நிரோமி டி சொய்சாவின் (Niromi De Soyza) ‘தமிழ்ப் பெண்புலி’ (Tamil Tigress) என்னும் ஆங்கில நூலை அண்மையில்,டொராண்டோவிலுள்ள ‘The World’s Biggest Book Store’ இல் வாங்கினேன்; அங்கிருந்த கடைசிப் பிரதிகளான இரண்டிலொன்று. இந்த நூலினை வாங்கும் எண்ணமோ அல்லது வாசிக்கும் எண்ணமோ ஆரம்பத்திலிருக்கவில்லை. இந்நூல் பற்றிய கருத்தினைக் கூறும்படி முகநூல் நண்பரொருவர் கேட்டுக்கொண்டதன் விளைவாக வாங்கும் எண்ணம் உண்டாயிற்று. ஒரு குழந்தைப் போராளியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டதிலிருந்து , விலகியதுவரையிலான தனது அனுபவத்தினை விபரிக்கும் வகையில் ஆசிரியர் எழுதியுள்ளார். இது பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பிய நூல். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் எழுத்தாளர் நட்சத்திரன் செவ்விந்தியன் இந்நூலின் உண்மை விளம்பும் தகுதி பற்றிப் பலமாகத் தனது எதிர்ப்பினைக் கட்டுரைகள் வாயிலாகப் பதிவு செய்துள்ளார். பத்திரிகையாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் நிரோமி டி சொய்சா பற்றி ஆதரவான கருத்தினைக் கூறும் வகையில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
மேற்படி நூலின் அட்டையில் ‘இரத்தம் தோய்ந்த ஸ்ரீலங்காவின் சமூகங்களுக்கிடையிலான யுத்தத்தில் குழந்தைப் போராளியான எனது கதை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நூலின் பின் அட்டையில் Memoir (சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவரது சுயசரிதை இவ்விதமான வாழ்க்கைக் குறிப்பினில் அடங்கியுள்ளதொரு பகுதியாகும். இவ்விதமான வாழ்க்கைக் குறிப்பினை எழுதுமொருவர் தன் சொந்த வாழ்வின் கடந்த காலத்து அனுபவங்களை எண்ணிப் பார்க்கின்றார். அவ்விதம் எண்ணிப்பார்ப்பதன் மூலம் தன் கடந்த கால வாழ்வின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குரியதொரு பகுதியினை நினைவுக்குக் கொண்டு வருகின்றார். அந்த காலகட்டத்து வாழ்வின் அனுபவங்கள் எவ்விதம் அவரது வாழ்வைப் புடம் போட்டன. எவ்விதம் அவரது ஆளுமையில் பாதிப்பினை ஏற்படுத்தின. அவ்விதமான அனுபவங்கள் எவ்விதமான படிப்பினையினை அல்லது புரிதலை அவருக்கு ஏற்படுத்தின. இவை போன்ற விடயங்களையெல்லாம் அந்த வாழ்க்கைக் குறிப்புகளை வாசகர்களுக்காக எழுதி , நூலாக வெளியிடும் காலகட்டத்திலிருந்துகொண்டு வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றார். அவ்விதம் பகிர்ந்துகொள்ளும்போது கவனிக்க வேண்டிய விடயங்களிலொன்று நூலாசிரியர் அவரது எந்த வாழ்க்கைக் கட்டத்தினை எழுதுகின்றாரோ அந்தக் காலகட்டத்தில் அவரை ஆட்கொண்டிருந்த ஆளுமை எழுதும் காலத்தில் இன்னுமொரு தளத்தினை நோக்கிப் பரிணாமமடைந்திருக்கலாம்; அவ்விதம் அடையாமலுமிருக்கலாம். நிரோமி டி சொய்சாவின் ‘தமிழ்ப் பெண் புலி’ நூலைப் பொறுத்தவரையில் குழந்தைத் தமிழ்ப் பெண்புலியாகவிருந்த நிரோமி டி சொய்சா முற்றாக மாறிவிட்டார். அவரது அவர் சார்ந்திருந்த இயக்கம் பற்றிய, நிலவிய அரசியல் பற்றிய நிலைப்பாடுகளெல்லாம் மாறிவிட்டன. இவ்விதமானதொரு சூழலில் இந்த நூலில் குழந்தைப் போராளியாகத் தான் சேர்ந்தது பற்றிய உளப்பதிவுகளை விபரிக்கும்போது ஆசிரியர் தனது இன்றைய கருத்துகளை அன்றைய இளம்போராளியின் கருத்துகளாகக் குறிப்பிடுகின்றாரோ என்றொரு எண்ணம் ஏற்பதுவதைச் சில நேரங்களில் தவிர்க்க முடியவில்லை. ஏனென்றால் விடுதலைப் புலிகளின் பல செயல்களைக் கண்டித்துக்கொண்டே அவ்வியக்கத்தில் இணைந்து கொள்ளப் பிடிவாதமாக இருந்திருக்கிறார் என்பதாக அவர் விபரிக்கின்றார். அதற்கொரு காரணமும் கூறுகின்றார். அது தமிழர்களின் விடுதலையைப் பெறுவதற்குரிய உறுதியான அமைப்பாக புலிகள் இயக்கம் விளங்கியதாக இருந்ததால் தான் சேர்ந்ததாக அடிக்கடி குறிப்பிடுகின்றார். ஆனால அவ்விதம் இயக்கத்தின் பல நடவடிக்கைகளை விமர்சிக்கும் மனநிலையில் அன்று அவரிருந்திருந்தால் எதற்காக அவர் அவற்றையெல்லாம் மீறி இயக்கத்தில் ஆயுதப் போராளியாக மாறுவதற்கு ஆசைப்பட்டார்? அன்றைய அவரது பதின்ம வயதில் அவருக்கிருந்த ஆளுமையின் விளைவாக சாகசங்கள் புரிவதிலிருந்த நாட்டம் எல்லாவற்றையும் மீறி முன்னிலையிலிருந்து அவரை ஆட்படுத்தியதா?
மேலும், மேற்படி நூலானது மிகவும் சுவையாக, வாசகர்களைக் கவரும் வகையில் பின்னப்பட்டுள்ளது. இயற்கை பற்றிய அழகிய , எளிய வர்ணனைகள் ஆங்காங்கே நிறைந்துள்ள மேற்படி நூலில், பல அத்தியாயங்கள் வாசகர்களைக் கவரும் வகையில், அடுத்தது என்ன என்னும் ஆவலைத் தூண்டும் வகையில் எழுதப்பட்டுள்ளன. உதாரணமாக அத்தியாயமொன்றின் முடிவில் கூறப்படும் அல்லது எழுப்பப்படும் கேள்வியொன்றின் விடையாக, தொடர்ச்சியாக அடுத்த அத்தியாயம் அமைந்திருக்கும். உதாரணமாக அத்தியாயம் 17 இவ்விதமாக முடிந்திருக்கும்:
– ‘நான் அவளைத் தழுவிக்கொண்டேன். என்னவிதமான இடர்பாடுகளுக்கு நீ உள்ளாகியிருக்கிறாய் அகிலா! இன்னும் அசாதாரணமான நாட்கள் உனக்காகக் காத்திருக்கக் கூடும்.’ எனக்கு மட்டும் அவளை நோக்கிக் காத்திருப்பது என்னவென்று தெரிந்திருந்தால் , நான் இன்னும் கவனமாக எனது சொற்களைத் தேர்வு செய்திருப்பேன். – [பக்கம் 273]. இவ்விதமாக அத்தியாயம் 17 முடிந்திருந்தால் அடுத்த 18வது அத்தியாயத்தின் தலைப்பு ‘அசாதாரணமான நாட்கள் (Extraordinary Days) என்று அமைந்திருக்கும். இது போனறு பல அத்தியாயங்கள் அழகாகச் செதுக்கப்பட்டுக், கோர்க்கப்பட்டுள்ளன. இவ்விதமான எழுத்துப்பாணி வாசிக்கும் வாசகர்களின் ஆவலைத் தூண்டும் தன்மை மிக்கது. இவ்விதமாக ‘வாழ்க்கைக் குறிப்பு’ எழுதுமொருவர் வாசகர்கள் தன் எழுத்தினை ஆர்வத்துடன் வாசிக்கத் தூண்ட வேண்டும் என்னும் இலக்கினை மையமாக வைத்து எழுதுகின்றார். இவ்விதமானதொரு அணுகுமுறையில் அதனை எழுதுபவர் நூல் ‘உண்மை’யுடன் இணக்கம் காணும் சந்தர்ப்பமேற்படுவதற்கும் சாத்தியக் கூறுகளுமுள்ளன. வாசகர்களைத் திருப்திப்படுத்துவது முன்னுக்கு வரும்போது சில வேளைகளில் உண்மை குழிதோண்டிப் புதைக்கப்படுவதுமுண்டு ஆதாயமொன்றுக்காக என்பதை நாம் அடிக்கடி எமது வாழ்வில் காண்கின்றோமல்லவா!
விடுதலைப் புலிகளால் சக இயக்கத்தவர்கள் படுகொலை செய்யப்பட்ட விபரங்கள். கைதியாக இருந்த படையினர் கொல்லப்பட்ட விபரங்கள், ஒளிந்திருந்த சக இயக்கப் போராளியொருவரை நிரோமியும், அவரது தோழியும் இயக்கத்துக்குக் காட்டிக் கொடுத்த விபரம், காதலித்த குற்றத்திற்காக மாத்தையாவினால் படுகொலை செய்யப்பட்ட போராளிபற்றிய விபரம், உளவாளியென்ற சந்தேகத்தின்பேரில் சக போராளியொருவர் கழுத்துவரை புதைக்கப்பட்டு, சித்திரவதைக்குள்ளாகி, மண்டை அடித்துப் பிளக்கப்பட்டுக் கொல்லப்படும் நிகழ்வு, இந்தியப் படையினருடனான மோதல்கள்… இவ்விதமான விபரங்கள் பல நிறைந்துள்ள இந்நூலில் எனக்குப் பிரமிப்பைத் தந்தவை விடுதலைப் புலிகளின் தலைவர் இவர்கள் பயிற்சியெடுக்கும் தென்மராட்சி முகாமுக்கு அடிக்கடி வருகை தருவதும், நூலாசிரியருடன் மிகவும் கவனமெடுத்துப் பழகுவதும் போன்ற சம்பவங்கள்தாம். விடுதலைப் புலிகளின் தலைவர் மிகுந்த பாதுகாப்புடன் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றுவதில் வல்லவர். அவர் இவ்விதம் அடிக்கடி மேற்படி முகாமுக்கு வந்து போவாரா என்பது வியப்பு மிக்க கேள்வி. மேலும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களெல்லாரும் அடிக்கடி தென்மராச்சியில் அமைந்திருந்த அந்தப் பெண் போராளிகளின் முகாமுக்கு வந்து போகின்றார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் அடிக்கடி வந்து போவதுடன் நீண்ட உரைகளையும் ஒழுக்கம், தமிழ் ஈழம் பற்றியெல்லாம் ஆற்றுகின்றார். நாட்டை விட்டு ஓடிப்போன தமிழர்களை அவர் விமர்சிக்கின்றார். தமிழ் ஈழம் கிடைத்து அவர்கள் மீண்டும் வரும்போது அவர்களை எல்லைப் புறத்தில் குடியமர்த்தப் போவதாகவும், அவ்விதம் குடியமர்த்தினால் அயலவர்களான சிங்களவர்களின் கைகளில் அவர்கள் வருந்துவர் என்றும் கூறுகின்றார். அப்பொழுது நிரோமியும் சக பெண் போராளிகளும் சிரித்துகொள்கின்றார்கள். அப்பொழுது இந்த ‘வெளிநாட்டுத் துரோகிகளின்’ பணத்தில்தான் போராட்டமும், தாம் அணிந்திருக்கும் ஆடையும், தாங்கியிருக்கும் ஆயுதமும் வாங்கப்படுகின்றனவென்பதை உணர்ந்திருக்கவில்லையென்றும் குறிப்பிடுகின்றார்.[பக்கம் 121]. தனது மெய்ப்பாதுகாவலர்களுடன் வரும் அவர், புலிகளின் தலைவர், அங்குள்ள பண்ணை வீட்டில் தங்கிச் செல்கின்றார். சில தடவைகள் அவர் மனைவி, குழந்தைகளுடனும் வந்து செல்கின்றார். [பக்கம் 120]. இன்னுமொரு சமயம் பிரபாகரன் அம்முகாமுக்கு வந்திருக்கும்போது நிரோமிக்கு நன்கு தெரிந்த ரசாக் என்னும் இயக்கப் போராளியைப் பதவி இறக்கிய விடயத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். அவ்விதம் குறிப்பிடும்போது அவர் நிரோமியைப் பார்த்து ‘இது உனக்கு வியப்பினைத் தருமென்பது எனக்குத் தெரியும்’ என்கின்றார்.[பக்கம் 123].இவ்விதமாகப் பல சம்பவங்களை விபரிக்கிறது மேற்படி ‘தமிழ்ப் பெண் புலி’ என்னும் நூல். அத்துடன் மாத்தையா பற்றிய பல சம்பவஙகளையும் விபரிக்கிறது. அவரை எல்லாரும் ‘முதலை’ என்று பட்டப்பெயர் வைத்துக் கூப்பிடுவதையும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். அந்த ‘முதலை’ பெண் போராளியொருவரைக் காதலித்த குற்றத்திற்காக ஆண் போராளியொருவரை மேற்படி பெண் போராளிகளின் முகாமில் அமைந்திருந்த தான் தங்கியிருந்த குடிலில் வைத்துச் சுட்டுக் கொல்வதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவ்விதம் சுட்டுக்கொல்லப்பட்ட போராளியின் இரத்தம் வடியும் உடலை ஏனைய போராளிகள் கைகளைப் பிடித்து, இழுத்து வந்து வாகனத்தில் எறிந்து, ஏற்றிக் கொண்டு செல்கின்றார்கள். மாத்தையாவும் நிரோமியுடன் மிகவும் அன்புடன் பழகுகின்றார். நிரோமிக்கு வயிற்றுப் புண் இருப்பது பற்றி அக்கறையுடன் விசாரிக்கின்றார். பின்னர் அதற்குரிய உணவுப் பொருட்களை அனுப்பி வைக்கின்றார். தன்னுடன் இவ்விதம் கரிசனையெடுக்கும் மாத்தையா இன்னுமொரு போராளியைக் கொலை செய்ததைத் தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லையென்று நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். அத்துடன் மாத்தையா அனுப்பிய உணவுப் பொருட்களையும் அந்தக் காரணத்திற்காகப் பாவிக்க விரும்பாமலிருக்கிறார்.
இவ்விதமான பல தகவல்களை உள்ளடக்கியுள்ள மேற்படி ‘தமிழ்ப் பெண் புலி’ என்னும் நூலில் தான் விரும்பிச் சேர்ந்த இயக்கத்தை மிகவும் கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளார் நிரோமி டி சொய்சா. இவை உண்மையா அல்லது வாசகர்களைத் திருப்திப்படுத்துவதற்குரிய புனையப்பட்ட உண்மைகளா என்பதை அறிந்துகொள்வது மிகவும் சிரமமானது. நூலாசிரியர் தனது, இயக்கத்தில் சேருவது பற்றிய உணர்வுகளையும், பயிற்சி பற்றிய விபரங்களையும் பற்றிய பதிவுகளுடன் நிறுத்தியிருந்தால் நூல் கூறும் விடயங்களின் உண்மை நிலை பற்றிய வாதப் பிரதிவாதங்கள் இவ்வளவுக்கு எழுந்திருக்காது. நூலாசிரியர் புலிகளுக்கு எதிரான பல விடயங்களை அதிகமாக முதன்மைப்படுத்துவதற்கு காரணமிருக்கக் கூடும். அவர் எந்த வாசகர்களுக்காக இந்த நூலினை முக்கியமாக எழுதினாரோ அந்த வாசகர்களே அந்தக் காரணமாகவுமிருக்கக் கூடும். காதலித்த குற்றத்திற்காக மாத்தையாவினால் போராளியொருவர் படுகொலை செய்யப்பட்ட காரணமே நூலாசிரியரை இயக்கத்தை விலக வைப்பதன் முக்கிய காரணி, ஆனால் அவர் இயக்கத்தில் சேர முனைந்த காலகட்டத்தில் சக இயக்கத்தவர்கள், குறிப்பாக நூலாசிரியரின் குடும்பத்தவர்களுக்கு நன்கு அறிமுகமான பெஞ்சமின் என்பவர் போன்றவர்களெல்லாரும் படுகொலை செய்யப்பட்டபோது ஏன் அச் சம்வங்களெல்லாம் நூலாசிரியரை இயக்கத்தில் சேருவதைத் தடுக்கவில்லை. அப்பொழுது அச்சம்பவங்களெல்லாவற்றையும் தமிழர் விடுதலைக்காக ஒதுக்கி வைத்த ஆசிரியர் ஏன் இன்னுமொரு சக போராளி காதலித்த குற்றத்திற்காகப் படுகொலை செய்யப்பட்டபோது அவ்விதமே ஒதுக்கிவிட்டு இயக்கத்தில் தொடர்ந்தும் நீடிக்கவில்லை. இந்நூல் விடுதலைப் புலிகள் இயக்கம் இயங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் வெளி வந்திருந்தால், இந்நூலின் உண்மை பற்றிய பல கேள்விகளுக்கு விடைகள் பல கிடைத்திருக்கலாம். ஆனால் அப்பொழுது வெளிவராமல், இப்பொழுது வெளிவருவதால் இந்நூலின் உண்மைத்தன்மைக்குப் பதிலிறுக்க வேண்டியவர்களில் அநேகர் போரில் பலியாகிவிட்டதால், இந்நூல் பற்றிய உண்மைத்தன்மை பற்றிய கேள்விகளும் தொடர்ந்து வரத்தான் செய்யும். ஆனால் , அபுனைவாக வெளிவந்திருக்கும் இந்நூல் உண்மையிலேயே அபுனைவா? அல்லது புனைவா? சுவையாக பின்னப்பட்டுள்ள புனைகதையினைப் போலொரு நடையில் வெளிவந்திருக்கும் இந்த அபுனைவு ஒரு வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறியதோர் ஆயுதமேந்தியக் குழந்தைப் பெண் போராளியின் ‘வாழ்க்கைக் குறிப்புகள்’ என்ற வகையில் முதலாவது என்பதே அது. ஆனால், இது கூறும் உண்மைத்தன்மை பற்றிய வினாக்களுக்கு மட்டும் இன்னும் சரியான விடைகளில்லை. பத்திரிகையாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் நிரோமியின் பெயர் ‘சேனுகா’ என்று குறிப்பிட்டிருப்பார். ஆனால், நிரோமியோ நூலின் இறுதியில் சேனுகாவுக்கும் செலுத்திய அன்புக்காகவும், ஆரோக்கிய தூண்டுதல்களுக்காகவும் நன்றி செலுத்தியிருப்பார். அப்படியானால் நிரோமி டி சொய்சா யார்? சேனுகா யார்?