நினைவு அஞ்சலி: முதுகிலே குத்தியவரை இனம் காட்டியவர் யுகமாயினி சித்தன்.

அஞ்சலிக்குறிப்பு: யுகமாயினி சித்தன்! கலை, இலக்கியத்தில் பல்துறை ஆற்றல் மிக்க படைப்பாளி யுகமாயினி சித்தன்! தமிழக - இலங்கை - புகலிட எழுத்தாளர்களின் உறவுப்பாலமாக திகழ்ந்தவரும் விடைபெற்றார்!குரு அரவிந்தன்யுகமாயினி இதழ் தொடங்கிய போது, சுமார் பத்து வருடங்களுக்கு முன், சித்தன் பிரசாத் என்பவர் பிரதம ஆசிரியராக இருப்பதாகவும், சிறந்த இலக்கி ஆளுமை கொண்டவர் என்றும் அவரைப்பற்றிய அறிமுகம் எழுத்தாளர் கே.ஜி. மகாதேவாவிடம் இருந்து கிடைத்தது. முடிந்தால் யுகமாயினிக்கு ஆக்கங்கள் ஏதாவது அனுப்பி வைக்கும்படியும் அவர் கேட்டிருந்தார். தமிழ் நாட்டு வர்த்தகப் பத்திரிகைகளுடன் போட்டி போடுவது என்பது எவ்வளவு கடினமானது என்பதை அறிந்து வைத்திருந்தாலும், ‘நல்ல முயற்சி எனது வாழ்த்துக்கள்’ என்று பாராட்டி, வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தேன். ரொறன்ரோ முருகன் புத்தக சாலையில் யுகமாயினி கிடைத்ததால், தரமாக இருந்ததால் அவ்வப்போது அதை வாங்கி வாசிப்பேன்.

ஒருநாள் எழுத்தாளர் கே. ஜி. மகாதேவாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. யுகமாயினி இதழ் குறுநாவல் போட்டி ஒன்ற நடத்த இருப்பதாகவும் அதில் கட்டாயம் கலந்து கொள்ளும் படியும் கேட்டிருந்தார். கனடிய சூழலை கருப்பொருளாகக் கொண்டு எழுதி அனுப்பவா என்று கேட்டபோது, ஈழத்து நிலைமையைச் சிற்றிலக்கியப் பத்திரிகை படிக்கும் தமிழ் நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம். அங்கு எதிர்கொண்ட உங்கள் அனுபவத்தைக் குறுநாவலாக எழுதுங்கள் என்றார். அதேசமயம் எழுத்தாளர் எஸ். பொ. அவர்களிடம் இருந்தும் இது பற்றிக் குறிப்பிட்டு மின்னஞ்சல் ஒன்று எனக்கு வந்திருந்தது. ஏற்கனவே ஆனந்தவிகடன், குமுதம், கல்கி போன்ற வர்த்தக இதழ்களில் ஈழத்து யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்பு பற்றி நான் எழுதிய சிறுகதைகள் பல்லாயிரக் கணக்கான வாசகர்களைச் சென்றடைந்திருந்தாலும், இது குறுநாவல் என்பதால், யுத்தம் ஈழத்தமிழருக்குத் தந்த வலியை, அவர்களின் உணர்வுகளை வெளிப்படையாக எழுதலாம் என்ற நோக்கத்தோடு இந்தப் போட்டியில் பங்கு பற்றினேன்.

யுகமாயினி குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற, ஒரு ஈழத்துத் தாயின் வலிகளை எடுத்துச் சொன்ன ‘அம்மாவின் பிள்ளைகள்’ என்ற குறுநாவல் அப்படித்தான் உருவானது. போட்டியில் எனது குறுநாவலுக்குப் பரிசு கிடைத்திருப்பதாக யுகமாயினி ஆசிரியர் சித்தன் அறிவித்திருந்தார். போட்டியின் போது, பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் நடுவர் குழுவுக்குப் பொறுப்பாக இருந்தாகவும் தெரிவித்திருந்தார். கனடாவுக்கு எழுத்தாளர் பிரபஞ்சன் வந்திருந்த சமயம், அவருடன் உரையாடிய போது அந்தக் குறுநாவல் பற்றி என்னைப் பாராட்டியிருந்தார்.

தொடர்ந்து எனது ஆக்கங்களைச் சித்தன் விருப்போடு யுகமாயினி இதழில் வெளியிட்டு வந்தார். ஒரு நாள் அவருக்குக் கனடாவில் இருந்து ஒருவர் அனுப்பிய மின்னஞ்சலை எனக்குத் திருப்பி அனுப்பி இருந்தார். அதிலே ‘யாரை நீங்கள் கனடிய எழுத்தாளர் என்று நல்ல முறையில் எனக்குச் சிபார்சு செய்தீர்களோ அவரே உங்களைப் பற்றி இப்படியெல்லாம் எழுதியிருக்கிறார். சொன்னால் நம்பமாட்டீர்கள், அதனால்தான் அவர் அனுப்பிய மின்னஞ்சலையே உங்களுக்கு அனுப்புகின்றேன். எதிரியைக்கூட நம்பலாம், இப்படி முதுகிலே குத்துபவர்களை இனம் காண்பதுதான் கடினம், ஈழத்தமிழரின் வலிகளை எடுத்துச் சொன்னால் ஒருசிலர் இயக்கமுத்திரை குத்துகிறார்கள். இப்படியானவர்களோடு கவனமாக இருங்கள்.’ என்று எழுதியிருந்தார். தகுந்த நேரத்தில் அவர் அறிவித்த படியால் இலக்கிய உலகில் ‘யார் நண்பர், யாரிடம் இருந்து விலகி இருப்பது நல்லது’ என்பதை ஓரளவு இனம் காணமுடிந்தது. பொருளாதார நிலை காரணமாக ஏனைய சிற்றிலக்கியப் பத்திரிகைகள் போல யுகமாயினியும் ஒரு கட்டத்தில் வெளிவராமல் நின்றுவிட்டது. காரணங்கள் பல சொல்லப்பட்டாலும் தரமானதொரு சிற்றிதழ் நின்று போனதில் அதன் வாசகர்கள் தான் பாதிக்கப்பட்டார்கள்.

சித்தன் பிரசாத் அவர்களை நான் நேரடியாகச் சந்தித்ததில்லை. வாழ்க்கைப் பயணத்தில் இப்படித்தான் யாராவது இடையில் வருவார்கள், ஏதாவது நல்லதைச் செய்வார்கள், மனதில் நினைவுகளை மட்டும் விதைத்துவிட்டு வந்ததே தெரியாமல் விலகி விடுவார்கள். அப்படித்தான் இலக்கிய நண்பர் யுகமாயினி சித்தன் அவர்களும். அவர் எங்களை விட்டுப் பிரிந்தாலும் அவருடனான இலக்கிய நினைவுகள் என்றென்றும் நீடித்து நிற்கும். அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.

kuruaravinthan@hotmail.com