நத்தார் சிறுகதை: கிறிஸ்துமஸ் பரிசு!

அந்தச் சாக்கடை முடைநாற்றத்தில் இவர்கள் எப்படிக் குடித்தனம் நடத்துகிறார்களோ? வானமே கூரை!பேருந்து நிலையத்தின் பக்கவாட்டுச் சுவர்தான் ஒரே சுவர்; நான்கு பக்கச் சுவரெல்லாம் இந்தக் குடித்தனத்துக்கு கிடையாது. அந்தச் சுவரில் எப்படியோ போட்ட கள்ளத்தனமான துளையில் ஒரு குச்சியைச் செருகி பழைய கந்தல் சாக்கை ஒட்டுப்போட்டு தைத்து முன் பக்கம் நடப்பட்ட இரண்டு குச்சிகளில் இணைத்துக் கட்டியிருப்பதுதான் அந்தச் சாக்கடை முடைநாற்றத்தில் இவர்கள் எப்படிக் குடித்தனம் நடத்துகிறார்களோ? வானமே கூரை!பேருந்து நிலையத்தின் பக்கவாட்டுச் சுவர்தான் ஒரே சுவர்; நான்கு பக்கச் சுவரெல்லாம் இந்தக் குடித்தனத்துக்கு கிடையாது. அந்தச் சுவரில் எப்படியோ போட்ட கள்ளத்தனமான துளையில் ஒரு குச்சியைச் செருகி பழைய கந்தல் சாக்கை ஒட்டுப்போட்டு தைத்து முன் பக்கம் நடப்பட்ட இரண்டு குச்சிகளில் இணைத்துக் கட்டியிருப்பதுதான் அவர்களுக்குரிய இடம் என்பதைத் தெரிவிக்கும் அடையாளம்! இப்போது ஓரளவுக்கு உங்களுக்கு இது யாருக்குச் சொந்தமான குடித்தனம் என்று யூகித்திருப்பீர்கள்.

பகல் முழுக்க நகரின் பல பகுதிகளில் சுற்றியலைந்து கையேந்தலில் கிடைக்கும் காசிலும், வீடுகளில் மிச்சம் மீசாடிகளை இவர்கள் பாத்திரங்களில் கவிழ்க்கப்படுவதைக் கொண்டு கால்வயிறோ அரை வயிறோ நிரப்பிக் கொண்டு இரவுப்பொழுதுக்கு கந்தைத் துணிகளைப் பரப்பிய சொகுசு மெத்தைகளில் முடங்கிக்கொள்வார்கள்!  கொஞ்சம் காலை மாற்றிப் புரண்டு நீட்டினால் சாக்கடை நீர் கால்களை வாரியணைத்துக் கொள்ளும். இவர்களின் சுவாசப்பைகள் சாக்கடைச் சந்தனம் கமழ்ந்து பழ‌க்கப்பட்டுவிட்டது. ஒருகாலத்தில் மதுரையின் பிரதான நதியாக நகரை வகிர்ந்து ஓடிய கிருதமால் நதி ஒரு புராண கால நதி. வைகையிலிருந்து பிரிந்து செல்லும் சிற்றாறு. இன்று கிருதமால் நதி என்பது பல ஆக்கிரமிப்புக்களால் கழிவுநீர் சாக்கடையாகிவிட்டது.

இந்தச் சாக்கடைச் சங்கமத்தில் அந்தியும் இரவும் ஒப்பந்தம் செய்துகொள்ளும் பொன் பொழுதுகளில் துவங்கி பின்னிரவு வரை எங்கெங்கோ சிதறிப்போனவர்கள் சங்கமிப்பதும் காலை வெய்யில் உடம்பைச் சுடும்வரையிலும் மூவேந்தர் பரம்பரையினர் உறங்கி விழிப்பதும் அன்றாட நிகழ்வுகள் என்றாலும் அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்து கிடக்கும் வாழ்வின் உட்புறம் சுகங்களும் சோகங்களும் உள்ளடங்கிய இரகசியப் புதையல்கள்!

பிலிப், ஆறடி உயரம்;சிறு வயதில் ஏற்பட்ட விபத்தில் இடது கால் ஊனம்! இருந்தாலும் ஊன்றுகோலின்றி விந்திவிந்தி நடப்பான்; குடும்பம் என்ற ப‌ந்த‌த்திலிருந்து வில‌கி நாடோடியாய் எங்கிருந்தோ மாரிய‌ம்மாளாக‌ வ‌ந்து ம‌ரியாளாகி பிலிப்பும் ம‌ரியாளும்
த‌ம்ப‌திக‌ளாய்க்க‌ட‌ந்த ஆறு வ‌ருட‌ங்க‌ளாக‌ இணைபிரியாம‌ல் வாழ்க்கைச் ச‌க்க‌ர‌த்தை ந‌க‌ர்த்திவ‌ருகின்ற‌ன‌ர்.

ம‌ரியாவுக்கு க‌ட‌ந்த‌ ப‌த்து நாளாக‌ விச சுர‌ம் வ‌ந்து ப‌டுத்தே கிட‌க்கிறாள். காலையில் ஒரு தேனீரும் ப‌ண்ணும் வாங்கிக்கொடுத்துவிட்டு பிலிப் த‌ன் தொழிலுக்கு கிள‌ம்பி விடுவான். தொட‌ர்வ‌ண்டி நிலைய‌ம், பேருந்து நிலைய‌ம் எங்கெங்கோ சுற்றிவிட்டு கையில் சேர்ந்த‌ காசுக்கு ஏற்றாற் போல‌ 12ம‌ணிக்கு ம‌ரியாவின் த‌லைமாட்டில் சாப்பாட்டுப் பொட்ட‌ல‌த்தோடு வ‌ந்து உட்கார்ந்துவிடுவான். அவ‌ள் சாப்பிடுவ‌தை அப்படியே உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பான். மாலையில் ஒரு த‌ர‌ம் வ‌ந்து அவ‌ளை எழுப்பி தான் வாங்கி வ‌ந்த‌ தேநீரைக் கொடுத்துவிட்டுப் போனால் இர‌வு ஒன்ப‌துக்கோ ப‌த்துக்கோதான் வ‌ருவான்.

“இந்தா, இந்த‌ மாத்திரையைப் போட்டுக்க‌, நாளைக்காவ‌து நீ எந்திருச்சுட்டா ப‌ரவா இல்லை; கிறிஸ்ம‌ஸ் இன்னும் ரெண்டுநாள்தான் இருக்கு. நீ இப்ப‌டியே ப‌டுத்துக் கெட‌ந்தா நல்லாவா இருக்கு…”

“என்னா சொன்னீங்க‌? இன்னும் ரெண்டுநாள்தான் இருக்கா? விசாழ‌னோட‌ விசாழ‌ன்..ஏழு.. எட்டு.. வெள்ளி,ச‌னி,ஞாயிறு…அட‌ங்கொப்புறான.. ப‌த்துநாளாவா நான் ப‌டுத்துக் கெட‌க்கேன்..”என்றாள் வாரிச்சுருட்டி எழுந்து உட்கார்ந்து!

“ச‌ரியாச் சொன்னா,இன்னைக்கு ப‌தினோராவ‌து நாள்…ம‌ரியா…” மாத்திரையைப் போட்டு ப‌டுத்த‌வ‌ள் ம‌றுநாள் பிலிப் த‌லைமாட்டில் தேனீர் குவ‌ளையோடு வ‌ந்து எழுப்பிய‌போதுதான் ம‌ரியா அலங்க மலங்க விழித்தவாறே எழுந்தாள்.

தன்னுடைய நீளமான கூந்தலை இட‌து கையைப் பின்பக்கமாகக் கொண்டுபோய் பிடித்துக்கொண்டு வல‌து கையால வளையம்வளையமாக வளைத்துக் கொண்டை போட்டுச் சொம்பில் இருந்த தண்ணீரால் முகம் கழுவி பிலிப் நீட்டிய தேநீரை வாங்கிக்கொண்டாள்,மரியா!

“சரி, நீ தேத்தண்ணியச் சாப்பிடு, நாங் கெளம்புறேன், நீ இன்னைக்கும் பேசாம படுத்துக்க‌ நாளைக்கு ஒரு நாள் தான் குறுக்க இருக்கு. அதுக்குள்ள ஒனக்கும் சரியாயிரும்; ஞானஒளிவுபுரம் கோவிலுக்கே போவம்,என்ன?” என்று சொல்லிக்கொண்டே சாக்குப்படுதாவை தூக்கிவிட்டுவிட்டு அவள் பதிலுக்குக் கூட காத்திராமால் கிளம்பினான் பிலிப்.

பிலிப் அந்தப்பக்கம் போனதும் தேநீர்க் குவளையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு மூட்டை முடிச்சுகளாக இருந்த மூலையில் கையைவிட்டு எதையோ தேடி எடுத்தாள்.  அதில் சில கசங்கிய‌ ரூபாய் நோட்டுக்களும் சில்லறைக்காசுகளும் இருந்தது.  அதை அப்படியே கீழே கொட்டி எண்ணத் துவங்கினாள்.  ஐம்பத்தி நான்கு ரூபாயும் இருபது காசும் இருந்தது.  இதை வச்சு எப்படி அதை வாங்குறது? அவள் மனசுக்குள் கணக்குப் போட்டுக்கொண்டிருந்தாள். சரி நாமளும் கெளம்பிட வேண்டியதுதான், காலேஜ் ஹவுஸ் பக்கம் போய் பார்ப்போம்… என்று  தனக்குள் முடிவு செய்த அடுத்த பத்தாவது நிமிடம் கிளம்பியும் விட்டாள்.

ஒரு பிரபலமான கெடிகாரக் கடையின் “காட்சிப் பேழகம்” முன்பாக நின்றாள் மரியா. கண்ணாடிப் பெட்டிகளில் அழகழகான கெடியாரங்கள் பளபளவென்று கண்ணைப் பறித்தது. அவள் தேடுவது அங்கு இல்லையே…. ஒரு ஓரமாக இருந்த வெல்வெட்டுப் பெட்டியில்
அவள் எதிர்பார்த்தது இருந்தது; விலை தெரியவில்லை. எம்பி எம்பிப் பார்க்க முயன்றபோது கடை வேலையாள் வந்து,” ஏய் இங்க என்ன பண்றே..போ…போ.. அந்தப்பக்கம்” என்று விரட்டினான்.

“அந்தச் சங்கிலி வெலை எவ்வளவு?” என்றாள்.

“அதெல்லாம் வெலை சாஸ்தி… நகரு…நகரு… ஆளுங்க வர்ற நேரத்துல நீ வேற…பெரிய‌ செயின் வாங்க வந்த மூஞ்சைப் பாரு..”என்று அடிக்காத கொறையா வெரட்டினான்.

“இல்லை, நெசமாவே வாங்கத்தான் வந்தேம்…வெலை எவ்வளவு….”என்றாள்.

“அதெல்லாம் வெலை சாஸ்தி. ஒன்னால வாங்க முடியாது. கெளம்பு…கெளம்பு…” என்று கடை வேலையாள் இவளை விரட்டுவதில் குறியாக இருந்தான்.

“என்னமோ ஒங்ககிட்ட சும்மா குடுங்கன்னு கேட்டமாதிரியில்லவெரட்டுறீங்க. வெலையச் சொல்லுங்க; நாங் காசுகுடுத்தா குடுங்க. ரெம்பத்தான் மெரட்டுறீங்களே…”என்றாள் இவள்.

“எவ்வளவு நீ வெச்சுருக்க அதச் சொல்லு மொதல்ல…”என்று விலையைச் சொல்லாமல் கடையாள் அதட்டலாக் கேட்டான்.

“ம்ம்ம்….அம்பது ரூவா வச்சிருக்கேன். எவ்வளவுன்னு தெரிஞ்சா மேக்கொண்டு போய் காசு கொண்டாருவம்ல்ல…” என்றாள் மரியா.

” அம்பதா? அதுக்கு அஞ்சு சங்கிலித் துண்டு கூட வராது. இன்னொரு சைபர் சேத்துக் கொண்டா…பாக்கலாம்..”என்றான் கடையாள்.

“அடியாத்தே….ஐநூறு ரூபாயா? நெசமாலுமா?” என்று வாய் பிளந்து கேட்டாள், மரியா.

“அதான் மொதல்லயே சொன்னேன்.  நீயெல்லாம் வெலை கேக்க வந்துட்ட.. போ..போ..போய்

கவரிங்கடையில போய்க் கேளு;அவங்கூட வாட்ச் செயின் அம்பது ரூபாய்க்குத் தரமாட்டான்… வாட்ச் செயின் வாங்குற மூஞ்சியப் பாரு காலங்காத்தால வந்து உசிரை எடுக்குது…”என்று எரிந்துவிழ ஆரம்பித்தான் கடையாள்.

கடையாளை மொறச்சுப் பாத்துக்கிட்டே அங்கிருந்து நகர்ந்தாள் மரியா.

அங்குமிங்குமாக அலைந்து ஒரு கவரிங்கடைக்கு வந்து கவரிங்கில் வாச்சுக்கு சங்கிலி வேணுமுங்க‌. எவ்வளவு வெலைங்க? என்று கேட்டாள்.

யாருக்கு? ஆம்பளைக்கா? பொம்பளைக்கா? என்று கேட்டான் கடைக்காரன்.

“எங்க வூட்டு ஆம்பளைக்குத்தாங்க..வெலையச் சொல்லுங்க,” என்றாள்.

“நூத்தம்பது ரூபாயாகும்..ரூபா வச்சிருக்கியா?”

“என்னங்க தங்க வெலை சொல்றீங்க?”

“நூத்தி இருபத்தஞ்சுன்னா குடுக்கலாம்;அதுக்கு மேல கொறைக்க முடியாது..”

“எங்க அந்தச் சங்கிலியக் காட்டுங்க பாக்கலாம்,”

“மொதல்ல ரூபா வச்சிருக்கியான்னு சொல்லு…”

“இருக்குங்க..என்னமோ ஓசியா கேட்டமாதிரியில்ல சலிச்சுக்கிறீங்க”

“இந்தா பாரு…இதான்…. தொடாத…தொடாத… தொடாமப் பாரு”என்றான்.

“ம்ம்…சரி வூட்டுக்குப் போய் பணங்கொண்டாந்து வாங்கிக்கிறேனுங்க” என்று அங்கிருந்து புறப்பட்டாள்.  செயின் வாங்குற ஆளைப்பாரு என்று கடைக்காரன் எதோ சொல்லிக்கொண்டிருந்தான்.

நடந்துகொண்டே யோசித்தாள்; பணம் இருந்தால் கவரிங்கில் நூத்தி இருபத்தஞ்சு ரூபாய்க்கு வாங்குவதற்கு ஐநூறு ரூபாய் கொடுத்து அதையே வாங்கிவிடலாம். என்ன செய்வது? நாலு கோவில், பேருந்து நிலையம்ன்னு சுத்துனாலும் நாலு ரூபாயும் கெடைக்கலாம்; நாப்பது ரூபாயும் கெடைக்கலாம்; இல்ல எதுவும் கெடைக்காமலே போனாலும் போகலாம். யோசனையாகவே நடந்தாள்,மரியா.

பிலிப்போட, தாத்தாவுக்கு அப்பாரு கட்டியிருந்த தங்கக் கெடியாரமாம். அது ஒவ்வொருத்தர் கையா மாறி இப்ப பிலிப்புகிட்ட இருக்கு.  அந்தக் கெடியாரத்தோட சங்கிலி  அறுந்து, அங்க வச்சு இங்க வச்சு அதுவும் காணாமப் போச்சுது. எப்படியாவது பிலிப்புக்கு இந்தக் கிறிஸ்மஸ் பரிசா ஒரு சங்கிலிய வாங்கிக் கொடுத்திடனும்ன்னுதான் மரியா இப்பத் தெருத்தெருவாய் அலைஞ்சுகிட்டு இருக்கா.

ஒரு சந்தில் நுழைந்து வெளிய வந்தபோதுதான் அந்தக்கடை இவள் கண்ணில் தட்டுப்பட்டது. இவ்விடம் பெண்களின் நீண்ட தலைமுடி விலைக்கு வாங்கப்படும். அவள் கண்ணில் மின்னல் கீற்று போல ஒரு எண்ணம் உதயமானது. விறுவிறுவென்று கடைக்குள் நுழைந்தாள். தனது கூந்தலைக் காட்டி இதை விலைக்கு எடுத்துக்கொள்வீர்களா? என்று விசாரித்தாள். கடையிலிருந்த பெண் மரியாவின்
கூந்தல் நீளத்தைப் பார்த்து வியந்து போனாள். 

முடியின் நீளத்தை அளந்து பார்த்துவிட்டு   வாங்கிக்கொள்வேன், முடி பராமரிக்கப்படாமல் சிக்குப் பிடித்துப் போயிருக்கிறது.  சுத்தம் செய்ற‌ வேலை நெறைய இருக்கு…”என்று இழுத்ததும் மரியாவின் மனசு உள்ளுக்குள் படபடத்தது.  முடியை வாங்க இயலாது என்று சொல்லி விட்டால்….குறைந்தபட்சம் ஒரு நூறாவது கொடுத்தால் அந்தக் கவரிங் கடைக்கே போய்விடலாம் என்று மனமெங்கும் முட்டிமோதி…..கடைசியில் மாதாவே, இயேசு பாலனே கொறைஞ்சுது நூறு ரூபாய்க்கு வழி செஞ்சுடு என்று பிரார்த்தனையில் வந்து முடிந்தது.

“ஒரு அரைமணி நேரமாகும்; நல்லா முடியை அலசி சுத்தப்படுத்தி வெட்டி எடுக்க வேண்டியிருக்கும், கிராப் மாதிரி கொஞ்சம் விட்டுட்டு வெட்டி எடுத்துக்கிறேன். சரியா?”என்றாள் கடைக்காரி.

“எவ்வளவு குடுப்பீங்கம்மா?” மென்று விழுங்கிக்கொண்டே கேட்டாள் மரியா.

கடைக்காரி ஒரு தாளில் கூட்டிக்கழித்துக் கணக்குப்போட்டு 525 ரூபாய் குடுக்கலாம் என்றாள்.

மரியாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இவ்வளவு கிடைக்கும் என்று கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. என் முடிக்கு இவ்வளவு விலையா?

இவள் யோசிப்பதைப்பார்த்ததும் என்னம்மா யோசிக்கிற, வெட்டலாமா?வேண்டாமா? என்று கேட்டாள்.

இல்லை…இல்லை.. வெட்டிக்கங்க, என்று அவசரமாகச் சொன்னாள். வயித்துப் பசியில் சுருட்டிப்பிடித்து வலித்தது வயிறு.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்தக்”காட்சிப் பேழகம்” முன்பு இருந்தாள்.  அவள் பார்த்துச் சென்ற இடத்தில் இப்போது வேறு கெடிகாரம் இருந்தது. அந்தச் சங்கிலி இருந்த பெட்டியைக் காணோம். கடைக்குள் சென்று அந்தக் கடையாளிடம் படபடப்போடு, கேட்டாள்.   ஒரு வாடிக்கையாளர் கேட்டார், காட்டீட்டு இதோ இங்க இருக்கு, நீ ரூபாய் கொண்டாந்தியா? என்று கடையாள் கேட்டான்.

நீங்க கேட்ட மாதிரி இதோ ஐந்து நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினாள்.

“இதோ பாரும்மா, நான் ஒரு பேச்சுக்காக அப்படிச் சொன்னேன், சரியான இதன் விலை 590.99பைசா! எடு இன்னொரு நூறு ரூபாயை,”என்றான்.

தன்னிடம் இருந்த 50ரூபாயையும் முடி வாங்கியவள் கொடுத்ததிலிருந்த 25 ரூபாயையும் சேர்த்தால் 575தான் வந்தது. இந்தாங்க 575ரூபாயை வச்சுக்கிட்டு அதைக் குடுங்க”என்று கேட்டாள், மரியா.

இன்னும் பதினாறு ரூபாய் குடுத்திட்டு வாங்கீட்டுப் போ”கடையாள் கறாராகப் பேசினான்.

எவ்வளவோ மன்றாடிக்கேட்டுப்பார்த்தாள்; கடையாள் மசியவில்லை.

“சரி, இந்த ரூபாயை வச்சுக்குங்க; இன்னும் ஒரு மணிநேரத்துல வந்துருவேன்; யாருக்கும் குடுத்துராதீங்க,” என்று சொல்லிவிட்டு மீனாட்சியம்மன் கோவிலை நோக்கி ஓடினாள் மரியா.

அரைமணி நேரத்துக்கும் மேலாகி சல்லிக்காசுகூட கிடைக்கவில்லை; அப்போது ஒரு வசதியான குடும்பம் கோவிலிலிருந்து வெளியே வந்தது. அவர்களை நோக்கி நம்பிக்கையோடு நெருங்கினாள்.

“அய்யா ரெம்பப் பசிக்குதுங்கய்யா, புண்ணியமாப் போகட்டும். ஒரு சாப்பாட்டுக்கு ஒதவி பண்ணுங்க அய்யா..அய்யா…விடாது தொடர்ந்தாள் மரியா. ஒரு புது பத்து ரூபாய் தாள் வந்து விழுந்தது, அவளிடம்.

அடுத்த அரைமணிநேரத்தில் அரை ரூபாய், ஒரு ரூபாய் என்று ஏழெட்டு ரூபாய் கிடைக்கவே ஓட்டமும் நடையுமாய் அந்தக்கடைக்கு ஓடினாள்.  வயிறு சுருக், சுருக்கென்று வலித்தது அவளுக்கு.  இன்னும் கொஞ்ச நேரத்துல அந்தத் தங்கச் சங்கிலி கைக்கு வரப்போகிறது, என்பதில் பசி,வலி மறந்து வேகம் காட்டிப்போனாள். இந்தாங்க என்று பதினாறு ரூபாயைக் கொடுத்து அந்தத் தங்க முலாம் பூசப்பட்ட கெடிகாரச் சங்கிலியை பளபளப்பான வெல்வெட்டுப் பெட்டியில் வைத்துக் கொடுத்ததைப் பத்திரமாக வாங்கிக்கொண்டு தன் இருப்பிடத்தை
நோக்கி விரைந்தாள். 

பிலிப் எதுனாச்சும் சாப்பிடக் கண்டிப்பா கொண்டாந்து வச்சிட்டுப் போயிருக்கும், அதச் சாப்பிட்டுக்கலாம் என்று வயித்துக்குச் சமாதானம் சொல்லிக்கொண்டு ஒரு வழியாக வந்து சேர்ந்தாள்.  காலையில் ஒரு தேனீர் குடித்தது.  இப்போது சாயாந்திரமாகிப்போச்சு.  ஒரு இடத்தில் வாங்கி வந்த பொருளை வைத்துவிட்டு, ஒரு கிழிசல் போர்வையை போர்த்திக்கொண்டு அப்படியே சுருண்டு படுத்துவிட்டாள்.

“மரியாம்மா…மரியாம்மா…என்னம்மா எழுந்திரு…. இங்க பாரு ஒனக்கு என்ன வாங்கி வந்திருக்கேன் கிறிஸ்மசுக்கு?!
என்று எழுப்பினான் பிலிப்.

மரியா, வழக்கமாக இவன் கூப்பிட்டதும் எழுந்துவிடுபவள் எழவே இல்லை,என்றதும் பயந்துபோய் அவளைத் தொட்டு உசுப்பி மரியா..மரியா..என்று சொல்லி எழுப்பினான்.

மெல்ல, முனங்கிக்கொண்டே எழுந்தவள், நீங்க‌ எனக்கு வாங்கீட்டு வந்தது இருக்கட்டும், நான் உங்களுக்கு ஒன்று வாங்கீட்டு வந்து இருக்கேன், அது என்னன்னு சொல்லுங்க? என்றாள்.

அவன் உடனே அருகில் உட்கார்ந்து கை இரண்டையும் தலைக்குப் பின்னால் கோர்த்துக் கொண்டு சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டான். “சரி, என்ன வாங்கி வந்த? நீ எதுக்கு உடம்பு முடியாதபோது வெளிய கிளம்பிப் போன. நான் மதியம் வந்து ஒனக்கு வாங்கி வந்து வச்ச சாப்பாட்டுப் பொட்டலம் அப்படியே இருக்கு!?”என்றான்.

“சரி நாம ரெண்டுபேருமே சாபிடுவோம்; நான் வாங்கி வந்தது என்னன்னு சொல்லுங்க? பார்ப்போம்”என்று மரியா தான் போர்த்தியிருந்த போர்வையை விலக்காமலே சொன்னாள்.

“எனக்கு எதாவது புது துணி எடுத்தாந்துருப்ப; வேற என்ன?  சரி நான் என்ன வாங்கி வந்துருக்கேன்னு நீ கண்டுபுடிக்க முடியாது; நீ என்ன வாங்கி வந்துருக்கேன்னு நான் கண்டு புடிக்க முடியாது. நான் என்ன வாங்கி வந்தேன் என்பதை நாஞ்சொல்றேன், முதல்ல,”என்றான்.

“எத்தனை தடவை நாம ரெண்டுபேரும் கடைவீதியில் அந்தப் பல்பொருள் அங்காடிக்கடையில விதவிதமா பெரிய பல், சின்னப்பல் சீப்புகள், பேன் சீப்பு இதெல்லாம் யானைத் தந்தத்துல செஞ்சத நாம வாங்க முடியுமா?ன்னு ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கேட்டிருக்க. அதை ஒனக்காக இந்தக் கிறிஸ்மஸ்சுக்கு பரிசா வாங்கியாந்தேன். நீ, என்ன‌ வாங்கி வந்த? என்றான் பிலிப்?

அவள் கன்னங்களில் கண்ணீர் கரகரவென்று வழிந்ததை அவன் அறியாமல் துடைத்துக்கொண்டே,” அந்தக் கையை நீட்டுங்க,”என்றாள்.

“ஏன்? எதுக்கு, சும்மா சொல்லு,”

“நீங்க ஒங்க வாச்சு கட்டியிருக்கிற‌ கையை இப்படி நீட்டுங்க…”

“தலைக்கு அணவா கையை வச்சிட்டு இருக்குறதுல ஒரு சொகம்…நி, சொல்லு மரியா..”

கையை நீட்டி அவனின் வலது கரத்தை வெடுக்கென இழுத்தாள், மரியா.

அந்தக் கையில் கெடிகாரம் இல்லை; கை வெறுமையாக இருந்தது.

“எங்கங்க,அந்த வாச்சு?”

ஒரு சின்னச் சிரிப்புக்குப் பின், அந்தச் செயின் தொலைஞ்ச பொறவு அதக் கையில கட்டவே பிடிக்கல…”

“சரி,சரி…அத எடுங்க…இந்தாங்க அதுக்கு ஏத்த தங்கச் சங்கிலி….” சங்கிலியை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

யானைத் தந்தத்துல வாங்குறதுக்காக அதை நான் வந்த விலைக்கு வித்துப்புட்டேன்; அது கையில‌ இருந்து ஆகப்போறது என்ன மரியா? வானத்தைப் பார்த்துக்கொண்டே மெல்லச் சொன்னான் ” பிலிப்.

ஏங்க இப்புடிப் பண்ணினீங்க? எனக்காகவா ஒங்க பரம்பரை பரம்பரையா காத்த சொத்தை வித்தீங்க?

போர்வையை உதறிவிட்டு அவன் மீது சாய்ந்து கதறினாள்.

அப்போதுதான் பார்த்தான் அவள் தலை மொட்டையாக இருந்ததை.

கெடிகாரச் சங்கிலியும் யானைத் தந்தச் சீப்புகளும் குப்பையில் கிடக்கும் “கோமேதக”மாக அங்கே காட்சியளித்தது!

குறிப்பு: பிரெஞ்சு எழுத்தாளர் மாப்பசானின் ‘நெக்லஸ்’ சிறுகதையினைத் தழுவி எழுதப்பட்ட சிறுகதையிது.

albertgi@gmail.com