– பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். — ஆசிரியர் –
பதிவுகள் ஏப்ரல் 2005 இதழ் 64
1. பெற்றோர் பருவம்!
“புள்ளெ வந்துட்டாளா?”
தனது இரண்டு சக்கர லாரியை போர்ட்டிகோவில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்திக்கொண்டே கேள்வியை தூக்கி வீட்டுக்குள் வீசினார் அப்துல் காதிர். ஸ்கூலில் இருந்து ட்யூஷனெல்லாம் முடிந்து அருமை மகளார் ஆறுமணிக்கு மேல்தான் வருவாள் என்று அவருக்கும் தெரியும். ஆனால் அலுவலகம் விட்டு வந்து அவர் வீட்டுக்குள் புகுவதற்கு முன் ‘புள்ளெ வந்துட்டாளா’ என்ற கேள்வி புகுந்துவிடும்.
வீரபத்ரனின் கழுத்தில் லாவகமாக மாட்டியிருந்த அவரது தோள் பையை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தார். அவர் கேள்விக்கு வீட்டிலிருந்த யாரும் பதில் சொல்லவில்லை. சொல்லவும் மாட்டார்கள். அவர்களுக்குத் தெரியும். அது ஒரு கேள்வியே அல்ல. அது ஒரு பழக்கம். வைத்த நேரத்துக்கு அலாரம் அடிப்பது மாதிரி, வீட்டுக்குள் நுழைந்ததும் அவர் வாயிலிருந்து அந்த கேள்வி புறப்பட்டுவிடும்.
“புள்ளெ வந்துட்டாளான்டு கேட்டேன்” என்று மனைவியைப் பார்த்துக் கொஞ்சம் கடுமையாகச் சொன்னார். அடுப்பங்கரையில் அவருக்காக டீ போட்டுக்கொண்டிருந்த ஹஸீனாவின் இதழோரம் கோணலாக ஒரு புன்னகை ஊர்ந்தது.
“அவ ஆரறை மணிக்கித்தான் வருவான்னு தெரியும்ல, ஏன் சும்மா கேட்டுக்கிட்டே இரிக்கிறீங்க? மணி இப்ப அஞ்சறெதானே ஆவுது?”
மனைவியின் பதில் கேள்வியில் அப்துல் காதிர் அமைதியாகிப் போனார். அவருக்கும் தெரியாமலில்லை. என்றாலும் இப்படி கேட்டு பதில் வாங்காவிட்டால் ஏதோ ஒரு கடமையை செய்யாமல் விட்டமாதிரி இருக்கும். ஏதோ புரிந்துவிட்ட மாதிரி தலையை லேசாக ஆட்டிக்கொண்டு அறைக்குள் சென்றார். பேண்ட் ஷர்ட்டைக் கழட்டி விட்டு கைலியும் கை வைத்த பனியனுமாக ம·ப்டிக்கு மாறி வெளியில் வந்தார். பின் கொல்லைப் புறம் சென்று முகம் கைகால் கழுவிவிட்டு வந்து ஹாலில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார். ஹஸீனா டீயைக் கொண்டுவந்து கொடுத்தாள். வாங்கியவர் அனிச்சையாக சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தார். மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது.
“மவள்னா என்னா பைத்தியமோ”
சொல்லிக்கொண்டே ஹஸீனா உள்ளே போனாள். போகும்போது அவள் முகத்தில் ஒரு பெருமை தெரிந்தது.
டீயை உறிஞ்சிக்கொண்டே மகளை நினைத்துக்கொண்டார். கல்யாணமாகி ஏழு வருஷம் காத்திருந்து பெற்ற மகள். ஆறு வருஷங்களாக ஹஸீனாவில் கருப்பையை அடைத்துக்கொண்டிருந்த கட்டியை இனம் கண்டு கொள்ளவே பல காலம் ஆனது. பின் அதை ஆபரேஷன் செய்த பிறகுதான் ஹஸீனாவால் சரியாக மூச்சு விட முடிந்தது. அதற்குள் ஊர் நாக்குகள் குறிபார்த்து வேறுவிதமான பெயர்களையெல்லாம் அப்துல்காதிருக்கு சூட்டிவிட்டிருந்தன.
“தபாரு பீவி, ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சிடுச்சுங்கறதுக்கு அடையாளமே நீ அடுத்த வருஷமே ஒரு கொழந்தையெ பெத்து காட்டுறதுதான். நாந்தான் ஒனக்கு பிரசவம் பாப்பேன். நீ போட்டிருக்கியே கல்லுவச்ச மோதிரம், அதே மாதிரி எனக்கு தங்கத்துல செஞ்சு போடணும். செய்வியா?” என்று டாக்டர் சுமதி கேட்டபோது உண்மையில் அவர்களுக்கு சந்தோஷமாகவே இருந்தது. அப்படிப் பிறந்தவள்தான் அர்ஷியா.
குழந்தை பிறந்தபோது பார்த்த எல்லார் கண்ணும் பட்டிருக்கும். ஆஸ்பத்திரி நர்ஸ¤கள், வார்டு பையன்கள் என எல்லாரும் போட்டி போட்டுக்கொண்டு குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டனர்.
“பீவி, ஒனக்கு எவ்வளவு கலரா, எவ்வளவு அழகா ஒரு பொம்புளப் புள்ளெ பொறந்திருக்கு தெரியுமா?” என்று டாக்டர் சுமதியே ஆச்சரியப் பட்டு சொன்னாள்.
அவள் சொன்னது உண்மைதான். அப்துல் காதிரும் ஹஸீனாவும் நல்ல சிவப்பு நிறம்தான் என்றாலும், அர்ஷியாவின் நிறம் பலமடங்கு பெற்றோரை மிஞ்சுவதாக இருந்தது. அகன்ற விழிகளும், நீண்ட மூக்கும், புசுபுசுவென கன்னமுமாக கொள்ளை அழகாக இருந்தாள். அவ்வளவு அழகு ஆபத்தாச்சே என்றுகூட பயப்பட வேண்டியதாக இருந்தது. சொல்லிவைத்த மாதிரி அர்ஷியாவின் அழகுக்குப் போட்டி போல அவள் அறிவும் பேச்சும் இருந்தது.
ஒரு முறை அப்துல்காதிர் ஒரு கல்யாணத்துக்கு மனைவியையும் அர்ஷியாவையும் கூட்டிப் போயிருந்தார். அர்ஷியாவுக்கு அப்போது ஆறு வயது. மாப்பிள்ளைக்கு அன்பளிப்பு செய்வதற்காக, மடியில் இருந்த அர்ஷியாவை ஒரு நண்பரின் பக்கத்தில் உட்காரவைத்துவிட்டு மேடைவரை போய்வந்தார் அப்துல் காதிர்.
“சார், உங்க பொண்ணுங்களா?” என்றார் நண்பர் பக்கத்தில் இருந்த ஒருவர். அவருக்கு நாற்பத்தைந்து இருக்கும்.
“ஆமா சார், ஏங் கேக்குறிங்க?”
“சார், என்னமா பேசுது சார்!” சொன்னபோது ஏதோ உலக அதிசயத்தைப் பார்த்துவிட்டு வந்த மாதிரி முகத்தை வைத்துக்கொண்டார் அவர்.
“ஏன் சார், என்னா சொன்னா?”
“என்ன சார், நல்லா பேசிக்கிட்டிருக்குதேன்னு பிடிச்சுப்போயி, என்னாமா எங்க வீட்டுக்கு வந்துர்றியான்னு கேட்டேன். அதுக்கு என்னா சொல்லணும்? வர்றேன், வரமாட்டேன்னுதானே எல்லா புள்ளைங்களும் சொல்லும்?”
க்ளைமாக்ஸைச் சொல்லாமல் ஒரு சஸ்பென்ஸில் நிறுத்தினார் அவர். தன் மகள் என்ன பதிலைச் சொன்னாள் என்று தெரிந்து கொள்வதில் அப்துல் காதிருக்கு மிகுந்த ஆவல் உண்டானது.
“என்னா சார் சொன்னா?”
“ஏன், உங்களுக்கு புள்ளெ இல்லெயான்னு கேக்குது சார்!” என்று சொல்லிவிட்டு வாய் பிளந்தார். பக்கத்தில் இருந்த நண்பர்கள் அனைவரும் வாய்விட்டுச் சிரித்தனர். அப்துல்காதிருக்கும் சிரிப்பாகத்தான் வந்தது. தன் மகளை நினைத்து பெருமையாகவும் இருந்தது.
“சார், வீட்ல போயி, திருஷ்டி சுத்திப் போடுங்க சார்” என்று ஆலோசனை வேறு வழங்கினார் அவர்.
அவர் சொல்லாவிட்டாலும் ஹஸீனா நிச்சயம் அதை செய்திருப்பாள்தான். முதல் வேலையாக இந்த விஷயத்தை மனைவியிடம் சொல்லி வைத்தார். தன் நண்பர்களிடமும் சொன்னார். ஹஸீனாவும் தன் பங்குக்கு ஒரு ஆயிரம் பேர்களிடம் சொல்லிவைத்தாள். இப்படியாக பெற்றோர்கள் வாயிலாக அர்ஷியாவின் பெருமை பேசும் காண்டம் அந்த கல்யாண மண்டபத்தில் வைத்து எழுதப்பட்டது.
இவ்வளவையும் செய்துவிட்டு, காஞ்ச மிளகாயை எடுத்து அர்ஷியா தலையைச் சுற்றிவிட்டு, “துப்பு” என்று அர்ஷியாவை துப்பச் சொல்லி, ஆசையாக அர்ஷியா அதில் துப்பியவுடன் அதை அடுப்பில் போடுவாள். அது வெடித்து எரியும்போது, “பாவி கண்ணு, பரப்பா கண்ணு, கொள்ளி கண்ணு, எல்லாம் அவிஞ்சு போவணும். எம்புள்ளக்கி எத்தினி கண்ணு பாத்திங்களா? எப்புடி எரியுது பாத்திங்களா?” என்பாள்.
“டாடி, இது என்னா டாடி?” என்று ஒரு முறை ஸ்கூலில் இருந்து அவளை கூட்டி வரும் வழியில் தெருவோரம் கைகாட்டிக் கேட்டாள் அர்ஷியா. அவள் உட்காருவதற்காகவே தனது வீரபத்ரன் வண்டியில் ஒரு குட்டி சீட் முன்னால் போட்டு வைத்திருந்தார். அவள் கைகாட்டிய பக்கம் பார்த்தார். ‘போர்’ போட்டுக்கொண்டிருந்தார்கள். ராட்சச மிஷின்களிலிருந்து இறக்கப்பட்ட ஸ்டீல் ராடுகள் பூமியைத் துளைத்துக்கொண்டு செல்லும் சப்தம் தெருவையே கலக்கிக் கொண்டிருந்தது.
அவளுக்குச் சொன்னால் புரியுமா? யோசித்தார்.
“அது, ஒன்னுமில்ல கண்ணு, இந்த மிஷின்லேருந்து, பூமி உள்ளக்க தொளை போட்டு, ரொம்ப கீழே போயி, அங்கேருந்து தண்ணி எடுத்து மேலெ கொண்ட்டு வருவாங்க” என்று விபரமாகச் சொன்னார். அதைக் கேட்டுவிட்டு அவள் சொன்னாள்.
“ஓஹோ, போர் ·பிக்ஸ் பண்றாங்களா?”
அதிர்ந்து போனார் அப்துல்காதிர். “ஒனக்குத் தெரியுமா? அப்ப ஏன் எங்கிட்ட கேட்டே?” என்றார்.
“அதா, ஒனக்கு தெரியுமான்னு தெரிஞ்சுக்கத்தான்” என்றாள்.
“வாயாடி” என்று சொல்லி முத்தம் கொடுத்து விட்டு வாயை மூடிக்கொண்டார்.
“என்ன யோஸ்னையா இருக்கிறிங்க?” ஹஸீனாவின் குரல்தான் அவரைக் கலைத்தது.
“ஒன்னுமில்ல”
மேற்கொண்டு மனைவியும் எதுவும் கேட்கவில்லை. அவர் அசைபோடுகிறார் என்று அவளுக்குத் தெரியும்.
மளமளன்னு வளந்துட்டா! பதிமூனு வயசாகுது! இப்ப சுடிதார் போட்டுக்கிட்டு ஸ்கூலுக்கு போய் பத்தாவது படிக்கிறா! நினைக்க நினைக்க அவருக்கே வியப்பாக இருந்தது. எவ்வளவு சீக்கிரம் பெண் குழந்தைகள் வளர்ந்து விடுகிறார்கள்! கடிகார ஒலி அவரை இந்த உலகத்து கொண்டு வந்தது. மணியைப் பார்த்தார்.
மணி ஏழு! இன்னும் ஆட்டோ வரவில்லை!
“மணி ஏழாவுது. இன்னும் ஆட்டோ வரலியே” என்று கத்தினார். அவர் கத்தலில் மிரண்ட ஹஸீனாவுக்கும் கொஞ்சம் பயம் பிடித்துக்கொள்ள ஆரம்பித்தது.
“ஆமா, யா அல்லாஹ், மணி ஏலாவுதே… ஸ்கூலுக்கு ·போன் போட்டு பாருங்களேன்” என்று பதறினாள்.
தொலைபேசி பக்கத்தில் வைத்திருந்த சின்ன புத்தகத்தை எடுத்து ஸ்கூல் எண்ணைத் தேடினார். கிடைக்கவில்லை.
“என்ன எலவு நோட்டு இது? முக்கியமான ஸ்கூல் நம்பரெ மொதோ பக்கத்துல எலுதி வைக்க மாட்டிங்களா சனியனுவளா” என்று கத்தினார்.
ஹஸீனா வாங்கிப் பார்த்தாள். “இந்தோ இந்த நம்பருதான்” என்று எடுத்துக் கொடுத்தாள். உடனே சுற்றினார்.
“ஹலோ, ப்ரசன்டேஷன் கேர்ள்ஸ் ஹைஸ்கூலுங்களா? நா ட்டெந்த் படிக்கிற அர்ஷியாவோட ·பாதர் பேசுறேன். அர்ஷியா இன்னும் ஸ்கூல் வுட்டு வரலெ. ஆட்டோ வந்து கூட்டிட்டு வந்துதுங்களா? இல்லெ, இன்னும் ஸ்கூல்லதான் இருக்காளா? கொஞ்சம் கேட்டு சொல்றிங்களா சார், ப்ளீஸ்”. வார்த்தைகள் கோர்வையாக வரவில்லை. சொல்ல நினைத்ததை சரியாக சொல்லிவிட்டோமா என்று அவரால் தீர்மானிக்க முடியவில்லை.
“இல்லிங்களே, எல்லா ஆட்டோவும் வந்து புள்ளங்களை கூட்டிட்டி போயிடுச்சுங்களே. இன்னிக்கு ஸ்கூல் அஞ்சு மணிக்கே வுட்டாச்சு சார். ஸ்கூல்ல இப்ப யாரும் இல்லெ”
இடி விழுந்த மாதிரி இருந்தது. இதயத்தில் படபடப்பு அதிகரித்தது. சப்தம் வெளியில்கூட கேட்கும்போலிருந்தது.
“ஹஸீ, புள்ளெ போகும்போது ·பீ அமானில்லாஹ்னு (இறைவனுடைய பாதுகாவல்) சொல்லித்தானே அனுப்புனே?”
ஹஸீனா பயந்து போனாள். “ஏங்க, என்னா செய்யிது உங்களுக்கு? ஏன் பதட்டப்பட்றீங்க? நா எப்பவும் போல எல்லாம் சொல்லித்தான் அனுப்புனேன். ‘லேட்’டாவுனா அவ ‘·போன்’ போடுவா. பயப்புடாதிங்க. நீங்க ‘பைக்’குல போயி அவ ஸ்கூல்ல விசாரிச்சுட்டு, பக்கத்துல் அவ தோலி வூடு இருக்கு. அவ பேரு மைவிலி. ஸ்கூலுக்குப் பக்கத்துல உள்ள மூனாவது சந்து. கொஞ்சம் விசாரிச்சிட்டு வர்றிங்களா? அவ வூட்டுல ‘·போன்’ இல்லெ”
மறுபேச்சு பேசாமல் உடனே சட்டையை மட்டும் மாட்டிக்கொண்டு வண்டியைக் கிளப்பிக் கொண்டு பறந்தார் அப்துல் காதிர்.
“பாத்து போங்க” என்று சொல்லிவிட்டு வாசலையே கொஞ்ச நேரம் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் ஹஸீனா. ‘·பீ அமானில்லாஹ்’ என்று தன் புருஷனுக்காகவும் ஒருமுறை மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.
போனவர் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் திரும்பி வந்தார்.
“ஸ்கூல்ல அவ இல்லெ. அங்கெ யாருமே இல்ல. ஸ்கூல் அஞ்சு மணிக்கே வுட்டுட்டாங்களாம். ஆட்டோக்கார நாயி இன்னக்கி வரலையாம். மைவிழி வூட்டுலயும் அவ இல்லை. எங்கெ போனான்னு தெரியலெயே” என்று சொல்லி தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்தார். நிழல்படத்துடன் தினசரிச் செய்தி, தொலைக்காட்சி சிறப்புச் செய்தி என மனதில் என்னென்னவோ கற்பனைகள் வந்து போயின. ச்சே, நம்முடைய மகளைப் பற்றி நாமே இப்படி நினைப்பதா? என்ன மனசு இது? நினைக்கவே நடுக்கமாக இருந்தது. என் அழகுச் செல்லம் அர்ஷியா! உனக்கு ஒன்றும் ஆகக்கூடாது. யா அல்லாஹ், என் மகளைக் காப்பாற்று. வியர்த்தது அவருக்கு.
“ஏம் பயப்புடுறிங்க..பயப்புடாதீங்க.. அல்லாஹ் நம்பளுக்கு ஒரு கொறையும் வுட மாட்டான். வந்துடுவா” என்று அவர் நெஞ்சைத் தடவி விட்டாள் ஹஸீனா. ஆனால் தாரை தாரையாக விழிகளிலிருந்து வழிந்ததை ஏனோ அவளால் துடைக்கத் தோன்றவில்லை. நண்பர்கள் வீட்டுக்கெல்லாம் ·போன் பண்ணி விசாரிக்கலாமா? போலீஸில் சொல்லலாமா? பல கேள்விகளும் அழுகையின் ஊடே அலசப்பட்டன. எல்லா தோழிகள் வீட்டுக்கும் போய் பார்த்துவிடுவது என்று முடிவுக்கு வந்தபோது மணி ஏழரையைத் தாண்டிவிட்டிருந்தது.
மறுபடி வண்டியை எடுத்துக்கொண்டு கேட்டைத் திறந்தபோது சைக்கிளுடன் ஒரு பெண் வாசலில் நின்று கொண்டிருந்தாள். அவளைப் பார்த்தவுடன் ஹஸீனா அடையாளம் கண்டுகொண்டுவிட்டாள்.
“வாம்மா ப்ரியா வா. அர்ஷியாவை…”
“அர்ஷியா எங்க வீட்லதான் இருக்கா ஆன்ட்டி. அதெ சொல்லத்தான் நா வந்தேன்” என்று சொல்லிவிட்டு அப்துல்காதிரைப் பார்த்தவுடன் மேற்கொண்டு ஏதோ சொல்லவந்தவள் சொல்லாமல் தயங்கினாள்.
“அர்ஷியாவுக்கு ஒன்னுமில்லையே” என்று பதறினார் அப்துல்காதிர்.
“ஒன்னுமில்லை அங்கிள்” என்றாள் ப்ரியா. அவள் அப்படிச் சொன்னதும்தான் அவரின் இதயப் படபடப்பு அடங்கியது.
“உள்ளவாம்மா” என்று ப்ரியாவை அழைத்துப்போனாள் ஹஸீனா.
கொஞ்ச நேரத்தில் வீட்டுக்குள்ளிருந்து இருவரும் திரும்பி வந்தனர்.
“என்ன விசயம்?” பரபரத்தார் அப்துல்காதிர்.
“இருங்க சொல்றேன். நீ பத்தரமா போவியாம்மா. இரு, நா அங்கிளெ கூடவரச் சொல்றேன்” என்றாள்.
“சரி ஆன்ட்டி” என்று சொல்லிவிட்டு சைக்கிளில் ஏறினாள் ப்ரியா.
“இங்கெ வாங்க” என்று கணவனை அழைத்தவள், “ஒன்னுமில்லெ, ஸ்கூல் வுடுற நேரத்துல வய்சுக்கு வந்துட்டாளாம். யாருட்டயும் சொல்லாம, ப்ரியாட்ட மட்டும் சொல்லி, ஒடம்பு சரியில்லேன்னு அவ வூட்டுக்கு போய்ட்டாளாம். ரொம்ப வய்த்த வலிச்சுச்சாம். ப்ரியா வூட்டுலதான் கவனிச்சு வச்சிருக்காங்க. அவங்க வூட்டுல ·போனும் இல்லெ, வூட்ல யாரும் ஆம்புளயும் இல்லெயாம். அதுனால பாவம் கனியாப் புள்ளெ ப்ரியாவெ சைக்கிள்லெ அவங்க அம்மா இங்கெ தனியா அனுப்பி இருக்காங்க. நீங்க சட்னு போயி, ப்ரியாவெ பத்தரமா வூட்லெ சேத்துட்டு, அர்ஷியாவெ கூட்டிட்டி வாங்க. நா அதுக்குல்ல செய்யவேண்டிய ஏற்பாட்ட செய்யுறேன். அல்லாஹ் பெரியவன்” என்று முடித்தாள்.
வெளியே வந்த அப்துல்காதிர் ப்ரியாவின் பெற்றோரை நினைத்துக் கொண்டார். மனைவிக்கு பதிலாக எதுவும் சொல்லத் தோன்றவில்லை. அவர் மனம் பூரா நன்றியால் நிறைந்திருந்தது.
“அல்ஹம்துலில்லாஹ்” என்று அப்துல் காதிரின் வாய் முணுமுணுத்தது.
பதிவுகள் பெப்ருவரி 2004 இதழ் 50
2. தூரம் -நாகூர் ரூமி –
மூன்றாவது நாளாக சிவநேசன் வீட்டுக்கு தூரமாகிப் போயிருந்தான். முதல் நாள் நடந்தது இன்னும் பிசுபிசுவென மனம் பூரா ஒட்டிக்கொண்டிருந்தது. ஆபீஸ¤க்குக் கிளம்புவதற்காக தயாராகிக் கொண்டிருந்தான். கொடியில் வெறுப்போடு அதற்கு முதல் நாள் கழட்டி எறியப்பட்ட குழாயை எடுத்து, லுங்கியைத் தூக்கி தன் வலது காலை அதன் வலது காலுக்குள் செலுத்த முயன்று கொண்டிருந்த போதுதான் அது நடந்தது.
அடி வயிற்றில் திடீரென்று ஒரு இடி. ஒன்றும் புரியவில்லை. அது அடிவயிறென்றே முதலில் அவன் நினைக்கவில்லை. வலது பக்க இடுப்புப் பகுதியில் வலிப்பதாகத்தான் நினைத்தான்.
“அம்மா” என்று அவனையறியாமல் கீழே உட்கார்ந்துவிட்டான். அப்பென் டிசைடிஸாக இருக்குமோ? உள்ளேயே வெடித்துவிட்டதோ? ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஏதோ வெடித்துச் சிதறிய உணர்வுதான் இருந்தது. இதுவரை அப்படிப்பட்ட ஒரு வலி அவனுக்கு வந்ததேயில்லை. வேற்று கிரகத்து வேதனயாகத் தெரிந்தது அது.
அப்படியே வயிற்றைப் பிடித்துக்கொண்டு குழாயை பாதி மாட்டிய காலுடன் தரையில் உட்கார்ந்து விட்டான்.
அவன் போட்ட ‘அம்மா’ ரொம்ப புதுசாகவும் சற்று ராட்சசத்தனமாகவும் இருந்ததை உள்ளுணர்வால் உணர்ந்து கொண்ட பார்வதி சமையல் கட்டிலிருந்து ஓடோடி வந்தாள்.
“என்னங்க? என்னாச்சு?” பதறினாள். எப்போதும் போல. அப்படி தரையில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு அவன் உட்கார்ந்து அவளும் பார்த்ததில்லை. கொஞ்சம் அதிர்ந்துதான் போனாள்.
“சனியனே என்னன்னு தெரியலடி. நீ வேறெ உயிரெ வாங்காதெ” அவன் வழக்கம்போல பதில் சொன்னான். வயிற்றுப் பகுதியைப் பிடித்துக்கொண்டே. அப்போதுதான் அவள் கவனித்தாள்.
அடிவயிற்றுப் பகுதியில் ‘அந்த’ இடத்தில் லுங்கி பூராவும் ரத்தக்கறையாக இருந்தது.
எய்ட்ஸ் வந்த புள்ளிராஜாவாக தன் கணவன் மாறிவிட்டானா என்ற சந்தேகத்துடன், “என்னங்க, இது என்னங்க?” என்று அவன் கவனத்தை அந்தப்பகுதிக்குத் திருப்பினாள்.
“எங்கெயாவது அடி பட்டுச்சா?”
அப்போதுதான் அவனும் பார்த்தான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“சனியனெ, தெரியலெ. நீ வேறெ. அடிபட்டுச்சா கிடிபட்டுச்சான்னு. அதெல்லாம் ஒன்னுமில்ல. இது என்னன்னு பாரு”
அவள் அவனை பாத்ரூமுக்கு அழைத்துச் சென்று பார்த்தாள்.
அதுதான்.
வெள்ளை வெள்ளையாக, திப்பி திப்பியாக, ரத்தக் கட்டிகளுடன் இருந்தது. உறுதியாகிவிட்டது. இருவருக்குமே ஒன்றும் புரியவில்லை. வியப்பும் மௌனமும் இருவர் கண்களிலும் முகத்திலும் வந்து குடியேறிக்கொண்டன. சிவநேசனுக்கு வியர்த்துக் கொட்டியது. ஆள்மாறாட்டம் மாதிரி பால் மாறாட்டமா? பம்பாய்க்குப் போகாமல், ஊசி ஏதும் போடாமல், அறுவை ஏதும் செய்யாமல் என்ன இது? இது உண்மைதானா என்று சந்தேகமாக இருந்தது. இது சாத்தியமா?! பரமஹம்சரைத்தான் கேட்க வேண்டும். அவரும் இப்போது இல்லை. ஒரே குருதியாகவும் குழப்பமாகவும் குத்தலாகவும் இருந்தது.
பார்வதி அறையைச் சாத்தி வைத்தாள். பிள்ளைகள் பார்க்காதவாறு செய்தாள். என்றுமில்லாமல் திடீரென்று அப்பா ஆபீஸ¤க்குப் போகாமல் ‘உட்கார்ந்து’விட்டதன் ரகசியம் புரியாமல் வளர்ந்த பிள்ளைகள் குழம்பினர்.
“மெடிகல் லீவு சொல்லிடவாங்க?” மெதுவாகக் கேட்டாள்.
“என்ன எழவு லீவாவது சந்தானத்துக்கு ·போன் பண்ணி சொல்லிடு”
தற்காலிகமாக ஒரு துணியைக் கொடுத்து வைக்கச் சொல்லியிருந்தாள். பாட்டி வைத்தியம். அவனும் வேறுவழியின்றி அவள் தொலைபேசச் சென்ற இடைவெளியில் அதை வைத்துக்கொண்டான். அவனுக்கே வெட்கமாக இருந்தது. சனியன், இதை வைத்துக்கொண்டு எப்படி வேலை செய்ய முடியும்? ஒன்றும் புரியவில்லை அவனுக்கு. பார்வதி வந்து பார்த்துவிட்டு ஒழுங்காக வைத்துவிட்டாள்.
ரொம்ப களைப்பாக வந்தது. கால்களெல்லாம் வலியெடுத்தன. யாரோ அடித்துப் போட்டமாதிரி இருந்தது. அனிச்சையாக தன் கால்களைத் தானே பிடித்து விட்டுக்கொண்டான். மஸாஜ் செய்வது மாதிரி. அப்போது அவனுக்கு பார்வதியின் நினைவு வந்தது. அவளும் இப்படித்தான் அந்த ஏழு நாட்களும் செய்து கொண்டிருப்பாள்.
“சனியனே எப்பப்பாரு ஒரே மஸாஜ்தானா? ஊர் ஒலஹத்துல யாருக்கும் வர்றதில்லையா? போய் காப்பியெப் போடு”
பார்வதி ஒன்றும் சொல்வதில்லை.
திடீரென்று மறுபடியும் இடி இடித்தது.
“அம்மா” என்று மறுபடியும் வயிற்றைப் பிடித்துக்கொண்டான். படுக்கையில் புரண்டான். முடியவில்லை. வலி உயிர் போய்விடும் போலிருந்தது. பார்வதி மறுபடி வந்தபோதும் அவன் புரண்டு கொண்டிருந்தான். ஆனால் அவள் முன்னெச்சரிக்கையாக மாத்திரைகள் கொண்டுவந்திருந்தாள்.
“அம்மா வலிக்கிதே” மறுபடி கத்தினான். விட்டு விட்டு வலித்தது.
“இதெப் போட்டுக்குங்க. கொஞ்ச நேரத்துல வலி கொறையும்” என்று சொல்லி ஒரு அனுபவமிக்க கைனகாலஜிஸ்ட்டின் தோரணையில் ஒரு காப்ஸ¥லையும் தண்ணீர் டம்ளரையும் கொடுத்தாள்.
ஒன்றும் சொல்லாமல் வாங்கிக் கொண்டான். அந்த நாட்களில் பார்வதியின் வேதனையைக் குறைப்பதற்காக டாக்டர் வசந்தா ‘ப்ரிஸ்க்ரைப்’ பண்ணிய ஸ்பாஸ்மோ ப்ராக்ஸிவான் காப்ஸ்யூல்தான். சிவப்பு காப்ஸ்யூல். அதுவும் சிவப்பாகத்தானா இருக்க வேண்டும்? ஒன்றும் சொல்லாமல் போட்டுக் கொண்டான். எத்தனையோ முறை அவள் சொல்லிவிட்டும் அவன் வாங்க மறந்துபோகும் காப்ஸ்யூல்.
மறுநாளும் ஆபீஸ¤க்குப் போகமுடியவில்லை. வேதனை அதிகரித்திருந்தது. ரத்தப் போக்கும் அதிகமாக இருந்தது. அதோடு சில நிமிஷங்கள் இருந்தது வலி இப்போது சில மணி நேரங்கள் என மாறிவிட்டிருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் தான் பார்வதியாகவும் பார்வதி மீசையுடன் கூடிய தானாகவும் மாறப்போகிறோம் என்பது அவனுக்கு உறுதியாகத் தெரிந்துவிட்டது. ஒருவகையான ஆச்சரியமும் எதிர்பார்ப்பும்கூட அவனிடம் வளர ஆரம்பித்தது.
மூன்றாவது நாள் அவனுக்கு ஓரளவு பழகிப் போயிருந்தது. அந்த மாத்திரை வேலை செய்யத்தான் செய்தது. வலி குறைந்த மாதிரி இருந்தது. ஐந்தாம் நாள்தான் ரத்தப்போக்கு குறைந்தது இடியுடன் கூடிய மழை விட்டு தூரல் ஆரம்பித்திருந்தது.
அடிக்கடி யாருமில்லாதபோது லுங்கியை உயர்த்திப் பார்த்துக்கொண்டான். எல்லாம் எப்போதும்போல சரியாகத்தான் இருந்தது. மழையையும் அடிவயிற்று இடியையும் தவிர. அது ஒன்றுதான் புதுசு. அவனுக்கு ஆச்சரியம் கூடியது. சரி என்னதான் ஆகிறது பார்ப்போமே என்று ஆறாம் நாள் குளிர் விட்டுப் போனது.
இதில் கணவன் மனைவி இரண்டு பேருக்கும் ஒரே ஒரு கேள்விதான் இருந்தது. இது தொடருமா? அப்படித் தொடர்ந்தால் அதன் விளைவுகளைப் பற்றிக் கற்பனைகூட செய்ய முடியவில்லை. எப்படி இதைத்தீர்ப்பது? டாக்டரிடம் காண்பிப்பதா? அதன் பிறகு தொலைக்காட்சிகள், தினசரிகள், வாராந்தரிகளில் ·போட்டோவுடன் கட்டுரை வரும். இந்தியாடுடே தமிழின் அட்டைப்படத்தை அலங்கரிக்க வேண்டிவரும். “ஒன்பதாகிப்போன உலகின் எட்டாவது அதிசயம்” என்று தலைப்பு போடுவார்கள். அதன் பிறகு நிலைமை என்னவாகும்? எப்படி ஆபீஸ் போவது? ஆபீஸை விடு. எப்படி வெளியில் போவது? எப்படி குழந்தைகளை சந்திப்பது தினமும்? சொந்தக்காரர்களை? நண்பர்களை?
எல்லாக் கேள்விகளுக்கும் பதில் ஒன்றாகத்தான் இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து வாழ்க்கையைத் தொடர முடியாது என்பது புரிந்தது. ஒரு வாரம் கழித்தும் மழை தொடர்ந்தால் அல்லது அடுத்த மாதமும் இதே நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்று யோசித்து யோசித்துப் பார்த்தான். தற்கொலை செய்துகொள்வதுதான் வழி என்பதாகத் தோன்றியது.
“என்ன சனியன் இது?” என்று தன்மீதே ஒரு வெறுப்பு தோன்றியது சிவநேசனுக்கு. அந்த ‘சனியன்’ அவனோடு கூடப்பிறந்த செல்லச் சனியன். அவனை எப்போதுமே அது விட்டுப்பிரிவதில்லை.
எல்லாக் கேள்விகளையும் அழிப்பதாக எட்டாவது நாள் இருந்தது. மழை சுத்தமாக நின்று நிலம் குளிர்ந்து போனது.
குளித்துவிட்டு அங்கிருந்த கண்ணாடி முன் நின்று தன்னையே பரிசோதித்துப் பார்த்துக் கொண்டான். மறுபடியும் சுத்தமான ஆண்பிள்ளையாகிவிட்டதாகத்தான் தோன்றியது. ‘அந்த ஏழு நாட்க’ளுக்கான எந்த அடையாளமும் இல்லை. சந்தோஷமாக இருந்தது. பயமாகவும் இருந்தது. வழக்கம் போல ஆபீஸ¤க்குக் கிளம்பினான். வருவது வரட்டும். ஆனால் தொடர்ந்து வந்த நாட்கள் அவன் பயம் தேவையற்றது என்பதை அவனுக்குப் புரியவைத்தது.
பார்வதி அவனுக்குக் காபி கொடுக்கும்போதுதான் கவனித்தான்.
“ஒடம்பு சரியில்லாயா பாரா?”
பார்வதியின் புருவங்கள் அகன்று மேல் நோக்கி வளைந்தன. அவன் ‘பாரா’ன்னு அவளை அழைத்து எத்தனை வருஷங்களாகிவிட்டது! கல்யாணமான புதிதில் அழைத்தது! மறுபடியும் அதே கரிசனம், அதே தொனியுடன் பாரா!
“என்ன பாரா, பதிலையே காணோம்?”
“ஆமாங்க. இன்னிக்கிதான்…” சந்தோஷத்தால் அவளால் தொடர்ந்து சொல்லி முடிக்கக்கூட முடியவில்லை.
“ரெஸ்ட் எடுத்துக்க. ஒன்னும் சமைக்க வேணாம். நா வரும்போது ஒனக்கு ஸ்பாஸ்மோ வாங்கி வந்துர்றேன்”
அவள் கன்னத்தை தடவிவிட்டு கெஞ்சுவது போலச் சொல்லிவிட்டுப் போனான்.
நாகூர் ரூமி:
1980களிலிருந்து எழுதிவரும் நாகூர் ரூமி தமிழ் இலக்கிய உலகில் நன்கறியப்பட்டவர்களிலொருவர். ஆங்கிலத்தில் மிகுந்த புலமை வாய்ந்த இவர் ஆங்கிலக் கவி மில்டனின் ‘இழந்த சொர்க்கம்’ மற்றும் கம்பனின் ‘இராமாயணம்’ பற்றிய ஆய்வுகளுக்காக முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது ஆங்கிலப் பேராசிரியராகப் பணி புரிந்து வரும் இவர் தமிழிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திலிருந்து தமிழ் என பல படைப்புகளை மொழி பெயர்த்திருக்கின்றார். இதுவரையில் இவரது பத்து நூல்கள் வெளிவந்துள்ளன. இவரது படைப்புகள் பல கணையாழி, சுபமங்களா, புதிய பார்வை, மணிவிளக்கு, மணிச்சுடர், குமுதம், குங்குமம், முஸ்லீம் முரசு எனப் பல்வேறு சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன. ஸ்நேகா பதிப்பக வெளியீடாக ‘நதியின் கால்கள்’ (கவிதைகள்), ‘குட்டியாப்பா’ (கதைகள்), ‘கனவுகளின் விளக்கம்’ (சிக்மண்ட் ·ப்ராய்ட், தமிழாக்கம்) போன்ற நூல்கள் வெளிவந்துள்ளன. இவர் பற்றிய மேலதிக விபரங்களை http://abedh een.tripod.com/nagorerumi.html என்னும் இணையத் தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
ruminagore@yahoo.com