நாவல்: அமெரிக்கா! (1-8)

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'– மங்கை பதிப்பகம் (கனடா), ஸ்நேகா பதிப்பகம் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட அமெரிக்கா தொகுதியானது ‘அமெரிக்கா’ என்னும் நாவலையும் (அளவில் சிறியதானாலும் இது நாவல்தான்) , சில சிறுகதைகளையும் உள்ளடக்கிய தொகுதியாகும். இவை அனைத்துமே ‘பொந்துப்பறவைகள்’ மற்றும் ‘மான் ஹோல்’ தவிர , கனடாவிலிருந்து வெளியான ‘தாயகம்’ பத்திரிகை, சஞ்சிகையில் பிரசுரமானவை (தாயகம் ஆரம்பத்தில் பத்திரிகையாகவும் , பின்னர் சஞ்சிகையாகவும் வெளியானது). முதற் பதிப்பின்போது ஒழுங்காக சரி, பிழை பார்க்காமல் போனதால் பல எழுத்துப்பிழைகள் ஏற்பட்டு விட்டன; சில வசனங்கள் விடுபட்டுப்போயின,  மேலும் இந்நாவல் ஈழத்துத்தமிழ் அகதிகள் சிலரின் நியூயார்க்கிலுள்ள சட்ட விரோதக் குடிகளுக்கான தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்குமொரு நாவல். இந்நிலையில் மீண்டும் அத்தொகுப்பில் வெளியான ஆக்கங்களை சரி, பிழை பார்த்துப் ‘பதிவுகள்’ இணைய இதழில் பிரசுரித்தாலென்ன என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவுதான் ‘அமெரிக்கா’ என்னும் இந்நாவலின் மீள்பிரசுரிப்பு. இவ்விதம் பிரசுரிப்பதன் மூலம், அவற்றைச்சரி, பிழை பார்த்து, மீள எழுதுவதன் மூலம் அடுத்த பதிப்புக்குத்தயார் படுத்தலாம் என்றெண்ணுகின்றேன். அத்துடன்  பதிவுகள் வாசகர்களும் அவற்றை இணையத்தின் மூலம் வாசிக்க வழி வகுக்கும் என்றுமெண்ணுகின்றேன்.  இறுதி அத்தியாயம் மீளவும் திருத்தி எழுதப்பட்டுள்ளது- வ.ந.கிரிதரன் –

அத்தியாயம் ஒன்று: இளங்கோவின் பயணம்!
உலகப்புகழ்பெற்ற நியூயார்க் மாநகரின் ஒரு பகுதி புரூக்லீனின் ஓர் ஓரத்தே, கைவிடப்படும் நிலையிலிருந்த , பழைய படையினரால் பாவிக்கப்பட்ட கட்டடத்தின் ஐந்தாம் மாடி. அந்தக்கட்டடத்திற்கு எத்தனை மாடிகள் உள்ளன என்பதே தெரியாது. எனக்குத்தெரிந்ததெல்லாம் நான் இருந்த கட்டடத்தின் பகுதி ஐந்தாவது மாடி என்பது மட்டும்தான். என்னைப்பொறுத்தவரையில் இந்த ஐந்தாவது மாடி அமெரிக்காவைப்பொறுத்தவரையில் இன்னுமோர் உலகம். ‘ஒய்யாரக்கொண்டையாம், தாழம்பூவாம். உள்ளேயிருப்பது ஈரும், பேனும்’ என்பார்கள். எனது அமெரிக்கப்பிரவேசமும் இப்படித்தான் அமைந்து விட்டது. உலகின் செல்வச்செழிப்புள்ள மாபெரும் ஜனநாயக நாடு! பராக்கிரமம் மிக்க வல்லரசு! இந்த நாட்டில் காலடி எடுத்து வைக்கும் மட்டும் எனக்கு அமெரிக்கா ஒரு சொர்க்க பூமிதான். மனித உரிமைகளுக்கு மதிப்புத்தருகின்ற மகத்தான பூமிதான். ஆனால், என் முதல் அனுபவமே என் எண்ணத்தைச்சுட்டுப்பொசுக்கி விட்டது. ஒரு வேளை என் அமெரிக்க அனுபவம் பிழையாகவிருக்குமோ என்று சில வேளை நான் நினைப்பதுண்டு. ஆனால் மிகுந்த வெற்றியுடன் வாழும் என்னினத்தைச்சேர்ந்த ஏனைய அமெரிக்கர்களை எண்ணிப்பார்ப்பதுண்டு. உண்மைதான்! பணம் பண்ணச்சந்தர்ப்பங்கள் , வெற்றியடைய வழிமுறைகள் உள்ள சமூகம்தான் அமெரிக்க சமூகம். ஆனால் அந்தச் சமுதாயத்தில்தான் எனக்கேற்பட்ட அனுபவங்களும் நிகழ்ந்தன என்பதையும் எண்ணித்தான் பார்க்கவேண்டியிருக்கிறது. சுதந்திரதேவி சிலை நீதி, விடுதலை, சம உரிமையை வலுயுறுத்துகிறது. அமெரிக்க அரசியலமைப்பும்  மனிதரின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்துகிறது.  இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை. வெளியிலிருக்கும் மட்டும் அப்படித்தானிருந்தது. எல்லாம் உள்ளே வரும் மட்டும்தான்.

இதை எழுதுகின்ற இந்தச்சந்தர்ப்பத்தில் நானோர் இளம் எழுத்தாளன்.  எழுத்துலகில்  பலவற்றைச் சாதிக்க வேண்டுமென்ற, சோதிக்க வேண்டுமென்ற பேரார்வத்துடன் முயன்று கொண்டிருக்கின்ற இளம் எழுத்தாளன்.  அதே சமயம் நானொரு தமிழ்க்கனடியன்.  இன்றைய சூழ்நிலையில்  எனது அமெரிக்க அனுபவங்களை மீளாய்வு செய்யும்போதுதான் பல உண்மைகள்  வெளிப்படுகின்றன.  புரூக்லீன் நகரில், தடுப்பு முகாமில் எனது மூன்று மாத கால அனுபவமும்,  நியுயார்க்  நகரில் எனது எனது ஒரு வருட அனுபவமும் எனக்கு எத்தனையோ  விடயங்களைத் தெளிவுபடுத்தின.  வாழ்வு பற்றிய  பல்வேறு உண்மைகளைப் புரிய வைத்தன.  அனுபவங்கள் கசப்பானைவையாக இருந்தபோதும், அவ்வனுபவங்கள் தந்த படிப்பினைகள் மகத்தானவை. விலை மதிக்க முடியாதன். எனது இந்த அனுபவங்களை, இன்று அமெரிக்காவில் பல்வேறு தடுப்பு முகாம்களில் கைதிகளாக, ஏக்கங்களுடன், எதிர்பார்ப்புகளுடன் காத்துக்கிடக்கும் பல்வேறு நாட்டு மக்களுக்குச் சமர்ப்பணம் செய்கின்றேன்.

ஆ…! எனது பெயரைக்கூட கூற மறந்து விட்டேனே. இளங்கோ! என் பெயர்தான் அது. என் அப்பா ஒரு சிலப்பதிகாரப்பித்தர். அந்தப்பித்தில் எனக்கு வைத்த பெயர்தான் இளங்கோ.  இளங்கோவென்று பெயர் வைத்த ராசிபோலும் எழுத்தில் ஈடுபாடு ஏற்பட்டதோ?


விரைவதே தெரியாமல் விமானம் விரைந்துகொண்டிருக்கின்றது. இன்னும் நான்கு மணித்தியாலங்களில் பொஸ்டன் நகரை விமானம் அடைந்து விடும். மிகமிக விரைவாகவே சம்பவங்கல் நடந்து முடிந்து விட்டன. திண்ணைவேலியில் பதின்மூன்று இராணுவத்தினரைப்புலிகள் சுட்ட செய்தியுடன் பெரிதாக வெடித்த கலவரம் நாடு முழுவதும் பரவியது. நான் பொறியியலாளனாக வேலை செய்துகொண்டிருந்த அரசாங்கத்திணைக்களத்துக்குச் சொந்தமான கார்கள் ஐம்பது வரையில் வாகனத்தரிப்பிடத்திலிருந்தன. யாருமே உதவிக்கு  வரவில்லை.  கடைசியில் எங்கள் திணைக்களத்தில் கடமையாற்றிய ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தைச்சேர்ந்த இந்தியப்பொறியியளாளர் ஒருவருடன் ஒரு மாதிரித்தப்பி வெளியேறி வெள்ளவத்தை ராமகிருஷ்ண மண்டபத்தைப்போய்ச்சேர்ந்தால்… குண்டர்களின் அட்டகாசம் அங்கும் வெடித்தது. அச்சமயம் மண்டபத்தில் சுமார் ஐம்பதுபேர் வரையில் இருந்தோம்.  எல்லாரும் மண்டபத்தின் மொட்டை மாடிக்கு ஓடினோம்.  பெண்கள், ஆண்களில் சிலர் தண்ணீர் தாங்கிக்கும், தளத்துக்குமிடையிலிருந்த பகுதியில் ஒளிந்து மறைந்துகொள்ள, எஞ்சிய நாங்கள் மொட்டை மாடியில் நீட்டிக்கொண்டிருந்த தூண்களுக்குப் பின்னால் மறைந்து கொண்டோம். நாங்கள் பதுங்கி ஒளிவதை எதிரே பிரைட்டன் ஹொட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பயணிகள் வீடியோ படம் எடுப்பதை அவதானிக்க முடிந்தது.

வெள்ளவத்தைப் பகுதியிலிருந்த வீடுகளிலிருந்து  அடித்து விரட்டப்பட்ட தமிழர்கள் குடும்பம், குடும்பமாகத் தெகிவளை பக்கமாக, புகையிரத இருப்புப்பாதை ஓடி வருவது தெரிந்தது.  வெள்ளவதைப்பகுதியிலிருந்து புகை மண்டலம் நானா பக்கங்களிலும் பரவிக்கொண்டிருந்தது.  புகையிர இருப்புப்பாதை வழியாக  வயதான் தமிழ்ப்பெண்கள்  முழங்கால் வரை சேலைகளை இழுத்துப்பிடித்தபடி ஓடிக்கொண்டிருந்தார்கள். பார்க்கப்பாவமாகவிருந்தது.

இராமகிருஷ்ண மண்டபத்துக்கு முன்பாக, புற்றரையில் நின்றிருந்த யாழ்பாணப்பிள்ளையார் விலாஸின் சொகுசு பஸ் வண்டியொன்றைக் குண்டர்கள் கொளுத்தி விட்டார்கள்.  மண்டபத்தின்  நிலத்தளத்தின் கண்ணாடிகளை அடித்து உடைத்தார்கள். மண்டபத்தைக்கொளுத்த முற்பட்டபோது  அதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த  பொலிஸார் உள்ளே நுழைந்தார்கள்.

மாலை வரையில் இராமகிருஷ்ண மண்டபத்தில் தங்கியிருந்தோம். அங்கிருந்ததைக்கொண்டு ஆக்கிச்சாப்பிட்டோம். அன்றிரவே லொறிகளில் சரஸ்வதி மண்டபத்துக்குக்கொண்டு செல்லபட்டோம். லொறிகளில் ஏற்றியபோது பெண்கள் அழுதார்கள். யாருக்குமே எங்கு போகின்றோமென்று தெரிந்திருக்கவில்லை. சரஸ்வதி மண்டபத்தில் அகதிகளாகச் சிதம்பரம் கப்பலில் யாழ்ப்பாணம் போகும் வரையில் சுமார் இரண்டு வாரங்கள் தங்கியுருந்தோம்.

யாழ்ப்பாணத்துக்குச் சிதம்பரம் கப்பலில் சென்று கொண்டிருந்தபோதுகூட நான் வெளிநாட்டுக்குப் புறப்படுவேனென்று  எண்ணியிருக்கவில்லை.  அழிவும், கொள்ளையும், இரத்தகளரியுமாக நாடிருந்த சூழ்நிலையில் நான் வெளியில் போவதே நல்லதாகப்பெற்றோருக்குப் பட்டது.  கனடாவுக்கு அகதிகளாகப்போகலாமென்று விஷயம் காதில் பட்டது. இந்தச்சமயத்தில் சின்னம்மாவின் பணம்தான் வெளிநாடு போவதற்கு மிகவும் உதவியது.  சிந்தித்துச்சீர்தூக்கிப் பார்ப்பதற்குள்  முகவன் ஒருவனின் உதவியுடன் கனடா புறப்பட்டு விட்டேன். பலாலியிலிருந்து இரத்மலானை வரை இரண்டு மூன்று பேர் வரை அமர்ந்திருக்கக்கூடிய , தனியாரின் சிறிய விமானமொன்றில் பயணம். பின் கட்டுநாயக்காவிலிருந்து பாரிஸ் வரையில் YTA  விமானத்தில் பயணம். பாரிஸிலிருந்து பொஸ்டன் வரையில் TWA விமானத்தில் பயணம். பின் பொஸ்டனிலிருந்து மான்ரியால், கனடா வரை டெல்டா விமானத்தில் பயணம். இவ்விதமாகத்தான் திட்டமிருந்தது.

முதற் பிரச்சினை பாரிஸ் விமான நிலையத்தில் தொடங்கியது. பாரிசிலிருந்து , பொஸ்டனுக்கு விசா இல்லாமல் விமானத்தில் ஏற்ற மாட்டோமென்று தடுத்தார்கள். கனடாவுக்குச் செல்லப்பொதுநல வாய நாடுகளில் ஒன்றான இலங்கையிலிருந்து செல்வதற்கு விசா தேவையில்லையென்று எடுத்துக்காட்ட ஒரு வழியாகச்சம்மதித்தார்கள். அதற்கு எங்களுடன் பயணித்துக்கொண்டிருந்த இன்னுமோர் இலங்கை அகதி ஒரு வேளை உதவக்கூடுமென்று எடுத்து வைத்திருந்த அவ்விடயத்தை விபரிக்கும் புகைப்படப்பிரதி கை கொடுத்தது. அடுத்த தடை பொஸ்டனில் ஆரம்பமானது. அங்கிருந்து மான்ரியால் செல்வதற்கு விசா இல்லாமல் அனுப்ப முடியாதென்று தடுத்து விட்டார்கள். இவ்விதமாகக்கனடா செல்வதாக இருந்த எங்கள் திட்டம் பொஸ்டனின் லோகன் சர்வதேச விமான நிலையத்தில் முடிவுக்கு வந்தது.


அத்தியாயம் இரண்டு: அகதிக்கோரிக்கை!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'” என்ன இளங்கோ! ஒரே யோசனை?’  அருள்ராசாதான் கேட்டான். ஊரில் இவனொரு கணக்காளன் (அக்கவுண்டன்). இவனும் என்னை மாதிரித்தான்.  கனடாவுக்கு அகதியாக நான் பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் சென்று கொண்டிருந்தான். அண்மையில்தான் திருமணம் செய்திருந்தான். அண்மைய கலவரங்களில் பாதிக்கப்பட்டிருந்தான். கலவரங்களின் பாதிப்பு அவனை நாட்டை விட்டே துரத்தியிருந்தது.  அவனுடன் பணிபுரிந்த ஒரு தமிழ்ப்பெண்ணைக் குண்டர்கள் மானபங்கப்படுத்தியதை நேரிலேயே பார்த்தவன். அந்தப்பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடாத அருள்ராசா “போகிற இடத்திலை வரவேற்பு எப்படி இருக்குமென்று யோசித்துப்பார்த்தன்” என்றான்.

“பிரச்சினை அவ்வளவு இருக்காதென்றுதான் படுகுது. ஆனா இந்தைப் பிளைட்டிலை மட்டும் ஐந்து பேராவது எங்கட ஆட்கள் இருக்கினம் போலை படுகுதே?”

“அதுவும் ஒரு பிரச்சினைதான். ஆனால் எல்லாம் நல்லபடியா முடியுமென்றுதான் படுகுது”

இவ்விதமாகக்கதைத்துக்கொண்டிருந்த பொழுதே லோகன் சர்வதேச விமானநிலையத்தில் நாங்கள் பயணித்துக்கொண்டிருந்த விமானம் மெல்ல வந்து தரையிறங்கியது.  எங்கள் எல்லாருடைய நிலையும் ஒரே மாதிரித்தான். அகதிகளாகப்பயணித்துக்கொண்டிருந்தோம். இவ்விதம் ஒரே நாட்டைச்சேர்ந்த நாம் ஐவரும் ஒன்றாகப்பயணித்தது. விமான நிலையக் குடிவரவு அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டது.  எல்லாருடைய கடவுச்சீட்டுகளிலும் ‘ட்ரான்சிட்’ விசா பதித்தவர்கள், கடவுச்சீட்டுகளைத்திருப்பித்தரவேயில்லை. இதே சமயம் எங்களைக் கனடாவின் மான்ரிலால் நகருக்கு ஏற்றிச்செல்ல டெல்டா விமான நிர்வாகம் மறுத்து விட்டது. பிரச்சினை ஆரம்பமாகியது. எங்கள் ஐவரையும் விமானநிலையத்தின் ஒரு பகுதியில் பொலிஸ் காவலுடன் வைத்தார்கள்.  ‘என்ன நடக்குமோ?’ என்ற யோசனையில் எல்லாரும் மூழ்கிப்போனோம். எவ்வளவோ கஷ்ட்டப்பட்டு , வீட்டை ஈடு வைத்து , வட்டிக்குப்பணமெடுத்து வந்தவர்கள்தாம் எங்களில் பெரும்பான்மையினர்.  இந்நிலையில் திருப்பி அனுப்பினார்களென்றால்….. நேரம் போய்க்கொண்டிருந்தது.  பிற்பகல் இரண்டு மணியளவில்தான் விமான நிலையத்தை வந்தடைந்திருந்தோம்.  வந்ததிலிருந்து ஐந்து மணித்தியாலங்கள் சென்றதே தெரியவில்லை.  பசி வயிற்றைக்கிள்ளியது. சோர்வு எல்லார் முகங்களிலும் படரத்தொடங்கி விட்டிருந்தது.  இதற்கிடையில் நாம் ஐவரும் ஒருவருக்கொருவர் பழக்கமானவராகி விட்டோம்.

இராஜசுந்தரம் இலங்கை வங்கியொன்றில் மனேஜராகக்கடமையாற்றியவர். நாட்டில் மனைவி, குழந்தைகளை விட்டு விட்டு, இந்த வயதில் இன்னுமொரு புது வாழ்வினை வேண்டிப்பயணித்திருந்தார். மற்றவர் சிவகுமார். இவருக்கு வயது முப்பதுதானிருக்கும். ஆனால் அதற்குள்ளேயே தலையில் இலேசாக வழுக்கை விழுந்து விட்டிருந்தது. இவர் கொழும்பில் மகாராஜா நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்.  திருமணமாகாதவர்.  அடுத்தவன் ரவீந்திரன். பதினெட்டு வயதுதானிருக்கும். இரத்மலானை இந்துக்கல்லூரியில் க.பொ.த. (உயர்தரம்) படித்துக்கொண்டிருந்தவன்.

இதற்கிடையில் குடிவரவு அதிகாரி ஒருவர் வந்து எங்களைப் பத்து மணி ‘சுவிஸ் எயார் பிளைட்டில்’ கொழும்பு திருப்பி அனுப்போவதாகவும், தயாராக இருக்கும்படியும் கூறினார். எங்களுக்கு இலேசாகப்பயம் ஏற்பட்டது. உண்மையிலேயே ‘திருப்பி அனுப்பிப் போடுவார்களோ?’…

இதற்கிடையில் இராஜசுந்தரம் கூறினார்: ‘பை போர்சா எங்களைத்திருப்பி அனுப்பப்போறாங்கள் போலை இருக்கு.  என்ன் பிரச்சினை வந்தாலும் எதிர்க்க வேண்டும்.”

இச்சமயம் முன்பு வந்த அதே ‘இமிகிரேசன்’ அதிகாரி மீண்டும் வந்தார்.

எனக்குப் பசி வயிற்றைக்கிள்ளியது. சிவகுமாரால் அடக்க முடியவில்லை.

” சேர்! வீ ஆர் சோ ஹங்ரி. இஃப் யூ அல்லோ அஸ் டு பை சம்சிங் டொ ஈட், இட் வுட் பி ரியலி கிரேட் ஃபுல்” என்று சிவகுமார் கூறியதற்கு  ” யூ கான் காவ் யுவர் பிரெக்பாஸ்ட் இன் கலம்போ” என்று அந்த அதிகாரி எகத்தாளமாகப்பதிலிறுத்தபோது எல்லாருக்கும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஆத்திரப்பட்டு என்ன பயன்? பேசாமலிருந்தோம்.

அந்த அதிகாரி திரும்பிக் கொழும்பு செல்வதற்கான ‘போர்டிங் பாஸ்’ எல்லாவற்றுடனும் வந்திருந்தார். ‘போர்டிங் பாசை’த்தருவதற்காக எங்களது  பெயர்களைக் கூப்பிட்டார்.

ஒருத்தரும் அசையவில்லை. பதில் பேசாது மெளனாகவிருந்தோம்.

அந்த அதிகாரியின் முகத்தில் ஆத்திரம் படரத்தொடங்கியதை அவதானித்தோம். இதற்கிடையில் இன்னுமொரு பெண் ‘இமிகிரேசன்’ அதிகாரியும் அவ்விடத்துக்கு வந்தார். அவரைப் பார்க்கும்போது எங்களுக்கும் ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டது. எங்கள் நாட்டுப் பிரச்சினையை, நாட்டு நிலைமையினை விளங்கப்படுத்தினோம். அவர் எங்களது பிரச்சினைகளை  மிகவும் அக்கறையுடன் செவி மடுத்தார்.

இராஜசுந்தரம் கூறினார்: “மேடம், நாங்கள் எவ்வளவோ பிரச்சினைகள் பட்டுக் கனடாவுக்குப் போவதற்காகப்புறப்பட்டிருக்கின்றோம். கனடாவைப்பொறுத்தவரையில் எங்களுக்கு விசா தேவையில்லை.  எங்களுடைய பயணச்சீட்டுகளை டெல்டா விமான நிறுவனம் ஏன் ஏற்கவில்லையென்று தெரியவில்லை.”

அதற்கு அந்தப்பெண் ‘இமிகிரேசன்’ அதிகாரி கூறினார்: “சட்டப்படி அவர்கள் உங்களை மறுப்பது சரியில்லை என்றுதான் படுகிறது. ஆனால் எங்களால் செய்வதற்கொன்றுமில்லை.  ஏற்கனவே மூன்று சிறிலங்காத் தமிழர்களை மான்ரியாலில் இவ்விதம் இறக்கியதற்காகக் கனடிய அரசு  டெல்டா நிறுவனத்தை அபராதம் கட்டும்படி பணித்துள்ளது.  இந்நிலையில் அவர்களால் செய்வதற்கொன்றுமில்லை.”

இதற்கு இராஜசுந்தரம் ” இந்த நிலைமையில் எங்களுக்கு அமெரிக்காவில் அகதி அந்தஸ்து கோருவதைத்தவிர  வேறு வழியில்லை.  நாங்கள் எல்லாரும் அமெரிக்காவில்  அகதிகளாக விண்ணப்பிக்கின்றோம்.” என்றார்.

இராஜசுந்தரம் அகதிக்கோரிக்கையை விண்ணப்பித்ததும் அந்தப்பெண் அதிகாரியின் முகத்தில் மாற்றம் தெரிந்தது.  அருகில் கடுகடுத்தபடியிருந்த  ஆண் அதிகாரியின் முகத்திலும் கடுமை சிறிது குறைந்ததை அவதானிக்கக்கூடியதாகவிருந்தது. இவ்விதம் எங்கள் அகதிக்கோரிக்கையுடன் எங்கோ சென்ற அந்தப்பெண் அதிகாரி விரைவிலேயே திரும்பி வந்தார். வந்தவர்

” நீங்கள் அகதிகளாக விண்ணப்பித்துள்ள காரணத்தினால் உங்களைத்திருப்பி அனுப்பவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.  எல்லாருக்கும் மகிழ்ச்சிதானே.” என்றார்.

உண்மைதான். எல்லாரும் மகிழ்ச்சியுடன் இராஜசுந்தரத்தை நோக்கினோம்.


அத்தியாயம் மூன்று: புரூக்லீன் தடுப்பு முகாம்.

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது எங்கள் விடயத்தில் சரியாகி விட்டது. இரண்டு நாள்கள் ஹில்டன் ஹொட்டலில் வைத்திருந்தார்கள்.  பொஸ்டன்  குளோப் பத்திரிகையில் எங்களைப்பற்றிய செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படத்துடன் பிரசுரித்திருந்தார்கள். ‘வோய்ஸ் ஒவ் அமெரிக்கா , பி.பி.ஸி ஆகியவற்றிலெல்லாம் எங்களைப்பற்றிய செய்தியை ஒலிபரப்பினார்கள்.  இலங்கை இனக்கலவரம் சர்வதேச வெகுசனத் தொடர்பு சாதனங்களில் பரபரப்பாக அடிபட்டுக்கொண்டிருந்த  சமயத்தில்தான்  எங்களது பயணமும் தொடங்கியிருந்தது.  இதனால்தான்  எங்களைப்பற்றிய செய்தியும் பிரபலமாகியிருந்தது.  எங்களைப்பற்றிய பூர்வாங்க விசாரணைகள் முடிந்ததும் எங்களை நியூயார்க்குக்கு அனுப்பினார்கள். அப்பொழுதுகூட எங்களுக்குத்தடுப்பு முகாமுக்கு அனுப்பும் விடயம் தெரிந்திருக்கவில்லை.

பிரத்தியேக பஸ்ஸொன்றில் எங்களை நியூயார்க் அனுப்பியபொழுது ஏற்கனவே இரண்டு நாள்கள்  ஆடம்பர ஹொட்டலான ஹில்டனில் இருந்த சந்தோசத்தில் நாங்கள் சந்தோசமாகவேயிருந்தோம்.  நியூயார்க் நகரைப்பற்றி, அதன் பிரசித்தி பற்றி இலங்கையிலேயே அறிந்திருந்தோம். அத்தகையதொரு நகருக்குச் செல்வதை நினைத்ததுமே நெஞ்சில் களிப்பு. பல்வேறு கனவுகள், திட்டங்களுடன் படம் விரித்தன.  அன்று மட்டுமல்ல இன்றும் கூட என் நெஞ்சை ஒரு கேள்வி குடைந்தபடிதானிருக்கின்றது.  பொஸ்டனில் ;பிடிபட்ட எங்களை எதற்காக நியுயார்க் அனுப்பினார்கள்.  பொஸ்டனில் தமிழ் அமைப்புகள் மிகுந்த செல்வாக்குடன் விளங்கின.  இந்நிலையில் எங்களை அங்கேயே வைத்திருந்தால் அரசியல்ரீதியில் அமெரிக்க அரசுக்குப் பிரச்சினை வரலாமென்று அமெரிக்க அரசு எண்ணியிருந்திருக்கலாம் என்ற ஒரு காரணம்தான் எனக்குப்படுகின்றது.பொஸ்டனிலிருந்து நியூயார்க்குக்கான எங்களது பயணம் எமக்கு இன்பமாகவேயிருந்தது.  முதன் முதலாக ‘எகஸ்பிரஸ்வே’யில் பயணம். பல்வேறு வகைகளினான் ட்ரக்குகளை வியப்புடன் பார்த்தோம். அடிக்கடி இரண்டு ட்ரெயிலர்களை ஒன்றாக இணைத்தபடி செல்லும் ட்ரக்குகள் நெஞ்சில் ஆச்சரியத்தை விளைவித்தன. அப்பாடா, ஒரு வழியாக எதிர்ப்பட்ட தடைகளையெல்லாம் கடந்து விட்டோமென்று  பட்டது. எல்லாரும் ஒருவிதமான ஆனந்தத்தில் மூழ்கியிருந்தோம்.  எனக்கு வீட்டு ஞாபகங்கள் எழுந்தன. எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் உழைத்து வீட்டுப்பிரச்சினைகளை முடித்து விடவேண்டும்.  தம்பியை மெதுவாக இங்கு இழுத்து விடவேண்டும்.  அக்காவின் திருமணத்தைக்கோலாகலமாக நடத்தி வைத்து விட வேண்டும். எல்லாவற்றையும் ஒரு வழியாக முடித்து விட்டுத்தான் கெளசல்யாவின் நிலையைப்பார்க்க வேண்டும். கெளசல்யாவின் நினைவுகள் நெஞ்சுக்கு இதமாகவிருந்தன். கெளசல்யாவுக்கு எத்தனையோ தடவைகள்  எடுத்துக்கூறி விட்டேன். எனது பொறுப்புகள், பிரச்சினைகள் பற்றி விரிவாக விளங்கப்படுத்தி விட்டேன். அவள் பிடிவாதமாக என்னைத்தான் மணப்பதாகக் காத்து  நிற்கப்போவதாகக் கூறுகின்றாள்.  இந்நிலையில் நானென்ன செய்ய?  காத்து நிற்கும் பட்சத்தில்  ஏற்பதைத்தவிர வேறு வழியில்லை.  

நியூயார்க் நகருக்குள் நுழைந்தபோதும் எங்களுக்கு நிலைமை விளங்கவில்லை. பஸ் நியூயார்க்கின் வறுமை படர்ந்த பகுதியொன்றினுள்  நுழைந்தபோதுதான் நெஞ்சை ஏதோ நெருடியது.  வறுமையான தோற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த  கறுப்பினப்பிள்ளைகள் , பழமை வாய்ந்த கட்டடங்கள்.. இவ்விதமானதொரு பிரதேசத்தினூடு பஸ்  சென்றபோது எங்களுக்கு நிலைமை விளங்காமற் போனாலும், எங்கேயோ பிழை யொன்றிருப்பது புரிந்தது. கடைசியில் பஸ் பழைமையானதொரு கட்டடம் ஒன்றின் முன்னால் சென்று நின்றது.  

நாங்கள் எங்கள் உடைமைகளுடனிறங்கப் பணிக்கப்பட்டோம்.  அப்பொழுதும் எங்களுக்கு நிலைமை வடிவாகப்புரியவில்லை.  ஐந்தாவது மாடியை அடைந்தபோதுதான் நிலைமை ஓரளவு புரிந்தது. நாங்கள் சென்றடைந்த பகுதி  ஐந்தாவது மாடியில் அமைந்திருந்த வரவேற்புக்கூடம். சிறைக்காவலரைப்போன்ற தோற்றத்துடன் மேசையில் கோப்பொன்றில் மூழ்கியிருந்தவரிடம் எங்களை ஒப்படைத்த பொஸ்டன் குடிவரவு அதிகாரி ‘குட் லக்’ கூறிவிட்டுப்போனபோதுதான் சூழலின் யதார்த்தமே எங்களுக்கு உறைத்தது. ஏதோ ஒரு வகையான சிறையொன்றுக்கு நாங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றோமென்ற உண்மையை உணர்த்தியது.

கம்பிக் கதவுகளுக்குப் பின்னால் எங்களை ஆவலுடன் , சிறை ஆடைகளுடன் நோக்கியபடியிருந்த விழிகள் புரிய வைத்தன. சிறைக்காவலர்கள் ஆங்காங்கே காணப்பட்டார்கள். எங்கள் உடமைகளெல்லாம் எங்களிடமிருந்து நீக்கப்பட்டன. எங்களிடமிருந்த பணம் எடுக்கப்பட்டது. நாங்கள் அவ்விடத்திலிருந்து வெளியேறும் சமயத்தில் அவை மீண்டும் தரப்படும் எனக்கூறப்பட்டது.  லோகன் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்றது போல் பூர்வாங்க சோதனைகள் நடத்தப்பட்டன. கைரேகைகள் எடுக்கபட்டன.  ஒரு வழியாகச் சோதனைகளெல்லாம் முடிவடைந்த பின்னர் எங்களுக்குச் சிறை ஆடைகள் தரப்பட்டன.  அணிந்து கொண்டு உள்ளே சென்றோம்.

‘”கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதைதான்” இவ்விதம் இராகசுந்தரத்தார் ஒரு வித விரக்தியுடன் கூறினார். “பனையாலை விழுந்தவனை மாடேறி மிதித்ததாம்” இவ்விதம் சிவகுமார் சலித்துக்கொண்டார். “ஊரிலை பிரச்சினையென்று வெளிக்கிட்டால்…  இப்பிடி மாட்டுப்படுவமென்று தெரிந்திருந்தால் அங்கேயே கிடந்து செத்துத்தொலைத்திருக்கலாமே” இவ்விதமாக ரவிச்சந்திரன் முணுமுணுத்துக்கொண்டான். அருளராசா எதுவுமே பேசாமல் மெளனமாகவிருந்தான். “நடப்பதைப்பார்ப்போம்” இவ்விதம் கூறினேன்.

எங்களுக்குப் பின்னால் சிறைக்கதவுகள் மூடப்பட்டன. மல்லர்களைப்போல் கறுப்பினத்துக் காவலர்கள் ஆங்காங்கே காணப்பட்டார்கள். ஐந்தாவது மாடித்தடுப்புமுகாமின் கூடம்,  இணைக்கும் நடைபாதை, கூடம் என்னும் மாதிரியானதொரு அமைப்பில் காணப்பட்டது. ஒவ்வொரு படுக்கைக்கூடத்துக்கும் எதிராக ஒரு கூடம் பொழுது போக்குவதற்காகக் காணப்பட்டது.  இப்பொழுதுபோக்குக் கூடத்தில் ஒரு மூலையில் தொலைக்காட்சிப்பெட்டி, ‘வென்டிங் மெஷின்’ (காடு போட்டுப்பொருளெடுக்கும் இயந்திரம்), டேபிள் டெனிஸ் விளையாட மேசை, தொலைபேசிகள் ஆகியவை காணப்பட்டன. படுக்கைகளுக்கான கூடத்தில் ‘பங்பெட்ஸ’ (Bunk Beds) .. கப்பல்களில், மாணவர் விடுதிகளில் இருப்பதுபோல்  , ஒரு கட்டில்கள் ஒன்றுக்கு மேல் ஒன்றாகக்காணப்பட்டன. கூடங்களை இணைக்கும் நடைபாதைகள் பலமான இருப்புக்கதவுகளுடன் , காவலர்களுடன் காணப்பட்டன.

இரு கூடங்களையும் இணைக்கும் நடைபாதையுடன் சேர்ந்து குளியலறை, மலசலக்கூடம் ஆகியவை காணப்பட்டன.  இது தவிர உணவுண்ணும் கூடம், தேகப்பயிற்சி செய்வதற்கான கூடம் ஆகியவையுமிருந்தன.  நோய் வாய்ப்படும் சந்தர்ப்பத்தில் மருத்துவ வசதிகள் பெறுவதற்கான வசதிகளும் அளிக்கப்பட்டன. மருத்துவரின் அறை தடுப்பு முகாமின் முன் பக்கத்தில், வரவேற்புக் கூடத்துக்கு முன்பாக அமைந்திருந்தது.  

எங்களது பகுதியில் தடுப்புக் கைதிகள் அனைவரும் ஆண்களே. பெண்கள் வேறொரு பகுதியிலிருந்தார்கள். உணவுக்காகக் காத்து நிற்கும்போது மட்டும் முன்னதாகவே உணவை முடித்து விட்டுச் செல்லும் பெண் கைதிகளைப் பார்ப்பதற்கு ஆண்கள் முண்டியடித்துக்கொள்வார்கள். இதற்காகவே சமையலறையில் வேலை செய்வதற்காகப்போட்டி போடுவார்கள். இவ்விதம் வேலை செய்தால் ஒரு நாளைக்கு ஒரு டொலர் சம்பளமாகத்தருவார்கள்.


அத்தியாயம் நான்கு: தடுப்புமுகாம் வாழ்வு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'நாங்கள் தங்கியிருந்த தடுப்பு முகாமில் ஆண்கள் இருநூறு வரையிலிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் ஆபிரிக்க, தென்னமெரிக்காவைச்சேர்ந்தவர்கள்.  நாடென்று பார்த்தால் ஆப்கானிஸ்தான் நாட்டவர்களே அதிகமானவர்களாகவிருந்தார்கள்.  இலங்கையைப்பொறுத்தவரையில் நாம் ஐவர்தாம். பங்களாதேஷ், இந்தியாவைச்சேர்ந்தவர்கள் இருவர் மட்டுமேயிருந்தார்கள். எல்சல்வடோர், கெளதமாலா போன்ற மத்திய அமெரிக்காவைச்சேர்ந்தவர்களுமிருந்தார்கள். 

விமான நிலையங்களில் போதிய கடவுச்சீட்டுகள், ஆவணங்களின்றி அகப்பட்டவர்கள், அகப்பட்டு அகதி அந்தஸ்து கோரியவர்கள், சட்ட விரோதமாக வேலை செய்து அகப்பட்டவர்கள், போதைவஸ்து முதலான குற்றச்செயல்களில் ஈடுபட்டு நாடு கடத்தப்படுவதற்காகக் காத்து நிற்பவர்கள்.. இவ்விதம் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த பல்வேறு விதமான கைதிகள் அங்கிருந்தார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டவர்களின் நிலை பெரிதும் பரிதாபத்துக்குரியது.

பெரும்பாலானவர்கள்  இரண்டு வருடங்களாக உள்ளே கிடக்கின்றார்கள். இங்குள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் போதிய ஆவணங்களின்றி அகப்பட்டு அகதி அந்தஸ்து கோரியவர்கள்தாம்.  உறவுகள் பிரிக்கப்பட்ட நிலையில், உணர்வுகள் அழிக்கப்பட்ட நிலையில் வாழும் இவர்களின் நிலை வெளியில் பூச்சுப்பூசிக்கொண்டு, மினுங்கிக்கொண்டிருந்த உலகின் மாபெரும் வல்லரசொன்றின் இன்னுமொரு இருண்ட பக்கத்தை எனக்கு உணர்த்தி வைத்தது.  அமெரிக்கர்களைப்பொறுத்தவரையில் இவர்கள் புத்திசாலிகள்; கடின உழைப்பாளிகள்; விடா முயற்சி, அமோபலம் மிக்கவர்கள்; எத்தனையோவற்றில் உலகின் முன் மாதிரியாகத்திகழுபவர்கள், ஆனால் அதே அமெரிக்காவில்தான் உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மனோ வியாதி பிடித்த ‘டெட் பண்டி’ போன்ற கொலையாளிகளும் இருக்கின்றார்கள். உரிமைகள் மறுதலிக்கப்பட்ட நிலையில் அகதிகளும் தடுப்பு முகாம்களென்ற பெயரில் திகழும் சிறைகளில் வாடுகின்றார்கள். வாய்க்கு வாய் நீதி, நியாயம், சமத்துவமென்று முழங்குமொரு நாட்டில் காணப்படும் மேற்படி நிலைமைகள் ஆய்வுக்குரியன.

நாங்கள் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட கூடத்துக்குச் சென்றதும் , எங்களைச்சுற்றி ஆப்கானிஸ்தானைச்சேர்ந்த அப்துல்லா, எல்சல்வடோரைச்சேர்ந்த டானியல், கெளதமாலாவைச்சேர்ந்த டேவ் ஆகியோர் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். எங்களைப்பற்றி, எங்கள் நாட்டைப்பற்றி, எவ்விதம் இங்கு அகப்பட்டோம் என்பது பற்றியெல்லாம் ஆர்வத்துடன் , வெகு ஆதரவுடன் விசாரித்தார்கள். ஶ்ரீலங்காக் கலவரம் உலகம் முழுவதும் தெரிந்திருந்த காலகட்டத்தில் வந்திருந்ததால், அவர்களுக்குச் ஶ்ரீலங்காவைத்தெரிந்திருந்தது. எங்கள் கதையைக்கேட்டு அனுதாபப்பட்டுக்கொண்டார்கள்.

“இந்த அமெரிக்கர்களே இப்படித்தான். எந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும் பிரச்சினை தருவது இவர்கள்தாம்” , இவ்விதம் டானியல் கூறினான்.
டானியலுக்குப் பதினெட்டு வயதுதானிருக்கும்.  இன்னும் சிறுவனுக்குரிய தன்மைகளை அவன் முகம் இழந்து விடவில்லை.  அவன் தொடர்ந்தும் கூறினான்: ” எங்களுடைய  நாட்டுப்பிரச்சினைக்குக் காரணமே இந்த அமெரிக்கர்கள்தாம்.  இவர்கள் தருகின்ற  பிரச்சினைகளிலிருந்து  தப்பிப்பிழைத்து
இங்கு வந்தாலோ மனிதாபிமானமேயில்லாமல் மிருகங்களைப்போல் அடைத்து வைத்து, மனோரீதியாகச்சித்திரவதை செய்கின்றார்கள்.”

“நீ எவ்வளவு காலமாக இங்கிருக்கிறாய் டானியல்” இவ்விதம் கேட்ட எனக்கு அவனுக்குப் பதில் ஆப்கானிஸ்தானைச்சேர்ந்த அப்துல்லா பதில் தந்தான்.  அப்துல்லாவின் பதில் என்னை மட்டுமல்ல , எங்கள் எல்லாரையும் கலங்க வைத்தது.

“கடந்த இரண்டு வருடங்களாக நானுமென் நாட்டைச்சேர்ந்த  சிலரும் இருக்கிறோம், ஆனால் டானியல் வந்து ஒரு வருசமாயிருக்கும்.”

“இரண்டு வருசங்கள்.. இவங்கள் , இந்த அமெரிக்கன்கள் என்ன செய்கின்றான்கள்? ” கலக்கத்தால் சற்றே பொறுமையிழந்தஆர் இராஜசுந்தரத்தார்.

“இவங்களுடைய சட்டங்களின்படி எந்த வித ஆவணங்களுமில்லாமல் நாட்டுக்குள் வரமுன்பாகப் பிடிபட்டால் , அப்படிப்பட்டவர்களுடைய வழக்குகள் முடியும் வரையில் உள்ளேயே இருக்க வேண்டியதுதான். அதற்கு ஒரு வருசம் எடுக்கலாம் அல்லது இரண்டு வருசங்களாவதெடுக்கலாம்.”

இவ்விதமாக எங்களுடன் சிறிது ஆதரவாகக்கதைத்துவிட்டு அவர்கள் தத்தமது வழமையான அலுவல்களைப்பார்ப்பதற்குப்புறப்பட்டு விட்டார்கள்.  நாங்கள் எல்லாரும் சிறிது நேரம் கூடிக்கதைத்தோம். எங்கள் எல்லோரிலும் இராஜசுந்தரத்தாரே பெரிதும் கலகத்துடன் காணப்பட்டார்.

” இப்படி இரண்டு, மூன்று வருசங்கள் உள்ளேயே கிடக்க வேண்டுமென்றதை நினைச்சால்.. காசைச்செலவழித்து ஏன் வெளிக்கிட்டனென்று இருக்கு. ஊரிலை மனுசியும், பிள்ளைகளையும் விட்டு விட்டுக் கனடாவுக்குப்போய்க் கெதியிலை கூப்பிடுறனென்றிருக்கிறேன்.”

“அண்ணை! மனதைத்தளரவிட்டு ஆகப்போறதென்னவிருக்கு?  இனி எப்படி இங்கிருந்து தப்பலாமென்பதைப்பார்ப்பம்.”

இவ்விதம் சிவகுமார் கூறவும், அவரை இடை மறித்த இராஜசுந்தரத்தார் கேட்டார்:

” நீயென்ன ஜெயில் பிரேக்கைச் சொல்லுறியோ?”

” அண்ணை, நான் அதைச்சொல்லேலை. எப்பிடி இங்கையிருந்து வெளியிலை போகலாமென்றதைத்தான் சொன்னனான்.”

” பொஸ்டன் தமிழ் அமைப்பைச்சேர்ந்தவர்களுடன் கதைத்தால் ஏதாவது வெளிக்கலாம்” இவ்விதம் நான் கூறினேன்.

“ஆனால், எப்பிடி அவங்களோடை கதைக்கிறது? ” அருள்ராசா கேட்டான்.

அப்பொழுதுதான் பொஸ்டன் அமைப்பைச்சேர்ந்தவர்களின் தொலைபேசி எண் கூட எம்மிடமில்லை என்ற உண்மை விளங்கியது.

இதற்கு ரவிச்சந்திரன் கூறினான்: ” அண்ணை, எனக்குத் தெரிஞ்சவங்கள் நியூயார்க்கிலை இருக்கிறான்கள். அவங்களிட்டைக் கேட்டுப்பார்த்தால் கட்டாயம் எடுத்துத்தருவான்கள்.”

இவ்விதம் சிறிது நேரம் கூடிக்கதைத்தபடியிருந்து விட்டு, ஒவ்வொருவரும் தத்தமது படுக்கைகளுக்குத்திரும்பினோம். நானும், அருள்ராசாவும் ஒரு ‘பங்  பெட்டில்’ மேல் கட்டிலில் அவனும், கீழ்க்கட்டிலில் நானுமாகப்படுத்துக்கொண்டோம். 

வந்து ஒரு மாதம் ஓடி, ஒளிந்தது. இதற்க்கிடையில் தடுப்பு முகாம் வாழ்க்கைக்கு ஓரளவு பழக்கப்படுத்தியாகிவிட்டது.

காலை, மதியம், மாலையுடன் மூன்று நேரச்சாப்பாடு முடிந்து விடும். வழக்கமாக இரவும் சாப்பிடும் வழக்கமுள்ள எமக்கு, இரவெல்லாம் வயிற்றைப்பசி சுரண்டத்தொடங்கி விடும். ஒவ்வொரு முறை உணவுக்கூடத்துக்குச் செல்லும்போதும் , ஒவ்வொரு கூடத்தைச்சேர்ந்தவர்களும் வரிசையாகக்காத்து நிற்பார்கள். முதலில் பெண் கைதிகள் வந்து உணவுண்டு விட்டுச்செல்வார்கள். அதன் பின்னர் எங்கள் கூட்டைத்திறந்து விடுவார்கள். சாப்பாட்டைப்பொறுத்தவரையில்ம் , எங்களுக்குப் பழக்கமில்லாதபோதும் சத்தானதை நிறையுணவாகப்போட்டார்கள். காலையில் ஒரு ‘யூஸ்’, கோப்பி, ஒரு ஒழம், பால் மற்றும் ‘சீரியல்’. இது தவிர ‘ஸ்கிராம்பிள் எக்’ அல்லது ‘பான் கேக்’ , ‘சிரப்பு’டன் தருவார்கள்.  மத்தியான் சோறு, ‘ஸ்பாகட்டி’, இறைச்சி உருண்டைகள், ஒரு ‘யூஸ்’, பழம், கோப்பி தருவார்கள். பின்னேரம்போல் இரவுணவைத்தந்து விடுவார்கள். பழங்கள் அல்லது கோப்பியையோ நாங்கள் எங்கள் கூடத்துக்கு எடுத்துச்செல்ல முடியாது. காவலர்கள் விட மாட்டார்கள். அகப்பட்டால் பறித்து விடுவார்கள். எங்களுக்கோ இரவெல்லாம் பசி வயிற்றைக்கிண்டும். களவாக, எப்படியோ பழங்களைக்கடத்திக்கொண்டு சென்று விடுவோம்.

இன்னுமொரு முக்கியமான விடயம்… அடிக்கடி முகாமின் கைதிகளை நின்ற இடங்களிலேயே நிற்கும் படி , ஒலிபெருக்கியின் மூலம் அறிவித்துவிட்டு, சிறை அதிகாரிகள் வந்து கணக்கிடுவார்கள்.  அப்படிக்கணக்கிடும்போது சில சமயங்களில் ஒன்றிரண்டு பிழைத்து விடும். அவ்விதம் எண்ணிக்கையில் பிழையிருந்தால், மீண்டும், மீண்டும் சரியான எண்ணிக்கை வரும் வரையிலும் கணக்கிடுவார்கள்.


அத்தியாயம் ஐந்து: முகாமின் பொழுதுபோக்கு அனுபவங்கள் சில….
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'ஆரம்பத்தில் முதலிரண்டு கிழமைகளும் எங்களுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போயிருந்தது. ஜன்னலினூடு தொலைவில்  விமானங்கள் சுதந்திரமாக கோடு கிழிப்பதைப்பார்க்கும்போது  , தொலைவில் வறிய கறுப்பினத்துக் குழந்தைகள் விளையாடுவதைப்பார்க்கும்போது  சுதந்திரமற்ற எங்களது நிலை நெஞ்சினை வருத்தியது.  விசர் பிடித்தவர்களைப்போல்  நாம் ஐவரும் எங்கள் எங்களது படுக்கைகளில் புரண்டு கிடந்தோம்.

ஊர் நினைவுகள் நெஞ்சில் பரவும்.  வீட்டு நினைவுகள் , கெளசல்யாவின் நினைவுகள்  சிறகடிக்கும்.  கலவர நினைவுகளின் கொடூரம் கண்களில் வந்து நிற்கும்.  எத்தனையோ கனவுகள்,  எத்தனையோ திட்டங்கள், பொறுப்புகள் இருந்தன.  வெளியில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் இருண்ட பகுதிக்குள் வந்து இப்படி மாட்டுப்படுவோமென்று யார் கண்டது. இவர்களால் ஏன் எங்கள் நிலைமைகளை உணர முடியவில்லை. எல்சல்வடோர் , ஆப்கானிஸ்தான் இளைஞர்களின் வாழ்க்கை எவ்விதம் வீணாக்கிக்கொண்டிருக்கின்றது. குற்றச்செயல் புரிந்தவர்களையும், கொடுமை காரணமாக நாடு விட்டு நாடு ஓடி வந்தவர்களையும் ஒன்றாக வைத்திருக்கின்றார்கள். கைதிகளைப்போல் சட்டதிட்டங்கள். காவலர்களின் அதட்டல்கள், உறுக்கல்கள், தத்தமது நாடுகளில் நிகழும் , நிகழ்ந்த அனர்த்தங்களிலிருந்து , உற்றார் , உறவினரைப்பிரிந்து , நொந்த , மனத்துடன் வரும் அகதிகளை இவர்கள் மேலும் வருத்தும் போக்கு…..   எம்மைப்பொறுத்தவரையில் நாம் இன்னும் கலவரத்தின் கொடூரத்திலிருந்து மீண்டிருக்கவில்லை.  அதற்குள் எங்களுக்கு இங்கு ஏற்பட்டுவிட்ட நிகழ்வுகள் மேலும் எம்மை வருத்தின.எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கின்றது.  அப்பொழுது நான் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.  ‘நான் விரும்பும் நாடு’ என்னும் தலையங்கத்தில் எழுதும்படி வகுப்பில் தமிழாசிரியர் பணித்திருந்தார்.  அதற்கு நான் தேர்ந்தெடுத்த நாடு அமெரிக்கா. அதற்காக நான் குறிப்பிட்டிருந்ட காரணங்கள்: அமெரிக்கா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு.  ஆபிரகாம் லிங்கனைப்போன்ற ஒரு சாதாரண விறகு வெட்டி கூட ஜனாதிபதியாக வர முடியும் சாத்தியமுள்ள நாடு அமெரிக்கா. அமெரிக்காவில் மனித உரிமைகள் மதிக்கப்படுகின்றன.  அவர்களது சுதந்திர தேவி சிலையே இதற்குச்சான்று. இவ்விதமாக எழுதியிருந்தேன். ஆனால் இன்று யாராவது இப்படியொரு கட்டுரையினை எழுதச்சொன்னால் நிச்சயம் அமெரிக்காவைத்தேர்ந்தெடுக்க மாட்டேன்.  அகதிகளாக ஓடி வருபவர்களைப் பெரிதாக அரவணைக்க வேண்டாம். ஆனால் அவர்களை மேலும் மேலும் மனோரீதியாக வருத்தாமலிருக்கலாமல்லவா.

இதே சமயம் சட்ட விரோதமாக நாட்டினுள் நுழைபவர்கள் விடயத்தில் அமெரிக்கா ஒரு வித்தியாசமான , விநோதமான சட்டமொன்றினையும் இயற்றி வைத்திருக்கின்றது. நீதியையும், நியாயத்தையும் பாதுகாக்கத்தான் சட்டங்கள். ஆனால் அந்தச்சட்டம் எந்த நியாயத்தைப் போதிக்கின்றதோ தெரியவில்லை.  ஆனால் அந்தச்சட்டத்தினை நாங்கள் உணர்ந்ததே தற்செயலாகத்தான். அதுவும் மூன்று மாதங்கள் கழிந்துவிட்ட பிறகுதான். அது மட்டும் தெரியாமல் போயிருந்தால் சில வேளை இன்னும் நாம் அமெரிக்கத்தடுப்பு முகாமில்தான் இருந்திருப்போமோ தெரியவில்லை.

இன்னுமொரு வழியில் தடுப்பு முகாம் வாழ்க்கை இப்பிரபஞ்சத்தின் சார்புத்தன்மையினை  எங்களுக்கு வெளிக்காட்ட உதவியதென்றுகூடக் கூறலாம். வெளியிலிருந்தபோது விரைவாக ஓடிக்கொண்டிருந்த காலம் தடுப்பு முகாமினுலுள்ளேய ஓடவே மாட்டேனென்று சண்டித்தனம் செய்தது.  எதிர்காலம் நிச்சயமற்றிருந்தது.  முடிவெதுவும்  தெரியாத திரிசங்கு நிலை.  இருதாற்போலிருந்து விரக்தி கலந்த உணர்வுகள் வெடிக்கத்தொடங்கி விடும்.  சோர்வு தட்டிப்படுக்கைகளில் படுத்திருப்போம்.  தொடர்ந்தும் இப்படியே இருப்பது எங்களுக்கு எந்தவிதப்பலனையும் தரப்போவதில்லை என்பது மட்டும் தெளிவாகப்புரிந்தது. 

ஒரு நாளிரவு ஐவரும் படுப்பதற்கு முன்னால் இராஜசுந்தரத்தாரின் கட்டிலில் ஒன்று கூடினோம்.  இதற்கிடையில்  தடுப்பு முகாம் வாழ்க்கை எங்கள் பழக்க வழக்கங்களில்  ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது.  சிவகுமாரின் வாயிலிருந்து அடிக்கடி தகாத வார்த்தைகள்  வெளிவரத்தொடங்கியிருந்தன.  ரவிச்சந்திரன் இரவில் படுக்கையில் சாய்ந்து , ‘லைற்’ அனைத்ததும் ‘ஊ” என்று ஊளையிடுவதுபோல் சப்தமிடுவான்.  இவனுக்குப் பதிலை டானியலும் அவ்விதமே அனுப்புவான்.  இவர்களைத்தொடர்ந்து ஏனையவர்களும் அவ்விதமே அந்நிகழ்வில்  கலந்து கொள்வார்கள். அச்சமயம் சிறைக்காவலர்கள் வந்து ஒழுங்கை நிலை நாட்டிச்செல்வார்கள்.

இதே சமயம் ரவிச்சந்திரனுக்கு ஆங்கில அறிவு மிகவும் மட்டாகவே இருந்தது.  இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்து , அன்றைய கலந்துரையாடலில்
எங்களது நிலைமையை அலசி ஆராய்ந்தோம்.  அன்றைய கலந்துரையாடலில் பொழுதைப்பயனுள்ளவாறு எவ்விதம் கழிப்பது என்பது பற்றியும், எமது எதிர்கால நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும் விவாதித்ததில் பினவரும் முடிவுகள் எடுக்கப்பட்டன:

அமெரிக்காவில் அகதிநிலைக்கோரி விண்ணப்பித்திருந்ததாலும், ஏற்கனவே பொஸ்டன் தமிழ் அமைப்புகள் எம் விடயத்தில் கை போட்டு விட்டதாலும், எது செய்தாலும் அவர்களை மூலமாகவே அவர்களைக்கலந்து ஆலோசிக்க வேண்டுமெனவும், கனடா செல்வதற்கு ஏதாவது வழிகள் இருக்கும் பட்சத்தில் அது பற்றி ஆராயும் பொறுப்பை அவர்களிடமே விட்டு விடுவதென்றும் முடிவு செய்தோம்.  அதே சமயம் தகாத வார்த்தைகளைப் பாவிப்பதை நிறுத்துவதென்றும், ரவிச்சந்திரனுக்கு இராஜசுந்தரத்தால் ஆங்கிலம் படிப்பிப்பதென்றும் மேலதிக முடிவுகளும் எடுக்கப்பட்டன.

இதே சமயம் எங்களுக்கு எங்களைப்பற்றியும், எங்களது கலந்துரையாடல் பற்றியும்  எடுத்த முடிவுகள் தொடர்பாகச் சிரிப்பாகவுமிருந்தது.  அன்றைய எமது கலந்துரையாடலினை அடுத்து , அடுத்த சில நாள்கள் எம் நெஞ்சினில் சிறிது நம்பிக்கை துளிர் விட்டிருந்தது.  அவ்விதம் கலந்துரையாடியதன் மூலமெங்கள் நெஞ்சின் பாரமும் ஓரளவு குறைந்திருந்தது.

என்னைப்பொறுத்தவரையில் தொடர்ந்தும் தேவையற்ற சிந்தனைகள் நெஞ்சினைத்தாக்க விடுவதில்லையென்று  உறுதி செய்து கொண்டேன்.  என் பொழுதினைக் கூடுதலாக தொலைக்காட்சி பார்ப்பதிலும், டேபிள் டென்னிஸ் டானியல், ரிச்சர்ட் ஆகியோருடன் விளையாடுவதிலும், சிவகுமார், ரவிச்சந்திரனுடன் சதுரங்கள் விளையாடுவதிலும் கழிக்கத்தொடங்கினேன்.

சதுரங்க விளையாட்டினைபொறுத்தவரையில் ஸ்பானிஷ் சிறைக்காவலருக்குத்தான் நன்றி கூற வேண்டும்.  சிறைக்காவலர்கள் சிலரும் சில சமயங்களில் தங்களுக்கிடையில் சதுரங்கம் விளையாடிக்கொண்டிருப்பார்கள்.  அந்த ஸ்பானிஷ் சிறைக்காவலரிடம் கேட்டபோது , எந்த வித முறைப்புமில்லாமல் ஒரு சதுரங்க மட்டையினையும், காய்களையும் கொண்டு வந்து தந்தான்.

இது தவிர சமயம் கிடைக்கும்போதெல்லாம் உடற்பயிற்சியும் செய்யத்தொடங்கினேன்.  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப்பொறுத்தவரையில்  காலையில் ‘கார்ட்டூன்’களையும், செய்திகளையும் பார்ப்பதில் விருப்பமாயிருக்கும்.  தடுப்பு முகாமில் இருந்தவர்களில்  பெரும்பான்மையானவர்கள்  ‘கார்ட்டூன்’களைப்பார்ப்பதில் விருப்பம் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.  ‘பிங் பாந்தர்’, ‘டொம் அன்ட் ஜெர்ரி’ முதலான கார்ட்டூன்களையே பெரும்பாலானவர்கள் பார்த்து இரசித்தார்கள். இதே சமயம் எமது தடுப்பு முகாமினுள்ளிருந்த ‘வென்டிங் மெஷின்’களிலிருந்தும் பானங்கள், உருளைக்கிழங்குப்பொரியல் போன்றவற்றைப்பெற முடிந்தது. அதற்காக எங்கள் தடுப்பு முகாம் பொறுப்பதிகாரியிடம் ஆரம்பத்தில் கொடுத்து வைத்திருந்த எங்கள் பணத்திலிருந்து ஐந்து டொலர்களோ, பத்து டொலர்களோ சில்லறையாக மாற்றித்தரும்படி நேரத்துடனேயே கூறி வைத்தால், பெரும்பாலும் ஓரிரு வாரங்களில் மாற்றித்தருவார்கள்.

இதற்கிடையில் டானியல், ரிச்சர்ட் மற்றும் அப்துல்லா ஆகியோருடன் நெருக்கமாகப்பழகத்தொடங்கியிருந்தேன்.  ரிச்சர்ட் வித்தியாசமான பிறவிகளிலொருவன்.  எந்நேரமும் பைபிளும் கையுமாகத்தானிருப்பான். இவனுக்கு ஆத்திரம் வந்தே நான் பார்த்ததில்லை.  இவனது வாழ்க்கை மிகவும் எளிமையானது.  சிக்கலில்லாதது.  எல்லாவற்றையும் கடவுள் மேலேயே போட்டுவிடுவான்.  மற்றவர்கள்  எல்லாரும் அமெரிக்கச்சட்ட, திட்டங்களை விளாசு விளாசென்று விளாசித்தள்ளும்போது இவன் ஒரு நாளாவது  அமெரிக்க அரசு மீது ஆத்திரப்பட்டதே கிடையாது. எனக்கே அது வியப்பாகவிருந்தது. “ரிச்சர்ட், உனக்கு உண்மையிலேயே இவர்கள்மேல் ஆத்திரம் வரவில்லையா?” என்று கேட்டால் அதற்கு அவன் “இல்லை. இவர்கள் எனக்குச் சாப்பாடு போடுகிறார்கள்.  தங்க உதவி செய்கின்றார்கள்.  அதற்காக இவர்களுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். கடவுளையும் வேண்டுகின்றேன்” என்பான். சில வேளைகளில் இவனது கடவுட் பக்தி அதி தீவிரமான, மூடத்தனம் நிறைந்ததோ என்று கூட நான் நினைத்ததுண்டு.  இவன் கடவுளைத்தவிர , ஏன் நவீன விஞ்ஞானத்தைக்கூட நம்ப மறுப்பவன்.  பூமி உருண்டை வடிவமானதென்று சொல்வதை இவன் நம்பவே மாட்டான். ஒரு விதத்தில் பார்க்கப்போனால் இவன் மேல் எனக்குப்பொறாமை கூட ஏற்பட்டது.  இவனைப்போல் மட்டும் இருந்து விட்டால் வாழ்க்கையில் பிரச்சினையென்று ஒன்றுமில்லாதல்லவா போய்விடும்., இல்லையா?

இவனுக்கு முற்றிலும் எதிரானவன் டானியல். இவனது கடவுள் சேகுவேரா. கொரில்லாப்போராட்டம் பற்றிய நூலொன்றினைச் சமயம் கிடைக்கும்போதெல்லாம் படித்தபடியிருப்பான். இவனது குடும்பம் முழுவதுமே சல்வடோர் அரச படைகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப்பலியாகியிருந்தது.  இவனது அண்ணன் ஒரு கொரில்லா அனுதாபி.  அரச படைகள் இவனது அண்ணனைச்சுட்டுக்கொண்டு விட்டிருந்தன. இந்நிலையில் இயல்பாகவே டானியல் சிறிது ஆவேசத்துடனிருந்தான். 

இவ்விதமான எங்கள் வாழ்க்கையில் ஒருவித மகிழ்ச்சியினை ஏற்படுத்த விரும்பிய சிறைக்காவல் அதிகாரிகள் வாரத்திலொருநாள், அதுவும் அரை மணி நேரம், நாம் விரும்பினால் நாமிருந்த தடுப்பு முகாம் கட்டடத்திற்குச்சொந்தமான , சிறிய முள்ளுக்கம்பிப்பாதுகாப்புடன் கூடிய விளையாட்டு மைதானத்தில் விளையாட அனுமதிப்பதிப்பதாகக்கூறி அழைத்துச்செல்வார்கள்.  வெளியுலகைக்காணும் மகிழ்ச்சியுடன் நாமும் செல்வோம். எங்களை அம்மைதானத்துக்குக்கூட்டிச்செல்வதே ஒரு வேடிக்கையான அனுபவம்தான். இரண்டிரண்டு பேராக விலங்கிடுவார்கள். முன்னுக்கும், பின்னுக்கும் பலத்த பாதுகாப்புடன் எம்மைக்கூட்டிச்செல்வார்கள். மைதானத்துக்குச்சென்றதும் விலங்குகளை நீக்கு விளையாட விடுவார்கள். அதற்காகப்பந்தொன்றினைத்தருவார்கள். நாம் ஒருவருக்கொருவர் எறிந்து பிடித்தோ அல்லது காலால் அடித்து விளையோடிக்கொண்டிருப்போம். அச்சமயங்களில் இடையில் குறுக்கிட்டு, விளையாடியது போதுமென்று மறுபடியும் விலங்கிட்டு ஐந்தாவது மாடியிலிருந்த தடுப்பு முகாமுக்கு அழைத்துச்செல்வார்கள். தனித்துவமான முறையில் மனித உரிமைகளைப்பேணும் அவர்களது நடவடிக்கைகள் ஒரு சமயம் எங்களுக்குச் சிரிப்பையும், வெறுப்பையும் ஒருங்கே தந்தன.

மிகப்பெரிய பயங்கரவாதிகளாக எம்மை உருவகித்து, விலங்கிட்டு இவர்கள் அழைத்து வருவது உண்மையிலேயே எங்கள் மேல் கொண்ட பயத்தினால்தானா என்பதில் எங்களுக்கு ஒரு சந்தேகமிருந்தது. எங்கள் சந்தேகத்தை அப்துல்லாவின் பதில் ஒருவிதத்தில் தீர்த்து வைத்தது எனலாம்.  “உண்மையில் இவ்விதம் விலங்கிடுவது , சிறையில் வைத்திருப்பது எல்லாம் எங்களை மனோரீதியாகப் பலவீனப்படுத்தத்தான். இதைத்தாங்காமல் சிலர் தாமாகவே முன்வந்து தம்மை நாடு கடத்தும்படி கேட்டு விடுவார்கள். இவ்விதம் என் நாட்டைச்சேர்ந்த முகமட் முன்னர் சென்றிருந்தான். ஆனால் இன்று அவனது நிலை என்ன என்பது பற்றி யாருக்குமே தெரியாது?”

அதே சமயம் ஆப்கானிஸ்தானைப்பொறுத்தவரையில்  அமெரிக்கா சோவியத்துச் சார்பு அரசாங்கத்துக்கு எதிராக முஜாகிதீன் கொரில்லா அமைப்புக்கு உதவி செய்து வருகின்றது. ஆனால் அந்நாட்டு நிலைமைகளினால் ஓடிவரும் அப்துல்லா போன்றவர்கள் விடயத்தில் கண்டும் காணாதது போலிருக்கின்றது. ஒரு வேளை அகதிகளென்ற பெயரில் ஆப்கான் அரசின் உளவாளிகள் வருகிறார்களென்ற சந்தேகமோ?

 


அத்தியாயம் ஆறு: தமிழகத்துப் பாதிரியார் ஏபிராகாமின் வருகை!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'ஒவ்வொரு நாளையும் ஒரு புது நாளாகக்கருதி , எங்கள் தடுப்புமுகாம் வாழ்வை மறக்க எண்ணி, ஏனையவற்றில் கவனம் செலுத்த முயன்றுகொண்டிருந்தபோதும் முற்றாக எங்களால் அவ்விதம் செய்ய முடியவில்லை.  எத்தனை நேரமென்றுதான் தொலைக்காட்சி பார்ப்பது? ‘டேபிள் டென்னிஷ்’ விளையாடுவது?  தேகப்பயிற்சி செய்வது? சுதந்திரமற்ற தடுப்பு முகாம் வாழ்வின் கனம் இடைக்கிடை எம்மை மேலும் மேலும் அமுக்கத்தொடங்கிவிடும். இத்தகைய சமயங்களில் படுக்கைகளில் வந்து புரண்டு கிடப்போம். இதே சமயம் வெளியில் இல்லாததைவிட அதிக அளவில் உள்ளே எங்களுக்கு ஒரு வசதி இருக்கத்தான் செய்தது.  உலகின் எந்த மூலை முடுக்கில் உள்ளவர்களுடனும் தொடர்பு கொள்ள எங்களால் முடிந்தது. சட்டவிரோதமாகத்தான். பெரிய பெரிய நிறுவனங்கள் பலவற்றின் தொலைபேசிக்குரிய கடனட்டை இலக்கங்கள் ஏதோ ஒரு வழியில் முகாமில் உள்ளவர்களுக்குக்கிடைத்தவண்ணமிருந்தன. எப்படிக்கிடைத்ததோ அவர்களுக்கே வெளிச்சம். யாரோ ஒரு மேற்கு இந்தியன் ஒருவனின் பெண் நண்பர் தொலைபேசி நிறுவனமொன்றில் ‘ஆபரேட்டரா’க வேலை செய்வதாகவும், அவள் மூலம் அவன் பெற்றுக்கொள்வதாகவும் கதை அடிபட்டது. அத்தொலைபேசி இலக்கங்களை அவன் அங்குள்ளவர்களுக்கு குறைந்த அளவு பணத்துக்கு விற்றுக்கொண்டிருந்தான். சிலருக்கு இலவசமாகவும் கொடுத்தான். இவ்விதம் கிடைக்கும் இலக்கங்களைக்கொண்டு உலகின் மூலை , முடுக்குகளையெல்லாம் தொடர்புகொள்ள முடிந்ததால், தடுப்பு முகாம் வாசிகள் தம் நாடுகளிலுள்ள தம் உறவினர்கள், நண்பர்களுடன் நாள் முழுவதும் உரையாடிக்கொண்டிருப்பார்கள்.  இவ்விதமாக யாழ்ப்பாணத்திலுள்ளவர்களுடன் கூடத்தொலைபேசி மூலம் கதைக்கக்கூடியதாகவிருந்தது. ரவிச்சந்திரனின் வீட்டில் தொலைபேசி வசதி இருந்தது.  ஓரிரு சமயங்களில்  காலை ஏழு மணிக்குப் பொங்கும் பூம்புனலைத்தொலைபேசியினூடு கேட்டுக்கூட மகிழ்ந்ததுண்டு.  இச்செயலில் சட்டவிரோதத்தன்மை எம் தடுப்பு முகாம் வாழ்வின் உளவியல் வேதனையின் முன்னால் உருண்டோடிவிட்டது.

இவ்விதமாகக்கிடைக்கும் தொலைபேசி இலக்கங்கள் விரைவிலேயே செயலற்றுப் போய்விடும். அவற்றுக்குரிய நிறுவனங்கள் தம் தொலைபேசி இலக்கங்களைப்பாவித்துப் பலர் கதைப்பதை அறிந்ததும், அவ்விலக்கங்களைத் தடை செய்து விடுவார்கள்.  இவ்விடத்தில் புதிய இலக்கங்கள் கிடைத்து விடும். பழையன கழிதலும், புதியன புகுதலுமாக எங்களது சர்வதேசத்தொலைபேசி உரையாடல்களும் நீண்டுகொண்டே சென்றன.

இதே சமயம் ஆரம்பத்தில் எம் விடயத்தில் அக்கறை செலுத்திய பொஸ்டன் தமிழ் அமைப்பின் அக்கறை சற்றே குறைந்தது. அவர்களில் சிலர் நியூயார்க் வந்து போயிருந்தார்கள். ஆனால் எங்களை எட்டிப்பார்க்கும் அளவுக்கு அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. அதே சமயம் ஓரிரு நல்ல உள்ளங்களும் இல்லாமலில்லை.  ஒருநாள் எங்களைச் சந்திக்க யாரோ பார்வையாளர்கள் வந்திருப்பதாக அறிவித்தார்கள். எங்களுக்கு வியப்பாகவிருந்தது.  எங்களைத்தேடி விருந்தாளிகளா? யாராகவிருக்குமென்று  மண்டையைப்போட்டு உடைத்துக்கொண்டோம். கட்டையான உருவம். கனிவான குரல் வளம்.  அவற்றுக்குச் சொந்தக்காரரான, தமிழகத்தைச்சேர்ந்த ஆனால் தற்போது நியூயார்க்கிலுள்ள கிறிஸ்த்தவ ஆலயமொன்றில் பணி புரியும் பாதிரியார் ஏபிரகாம்தான் எங்களை அவ்விதம் எங்களைச்சந்திக்க வந்திருந்தார். எங்களுக்கு வாசிப்பதற்கென்று பத்திரிகைகள் சிலவற்றையும் கொண்டு வந்திருந்தார்.

தடுப்பு முகாமில் விருந்தினர்களைப்பார்ப்பதற்கு ஒரே சமயத்தில் இருவரை அனுமதிப்பார்கள்.  விருந்தினரையும், எம்மையும் கம்பி வலை பிரித்திருந்தது.  சந்திப்பதற்கு நானும் , இராஜசுந்தரத்தாரும் சென்றிருந்தோம்.  சுதந்திரமற்ற சிறை அனுபவத்தால் விரக்தியுற்றிருந்த நிலையில். பாதிரியார் ஏபிரகாமின் சந்திப்பு ஆறுதலாக , இதமாகவிருந்தது.

“ஏதாவது என்னால் முடியக்கூடிய உதவிகள் ஏதுமிருந்தால் கூறுங்கள்” , பாதிரியார்தான் கேட்டார்.

எங்களைப்பொறுத்தவரையில் முதலாவது பிரச்சினை தடுப்பு முகாமை விட்டு எவ்விதம் வெளியேறுவது என்பதுதான். ஏற்கனவே தடுப்பு முகாம் வாழ்வனுபவத்தால் கலங்கிப்போயிருந்த இராஜசுந்தரம் கூறினார்:

” ஃபாதர் என்ற மனுசி , பிள்ளைகளை ஊரிலை விட்டு வந்திருக்கிறன்.  இவங்கள் அறுவான்கள் இப்பிடியே உள்ளுக்கையே வைத்திருப்பான்கள் போலைக்கிடக்குது.  வெளியிலை போறதுக்கு ஏதாவது வழிபற்றி விசாரித்தீங்களென்றால் நல்லது. “

“ஒன்றுக்குமே கவலைப்படாதீங்க.  எனக்குத்தெரிந்த கிறிஸ்த்த அமைப்பொன்றில் வேலை செய்கிற லாயர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் விசாரித்துப்பார்க்கிறேன். உங்களுக்கும் என்ன தேவையென்றாலும் தொலைபேசியில் அழையுங்கள். முடிந்தால் உதவி செய்வேன்”

இவ்விதம் பாதிரியார் ஏபிரகாம் கூறினார். உண்மையில் பாதிரியாருடனான சந்திப்பு கடலில் அகப்பட்டுத்தத்தளித்துக்கொண்டிருப்பனுக்குத் துரும்பொன்று அகப்பட்டதைப்போன்று எங்களுக்குப் புதிய நம்பிக்கையினைத்துளிர்க்க வைத்தது.  பாதிரியார் ஏபிரகாமுடனான சந்திப்பை முடித்துக்கொண்டு மீண்டும் எம் படுக்கைகளுக்குத்திரும்பியபொழுது  , சிவகுமார், அருள்ராசா ஆகியோர் எம்மைச்சூழ்ந்து கொண்டார்கள்.  பாதிரியாருடனான சந்திப்பு பற்றிய விபரங்கள் முழுவதையும் , ஒரு சொல் விடாது, ஞாபகப்படுத்துக்கூறும்படி கேட்டுத்துளைத்து விட்டார்கள்.

“இளங்கோ, பார்த்தியா! யாரோ முன்பின் தெரியாத ஃபாதர், அதுவும் எங்கடை நாட்டைச் சேராத , இந்தியாவைச்சேர்ந்த ஃபாதர், பேப்பரிலை எங்களைப்பற்றிய விபரங்களைப்பார்த்து விட்டு ஆறுதல் கூற வந்திருக்கின்றார்.   ஆனால், எங்கடை பிரச்சினையிலை தலையைப்போட்ட எங்கடை ஆட்கள் நாங்கள் எப்படியிருக்கிறமென்று கூடப்போன் அடித்துப்பார்க்கவில்லை.”

சிவகுமாரின் குரலில் சலிப்புத்தட்டியது.

“தமிழ் அமைப்பைச்சேர்ந்தவர்களெல்லாரும் இந்த நாட்டிலை எஸ்டாபிலிஸ்ட் பண்ணிய  சிட்டிசன்காரன்கள்.  நாங்களோ இந்த அரசுக்கு வேண்டாத விருந்தாளிகள்.  நமக்கேன் வம்பு என்று  ஒதுங்கி விட்டார்கள் போலை.” அருள்ராசா இவ்விதம் கூறியதும் ஒருவிதத்தில் சரியாகத்தானிருந்தது. இந்தச் சூழலில்தான் பாதிரியார் ஏபிரகாமின் வருகையின் முக்கியத்துவம் எங்களுக்கு விளங்கியது.  பாதிரியார் ஏபிரகாமைப்பொறுத்தவரையில் எங்கள் விடயத்தில் பெரிதாகக் கவனமெடுத்திருக்கத்தேவையில்லை. அவ்விதம் கவனமெடுத்து, எம்மை வந்து சந்தித்து. ஒன்றிரண்டு ஆறுதல் வார்த்தைகள் கூறிச்சென்றார்களே! அவ்விதம் அவர்கள் எம்மை வந்துச் சந்தித்துச்சென்றதே எவ்வளவொ மேல் என்று பட்டது.

இதன் பிறகு எங்கள் கவனம் பாதிரியார் ஏபிரகாம் கொண்டுவந்திருந்த பத்திரிகைகளின் பக்கம் திரும்பியது.  எங்களைப்பற்றிய செய்திகளை வெளியிட்டிருந்த பல்வேறு நாடுகளைச்சேர்ந்த பத்திரிகைகள் அவை. பொஸ்டன் குளோப், சிலோன் டெய்லி நியூஸ், ஏசியன் மொனிட்டர், மற்றும் மத்திய கிழக்கைச்சேர்ந்த ஹல்ப் டைம்ஸ் ஆகிய பத்திரிகைகளே அவை. இதில் ஹல்ப் டைம்ஸ்ஸில் வந்திருந்த செய்தி எமக்குச்சிரிப்பினைத்தந்தது.  இரண்டு வாரங்களில் எமக்குத்தீர்வு கிடைக்குமென்னும் கருத்துப்பட , அமெரிக்க அரசதிணைக்கள அதிகாரியொருவர் கூறியிருந்தது பிரசுரமாகியிருந்தது. அதில் பொஸ்டன் குடிவரவு அதிகாரி ஒருவர் , திமோதி லீலன் என்பது அவரது பெயர், தாம் மத்திய அரசிடம் எங்களது வழக்கைத்துரிதப்படுத்துமாறு கேட்டுள்ளதாகவும், இரண்டு வாரங்களில் முடிவு கிட்டலாம் எனக்கூறியிருப்பதும் கூட அப்பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது.  டெய்லி நியூசில் பொஸ்டனிலிருந்து , நியூயார்க்குக்கு நாம் மாற்றப்பட்ட விடயமும், பொஸ்டன் தமிழ் அமைப்பைச்சேர்ந்தவர்கள் எங்களுக்காகச் சட்டத்தரணியொருவரை அமர்த்தியுள்ள விடயமும் பிரசுரமாகியிருந்தன.  இவ்விதம் எங்கள் விடயத்தில் பெரிதாகத்தலையிட்ட பொஸ்டன் தமிழ் அமைப்பினர் பின்னர் ஏன் பின் வாங்கினார்கள் என்பதற்கான காரணம் மட்டும் சரியாகத்தெரியவில்லை.

பாதிரியார் ஏபிரகாம் எங்களைச்சந்தித்துப்போனபின் இரண்டு நாட்களின் பின் வேறிரண்டு எதிர்பாராத விருந்தாளிகள் எங்களைச்சந்திக்க வந்திருந்தனர். ஸ்பார்ட்டசிஸ்ட் அமைப்பினைச்சேர்ந்த ஒலிவர், இங்கிரிட் ஆகிய இருவருமே அவர்கள். ‘ஸ்பாட்டசிஸ்ட்’ கட்சியினரைப்பொறுத்த அளவில் அவர்கள் ட்ரொஸ்கியைப் பின்பற்றும் மார்க்சியவாதிகள். இவர்கள் பத்திரிகையில் இலங்கைத்தமிழர்களின் பிரச்சினை பற்றிய கட்டுரை வெளியாகியிருந்தது.  அதில் ஜே.ஆரின் அமெரிக்க சார்பு அரசுக்கெதிராகத் தமிழ், சிங்களப்பாட்டாளிகள் ஒன்று சேர்ந்து போராட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டிருந்தது.  எங்களை ஏதோ புரட்சிகரப்போராளிகள் போல் உருவகித்துக்கொண்டு, எங்கள் பிரச்சினைகளுக்குத்தீர்வு சிங்கள, தமிழ் பாட்டாளிகளின் ஒன்றிணைந்த போராட்டத்தில்தான் தங்கியுள்ளதென்பதை அடிக்கடி எடுத்துக்கூறினார்கள்.  அமெரிக்க அரசு எங்களை நடத்தும் விதம் பற்றிக்கவலைப்பட்டுக்கொண்டார்கள். 

இவர்களைப்பற்றி இராஜசுந்தரத்தாருக்கும், சிவகுமாருக்கும் நல்ல அபிப்பிராயமில்லை. “இவங்களெல்லாரும் சி.ஐ.ஏ.காரங்கள். எங்களை நாடி பிடித்துப்பார்க்க வாறாங்கள். ” என்று இராஜசுந்தரத்தார் கூறியபொழுது , அவரது குரலில் ஒருவித எச்சரிக்கை உணர்வு தென்பட்டது.

 


அத்தியாயம் ஏழு: நைஜீரியனைப் பிடித்த பேயும், தடுப்புமுகாம் கணக்கெடுப்பும்!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'இவ்விதமாக எங்கள் தடுப்பு முகாம் வாழ்க்கை வரவேண்டிய விருந்தாளிகள் வராத நிலை, எதிர்பாராத விருந்தாளிகளின் வரவு ஆகிய சந்தர்ப்பங்களை எதிர்கொண்டு தொடர்ந்தபடியிருந்தது. இதே சமயம் உலக நடப்பிலும் குறிப்பிடும்படியான சம்பவங்கள் சில நிகழ்ந்தன.  பிரயாணிகளுடன் சோவியத் நாட்டு எல்லைக்குள் அத்து மீறிப்பறந்த கொரிய விமானமொன்று ரஷ்யப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.  இச்செயல் சர்வதேசரீதியில் ஒருவித பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  பெரும்பாலான நாடுகள் மத்தியில் ரஷ்யாவுக்கெதிரான உணர்வுகளைக்கிளர்ந்தெழ வைப்பதற்கு இச்சம்பவம் பெரிதும் துணையாக இருந்தது. இதே சமயம் எம் நாட்டைப்பொறுத்தவரையில் கொழும்பு சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ் தாக்கப்பட்டதும், வவுனியாவில் இரு தமிழ் இளைஞர்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதும் குறிப்பிடும்படியான செய்திகள்.

எதிர்பாராத விருந்தாளிகளினால் சற்றே தென்புற்றிருந்த எங்களது நிலைமை மீண்டும் சிறை வாழ்வின் தாக்கத்தால் நிலை மாறியது.  பழைய குருடி கதவைத்திறந்த கதைதான். ஆனால் பாதிரியார் ஏபிரகாமின் தொடர்பு எங்களை உளவியல்ரீதியில் உறுதியாக்குவதற்குப் பெரிதும் உதவியாகவிருந்தது. அடிக்கடி ஒருவர் மாறி ஒருவர் பாதிரியார் ஏபிரகாமுடன் தொலைபேசியில் கதைத்துக்கொள்வோம். அவரும் எந்த நேரமென்றாலும் அலுக்காமல், சலிக்காமல் ஆறுதலாக, இதமாக எங்களுக்குத்தேறுதல் சொல்வார். அந்தச்சமயத்தில் இவ்விதம் கதைப்பதே எங்களுக்குப்பெரிய தென்பைத்தந்தது. எங்களில் மிகவும் அதிகமாக இராஜசுந்தரத்தாருக்குத்தான் ‘ஃபாதரின்’ தொடர்பு உதவியாகவிருந்தது. மனுசன் பிள்ளை, குட்டிகளைத் தவிக்க விட்டு விட்டு , இந்த வயதிலை நாடு விட்டு நாடு அகதியாக ஓடி வந்திருந்த நிலையில், தடுப்பு முகாம் வாழ்வு அவரை ஓரளவு நிலைகுலைய வைத்திருந்தது என்று கூடக்கூறலாம்.

இது இவ்வாறிருக்கத் தடுப்பு முகாமைப்பொறுத்தவரையில் புதியவர்கள் வருவதும், உள்ளேயிருப்பவர்கள் போவதுமாகக் காலம் போய்க்கொண்டிருந்தது. சிலர் நாடு கடத்தப்பட்டார்கள்.  சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டு வெளியே சென்றார்கள். ஆனால் எங்களைப்பொறுத்தவரையில் வழக்கு முடியும் வரையில் வெளியில் செல்ல முடியாதுபோல் பட்டது.

இதற்கிடையில் டானியலின் வாழ்க்கையில் ஒருவித மலர்ச்சி மலர்ந்தது. அவனும் அடிக்கடி உணவுக்கூடத்தில் வேலை செய்வான். அவ்விதம் வேலை செய்யும்போது அவனது நாட்டைச்சேர்ந்த பெண் கைதி ஒருத்தியுடன் காதல் வயப்பட்டிருந்தான். குழந்தைத்தனம் சிறிது சிறிதாக அவனை விட்டுப்போய்க்கொண்டிருந்தது.

இது தவிர இன்னுமொரு முக்கியமான விடயம் நாடு கடத்தப்படுவதற்காகக் காத்திருந்த நைஜீரிய நாட்டு இளைஞனொருவன் ஓரிரவு சன்னி கண்டு விட்டதுபோல் பிதற்றத்தொடங்கியதுதான். பலவித எதிர்பார்ப்புகளுடன் , பண விரயத்துடன் அமெரிக்கா வந்திருந்தவன். நாடு கடத்தப்படவிருந்ததனால் அவனது புத்தி பேதலித்துவிட்டது என்று கூறிக்க்கொண்டார்கள். பேய் பிடித்துவிட்டது என்றும் கதைத்துக்கொண்டார்கள். எங்கள் தடுப்பு முகாமில் இருந்த ஆபிரிகர்களிலொருவர் மந்திர தந்திரங்களில் கைதேர்ந்த விற்பன்னராம். உடலில் குடியிருக்கும் கெட்ட ஆவிகளை ஓட்டுவதில் சமர்த்தராம்.

அன்றி இரவு முழுவதும் பேய் பிடித்த நைஜீரிய இளைஞனுக்கு ஆவியோட்டிக்கொண்டிருந்தார் அந்த மந்திர தந்திரங்களில் கைதேர்ந்த மந்திரவாதி.  நாங்களும் அவர் பேயோட்டுவதைப்பார்த்தபடி , விடிய விடிய விழித்தபடியிருந்தோம். ஆபிரிக்க வாழ்வைக்காட்டும் ஆங்கிலப்படங்களில் வரும் மந்திரவாதிகளைப்போல் ஆபிரிக்க மொழியில் கெட்ட ஆவியை அவர் விரட்டிக்கொண்டிருந்த காட்சி வியப்பாகவும், சுவையாகவுமிருந்தது. புதுமையாகவுமிருந்தது. முகாம் பாதுகாவலர்களும் இந்த விடயத்தில் தலையிடாமல் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார்கள். ஆனால் மறுநாளிரவு  அந்த இளைஞன் தனது சுயநிலைக்கு வந்துவிட்டான்.

இது தவிர  இன்னுமொரு முக்கியமான விடயத்தையும் கூறித்தானாக வேண்டும்.  அது இரவு  நேரத்தில் முகாமிலுள்ளவர்கள் படுப்பதற்கு முன்னர் இறுதிக்கணக்கெடுப்பார்கள்.  இதை எடுப்பது பாதுகாவலர்கள் தரத்திலும் சிறிது கூடிய அதிகாரியொருவர். கறுப்பினத்தவர்.  பழைய ஆங்கில யுத்தத்திரைப்படங்களில் வரும் கண்டிப்பான ஜேர்மன் இராணுவ அதிகாரியொருவரைப்போன்ற தோற்றம். கண்ணாடி அணிந்து, தொப்பியுடன்  , முகத்தில் கடுமையுடன் , கைகளைப்பின்புறமாகக் கட்டியவாறு, கண்டிப்பான இராணுவ அதிகாரியிருவரைப்போல் கணக்கெடுக்க வரும் இவரைப்பார்த்ததும் , முகாமிலுள்ளவர்களுக்குச்சிரிப்பாகவிருக்கும்.  பகல் முழுவதும் பல்வேறு நினைவுகளுடன் மாரடித்துவிட்டுப் படுக்கையில் சாயும் நேரம் மனம் இலேசாகிக்கிடக்கும்.  குறும்பு செய்யும் எண்ணம் பரவிக்கிடக்கும்.  ரவிச்சந்திரன் தனது கட்டிலில் தலையணையை வைத்துப்போர்வையால் மூடிவிட்டு, வந்துவிட்டு எங்களுடன் கதைத்தபடியிருப்பான்.  இதுபோல் டானியலும் செய்வான். எங்களைக்கணக்கெடுக்கவரும் அந்த அதிகாரி ரவிச்சந்திரனை இரு தடவைகள் கணக்கெடுத்துவிட்டுச்செல்வார்.  அவர் தலை மறைந்ததும் எங்கள் கூடத்தில் குபீரென்று சிரிப்பு வெடிக்கும். சிரிப்பு வெடித்ததும் அதைக்கேட்டு எமது கூடத்துக்கு மீண்டும் திரும்பும் அந்த அதிகாரி எங்களைப்பார்த்து முறைத்துவிட்டுச்செல்வார். ஆனால் கணக்கு பிழை என்று அறிவிப்பார்கள். மீண்டும் ஒருமுறை கைதிகளை எண்ணுவதற்காக அந்த அதிகாரியே திரும்பவும் வருவார்.  இதற்கிடையில் நல்ல பிள்ளையாக ரவிச்சந்திரன் தன் படுக்கையில் போய்ப்படுத்துவிடுவான்.


அத்தியாயம் எட்டு: விஜயபாஸ்கரனின் வரவும்., விடிவும்!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'இவ்விதமாக எங்கள் தடுப்பு முகாம் வாழ்வில் சுவையான சம்பவங்களும் இல்லாமலில்லை. வாழ்வு தொடர்ந்து கொண்டிருந்தது.  நம்பிக்கையை நாங்கள் இன்னும் முற்றாக இழக்கவில்லை.  ‘ஃபாதர்’ ஏபிரகாம் அடிக்கடி கூறுவார்: “ஒன்றிற்குமே கவலைப்படாதீங்க. இமிகிரேசனிலை இதைத்தான் சொல்லுறாங்க.” ஒவ்வொருமுறை அவருக்குத் தொலைபேசி எடுக்கும்போதும் இதைத்தான் அவர் கூறுவார். ஃபாதர் பாவம். அவருக்கு நல்ல மனது.  ஆனால் எங்களுக்குப்புரிந்திருந்தது ஃபாதரிக்கு நம்பிக்கை போய்விட்டதென்று. ஃபாதருக்கும் புரிந்திருந்தது எங்களுக்குச்சூழலில் யதார்த்தம்  தெரிந்து விட்டதென்பது.  இருந்தும் சுதந்திரம் மறுக்கப்பட்டு, கூண்டுக்கிளிகளாகவிருந்த நிலையில் எங்களுக்கும் அத்தகைய  ஆறுதல் வார்த்தைகளின் தேவையிருந்தது.  அதே சமயம் நம்பிக்கையை இழந்துவிட நாங்களும் விரும்பவில்லை.  நம்பிக்கையின் அடிப்படையில்தானே இருப்பே நிலைநிறுத்தப்பட்டுக்கொண்டிருந்தது. இவ்விதமாக உப்புச்சப்பற்று போய்க்கொண்டிருந்த இருப்பினை மாற்றி வைத்தது விஜயபாஸ்கரனின் வரவு.

இவன் முகத்தில் சிரிப்பு மறைந்து நான் பார்த்ததேயில்லை. எத்தகைய இக்கட்டுகளையும் சமாளிப்பதற்கும் பழகியிருந்தான். யாழ்ப்பாணத்தில் பிரபலமான வர்த்தகர்களிலொருவராக விளங்கிய விநாசித்தம்பியின் ஒரே மகன் இவன். எங்களைப்போலவே கனடா செல்லும் வழியில் நியுயார்க்கில் பிடிபட்டிருந்தான். இவனைப்பார்க்கப்பாவமாயிருந்தது. நாங்களும் வந்து இரண்டரை மாதங்கள் ஓடி விட்டிருந்தன. இவனும் இனிமேல் எங்களில் ஒருவன். வந்ததுமே எங்களது எண்ணங்களைச்சொல்லி இவனது மனதைக்குழப்ப விரும்பவில்லை.  இவனது உறவினர்கள் பலர் நியூயார்க்கில் இருந்தனர். அவர்களுடன் கதைத்து, அவர்கள் மூலமாக விரைவாகவே பிரபல சட்டத்தரணியொருவரைத்தனக்காக அமர்த்திக்கொண்டான். இவனால் முடிந்ததைச் செய்யட்டும் என்று நாங்கள் பேசாமலிருந்தோம்.  இவன் வந்து சேர்ந்திருப்பது ஓர் இரும்புச்சிறை. இதை உடைத்துக்கொண்டு வெளியேறுவதென்பது அவ்வளவு சுலபமான செயலல்ல. காலம் அதனை இவனுக்கு உணர்த்தி வைக்கும்.  ஏற்கனவே நாங்கள் முயன்று பார்த்துச் சோர்ந்திருந்தோம்.  எனவே நாங்கள் யதார்த்த நிலையினை எம் அனுபவத்தின் மூலம் அறிந்திருந்தோம். இவனும் அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்வான்.

இதற்கிடையில் இவன் இலங்கையிலிருந்து நேராக வந்திருந்ததால் நாட்டு நிலைமைகளை விசாரித்தோம். தொடர்ந்தும் தலை விரித்தாடிக்கொண்டிருந்த இலங்கை அரச பயங்கரவாதத்தை இவன் விபரித்தபொழுது இலங்கை அரசின்மீது பயங்கரமான வெறுப்பு உணர்வு கலந்த கோபம் வெளிப்பட்டது.

விஜயபாஸ்கரன் கூறினான்: ” ஒவ்வொரு ஊரிலையிருந்தும் பள்ளிக்கூட பெடியளெல்லாம் இயக்கங்களில் சேர்ந்து கொண்டிருக்கிறான்கள்.  இனி பிரச்சினை முந்தி மாதிரி ஒரு பக்க இடியாக இருக்காது.”

அதே சமயம் எங்களுக்கு ஒருவித குற்றவுணர்வு தோன்றியது. நாட்டை விட்டுக் கோழைகளைப்போலவல்லவா தப்பி வந்திருக்கின்றோம்.
தொடர்ந்த சிவகுமாரின் கூற்று இதனை வெளிப்படுத்தியது: ” இந்தச்சிறையிலிருந்து வெளியிலை போனால் இலங்கை அரசின் அக்கிரமங்களுக்கெதிராக வெளிநாட்டு மக்களைத்திருப்பப் பாடுபட வேண்டும்.”

குறைந்தது எங்களால் எதையாவது செய்ய வேண்டுமென்ற தொனி அவனது கூற்றில் தென்பட்டது. 

ஒரு வாரம் விரைந்தது. அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அன்று விஜயபாஸ்கரனின் முகத்தில் இயல்பான புன்னகையைவிட ஒருபடி இன்னும் அதிகமாகவிருந்தது.  விசயத்தை அறியும் ஆவல் மண்டியிட்டது. அவன் கூறினான்: ” என்ர லோயர் சொன்னவர் பிணையிலை வெளியிலை போகலாமாம்.  இரண்டாயிரம் டொலர் கட்டினால் கட்டினால் சரியாம். நாளைக்கு அல்லது நாளன்றைக்கு நான் வெளியே போகலாமாம்.”

அவனது அக்கூற்று எங்களுக்குச் சந்தோசத்தையும், அதே சமயம் ஒருவித ஏக்கவுணர்வினையும் ஒருங்கே தந்தது. அதே சமயம் புதிதாக ஒருவித நம்பிக்கையும் குடிபுகுந்தது.  விஜயபாஸ்கரன் வெளியே போக முடியுமென்றால் ஏன் நாங்களும் அவ்விதம் பிணையில் வெளியேற முடியாது என்றொரு கேள்வியும் எமக்குள் எழுந்தது.

இராஜசுந்தரத்தாருக்குச் செய்தி அறிந்ததிலிருந்து இருப்புக்கொள்ளவில்லை.

“எங்கடை விசயத்திலை ஏதோ சுத்துமாத்து நடந்திருக்கு. எதுக்கும் பாஸ்கரன் மூலம் அவனுடைய லோயரிடம் விசாரித்துப்பார்ப்பம். ” என்றும் அவர் ஆலோசனை கூறினார். இதற்கு நாமனைவரும் ஆமோதித்தோம். ஒரு வேளை எங்களுடைய நிலைமைக்கும், விஜயபாஸ்கரனுடைய நிலைமைக்கும் இடையிலேதாவது சட்டரீதியிலான வேறுபாடுகளிருக்கலாம். இவ்விதம் நாமும் வெளியே செல்லக்கூடிய சந்தர்ப்பமிருக்கும் பட்சத்தில் விஜயபாஸ்கரனின் சட்டத்தரணியையே எங்களுக்காகவும் அமர்த்துவது நல்லதாக எமக்குப்பட்டது. விஜயபாஸ்கரன் தன் மாமா மூலமாகத் தனது சட்டத்தரணிக்கு எங்களது நிலைமையை எடுத்துக்கூறினான்.  வெளியில் வந்தால் அவரையே எங்களுக்கும் சட்டத்தரணியாக அமர்த்த நாங்கள் அனைவரும் ஒருமித்து முடிவெடுத்தோம். அதனையும் அவருக்குத் தன் மாமா மூலம் எடுத்துக்கூறியிருந்தான் விஜயபாஸ்கரன். எங்களது பொஸ்டன் சட்டத்தரணியின் பெயர், தொலைபேசி இலக்கம் போன்ற விபரங்களையும் விஜயபாஸ்கரனின் சட்டத்தரணிக்குக்கொடுத்தோம்.  அன்றிரவே எங்கள் விடயத்துக்கும் ஒரு முடிவு வந்தது.

விஜயபாஸ்கரனின் மாமா ஃபாதர் ஏபிரகாமிடம் எல்லாவற்றையும் எடுத்துக்கூறியிருந்தார்.  ஃபாதர் ஏபிரகாம் எங்களுக்கு உடனேயே தொலைபேசி வாயிலாக அழைத்தார். நியூயார்க் சட்டத்தரணி கூறித்தான் பொஸ்டன் சட்டத்தரணிக்கே எங்கள் விடயத்தில் அமெரிக்கக்குடிவரவுத்திணைக்களம் இழைத்த தவறு தெரிய வந்ததாம்.  உடனேயே பொஸ்டன் சட்டத்தரணி குடிவரவுத்திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்புகொண்டிருக்கின்றார். அதன்படி இன்னும் ஒரு வாரமளவில் நாங்களும் வெளியே பிணையில் செல்லக்கூடியதாகவிருக்கும். இதுதான் ஃபாதர் ஏபிரகாம் கூறிய தகவலின் சாராம்சம்.

எங்களுக்கு இச்செய்தி தந்த களிப்பினை வார்த்தைகளால் எடுத்துரைக்க முடியாது. அவ்வளவு சந்தோசம். இறக்கைக்கட்டிக்கொண்டு விண்ணில் பறப்பதைப்போலிருந்தது.  உண்மையில் நாங்கள் விஜயபாஸ்கரனுக்குத்தான் நன்றி கூற வேண்டும்.  இவன் மட்டும் வராமலருந்திருந்தால் நிச்சயமாக எங்களுக்கு இவ்விதம் விடுதலைகிடைத்திருக்கப்போவதில்லை. இந்த விடயம் பற்றிய உண்மையும் தெரிந்திருக்கப்போவதில்லை.  அவ்விதம் தெரிய வந்தாலும் எவ்வளவு நாள்கள், மாதங்கள், அல்லது வருடங்கள் ஓடி விட்டிருக்குமோ?

விஜயபாஸ்கரனின் சட்டத்தரணி மூலமாக, ஃபாதர் ஏபிரகாம் மூலமாக எமக்குக்கிடைத்த தகவல்களின்படி அமெரிக்க அரசின் சட்டவிரோதக்குடிவரவாளர்கள் மீதான சட்டதிட்டங்களை அறியக்கூடியதாகவிருந்தது.  சட்டபூர்வமாக நாட்டினுள் நுழைந்த ஒருவர் குறிப்பிட்ட அனுமதிக்காலம் முடிவடைந்த பின்னர் சட்டவிரோதக்குடிவரவாளராக மாறுகின்றார்.  அதே சமயம் சட்டவிரோதமாகக் கடல் மூலமாம அல்லது எல்லைப்புறத்தினூடாக நாட்டினுள் நுழையுமொருவரும் சட்டவிரோதக்குடிவரவாளரே. நாட்டுக்குள் ஒருவர் சட்டபூர்வமாகவும் அல்லது சட்டவிரோதமாகவும் நுழையலாம். இதுபோல் போலிக்கடவுச்சீட்டுகள் போன்ற பிரயாணப்பத்திரங்களுடன்  விமான நிலையங்களில் குடிவரவு அதிகாரிகளிடம்  அகப்பட்டு விட்டால், அவர்கள் சட்டவிரோதமாகக்கூட நாட்டினுள் அனுமதிக்கப்படாதவர்கள். இவர்களைப்போல் கடல் வழியாக வரும் ஒருவர் நிலத்தில் கால் வைக்கப்படும் முன்னர், கடலினுள் வைத்துக்கைது செய்யப்பட்டுவிட்டால், அவர்களும் சட்டவிரோதமாகக்கூட நாட்டினுள் அனுமதிக்கப்படாதவர்கள் என்ற பிரிவுக்குள் அடங்குவர். 

சட்டவிரோதமாக நாட்டினுள் நுழைந்தவர்களைப்பொறுத்தவரையில் அவர்களுக்கு, குடிவரவு அதிகாரிகளிடம் அகப்படும் பட்சத்தில், அவர்களது வழக்கு முடியும் வரையில், பிணையில் செல்வதற்கு சட்டரீதியாக அனுமதியுண்டு.  ஆனால், அதே சமயம், சட்டவிரோதமாகக்கூட நாட்டினுள் அனுமதிக்கப்படாதவர்களைப்பொறுத்தவரையில் , அவர்களுக்கு அவர்களது வழக்குகள் முடியும் வரையில் பிணையில் செல்வதற்குக்கூட அனுமதியில்லை. அது வரையில் அவர்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்படுவார்கள். வழக்குகள் முடிந்து, தீர்ப்புகள் எதிராக அமையும் பட்சத்தில், தடுப்பு முகாம்களில் வைத்தே நாடு கடத்தப்பட்டு விடுவார்கள்.

இராஜசுந்தரத்தார் எங்களுக்கேற்பட்ட நிலைமையினை எளிமையாக, நன்கு விளங்கும்படி எடுத்துக்கூறினார்:

” எங்களுக்கு நடந்ததென்னவென்றால்.. எங்களையும் அமெரிக்கக்குடிவரவு அதிகாரிகள், நாட்டினுள் சட்டவிரோதமாகக்கூட நுழையாத சட்டவிரோதக்குடிவரவாளர்களாகக்கருதி தடுப்பு முகாமில் அடைத்து விட்டார்கள்.”

“அப்படியென்றால்… நாங்களும் அப்படியான பிரிவுக்குள் அடங்கவில்லையா? எங்களையும் அப்படித்தானே விமான நிலையத்தில் வைத்து தடுத்தார்கள். விளங்கவில்லையே..” இவ்விதம் கேட்டவன் அருள்ராசா.

அதற்கு இராசசுந்தரத்தார் ஒரு பெரு மூச்சினை இழுத்து விட்டவாறு, தன் விளக்கத்தைத்தொடர்ந்தார்:

” இவங்கட இமிகிரேசன்காரன்களும் அப்படித்தான் எங்களைப்பிழையாக நினைச்சுப்போட்டான்கள். நாங்கள் அமெரிக்காவுக்குச் சட்டவிரோதமாக நுழைந்தவங்களில்லை. நாங்கள் பொஸ்டன் ஏர்போட்டிலை இறங்கினதும், எங்கடை எல்லாருடைய பாஸ்போர்ட்டிலையும் ட்ரான்சிட் விசா குத்தினவங்கள் ஞாபகமிருக்கா..?

“ஓமோம். நல்லா ஞாபகமிருக்குது..” இவ்விதம் இராஜசுந்தரத்தாரின் கூற்றினைச்செவிமடுத்துக்கொண்டிருந்த சிவகுமார் இடையில் குறுக்கிட்டுக் கூறினார்.

“அப்ப நாங்கள் ஒருத்தரும் சட்டவிரோதமாக வந்தவங்களில்லையே. நாங்கள் சட்டபூர்வமாக உள்ளுக்குளை வந்தவங்கள். ஆனால் எங்களை டெல்டா எயார் லைன்ஸ் ஏத்த மாற்றோமென்று மறுத்துப்போட்டதாலைதானே நாங்கள் இங்கை அகதிக்கோரிக்கை வைத்தனாங்கள்..”

இவ்விதம் கூறிவிட்டுச் சிறிது நேரம் அமைதியாக மூச்சிழுத்துத் தன்னை ஆசுவாசப்படுத்திய இராசந்தரத்தார் மீண்டும் தொடர்ந்தார்:

” நல்ல காலம் விஜயபாஸ்கரன் நியூயார்க் விமான நிலையத்தில் பிடிபட்டவன். அதனால்தான் எங்களுக்கு இவங்கட அகதிகள் பற்றிய  ஓட்டைகள் தெரியவந்திருக்கின்றன. அவன் மட்டும் இங்கே வராதிருந்தால்… என்னாலை நினைச்சுக்கூடப் பார்க்க முடியவில்லையே. சட்டபூர்வமாக ட்ரான்சிட் விசா எடுத்து , எங்களுக்கு எட்டு மணித்தியால விசாவும் இவங்கட இமிகிரேசனாலை தந்திருந்த நிலையிலை, டெல்டா எயார் லைன்ஸ் ஏற்ற மறுத்ததாலைதானே நாங்கள் எட்டு மணி கடந்து, சட்டவிரோதமாக இங்கேயே நிற்க வேண்டி வந்தது..”

இப்பொழுது அருள்ராசா இடை மறித்து இவ்விதம் கூறினான்:

“சட்டவிரோதமாக நாட்டினுள் அகப்பட்ட ஒரு சட்டவிரோதக் குடிவரவாளனுக்குப் பிணையிலை வெளியிலை செல்ல முடியுது. ஆனால் நாங்கள் சட்டபூர்வமாக நாட்டினுள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நாங்கள் சட்டபூர்வமாக இங்கு தங்கியிருந்த நேரத்திலை இங்கு அகதிக்கோரிக்கையை வைச்சோம். நாங்கள் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த நேரத்திலை பிடி படேலை. சட்டபூர்வமாகத் தங்கியிருந்த நிலையிலைதான் அகதிக்கோரிக்கையை முன் வைத்தோம். உண்மையிலை எங்களைப்பிணையில்லாமலேயே வெளியே அனுப்பியிருக்க வேணும்.”

அடுத்த ஒரு வாரத்திலேயே நாங்களும் வெளியில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டோம். அதற்கு முன்னர் நாங்கள் புரிந்ததாகக் கூறும் குற்றப்பத்திரங்களை எங்களுக்குத்தந்தார்கள். அதில் குடிவரவுச்சட்டத்தின் பிரிவுகளான 241(a) (15) ஆகியவற்றுக்கேற்ப நாங்கள் நாடு கடத்தப்படுவதற்கான குற்றங்களைப்புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. ஆக ஆகஸ்ட் 28 ஆம் திகதி நடைபெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ள குற்றத்துக்காக நவம்பர் 23ந் திகதி எங்களுக்குக் குற்றப்பத்திரிகைகள் தரப்பட்டிருந்தன. இதில் கூட எத்தனையோ விடயங்கள் மூடி மறைக்கப்பட்டிருந்தன.  முதலாவதாக நாங்கள் சட்டபூர்வமாக நாட்டினுள் அனுமதிக்கப்பட்டவர்கள்.  முறையாக ‘ட்ரான்சிட்’ விசா பெற்றிருந்தவர்கள்.  நாங்கள் சட்டபூர்வமாகத் தங்கியிருந்த காலகட்டத்திலேயே டெல்டா ‘எயார் லைன்ஸ்’ மறுத்த நிலையில் அமெரிக்க மண்ணில் அகதிக்கோரிக்கையினை விடுத்திருந்தவர்கள்.

உண்மையில் எங்களுக்கும் இரண்டு வருடங்கள் தங்குவதற்கான விசா பெற்று வந்த ஒருவர் வந்து ஒரு வருடத்தின் பின்னர் அகதி அந்தஸ்து கூருவதற்குமிடையில் சட்டரீதியில் வித்தியாசமேயில்லை. இவ்விதம் அகதிக்கோரிக்கையினை விடும் ஒருவரை இரண்டு வருடங்கள் கழிந்ததும் சட்டவிரோதமாக நாட்டில் இருப்பதாகக்கூறித் தடுப்பு முகாமில் தடுத்து வைப்பார்களா? அப்படி நடப்பதாகத்தெரியவில்லையே. நாங்களும் எங்களது ட்ரான்சிட் விசா முடிவடைவதற்குள் அகதிக்கான கோரிக்கையினைச்சமர்ப்பித்தவர்களல்லவா? ஆனால் எமக்குத்தரப்பட்ட குற்றப்பத்திரிகையில் நாங்கள் ட்ரான்சிட் விசா முடிவடைந்த பின்னரும், சட்டவிரோதமாகத்தங்கியிருந்ததாக அல்லவா குறிப்பிடப்பட்டுள்ளது.  நாங்கள்தாம் குறிப்பிட்ட காலத்துக்குள்ளேயே அமெரிக்க அரசிடம் அகதிக்கான கோரிக்கையினை விடுத்திருந்தோமே. அவர்களின் அனுமதியுடன்தானே, அதிகாரத்தின்கீழ்தானே, அவர்களின் காவலில்தானே தொடர்ந்தும் இருக்கின்றோம்.  இவர்கள் எப்படி இவர்களுடைய அனுமதியில்லாமல் தொடர்ந்தும் தங்கிருந்தோமென்று குறிப்பிடலாம்?

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல் இன்னுமொரு விடயமிருந்தது. ஏறத்தாழ மூன்று மாதங்கள் ஆகஸ்ட் 28, 1983 தொடக்கம் நவம்பர் 13, 1983 வரை எங்களுக்கு அமெரிக்க அரசியல் சட்டத்தில் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை கூட மறுக்கப்பட்டிருந்திருக்கிறது. குற்றம் புரிந்ததாகக்கூறும் பத்திரத்தை மூன்று மாதங்களின் பின்னரே கையளித்திருக்கின்றார்கள்.  இதை யாரிடம் போய் முறையிடுவது?  இந்த மூன்று மாதங்களாகச் சிறைக்கைதிகளாக உளவியல்ரீதியில் நாம் அடைந்த பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு?  அதுவும் சுதந்திர தேவியின்  சிலை கம்பீரமாகக்காட்சி தரும் நியுயார்க் மாநகரில்தான் எங்களுக்கு எங்களது மனித உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன.  வேடிக்கையாயில்லையா?

ஒருவாறு எங்கள் தடுப்புமுகாம் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.  அந்த மூன்று மாதங்கள்  நாங்கள் எங்கள் உரிமையினை  இழந்திருந்தோம். ஏற்பட்ட அனுபவங்களோ மறக்க முடியாதன.  பல்வேறு நாட்டைச்சேர்ந்தவர்களுடன் பழகிய அனுபவங்கள்  பயன் மிக்கவை.  டானியல், ரிச்சர்ட், அப்துல்லா, போன்ற நல்ல உள்ளங்களைப்பிரிவதை நினைக்கையில் வேதனையாகத்தானிருந்தது.  எங்களுக்கு விடுதலை என்ற செய்தியை வரவேற்று மகிழ்ந்த அதே சமயம் தங்களது எதிர்காலத்தையெண்ணி அவர்கள் முகத்தில் படர்ந்த ஏக்க உணர்வுகளை எங்களால் உணர முடிந்தது.  அவர்களைப்பொறுத்தவரையில் சட்டவிரோதமாகக்கூட நாட்டினுள் அனுமதிக்கப்படாத வகையினர் என்ற பிரிவினைச்சேர்ந்தவர்கள். வழக்கு முடியும் வரையில் அவர்களது நிலை திரிசங்கு நிலைதான். வழக்கில் சில வேளை தீர்ப்பு சாதகமாயிருக்கும் பட்சத்தில் நாட்டினுள் உரிமைகளுடன் அனுமதிக்கப்படலாம்.  இல்லாத பட்சத்தில் நாடு கடத்தப்படலாம். அதுவரை ஏக்கங்களுடன் , கற்பனைகளுடன் , கனவுகளுடன் அந்த ஐந்தாவது மாடித்தடுப்பு முகாம் என்றழைக்கப்படும் சிறையினுள் வளையவர வேண்டியதுதான். வேறு என்னதான் அவர்களால் செய்ய முடியும்?

*குறிப்பு: இந்த இறுதி அத்தியாயம் மீளத்திருத்தி, எழுதப்பட்டுள்ளது.  – வ.ந.கி. –

[ முற்றும் ]

ngiri2704@rogers.com