நயப்புரை: தெளிவத்தை ஜோசப்பின் – மனிதர்கள் நல்லவர்கள்

தெளிவத்தை  ஜோசப் எழுத்தாளர் முருகபூபதிஇந்த   ஆண்டு     தமிழகத்தின்    விஷ்ணுபுரம் விருதைப்பெற்றுக்கொள்ளும்  தெளிவத்தை  ஜோசப் இலங்கை மலையகத்தின் மூத்த எழுத்தாளர்.  இவரை உங்களில் பலர் 2009 ஆம் ஆண்டு  நாம் அவுஸ்திரேலியாவில்  நடத்திய ஒன்பதாவது எழுத்தாளர் விழாவில் சந்தித்திருப்பீர்கள். வெகு சுவாரஸ்யமாகப்பேசுவார்.  அவரது எழுத்துக்களும் சுவாரஸ்யமானவை. ‘மனிதர்கள்  நல்லவர்கள்’  என்ற சிறுகதையை  அவர்  மல்லிகையில்  பல வருடங்களுக்கு முன்னர்  எழுதியிருக்கிறார்.  காலத்தை முந்திய கதையென்றாலும் மனித உணர்வுகள் இன்றும் அப்படியே வெவ்வேறு வடிவங்களில்தான் இருக்கின்றன. அதனால்  காலத்தை வென்றும் வாழும் கதையாக  என்னை கவர்ந்தது. அனைவரும் ஒன்றாகிக்களிக்க ஏதாவது ஒரு பண்டிகை வரவேண்டியிருக்கிறது. அது தீபாவளி இந்தக்கதையில். இங்கு நாமும் ஒன்றாக கூடிக்களிக்க இந்த அமர்வு தேவையாக இருக்கிறது. அவுஸ்திரேலியாவின்  இயந்திரமயமான வாழ்க்கை வாழும் எம்மவருக்கும்  குடும்ப ஒன்று கூடல்கள்  வாராந்தம் அல்லது மாதாந்தம் அல்லது வருடாந்தம் தேவையாக இருக்கிறது. இலங்கையில் மலையகத்தில் பண்டிகைகள்தான் உறவினர்கள் ஒன்று கூடுவதற்கு சிறந்த நிகழ்வாகியிருக்கிறது என்பதை கதையின் தொடக்கத்திலேயே சொல்லிவிடுகிறார். அடுத்த வரியை பாருங்கள்: பஸ்ஸில் ரயிலில் தியேட்டரில் ஒரு நல்ல இடம் பிடித்துக்கொள்வதற்கு முட்டிமோதும் அளவுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல இடம் பிடிப்பதற்கு நம் மக்கள் முட்டுவதில்லை. மோதுவதில்லை. இந்த அங்கதம்  எந்தவொரு நாட்டு மக்களுக்கும்  பொருந்துகிறது.

பதுளையில் உள்ள தேயிலைத்தோட்டங்களுக்குச்செல்லும் பஸ்வண்டிகளையும்  அங்கதச்சுவையுடன்தான்  சித்திரிக்கிறார். பஸ்வண்டிகளை மாநகரசபை மின்விளக்குகளுக்கு ஒப்பிடுகிறார். அந்த விளக்குகள் இருந்தாற்போல் எரியும் இருந்தாற்போல் அணைந்துவிடும். இவ்வளவு விடயங்களும் சிறுகதையின் முதற் பக்கத்திலேயே வந்துவிடுகின்றன. வசனங்கள்  சின்னச்சின்ன சொற்களினால் இணைகின்றன. அதனால்  நீண்ட  வாக்கியங்கள் இல்லை.

கதையின் மூன்றாவது வரி: கை நிறைந்த பைகளும் பை நிறைந்த சாமான்களுமாய்… என கவித்துவமாக தொடங்குகிறது. பண்டிகைக்காலத்தில்  பஸ் நிலையம் எப்படி இருக்கும்  என்பதை  ஒரு ஓவியம்போலவே சித்திரிக்கின்றார். இலங்கையில்  நீங்கள் சிங்களப்பிரதேசங்களில் கவிக்கொலகாரயாவை  பார்த்திருப்பீர்கள். பஸ் நிலையங்களில்  பிரசுரங்களை வைத்துக்கொண்டு இராகத்துடன் பாடிப்பாடி விற்பார்கள்.

அவற்றில் ஒரு உண்மைச்சம்பவம்  பாட்டாக புனையப்பட்டிருக்கும்.  கிளிநொச்சி உருத்திரபுரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர்  நடந்த கோகிலாம்பாள் கொலைச்சம்பவமும்    இவ்வாறு பாடலாக புனையப்பட்டு  பஸ்நிலையங்களில் பாடப்பட்டதாக புஷ்பராணி தமது அகாலம்  நூலில் பதிவுசெய்துள்ளார்.

இலங்கையில்  தம்புள்ள  தொகுதி முன்னாள் எம்.பி. டி.பி. தென்னக்கோன் சமூக சேவைகள் அமைச்சராகவும் கலாசார அமைச்சராகவும் இருந்தவர். ஒரு தேர்தலில் தோல்வியுற்றபின்னர் அவரும் பஸ்நிலையங்களில்  கவிக்கொல விற்று பாடிக்கொண்டிருந்தார். தெளிவத்தையின் கதையிலும் அப்படி ஒரு காட்சி வருகிறது. ஒரு தெருப்பாடகன், பீடா வெற்றிலை விற்பவர்,  பேனை கண்ணாடி விற்பவர், பொம்பாய் நைஸ் மற்றும்  டொபி விற்பவர்கள் இவர்களின்  கூக்குரலுக்கு  மத்தியில் ஐயா தர்மஞ் சாமி என்ற பிச்சைக்காரனின் குரலும் கேட்கிறது. எப்படி  சன்னமாக… கிணற்றுள்ளிருந்து கேட்பது போல்.  என எழுதுகிறார். கதைசொல்லிக்கு சிகரட் தேவைப்படுகிறது. ஆனால் அவர் கேட்ட சிகரட் நடைவியாபாரியிடம்  இல்லை. தருமஞ்சாமி – மீண்டும் சன்னமான குரல். காட்சியில்  ஒரு கமிரா கோணம். பஸ்ஸில் நிற்கும் ஒருவர் ‘ அட ராமா பிச்சையா கேட்கிறாய் இந்தச்சத்தத்தில் நீ இவ்வளவு மெதுவாகக் கேட்டால் யார்  காதில் விழும். சற்றுப்பலமாகக் கத்தேன்” என்கிறார்.  அவரிடம் கருணை இருப்பதாக கதை சொல்லி நினைக்கிறார். ஆனால் சொன்னவரின் கை மட்டும் சட்டைப்பக்கம் நகரவில்லை. கையை எடுத்தால் விழுந்துவிடுவோம் என்ற எண்ணமாக இருக்கும் எனச்சொல்கிறார் கதைசொல்லி.  12 வரிகளுக்குள் ஒரு திரைப்படக்காட்சியே வந்துவிடுகிறது. அனுபவித்துப்படித்துப்பாருங்கள்.

சிறந்த சிறுகதை எழுத்தாளர்களினால்  திரைக்கதை  எழுத முடியும்  எனச்சொல்வார்கள். தெளிவத்தை ஜோசப் அவர்கள் புதியகாற்று என்ற ஈழத்து திரைப்படமொன்றுக்கு திரைக்கதை வசனம் எழுதியவர். காமினி பொன்சேக்கா என்ற சிங்கள திரையுலக கலைஞரும் ஒரு தமிழ்ப்படம் எடுக்க முயற்சித்து தெளிவத்தையுடன் கதை தொடர்பாக கலந்துரையாடியிருக்கிறார். அந்த பஸ்ஸில் எத்தனையோ பாத்திரங்கள், ஆனால் அந்தப்பிச்சைக்காரனைப்பற்றித்தான் பலரும் விமர்சனம் செய்கிறார்கள். கதைசொல்லி  அவனது தோற்றத்தை வர்ணிக்கிறார். சிகரட்டுக்கு வைத்திருந்த ஒரு ரூபாவில் சிகரட் வாங்கியிருந்தால் அது எவருக்கும் பிரயோசனமில்லாமல் புகைந்துபோயிருக்கும். தொலையட்டும் பாவம் என்று அதனை அந்தப்பிச்சைக்காரனுக்கு கொடுக்கிறார். இதனைப்பார்த்த ஏனைய பயணிகள் இப்பொழுது பிச்சைக்காரனை விமர்சிப்பதை விட்டுவிட்டு ஒரு ரூபாய் பிச்சை இட்ட கதைசொல்லியை விமர்சிக்கிறார்கள்.  பஸ் கிளம்பிவிட்டது.  ( இந்த  வார்த்தையையும்  கவனியுங்கள். கிளம்பிவிட்டது  என்ற மொழிவழக்கு மலையகத்திலிருக்கிறது. எம்மில் பெரும்பாலானோர் புறப்பட்டுவிட்டது என்போம், வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வீட்டை விட்டு வெளிக்கிடும்பொழுது இறங்கிவிட்டோம்  எனச்சொல்வார்கள். பல சொல் ஒரு பொருள் – கிளம்பியாச்சு- புறப்பட்டாயிற்று – வெளிக்கிட்டோம் – இறங்கிட்டோம்….இன்னும் இருக்கலாம்) கதையில் மீண்டும் மற்றுமொரு கமிராக்கோணம்: இன்று  தீபாவளி என்று அந்தக்காட்சி தொடங்குகிறது.

எப்படி ஆரம்பிக்கிறார் என்று பாருங்கள்: ‘கிழக்கு வெளுக்கும் முன்பதாகவே தோட்டம் வெளுத்துக்கொள்கிறது. லயங்கள் வெளிச்சம் காட்டுகின்றன’. எனக்கு மணிரத்தினத்தின் ரோஜா படத்தின் காட்சியொன்று உடனே நினைவுக்கு வந்தது. ஸ்ரீராமின் ஒளிப்பதிவுடன் இந்த இரண்டு வரிகளை நினைத்துப்பார்த்தேன். விடியுமுன்னர் குளித்துவிடவேண்டும் என்னும் வேகம் தலையில் தண்ணீரை அள்ளி ஊற்றிக்கொள்ளும் அவசரத்தில் தெரிகிறது.  என தெளிவத்தை  எழுதுகிறார். மலையகத்தின் பனிக்குளிரை சில வாக்கியங்களிலேயே சித்திரித்துவிடுகிறார். ஒரு கதையின்  காட்சியை பாத்திரங்கள் பேசும் உரையாடல்களின் மூலமாகவும் சித்திரிக்க முடியும்.  சம்பவக்கோர்வையினூடாகவும் சொல்ல முடியும். நீட்டி முழக்காத செப்பனிட்ட இறுக்கமான சொற்களிலும் படிமமாக காண்பிக்கமுடியும். தெளிவத்தையின்  படிமக்கலை அவரது கைவந்த கலை.

தீபாவளி வந்தால் சின்னஞ்சிறுசுகளுக்கு மட்டுமல்ல லயத்தில் அலையும்  நாய்களுக்கும் கொண்டாட்டம்தான் என்கிறார். அங்கே மனிதர்களையும் நாய்களையும் மட்டும்  காட்சிப்படுத்தாமல் கடவுளையும் அழைத்துவிடுகிறார். கடவுள் இருக்கிறாரா? என நாத்திகம் பேசிய மறுகணமே இருக்கிறார். உயர்ந்த ஓட்டு வீட்டுக்கருகே ஓட்டைக்குடிலும் இருக்கத்தானே வேண்டும் என்பது கடவுளின் சித்தமாக்கும் என்று வேதாந்தம் சொல்லப்படுகிறது. கதைசொல்லி தீபாவளிக்கு முதல் நாள் பஸ் நிலைய காட்சியையும்  தீபாவளியன்று தோட்ட லயத்துக்காட்சிகளையும் மனதில் அசைபோடுகிறார். மறுநாள் மீண்டும் பஸ்நிலையம் வருகிறார். தீபாவளிக்கு முதல் நாள் கண்ட பிச்சைக்காரனைத்தேடுகிறார். அவனைக்காணவில்லை. பஸ் நிலைய ஹோட்டல் முதலாளி ஏற்கனவே நண்பர். பேசுவதற்கு பிடித்துக்கொள்கிறார். அவரும்  முதல் நாள் ஒரு ரூபா கொடுத்து வடை கேட்ட அந்தப்பிச்சைக்காரனைப்பற்றித்தான் விமர்சனம் செய்கிறார். அங்கே தேநீர் தயாரிப்பவனும் கடுமையான வார்த்தைகளினால் அந்தப்பிச்சைக்காரனை திட்டுகிறான். பிச்சைக்காரனுக்கு எப்படி ஒரு ரூபா கிடைத்திருக்கும் என்பது  ஹோட்டல் முதலாளியினதும் தேநீர் தயாரிக்கும் சர்வரினதும்  சந்தேகம்.
ஆனால் அதனை தீபாவளிக்கு முதல் நாள் அந்த ஒரு ரூபாவை பிச்சையிட்ட கதைசொல்லி-உளுத்துப்போயிருக்கும் ஓட்டைக்குடிலுக்கு ஓடு போடப்போய் குடிலையே உடைத்துவிட்ட குற்ற உணர்வுடன் நடக்கிறார். பிச்சைக்காரனுக்கும் முதலாளிக்கும் தனக்கும் இடையே இருப்பது என்ன என்ற சுயவிசாரணையிலும் சுயவிமர்சனத்திலும் கதைசொல்லி  ஈடுபடுகிறார்.

இதுபோன்ற  வாழ்வியல் அனுபவங்கள் உங்களில் பலருக்கு நேர்ந்திருக்கும். நண்பர் பேராசிரியர் நுஃமான் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர்  நண்பர் சாந்தனின் ஒரே ஒரு ஊரிலே சிறுகதைத்தொகுதியின் வெளியீட்டு விழாவில் பேசும்பொழுது ஒரு சம்பவத்தை சொன்னார். கல்முனையில் ஒரு இலக்கியக்கூட்டத்திற்காக  லவுட்ஸ்பீக்கர் செட்டை வாடகைக்கு விடும் ஒரு தமிழரின் கடைக்குச்சென்றுள்ளார். அவருடன் வந்தவர் கவிஞர் சடாட்சரன். நுஃமானைப்பார்த்தால் தமிழர் என்ற தோற்றம் லவுட்ஸ்பீக்கர் கடைக்காரருக்கு. நுஃமான் லவுட்ஸ்பீக்கர் மைக் முதலானவற்றை வாடகைக்கு கேட்கிறார். உடனே தமிழரான அந்தக்கடைக்காரர் சேர்  நீங்க கேட்கிறதால தாரன். ஆனா இந்த காக்காமாருக்கு கொடுக்கமாட்டேன். என்றாராம். எனக்கும் இப்படி ஒரு அனுபவம் கொழும்பு பஸ்ஸில் நடந்தது. ஒரு தமிழ் இளைஞர் நெற்றியில் திருநீறு பூச்சுடன் வந்தார். அவரும் நானும் நின்றுகொண்டு வந்தோம். ஒரு சிங்களவர் தான்  இறங்கும் இடம் வந்ததும்  என்னை அருகே அழைத்து தானிருந்துவந்த ஆசனத்தை எனக்குத்தந்துவிட்டு சொன்னார்… மாத்தையா மம பறதெமழுட சீட் தென்னி நே. ஒயா வாடிவெண்ட…” ( தமிழ் அர்த்தம்: ஐயா… நான் பறத்தமிழர்களுக்கு ஆசனம் கொடுக்கமாட்டேன். நீங்கள் அமருங்கள்.) நல்லவேளை  அந்தச்சிங்களம் புரியாமல் அந்த திருநீற்றுப்பூச்சு இளைஞன் நின்றுகொண்டிருந்தான். அந்த இடத்தில்  என்ன செய்வது என்ன பேசுவது எனத்தெரியாமல் நான் மனதுக்குள் திணறிக்கொண்டிருந்தேன். தெளிவத்தையின்  பார்வையில்  மனிதர்கள் நல்லவர்கள்தான்.  ஆனால்  காலமும் சூழலும் சந்தர்ப்பங்களும்தான்  அவர்களை கெட்டவர்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன.  எத்தனை கோணம்? எத்தனை பார்வை? இந்த வாழ்க்கையில்தான்  எத்தனை முடிச்சுகள்?  இதனைத்தான் சில நேரங்களில் சில மனிதர்கள்  எனச்சொல்கிறோமோ?

( பிற்குறிப்பு:  மெல்பனில் அண்மையில் நடைபெற்ற சிறுகதை இலக்கியம் அனுபவப்பகிர்வுக்காக எழுதப்பட்டது – தெளிவத்தை ஜோசப்பின் சிறுகதையை படித்துப்பாருங்கள்   அத்துடன்    இதனையும்  http://www.youtube.com/watch?v=92UiSzY_kx8         அழுத்திப்பாருங்கள் )


சிறுகதை:  மனிதர்கள் நல்லவர்கள்
 
– தெளிவத்தை ஜோசப் –

தெளிவத்தை  ஜோசப் நாளைக்குத் தீபாவளி .

பண்டிகை நெரிசலில் பஸ் திணறியது.
கை நிறைந்த பைகளும், பை நிறைந்த சாமான்களுமாய், ஆட்கள் முட்டி மோதிக்கொண்டிருந்தனர்.

உத்தியோகம் என்று பிரித்துவிட்ட பிறகு பெற்றவர் பிள்ளைகளுடன் கணவன் மனைவி மக்களுடனும் – உற்றார் உறவினருடனும் ஒன்றாகிக் களிக்க ஏதாவது ஒரு பண்டிகை வரவேண்டியிருக்கிறது.

“இந்த பஸ்சை விட்டாச்சுன்னா அடுத்தது அஞ்சுக்குத்தான்” என்றபடி தனது முழுப்பலத்தையும் காட்டி ஒருவர் முண்டி முன்னேறுகிறார்.
பஸ்ஸில் – ரயிலில் – தியேட்டரில் ஒரு நல்ல இடம் பிடித்துக் கொள்வதற்கு முட்டி மோதும் அளவுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல இடம் பிடிப்பதற்கு நம் மக்கள் முட்டுவதில்லை. மோதுவதில்லை.

அது, தானே வந்து தானே போய் விடுகிறது! பதுளையில் இருந்து சுற்றி உள்ள தேயிலைத் தோட்டங்களுக்கு நடக்கும் பஸ் சேவை மாநாகரசபை விளக்குகள் போன்றவை. இருந்தாற்போல் எரியும் இருந்தாற்போல அணைந்து விடும்.

ஆகவே அகப்பட்ட பஸ்ஸில் ஏறிக்கொள்ள மக்கள் முந்துவதும் முண்டியடிப்பதும் நியாயம் தான்! எனக்கும் ஒரு இடம் கிடைத்து விட்டது.

“குரங்குமலைத்தோட்டத்திலே
போட்ட போடுங்க…..கணக்கன்   குடல்   சரியக்  குப்புற விழுந்த
பாட்டக் கேளுங்க……”

எங்கோ ஒரு தோட்டத்தில் கணக்குப்பிள்ளை வெட்டுப்பட்ட சங்கதியை பாட்டாக எழுதி அதையே சிறு புத்தகமாகவும் அடித்தது, சில அடிகளைப் பாடிக்காட்டி விலை கூறி விற்கின்றார் ஒருவர்.

இடுப்பளவில் தொங்கும் வெற்றிலைத் தட்டில் ஒரு சில்லறைக் கடையே இருக்கிறது. வெற்றிலைக்கடையை கழுத்தில் மாட்டி வைக்கும் அந்தக் கையகலக் கறுப்புப் பட்டியில் கலர்கலராய் வேலைப்பாடுகள் செய்து வைத்துள்ளார். இடையிடையே தொங்கும் ரஸகுண்டுகளுடன் சர்க்கஸ் பபூன் மாதிரி தலையிலே குஞ்சம் வைத்த தொப்பி. கால்களுடன் ஒட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் நீள் கால் சட்டை. கணுங்கால்களில் நாட்டியக்காரி போல் மணிச்சலங்கை.

தாளத்துடன் ஒலிக்கும் நாலைந்து வரிகளைக் கத்திப் பாடிக் கொண்டு கால் சலங்கை ஒலி எழுப்ப குதிக்காலைத் தரையில் உதைத்து ஊன்றி பஸ்ஸைச் சற்றி வரும் காட்சி ஜோடித்த ஒரு சின்னத்தேர் போலிருக்கும்.

பாடிப்பாடி தொண்டை கட்டிக் கொண்ட நேரங்களில் வெற்றிலையைக் கையில் எடுத்து காம்புடன் நரம்பை உரித்து வீசிவிட்டு வட்டமாய் இருக்கும் தட்டிலிருக்கும் சிகரெட் டினகளிலிருந்து கலர் கலராய் ஏதேதோ விஷயங்களைக் கிள்ளி பொட்டுப் பொட்டாய் வெற்றிலையில் வைத்து மடித்து இன்னொரு டின்னிலிருந்து ஒரு கிராம்பை எடுத்து மடிப்பில் குத்தித் தூக்கிக் காட்டி “ஹாய் ஜில்” என்பார்.
ஒரு மலிவான மணம் மூக்கில் ஏற பொட்டுப் பொட்டாய் அவர் கிள்ளி வைக்கும் விதமும், மடித்தெடுத்துக் கிராம்பைக் குத்தும் வித்தையும் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு “ஜில்” வாங்கி மெல்லாமல் விடமாட்டார்கள்.

“ஜில்” காரர் பதுளைப் பக்கங்களில் வெகு பிரச்சித்தம்.

ஜில் காரர் போடும் பாட்டுச்சத்தம் போதாது என்றோ என்னவோ “கண்டி ராஜன்” கதையை சிங்களத்தில் பாட்டாகப் பாடிக்கொண்டு புத்தகம் விற்கிறான் இன்னொருவன்.

தமிழ்ப்பாட்டு எஞ்சின் பக்கம் கேட்டால் சிங்களப்பாட்டு பின் பக்கம் கேட்கும்.

“எஸ் கண்ணாடி மெசப் பீய, பவுண்டின் பேனா….”

பொட்டணிக்காரனின் காட்டுக்கத்தல்.

“பொம்பாய் நைஸ்….”

“அஞ்சு சதம் டொபி…. அஞ்சு சதம் டொபி…..”

பஸ் ஸ்டாண்ட் வியாபாரிகள் அத்தனை பேரினதும் கூச்சல், பேரம் பேசுவோரின் வினயம்,பயணிகளின் சளசளப்பு ஆகிய இத்தனைக்கும் மத்தியில் “தர்மஞ் சாமி” என்ற குரலும் சன்னமாய்க் கேட்கிறது. கிணற்றுள் இருந்து கேட்பது போல்!

இந்தாப்பா ஒரு பக்கட் சிகரெட் குடு” என்றவாறு ஒரு ரூபாயை நீட்டினேன்.

நான் கேட்ட சிகரட் இல்லாததால் கையை அபிநயத்துடன் ஆட்டிக் காட்டிவிட்டு பஸ்ஸின் மறுபக்கம் மறைந்து விட்டான் நடைக் கடைக்காரன்.

எழுந்து நின்று கால் சட்டைப்பைக்குள் காசைப் போட வசதியோ நினைப்போ இல்லாததால் ரூபாய் வில்லையைக் கையிலேயே வைத்துக் கொண்டேன்.

“தருமஞ் சாமி”

பஸ்ஸின் மறுபக்கத்தில் அதே மெல்லிய குரல்.

“அட ராமா பிச்சையா கேட்கின்றாய்! இந்தச் சத்தத்தில் நீ இவ்வளவு மெதுவாகக் கேட்டால் யார் காதில் விழும். சற்றுப் பலமாகக் கத்தேன்.”

பஸ்ஸுக்குள் ஒருவர் கருணையாய்ப் பேசினார்.

மற்றவர்களுக்குக் கேட்காவிட்டாலும் அவனுடைய பரிதாபக்குரல் அவருக்குக் கேட்டிருக்கிறது. ஆனால் கை மட்டும் சட்டைப்பை பக்கம் நகரவில்லை. கையை எடுத்தால் விழுந்து விடுவோம் என்ற எண்ணமாக இருக்கும்.

பிச்சைக்காரனுடைய கண்கள் ஆர்வத்துடன் அவரைப் பார்க்கின்றன.

அவரை என்பதை விட அவருடைய கையை என்பதே சரி.

பலமாகக் கத்தினால் சிலவேளை போடுவாரோ எண்ணியவன் பலமாகக் கத்த முயன்றான்.

வாய் பெரிதாகத் திறப்பட்டது. கழுத்து நரம்புகள் ஒரு வினாடி விண்ணென்று நின்று தளர்ந்தன. ஆனால் சத்தம் பெரிதாக வரவில்லை.
கத்துவதற்கும் தெம்பு வேண்டாமா?

“சிலுக்…. சிலுக்…..” கையிலிருந்த தகரக்குவளையைக் குலுக்கினான்.

அவனைவிட அது பலமாகச் சத்தமிட்டது.

“ஐயோ பாவம்….. சாப்பிட்டு எத்தனை நாளாயிற்றோ!” பஸ்ஸுக்குள் இன்னொருவர்.

“என்ன யார் பாவம்கறீங்க…..?

“இவனுகளுக்குப் போய் பாவம் பார்க்கலாமா? தகரச்சுண்டு போடுற சத்தத்திலேயே தெரியலயா அதில் எவ்வளவு கெடக்குதுன்னு…… பத்துரூபாய்க்குக் கொறையாது சார்….! எடுக்கிறது மட்டுந்தான் பிச்சை. அந்திக்குப்பாத்தா கள்ளுக்கடையே இவனுக கூட்டமாய்த்தானிருக்கும்…..”

“நீங்க சொல்றது வாஸ்தவங்க…. நேத்து முந்தா நாள் பேப்பர்ல பாத்தீங்களா…. காருல அடிபட்டுக் கெடந்த ஒரு பிச்சக்காரனைத் தூக்கி வேன்ல ஏத்தையில சட்டைக்கு உள்ளே கத்தை கத்தையா வைத்திருந்தானாம்…. பத்தாயிரத்துக்கு மேலே…..”

“ஞாயந்தானங்களே….. ஏன் வைத்திருக்க மாட்டானுக…..! இன்கம்டேக்ஸ் தொல்லையில்லாத வருமானமாயிற்றே.”

நாலைந்து பேராகச் சேர்ந்து கொண்டு ஏதேதோ பேசினார்கள். பிச்சைக்காரனை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.
அவர்களுடைய பேச்சு எழுப்பிவிட்ட ஆர்வத்தில் அவனுடைய தகரக்குவளையும் அவனையும் பார்க்க வேண்டும் என்னும் ஆசை எழுந்தது.

இந்தப் பக்கமும் வருவான்தானே என்று எண்ணிக் கொண்டிருக்கையில்….. “ஐயா புண்ணியவான்களே” என்றபடி தகரக் குவளையைக் குலுக்கினான்.

சத்தம் சற்றுக் கனமாகவே இருந்ததால் அவர்கள் பேசிக் கொண்டதிலும் நியாயம் இருக்கலாம் என்ற ஆர்வத்துடிப்பில் அவனைக் கூடப் பார்க்காமல் குனிந்து குவளையைப் பார்த்தேன்.

பகீரென்றது!

சத்தம் வரவேண்டுமே என்பதற்காக ஆறேழு கூழாங்கற்களைப் போட்டு வைத்திருந்தான் குவளைக்குள்.

அவனுக்குத்தான் சத்தம் போட முடியவில்லை. அதாவது சத்தம் போட வேண்டாமா!

ஐயோ பாவம் என்ற உணர்வுடன் அவனை ஏறிட்டுப் பார்த்தேன்.

அவனுடைய கையிலிருந்த தடிக்கும் அவனுக்கும் வித்தியாசமே இல்லை. கால்சட்டை ஆயிரங்கந்தல். சட்டை அவனுடைய உடலை மறைப்பதற்குப் பதிலாக அந்த எழும்புக்கூட்டை ஒளித்தும் மறைத்தும் கோரமாக்கிக் காட்டியது.

கயிறு கயிராய்த் தொங்கிய கால்களில் முடிச்சு முடிச்சாய் முட்டி நின்ற எழும்புகள். கன்னத்திலும் கழுத்திலும் மேடு கட்டி நின்ற எலும்புக்கடியில் கறுமையாகப் படந்த நிழல் அவனைப் பிரேதமாக்கிக் காட்டியது.

“உஸஸ்”

பிச்சைக்காரன் மிகவும் ஆயாசமாகப் பெருமூச்சு விடுகின்றான்.

இப்போதோ இன்னும் சற்று நேரத்திலோ என்றிருக்கும் அவனைப் பார்க்க எனக்கு மனதை என்னவோ செய்தது.

கையில் இருந்த ஒரு ரூபாயை ஒரு முறை பார்த்துக் கொண்டேன்.

சிகரட் இருந்திருந்தால் இந்நேரம் பாதி புகைந்து போயிருக்கும்.

தொலையட்டும் பாவம் என்று எண்ணியபடி ரூபாவை அவனிடம் நீட்டினேன்.

“மாத்த இல்லீங்க சாமி…..”

“சரி சரி வச்சுக்கோ” என்றேன்.

மெலிந்து நசுங்கிப்போன முகம் காட்டிய நன்றி! கண்களில் மலர்ந்த ஒரு ஜீவன்! மற்ற மற்றவர்களிடமும் ஏதோ முனகுவது தெரிகிறது.
காது செவிடு படும்படி கத்தினாலும் இந்த உலகம் கவனிக்காதே, இவன் என்ன இப்படி….

உங்க மாதிரி நாலு பேர் போட்டா நாலு ரூபா சார். பத்து பேர் போட்டா என்ன ஆச்சு…..”

எனக்கு மிக அருகில் நின்றவர் பொருளாதாரம் கதைத்தார்.

“இந்தப் பயலுகளுக்கெல்லாம் இரக்கம் காட்டக் கூடாது சார்…. வட்டிக்குக் கொடுக்கிறானுகள்…..”

முன்னவனுக்கு ஒத்துப் பாடினார் இன்னொருவர். தானம் ஒன்றும் கொடுக்காத காரணத்தால்.

“நாலுபேர் போட்டால் தானே நாலு ரூபாயாகும். இந்தப் பெரிய கூட்டத்தினுள் அவனுக்கு மனமிரங்கி ஒரு ஐந்து சதம் யார் போட்டார்கள்” என்று எண்ணி அமைதியானேன்.

பஸ் கிளம்பி விட்டது.

இன்று தீபாவளி.

கிழக்கு வெளுக்கும் முன்பதாகவே தோட்டம் வெளுத்துக் கொள்கிறது. லயங்கள் வெளிச்சம் காட்டுகின்றன.

விடியுமுன் குளித்து விட வேண்டும் என்னும் வேகம் தலையில் தண்ணீரை அள்ளி ஊற்றிக் கொள்ளும் அவசரத்தில் தெரிகிறது.
லயத்தின் ஒவ்வொரு காம்பிராவுக்கு முன்னும் ஒவ்வொருவர் அல்லது இரண்டு பேர் குளித்துக் கொண்டிருக்கின்றனர்.
குளிருக்குப் பயந்தவர்கள் அல்லது வாளி வாளியாகத் தண்ணீரைச் சூடாக்கிக் கொள்ளப் போதுமான அளவிற்கு விறகு வைத்திருக்க வசதியுள்ளோர் தவிர்ந்த மற்றவர்கள் வெடவெட வென்று நடுங்கிக் கொண்டு வேக வேகமாகத் தண்ணீரை மொண்டு ஊற்றிக் கொள்ளுகின்றனர்.

சுட்டு வைத்த பலகாரம், வாங்கி வைத்த பட்டாசுக்கட்டு ஆகியவைகளை நாளைக்கு நாளைக்கு என்று நேற்று வரை எதிர்பார்த்த சிறுசுகளுக்கு தூக்கமா வரும்.

தட்டித்தட்டி எழுப்பினாலும் சுருண்டு சுருண்டு படுப்பவர்கள் இன்று வெளிச்சம் வரும் முன்பே எழுந்து விட்டனர். ஆளொன்றும், கொள்ளிக்கட்டை ஒன்றும் பட்டாசுக்கட்டு ஒன்றுமாக வெளியே வந்து “லைசன்” கல்லில் அமர்கின்றனர். பெற்றவர்கள் குளித்து முடித்து பிள்ளைகளை ஏசிப்பேசி இழுத்துக் குளிப்பாட்டி முடிப்பதற்குள் நன்றாக விடிந்து விடுகிறது. புதுப்புது சட்டைகள், அழகழகான பூப்போட்ட கவுன்கள் பாவாடைகள், தலை அலங்காரங்கள் இத்தியாதிகளுடன் சின்னஞ்சிறுசுகள் பட்டுப் பூச்சிகளாய்த் திரிகின்றனர்.

ஒரு கடி கடித்துவிட்டு பணியாரங்கள் வீசப்படுகின்றன. லயத்து நாய்கள் பாடு வேட்டைதான்.

இந்த நாய்களுக்குள்ள மகிழ்ச்சியாவது இந்த தீபாவளி தினத்தன்று அந்த அநாதைச் சிறுவனுக்குக் கிடைக்குமா? வடையும் பாயாசமும் வேண்டாம்! வயிறார ஒருவேளை சாப்பாடாவது கிடைக்குமா?

அடக்கடவுளே!

கடவுளா? அப்படியும் ஒருவர் இருக்கின்றாரா? இருந்தால் இப்படி எலும்பும் தோலுமாக பேசக்கூட சக்தியில்லாமல் ஒரு அநாதை இருப்பானா?

ஆமாம் கடவுள் இருக்கின்றார்தான்! உயர்ந்த ஓட்டு வீட்டுக்கருகே ஓட்டைக்குடிலும் இருக்கத்தான் வேண்டும் என்பது அவர் சித்தம். மனிதனுக்குப் புரியாத புரிந்து கொள்ள முடியாத ஒரு புதிர் கடவுள்.

அநாதையாக, பிச்சைக்காரனாகத் தான் அவன் இருக்க வேண்டும் என்பது கடவுள் சித்தமானால் நான் செய்தது தப்பா? ஒரு ரூபாயைத் தருமமாக அவனுக்குப் போட்டிருக்கக் கூடாதோ!

என்னைப்போலவே மனமிரங்கி எல்லாரும் அவனுக்குத் தருமம் செய்திருந்தால்…..!

அவன் பாடு எதேஷ்டம்தான். வருவாய்க்குத் தருந்த செலவில்லாததால் கையிருப்புக் கூடும். இருப்புக்கூடினால்……
குடியும் கூடா நட்பும் பெண்கள் சேர்க்கையுமாக……

ஐயோ! அம்மாதிரி பாபச் செயல்களில் அவன் ஈடுபடாதிருக்கத்தான் கடவுள் அவனை அப்படி அலையவிட்டாரோ!

மனதை அடக்கி ஆளும் சக்திக்கேற்பத் தான் மனிதனுக்கு அந்தஸ்தைக் கொடுக்கின்றாரோ…..!

ஆட்டுக்கும் வாலை….. என்பதெல்லாம் இது தானே?

அவர்கள் பேசிக் கொண்டதுபோல் வட்டிக்குக் கொடுக்கும் அளவுக்கு அவனிடம் பணம் இருக்குமோ!

சேச்சே என்ன பைத்தியக்காரத்தனம்! அவன் ஏன் குவளையில் கல்லைப் போட்டுக் குலுக்க வேண்டும்.

அவனுடைய எக்கிய வயிறும் எலும்புக்கூட்டுத் தோற்றமும் அப்படித் தோன்றவில்லையே!

அவனிடம் அளவுக்கதிகமாக ஒன்றும் இருக்கக்கூடாது என்பதுவும், பிச்சைக்காரனாக அநாதையாகத் தான் இருக்க வேண்டும் என்பதுவும் ஆண்டவன் சித்தம் என்று கூறுவது ஓட்டைக்குடில் இருந்தால் தான் ஓட்டு வீட்டுக்குப் பெருமை என்பதைத் தவிர வேறில்லை.
உளுத்துப்போன மரங்களுடன் நிற்கும் குடிலுக்கு ஓடு வேய்வதால் பயன்.

சம்பந்தா சம்பந்தமில்லாமல் என் மனம் குழம்பி அலை மோதுகிறது.

நேற்று தீபாவளி!

மக்களிடையே பண்டிகை மவுசு இறங்குகிறது.

“இனி எப்போ?” என்னும் கொக்கியை முகத்தில் ஏந்திக்கொண்டு ஏங்கி நிற்கும் அம்மாவிடம் கூறிக்கொண்டு நானும் பயணம் வைத்து விட்டேன். பஸ்ஸை விட்டிறங்கியதும் பஸ் ஸ்டான்டை ஒரு நோட்டம் விட்டேன்.

பிச்சைக்காரச் சிறுவனைக் காணவில்லை.

“என்ன தீபாவளி விசிட்டா?”

பஸ் ஸ்டாண்ட் ஹோட்டல் முதலாளி பிடித்துக் கொண்டார்.

உத்தியோகம் என்று ஊர் மாறிப் போய்விட்டாலும் பாடசாலை நாட்களிலிருந்தே முதலாளியைத் தெரியும். அந்தப் பழக்கம் தான்.
அவரைப் பார்த்துச் சிரித்தபடியே உள்ளே நுழைந்தேன்.

“பையா ஒரு நாக்காலி கொண்டா” என்று அவர் பக்கத்திலேயே என்னை அமரச் செய்து வரவேற்கின்றார்.

இந்த அன்பிற்காவது நான் அவருக்கு ஒரு வியாபாரம் கொடுக்க வேண்டும்.

ஒரு பழம் தின்று தேனீர் குடித்துவிட்டு ஒரு ரூபாவை மேசை மேல் வைத்தேன்.

முதலாளியின் வீட்டில் போய் தேனீர் அருந்தினால் பணம் கொடுத்து விட வேண்டும். அவன் பிழைப்பு அது!

என்னுடைய ஒரு ரூபாவைப் பார்த்ததும் முதலாளி சொன்னார் “யாராவது பிச்சைக்காரன் நிக்கிறானான்னு பாருங்க” என்றார். எனக்கு முகத்திலடித்தது போல் இருந்தது! நட்பு முறையில் தேநீர் அருந்திவிட்டு பணம் கொடுப்பதனால்தான் அப்படிச் சொல்கின்றாரோ என்று திகைத்தேன்.

என்ன அப்படிப் பாக்குறீங்க…..உங்களுக்கு விஷயம் தெரியாது இல்லியா…..” என்றார்.

அதே நேரம் ஆளுயரத்துக்குத் தூக்கி தேனீர் ஆற்றிக் கொண்டிருந்த தேனீர் அடிப்பவர் ஆற்றுவதை நிறுத்தாமலே “உதைக்கணும் சார் இந்தப் பிச்சைக்காரப் பயல்களை. நல்லாவே பாசாங்கு பண்ணக் கத்துக்கிட்டானுகள்” என்றார்.

நான் மேலும் விழிக்கவே முதலாளி தொடர்ந்தார்.

“வந்து பாருங்க சார் முந்தாநாத்து சாயந்தரம் இந்நேரம் இருக்கும் நம்ம மாடி வீட்டார் இருக்காருல்ல அவரு சிற்றுண்டி பண்ணிட்டு வந்து பில்லோட ஒரு ரூபாவை மேசை மேலே போட்டாரு. அப்பப் பார்த்து ஒரு பிச்சைக்காரப் பய சாமீன்னான்….. பொறுடான்னு அவனை அதட்டிப்புட்டு இவரை செட்டில் பண்ணிடலாம்னு பில்லை கையில் எடுத்தேன். அப்பப் பார்த்து டெலிபோன் அடிச்சுது. பொறுங்க கொஞ்சமுன்னு மாடி வீட்டாரை நிப்பாட்டிவிட்டு டெலிபோனை ஆன்சர் பண்ணினேன். டெலிபோனை முடிச்சிட்டு மேசையைப் பாத்தா பில் மட்டுந்தான் கெடக்கு ரூபாவைக் காணலே. பிச்சைக்காரப்பய என்னடான்னா நாலு வடை குடுங்க சாமீன்னு ரூபாவை நீட்டிக் கிட்டிருக்கான்… எப்படி இருக்கு வெளையாட்டு. அவனுக்கு என்ன துணிச்சல் இருக்கணும் பாருங்க…..”

“ஐயோ பாவம்” என்று நான் முனங்குவதையும் கவனியாமல் முதலாளி தொடர்ந்தார்.

ஏதுடா காசுன்னேன்….. பஸ்ஸில ஒரு புண்ணியவான் போட்டாருங்கன்னான்….. விட்டேன் ஒரு அறை…….

அவர் என்னை அறைந்ததுபோல் இருந்தது. “நீங்களே சொல்லுங்க சார் இந்த காலத்துல எவனாவது ஒரு ரூபாவை பிச்சைக்காரனுக்குக் கொடுப்பானா…..?”

முதலாளி என்னிடமே கேட்கின்றார்! நான் பேயறைந்தவன் போல் நின்றேன்.

போடா திருட்டு நாயேன்னு தள்ளி விட்டேன். பொத்தென்னு விழுந்துட்டான். மனுச சபலம் விடுமா! மெதுவா எந்திரிச்சு கன்னா பின்னான்னு கெஞ்சிக்கிட்டு நின்னான். போறானே இல்லை….. அதுக்குள்ளாற அதோ அந்த சர்வர் பையன் வந்து “போடா அயோக்கிய றாஸ்கல்னு” கழுத்தைப் பிடித்துக் கொண்டு போய் வெளியே தள்ளி விட்டான்…..”

முதலாளி கூறிக்கொண்டே இருந்தார். நான் எழுந்து கனவில் நடப்பவன் போல் நடந்துவிட்டேன்.

உளுத்துப் போயிருக்கும் ஓட்டைக் குடிலுக்கு ஓடு போடப் போய் குடிலையே உடைத்துவிட்ட குற்றத்துக்காக மனம் என்னை வதைத்தது.
பிச்சைக்காரன் நல்லவன்!

முதலாளியும் நல்லவர்தான்!

ஆனால் பொல்லாதது எது? இருவருக்கும் முன்னிருக்கும் அந்த அடையா?

letchumananm@gmail.com