நிகழ்வுகள்: கவிஞர் செழியனுக்கு லண்டனில் நினைவஞ்சலி

நிகழ்வுகள்: கவிஞர் செழியனுக்கு லண்டனில் நினைவஞ்சலி‘ஈழத்தின் தேசிய விடுதலைப்போராட்டத்தில் மார்க்சிய அணுகுமுறையோடு இடதுசாரிச் சிந்தனையுடன் செயற்பட்ட கவிஞர் செழியனின் மறைவு ஈழத்து அரசியல் போராட்டத்தின் ஒரு துயர சம்பவமாகும்’ என்று லண்டனில் இடம்பெற்ற கவிஞர் செழியனின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் தலைமை வகித்துப் பேசுகையில் ‘பனி மலர்’ இதழ் ஆசிரியர் நா. சபேசன் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்: ‘ ‘மாணவர் குரல்’ என்ற சஞ்சிகையைச் செழியன் என்று அறியப்படும் சிவகுமாரன் அவர்கள் நடத்திய காலத்தில் இருந்தே அவரை நான் அறிவேன். மாவட்ட ரீதியில் பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தலை இலங்கை அரசு கொண்டுவந்தபோது அந்நடவடிக்கைக்கு எதிராக யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் ஒருங்கிணைத்துப் போராடும் முயற்சியில் செழியன் வகித்த பாத்திரம் முக்கியமானதாகும். மாணவர் எழுச்சிக்கு வழிவகுத்தவர் என்று மட்டுமல்லாது ஒடுக்குமுறைக்குள்ளான கூலி விவசாயிகளின் அமைப்பிலும் செழியன் தீவிர பங்காற்றி வந்திருக்கின்றார். தனது சொந்தக் கிராமமான உரும்பிராயில் சாதித் தடிப்பு மிக்க நிலவுடைமையாளர்கள் மத்தியில் எளிய, நிலமற்ற விவசாயிகளுக்காக அவர் போராடியபோது அதிகார மையத்தின் பெரும் எதிர்ப்பை அவர் எதிர்கொள்ளவேண்டி இருந்தது. எனினும் தனது சொந்தக் கிராமத்திலேயே புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்த முனைந்த புரட்சிகர செயற்பாட்டாளராகவே செழியன் திகழ்ந்தார்’ என்று நா. சபேசன் மேலும் தெரிவித்தார்.

விமர்சகர் மு. நித்தியானந்தன் உரையாற்றும்போது: ‘80களில் சமூக உணர்வு கொண்டு பல்வேறு இயக்கங்களிலும் தீவிர அர்ப்பணிப்போடும், பொதுநலச் சிந்தனையோடும் செயற்பட்ட உயிர்த்துடிப்பு மிக்க ஒரு சந்ததியின் குறியீடாகத் திகழ்ந்த கவிஞர் செழியனின் மறைவு வருந்தத்தக்கதாகும்.          

‘மரணத்தைக் கண்டு நாம் அஞ்சவில்லையென்றும், புதிய எஜமானர்களின் அடிமைகளாக மரணிப்பதையே வெறுக்கிறோம்’ என்றும் பிரகடனம் செய்த செழியன் இறுதிவரை அடக்குமுறைக்கு எதிரான ஒரு கிளர்ச்சிக்காரனாகவே திகழ்ந்தார். அவர் கவிதைகள் வாழ்வின் குரூர யதார்த்தத்திலிருந்து  பிறந்தவையாகும். அதனால்த்தான் எஞ்சியது கரித்துண்டுகளேயாயினும் இறுதிவரை எழுதியே தீருவோம்’ என்று அவரால் முழக்கமிட முடிந்தது. தனது கவிதைகளை அழகழகாய் அச்சிட்டுப் பார்க்க வேண்டுமென்றோ, உலகமொழிகளிலெல்லாம் தனது கவிதைகள் போய்ச் சேரவேண்டுமென்றோ ஒரு கணமு

அவர் தொடர்ந்து பேசுகையில்: தங்களின் இலட்சியக் கனவுகள் சிதைவுற்ற நிலையில் புலம்பெயர்ந்து வாழ்ந்த வாழ்க்கையில் லௌகீக உயர்வுக்காக அவரால் செயற்படமுடியாது போயிற்று. தங்கள் லட்சியங்களைக் கைவிட்டு வேற்று மண்ணில் வாழும் நிர்ப்பந்தமும் அவரை விரக்திக்குள் தள்ளியது துரதிஷ்டவசமாகும். பெரும் லட்சியங்களோடு அரசியல் தளத்தில் குதித்த அந்தத் தலைமுறையினர், அந்த லட்சியங்கள் கைகூடாத நிலையில் புகலிட மண்ணில் வெறுமையிலும், விரக்தியிலும், நிராசையிலும் மூழ்கிப்போன ஒரு நிலைமையின் ஒரு சாட்சியமாகவும் செழியன் திகழ்கின்றார்’ என்றும் மு.நித்தியானந்தன் தெரிவித்தார்.

நிகழ்வுகள்: கவிஞர் செழியனுக்கு லண்டனில் நினைவஞ்சலிதோழர் முத்து அவர்கள் உரையாற்றும்போது : ‘பள்ளிக் காலத்திலேயே தீவிர அரசியல் சிந்தனையுடன் செயற்பட்ட செழியன் உயர்ந்த லட்சியங்களையே எப்போதும் கொண்டிருந்தார் என்றும், சாதாரண துண்டுப் பிரசுரத்தை அச்சிலிடுவதற்குக்கூட போதிய பணமில்லாத நிலையிலும் அந்த அச்சுக்கூடத்தை சொந்தமாக வாங்கினால் எவ்வளவு செலவாகும் என்று யோசிக்கும் தொலைநோக்கு அவரிடம் எப்போதும் குடிகொண்டிருந்தது. தனி ஆளுமையோடு திகழ்ந்த செழியன் பின்னாளில் ஆளுமைச் சிதைவுகளுக்கு உட்பட்ட தருணங்களையும் நாம் நினைவிருத்திக்கொள்ள வேண்டும். செழியனின் மறைவு ஒரு உயர்ந்த அரசியல் செயற்பாட்டாளரின் பணியினைக் கௌரவிப்பதோடும், மனநிறைவோடு கொண்டாடவேண்டிய ஒரு நிகழ்வாகவே தான் கருதுவதாகக்’ குறிப்பிட்டார்.

தோழர் தம்பா தனது அஞ்சலி உரையில் ‘செழியனின் மறைவுக்காக புகலிடம் எங்கும், ஈழத்திலும் நடத்தப்படும் நினைவஞ்சலிக் கூட்டங்கள் முற்போக்கு சிந்தனையாளர்கள் மக்கள் மனதிலிருந்து எளிதில் நீங்கிவிடுவதற்கில்லை என்றும் தங்களின் கருத்துக்களை மதித்து நடப்பவர்கள் எப்போதும் தம்மைச் சூழ்ந்த வண்ணம் உள்ளனர் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டார்.

ஓவியர் கே.கிருஷ்ணராஜா அவர்கள் ஒருங்கிணைந்து நடத்திய இந்த அஞ்சலிக் கூட்டத்தில் செழியன் எழுதிய கவிதைகள் ஒலிக்கப்பட்டும், அவர் எழுதிய கவிதைகளும், அவர் எழுதிய நூலின் சில பகுதிகளும் அஞ்சலிக் கூட்டத்தில் வாசித்துக் காட்டப்பட்டன. உணர்வு பூர்வமாக நடைபெற்ற இந்தக் கூட்டம் ஒரு கவிஞனுக்கும் அரசியல் செயற்பாட்டாளனுக்கும் ஆத்மார்த்த ரீதியாக செய்யப்பட்ட சிறந்த அஞ்சலி நிகழ்ச்சியாக அமைந்தது.

நிகழ்வுகள்: கவிஞர் செழியனுக்கு லண்டனில் நினைவஞ்சலி

NavajothyBaylon@hotmail.co.uk