ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சம்பிக்க ரணவக்க, மேதானந்த எல்லாவல தேரர், தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவன்ச, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் குணதாச அமரசேகர ஆகிய நால்வரும் நாட்டை நாசமாக்கி படுகுழியில் தள்ளுகிறார்கள். நாட்டின் தேசிய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களை சிறுமைப்படுத்துவதையே இவர்கள் நால்வரும் தமது நாளாந்த நடவடிக்கைகளாகக் கொண்டுள்ளார்கள். இந்த நாட்டில் இன்று நடக்கும், தமிழ்-முஸ்லிம் இனத்தவர்களுக்கும், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதத்தவர்களுக்கும் எதிரான அனைத்து இனவாத, மதவாத நடவடிக்கைகளுக்கும் இந்த நால்வரும்தான் பொறுப்புக் கூற வேண்டும். இந்த நாட்டில் மத, இன நல்லிணக்கம் ஏற்படுத்தும் எண்ணம் இருக்குமானால் இந்த நால்வரையும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த நாடு மீளவே முடியாத படுபயங்கர அதள பாதாளத்தில் விழும் நாள் மிகத்தொலைவில் இல்லை. இந்தக் கருத்தை நமது கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கட்சியின் மேல் மாகாணசபை, கொழும்பு மாநகரசபை, கொலன்னாவ நகரசபை உறுப்பினர்களின் குழுக்கூட்டம் கட்சி தலைமைமையகத்தில் இன்று நடைபெற்றபோது, உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
பல மொழிகள் பேசி, பல மதங்களைக் கடைப்பிடித்து, பல இன மக்கள் சேர்ந்து வாழும் இந்த நாட்டை சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் உரிய நாடாக்க வேண்டும் என்பதே இந்த நால்வரின் கூட்டுத்திட்டம்.
அதி தீவிர தமிழ், முஸ்லிம் தேசியவாதங்கள் எப்படி தமிழ், முஸ்லிம் மக்களை நாசாமாக்குகின்றதோ, அதைவிட அதிகமாக இந்த சிங்கள பெளத்த தீவிரவாதம், முழு நாட்டையுமே நாசமாக்குகின்றது. இதன் காரணம் சிங்கள பெளத்த தீவிரவாதம், இராணுவ பலத்துடன் சேர்ந்து கொண்டுள்ளது. புலிகளின் இராணுவ தோல்வியை, தமிழ் பேசும் மக்களின் தோல்வியாக மாற்றிக்காட்டி, முழு நாட்டையும் சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் உரிய நாடாக்குவது என்ற திட்டம் வெற்றிகரமாக இன்று முன் கொண்டு செல்லப்படுகிறது.
முழு தேசத்திற்கும் தலைமை தாங்கக்கூடிய ஒரு தேசியக் கட்சியின் பிரபல தலைவன், சிங்கள மக்கள் மத்தியில் துரதிஷ்டசமாக இன்று இல்லை. சிறிய தேசிய இனங்கள், மத-மொழி சிறுபான்மை மக்கள் தொடர்பான விடயங்களைக் கையாள்வதில், நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி, விளாடிமிர் லெனின், ஆப்ரஹாம் லிங்கன் ஆகியோர் பக்கத்தில் அல்ல, தூரத்தில் வைக்கக்கூட இங்கு எவரும் கிடையாது.
இனங்களுக்கு மத்தியிலான பிரச்சினைகள் என வரும் பொழுது அனைவரும் நழுவல் அரசியல்தான் செய்கிறார்கள். கடந்த கால தமது பேரினவாத குற்றங்களைச் சுட்டிக்காட்டி சிங்கள மக்களுக்கு உண்மையை எடுத்து சொல்லும் எந்த ஒரு பிரபல சிங்களத் தலைவனும் இங்கு இன்று இல்லை. அனைத்து இனங்களையும் அரவணைத்துச் செல்லும் அரசியல் இங்கு இல்லை. அதிகாரத்தையும், இறைமையையும் பகிந்துகொள்வதில் உள்ள நன்மைகளை சிங்கள மக்களுக்கு எடுத்து கூறும் ஒரு தலைவன் இங்கு இல்லை. இது மிகவும் வெட்ககேடான, கேவலமான நிலைமையாகும்.
தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் சிங்கக் கொடியை கையில் எடுத்து, நாம் ஐக்கிய இலங்கைக்குள் வாழத்தயார் என சூடம் கொளுத்தி சத்தியம் செய்தாலும்கூட இவர்கள் நம்பத் தயார் இல்லை. அதற்கும் ஆயிரம் காரணங்கள் சொல்லி, அந்த நல்லெண்ண சமிக்ஞையை புறக்கணித்துள்ளார்கள்.
இந்த நிலையில் தமிழர்களும், முஸ்லிம்களும் நமது ஜனநாயகப் போராட்டத்தை, முற்போக்கு சிங்கள சக்திகளுடன் இணைந்து, உலக சமுதாயத்தின் ஆதரவுடன் முன்னெடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை.
இந்த இனவாத அரசாங்கத்திற்கு தன்மானமுள்ள நாம் ஒருபோதும் ரகசிய ஒத்துழைப்பு வழங்க முடியாது. அதேவேளையில் நாம் வானத்தில் கோட்டை கட்டவில்லை, நாம் எதார்த்த அரசியலும் செய்யத் தயார் என்பதையும் மக்களுக்கு விளக்க வேண்டும். அரசாங்கம் தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க முன்வருமானால், ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து, கூட்டாக அரசியல் ரீதியாக ஒத்துழைப்பு வழங்குவதில் எந்தச் சிக்கலும் கிடையாது. இது எமது பகிரங்க நிலைப்பாடு. இவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.
நன்றி: http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=38613