறுகதையாளர் அல்லது கவிதைகள், சிறுகதைகள் என தீர்க்கமான இடம் உள்ளது. எந்தக் கவிதையையும் கவிதை இல்லை அல்லது சிறுகதை இல்லை எனச் சொல்லப்படுவது கிடையாது. நாவல்களில் இது நாவலே கிடையாது எனத் துணிந்து சொல்லப்படுகிறது. க. நா.சுப்பிரமணியம் நான் அக்காலத்தில் வாசித்த கல்கி, அகிலனது நாவல்களை எல்லாம் நாவல் இல்லை என்று சொன்னார். அதன் பின்பு அதை ஜெயமோகன் போன்றவர்கள் வழி மொழிந்தார்கள். இதே போல் நான் சிறந்தது என நினைத்தவற்றை பலர் இது நாவல் இல்லை எனச் சொன்னார்கள். சமீபத்தில் எஸ். ராமகிருஸ்ணன் வெங்கடேசனின் காவற்கோட்டையைக் குதறினார். இப்படியான வாதப்பிரதிவாதங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இலங்கையைச் சேர்ந்தவர்களிடமும் உள்ளது. விமல் குழந்தைவேலின் கசகரணம் கிழக்கு மாணத்தில் இருந்து வந்த நாவல். அதை வெளி வந்த சில காலங்களிலே சோபாசக்தி தகவல் தொகுப்பு என்றார். நான் எழுதிய வண்ணாத்திக்குளம், உன்னையே மையல் கொண்டு இரண்டையும் மேலோட்டமான எழுத்துகள் என மெல்பேனில் ஒருவர் கூறினார். கனடாவில் ஒரு பெண்மணி அதன் அறிமுக நாளிலே  தட்டையான எழுத்துகள் என வர்ணித்தார்.

வண்ணாத்திக்குளத்தை எழுதும்போது காதல் நாவல் எழுதுவதற்கு நான் முயற்சிக்கவில்லை. 80 – 83 வரை இலங்கையில் இருந்த காலத்தை வெளிக் கொண்டுவரவே எழுதினேன். ஆங்கிலத்தில் அந்தப் புத்தகம் வந்த போது திருமதி ராணி எலியேசர் ஒரு ஆயிரம் டாலரைத் தந்து நூறு புத்தகங்களை வாங்கித் தனது நண்பர்களுக்கு தமிழ் – சிங்கள முரண்பாட்டைப் புரிந்து கொள்ள உதவும் என அனுப்பிய போது எழுத்தாளனாக எனது நோக்கம் நிறைவேறியது என மகிழ்ந்தேன். அதேபோல் உன்னையே மயல்கொண்டு இலங்கைப் போரில் மனரீதியாக பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் கதையைச் சொல்லவே எழுதினேன் தமிழ்நெற் 83 கலவரத்தை சித்தரிக்கும் நாவலாக எழுதியது. இதன்மூலம் நான் நினைத்த விடயம் நிறைவேறியது. மேலும் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு பகன என்ற சிங்களப் பத்திரிகையில் தொடராக வந்தது. இப்படியான நிலையில் தமிழ் இலக்கிய பரப்பில் மீணடும் ஒரு நாவல் எழுத வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. என்ன செய்வது? எனது ஆன்மாவுக்காக எழுதுவது என்று வந்தால் மற்றவர்களைப் பற்றி கவலைப்படமுடியாது. நான் வேலை செய்த மிருக வைத்தியசாலையின் பின்னணியில் ஒரு நாவலை எழுத வேண்டுமென்ற எனது ஆவலை நிறைவேற்ற கடந்த மூன்று வருடங்களாக முயன்று அசோகனின் வைத்தியசாலை என்ற பெயரில் அதை எழுதினேன். நாவலைப் புத்தகமாக்கி வெளியிட்டு இது நாவலில்லை என்று சொல்லப்படுவதிலும் பார்க்க தற்போது வசதியாக இணையத்தில் பிரசுரிப்பது நல்லது என முடிவு செய்துள்ளேன். நான் சார்ந்த மிருக வைத்தியத்துறை தமிழர்களுக்குப் புதியது. அதைவிட இலக்கியத்தில் மருந்துக்கும் கிடையாது. இதற்கு முக்கிய காரணம் விஞ்ஞானம் படித்தவர்கள் தமிழில் எழுதுவது குறைவு. எழுதினாலும் தாங்கள் சார்ந்த துறையைப்பற்றி எழுதுவதில்லை. தமிழ் எழுத்துகள் இலக்கியத்திற்கு அப்பால் சென்று மருத்துவம், பொறியியல் என்று செல்லும்போதுதான் தமிழ் செழிக்கும். எனது நாவல் நான் வேலை செய்யும் வைத்தியசாலை என்ற தளத்தில் இருந்தாலும் முற்றிலும் புனைவானது. மெல்மேன் நகரத்தில் நடப்பதால் சில விடயங்கள் உண்மை போல் தெரிந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. இங்கு கதை சொல்லியைத் தவிர மற்றவர்கள் அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள். சில விடயங்கள் கலாசார அதிர்வுகளை தரக்கூடியவை. புலம் பெயர்ந்த எமது சூழ்நிலையில் நான் கண்டதை, புரிந்ததைத்தானே எழுதமுடியும். அசோகனினின் வைத்தியசாலை எனது தளத்திலும்(noelnadesan.com) பதிவுகளிலும்(pathivukal) வர இருக்கிறது.


 

அசோகனின் வைத்தியசாலை: முதலாம் பாகம்

1
தலைமறீன் ஏர்போட்டில் இருந்து பேண்ரீகலி கத்தோலிக்க தேவாலயத்தில் நடக்கும் மரணசடங்கில் கலந்து கொள்வதற்காக வேகமாக காரை ஓட்டிவந்தான் சுந்தரம்பிள்ளை.  ஓரு மணிநேரமாவது செல்லும் என நினைத்தவனுக்கு ஐம்பது நிமிட நேரத்தில் வந்தது ஒரு சாதனைதான் என நினைத்துக்கொண்டு காரை எங்கு நிறுத்தலாம் என பார்த்த போது தேவாலயத்தின் முன்பகுதியின் பாதையோரங்கள் ஏற்கனவே பலரால் கார் நிறுத்த பாவிக்கப்பட்டது தெரிந்தது. மரண ஆராதனைகள் தொடங்கியிருக்காது என்ற தனக்குள்ளே கூறிக்கொண்டு தேவாலயத்தின் பின்பகுதியல் காரை நிறுத்திவிட்டு ஆலயத்தை நோக்கி வேகமாக நடந்தான் சுந்தரம்பிள்ளை. தேவாலயம் பிரதான பாதையில் அமைந்துள்ளது. ஆலயவாசல் உயரமான யுகலிப்டஸ் மரத்தினால்  மறைக்கப்பட்டடிருந்தது. அதனது கிளைகள் வெயிலுக்கு நிழலாக இருந்தது. மரத்தின் ஆளுயரத் தாழ்வான கிளைகள் மின்சாரசபையால் வெட்டப்பட்டிருந்தது. அப்படி வெட்டிய கிளையில் மீண்டும் கொழுந்துகள் துளிர்க்கத் தொடங்கி இருந்தது. அந்த துளிரின் அருகில் சிறு இரண்டு மக்பைகள் சோடியாக இருந்தன. தலையை அசைத்தபடி அவைகள் ஒன்றோடு ஒன்று உரையாடுவது போல் தெரிந்தது. அவைகளுக்கு அருகில் பிரதான மரத்தில் சிக்காடா ஒன்றின் ரிங்காரம் காதைக் கிழிப்பது போல் இருந்தது. நிலத்தின் கீழ் வெளிவரும் இந்த பச்சை நிறமான வெட்டுப்பூச்சி வகையறாவைச் சேர்ந்த சிக்காடாவின் சத்தம் வாத்தியத்தின் சத்தம் போல் பலமாக இருக்கும். மக்பையும் சிக்காடாவும் கூட ஜோனின் மரண ஆராதனைக்கு வருகை தந்திருக்கின்றன.

ஆனால் இவை எல்லாம் மிசேலுக்கு ஆறுதலளிக்குமா? ஜோனினது நினைவுகளுடன் உள்ளே நுளைந்த போது தேவாலய மேடையருகே நின்ற மிஷேல் கண்ணுக்குத் தெரிந்தாள். கருமையான உடையணிந்து போதகருடன் ஏதோ பேசி கொண்டிருப்பதாக தெரிந்தது. தேவாலயத்தின் உள்ளே நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இருப்பது அனுமானிக்க முடிந்தாலும் வைத்தியசாலையை சேர்ந்தவர்கள் இருக்கிறார்களா என கவனமாக மீண்டும் பார்த்த போது வைத்தியசாலையை சேர்ந்தவர்கள் இடது பக்கத்தில் ஏற்கனவே வந்து அமர்ந்திருக்கிறார்கள் என்பது தெரிந்ததும் மெதுவாக உள்ளே சென்று காலோஸ்சின் பக்கத்தில் இருந்த காலி இடத்தில் அமர்ந்துகொண்டான் சுந்தரம்பிள்ளை.

மரண ஆராதனைகள் எப்பொழுதும் கசப்பானவை. இது மிகவும் வேதனையான மரணம். இதே தேவாலயத்தில் நான்கு வருடங்கள் முன்பு ஜோனின் திருமணத்திற்கு சென்றதும் திருமணத்தின் பின்பு தம்பதிகளாக அவனும் மிஷேலும் தேவாலயத்தின் முன்னால் உள்ள யூகலிப்ரஸ் மரத்தின் கீழ் ஒன்றாக படம் புகைப்படம் எடுத்துக்கொண்டது இன்றைக்குப் போல் இருக்கிறது. அது ஒரு வசந்தகாலத்து காலை நேரம்.மெதுவான குளிருடன் வீசிய காற்றில் சுற்றி இருந்த டண்டினேங் மலைபிரதேசத்து நறுமணங்கள் நிறைந்து இருந்தது. இயற்கையின் ரம்மியமான சூழலில் புன்னகையை எங்கும் தூவியபடி நிலத்தை தழுவும் வெள்ளைக் கல்யாண உடையில் வானத்தில் இருந்து வந்த தேவதை போல் பூத்து குலுங்கிய வெள்ளை ரோஜா செடியாக அலங்காரத்துடன் ஜோன் அருகில் நின்று ஒவ்வொருவரையும் புகைபடத்திற்கு அழைத்து கொண்டு நின்றவள் இப்பொழுது கறுப்பு உடையில் அவனருகே விம்மியபடி நின்றாள். ஜோன் உயிரற்ற உடலாக அந்த பெட்டியுள் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தான். மிஷேலுக்கு நடந்தது எந்த விதத்தில் பார்த்தாலும் அநியாயமாகப்பட்டது. இவ்வளவு அவசரமாக அவள் விதவையாக்கப் பட்டிருக்கிறாள்.விதி, தெய்வம் ,நோய் என்று அவரவர் நம்பிக்கைப்படி காரணங்கள்  மனத்தில்  தோன்றினாலும் சுந்தரம்பிள்ளையின் இதயம் தண்ணீரில் போட்ட வெல்லக்கட்டியாக மாறியது. காலோஸ் கையில் தட்டி

‘ஏன் வேலையை விட்டாய்?’

 ‘நான் எதற்காக வேலையில் சேர்ந்தேனோ அந்த விடயம் நிறைவேறியவிட்டது’

‘அதென்ன?’

‘இலங்கையில் இருந்து இங்கு வந்த போது எந்த இடத்திலும் வேலை செய்வதற்கு என்னை தயாராக்குவது எனது நோக்கமாக இருந்தது. புதிய நாட்டில் மற்றவர்களை நம்பாமல் என்னை மட்டுமே நம்புவதற்கு இந்த அனுபவம் போதுமானது. ஐந்து வருடம் வேலைசெய்ததனால் இனி எங்கும் வேலை செய்வதற்கு என்னைத் தயாராக்கியது’

‘நீ செய்தது சரி நானும் எப்போதோ விலகி இருக்க வேண்டும்.’

‘ நான் சொந்தமாக தொழில் செய்ய முடிவு செய்து விட்டேன்’

மதகுரு தனது பேச்சை தொடங்கினார்.

‘எங்கள் ஜோன் மிகவும் கண்ணியம் நேர்மை கொண்டவர். அவரை மிஷேல் மணந்து கொண்டபோது இந்த தேவாலய குடும்பத்தினர் அளவு கடந்த மகிழ்சி கொண்டோம். ஆனால் இவ்வளவு விரைவாக ஜோனை இந்த உலகத்தில் இருந்து அழைத்துக் கொள்வார் என்பது எவருக்கும் ஜீரணிக்க முடியாது. ஆனாலும் பிதா தனக்கு மிகவும் பிரியமானவர்களை தன்னிடம் அழைத்துக்கொள்கிறார்……….

சுந்தரம்பிள்ளையால் மதகுருவின் பிரசங்கத்தை பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. அரைத்த மாவை அரைப்பது போல் இருந்தது அவரது பேச்சு. அருகில் இருந்த காலோஸ் கத்தோலிக்க மதத்தை மிகவும் நம்பிக்கை கொண்டவன்.  தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு  மதகுருவின் பிரசங்கத்தை கேட்டுக்கொண்டிருந்தான். மரணசடங்கு நடக்கும் இடத்தில் இருந்து இடையில் வெளியேறுவது நாகரீகமாக இருக்காது. வேலையில் இருந்து விலகிய காரணத்தை இலகுவாக காலோஸ்க்கு சொன்னாலும் வைத்தியசாலையை விட்டு விலகிய காரணம் எது என்பது அவனுக்கே புதிராக இருந்தது.

ஷரன் விலகி சென்றதா?

இல்லை.

கொலையாளியை தண்டனையில் இருந்து தப்ப உதவியதா?

வைத்தியசாலையின் சுந்தரம்பிள்ளையின் ஐந்து வருட நினைவுகள் மெதுவாக மனத்தில் நகர்ந்தன.


மெல்பன் நகரில் அமைந்துள்ள மிருக வைத்தியசாலை ஒரு விதத்தில் மகத மன்னன் அசோகன் உருவாக்கிய வைத்தியசாலை போன்றது. புத்த சமயத்தை தழுவிய அசோகன் பிரயாணத்தில் களைத்த மிருகங்களுக்கு இழைப்பாறவும் நோய் கண்ட மிருகங்களை மருத்துவம் பார்க்கவும் தனது ஆணைக்கு உட்பட்ட பிரதேசமெங்கும் மிருக வைத்தியசாலைகள் உருவாக்கியதாக சரித்திரம் கூறுகிறது. அந்த கோட்பாட்டில் மெல்பேனில் உருவாக்கப்பட்ட இந்த மிருக வைத்தியசாலை எந்த நோயுற்ற விலங்குகளினதும் பிணி தீர்க்கும் இடம் என பலரால் சொல்லப்பட்டதாலும் மிருக வைத்தியத்தின் சகல நுட்பங்களையும் அங்கு பணியாற்றி அனுபவத்தில் தெரிந்து கொள்ளமுடியும் ஒரு போதனாவைத்தியசாலை போன்றது என பலர் கூறியதனாலும் அங்கு வேலைக்கு விண்ணப்பித்திருந்தான் சிவநாதன் சுந்தரம்பிள்ளை.

இலங்கையில் முப்பது வருடப் போர் பல தமிழர்களை புட்டுக்குழலில் இருந்து புட்டுத்தடி புட்டுகளை வெளித் தள்ளுவது போல் சொந்தமான வாழ்விடங்களில் இருந்து தள்ளிவிட்டது. அதனால் வாழ்விடங்கள், வாழ்க்கைப் பாதை மற்றும் கலாச்சார அடையாளங்களை மட்டும் மாற்றவில்லை. மனிதர்களின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றான திருநாமத்தையும் மாற்றி குறுக்கி அழித்து குழந்தைகள் வெட்டித்தள்ளிய கடுதாசித்தாளாக பல வடிவங்களாக்கியது. மேற்கத்தைய கலாச்சாரத்தைக் கொண்ட நாடுகளில் இருந்து வந்திறங்கியவர்கள், தங்களது நாமங்கள் வந்தேறிய நாட்டினரது வாய்களில் சுலபமாக நுழைந்து நாக்கில் வெளிவர வேண்டியதை கருத்தில் கொண்டு தாங்களாகவே புதிய ஞானஸ்தானம் எடுத்து சிறிய பெயரை சூட்டிக்கொண்டார்கள். இதை ஞானஸ்தானம் என சொல்வதின் காரணம் பெரும்பாலான பெயர்கள் கிறீஸ்தவ பெயர்கள். ஆனால் பாதிரிமாரின் பங்கில்லாமல் இலங்கைத் தமிழர் மத்தியில் கிறிஸ்துவ சமயம் வளர்ந்தது. இந்தப் பெயர் மாற்றம் ஒரு விதத்தில் இவர்களின் கலாச்சார மாற்றத்தின் முதல் படியாக அமைகிறது. வந்து குடியேறிய நாடுகளின் கலாச்சார சமுத்திரத்தில் கலந்து கரைந்து விட இலகுவாகிறது. இப்படித்தானாக மாற முரண்டு பிடித்தவர்களுக்கு வேலைத்தலங்களில் உள்ளவர்கள் புதிய பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். ஆனால் சுந்தரம்பிள்ளையின் மகனான சிவநாதன் மெல்பன் ஏர்போட்டில் வந்து இறங்கியபோது அவுஸ்திரேலிய சுங்க அதிகாரிகள் சிவநாதன் சுந்தரம்பிள்ளையாக்கி விட்டார்கள். சிவநாதனை சுருக்கி சிவா சுந்தரம்பிள்ளையாக அழகு படுத்தியவர்கள் பிற்காலத்தில் வேலைகளை தேடி செல்லும் காலத்தில் சந்தித்த மனேஜர்கள். இந்தப் பெயர் மாற்றம் அவர்களுக்கு இலகுவாக இருந்தது. முழுப் பெயரையும் கஷ்டப்பட்டு உச்சரித்து வேலை காலி இல்லை என்பதைவிட ‘சிவா மன்னிக்கவேண்டும்’ என்று சொல்லுவது நிட்சயமாக அவர்களுக்கு வசதியாக இருந்தது சுந்தரம்பிள்ளை தங்கி இருக்கும் புறநகர் மெல்பனின் கிழக்குத் திசையில் இருபத்தைந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அந்தப் பகுதியில் இருந்து மெல்பன் நகரத்தின் மத்தியில் அமைந்திருக்கும் அந்த மிருக வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டுமானால் மின்சார இரயிலில் மெல்பன் நகருக்குச் சென்று அங்கிருந்து மின்சார ட்ராமும் எடுக்க வேண்டும். காலையில் எழுந்து வேலைக்கான நேர்முகத்திற்கு போக வேண்டும் என்ற நினைவு இரவு முழுவதும் சப்பாத்துக்குள் விழுந்த சிறுகல்லாக துருத்தியபடியே இருந்ததால் இரவு நித்திரை தொடர்ச்சியாக இருக்கவில்லை. பல முறை எழுந்து கடிகாரத்தை பார்த்த போது ஒவ்வொரு முறையும் கடிகாரம் மெதுவாக ஓடுவதான உணர்வைக் கொடுத்தது. அதனால் வைத்த அலாராம் சரியாக வேலை செய்யுதா என மீண்டும் சரி பார்த்துவிட்டு இருமுறை படுத்தான்.
அன்றய காலைவேளை எவரது அவசரத்தையும் பொருட்படுத்தாமல் திரைச்சீலை மூடி இருந்த கண்ணாடி யன்னலின் இடைவெளிகள் ஊடாக மெதுவாக எட்டிப் பார்த்தது.

அந்த நேரத்தில் கடிகாரம் ஆறரை மணியாகியது. மேல்பேனில் வசந்தகாலம் குளிராகவும் தாமதமாகவும் சூரியனை வெளிகாட்டும். குளித்து வீட்டைவிட்டு வெளிக் கிளம்பியபோது காலை ஏழரை மணியாகியதால் கிழக்கை நோக்கிய அந்த வீட்டில் முற்றத்தில் நல்ல வெளிச்சமாக இருந்தாலும் வானத்தில் சூரியனைக் வெளிக்காட்டாமல் மேகங்கள் ஒளித்து வைத்துக்கொண்டிருந்தன. ஈரலிப்பான அந்த சூழலில் வெளியே இரயில் நிலயத்தை நோக்கி நடந்தபோது காற்றின் மிதக்கும் நீர்துளிகள் உடையில் படிந்து ஈரமாவது போன்ற உணர்வைக் கொடுத்தது. பொக்சில் என்ற அந்த புறநகரத்தில் இரயில் நிலையம் ஐந்து நிமிடம் நடக்கும் தூரத்தில் உள்ளது. அவசரமாக  மற்றவர்களோடு சேர்ந்து நடந்து பிளாட்பாரத்தை அடைந்தபோது இரயில் வரச் சரியாக இருந்தது. மின்சார இரயில் ஏறி இருக்கையில் இருந்து கொண்டு தன்னைச் சுற்றி இருப்பவர்களின் உடை அலங்காரத்தை பார்த்துக் கொண்டான். இலங்கையில் இருக்கும் வரையில் உடையலங்காரத்தில் விசேடமாக கவனம் செலுத்தியது கிடையாது. ஆறடிக்கு இரண்டு அங்குலம் குறைந்த உயரத்துடன் சிவப்பு நிறத்தில் பாடசாலைக்காலத்திலே சராசரியிலும் மேலான அழகான தோற்றம் இயற்கையாக இருந்தால், உடையலங்காரத்தில் அதிகம் கவனித்தது கிடையாது. அத்துடன் காதலி வேலை என்பன இலங்கையில் இலகுவாக கிடைத்தது. புலம் பெயர்ந்தபின் அவுஸ்திரேலியாவில் நிலைமை மாறிவிட்டது. வேலை தேடிய செல்லும் போது நாகரிகமாக வெள்ளைக்காரர் போல் செல்ல வேண்டும் என்று பலர் சொன்னதால் வேறு வழியில்லை. ஆனால் இது இலகுவான காரியமாக இருக்கவில்லை. கோட்டும் சூட்டும் அணிந்து ரை கட்டியபடி நேர்முகப்பரீட்சைக்கு செல்லும் போது சட்டை, ரை அத்துடன் சப்பாத்து என்பன பொருத்தமாக இருககவேண்டும் இலங்கையில் திருமணத்தன்று மட்டும் கோட்டு போட்டு ரை கட்டியது. அதன்பின் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயரும்போது சூட் அணிந்தது நினைவுள்ளது. இப்படியாக இருந்த நிலைமை மாறி ஒவ்வொரு முறையும் வேலை தேடிப் போகும் போது சூட் அணிந்து ரை கட்டவேண்டிய நிலை வந்தது. இதனால் சில பிரச்சினைகள் எழுந்தன. அதில் முக்கியமாக அணிந்த சேர்ட்டுக்குப் பொருத்தமான கலரில் ரையை தேட வேண்டும். இந்தப் பிரச்சினையை தவிர்க்க தொடர்ச்சியாக வெள்ளைச் சட்டையை அணிவதையே வழக்கமாகக் கொண்டிருந்த சுந்தரம்பிள்ளைக்கு, தனது உடைகள் செயற்கையாக இருப்பது போன்ற உணர்வு வந்து இயற்கையற்ற தன்மையை உடலில் உருவாக்கிவிட்டது. இந்த உணர்வு வந்ததும் தன்னைச் சுற்றி இருக்கும் மற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள் என ஆராய வைக்கும். மெல்பன் நகரத்தை நோக்கி வேலைக்கு செல்பவர்களை தன்னுள்ளே அடைத்துக் கொண்டு செல்லும காலை நேரத்து இரயில் என்பதால் பலர் சுந்தரம்பிள்ளை போன்று சூட் அணிந்தபடி இருந்தார்கள். பல இன மக்களைக் கொண்ட இந்த நகரத்தின் தன்மையை இந்த இரயிலில் பிரயாணம் செய்பவர்களும் பிரதிபலிப்பதார்கள். இந்திய ,சீன, ஐரோப்பியர் என சகல இனத்தவரும் இருந்தது ஒரு விதத்தில் ஆறுதலாக இருந்தது.

ஒரு இடத்தில் இருக்கும் போது அன்னியன் போல் இருப்பது எவருக்கும் மனதுக்கு உவகையாக இருப்பதில்லை. வேலைத் தலத்துக்குச் செல்லும் ஆண்கள் கைகளிலும் மடிகளிலும் பிரீவ் கேசுகளையும் பெண்கள் கைப்பைகளையும் மடியில் வைத்தபடி அமர்ந்திருந்தார்கள். மிகக் குறைந்தவர்களே இடம் கிடைக்காமல் நின்றார்கள். அந்த மின்சார இரயில் பெட்டியுள் பல்கலைக்கழக மாணவர்கள் முதுகில் தொங்கிய பைகளுடன் தனித்துத் தெரிந்தார்கள். அவர்களது கவலையற்ற கண்களும் இளைமையான முகங்களும் கடந்து சென்ற இளமைப் பருவத்தை சுந்தரம்பிள்ளைக்கு நினைவு படுத்தத் தவறவில்லை. சுந்தரம்பிள்ளைக்கு முன்பாக சீட்டில் இருந்த இளம் பெண் தனது கைப்பையில் இருந்து சிவப்பு ஸ்ரிக்கையும் சிறிய கண்ணாடியையும் எடுத்து உதட்டு சாயத்தை பூசிவிட்டு மீண்டும் உதட்டை திருப்தியுடன் பார்த்துக் கொண்டாள். இப்பொழுது அவளது உதட்டின் பளபளப்பில் அவளது கண்ணாடி தன் முகம் பார்த்தது. சுந்தரம்பிள்ளையின் சீட்டில் யன்னல் அருகே இருந்தவர் அன்றைய த ஏஜ் தினசரியில் தன்னை பலவந்தமாக புதைத்துக்கொண்டிருந்தார். அந்த அகலமான பத்திரிகை பக்கத்தில் இருந்தவர்களுக்கு சொந்தமான இடத்தையும் அடைத்துக் கொண்டிருந்தது. அகலமான பத்திரிகைகள் இரயில் பிரயாணத்திற்கு ஏற்றவையல்ல. முன்னாலும் அருகிலும் அமர்ந்தவர்களின் வெளிகளை ஆக்கிரமித்துக்கொள்கிறது. அந்தப் பத்திரிகையின் ஆக்கிரமிப்பில் இருந்து சிறிது விலகி ஒரு மாணவன் தனது பாடப் புத்தக்தை பிரித்து மடியில் வைத்து படித்துக் கொண்டிருந்தான். அவனது புத்தகம் சிவாசுந்தரம்பிள்ளையின் கையை இடித்தபோது மெதுவாக திரும்பி மன்னிப்புக் கேட்டான். இலங்கையில் இருந்து குடியேறிய சுந்தரம்பிள்ளைக்கு அவுஸ்திரேலியாவில் மிகவும் பிடித்த இரண்டு விடயங்கள் தன்னால் மற்றவருக்கு அசௌகரியம் ஏற்பட்டால் உடனே மன்னிப்பு கேட்பது. அறிமுகம் அற்றவர்களையும் எப்படி இருக்கிறீர்கள் என நலம் விசாரிப்பது. இந்த நாட்டின் நல்ல விடயங்களை புரிந்து கொண்டாலும் அதை அனுபவிப்பதற்கு காலம் நேரம் வேண்டும். குடிவந்தர்களுக்கு செய்வதற்கு வேலை ,குடும்பத்துடன் இருப்பதற்கு வீடு என்று அமையும்வரை இந்த நாட்டின் சிறப்புகளை சந்தித்தாலும் அனுபவிக்க மனம் வராது. மெல்பன் அழகான நந்தவனங்கள் கடற்கரைகள் நிறைந்த நகரம். இங்கு செல்வதற்கு எவரும் பணம் வசூலிப்பது கிடையாது. ஆனால் இதை அனுபவிப்பதற்குஅழகியல் கொண்ட அமைதியான மனநிலை வேண்டும். சிவா சுந்தரம்பிள்ளை மனதில் சுய பச்சாதாபம் கடல் அலை தொடர்ச்சியாக கரையில் வந்து குதித்து மெதுவான சத்தத்துடன் மீண்டும் பின் வாங்குவது போல் மனதை அலைக்கழித்தது. இரயிலில் உள்ள எல்லோரும் ஏதோ வேலைக்காக சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மத்தியில் தான் மட்டும்தான் வேலை தேடிச் செல்பவன் என அவனுக்கு நினைப்பு வந்தது. இந்த நினைவுகளில் மூழ்குவதும் மீள்வதும் ஒரு பொழுது போக்காகவே பீடித்துக்கொண்டதோ என சிலகாலங்களாக சந்தேகம் வந்துவிட்டது. கோடைகாலத்தில் எருமை மாடு சேற்றில் உழன்று உடல் சூட்டை குறைப்பது போன்றதாகி விட்டது. இப்படிப் போனால் சுயபச்சாதாபம் போதை வஸ்துப் போல் மாறக் கூடும் என்ற உணர்வு சிவப்பு விளக்காக அச்சமூட்டியது. இந்த சுயபச்சாதாபம் மனிதர்களுக்கு மட்டுமல்ல இனங்களுக்கே ஏற்படக் கூடியது. சில இனங்கள் தொடர்ச்சியாக பழி வாங்கப்பட்டன என அரசியல்வாதிகளால் தொடர்ச்சியாக கூறப்படும்போது இந்த மன உணர்வு தேசிய உணர்வாக மாறிவிடுகிறது. இவைகளைப் புரிந்து அறிந்து கொள்ள பகுத்தறிவு உதவினாலும் பலர் மனஉணர்வுகளின் கைதியாக ஆகிவிடுவது தவிர்க்க முடியாதது. ஆறு மாதத்திற்கு முன்பு அடிலைட்டிற்கு இருநூறு கிலோ மீட்டருக்கு அப்பால் தென் அவுஸ்திரேலியாவில் உள்ள சிறிய நகரத்தில் சுந்தரம்பிள்ளை வேலை பார்த்தான். டொக்டர் சிலேட்டரின் கிளினிக்கில் உதவி வைத்தியர் பணி. சிலேட்டரின் மனைவியும் மிருக வைத்தியராக இருந்தபோதிலும் வேலை செய்வதில்லை. சுந்தரம்பிள்ளைக்கு வைத்திய வேலை புதிய இடத்தில் ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும் சமாளிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் திருமதி சிலேட்டரின் அதிகாரம்தான் தாங்க முடியவில்லை. இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் பணிப்பதும் பின்னர் வேலை முடிந்ததும் குறை சொல்லுவதுமாகவே அவள் இருந்தாள்.

ஒரு நாள் சுந்தரம்பிள்ளையால் தாங்க முடியவில்லை. டொக்டர் சிலேட்டரிடம் முறையிட்டான்.

‘எனக்குத் தரப்பட்டவேலையை நான் செய்து முடிப்பதற்கு முன்பு மீண்டும் அதை செய்யுமாறு சொல்ல வேண்டிய தேவை இல்லை. நான் மேலாளர் இல்லாமல் வேலை செய்து பழக்கப்பட்டவன். உங்கள் மனைவியின் அதிகாரம் என்னை மூச்சுத் திணற வைக்கிறது.’

டொக்டர் சிலேட்டர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். நகைச்சுவையாக ‘நானும் இந்த மேலாதிக்கத்தில் பத்து வருடங்களுக்கும் மேலாக துன்பப்படுகிறேன். அவள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில்தான் எனக்கு சற்று நிம்மதியாக இருக்க முடிகிறது. இதன் விளைவுதான் எங்களுக்கு நான்கு குழந்தைகள்’ சிரித்தபடியே சொன்னார்.

‘அது உங்களுக்குக் கிடைத்த ஆயுள் தண்டனை. அதை நீங்கள் விரும்பி ஏற்றுக்கொண்டீர்கள். எனக்கு அப்படி இல்லைதானே?. நான் வேலையை விட்டு விடுகிறேன்’ எனக்கூறிய போது, அவர் ‘என்னால் வேலையை விடமுடியாது. நல்ல இடத்தில் உமக்கு வேலை கிடைப்பதற்கு எனது வாழ்த்துகள்’. எனச் சொன்னார். சிவா சுந்தரம்பிள்ளை ஒருமாதத் தவணையில் வேலையை இராஜினாமா செய்தான்.

[தொடரும்]

uthayam@optusnet.com.au