தொல்காப்பியர் யார்?

தொல்காப்பியர் தொல்காப்பியத்தின் தொன்மையை அறிய முயல்வதிலிருந்து தொல்காப்பியர் யார் என்ற விடையத்தை தேட இக்கட்டுரையில் முயல்கிறோம். தொன்மை என்றதும் கி.பி ஒன்றா அல்லது கி.மு.இருபத்தொன்றா என்ற ஆய்விற்குள் செல்லவில்லை. மாறாக இலக்கிய அறிவியலில் விளக்கப்பட்டுள்ள மனித வரலாற்று படிநிலை எட்டினுள் தொல்காப்பியர் எந்தச் சமூகக் கட்டத்தில் உருவெடுத்த சிந்தனையாளர் என்பதை அறிய முயல்கிறோம்.

1.காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)
2.வேட்டை நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)
3.கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
4.விவசாய நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
5.உற்பத்தியின் மீதான வணிக நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
6.வணிக இலாபத்திற்காக உற்பத்தி செய்தல் (தந்தை அதிகார சமூகம்)
7.நிதி மூலதனப் பிரிவு தோன்றி சமூகஉற்பத்தி மீது ஆதிக்கம்  செய்தல் (தந்தை அதிகார சமூகம்)
8.மக்கள் தலைமையின் கீழ் சமூகஉற்பத்தியைக் கட்டமைத்தல் (ஏற்றத்தாழ்வு மதிப்பிழந்த சமூகம்)

வணிக இலாபத்திற்காக உற்பத்தி செய்தல் என்ற ஆறாம் கட்டச் சமூகத்தின் முதிர்ச்சியில் வாழ்ந்த சார்லஸ் டார்வின் உயிரினங்களின் பரிணாமக் கொள்கையை அறிவியல் பூர்வமாக விளக்கியவர். குரங்கு இனங்களிலிருந்து மனித இனம் உயிரியல் பரிணாமக் கொள்கை அடிப்படையில் எப்படி படிமலர்ந்தது என்பதை அவரது ஆய்வு விளக்குகின்றது. தொல்காப்பியரோ அறிவின் பரிணாமக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு உணர்த்துகிறார்.

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே (தொல்.1526)

தொல்காப்பியர் மனனே என்று குறிப்பிடுவது மனித இனம் எண்ணங்களைச் சிந்தனை உழைப்பில் ஈடுபடுத்துகின்ற வினையே என்பதை விளக்குவதற்கு அவசியம் இல்லை எனக் கருதுகிறேன். டார்வினுக்கு முன்பே இத்தகைய விளக்கத்தை வழங்கிய தொல்காப்பியர் எந்தச் சமூகக் கட்டத்தைச் சேர்ந்தவர் என்பதே நாம் தேட முயல்கின்ற விடயமாகும்.

பொருளதிகாரத்தின் மரபியலில் பிறப்பால் உயர்வு தாழ்வை நடைமுறைப்படுத்தும் நான்கு வர்ணப் படிநிலையின் சாயலுடன் அந்தணர், அரசர், வைசியர், வேளாளர், இழிந்தோர் என்பதாகச் சமூகத்தினை வகைபிரித்து விளக்குகின்றார்.

நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயம் காலை அந்தணர்க்கு உரிய (தொல்.1570)

படையும் கொடியும் குடையும் முரசும்
நடை நவில் புரவியும் களிறும் தேறும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய (தொல்.1571)

வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை (தொல்.1578)

வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி (தொல்.1581)

அன்னராயினும் இழிந்தோர்க்கு இல்லை (தொல்.1584)

சாதிப்படிநிலையின் கருத்தியல்கள் தொல்காப்பியத்தில் இடம்பெற்றிருப்பதை கருதும்போது, தமிழ்ச் சமூகத்தில் சாதிப்படிநிலை தோன்றிய காலத்தைச் சேர்ந்தவர் தொல்காப்பியர் என்ற முடிவிற்கு வர இயலுமா? அதாவது உற்பத்தி மீதான வணிக நாகரிகம் வளர்ச்சிபெறத் தொடங்கிய ஐந்தாம் சமூகக் கட்டம் எனலாமா?

சாதி என்பது

வணிக சமூக வளர்ச்சியைத் தடுத்து நிலப்பிரபுத்துவ சமூகம் நீடிப்பதற்காக ஆரியர்கள் உருவாக்கிய நான்கு வர்ணக் கொள்கைகளை அரசர்கள் ஏற்று மக்களிடம்  சூழ்ச்சிகளால் நடைமுறைப்படுத்திய சதி. (புதியவன்.2019)

தொல்காப்பியர் ஐந்தாம் சமூகக் கட்டத்தைச் சேர்ந்தவர் என்பது உண்மையென்றால் தொல்காப்பியர் தொன்மையானவர் என்பது பிழையல்லவா. இந்தப் பிழையை நீக்க தொல்காப்பியத்தைச் சற்று நவீன காப்பியந்தான் என்று மாற்றி விளக்க நேரிடுமல்லவா.

அறிவின் பரிணாமக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஆறறிவு மனித இனத்தை விளக்கிய தொல்காப்பியரால் அறிவிற்கு பொருத்தமற்ற சாதிப்படிநிலையை எப்படி விமர்சனமின்றி விவரிக்க முடிந்தது? புலன்களின்றி அறிவில்லை என்ற பொருள் முதல் வாத அறிவியல் தத்துவத்தை உணர்த்துகின்ற தொல்காப்பியரால் பிறப்பால் உயர்வு தாழ்வு போதிக்கும் சாதிப்படிநிலையை அங்கீகரிக்க முடிந்தது எப்படி?

இவரால் அங்கீகரிக்க முடிந்தது உண்மையெனில் இவர் யார்? சாதியால் சுய இலாபத்தை அனுபவித்த ஆரியப்பார்பனரா அல்லது நிலவேந்தர்களின் பிரதிநிதியா, அல்லது வணிக வர்க்கத்தின் பிரதிநிதியா? யார் தொல்காப்பியர்? சாதிப்படிநிலை என்றச் சமூகப் பிழைக்கு தொல்காப்பியரும் உரிமையுடையவரா என்பதை மேலும் ஆராயலாம்.

தொல்காப்பிய பொருளதிகாரத்தின் மரபியல் பகுதியின் உள்ளடக்கத்தைச் சற்று தொகுத்துப் பார்க்கலாம்.

“இளமைப் பெயர்கள் – ஆண்பால் பெயர்கள் – பெண்பால் பெயர்கள் – பார்ப்பு, குட்டி, பறழ், குருளை, குட்டி, பிள்ளை, மறி, மகவு, கன்று, குழவி, பிள்ளை, முடிபு – உயிர்ப் பாகுபாடு – ஆண்பால் பெயர்கள் களிறு, ஒருத்தல், ஏறு, போத்து, இரலை, கலை, மோத்தை, தகர், உதள், அப்பர், சேவல், ஏற்றை, முடிபு – பெண்பால் பெயர்கள் பிடி, பெட்டை, பேடை, பெடை, அளகு, பிணை, பிணவு, பிணவல், ஆ, பிணா, நாகு, மூடு, கடமை, பாட்டி, மந்தி சில வழக்குகள், முடிபு– —

அந்தணர்க்கு உரியவை – அரசர்க்கு உரியவை – அரசுரிமை – வணிகர் – வேளாளர் – இழிந்தோர்

––ஓரறிவுயிர் வகை – புல்வகை – மர வகை – உலகத்தோற்றமும் வழக்கும் – மரபின் முதன்மை – மரபு தோன்றும் முறைமை – நூல் இருவகை – நுலின் தன்மை – நூற்பாவின் இயல்பு – காண்டிகை – உரை – வழிநூலின் குறைபாடு – முதனூலின் சிறப்பு – வழிநூலில் குறை ஏற்படும் நிலை – நூலின் குற்றங்கள்” என்பதாக மரபியல் முடிகின்றது. (சுப்பிரமணியன்,ச.வே.,2016:584-621)

இந்த உள்ளடக்கங்களை கவனித்தால் புறவுலகப் பொருட்களை மக்கள் காலங்காலமாக எப்படி பெயரிட்டு அழைத்துள்ளார்கள். இளமை, ஆண், பெண் என்பதாக எப்படியெல்லாம் பிரித்து பெயரிட்டுள்ளார்கள். விலங்கினங்களின் பெயர்களில் தொடங்கி புல், செடி, மரப் பெயர்களாக விரிவடைகின்றது. பிறகு, உலகம் எப்படி உருவாகியிருக்கிறது என்பது விளக்கப்படுகின்றது. மேலும், மரபான அறிவிற்கும் நூலறிவிற்கும் இடைப்பட்ட உறவு விளக்கப்படுகின்றது. இறுதியாக நூல் அமைப்பு பற்றி விளக்கப்படுகின்றது.

இவற்றில் பெண்பால் பெயர்களுக்கும் ஓரறிவுயிர் வகைக்கும் இடையில் எதற்காக சாதிப்படிநிலை குறித்து விளக்கப்படுகின்றது. சாதிப் படிநிலை குறித்து எதற்காகப் பொருத்தமற்ற இடத்தில் விளக்குகின்றார். தான் வாழ்ந்த காலத்தின் நடைமுறையாக சாதிப்படிநிலை இருந்திருந்தால் புறத்திணையியலிலேயே தொல்காப்பியர் விளக்கியிருப்பாரல்லவா. மேலும், தமது நூலின் பல்வேறு சூழல்களில் நான்கு வர்ணப் படிநிலையைப் பெரிதும் பிரதிபலித்திருப்பாரல்லவா. தொல்காப்பியரின் ஆழ்மன உணர்நிலையிலிருந்தும் அறிவு நிலையிலிருந்தும் ஏன் இத்தகைய பிரதிபலிப்புகளைக் காண இயலவில்லை. ஏனெனில் சாதிப்படிநிலைக்கும் தொல்காப்பியர் வாழ்ந்த காலத்திற்கும் தொடர்பே இல்லை. எனவே, நாம் உறுதியாகக் கருதலாம். நான்கு வர்ணம் குறித்த இத்தகைய நூற்பாக்கள் தொல்காப்பியரால் விளக்கப்பட்டவை அல்ல. மாறாக, தொல்காப்பியர் அல்லாதவரால் பிற்காலத்தில் செருகப்பட்டவை.

இத்தகையச் செருகலை நீக்கி படித்தால் தொல்காப்பியரின் நூற்பாக்கள் பொருத்தமான தொடர்ச்சியுடன் இடம்பெற்றிருப்பதை அறிய முடிகின்றது. இடைச்செருகலை இணைத்தே படிக்க முயன்றால் நூற்பாக்கள் ஒன்றோடொன்று முரண்படுகின்றன.

நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்
திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும் (தொல்.1589)

சதுர் வர்ணம் மயா சிருஷ்டி என்ற நான்கு வர்ணக் கொள்கையை ஏற்பவரால் ஐம்பூதங்கள் கலந்த மயக்கமே உலகம் என்ற அறிவியல் தத்துவ அடிப்படையிலான நூற்பாவை இயற்றியிருக்க முடியாது.

மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை
மரபு வழிப்பட்ட சொல்லினான (தொல்.1590)

அந்தணர், அரசர், வைசியன் போன்ற சொற்களை பெரும்பாலும் முந்தைய நூற்பாக்களில் பயன்படுத்தவே இல்லை. மரபியலில் திடீரென்று நூற்பாக்களின் மரபு நிலை திரிந்து அந்தணர், அரசர், வைசியன் என்றச் சொற்களுடன் நூற்பாக்களை இயற்றியிருப்பது முரணல்லவா. எனவே, நான்கு வர்ண சாதிப்படிநிலை குறித்த நூற்பாக்களுக்கும் தொல்காப்பியருக்கும் தொடர்பு இல்லை. இது உண்மையெனில் தொல்காப்பியர் ஐந்தாம் சமூகக் கட்டத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பது உறுதி.

மனித வரலாற்று படிநிலையில் திணைகளை விளக்குவதெனில்,

குறிஞ்சி – காடு சார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம், வேட்டை நாகரிகம் (1,2, சமூகக் கட்டம்).
நெய்தல் – வேட்டை நாகரிகத்திலிருந்து கடல் சார் பொருள் சேகரிப்பு நாகரிகமாகும்.(2 ம் சமூகக் கட்டம்)
முல்லை – கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம் (3 ம் சமூகக் கட்டம்)
மருதம் – விவசாய நாகரிகம் (4 ம் சமூகக் கட்டம்)
பாலை – நான்கு திணைகளும் திரி்ந்த நிலை

தொல்காப்பியர் பொருளதிகாரம் அகத்திணையியலில் திணைகளுக்கு உரிய மக்கள் குறித்து விளக்கும்போது, முதலாவதாக முல்லைத்திணைக்குரிய ஆயர்களைக் குறிப்பிடுகின்றார்.

ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப்பெயர்
ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே (தொல்.967)

ஏனோர் பாங்கினும் எண்ணுங் காலை
ஆனா வகைய திணைநிலைப் பெயரே (தொல்.968)

ஆனால் குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய திணைகளின் மக்களைக் குறிப்பிட்டு விளக்க முன்வரவில்லையே ஏன்?
அப்படியெனில், முல்லைத்திணையைத் தன் திணை என்ற ஆழ்மன உணர்நிலையிலிருந்து முல்லையின் அகம் குறித்து விளக்கியிருக்கிறார். ஆதலால், தொல்காப்பியருக்கும் முல்லை நில மக்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கருத முடிகின்றது. எனவே, தொல்காப்பியரை கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்தின் பிரதிநிதியாக கருத முயலலாம். கூடுதல் தகவல் என்னவெனில் நான்கு வர்ண சாதிப் படிநிலை தொல்காப்பியர் காலத்தில் இருந்தது உண்மையெனில் தொல்காப்பியர் நூல் இயற்றியிருக்க முடியாது. கல்வி பெற்றிருக்க முடியாது. ஏனெனில் மரபியல் விளக்கப்படி தொல்காப்பியர் இழிந்தோராவார். சாதிப்படிநிலை பற்றிய நூற்பாக்கள் இடைச்செருகல் என்ற முடிவிற்கு வர இயன்றிருப்பதால் தொல்காப்பியர் தப்பித்தார்.

தொல்காப்பிய பொருளதிகாரம் அகத்திணையியலில் முல்லைத்திணையை மட்டுமே முதன்மையாக விளக்கியவர் புறத்திணையியலில் ஒவ்வொரு திணைக்கும் உரிய புறக்கருத்தினை விளக்குகிறார். ஆனால், முல்லையை முதன்மையாகக் குறிப்பிடாமல் குறிஞ்சித்திணையை விளக்குகிறார். முல்லைத்திணையைத் தன் திணை என்ற அகநிலையிலிருந்து புறத்தை நோக்குகிறார். இதனால் முதலில் முல்லையை விளக்காமல் குறிஞ்சித்திணையின் புறத்தை விளக்குகிறார்.

அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர்
புறத்திணை இலக்கணம் திறப்பட கிளப்பின்
வெட்சிதானே குறிஞ்சியது புறனே
உட்கு வரத்தோன்றும் ஈர்ஏழ் துறைத்தே (தொல்.1002)

இரண்டாவதாக முல்லைத்திணையை விளக்குகின்றார். ஏன் மருதத்தையோ நெய்தலையோ இரண்டாவதாக விளக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை? ஏனெனில், முதன்மையாகவோ அல்லது இரண்டாம் நிலையாகவோ எண்ணும் அளவிற்கு மருதத்திணையின் விவசாய நாகரிகம் செல்வாக்கு பெற்றிருக்கவில்லை. தொல்காப்பியர் காலத்தில் செல்வாக்கு பெற்ற நாகரிகமாக கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகமே இருந்திருக்கின்றது.

வேந்து விடுமுனைஞர் வேற்றுப்புலக் களவின்
ஆதந்து ஓம்பல் மேவற்றாகும் (தொல்.1003)

அதனால்தான் இரண்டாவதாக முல்லையின் புறத்தினை விளக்குகிறார். பிறகுதான் மருதமும் நெய்தலும் விளக்கம் பெறுகின்றன.

வஞ்சி தானே முல்லையது புறனே (தொல்.1007)
உழிஞை தானே மருதத்துப் புறனே (தொல்.1010)
தும்பை தானே நெய்தலது புறனே (தொல்.1015)

தொல்காப்பிய பொருளதிகார மரபியலில் ஆண்பால் பெயர்களிலும் பெண்பால் பெயர்களிலும் விலங்கினங்களை குறிப்பிட்டுள்ள தொல்காப்பியர் தாவரங்களைக் குறிப்பிடவில்லை. ஆனால், விவசாய நாகரிகத்தை அடைந்த மனிதர்கள் ஆண் மரம் பெண் மரம் என்றெல்லாம் வகைபிரித்திருப்பதை அறிய முடிகின்றது. உதாரணமாக பனையிலும், பப்பாளியிலும் ஆண் பெண் மரங்கள் குறிக்கப்படுகின்றன. இத்தகைய விவசாய நாகரிகத்தின் அறிவு தொல்காப்பியருக்குத் தெரிந்திருக்கவில்லை. எனவே, தொல்காப்பியர் விவசாய நாகரிகத்தைச் சார்ந்திராத மனிதர் என்பது உறுதி.

தொல்காப்பிய பொருளதிகார அகத்திணையியலில் நிலம் குறித்து விளக்கும் தொல்காப்பியர், நான்கு வகை நிலம் குறித்து அவற்றை ஆளும் இறைவனின் பெயருடன் இணைத்தே விளக்குகிறார். இந்த விளக்கத்திலும் முதலில் விளக்கப்படுவது முல்லைத்திணையே.

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறைாயல் சொல்லவும் படுமே (தொல்.951)

ஆனால், இந்த நூற்பாவில் நாம் கவனப்பட வேண்டியது முல்லையின் முதன்மையில் அல்ல. அதனினும் கூடுதலாக “மேய” என்றச் சொல் பிரயோகத்தில். “மேய” என்றச் சொல் மேய்ச்சல் என்ற பொருளில் வருவதாகும். மேய்ச்சல் என்பது கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்தை பிரதிபலிக்கின்ற சொல்லாகும். ஆளுதல், பாதுகாத்தல், ஆட்சி செய்தல் போன்ற பொருண்மைக்காக “மேய” என்றச் சொல்லைக் கையாண்டிருக்கிறார். கால்நடை மந்தைகளை மனிதர்கள் மேய்ப்பதுபோல, அந்தந்த நிலத்திற்குரிய மனிதர்களை அந்தந்த நிலத்திற்குரிய கடவுள் மேய்க்கிறார் என்பதாக பொருள்படுகின்றது. அறிவுநிலையிலிருந்து ஆழ்மன உணர்வுநிலைவரை கால்நடை மந்தை வளர்ப்பு நாகரித்தால் கட்டமைந்திருந்தால் மட்டுமே தொல்காப்பியரால் இத்தகைய நூற்பாவை படைத்திருக்க முடியும்.

தொல்காப்பியத்தில் இடம் பெற்றிருக்கும் நான்கு வர்ணப் படிநிலை குறித்த இடைச்செருகல் பகுதியைத் தவிர்த்து முழுதளாவிய நிலையில் நோக்கினால், தொல்காப்பியத்தின் தொன்மை மனித வரலாற்று படிநிலையில் மூன்றாம் கட்டச் சமூகத்தில் இருக்கின்றது. இத்தகைய முடிவிலிருந்து தொல்காப்பியர் யார் என்பதை விளக்க முடிகின்றதா? கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்தில் நிலவிய செங்கோலாட்சியின் முதிர்ச்சியடைந்த பருவத்தின் பிரதிநிதியாக நின்று, வளர்ந்துகொண்டிருந்த விவசாய நாகரிகத்தை அவதானித்துப் பாடிக்கொண்டிருந்த நம் தொன்மையானத் தமிழன் தொல்காப்பியன்.

துணை செய்தவை
1. சுப்பிரமணியன்,ச.வே. 2016(1998). தொல்காப்பியம் தெளிவுரை. சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
2. பூரணச்சந்திரன்,க.2018. சான்றோர் தமிழ். மதுரை: பிறழ் வெளியீடு.
3. சிவக்குமார்,கே.2016. தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்: இனவரைவியல் நோக்கு. முனைவர் பட்ட ஆய்வேடு. புதுச்சேரி : புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம். https://puthiyavansiva.blogspot.com/2016/10/blog-post_79.html
4. சிவக்குமார்,கே. மார்ச் 2014. ஆக்கமும் பெண்ணாலே. புதிய கோடாங்கி. பக். 36-38. https://puthiyavansiva.blogspot.com/2016/06/blog-post_33.html
5. சிவக்குமார்,கே. ஆகஸ்ட் 2016. பழங்குடிகளது ஆழ்மன உணர்நிலையில் தாய்தலைமை சமூகத்தின் எச்சம். உங்கள் நூலகம். பக்.81-85. http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-aug16/31423-2016-09-10-06-55-46
6. புதியவன். 2014. நீங்களும் சமூகவிஞ்ஞானி ஆகலாம். கோயம்புத்தூர்: முகம் பதிப்பகம். https://puthiyavansiva.blogspot.com/2018/11/blog-post.html
7. புதியவன். டிசம்பர் 2016. காதலிலிருந்து கடவுள்வரை. புதிய கோடாங்கி. பக். 29-37. https://puthiyavansiva.blogspot.com/2016/11/blog-post.html
8. புதியவன்.மார்ச் 2015. அறிவெனும் பெரும்பசி. ஊடாட்டம் சமூக பண்பாடு அரசியல் பொருளாதார ஆய்விதழ். பக்.40-49. https://puthiyavansiva.blogspot.com/2016/06/blog-post_4.html
9. புதியவன்.ஜுன் 2015. அறிவெனும் பெரும்பசி. புதிய கோடாங்கி. பக். 30-37. https://puthiyavansiva.blogspot.com/2016/06/blog-post_4.html
10. புதியவன். 2018. சாதி ஸ்வாக. https://puthiyavansiva.blogspot.com/2018/01/blog-post_24.html
11. புதியவன். நவ. 2019. புராதனம் முதல் பொதுவுடைமைவரை. ‘பதிவுகள்’ –  பன்னாட்டு இணைய இதழ். https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5473:2019-11-03-14-08-15&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82
12. புதியவன். அக். 2019. இலக்கிய அறிவியல். ‘பதிவுகள்’ –  பன்னாட்டு இணைய இதழ். https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5444:2019-10-24-12-39-00&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82

13. புதியவன். அக். 2019. இந்தியாவில் சாதிகளின் சதி. ‘பதிவுகள்’ –  பன்னாட்டு இணைய இதழ். https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5435:2019-10-19-12-03-36&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82
14. புதியவன். அக். 2019. காதல் வரலாறு. ‘பதிவுகள்’ –  பன்னாட்டு இணைய இதழ்.
https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5456:2019-10-28-14-28-50&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82   
15. புதியவன். 2018. சாதி-ஸ்வாக. https://puthiyavansiva.blogspot.com/2018/01/blog-post_24.html
16. புதியவன். 2019. அகண்ட பாரதத்தின் அகில பாசிசம்: மோடீசம். https://puthiyavansiva.blogspot.com/2019/06/blog-post.html
17. புதியவன். 2017. சமூகவிஞ்ஞானம் விளக்குகின்ற உற்பத்திநிலை குறிப்புகள். புதிய கோடாங்கி. பக். 29-37. https://puthiyavansiva.blogspot.com/2017/06/blog-post_89.html
18. எங்கெல்ஸ், பிரெடெரிக். 2011(2008). குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின்    தோற்றம். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
19. எங்கெல்ஸ், பிரெடெரிக். 2008. குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின்    தோற்றம். மதுரை : கருத்து=பட்டறை.
20. எங்கெல்ஸ், பிரெடெரிக். 2012. மனிதக்குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம். சென்னை: பாரதி புத்தகாலயம்.
21. கைலாசபதி, க.2009(2002). சமூகவியலும் இலக்கியமும். சென்னை: குமரன் பப்ளிகேஷன்ஸ்.
22. கோபட்கந்தி. 2014. சுதந்திரமும் மக்கள் விடுதலையும். கோயம்புத்தூர்: விடியல் பதிப்பகம்.
23. சிவத்தம்பி,கா. 1988. தமிழ் இலக்கிய வரலாறு வரலாறெழுதியல் ஆய்வு. சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
24. சிவத்தம்பி,கா. 2011. தமிழ்ப் பண்பாடும் இலக்கியமும். சென்னை: பாவை பதிப்பகம்.
25. சிவத்தம்பி,கா. 2011. இலக்கியமும் கருத்துநிலையும். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
26. ஷாலினி. பிப்.2018. கடவுளை விமர்சிக்கக் கூடாதா? https://www.youtube.com/watch?v=yJhDhV_lkWc
27. ராகுல் சாங்கிருத்யாயன். 2003(1949). வால்காவிலிருந்து கங்கை வரை. சென்னை: தமிழ்ப் புத்தகாலயம்.
28. ராகுல் சாங்கிருத்யாயன். 1999(1946). பொதுவுடைமைதான் என்ன?. சென்னை: தமிழ்ப் புத்தகாலயம்.
29. ஜார்ஜ்தாம்சம். 2002. மனித சமூக சாரம். விழுப்புரம்: சரவணபாலு பதிப்பகம்.
30. ஜார்ஜ்தாம்சம். 2005. மனித சாரம். கோயம்புத்தூர்: விடியல் பதிப்பகம்.
31. ஸ்டாலின்,ஜே.வி. 2017.மார்க்சியமும் மொழியியலும். சென்னை: புதுமை பதிப்பகம்.
32. பக்தவத்சல பாரதி. 2003(1990). பண்பாட்டு மானிடவியல். சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
33. பக்தவத்சல பாரதி. 2005. மானிடவியல் கோட்பாடுகள். புதுச்சேரி: வல்லினம் பதிப்பகம்.
34. பக்தவத்சல பாரதி. 2014. இலக்கிய மானிடவியல். புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.
35. பக்தவத்சல பாரதி. 2002. தமிழர் மானிடவியல். சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
36. பக்தவத்சல பாரதி. 2013 (2007). தமிழகப் பழங்குடிகள். புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.
37. பொற்கோ- இலக்கிய அறிவியல்.   http://www.ulakaththamizh.org/JOTSArticle.aspx?id=387
38. மாசேதுங். 1995(1951). கலையும் இலக்கியமும். சென்னை: தமிழ்ப் புத்தகாலயம்.
39. ஸ்டாலின்,ஜே.வி.2013. இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்று பொருள்முதல் வாதமும். சென்னை: கீழைக்காற்று.
40. பெரியார். 2017. பெரியார் இன்றும் என்றும். கோயம்புத்தூர்: விடியல் பதிப்பகம்.

puthiyavan1986@gmail.com