நிகழ்வுகள்: கனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது வழங்கும் விழா

நிகழ்வுகள்: கனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது வழங்கும் விழாகனடாவில் இருந்து வெளிவரும் தமிழ் மிரர் ஆங்கிலப் பத்திரிகையின் வருடாந்த விருது வழங்கும் விழாவும் இரவு விருந்துபசாரமும் சென்ற வெள்ளிக்கிழமை 31-10-2014 அன்று ஸ்காபரோவில் உள்ள கொன்வின்ஷன் சென்ரரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பலவேறு துறைகளைச் சார்ந்த திறமை மிக்கவர்கள் சிலர் தெரிந்தெடுக்கப்பட்டு இந்த விருது வழங்கும் விழாவில் அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 2014 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான விருதை, ஈழத்தமிழ் எழுத்தாளரான குரு அரவிந்தன் அவர்கள் பெற்றுக் கொண்டார். 2011 ஆம் ஆண்டு தமிழகத்திலிருந்து வெளிவரும் மூத்த தமிழ் இதழான கலைமகள் நடத்திய ராமரத்தினம் நினைவு குறநாவல் போட்டியில் ‘தாயுமானவர்’ என்று குறநாவலுக்கான பரிசைப் பெற்ற குரு அரவிந்தன் 2012 ஆம் ஆண்டு தமிழர் தகவலின் இலக்கியத்திற்கான விருதையும் பெற்றவர் மட்டுமல்ல, இலங்கை இந்தியா கனடா போன்ற நாடுகளில் நடந்த போட்டிகளில் சிறுகதை, புதினம் போன்றவற்றுக்கும் பல விருதுகளையும், பரிசுகளையும் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்மிரர் ஆங்கிலப் பத்திரிகை நடத்திய விருது வழங்கும் விழா – 2014 இன் போது இலக்கியத்திற்கான விருதைப் பெற்ற குரு அரவிந்தனை முன்னால் மகாஜனக் கல்லூரி அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள், கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவர் திரு. சிவநாயகமூர்த்தி, சொப்கா என்றழைக்கப்படும் பீல் குடிமக்கள் ஒன்றியத்தின் தலைவர் ஏ. ஜேசுதாசன் மற்றும் விழாவிற்கு வருகை தந்திருந்த நண்பர்கள், பிரமுகர்கள், வர்த்தகப் பெருமக்கள் ஆகியோரும் பாராட்டி வாழ்த்தியிருந்தனர். கடந்த இருபத்தைந்து வருடகாலமாகக் கனடாவில் குரு அரவிந்தன் அவர்கள் ஆற்றிவரும் இலக்கிய, தன்னார்வத் தொண்டைப் பாராட்டிக் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் அவரைப் பாராட்டி கௌரவிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.‘

நிகழ்வுகள்: கனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது வழங்கும் விழா

‘அம்பனைக்கு முன்னால் அடிக்கும் வயற்காற்றில், கொப்புலுப்பிப் பூச்சொரியும் குடைவாகை  குரு அரவிந்தனின் வெற்றிகளுக்கும் நாலு மலர் சூட்டி வரவேற்று நிற்கிறது. ‘ – இலக்கிய கலாவித்தகர் திருமதி கோகிலா மகேந்திரனின் வாழ்த்துச் செய்தியிலிருந்து.

அனுப்பியவர்: maliniaravinthan@hotmail.com