நிகழ்வுகள்: லண்டனில் பிரீத்தி பவித்திரா மகேந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம்

நிகழ்வுகள்: லண்டனில் பிரீத்தி பவித்திரா மகேந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம்‘நடனத்திற்கு மிகவும் பொருத்தமான பாடல்களைத் தேர்ந்தெடுத்து வார்த்தைகளை உணர்ந்து அந்த மனநிலைகளை அபிநயத்தால் வெளிக்காட்டுவது குருவுக்கும் சீடருக்குமான மரபுசார் நுட்பமாகும். இத்தகைய சாஸ்திரீய முறைகளை மிக அழகாகவே குருவிடமிருந்து பயின்று புஷ்பாஞ்சலி,  அலாரிப்பு, ஜதீஸ்வரம், சப்தம், வர்ணம், கீர்த்தனம், பதம், அஷ்டபதி, தில்லானா போன்ற அத்தனை உருப்படிகளிலும் செல்வி பிரீத்தி பவித்திரா மகேந்திரன் வித்தியாசமான தனது கலை நுட்பங்களை வெளிக்காட்டியிருந்தார்’ என்று அண்மையில் லண்டன் ‘பெக் தியட்டரில இடம்பெற்ற பரதநாட்டிய அரங்கேற்றத்தின்போது பிரதம விருந்தினாராக வருகை தந்திருந்த ஸ்ரீமதி கீதா உபத்தியா அவர்கள் தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் பேசுகையில் ‘நளினமும் உடல்வாகும் நிரம்பப்பெற்ற நாட்டியக் கலாஜோதி பிரீத்தி மகேந்திரனின் நடன வெளிப்பாடுகள், ஸ்ரீ மாணிக்கம் யோகேஸ்வரனின் ராகத்துடனும் சாகித்தியத்துடனும் கச்சிதமாகவே பொருந்தி, பக்கவாத்தியக் கலைஞர்களான ஸ்ரீ பிரதாப் ராமச்சந்திரனின் மிருதங்கத்தோடும், ஸ்ரீ ஞானசுந்தரத்தின் வயலின் இசையோடும், ஸ்ரீ பிச்சையப்பா ஞானவரதனின் புல்லாங்குழல் இசையுடனும் இணைந்து பார்வையாளர்களை கட்டிப்போட்டது என்றால் மிகையாகாது எனத் தெரிவித்தார். சர்வதேச ரீதியாக அறியப்பட்ட புகழ்பெற்ற நடன ஆசிரியையான ஸ்ரீமதி உஷா ராகவனை குருவாகப் பெற்ற செல்வி பிரீதி மகேந்திரனின் நடனம் வர்ணிக்கத் தக்க வசீகரமான முறையில் அவரது முதலில் அரங்கேறும்; அரங்கேற்றம் போன்றல்லாது, நாட்டியத்தில் நீண்ட அனுபவம் கொண்ட நர்த்தகியாகத் திகழ்ந்தார் என்றும் பாராட்டினார். பிரீதி மகேந்திரனின் சில நடனங்களுக்கு அவரின் அண்ணன் டாக்டர் மேவின் மகேந்திரனும் மிருதங்கத்தை வாசித்து மெருகூட்டியமை மிகவும் சிறப்பைக் கொடுத்தது’ என்றும் மேலும் வியந்து பேசியிருந்தார்.  திரு. மகேந்திரன் அவர்களின் குடும்ப நண்பராகத் திகழ்பவரும், இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்தவரான முன்னணி மிருதங்கக் கலைஞர் நெய்வேலி பி. வெங்கரேஷ் அவர்கள் தனது கௌரவ விருந்தினர் உரையில்  ‘2014ஆம் ஆண்டு பிரீதியின் கர்நாடக இசையின் சமர்ப்பணம் ‘லண்டன் ஐயப்பன் கோயிலில’ இடம்பெற்றபோது, அதில் தான் கெஞ்சிரா வாசித்ததை நினைவு கூர்ந்ததோடு, வாய்ப்பாடல் மட்டுமன்றி செல்வி பிரீதி புல்லாங்குழல் இசையையும் திறமையாக இசைக்கும் கலை ஞானம் படைத்தவர் என்றும் குறிப்பிட்டார். செல்வி பிரீதி மகேந்திரனின் இன்றைய நடன அரங்கின் ஒவ்வொரு உருப்படிகளின் முடிவிலும் பார்வையாளர்களின் வரவேற்புகள் எழுவதைப் பார்க்கும்போது, அவளின் பெற்றோரான வதனி – மகேந்திரன் இருவரும் வளர்ந்துவரும் இளம் கலைஞர்களுக்கும், வசதி குறைந்தவர்களுக்கும் நிறைந்த மனதுடன் மனமுவந்து வழங்கிய பங்களிப்பின் பிரதிபலிப்பே என எண்ணத்தோன்றுகின்றது எனக் குறிப்பிட்டார். வாழ்க்கையில் புதிய மனிதனாக ஒருவனை உணரவைக்கும் சக்தி கலைக்குத்தான் உண்டென்றும், நவீன வடிவில் புத்துயிர் பெற்று மாற்றம் கண்டு வரும் நவீன உலகில், கலைகளை ஆர்வத்துடன் இளம் தலைமுறையினர் கைத்தொலைபேசிகளினூடாகவும்  வளர்த்துக்கொள்ளலாம்’ என்றும் மேலும் அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

‘அபிநயங்கள் பிரமிக்கத் தக்கனவாகவும், பாவங்கள் அலாதியாகவும் இருந்தது. பிரீதியின் உடை அலங்காரங்கள் நடன பாத்திரங்களுக்கேற்ப அவளுக்கு அழகு சேர்த்தன. நாட்டிய அரங்கேற்றத்தின் மேடை அலங்காரம் கோயில்களின் புனித இடமாக புதுமையாகக் காட்சி தந்தது’ என்று பிரீதியின் சக நாட்டிய மாணவியான செல்வி துவாரஹா அருளம்பலம் பார்வையாளாராக ரசித்து விவரித்திருந்தமை குறிப்பிடவேண்டிய ஒன்றாகும்

நிகழ்வுகள்: லண்டனில் பிரீத்தி பவித்திரா மகேந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம்

‘கலாசாகரா’ நடனப்பள்ளியின் நிர்வாகியான ஸ்ரீமதி உஷா ராகவனின் மாணவிகளாலும், பிரீதி மகேந்திரனின் சக நடனத்தோழிகளாலும், பல்வகைக் கலைஞர்களாலும், கலை ஆர்வலர்களாலும் மண்டபம் நிரப்பியிருந்தமை கண்கொள்ளாக் காட்சியாகின. நல்லதொரு இனிமையான மாலைப் பொழுதாக அமைந்த செல்வி பிரீதி மகேந்திரனின் நாட்டிய அரங்கேற்றம், பார்வையாளர்களை வேறொரு உலகிற்கு இட்டுச் சென்றது என்றால் அது மிகையாகாது.

9.10.2017.
NavajothyBaylon@hotmail.co.uk