நான் போக முடியாத “மாவீரர் நாள்”

‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்  –


பதிவுகள் ஜனவரி 2007 இதழ் 85
கட்டுரையாளர் நடராஜா முரளிதரன்1998 இன் நடுக்கூறில் நான் கனடாவிற்குள் நுழைந்த பின் அரசியல் தஞ்சம் கேட்டு 40 நாட்களின் பின்னர் கைது செய்யப்பட்டிருந்தேன். அதன் பின் ஏறத்தாள இரண்டரை மாதங்கள் வரை கனடியச் சிறைகளுள் அடைக்கப்பட்ட பின்னர் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் கனடிய டாலர்கள் பிணை(ஒரு இலட்சம் வீடு, ஐம்பதினாயிரம் பணம்) அரசியல் செயல்பாடுகள் தொடர்பான 14 நிபந்தனைகள் உட்பட இரு வாரங்களுக்கு ஒரு தடவை “இமிக்கிரேசன்” அலுவலகத்திற்குச் சென்று கையெழுத்திடல் போன்ற கண்டிப்பான நீதிமன்ற உத்தரவுகளின் பேரிலேயே நான் விடுதலை செய்யப்பட்டிருந்தேன்.

அதன் பின் ஏழரை வருடங்களின் பின் இவ்வருட மத்தியில் எனது பெயருக்கு முதற் தடவையாக ஆறு மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகக் கூடிய வேலை செய்ய அனுமதிக்கும் பத்திரம் வழங்கப்பட்டது. ஆயினும் இது வரை இலவச மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கான “ஹெல்த் கார்ட்” எனக்கு வழங்கப்படவில்லை.

எனது மகள் உயர் கல்வி பெறுவதற்காக பல்கலைக் கழகத்துள் உட்புகுந்த போது அவளால் எந்தக் கடனுதவியையும் “ஒன்ராரியோ” அரசிடமிருந்து பெற முடியாமல் போனது. மாறாக “வெளிநாட்டு மாணவர்” என்ற இலச்சினை பொறிக்கப்பட்டு இரண்டரை மடங்குக்கு மேலான (குடியுரிமை பெற்ற அல்லது நிரந்தர வதிவிட உரிமை பெற்ற மாணவர்களோடு ஒப்பிடுகையில்) கட்டணத்தைப் பல்கலைக்கழகத்திற்குச் செலுத்துமாறு நிர்பந்திக்கப்பட்டாள்.

இவ்வாறான கழுத்தை நெரிக்கும் பொருளாதார நெருக்கடிகள் ஒரு புறமிருக்க அரசியல் செயல்பாடுகள் தொடர்பான நீதிமன்றத்தின் கண்டிப்பான 14 நிபந்தனைகளும் எத்தகைய மீறல்களுக்கும் உட்படுத்தப்படாமல் என்னால் பேணப்பட வேண்டியவை. அல்லாவிட்டால் எனது பிணைகள் யாவும் பறிமுதல் செய்யப்பட்டு நானும் சிறையுள் மீண்டும் தள்ளப்படலாம். அத்தகைய நிபந்தனைகளுள் “விடுதலை புலிகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாக ஆதரிக்கும் கூட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள் போன்றவற்றில் நான் பார்வையாளனாகவோ அல்லது பங்காளனாகவோ கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை என்பது முக்கியமான ஒன்று. அரசியல் வேலைத் திட்டங்களை ஆழ்மனதில் புதைத்துக் கொண்டு கனடாவுக்கு நான் வந்ததாக யாரும் என்னை சந்தேகிக்கத் தேவையில்லை. ஆயினும் “மாவீரர் நாள்” வந்து போகும் வேளைகளில் அவ்வாறான நிகழ்வொன்றுக்கு நான் போக முடியாதது குறித்து எனது மனம் துயருறுவது வழக்கம். இத்தகைய எனது துயரத்துக்கு “அரசியல் முலாம்” பூசி விட முடியாது. நான் சார்ந்த அல்லது சார முயலுகின்ற அரசியல் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டுச் சாதாரண தனி மனிதனாவே அந்த வேதனையின் வெளிப்பாடுகளைச் சுமந்து செல்ல நேருகிறது.

ஈழப் போராட்ட களம் பல்லாயிரக்கணக்கான மக்களின் உடல்களில் இருந்து கொப்பளித்துப் பாய்ந்த குருதி வெள்ளத்தினால் சேறாகிய “குருஷேத்திரமாகவே” கடந்த இரு தசாப்தங்களாகக் காட்சியளிக்கிறது. அந்த மண்ணில் வாழ்ந்த, வாழும், வீழ்ந்த, வெளியேறிய மண்ணின் மைந்தர்கள் யாவருக்கும் அந்த மண்ணோடு பிணைந்த சொல்ல முடிந்த, சொல்லில் வடிக்க இயலாச் சரிதங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்றாக என்னை மிகவும் பாதித்து நிற்கின்ற ஈழப் போர்க்களத்தில் வீழ்ந்து மடிந்த எனது நண்பன் “லிங்கம்” பற்றிய எண்ண அலைகள் சிலவற்றையே இங்கு மீட்க முயலுகின்றேன். 1970 களில் காங்கேசன்துறை, தையிட்டியிலுள்ள “பொன்னுச்சாமி” வீட்டிற்கு மலையகத்திலிருந்து பத்து வயசு வேலைக்காரச் சிறுவனாக யாழ்ப்பாண “மேலாதிக்கப்” பேச்சு வழக்கில் “வடக்கத்தைப் பெடியனாக” லிங்கம் வந்திருந்தான். பொன்னுச்சாமி குடும்பத்தினர் கோவில், திருமண விழாக்களுக்கு சப்பறம் கட்டுதல், மாலை கட்டுதல், சிறிய கோவில்கள் சிலவற்றுக்குப் பூசை செய்தல் போன்ற பணிகளைப் புரிந்து கொண்டு “பாஸ்கரன் கோஷ்டி” என்ற பெயரில் சிறிய இசைக் குழுவொன்றையும் இயக்கிக் கொண்டிருந்தார்கள்.

வந்த ஆரம்பத்தில் “லிங்கம்” அந்தக் குடும்பத்திற்குத் தேவையான எடுபிடி வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். அந்த வேளைகளில் மாலை கட்டுவதற்குத் தேவையான முல்லை மலர்களைக் கொய்வதற்காக அடிக்கடி அவன் எனது வீட்டுக்கு வர ஆரம்பித்தான். அந்த வேளைகளில்தான் அவனுக்கும், எனக்குமான நட்பு மலர ஆரம்பித்தது. பின்பு அவை வாசிகசாலைச் சந்திப்பு, மாலை நேரங்களில் விளையாட்டு மைதானங்களில் சந்திப்பு எனவும் அவ் வேளைகளில் எங்களுக்குத் தெரிந்த அரசியல் குறித்துப் பேசிக் கொள்ளுதல் எனவும் நீண்டு விரிந்து சென்றது.

‘வழமையான யாழ்ப்பாண நடைமுறைகளுக்கு மாறாகப் “பொன்னுச்சாமி” குடும்பத்தினர் “லிங்கத்தை” தங்களில் ஒருவனாகக் கருதி அவனது பெயரை “பாஸ்கரன்” எனப் பெயர் மாற்றப் பதிவும் செய்து கொண்டனர். யாழ்ப்பாணத்திற்கு வருவதற்கு முன் மிகச் சிறிய வயதுகளில் வசதி படைத்த பரங்கிய, சிங்களக் குடும்பங்களின் வீடுகளில் வீட்டு வேலைகள் புரிந்தமையினாலும், மலயகப் பின்னணியில் பிறந்து வளர்ந்தமையினாலும் “லிங்கம்” அந்தச் சின்ன வயதுகளிலேயே சிங்களம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் மிகச் சரளமாகப் பேசக் கூடியவனாக இருந்தமை எங்களில் பலரைப் பிரமிக்க வைத்தது.

எங்கள் இருவரையும் பிணைத்துக் கொண்ட அந்தப் பால்ய சிநேகிதம் காரணமாக நாளடைவில் நான் சார்ந்த அரசியல் கருத்துக்கள் பால் அவன் ஈர்க்கப்படலானான் என்று கூறுவதை விடவும் என்னால் அதை நோக்கி இழுக்கப்பட்டான் என்று கூறுவது மிகப் பொருத்தமான உண்மையாக அமையுமோ எனச் சில வேளைகளில் நான் எனக்குள் நினைத்துக் கொள்வது வழக்கம்.

அவனுக்குத் தாய், தந்தையர், சகோதரர்கள், சொந்த உறவுகள் என யாரும் இருந்ததில்லை. எங்களோடு சேர்ந்து நாடகம் நடிப்பது, இசைக்குழுவில் “தபேலா” வாசிப்பது, ஓய்வான மாலைப் பொழுதுகளில் “கிரிக்கெட்” ஆடுவது போன்றவைகள் அவனைப் பரவசப்படுத்தின. சில வேளைகளில் நானும், லிங்கமும், எங்களது இன்னுமொரு நெருங்கிய நண்பனுமான நிமலேந்திரனும் சேர்ந்து கொண்டு காங்கேசன்துறைக் கடற்கரையில் “பனங்கள்” அருந்திப் “பார்ட்டி” கொண்டாடினோம்.

எனது மனைவியைக் குரும்பசிட்டியிலிருந்து நான் கூட்டி வருவதற்கு என்னோடு கூடவே அவனும் வந்திருந்தான். ஆனாலும் 80களில் வரலாறு இறுக்கிய “இன முரண்” சிக்கல்கள் வரலாற்றில் என்றுமேயில்லாத வகையில் இலங்கைத் தீவைப் பிரளயத்தை நோக்கித் தங்குதடையின்றிப் பயணிக்குமாறு உந்தித் தள்ளியது. நாங்களும் அதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. நான் ஏற்கனவே இரகசியமாகப் பணிபுரிந்து கொண்டிருந்த அமைப்பை நியாயப்படுத்துவதிலும், அதன் அமைப்பு வேலைகளைக் கட்டுவதிலும் தீவிரமாக ஈடுப்டிருந்த வேளைகளில் இயல்பாகவே “உணர்ச்சிவசப்படும்” இயல்பு படைத்த “லிங்கம்” எனக்கு உதவ முன் வந்தான். நாள் தோறும் இரவுகளைப் பகலாக்கி எம்மால் முடிந்தளவு அரசியல் வேலைத்திட்டங்களில் எங்களை ஈடுபடுத்திக்கொண்டிருந்தோம். அவ்வேளைகளில்தான் ஓர் நாள் இரவு “கர்ப்பிணியாக” இருந்த எனது மiவியைப் பார்க்கச் சென்ற சமயம் பார்த்து பலாலி இராணுவத்தினரால் நான் கைது செய்யப்பட்டேன்.

எனது கைது ஏற்படுத்திய காயம், அதனால் எழக்கூடிய சிக்கல்கள் அனைத்துமே “லிங்கத்தை” போர்க் கோலம் பூணுமுகமாக தமிழ்நாட்டுப் பயிற்ச்சி முகாமை நோக்கிப் படகேற வைத்தது. பயிற்சி முடிந்து ஆயுதம் தாங்கிய “போராளியாக” மீண்ட “லிங்கம்” “யஸ்ரின்” என்ற புதிய பெயர் கொண்டு அழைக்கப்பட்டான். நான் சிறைக்குள் கம்பிகளை எண்ணிக்கொண்டிருந்த வேளைகளில் களங்கள் பல புகுந்த “யஸ்ரின்” பல விழுப்புண்களைத் தனதாக்கிக் கொண்டிருந்தான்.

அந்த “யஸ்ரின்” ஆகிய எனது “லிங்கம்” காலச் சூறாவளி என்னைச் “சுவிசில்” கரை சேர்த்த 90 களில் மணலாற்றில் இடம்பெற்ற “போர் விமானக் குண்டுவீச்சில்” பொடித் துகள்களாக்கப்பட்டான். சுக்கு நூறாக்கப்பட்ட அவனது தசைப் பிண்டங்களையோ, நொருங்கி முறிந்த அவனது எலும்புத் துண்டங்களையோ யாராலும் சேகரிக்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. என் மண் குறித்த “பிரக்ஞையை” தூண்டிவிட்ட “யாழ்ப்பாணத்தவன்” நான் தப்பிவிட இழப்பதற்கு “உயிர்” தவிர ஏதுமற்ற அசல் பாட்டாளியான மலை நாட்டுத் தோட்டத் தொழிலாளி குடும்பத்தின் “லயனுகளுக்குள்” பிறந்து வளர்ந்த “லிங்கம்” தன்னை ஏன் ஆகுதியாக்கிக் கொண்டான்? அவனது இறப்புக் குறித்து அழுவதற்கு இரத்த உறவுகள் எவருமே அற்ற இந்த உலகில் “லிங்கம்” அவன் மரியாதைக்கு உட்படுத்தப்படும் அன்றைய நாளிலாவது தனி மனிதனாக என்னால் சென்று சில கணங்கள் தொழப்படுதற்குவான தடைகளை ஏன் என்னால் வெற்றி கொள்ள முடியாதுள்ளது?

nmuralitharan@hotmail.com