நிகழ்வுகள்: இலண்டனில் தமிழ் பெண்கள் அமைப்பு

நிகழ்வுகள்: இலண்டனில் தமிழ் பெண்கள் அமைப்பு

‘லண்டன் தமிழ் பெண்கள் அமைப்பு பெண்ணியச் செயற்பாட்டாளர்களையும், எழுத்தாளர்களையும், ஆசிரியர்களையும், கலைஞர்களையும் கொண்டு பரந்த ஜனநாயக அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பாகும். சமூகத்தில் நிலவும் பெண்களுக்கெதிரான பாரபட்சமான நடைமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்;துவதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்’ என்று கவிஞரும் எழுத்தாளருமான செல்வி உதயகுமாரி பரமலிங்கம் (நிலா) தலைமையில் லண்டனில் யூன் மாதம் 3ஆம் திகதி நடைபெற்ற பெண்கள் அமர்வில் தலைமை உரையாற்றியபோது குறிப்பிட்டார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முன்னாள் விரிவுரையாளரும், ஓவியருமான அருந்ததி ரட்னராஜ் உரையாற்றும் போது ‘புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ப் பெண்கள் மத்தியில் குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் ஓவியக் கலையைக் கொண்டு செல்வதே தன்நோக்கம் என்று தெரிவித்தார்’

கிழக்கிலங்கையைச் சேர்ந்த பிரபல நாவலாசிரியை ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்கள் தமிழ் அகதிகளுக்காகத் தான் எண்பதுகளில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தபோது செயற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதோடு, மருத்துவ நூல்களை எழுதியது பற்றியும் சமூக மானிடவியல் சார்ந்து தான் எழுதிய ஆய்வுகள் பற்றியும் விபரித்தார்.

லண்டனில் தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றுகின்ற திருமதி மாதவி சிவலீலன்  உரையாற்றும்போது, ‘2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி உலக மகளிர் தினத்தன்று லண்டனில் சிறப்பு மாநாடு ஒன்றினை நடாத்தும் பணி லண்டன் தமிழ் பெண்கள் அமைப்பின் முன்னிற்கின்ற உடனடியான முதற் பணியாக அமைகின்றது’ என்று குறிப்பிட்டார்.

தமயந்தி சண்முகநாதன் உரையாற்றம்போது ‘மைன்ட’; (ஆiனெ) என்ற பெயரில் தாங்கள் நடாத்தி வரும் உளவியல் அமைப்புக் குறித்தும் நகை அணிகலன்களை வடிவமைப்பதில் தான் பங்குபெற முடியும்’ என்றும் குறிப்பிட்டார்.

தமிழ் ஆசிரியையும் எழுத்தாளருமான றீற்றா பற்றிமாகரன் உரையாற்றும்போது ‘இளைய தலைமுறையினருக்குப் பொருத்தமான புலம்பெயர் வாழ்வுக்கு இசைந்த வகையில் பாடங்களைப் போதித்தல் அவசியம்’ என்றும் அந்தப் பணியில் தான் பல ஆண்டு காலமாக உழைத்து வருவதாகக் குறிப்பிட்டார்’

நடன ஆசிரியை ஜெயந்தி யோகராஜா உரையாற்றும்போது ‘தான்;;  ஐரோப்பாவிலும், இந்தியாவிலும் மும்பாய் போன்ற இடங்களிலும் நடன நிகழ்சிகளை நடாத்தி வருவதாகவும் நடன நிகழ்ச்சிக் கலையில் தான் முக்கிய பங்காற்ற முடியும்’ என்றும் தெரிவித்தார்.

அரியமலர் உதயகுமார் பேசும்போது ‘பெண்கள் நுண் கலைகளில் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு லண்டனில்; நிறையவே உள்ளன என்றும் இளவயதிலேயே அவற்றைப் பயில முனைவது அனுகூலமாக இருக்கும்’ என்றும் குறிப்பிட்டார்.

திருமதி மீனாள் நித்தியானந்தன் உரையாற்றும்போது ‘லண்டனில் தமிழ் பெண்களுக்கான அமைப்பு ஒன்று உருவாக வேண்டும் என்று தான் கொண்டிருந்த நீண்டகாலக் கனவு நிறைவேறி உள்ளது என்றும், பரந்த ஜனநாயக அடிப்படையில் லண்டனில் இயங்கும் ஏனைய மகளிர் அமைப்புகளையும் இணைத்து  நமதுஅமைப்பு பலம் வாய்ந்த அமைப்பாக வளர்ச்சி பெற வேண்டும்’ என்றும் தெரிவித்தார்.

ஊடகவியலாளரும் எழுத்தாளருமான நவஜோதி ஜோகரட்னம் உரையாற்றும்போது ‘தனிநபர் என்ற அந்தஸ்து, பேதங்கள் எதுவுமில்லாமல் அனைத்துப் பெண்களும் சரிநிகராக இணைந்து லண்டன் தமிழ் பெண்கள் அமைப்பினை முற்போக்கான அமைப்பாக அமைவதற்குப் பாடுபடவேண்டும்’ என்று குறிப்பிட்டார்.
தமிழ் பெண்கள் அமைப்பின் இந்த அங்குரார்ப்பணக் கூட்டத்தில் அகல்யா நித்தியலிங்கம், பரணி தில்லைநாதன், சுபோதினி அறிவழகன், ஜொஸ்லின் புஷ்பராஜா, கௌரி சிறீநாதன், தயாளினி மோகனசுந்தரம், தீபா லக்சுமிபதி, வசந்தி டொனால்ட், அம்பிகை மகாலிங்கசிவம், வசுமதி ராகவராஜ், டாக்டர் வைதேகி, கோவதனி புவனச்சந்திரன், ராஜேஸ்வரி பாலராஜன் ஆகியோர் கலந்துகொண்டு தமது கருத்துக்களைக் கூறியிருந்தனர்.

லண்டன் தமிழ் பெண்கள் அமைப்பின் தலைவியாக செல்வி உதயகுமாரி பரமலிங்கம் (நிலா), உப தலைவியாக  திருமதி மாதவி சிவலீலன், செயலாளராக திருமதி மீனாள் நித்தியானந்தன், உபசெயலாளராக திருமதி தமயந்தி சண்முகநாதன், பொருளாளராக திருமதி நவஜோதி ஜோகரட்னம், துணைப்பொருளாளராக  திருமதி ஜொஸ்லின் புஷ்பராஜா அவர்களும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

NavajothyBaylon@hotmail.co.uk