நாங்கள் நடக்கிற பாதை தந்தை செல்வாவின் பாதை என்று சொல்லிலும் செய்கையிலும் காட்டினால் சர்வதேசம் நாங்கள் சொல்லுவதை நம்பும்! – மா.அ. சுமந்திரன், பா.உறுப்பினர் தந்தை செல்வா நினைவுப் பேருரை –

தமிழரசுக்கட்சியின் தொடக்கநரும்  தமிழ்மக்களின்  தந்தை எனவும் வாஞ்சையோடு போற்றப்படும் தந்தை செல்வாவின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் விழா  தமிழரசுக் கட்சியால் அனுட்டிக்கப்பட்டது.தமிழரசுக்கட்சியின் தொடக்குநரும்  தமிழ்மக்களின்  தந்தை எனவும் வாஞ்சையோடு போற்றப்படும் தந்தை செல்வாவின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் விழா  தமிழரசுக் கட்சியால் அனுட்டிக்கப்பட்டது. வந்தாறுமூலை சித்திவிநாயகர் ஆலய முன்றிலில்  நடந்த இந்த விழாவுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி. துரைராஜசிங்கம் தலைமை வகித்தார்.  இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்துகொண்டதுடன் பிரதம விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா. அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) மா.நடராசா, அம்பாறை மாவட்ட மாகாணசபை உறுப்பினர் இராஜேஸ்வரன், திருமலை மாவட்ட மாகாணசபை உறுப்பினர் நாகேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன்போது சித்திவிநாயகர் ஆலயத்தில் சிறப்பு  பூசை இடம்பெற்றதுடன் தந்தை செல்வாவின் திருவுருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரையினை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித்தலைவர் சேயோன் நிகழ்த்தினனார். அதனைத் தொடர்ந்து தலைமையுரையினை  கி.துரைராஜசிங்கம் நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து மா.அ. சுமந்திரன், பா.உறுப்பினர் தந்தை செல்வா  நினைவுப் பேருரை ஆற்றினார். அதன் முழு வடிவம் கீழே கொடுக்ப்பட்டுள்ளது.


தந்தை செல்வாவினுடைய நினைவுப் பேருரை ஆற்றுவதை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்

இந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கிற நீண்டகால நண்பன் திரு துரைராஜசிங்கம் அவர்களே,  பாராளுமன்ற உறுப்பினர்களே,   மாகாணசபை உறுப்பினர்களே, முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினர்களே, இவ்வளவு நேரமும் ஆறஅமர இருந்து இந்தச் சொற்பொழிவுகளைக் கேட்டுக் கொண்டிருக்கின்ற அருமையான  மக்களே!

2010  ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 23 ஆம் திகதி  நான் பாராளுமன்றத்துக்கு  பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டேன்.  நியமிக்கப்பட்ட மூன்று நாள்களுக்குள் 26 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலே தந்தை செல்வாவினுடைய சமாதி அண்டையிலே  நடந்த நினைவு விழாவிலே    ஒரு பேருரை ஆற்றவதற்காக அழைக்கப்பட்டிருந்தேன். அதற்கு அடுத்த வருடம் 2011 இல் ஏப்ரில் மாதம் 26 ஆம் திகதி  கொழும்பில் நடந்த தந்தை செல்வா நினைவு விழாவிலே  பேருரை ஆற்ற அழைக்கப்பட்டேன். சென்ற வருடம் அம்பாரை மாவட்டத்திலே நடந்த தந்தை செல்வாவின் நினைவு நிகழ்வு  ஒன்றிலே நான் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தேன்.

இந்த வருடம் இங்கே  இந்தப்  பேருரை ஆற்றுவதற்காக என்னை அழைத்திருக்கிறீர்கள். மூன்று வருடத்துக்குள்ளே நான்கு  தடவைகள்  தந்தை செல்வாவினுடைய பேருரை ஆற்றுகிற அந்தப் பாக்கியத்தை அந்தப் பெருமையை என்னை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்த  பாக்கியத்தைவிடப்  பெரியதாக நான் கருதுகிறேன்.

‘அன்றும் இன்றும் தந்தை செல்வா’  ‘அன்று தந்தை செல்வா’ என்பதைக்  குறித்து எனக்கு முன்னர் ஒன்றுக்குப் பத்துப் பேர்  பேசிவிட்டீர்கள். ஆகையினாலே அதைக் குறித்து    அதிகமாக நான்  பேசப் போவதில்லை. பேச இருந்ததையும் நான் பேசாமல் தவிர்த்துக் கொள்கிறேன்.

இன்று தந்தை செல்வா என்று சிந்திக்கின்றபோது திரு அரியநேந்திரன்  சொன்னார் ‘தமிழ்த் தேசியமும் சர்வதேசத்தின் பார்வையும் இன்றைய சூழ்நிலையும்   குறித்துப் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பதவியை துச்சமாக மதித்த தந்தை செல்வா

தந்தை செல்வா 1923 ஆம் ஆண்டு சட்டத்தரணியாகப் பதவிப் பிரமாணம் செய்தவர்.   அரசியலுக்குள்ளே அதற்குப் பிறகு 26 ஆண்டுகள் கழித்து அரசியலுக்குள் பிரவேசித்தவர். ஆனால் அவர் சட்டத்தரணியாகப் படிக்கத் தொடங்க முன்னரே அதற்குப் பிறகு சட்டத்தரணியாக  படித்துக் கொண்டிருந்தபோதே இரண்டு தடவைகள் தன்னுடைய தன்மானத்தை என்னவிதமாக மதிப்பிடுகிறார் என்பதை இளவயதிலேயே செய்கையில் காட்டினவர்.

சென் தோமஸ் கல்லூரியிலே ஆசிரியராக இருந்த போது சுகயீனமுற்றிருந்த தன்னுடைய தாயைப் பார்ப்பதற்காகச்  செல்லுவதற்கு   விடுமுறையை   மறுத்த காரணத்தினாலே தனது பதவியை இராசீனாமா செய்தார்.

திரும்ப வந்து வெஸ்லி கல்லூரியிலே படிப்பித்துக் கொண்டிருந்த வேளையிலே அப்பொழுது  அவர் சட்டக் கல்லூரியிலே மாணாக்கராகச் சேர்ந்து கொண்டார். தமிழ்த் தேசிய உடையணிந்து கல்லூரிக்குக் கற்பிக்கச் செல்லுவதை   அதிபர் தடுத்தமையினாலே அந்தப் பதவியில் இருந்தும் இராசீனாமா செய்தார். 

பதவியைத் துச்சமாக மதித்தவர் தந்தை செல்வா. தன்னுடைய  தன்மானத்துக்கும் தன்னுடைய  கொள்கைக்கும் இடையிலே எந்த விதமான பதவியும் வந்து விடக் கூடாது என்பது ஆரம்ப காலத்திலிருந்தே தந்தை செல்வாவினுடைய  அடிப்படைக் கோட்பாடாக இருந்தது. ஆனபடியால்தான் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஒரு காலமும் பதவியில் இருக்கவில்லை. 

ஏன் தந்தை என்று அழைக்கிறோம்?

அறுபத்து மூன்று  ஆண்டுகளுக்கு மேலாக இப்பொழுது 64 ஆண்டுகளாக இருந்துகொண்டிருக்கிற இந்தக் கட்சி 3 ஆண்டுகள் மட்டும்  1965 ஆம் ஆண்டிலே  இருந்து 1968 ஆம் ஆண்டுவரைக்கும் அந்த 3 ஆண்டுக் காலப்பகுதியில்  மட்டுந்தான் அரசாங்கத்திலே அங்கம் வகித்தது. அதுவும் தெரிவு செய்யப்பட்ட ஒருவரும் அமைச்சராக அமைச்சரவையிலே அங்கம் பெறக் கூடாது என உறுதியாக இருந்து செனட் சபை மூலமாக இராணி சட்டத்தரணி முருகேசு திருச்செல்வம் அவர்களை அமைச்சராக்கியது.   முழு பாராளுமன்றக் காலமும் அவரும்  அமைச்சராக இருக்கவில்லை. அவரும்  1968 ஆம் ஆண்டு இராஜீனாமா செய்தார். அப்படியான ஒரு அடிப்படையைக் கொண்ட கட்சியை உருவாக்கியவர் தந்தை செல்வா.

இவரை ஏன் நாங்கள் தந்தை என்று அழைக்கின்றோம்? அனேகமாக ஒரு நாட்டை உருவாக்கியவர் அல்லது ஒரு நாட்டினுடைய முதலாவது பிரதம மந்திரி – மொகமத் அலி ஜின்னா பாகிஸ்தானின் தந்தை Father of the Nation  தேசத்தின் தந்தை என்று சொல்லுவார்கள். டி.எஸ். சேனநாயக்கா அவரோடு சேர்ந்து தேசத்தின் விடுதலைக்காக இயங்கியிருந்தாலும் கூட அவர் முதலாவது பிரதம மந்திரியாக    வந்த படியினாலேயே  அவரையும் Father of the Nation  என்று சொல்லுகிறார்கள்.  தேசத்தின் தந்தை என்று சொல்லுகிறார்கள். அப்படியிருக்க ஓரு தனியான  தேசமாக, தனியான நாடாக தமிழர் தாயகம் மாறாமல் இருக்கின்ற போதும் இவரைத் தமிழர்களின் தந்தை – நிகரற்ற தந்தை – வேறொருவரையும் தந்தை என்று நாங்கள்  சொல்லுவதில்லை.  எந்தவித கேள்விக்கும் அப்பாற்பட்டவராக  அந்தச் சொற்றொடருக்கு சவால் கொடுக்க முடியாதளவிற்கு இலங்கை வாழ் தமிழர்கள்,  தமிழ் பேசும் மக்களுடைய தந்தை இவர்தான் என்று சொல்லுகிற அளவிற்கு அந்த ஸ்தானத்தை இவர் பெறக் கூடியதாக இருந்தது.

நாங்கள் ஒரு தேசம் என்ற எண்ணக் கரு உருவாகுவதற்குக் காரணமாக இருந்தவர்

எதன் காரணமாக என்று நாங்கள்  சற்றுச் சிந்திப்போமாக இருந்தால்  நாங்கள் ஒரு தேசம் என்கிற  எண்ணக் கருவை உருவாகுவதற்குக் காரணமாக இருந்தவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம்.

ஆனபடியினால்தான் அந்தத் தேசத்தின் தந்தை என்கிற ஸ்தானம் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தனியான ஒரு அரசாக, தனியான ஒரு நாடாக நாங்கள்  இல்லாவிட்டாலும் நாங்கள் ஒரு தேசம். நாங்கள் இறைமையுள்ள மக்கள். ஆகையினாலே எங்களுக்கு அந்தச் சுயநிர்ணய உரிமை உண்டு அப்படியான சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள்  நாங்கள் என்கிற   அந்தக் கோட்பாட்டை உருவாக்கி சர்வதேச சட்டத்தின் பிரகாரம் அப்படியான  ஒரு  மக்கள் நாங்கள் என்பதை  முதலாவதாக கொண்டுவந்து அதைச் சாதித்ததன் காரணமாக அவர் எங்களுடைய தேசத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

அவர் அப்படியாக 1951 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம்  திருகோணமலையிலே நடந்த முதலாவது மாநாட்டிலே அதனை ஒரு தீர்மானமாகக்  கொண்டுவந்து  நிறைவேற்றினார். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் பற்றிச் சொல்லப்பட்டது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கும் 1951 ஆம் ஆண்டு  நிறைவேற்றப்பட்ட திருகோணமலைத் தீர்மானத்திற்கும் என்ன வித்தியாம் என்று  நாங்கள் பார்ப்போமாக இருந்தால் சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலே எந்த வித்தியாசமும் கிடையாது.  ஏனென்றால் தமிழ் மக்கள்  ஒரு இறைமையுள்ள சுயநிர்ணய உரிமைக்கு உரித்தான மக்கள் – இவர்கள் ஒரு தேசம் – இவர்கள்  தங்கள்  பாரம்பரிய நிலப்பகுதியிலே தங்களுடைய தாயகத்திலே வாழ்ந்து வருகிறார்கள். அந்த நிலப்பரப்பின் மீது இறைமையைக் கொண்டாடுவதற்கு இவர்களுக்கு சுயாட்சி உண்டு.  அதுதான் அந்த அடிப்படை. அந்த சுயநிர்ணய உரிமையை என்னவிதமாகப் பிரயோகிப்பது என்பதிலே பலவிதமான வேற்றுமைகள் இருக்கக் கூடும். இன்றைக்கும் சர்வதேச சட்டத்தின் கீழே சுயநிர்ணய உரிமை ஒரு மக்களுக்கு  இருக்கின்றதா? இல்லையா? என்பதுதான்  கேள்வி.  அப்படியான சுயநிர்ணய உரிமைக்கு உரித்தான ஒருமக்கள் இருப்பார்களாக இருந்தால் அதிலேயும் இலங்கை வாழ் தமிழ்மக்களுக்கு அப்படியான சுயநிர்ணய உரிமை  சர்வதேச சட்டத்தின் கீழே உண்டு என்பதை எவரும் மறுக்க முடியாது.

தமிழ்மக்கள் சுயநிர்ணய உரிமையுள்ள ஒரு மக்கள் என்பதிலே எந்தவிதமான அய்யப்பாடும் கிடையாது

தமிழரசுக்கட்சியின் தொடக்கநரும்  தமிழ்மக்களின்  தந்தை எனவும் வாஞ்சையோடு போற்றப்படும் தந்தை செல்வாவின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் விழா  தமிழரசுக் கட்சியால் அனுட்டிக்கப்பட்டது.ஆயிரத்துத் தொழாயிரத்து  தொண்ணூறாம் ஆண்டு  அளவிலே யுஎன்எஸ்கோ நிறுவனம் எப்படியான மக்களுக்கு சுயநிர்ணய உரிமை கொடுக்கப்படும் என்ற ஒரு பட்டியலைப் போட்டிருக்கிறார்கள். அந்தப் பட்டியலை எடுத்துப் பார்த்தால் அதிலே சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு சோதனைக்கும் நாங்கள் சித்தியடையக் கூடியவர்கள். ஆகையினாலே சுயநிர்ணய உரிமையுள்ள ஒரு மக்கள் நாங்கள் என்பதிலே எந்தவிதமான அய்யப்பாடும் கிடையாது. ஆனால் சர்வதேச சட்டத்திலே சுயநிர்ணய உரிமையுள்ள  எல்லா மக்கள் கூட்டங்களும் தனித்தனியாக நாட்டை உருவாக்க தகுதி உடையவர்கள் என்று அது சொல்லவில்லை. இருக்கின்ற நாட்டுக்குள்ளேயே பல்வேறு மக்களுக்கு சுயநிர்ணய உரிமை இருக்கக் கூடும். அந்த சுயநிர்ணய உரிமையை அவர்கள் உபயோகிக்கக் கூடியதாக அதனை சரியான விதத்திலே அவர்கள் பிரயோகிக்கக் கூடியதாக அந்த நாட்டினுடைய ஆட்சிமுறை அமைக்கப் பட்டிருந்துகுமே ஆனால் அந்த நாட்டுக்குள்ளேயே அவர்கள் தங்களுடைய சுயநிர்ணய உரிமையை உபயோகிக்க வேண்டும். இதுதான் கனடிய உச்ச நீதிமன்றத்தினடைய  தீர்ப்பு. அப்படி தங்களுக்கு உரித்தான அந்த சுயநிர்ணய உரிமையை அவர்கள் உபயோகிப்பதற்கு உள்நாட்டிலேயே கொடுக்கப்பட்டிருக்கிற ஆட்சி முறைகளை உபயோகித்து அவர்கள் அதனை  ருசி பார்ப்பதற்கு அவர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்கப்படாது விட்டால் அவர்கள் தனியான ஒரு சுதந்திர இராச்சியமாக மாறுவதற்கான வெளியக சுயநிர்ணய உரிமை அவர்களுக்கு வழங்கப்படலாம். அதுதான் சர்வதேச சட்டம். 

ஆகையினாலே 1945 ஆம் ஆண்டிலே அய்க்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்ட போது அதனுடைய  முதலாவது உறுப்புரிமையை மக்களுடைய சுயநிர்ணய அடிப்படையிலே வெவ்வேறு நாடுகளாக இறைமையை அவர்கள் அனுபவிக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது. சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலே இறைமையை உபயோகிக்கிற நாடுகள் சுயமாகச் சேர்ந்து உருவாக்கியது  அய்க்கிய நாடுகள் சபை. ஆகவே சுயநிர்ணய உரிமை என்பது ஆரம்பத்திலே லெனினுடைய  வாதத்திலேயும் முதலாம் உலக மகாயுத்தத்தின் போது  அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த வுட்றூ வில்சன் அவர்களுடைய  வாதத்தின் பேரிலும் ஒரு கோட்பாடாக கூறி வந்திருந்தாலும் கூட சர்வதேசம் முழுவதும் ஏற்றுக்கொள்ளுகிற ஒரு கோட்பாடாக  ஒரு வரைவாக எழுத்து வடிவத்திலே அய்க்கிய நாடுகள் ஸ்தாபனம் உருவாக்கப்படுகிற போது  அதிலே முதலாவது உறுப்புரையாக  அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது 1950 ஆம் ஆண்டு.

சர்வதேச சட்டம் வளர்கிற  அதே வேகத்திலே எங்களுடைய உரிமைக்கான வடிவமைப்பையும்  தந்தை செல்வா வடிவமைத்துக் கொண்டு வந்தார்கள்

அய்ம்பத்தொராம் ஆண்டு ஏப்ரில் மாதத்திலே  தந்தை செல்வா நாங்கள் அப்படியான ஒரு சுயநிர்ணய உரிமைக்கு உரித்தான மக்கள் என்பதை தமிழரசுக் கட்சியினுடைய  முதலாவது மாநாட்டிலே பிரகடனப்படுத்தினார். சர்வதேச சட்டத்தோடு மிகவும் நெருக்கமாக சர்வதேச சட்டம் வளர்கிற  அதே வேகத்திலே எங்களுடைய உரிமைக்கான வடிவமைப்பையும்  தந்தை செல்வா அவர்கள் வடிவமைத்துக் கொண்டு வந்தார்கள் என்பதை நாங்கள் இதனூடாகக் காணக் கூடியதாக இருக்கிறது. அந்தப் பிரயோகத்தை எடுத்துப் பார்த்தீர்களாக இருந்தால் அதிலே சர்வதேச சட்டத்ம் என்று  சொல்லப்பட்டிருக்கிறது. சர்வதேச சட்டத்தின் எல்லா சோதனைகளுக்கும் சித்தியடையக் கூடிய தமிழ்மக்கள் தாங்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வருகிற வடக்குக்  கிழக்கிலே  சுயநிர்ணய உரிமையை அனுபவிப்பதற்கான உரித்து உடையவர்கள் என்று அந்தப் பிரகடனம் சொல்லுகிறது. ஒரு தேசத்திற்கான சோதனை      ஒவ்வொன்றிலும்  அவர்கள் சித்தி அடையக் கூடியவர்கள். ஆங்கிலத்திலே சர்வதேச சட்டத்திலே என்னவிதமாக அது   சொல்லப்பட்டிருக்கிறதோ அதே சொற்றொடர்கள் திருகோணமலைப் பிரகடனத்திலே பாவிக்கப் பட்டிருக்கிறது. They  are people by every test of nationhood. ஆகையினாலே சர்வதேச சட்டத்திற்கு அமைவாகத்தான் தந்தை செல்வாவினுடைய தேசியப் போராட்டம் விரிவடைந்து வந்தது.

1972 ஆம் ஆண்டு புதிய அரசியல் அமைப்பொன்று  ஒன்று உருவாக்கப்பட்ட போது சோல்பரி அரசியல் அமைப்பை உதறித் தள்ளிவிட்டு இந்த நாட்டு மக்கள் தாங்களாகவே ஓர்  அரசியல் அமைப்பை உருவாக்குகிறார்கள் என்று சொல்லி பாராளுமன்றத்துக்கு வெளியே சென்று நவரங்காவிலே அமர்ந்திருந்து அவர்கள் ஒரு புதிய அரசியல் அமைப்புத் சட்டத்தை – ஒரு குடியரசுச் சட்டத்தை – உருவாக்கியபோது தமிழரசுக் கட்சியின்  சார்பிலே  பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.  சில பிரேரணைகள் –  ஆறு பிரேரணைகள்  முன்வைக்கப்பட்டன.   திரு  தர்மலிங்கம் அவர்கள்  ஒவ்வொன்றையும்   முன்மொழிந்தார்.  அவை ஒவ்வொன்றும் 87 – 14, 83 – 14, 82 – 14  என்ற வாக்கு வித்தியாசத்திலே தோற்கடிக்கப்பட்டது.

தன்னுடைய சொத்துக்களை எல்லாம் மக்களுக்காக மக்கள் சேவைக்காக விற்று விற்று வாழ்ந்த  மகான்

பெரும்பான்மை சக்தியை வீணடித்து இனவீதாசாரத்திலே தங்களுக்கு இருந்த அந்தப் பெரும்பான்மை வீதாசாரத்தை உபயோகித்து  எண்ணிக்கையிலே சிறுபான்மையராக இருந்தவர்களை ஆட்சி அதிகாரத்திலே  பங்களிக்க முடியாமல் – ஆட்சி அதிகாரத்திலே  மட்டுமல்ல – நாட்டுக்கு என்று ஒரு குடியரசு அரசியல் அமைப்பை உருவாக்குகிற அந்தச் செய்கையிலேயும் பங்கெடுக்க முடியாமல்  தங்களுடைய  பெரும்பான்மை பலத்தை பெரும்பான்மை மக்கள் உபயோகித்ததன் காரணமாக அதிலே இருந்து தமிழரசுக் கட்சி வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தந்தை செல்வா தன்னுடைய ஆசனத்தை இராஜினாமா செய்தார்.

தமிழரசுக்கட்சியின் தொடக்கநரும்  தமிழ்மக்களின்  தந்தை எனவும் வாஞ்சையோடு போற்றப்படும் தந்தை செல்வாவின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் விழா  தமிழரசுக் கட்சியால் அனுட்டிக்கப்பட்டது.இராசினாமா செய்த போது   தமிழரசுக் கட்சிக்கு இருந்தது 11 பாராளுமன்ற உறுப்பினர்கள்.  இராசினாமா செய்கிற  போதே அவருக்குத் தெரியும் இவர்கள்  இடைத்தேர்தலை உடனடியாக நடத்த மாட்டார்கள் என்று. தன்னுடைய சொத்துக்களை எல்லாம் மக்களுக்காக மக்கள் சேவைக்காக விற்று விற்று வாழ்ந்த அந்த மகான் தான் இராஜினாமா செய்தால் இடைத் தேர்தல் நடத்தாமல் இவர்கள் இழுத்தடித்தால் எப்படி எனக்குச் சம்பளம் கிடைக்கும் என்று திகைத்தார். மற்றப் 10  பேரும் சொன்னார்கள் – அப்போது அவர்களுக்கு சம்பளமாக கிடைத்தது சம்பளம் அல்ல ஊதியமாகக் கொடுத்தது – 1,000 ரூபா. பத்துப் பத்துப் பேரும் சொன்னார்கள் நாங்கள் ஒவ்வொருவரும் மாதம் 100 ரூபா கொடுக்கிறோம் என்று. அதன்படி 72 ஆம் ஆண்டிலே  இருந்து 75 ஆம் ஆண்டு இடைத் தேர்தல் நடத்தப்படுகிற  வரைக்கும் ஒவ்வொரு மாதமும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மற்றப் 10  பாராளுமன்ற உறுப்பினர்களும் 100 ரூபா கொடுத்து தந்தை செல்வா ஆயிரம் ரூபாயை மாத ஊதியமாகப்  பெற்றுக் கொண்டார்.

அப்படியாகத்தான் அந்த 3 ஆண்டுகளும் பாராளுமன்ற உறுப்பினராக இல்லாத காலத்தில் வாழ்ந்தார்.  யோகேஸ்வரன் சொன்னார் தந்தை செல்வாவைத் தான் பார்த்ததில்லை என்று. நான் ஒரேயொரு தடவை மட்டும் பார்த்திருக்கிறேன். எனக்கு 12, 13 வயது இருக்கும் அந்தக் காலத்திலே நான் அடிக்கடி சென்று பாராளுமன்ற அமர்வுகளைப் பார்ப்பது வழக்கம். அந்த வயதிலும் – 10 வயதிலும் – பாராளுமன்றத்துக்குச் சென்று பார்ப்பது வழக்கம்.  ஆனால் நான் பாராளுமன்ற உறுப்பினராக வருவேன் என்று நினைத்திருக்கவில்லை. ஆனால்  பாராளுமன்றம்  சென்று வாதங்களைச் சுவராசியமாக அவதானிப்பது உண்டு. 

ஒரு தடவை பாராளுமன்றத்திலே  கலரியில்  இருந்து  பார்த்துக் கொண்டிருந்த போது அண்ணன் அமிர்தலிங்கம் அவர்களும் பாராளுமன்றத்துக்கு வந்து – அவர் அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை. அவருக்கு எதிராக வழக்கு நடந்து கொண்டிருந்த காலம் –   அவரும் வந்து அதே இடத்தில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தார்.  அப்போதுதான் தந்தை செல்வநாயகத்தை காணக் கூடியதாக இருந்தது.  முன் வரிசையிலே காது இரண்டிலையும் அந்த ear phone யைப் போட்டுக் கொண்டு பேசாமல் அமர்ந்திருந்தார். திடீரென்று  எழுந்து  போக முற்பட்டார். அதைக் கழட்டாமல் எழுந்து போகும் போது தடுக்கினார். தடுக்கினார் என்று சொல்லும் போது நான் அதைக் கண்ணாடலே கண்டது கூட ஞாபகம் இருக்கிறது.  அவரைக் குறித்த ஒரு முக்கியமான விடயத்தைச் சொல்லி இன்றைய சூழ்நிலை பற்றிப் பேசலாம் என நினைக்கின்றேன்.  

அரசியல்வாதிகளிலே நேர்மை, வாக்குத்தவறாமை இரண்டிலும் தந்தை செல்வாவுக்கு நிகரானவர் இல்லை

நேர்மை, வாக்குத்தவறாமை,  இலங்கை அரசியல்வாதிகளிலே வேறு எவரையும் – திரும்பவும் சொல்லுகிறேன் இலங்கை அரசியல்வாதிகளிலே வேறு எவரையேனும் – நேர்மையானவர், தந்தை செல்வாவுக்கு நிகரானவர் என்று எவரும் சொல்ல முடியாது. தமிழ் அரசியல்வாதிகளாக இருக்கட்டும் சிங்கள அரசியல்வாதிகளாக இருக்கட்டும் முஸ்லிம் அரசியல்வாதிகளாக இருக்கட்டும்.  தந்தை செல்வா நேர்மையானவர், வாக்குத் தவறாதவர் என்பதிலே இன்றைக்குக் கூட இலங்கைப் பாராளுமன்றத்தில் எவரும் மறுக்க மாட்டார்கள். அன்றைக்கும் எவரும் மறுத்ததில்லை. அந்த அளவுக்கு அவர் அகிம்சைப் போராட்டம் –  நாங்கள் சொல்கிறோம் அகிம்சைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் – அகிம்சைப் போராட்டத்தை நம்பியிருந்தவர் என்று.  அகிம்சைப் போராட்டத்தை முன்னெடுப்பவர்களுக்கு இருக்க வேண்டிய அடிப்படையான  குணாதிசயம் அந்த நேர்மை. அந்த வாக்குத்தவறாமை. அந்த நேர்மையில்லாமல் அகிம்சைப் போராட்டத்தை எவருமே முன்னெடுக்க முடியாது.

சென்ற வாரம் ஒரு பெண்மணி ஒரு கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். சென்ற ஏப்ரில் 26  ஆம் திகதி கொழும்பிலே நடந்த நிகழ்விலே தலைவர் சம்பந்தன்  தந்தை செல்வாவைப் பற்றிப் பேசியபோது இந்த அகிம்சையைப் பற்றிப் பேசியிருந்தார். அதற்குச் சவாலாக ஒரு பெண்மணி  அண்மையிலே சில நாள்களுக்கு முன்னர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவர் என்ன சொல்கிறார் என்றால் ஆயுதப் போராட்டம் முடிவடைந்து விட்டது, இனிமேல் உங்களிடத்திலே  போராடுவதற்கு வேறு ஒன்றுமில்லை ஆனபடியால் இப்ப திரும்பவும் அகிம்சை என்று சொல்லுகிறீர்கள் – வேறொன்றும் இல்லாத காரணத்தினாலே அகிம்சை என்று சொல்லுகிறீர்கள். ஒரு தமிழ்ப் பெண்மணி எழுதியிருக்கிறார்.

அகிம்சை என்பது வன்முறை அற்ற போராட்டம்.  இது நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டிய ஒரு விடயம்.  இந்த இடத்தில் ஒரு கருத்தையும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. வன்முறையற்றிய  போராட்டத்தைப் பற்றிப் பேசுகிறபோது ஆயுதம் எடுத்துப் போராடிய எமது இளைஞர்களது போராட்டத்தை எந்தவிதத்திலையும் குறைகூறுவதாக எவரும் விளங்கிக் கொள்ளக் கூடாது. பல மேடைகளிலே அகிம்சைப் போராட்டத்தைப் பற்றிச் சொல்லுகிறபோது ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை இழிவுபடுத்திப் பேசுகிறார்கள் என்று சொல்லுகிறார்கள். அப்படியல்ல.

ஆயுதப் போராட்டத்தை எவரும் எந்தக் காலத்திலும் இழிவுபடுத்த முடியாது

ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எம்முடைய  இளைஞர்கள் தங்களுடைய உயிரைத் துச்சமாக மதித்து தாங்கள் சாவதற்கும் தயாராக எந்தவிதமான சுயநலமும் இல்லாமல் அதை  மேற்கொண்டதை நாங்கள்  எவரும் எந்தக் காலத்திலும் இழிவுபடுத்த முடியாது. ஆகையினாலே அந்த விளக்கம் மிகவும் அத்தியாவசியமானது.

ஆனால் அதே வேளையிலே ஆயுதப் போராட்டம் எங்களை எங்கே கொண்டு சென்றது என்பதை நாங்கள் சுயமாக எங்களுக்குள்ளே உண்மையோடு சிந்தித்துப் பார்க்கவேண்டிய   அவசியமான ஒரு காலகட்டம் இன்றைக்கு  எழுந்திருக்கிறது. இன்றைக்கு நாம் ஏன் அகிம்சைப் போராட்டம் என்று சொல்லுகிறோம். ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதினாலா? அப்படியாக இருந்தால் எங்களது அகிம்சைப் போராட்டமும் வெல்லாது. நாணயம் இல்லாமல், நம்பிக்கை இல்லாமல், நேர்மை இல்லாமல் அகிம்சை என்று வெறுமனே சொல்லிக் கொண்டு நாங்கள் போராட்டங்களை முன்னெடுப்போமாக இருந்தால் எங்களுடைய அகிம்சைப் போராட்டம் ஒரு போதும் வெற்றிபெறாது. தந்தை செல்வாவுக்குக் கொடுக்கப்பட்ட இன்னொரு பெயர் ஈழத்துக் காந்தி. ஏனென்றால் காந்திய வழியிலே போராடியவர்.

காந்திய வழியைச் சற்றுச் சிந்தித்துப் பார்ப்போம்.  மகாத்மா காந்தி அவர்கள் அகிம்சை என்று சொல்லி வன்முறையற்ற வழியில்  போராடம் என்று முன்னே வந்த போது வன்முறை எங்கே எப்போது வெடித்தாலும் உடனடியாகத் தன்னுடைய போராட்டத்தைக் கைவிட்டு விடுவார். இது எங்களுக்கு தெரிந்த உண்மை. அவசரப்பட்ட,  ஆத்திரம் அடைந்த  இளைஞர்கள் வன்முறையில் இறங்கினால் உடனடியாகத் தன்னுடைய  அகிம்சைப் போராட்டத்தை இடை நிறுத்துவார். ஏனென்றால் தன்னுடைய அகிம்சைப் போராட்டத்தை ஆயுதப் போராட்டம் களங்கப்படுத்தக் கூடாது என்பதில் அவர் திடமாக இருந்தார்.

இந்தியா சுதந்திரம் அடைகின்ற  வேளையிலே கூட –  முஸ்லிம் மக்களுக்கும் இந்துமக்களுக்கும்  இடையிலே பெரிதான  கலவரம் ஏற்பட்ட போது அவர் கல்கத்தாவுக்குப் பிரயாணமாகிச் சென்று  அங்கே உண்ணா விரதம் இருந்தார். நீங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கிற வரைக்கும் நான் உண்ணாவிரதத்தைக் கைவிட மாட்டேன் என்று சொன்னார். பல இந்துத் தலைவர்கள் சென்று கெஞ்சினார்கள். பல முஸ்லிம் தலைவர்கள் சென்று கெஞ்சினார்கள். ஆனால் ஒருவருக்கு ஒருவர் எதிராக வன்முறையைக் கைவிடும் வரைக்கும் அவர் உண்ணா விரதத்தைக கைவிடவில்லை.  ஆகையினாலே  அவர்கள் வன்முறையைக் கைவிட்டார்கள். அதுதான் காந்திய வழி. அதுதான் அகிம்சை வழி.

எங்களுக்குள்ளேயே இருக்கிற குறைபாடுகளை நாங்கள் பகிரங்கமாக ஒத்துக்கொள்ளா விட்டால் விமோசனம் இல்லை

ஒரு பக்கத்திலே வன்முறையற்ற அகிம்சைப் போராட்டம் என்று சொல்லிக் கொண்டு இன்னொரு பகுதியிலே தம்பிமார் நீங்களும் நடத்துங்கோ  என்று  சொல்லுவது அகிம்சைப் போராட்டம் அல்ல. இது நாங்கள் திடமாக எங்களுக்கு நாங்களே உண்மையோடு சொல்லிக் கொள்ள வேண்டிய ஒரு உண்மை.  நாங்கள் அகிம்சைப் போராட்டம் என்று வாய்திறந்து சொல்வோமாக இருந்தால்  எங்கள் பக்கத்தில் இருந்து தமிழ் தரப்பிலே  இருந்து எந்தவிதமான வன்முறையும் வெடிக்காமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்களிடத்திலே உண்டு. அப்படிச் செய்யத் தவறினோமாக  இருந்தால் சரித்திரத்தில் முன்னே விட்ட பிழைகளை திரும்பவும் விடுவதாக ஆவோம்.    இந்தக் கசப்பான உண்மைகளை சொல்லுவதற்கு  இந்த மேடையைத் தவிர சிறந்த இடம்  வேறெதுவும் கிடையாது.

நாங்கள் எங்களுடைய சரித்திரங்களை –  எங்களுடைய அண்மைக்கால சரித்திரங்களை – நாங்களே பின்னோக்கிப் பார்த்து  மற்றவர்கள் சுட்டிக் காட்டும்வரை இருக்காமல் நாங்களே பின்னோக்கிப் பார்த்துப் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் உண்டு. எங்களுடைய இனம் தழைக்க வேண்டுமாயிருந்தால் எங்களுடைய இனம் பிழைக்க வேண்டுமாக இருந்தால் எங்களது இனம் அழியாமல்  பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் நாங்கள் சொல்லுவது செய்வதாக இருக்க வேண்டும். நாங்கள் வாக்குத் தவறாதவர்களாக இருக்க வேண்டும். தந்தை செல்வா வழியிலே செல்லுகிறோம் என்று சொல்லிவிட்டு ஒன்றைச் சொல்லி இன்னொன்றைச் செய்கிறவர்களாக நாங்கள் இருக்க முடியாது. அப்படியிருப்போமாக  இருந்தால் நாங்கள் தந்தை செல்வா வழி செல்பவர்கள் அல்லர். நாங்கள் வன்முறையிலே ஈடுபடவில்லை நாங்கள் அகிம்சைப் பாதையிலே மட்டுந்தான்  நகருகிறோம் என்று நாங்கள் வாய்திறந்து சொல்லுகிற போது அதை அப்படியே செய்கிறவர்களாக இல்லாவிட்டால் எங்களுடைய போராட்டம் ஒரு காலமும்  வெற்றி பெறாது.

அடுத்தது, எங்களுக்குள்ளேயே இருக்கிற தீமைகளை எங்களுக்குள்ளே இருக்கிற குறைபாடுகளை நாங்கள் பகிரங்கமாக ஒத்துக்கொள்ளாவிட்டால் எங்களுடைய மக்களுக்கு எந்தக் காலத்திலேயும் விமோசனம் கிடையாது. எல்லாப் போராட்டங்களிலேயும் அந்தப் போராட்ட வடிவங்களில் இருந்து அகன்று சில வன்முறைகள் வெடிப்பது சகஜம்.  விஷேசமாக வாலிபர்கள் உணர்வின் காரணமாக – அவர்களுடைய உண்மையான உணர்வின் காரணமாக – அவர்கள் ஆத்திரம் அடைந்து – அந்த ஆத்திரத்துக்குக் காரணம் உண்டு.  ஆனால் அந்த ஆத்திரத்தின் காரணமாக அகிம்சையை விட்டு வெளியேறுவது வழமை. ஆனால் அப்படியாக நடக்கிற  போது அது பிழையென்று ஏற்றுக் கொள்ள வேண்டிய அத்தியாவசியத் தேவை இருக்கின்றது.

புதிதாக ஒரு தென் ஆப்பிரிக்காவை உருவாக்கிய நெல்சன் மண்டேலா

இன்றைக்குத் தென் ஆபிரிக்காவிலே  நெல்சன் மண்டேலா 27 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து – அவர்தான் ஆபிரிக்க காங்கிரசின் ஆயுதப் போராட்டத்துக்கு தலைவராக நியமிக்கப்பட்டவர் 1960 ஆம் ஆண்டு.   ஆயுதப் போராட்டம் வேண்டும் என்று சொல்லி ஒரு பிரிவை ஏற்படுத்திய போது அதற்குத் தலைமை தாங்குகிறார் நெல்சன் மண்டேலா. ஆனால் 27 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப்  பிறகு வெளியே வந்து புதிதாக ஒரு தென்னாபிரிக்காவிலே உருவாக்கிய போது தாங்களும் விட்ட பிழைகளை ஏற்றுக் கொள்கிற ஒரு மனப்பான்மையை அந்த மக்கள் மத்தியிலே புகட்டியதன் காரணமாகத்தான்  இன்றைக்கு தென்னாபிரிக்கா சுபீட்சமான அந்த மக்களது உரிமைகளை   நிறைவு செய்கிற ஒரு நாடாக இருக்கிறது. எந்த அளவுக்கு என்று பார்த்தால் அவருடைய மனைவியாக இருந்த வினி மண்டேலா கூட குற்றம் புரிநதவர் என்று  காணப்பட்டு  சென்ற சில மாதங்களிலே வினி மண்டேலாவினுடைய  குழுவினர் கொலை செய்து புதைத்தவர்களுடைய உடல்கள் இப்பொழுது புதை குழியிலே  இருந்து எடுக்கப்படுகின்றன.

அவை ஒன்றையும் மூடி மறைக்கவில்லை. ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் இளைத்த கொடுமைகளைக் கூட பகிரங்கமாக ஏற்றுக் கொண்டு  முன்னேறின படியினால்தான்  இன்றைக்கு  அந்த நாட்டிலே அனைத்து மக்களுடைய  உரிமைகளும் ஏற்றுக் கொள்ளக் கூடியதான ஒரு உதாரணத்துவமான நாடாக மிளிர்கிறது.

தென் ஆபிரிக்காவிலே ஒரு கருத்தைச் சொல்கிறார்கள். இந்தியர்களுக்குச் சொல்கிறார்கள். இந்திய மக்களுக்குத் தென் ஆபிரிக்கா சொல்கிறது “நீங்கள் மோகன்தாஸ் கரம்சந் காந்தி என்கிற ஒரு வழக்கறிஞரை எங்களிடத்தில் அனுப்பினீர்கள்.  அவரை மகாத்மாவாக நாங்கள்  உங்களிடத்தில்  திரும்பி அனுப்பினோம்” என்று தென் ஆபிரிக்கர்கள் பெருமையாகச் சொல்கிறார்கள். மகாத்மா காந்தி சாத்வீகப் போராட்டத்தை ஆரம்பித்தது தென்னாபிரிக்காவிலே.  ஆகையினாலே இன்றைக்கு அந்தப் பாரம்பரியத்தை  நினைத்தவர்களாக அவர்கள் தாங்களும் விட்ட பிழைகளைப் பகிரங்கமாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

இனப்படுகொலை  நடக்கிறது என்று சொல்கிறோம் அதுபற்றி  விசாரணை வேண்டும் என்கிறோம்

சர்வதேச பார்வையிலே தமிழ்த் தேசியம் என்று நாம் சொல்லுகிறோம்.    அய்க்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில்  இரண்டு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன. சென்ற தடவைப் பிரேரணைக்கும் இந்தத் தடவை பிரேரணைக்கும் பாரிய வித்தியாசம் உண்டு. பாரிய முன்னேற்றம் உண்டு. ஆனால் இந்த முன்னேற்றம் எல்லாம் பொறுப்புக் கூறவேண்டிய கடப்பாடு  சம்பந்தமாக சர்வதேச விசாரணை சம்பந்தமாக  சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வருடம் சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று அய்க்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சொன்ன கருத்தை அய்க்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அங்கீகரித்திருக்கிறது. அது பிரேரணையில் சொல்லப்படாவிட்டாலும் அவருடைய அறிக்கையை அங்கீகரித்திருக்கிறது.  சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தை  ஏற்றுக் கொண்டிருக்கிறது.

அந்த விசாரணை எப்படியான விசாரணை?  நாங்கள் எல்லாம் குதூகலிக்கிறோம். முன்னேற்றம் அடைந்துவிட்டோம் என நினைக்கிறோம். ஆனால் அது எப்படியான விசாரணை? அய்க்கிய நாடுகள் நிபுணர் குழு என்னத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.  போரின் இறுதிக் கட்டத்திலே இரு தரப்பினரும் மனிதாபிமான சட்டங்களுக்கு எதிராகக் குற்றம் புரிந்திருக்கிறார்கள். போரின் இறுதிக் கட்டத்திலே இருதரப்பினரும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு எதிராகக் குற்றம் புரிந்திருக்கிறார்கள். இது விசாரிக்கப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும். பொறுப்புக் கூறுவதற்கான கடப்பாட்டுக்குள்ளே உட்படுத்தப் படவேண்டும். நாங்கள் அதை ஆதரிக்கிறோம்.  அப்படியான விசாரணை வேண்டும் என்று சொல்லுகிறோம். எப்படியான விசாரணை? அரசாங்கத்துக்கு எதிரான விசாரணையா?  அரசாங்கத்துக்கு எதிரான விசாரணை மட்டுமா?  சர்வதேசம் ஏற்றுக் கொள்ளுமா?  இல்லை.

இரு தரப்பினருக்கும் எதிரான விசாரணை. எங்களுக்கு  இனப்படுகொலை  நடக்கிறது  என்று சொல்லுகிறோம்.   Genocide    சர்வதேச சட்டத்திலே ஆகப் பெரிய குற்றம் – Genocide – இனப்படுகொலை. இன்னமும் சர்வதேசம் அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை.    இங்கு  நடக்கிற  இனப்படுகொலை என்பது எங்களுடைய வாதமும் கூட. நாங்கள் இதைச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். நிபுணர் குழுவிலே சொல்லி இருக்கிறார்கள் அது இனப்படுகொலை என்று  சொல்லியிருக்கிறது.   சர்வதேச குற்றத்துக்கு   அடுத்த படியாக இருக்கிற குற்றத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். துன்புறத்தப்படுதல் (persecution). அது நிபுணர் குழு அறிக்கையிலே கொடுக்கப்பட்டிருக்கிறது. வன்னிப் பகுதியிலே அந்த வேளையிலே வாழந்த  3 இலட்சம் மக்களுக்கு எதிராகத் துன்புறுத்தல்  குற்றம் இலங்கை அரசாங்கம் செய்தது என்று சொல்லியிருக்கிறார்கள்.  (persecution).

தமிழ்மக்களது காணி அபகரிப்பு ஓர்  இனப் படுகொலை  

அது போரின் இறுதிக்கட்டத்தில் நடந்தது மட்டுமல்ல அது இப்போதும் நடக்கிறது. விஷேசமாக – பலர் அதைச் சொல்லி விட்டார்கள் – இந்தக் காணி அபகரிப்பு எங்களுடைய பூர்வீக நிலம் எந்த இடத்திலே நாங்கள் எங்களுடைய  சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிக்க சர்வதேச சட்டம் எங்களுக்கு உரிமை கொடுத்திருக்கிறது.   அந்த நிலத்தை எங்களிடம் இருந்து பறிப்பது இனப் படுகொலை என அதை நாங்கள் சொல்லுகிறோம். சர்வதேசம் ஏற்றுக் கொள்ளுமாறு வைக்க வேண்டும். அதே வேளையிலே  எங்களுடைய தரப்பிலிருந்து இன்னொரு  பாரிய குற்றத்தை  நாங்களும் செய்தோம் என்பதை  நாங்களும்  ஏற்றுக்கொள்ள வேண்டும். எங்களுடைய மண்ணிலே இருந்து  இனச் சுத்திகரிப்பை நாங்கள் செய்திருக்கிறோம். தமிழர் தரப்பிலே இருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டிருக்கிறது. வடக்கிலே இருந்து முஸ்லிம் சகோதரர்கள் 48  மணி நேரத்தில் விரட்டி அடிக்கப்பட்டது ஒரு இனச் சுத்திகரிப்பு. அதற்கு வேறு எந்தவிதமான வரைவிலக்கணமும் கொடுக்க முடியாது.  அதை நாங்கள்     ஏற்றுக்கொள்ளுகிற  வரைக்கும்  – இது ஒரு கசப்பான உண்மை ஆனால் சொல்லித்தான் ஆகவேண்டும் – நாங்கள் இனச் சுத்திகரிப்புக்குக்  குற்றவாளிகள் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளுகிற வரைக்கும் எங்களுக்கு எதிராக இனப்படுகொலை நடக்கிறது என்பதை  சர்வதேசம் ஒருகாலமும் ஏற்றுக்கொள்ளாது.  35.27

எங்களுடைய போராட்டம்  நீதியின் அடிப்படையிலான  போராட்டமாக  இருந்தால்,  எங்களுடைய போராட்டம் நியாயத்தின் அடிப்படையிலான போராட்டம் ஆக இருந்தால் நீதி,  நியாயம் தமிழன், சிங்களவன், முஸ்லீம்  என்று பார்ப்பதல்ல. சரி பிழை என்பதைப் பிரித்துப் பார்க்கவேண்டும். மனித உரிமை என்பது எல்லோருக்கும் கொடுக்கப் படுவது. மனித உரிமைகளின் அடிப்படையிலே சர்வதேசம் இன்றைக்கு எங்களுடைய விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கோருகிறோம். மனித உரிமையின் அடிப்படையிலே கோருகிறோம்.

நாங்கள்  தமிழர்கள் என்பதனால் அனைத்துலக சமூகம் எங்கள் பக்கத்தில் இருக்க வேண்டும் என நாங்கள் யாரையும் கேட்பதில்லை, கேட்கவும் முடியாது. ஆங்கிலேயர்கள், பிரஞ்ச்சுக்காரர்கள், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர்கள், அமெரிக்கர்கள் – ஏன் அவர்கள்  தமிழர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்?

ஏன் அவர்கள் சிங்களவருக்கு எதிராகத் செயல்பட  வேண்டும்? அது நியாயமா? இல்லையே!  ஆனால்  நாங்கள்    நியாயத்தின்  பக்கம்  சார வேண்டும். நீதியின் பக்கம் நின்று போராட வேண்டும். எங்களுடைய  கோரிக்கை நியாயமான கோரிக்கை.  எங்களுடைய நிலைப்பாடு நீதியான நிலைப்பாடு. ஆனபடியினாலே நீங்கள் எங்களின் பக்கம் நில்லுங்கள் என்று (சர்வதேசத்திடம்) சொல்கின்றோம். அப்படிச் சொல்லுகின்ற  அதே வேகத்திலே, எங்களுடைய  நிலைப்பாடு  நீதியானதும் நியாயமானதும் என்பதை  நாங்கள் நிமிர்ந்து நின்று சொல்லக் கூடியதாக இருக்க  வேண்டும். அப்படி இல்லாமல் போவதாக இருந்தால் எவரும் எங்களுக்காகப் பேச முன் வரமாட்டார்கள்.

 மலையக மக்களுக்காகத்  தான் இருந்த கட்சியை விட்டு வெளியேறிப் புதுக் கட்சியை ஆரம்பித்தவர் தந்தை செல்வா

அண்மையிலே பாராளுமன்றத்திலே  சம்பந்தன் அய்யா இலங்கையிலே  முஸ்லீம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிற  வன்முறைக்கு எதிராகக் குரல் எழுப்பினார். நானும் ஒரு  சில வார்த்தைகள் அதற்குமுன் பேசியிருந்தேன். எங்களுக்குப் பல கடிதங்கள் வந்தன.  எனக்கு ஒன்றுதான் வந்தது.  சம்பந்தன் அய்யாவுக்கு நிறையக் கடிதங்கள் வந்தன. எனக்கு வந்த கடிதம் சம்பந்தன் அய்யாவுக்கு எழுதிய  கடிதத்தில் ஒரு பிரதி.  மிகவும் துக்கத்தோடு இந்தக் கருத்தை நான் இங்கு சொல்லுகிறேன். மட்டக்களப்பிலிருந்து அந்தக் கடிதம் வந்திருக்கிறது. மட்டக்களப்பிலிருந்து சில தமிழர்கள் அந்தக் கடிதத்தை எழுதி  அனுப்பி இருக்கிறார்கள். “சோனகனுக்காக நீங்கள் ஏன் குரல் எழுப்புகின்றீர்கள்? இந்தச் சோனகர் எங்களுக்குச் செய்கின்ற அநியாயம் உங்களுக்குத் தெரியாதா” என்று கேட்டு  முஸ்லிம் மக்களுக்காக அய்யா பேசியதைத் திட்டித் தீர்த்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. எழுதினவர்கள் விலாசத்தைப் போடவில்லை.  பெயரையும் போடவில்லை. போட்டிருந்தால் நான் சரியான பதில் அனுப்பியிருப்பேன்.

அவுஸ்திரேலியர்கள் எங்களுக்காகப் பேசவேண்டும் யப்பானியர்கள் எங்களுக்காகப் பேச வேண்டும் கனேடியர்கள் எங்களுக்காகப் பேச வேண்டும் அமெரிக்கர்கள் எங்களுக்காகப் பேச வேண்டும். அய்ரோப்பியர்கள் அனைவரும் எங்களுக்காகப் பேச வேண்டும். இந்தியாவிலுள்ள மாநிலங்கள் எல்லாம் எங்களுக்காகப்  பேச வேண்டும். ஆனால், நாங்கள் முஸ்லிம்களுக்காகப் பேசக்  கூடாது. என்னையா  நியாயம்? எங்களுடைய மக்களுக்கு நீதி கிட்டுமா? எங்களுடைய மக்களுக்கு நியாயம் கிட்டுமா? இந்தச் சிந்தனை மாற வேண்டும். இந்த மேடையிலிருந்து, தந்தை செல்வாவின் காலடிகளிலிருந்து தமிழ்மக்களை  நான் கெஞ்சிக் கேட்பது  அதுதான்.  தந்தை செல்வா   மலையகத்தில் வாழ்ந்த  தமிழ் மக்களுக்காகத்  தான் இருந்த கட்சியை விட்டு வெளியேறிப் புதுக் கட்சியை ஆரம்பித்தவர். 

தந்தை செல்வா கிழக்கு மாகாணம் முழுவதிலையும் அவருடைய  காலப் பகுதியிலே வேற்றுமை இல்லாமல் தமிழ் மக்கள் என்ற அடிப்படையிலே   ஒருதொகுதியில் முஸ்லீம்கள் 60 சதவீதமாக  இருந்தால் அந்தத் தொகுதியில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தாமல்  முஸ்லிம் வேட்பாளர்  ஒருவரைத் தான்  நிறுத்தியவர். அவர்கள் மாறிச் சென்றார்கள். அது சரித்திரம். ஆனால், அதற்காகத் தன்னுடைய நிலைப் பாட்டிலே இருந்து அவர் மாறவில்லை. இது முக்கியம். மற்றவர்கள் அநியாயம் செய்கிறார்கள் என்பதற்காக நாங்களும் அநியாயம் செய்யலாம் என்று நினைப்பது மடமைத் தனம். அது நியாயமல்ல. எங்களுடைய நிலைப் பாட்டிலே நாங்கள் உறுதியாக  இருக்க  வேண்டும். எங்களுடைய நிலைப்பாட்டிலே நாங்கள் எடுத்திருக்கிற முடிவு நீதியானது, நியாமானது. சர்வதேச சமூகமோ, எவரோ அதை இல்லை என்று சொல்ல முடியாத அளவுக்கு எங்களுடைய நிலைப்பாட்டை உயர்ந்த கட்டத்துக்குக் நாங்கள் கொண்டு செல்ல வேண்டும். அப்படியொரு உயரிய கோட்பாட்டிலே ஊறினவர்களாக, எந்த விதத்திலும் அதிலிருந்து   பிறழாதவர்களாக இருப்போமாக இருந்தால் மட்டும்தான்   எங்களுடைய  மக்களுக்கு நியாம் கிட்டும் அது கிட்டியே தீரும்.  From 34:50 to  40:20 minutes

உண்மையை எப்போதும் தோற்கடிக்க முடியாது

உண்மையை ஒருபோதும் தோற்காது. அறத்தை  ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. ஆனால் அது உண்மையாக இருக்க வேண்டும். அது அறமாக இருக்க வேண்டும். அதிலே எந்தவிதமான  பிழையும் இருக்கக் கூடாது. அதில் வேறு எந்த மாற்றுதல்களும் இருக்கக் கூடாது. அதில் வேறு எந்த மருந்துகளையும் கொண்டுவந்து கலக்கக் கூடாது. அது சுத்திகரிக்கப் பட்டதாக, தூய்மையானதாக,  அந்த நிலைப்பாடு எவராலும் மறுப்புச் சொல்ல முடியாத நிலைப்பாடாக இருக்க வேண்டும். நான் மூன்று நாள்களுக்கு முன் அவுஸ்திரேயா குடியரசு அமைச்சரைச் சந்தித்துப் பேசினேன். நான் அவருக்குச் சொல்லக் கூடியதாக இருந்தது. நீங்கள் பதவி அதுயிது என்று சொல்லி பதவியைக் காப்பாற்ற முனைகிறீர்கள்.  இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து வேலை செய்யப் பார்க்கிறீர்கள். உங்களுக்கு ஒரு பிரச்னை இருக்கிறது. அது எங்களுக்கு விளங்குகிறது. அதற்காக மனித உரிமைகளை இந்த அளவுக்குக் கேவலமாக மீறுகிற இந்த அரசை நீங்கள் தூக்கிவிட முனையுகிறீர்கள். 

எந்த அளவுக்கு அவுஸ்திரேலியா மனித உரிமையை மதிக்கின்ற நாடு என நான் கேட்கக் கூடியதாக இருந்தது. எங்களுடைய தரப்பிலே எந்தவிதமான வன்முறையும்  கிடையாது. அவர்கள் எங்களைத் தாக்குகிறார்கள். கிளிநொச்சிக் கூட்டத்தை தாக்கினார்கள். எங்கே போனாலும் தாக்குகிறார்கள். எங்களை ஒடுக்குகின்றார்கள். எங்களுக்கு எதிராக மட்டுமல்ல, மற்றைய சிறுபான்மை இனமான முஸ்லீம்களுக்கு எதிராகப்  பெரியதொரு வன்முறையைக்  கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். அதற்கு எதிராகவும் நாங்கள் எழுந்து நிற்கின்றோம் என்று சொல்லுகின்ற போது அதிலே  பிரயோசனம் உண்டு. அதிலே ஒரு பயன் உண்டு. அவர் மாற்றுக் கேள்வியை  கேட்க முடியாத அளவுக்கு இன்றைக்கு எங்களுடைய  நிலைப்பாடு இருக்கின்றது. அப்படியே  தொடர்ந்து இருக்க வேண்டும் நண்பர்களே.

ஆயுதப் போராட்டம் கூடத் தூயதாக இருக்க வேண்டும்

நாங்கள் பேசுகிற பேச்சிலே கவனம்  இருக்க வேண்டும். அது எங்களுடைய கோட்பாட்டை  எந்த விதத்திலும் நாங்கள் தள்ளி வைக்கிறதாக  இல்லை. எங்கள் கோட்பாட்டை  விட்டு விலகுவதாக  இல்லை.  எங்களுடைய கோட்பாட்டிலே, எங்களுடைய நோக்கத்திலே நாங்கள் நேராகத் தான் இருக்கிறோம். நாங்கள் அதில் குறியாகத் தான் இருக்கிறோம். நாங்கள் செல்லுகின்ற வழி இதுதான் என்று கூறுகின்ற போது, அது அந்த வழியாக மட்டும் தான் இருக்க வேண்டும். வேறு கருமங்கள் இடம் பெறுவதற்கு இடம் விடக் கூடாது. மிகவும் வினயமாக இளைஞர்களிடத்திலே  கேட்டுக் கொள்வது இதுதான். தந்தை செல்வாவின் வாழ்க்கைக் காலத்திலே தமிழ் தரப்பிலே இருந்து வன்முறை இந்த அளவுக்கு வெடிக்கவில்லை. ஆரம்ப கட்டத்தில்  இருந்தது. ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு பெரிதாக வெடித்தது. அதற்கு நியாமும் இருந்தது. ஆனால் அது எங்களுடைய  மக்களுக்கு நன்மையைக் கொண்டு வரவில்லை.  கொண்டு வராது. ஒரு இனத்துக்காக ஆயுதப் போராட்டம் செய்வது  பிழை என்று நான் சொல்லவில்லை. அந்தப் போராட்டம் தூயதாக இருக்க வேண்டும். ஆயுதப் போராட்டம் கூடத் தூயதாக இருக்க வேண்டும். பல தரப்பிலே ஒருவரை ஒருவர் கொன்று குவித்தார்கள். எத்தனை சகோதர யுத்தங்களைக் கண்டுவிட்டோம்? எத்தனை தலைவர்களை இழந்துவிட்டோம்? இது எல்லாம் எங்களுக்குப் படிப்பினையாக இல்லையா? வன்முறையிலே நாங்கள் ஈடுபட விட்டதற்கான பிரதி பலன் இல்லையா?

இனிமேலும் எங்கள் மக்களுக்கு கேடு ஏற்படாமல், கட்டுக்கோப்பாக அகிம்சை வழி என்றால் அகிம்சை வழியைப் பின்பற்றி, இனியாகிலும்  நாங்கள் திட சங்கற்பம் கொள்ளாதிருக்கப் போகிறோமா?இனிமேலும் இரண்டு படகுகளில் கால் வைத்து நாங்கள் பயணித்தால், இதையும்  செய்வோம், அதையும் செய்யலாம் என விட்டு விட்டால், இன்னுமொரு முப்பது  வருட  கால அவலத்தைத்தான் நாங்கள் எங்கள் மக்களுக்குக் கொடுக்க முடியுமே தவிர, எங்கள் மக்களுக்கு நாங்கள் விடிவைப் பெற்றுக் கொடுக்க முடியாது.

என்ன விதமான குறிக்கோளை நோக்கி நாங்கள் போகின்றோம். நாங்கள் ஒரு தேசிய மக்கள். நாங்கள் ஒரு தேசம்.  சர்வதேச சட்டத்தின் கீழே  நாங்கள் ஒரு மக்கள். எங்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. அதிலே எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. Upto : 45:20 minutes

ஆனால் அதை எப்படியாக  உபயோகிப்பதற்கு இன்றைக்கு  நாங்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். ஒரு நாட்டுக்குள்ளேயே அப்படியான  ஆட்சிமாற்றம் வேண்டும் என்று நாங்கள் சொல்லி இருக்கிறோம். அந்தச் சொல் தவறாமல் எங்களுடைய போராட்ட முன்னெடுப்புக்கள் இருக்க வேண்டும். ஒரு  பக்கம் வரக்கூடும். அந்தப் பக்கம் வருகிறபோது எங்களுடைய இலக்கை நாங்கள் மாற்றி அமைப்பதாக  இருந்தால் வெளிப்படையாகவே நாங்கள் மாற்றி அமைப்போம்.  சர்வதேச சமூகத்திடையே சொல்லுவோம். இது முடியாத காரியம் ஆகவே பூரண இறைமையை நீங்கள் எங்களுக்குப் பெற்றுத்தர வேண்டும் என்று சொல்லுவோம். ஆனால் அதுவரைக்கும் இதுதான் எங்களுடைய  குறிக்கோள். இதைத்தான் நாங்கள் அடைய  நினைக்கிறோம் என்று நாங்கள்   சொல்லுகிற எங்களுடைய சொல் தவறாமல் நாங்கள் செயல்பட வேண்டுவது அத்தியாவசியமாக இருக்கிறது.

நாங்கள் எடுக்கிற பாதை தந்தை செல்வாவின் பாதையாக இருக்க வேண்டும்

சர்வதேச சமூகத்திலே எங்களுடைய மக்கள் இத்தனை இடர்ப்பாடுகளை அடைந்திருக்கிறார்கள்,  எங்களது மக்களுக்கு       அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை முழுமையாக  ஏற்றுக்கொள்கிறார்கள்.  ஆனால் எங்கள் மீது ஒரு சந்தேகம் அவர்களுக்கு இருக்கிறது.  எங்கே போனாலும் எங்கள் மேலே ஒரு சந்தேகம் இருக்கிறது. இதை நீங்கள்  பிரிவினைக்கு முதற்படியாகப் பாவிக்கிறீர்களா? என்று கேட்கிறார்கள். இல்லை என்று சத்தியம் செய்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். எங்களது நிலைப்பாட்டிலே உத்தியோகபூர்வமாக ஒரு மாற்றம் ஏற்படுகிறவரைக்கும் – ஏற்படும் என்று நான் சொல்லவில்லை – அப்படி ஏற்படுமாயின் – இன்றைக்கு நாங்கள் எதைச் செய்கிறோம் என்று சொல்கிறோமோ அதைத்தான் செய்ய வேண்டும். அந்தச் சந்தேகங்களை நாங்கள் போக்க வேண்டும். வன்முறைக்கு எங்களுடைய வாலிபர்களைத் தூண்டிவிடுகிறோம் என்ற சந்தேகத்தை நாங்கள்  போக்க வேண்டும். 

நியாயத்தின் அடிப்படையிலே சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலே நீதியின் அடிப்படையிலே எங்களுக்குச் செய்யப்பட வேண்டும். அது சர்வதேசத்தினுடைய ஒரு பொறுப்பு என்ற நிலைப்பாட்டுக்குள்ளே நாங்கள் இன்றைக்கு  வந்து உலக நாடுகள் அனைத்தையும் ஒன்று சேர்த்திருக்கும் அய்க்கிய நாடுகள் சபை தொடர்ந்து இரண்டு வருடங்களாக இந்த விடயத்தை முன்னெடுத்திருக்கிற  வேளையிலே – இன்னும் கூட காலம் எடுக்கவும் கூடும் –  அல்லது எடுக்காமல் விரைவாக நிறைவேறவும் கூடும்.  சர்வதேச விவகாரங்களிலே இவற்றைச் சொல்லிக் கொண்டு செய்ய முடியாது.

ஆனால் நாங்கள் எடுத்திருக்கிற நிலைப்பாடுகளிலே திடமாக எந்தவித மாற்றமும் இல்லாமல் நாங்கள்  நிற்போமாக இருந்தால்  எங்களுக்கு உண்மையிலே நம்பிக்கை இருக்குமாயிருந்தால் எங்களுக்கு நாங்கள் செய்வது – நாங்கள் எடுத்திருக்கிற பாதை சத்தியபாதை – இது வெல்லும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்குமாக இருந்தால்  நாங்கள் நடக்கிற பாதை தந்தை செல்வாவின் பாதை என்று நாங்கள் சொல்கிறது  மட்டும் அல்ல  செய்கையிலும் செய்வோமாயிருந்தால் சர்வதேசம் நாங்கள் சொல்லுகிறதை நம்பும். ஒரு மூச்சாக எங்களுக்காக உழைக்க முன்வரும். நன்றி.

 athangav@sympatico.ca