– யாழ் இந்துக்கல்லூரிச் சங்கம் (கனடா) வருடந்தோறும் நடாத்தும் கலைவிழாவான கலையரசி 2014 நிகழ்வினையொட்டி வெளியான மலருக்காக எழுதிய கட்டுரை. ஒரு பதிவுக்காக இங்கே. –
ஒவ்வொருவருக்கும் மாணவப் பருவம் மிகவும் முக்கியமானதும், இனிமையானதுமான பருவம். எத்தனை வருடங்கள் சென்றாலும், மனதில் பசுமையாக இருக்கும் மாணவப்பருவமும், படித்த பாடசாலைகளும் எப்பொழுதுமே அழியாத கோலங்களாக நெஞ்சில் இருப்பவை. பாடசாலையில் மாணவர்கள் கல்வி மட்டும் கற்பதில்லை. கல்வியுடன் விளையாட்டு, வாழ்வின் சவால்களை எதிர்த்து நடைபோடும் ஆளுமையினையும் கூடவே பெறுகின்றார்கள். இதற்கு முக்கியமானவர்கள் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள். என்னைப் பொறுத்தவரையில் என் கல்வி எட்டாம் வகுப்பிலிருந்து பல்கலைக்கழகம் செல்வது வரை யாழ் இந்துக் கல்லூரியிலேயே கழிந்தது. எப்பொழுதும் நெஞ்சில் உவகையினை ஏற்படுத்தும் யாழ் இந்துக் கல்லூரிக் காலம் பற்றி என் சிந்தையிலெழும் நினைவுகளைப் பகிர்ந்துகொள்வதே இப்பதிவின் நோக்கம்.
யாழ் இந்துக் கல்லூரியும், ஈழத்துத் தமிழ் இலக்கியமும்…….
நான் யாழ் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற காலகட்டத்தில் அங்கு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த இலக்கிய ஜாம்பவான்கள் பலர் ஆசிரியர்களாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். சொக்கன், தேவன் (யாழ்ப்பாணம்) ஆகியோரைக் குறிப்பிடலாம். பண்டிதர் கணபதிப்பிள்ளை என்பவரும் அவ்வப்போது தமிழ்ப்பத்திரிகைகளில் இலக்கியக் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்ததாக ஞாபகம். ஆனால் இவர்கள் யாரிடமும் எனக்குக் கல்வி கற்கச் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதில்லை. ஆனால் இவர்களில் தேவன் (யாழ்ப்பாணம்) அவர்களின் ‘மணிபல்லவம்’ என்னிடம் இருந்தது. ஆங்கில ‘கிளாஸி’க்குகளிலொன்றான ‘ரொபேர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன்’ எழுதிய ‘புதையல் தீவு’ (Treasure Island) நாவலின் தமிழாக்கமது.
யாழ் இந்துக்கல்லூரியில் கல்வி கற்ற, ஆசிரியர்களாகக் கடமையாற்றிய மேலும் பலர் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகினுள் தடம் பதித்துள்ளார்கள். கலாநிதி க.கைலாசபதி, கவிஞர் இ.முருகையன், அறிஞர் அ.ந.கந்தசாமி (இவர் மகாஜனாக் கல்லூரியிலும், பின்னர் யாழ் இந்துக் கல்லூரியிலும் கல்வி கற்றவர்.) செங்கை ஆழியான் (க.குணராசா) , செம்பியன் செல்வன், ‘சங்கிலியம்’ என்னும் காப்பியம் பாடிய கவிஞர் காரை செ.சுந்தரம்பிள்ளை, ஆசிரியராகக் கடமையாற்றிய , ஈழத்துறைவன் என்று ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்ட ஏரம்பமூர்த்தி மாஸ்டர் (இவர் ஆனந்தவிகடன் நடாத்திய நாடகப்போட்டியொன்றிலும் பாராட்டுப் பரிசு பெற்றவர்), து.வைத்திலிங்கம், முனியப்பதாசன். ஐ.சாந்தன், நோயல் நடேசன், அங்கையன், சுதாராஜ், அராலியூர் நா.சுந்தரம்பிள்ளை, வ.ந.கிரிதரன், எனப் பட்டியல் நீளுகிறது.
புண்ணியலிங்கம் ‘மாஸ்டர்’!
யாழ் இந்துக் கல்லூரி என்றதும் எனக்கு நினைவில் வரும் ஆசிரியர்களிலொருவர் புண்ணியலிங்கம் ‘மாஸ்டர்’. இணுவில் பக்கமிருந்து வந்தவரென்று ஞாபகம். உயரமான ஆகிருதி. சிரித்த முகமும், சந்தனப்பொட்டுமாகக் காட்சியளிப்பார். அவர் சிரிக்கும்போது வாயெல்லாம் பற்கள் தெரியும். விகடன் ‘கார்ட்டூன்’களில் வருபவர்கள் சிரிப்பதுதான் ஞாபகத்துக்கு வரும். அவர் எங்களுக்கு ஒன்பதாம் வகுப்பில் பௌதிகவியல் பாடம் எடுத்தவர். அந்த ஒரு வருடம்தான் அவரிடம் நான் பாடம் எடுத்திருக்கின்றேன். ஆனால் அவர் மறக்க முடியாத ஆசிரியர்களிலொருவராக என் நினைவில் பதிந்து விட்டதற்குக் காரணம் அவர் பாடங்களை மாணவர்களுக்குக் கற்பிக்கும் முறைதான். அவர் கற்பிக்கும்போது கற்பிக்கும் விடயங்களை நடைமுறையில் செய்து காட்டிக் கற்பிப்பதில் விருப்பமுள்ளவர்.
ஒருமுறை ‘டைனமோ’ எவ்விதம் வேலை செய்கிறதென்று காட்டுவதற்குத் தனது சைக்கிளை வகுப்பறைக்குக் கொண்டுவந்து ‘டைனமோ’ எவ்விதம் வேலை செய்கிறது என்பதைச் செய்து காட்டினார். சைக்கிள் டைனமோ எவ்விதம் சில்லின் இயக்கச் சக்தியை மின்சாரமாக மாற்றி, சைக்கிளுக்கு ஒளியை வழங்குகிறது என்பதை விளங்கப்படுத்தினார். மாணவர்களுக்குக் கற்பிக்கும் விடயம் நன்கு புரியவேண்டுமென்பதற்காக, தனது சைக்கிளைக் கொண்டுவந்து பாடம் நடத்திய ஆசிரியரை நினைக்கும் தருணங்களில் யாழ் இந்துக்கல்லூரியில் கழிந்த என் மாணவப் பருவத்தை நினைத்துக்கொள்வேன்.
சந்தியாப்பிள்ளை ‘மாஸ்டர்’
சந்தியாப்பிள்ளை ‘மாஸ்;டரிடம்’ ஒன்பதாவது வகுப்பில் தமிழ் படித்திருக்கின்றேன். இவர் தமிழ் ஆசிரியரல்லர். சாரணர் இயக்கம், விளையாட்டு இவைதாம் இவரது பிரதானமான துறைகள். பாடத்தைச் சுவையாகப் படிப்பிப்பதற்காக அவர் அவ்வப்போது சில குட்டிக்கதைகளைக் கூறுவதுண்டு. சில கதைகள் மாணவர்களின் வயதுக்கு மீறியவையாகவும் இருப்பதுண்டு. ஆனால் ஒருபோதுமே அவற்றை அவர் விரசமாகக் கூறுவதில்லை. வேடிக்கையை மையமாக வைத்தே அவற்றைக் கூறுவார். ஆனால் சந்தியாப்பிள்ளை ‘மாஸ்டர்; என்றதும் எனக்கு முதலில் ஞாபகம் வருவது இவை அல்ல. இன்னுமொரு விடயம். அது: எங்களது வகுப்பு குமாரசாமி மண்டபத்துக்கு, கே.கே.எஸ்.வீதியிலிருந்து வரும் வீதியின் வடக்குப் பக்கத்திலிருந்தது. எங்கள் வகுப்பு யன்னல் வழியாக அவ்வீதியையும், அங்கு நடப்பவற்றையும் காணலாம். அவ்வப்போது அவ்வழியால் இறந்தவர்கள் சிலரது இறுதி ஊர்வலங்கள் செல்வதுண்டு. அவ்விதமான சந்தர்ப்பங்களில் சந்தியாப்பிள்ளை ‘மாஸ்டர்’ மாணவர்கள் அனைவரையும் எழுந்து நிற்கச் சொல்லி, அவ்வழியால் இறுதி யாத்திரை செல்லும் அந்த மனிதருக்கு அஞ்சலி செய்ய வைப்பார். ஒருவரின் அந்திம யாத்திரைக்குச் சந்தியாப்பிள்ளை ‘மாஸ்;டர்’ காட்டிய அந்த மானுட நேயப்பண்பு எனக்கு அவ்வயதில் ஆச்சரியத்தை மூட்டியது. இன்றும்தான்.
யாழ் இந்துக்கல்லூரி: மேலும் சில நினைவுகள்…….
யாழ் இந்துக்கல்லூரி கல்விக்கும், விளையாட்டுக்கும் பெயர் போன கல்லூரிகளிலொன்று. நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது, யாழ் இந்துக் கல்லூரியின் கிரிக்கட் குழுவில் எங்களைக் கவர்ந்தவர்களாக சூரி, குகன் (பொன்னம்மான்) ஆகியோரையே நான் குறிப்பிடுவேன். இவர்களிருவரும் சொட்டுவதில்லை. பந்தை விளாசுவதில் (ர்வைவநசள) வல்லவர்கள். சில நேரங்களில் நின்று பிடிப்பார்கள்;. சில நேரங்களில் ஒரு சில விளாசல்களுடன் போய் விடுவார்கள். பந்து வீச்சாளர்களில் எனக்குப் பிடித்தவர்களாக நிருத்தானந்தனையும், வசந்தனையும் குறிப்பிடுவேன். சூரி சுழல் பந்து வீசுவதில் வல்லவர். ஹட்டன் நாஷனல் வங்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த சூரி பின்னர் யாழ்நகரில் இலங்கை இராணுவத்தின் ஷெல் தாக்குதலொன்றில் கொல்லப்பட்டதாகப் பின்னர் கேள்விப்பட்டேன். குகனின் அண்ணன் நரேன் (யோகி). யோகியின் கிரிக்கட் ஆட்டம் குகனைப் போல் விளாசுதல்லல்ல. நிதானமானது. ஆனால் நரேன் விளையாட்டில் பல சாதனைகளைச் செய்தவர். குண்டெறிதல், ஈட்டியெறிதல் மற்றும் இன்னுமொரு விளையாட்டு நீளம் பாய்தல் அல்லது உயரம் பாய்தல் ஆகியவற்றில், பல வருடங்களுக்கு முன்னர் அவரது தந்தை ஆற்றிய சாதனைகளை முறியடித்தவர். அவ்விதம் முறியடித்த நிகழ்வுகளை சிறுவனாக நின்று அவதானித்திருக்கின்றேன். நரேனுடைய தந்தையார் யோகரத்தினம் ஒரு நில அளவையாளர். தாயார் யாழ் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியை. எனது அம்மாவும் யாழ் இந்து மகளிர் கல்லூரியின் ஆசிரியைகளிலொருவர். அம்மா யாழ் இந்துக் கல்லூரியில் ஆரம்பத்தில் சிறிது காலம் ஆசிரியையாகவும் இருந்திருக்கின்றாரென்று கூறியதாக ஞாபகம். அம்மாவின் திருமணத்துக்கு திருமதி யோகரத்தினம் பரிசாகக் கொடுத்திருந்த வெள்ளித்தட்டுகளும், வெள்ளிக் குவளைகளும் நான் நாட்டை விட்டுப் புறப்படும் வரையில் வீட்டிலிருந்தன. அவற்றில் வெள்ளித்தட்டொன்று இன்னும் என்னுடைய கடைசித் தங்கையிடம் உள்ளது.
துடுப்பெடுத்தாட்ட விளையாட்டில் ‘சொட்டு’வதற்குப் பெயர் பெற்றவர் ரவீந்திரன் ( ‘விட்டமின்’ ) என்று அழைக்கப்பட்டவர். விளையாட்டை இழுத்தடித்து வெற்றி, தோல்வி இல்லாமல் செய்ய வேண்டுமென்றால் இவரைத்தான் நம்பியிருப்பார்கள். இவர் பின்னர் யாழ் இந்துக் கல்லூரிக் கிரிக்கட் குழுவின் தலைவராகவுமிருந்தவர்.
அப்பொழுதெல்லாம் தெற்கிலிருந்து ‘ரோயல் கல்லூரி’ புனித தோமஸ் கல்லூரி போன்ற கல்லூரிகளிலிருந்து துடுப்பெடுத்தாட்டக் குழுக்கள் யாழ் இந்துக் கல்லூரிக்கு வந்து யாழ் இந்துவுடன் மோதுவது வழக்கம். அவ்விதம் எங்களது மாணவப் பருவத்தில் வந்த ஒருவர் பின்னர் இலங்கை அணி ‘டெஸ்ட் மாட்ச்’சுகளில் விளையாடத் தொடங்கியபோது ஆடிப் புகழ் பெற்ற விளையாட்டு வீரர்களிலொருவர். அவர்: அர்ஜுனா ரணதுங்க.
ஒருமுறை யாழ் சென்ரல் கல்லூரி மைதானத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்தும், பாகிஸ்தானிலிருந்தும் வந்திருந்த 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுடன், யாழ் பாடசாலைகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மோதியது ஞாபகத்திலுள்ளது. யாழ் இந்துக் கல்லூரியிலிருந்து சூரி யாழ் மாணவர் குழுவில் விளையாடினாரென்று நினைக்கின்றேன். பாகிஸ்தான் குழுவில் விளையாடிய மாணவர்களிலொருவர் பின்னர் பாகிஸ்தான் ‘டெஸ்ட் மாட்ச்’சுகளில் விளையாடிய ஜாவிட் மியாண்டாட். ஆஸ்திரேலிய அணியில் மைக்கல் லாங் என்பவர் இரு தடவைகள் பந்தைப் பிடிக்கச் சந்தர்ப்பங்கள் கொடுத்து, அதிருஷ்ட்டவசமாகத் தப்பி 158 ஓட்டங்கள் எடுத்ததும் இன்னும் நினைவிலுள்ளது.
யாழ் இந்துக் கல்லூரி உதைபந்தாட்ட விளையாட்டிலும் பெயர் பெற்றது. எங்கள் காலகட்டத்தில் எனக்குப் பிடித்த இருவர் கண்ணாடி ராஜேந்திரன், பாசையூரைச் சேர்ந்த விமலதாசன் (என்றுதான் நினைக்கின்றேன்). கண்ணாடி உதைப்பந்தாட்டக் குழுவின் முன்னிலை ஆட்டக்காரராக விளையாடுபவர். பந்து கிடைத்துவிட்டால் விரைவாக அதைக் கொண்டு சென்று ‘கோல்’ அடிப்பதில் வல்லவர். மகாஜனாக் கல்லூரியும் உதைப்பந்தாட்டத்திற்குப் பெயர்பெற்ற கல்லூரி. அக்காலகட்டத்தில் கண்ணாடியைப் போல் அங்கு விளையாடியவர் சிவானந்தராஜா (‘முயல்’ என்று அழைப்பார்கள்).
விமலதாசன் எதிராளியிடமிருந்து பந்தினை வெட்டி, ஏய்த்து, சாதுரியத்துடன் (Dodge) விளையாடுவதில் வல்லவர். இவரிடம் பந்து கிடைத்துவிட்டால் அதனை அவர் விளையாடும் அழகு பார்ப்பதற்கு அற்புதமானது. அக்காலகட்டத்தில் அவரது ஆட்டத்தினை விரும்பி இரசிப்பேன்.
குழம்பிய சென்ரல் / யாழ் இந்து துடுப்பெடுத்தாட்டப் போட்டி!
அதிபர் சபாலிங்கம் என்றதும் நினைவுக்கு வரும் இன்னுமொரு விடயம்: யாழ் இந்து / சென்ரல் துடுப்பெடுத்தாட்டப் போட்டி. நான் குறிப்பிடும் போட்டி யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடந்தது. மிகவும் உணர்ச்சிகரமாக நடைபெற்ற போட்டி இடையில் குழம்பி, ‘பிட்ச்’ எல்லாம் எரிக்கப்பட்டது. அப்பொழுது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். யாழ் இந்துக் கல்லூரியின் புகழ்பெற்ற ‘கிரிக்கட் கீப்பராக’ விளங்கிய புவிராஜசிங்கத்தின் வீட்டுப் பகுதியை அண்டிய எல்லையில் அதிபர் சபாலிங்கத்தின் மகன் உதயலிங்கத்தின் தலைமையில் மாணவர்களாகிய நாங்கள் இந்துக்கல்லூரிக்கு ஆதரவாகக்கோசம் எழுப்பிக்கொண்டிருந்தோம். அப்பொழுது சபாலிங்கம் அவர்கள் சென்ரல் கல்லூரி அதிபராக இருந்தவர். அன்று யாழ் இந்துவின் வேகப்பந்து வீச்சாளராகப் பந்துகளை எறிந்துகொண்டிருந்தவர் நிருத்தானந்தன். அந்தப் போட்டி இடையில் சண்டியன் கொட்டடி மணியம் புகுந்து குழப்பியதாக நினைவு. யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களில் ஒருவரும், எந்த நேரமும் யாழ் இந்துக் கல்லூரியைச் சுற்றி வளைய வந்துகொண்டிருப்பவருமான ‘சீனி’ யாழ் இந்துக்காக அன்று சன்னதமாடிக்கொண்டிருந்தார்.
போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபொழுது தனது மகன் உதயலிங்கம் (உதயலிங்கம் யாழ் இந்து மாணவர்; லண்டனில் சைக்கிள் விபத்தொன்றில் பல வருடங்களுக்கு முன்னர் மரணித்து விட்டார்.) தலைமையில் யாழ் இந்து மாணவர்கள் கோஷங்கள் எழுப்பிக்கொண்டிருந்ததைக் கவனித்துக் கொண்டிருந்த சென்ரல் கல்லூரி அதிபரான சபாலிங்கம், போட்டி குழம்பியதும், உதயலிங்கத்தின் கன்னத்தில் இரண்டு தட்டு தட்டி இழுத்துக்கொண்டு சென்றதை கவனித்துக்கொண்டிருந்தேன்.
யாழ் இந்துக் கல்லூரி என்றதும் எனக்குக் கற்பித்த ஏனைய ஆசிரியர்கள் பலரின் நினைவுகளும் கூடவே தோன்றுவது வழக்கம். சோமசுந்தரம் மாஸ்டர், துரைராஜா மாஸ்டர், சிவஞானசுந்தரம் மாஸ்டர், ஆறுமுகசாமி மாஸ்டர், வேலும் மயிலும் மாஸ்டர், முத்துக்குமாரசாமி மாஸ்டர், மரியதாஸ் மாஸ்டர், குமாரசாமி மாஸ்டர், கருணாகரன் மாஸ்டர், மகேஸ்வரன் மாஸ்டர், மகேந்திரன் மாஸ்டர், சிவராஜா மாஸ்டர், சுந்தரதாஸ் மாஸ்டர்….. என்று கூறிக்கொண்டே போகலாம். வாகன விபத்தொன்றில் மரணித்த ஆய்வு கூட உதவியாளராகக் கடமையாற்றிய மலையகத்தைச் சேர்ந்த கணபதியையும் மறக்க முடியாது. மாணவர்களுக்கு மிகவும் ஒத்துழைத்த அவரது சிரித்த முகமும், நேர்த்தியாக வாரப்பட்ட தலைமுடியும் இன்னும் நினைவில் நிழலாடுகின்றன.