நேசத்தின் ஒளி தீபத்தின் வழி!
– சக்தி –
சிந்தட்டும் நேசத்தின் ஒளி
சீராக எம் தீபத்தின் வழி
சிறக்கட்டும் தீபாவளித் திருநாள்
சிரிக்கட்டும் இல்லங்கள் அனைத்துமே
நேற்றோடு போகட்டும் எம் சோகங்கள்
இன்றோடு மாறட்டும் நம் காலங்கள
நாளையோடு பிறந்திடும் நல் வாழ்க்கை
நேசத்தின் துணை கொண்டு வாழுவோம்
தீபங்கள் ஏறட்டும் இல்லங்கள் தோறும்
தீமைகள் கருகட்டும் அவைதரும் ஒளியில்
இருளைத் தனக்குள்ளே விழுங்கிடும் சிறு விளக்கு
இல்லாமல் அதுபோல மறையட்டும் இல்லாமை
ஏர் கொண்டு உழுதிடும் தோழனும்
நீர் சிந்தி உழைத்திடும் நண்பரும்
சீர் கொண்டு வாழ்ந்திடும் யாவரும்
சோறுண்டு வாழ்ந்திடும் நிலை வரட்டும்
நரகாசூரன் என்றொரு அரக்கன்
அழிந்தான் என்பது நாமறிந்த இதிகாசம்
அகம்பாவம் எனும் அரக்கனை அழித்திடும்
அன்புக்கோர் தினமிது என்றே ஏற்றிடுவோம்
ஏன் இந்த விழா ? எதற்கிந்த கோலாகலம் ?
என்றெல்லாம் வினாக்களை விடுக்காது
உழைந்திடும் மனங்களின் சோர்வினை விலக்கிட
உதித்த ஓர் தினமென உரக்கச் சொல்லி வாழ்த்துவோம்
அன்பினிய சொந்தங்களை அனைத்திற்கும்
அன்னை தமிழின் ஆசி வேண்டி
அன்பாகப் பொழிகிறோம் வாழ்த்துக்கள்
வாழிய ! வாழிய ! சிறப்புடன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan
என்னை மன்னித்து விடு குவேனி
– – இஸுரு சாமர சோமவீர
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை –
மேலுதட்டில் வியர்வைத் துளிகளரும்பிய
கருத்து ஒல்லியான இளம்யுவதிகளைக் காண்கையில்
இப்பொழுதும்…
அதிர்ந்து போகிறதென் உள்மனது
தவறொன்று நிகழ்ந்தது உண்மைதான்
நினைவிருக்கிறதா அந் நாட்களில்
தாங்கிக்கொள்ள முடியாத குளிர்
விசாலமாக உதித்த நிலா
பொன் நிற மேனியழகுடன்
எனதே சாதியைச் சேர்ந்த
எனது அரசி
எமதிரட்டைப் படுக்கையில்
ஆழ்ந்த உறக்கத்தில் தனியாக
குழந்தையொன்றை அணைத்தபடி
அரண்மனை மாடியில் நின்று
கீழுள்ள காட்சிகளைப் பார்க்கின்ற
கனவொன்றில் அவள் திளைத்திருக்கக்கூடும்
இருந்திருந்து இப்பொழுதும் உதிக்கிறது
அம் மோசமான நிலா
மண்டபத்திலிருந்து
மயானத்தின் பாழ்தனிமையை
அறைக்குக் காவி வருகிறது
மூத்த மகன்
– மன்னார் அமுதன் –
நான்
யாராய் இருந்திருப்பேன்
அக்காவின் உலகில்
பொட்டிட்டும் பூவைத்தும்
அழகு பார்த்தவள்
தெருச்சண்டைகளில்
எனக்காய் வாதிட்டவள்
பாவாடை மடிப்புகளில்
எனைப் பாதுகாத்து
அப்பாவின் பிரம்படிகளை
அவளே வாங்கியவள்
பந்திகளில் முந்தி
எனக்காய்
பலகாரம் சேமித்தவள்
கட்டிக் கொள்பவனை
எனக்கும் பிடிக்கவேண்டுமென
மீசை வைக்கச் சொன்னவள்
அவள் உலகில்
யார் யாராகவோ
நான்
யாருடைய உலகிலும்
தம்பியாக முடியாமல்
மூத்த மகன்