எங்கோ ஓர் மூலையில் இலை மறை காயாக இருந்து கொண்டு இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்களை இனங்கண்டு அவர்களை உலகறியச் செய்யும் பணியை புரவலர் புத்தகப் பூங்கா மேற்கொண்டு வருகிறது. இவ்வமைப்பு மூலம் இதுவரை 37 நூல்கள் வெளியீடு செய்யப்பட்டிருக்கின்றன. இவ்வமைப்பின் நிறுவனரான புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் இலக்கிய உலகுக்கு தன்னாலான பல பங்களிப்புக்களை செவ்வனே செய்து வருபவர். இதுவரை பல முதற் பிரதிகளைப் பெற்று எழுத்தாளர்களை ஊக்குவித்து வருவதனூடாக ஒரு வரலாற்று சாதனையாளராக திகழ்கின்றார். புரவலர் புத்தகப் பூங்காவின் 37 ஆவது வெளியீடாக வெளிவந்திருக்கிறது இராகலை தயானியின் அக்கினியாய் வெளியே வா கவிதைத் தொகுதி. 57 கவிதைகளை உள்ளடக்கி 72 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இந்தத் தொகுதியில் மலையகம் சார்ந்த, பெண்கள் சார்ந்த கவிதைகளே விரவிக் காணப்படுகின்றன.
நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட புறூக் சைட் தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட தயானி விஜயகுமார் தற்போது அரசியல் விஞ்ஞான முதுமாணிப் பட்டம் கற்றுக் கொண்டிருக்கிறன்றார். ஒரு எழுத்தாளன் தன் படைப்பினூடாக தனது வாழ்க்கை முறை பற்றியும், அதில் அவன் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் முழு சமுதாயத்துக்கும் அறியத் தருகின்றான். அன்றாட வாழ்வில் தன்னைச் சார்ந்தோர் படும் இன்னல்களையும் துன்பங்களை காணச் சகிக்காது அவனது பேனா மைகொண்டு அழுகின்றது. அத்தகையதொரு எழுத்தாளராக இராகலை தயானி காணப்படுகின்றார். நாட்டுக்காக உழைத்துக் களைத்து, கறுத்துச் சிறுத்துப் போன தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட வாழ்வியல் குறித்து இவர் எழுதியிருக்கும் கவிதைகள் மனதைப் பிசைகின்றன. அபலையாய் விடப்பட்ட பெண்கள் பற்றியும் இவரது கவிதைகள் நிறையவே பேசியிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இவற்றுக்குக் காரணமானவர்கள் மீது கோபாவேசம் கொள்வதையும் கவிதையின் வரிகளில் காணமுடிகிறது.
அக்கினியாய் வெளியே வா (பக்கம் 11) என்ற கவிதை ஒரு தாயின் மனக்குமுறலாகக் கொந்தளிக்கின்றது. வயிற்றில் சுமக்கும் குழந்தைக்கு தாய் கூறும் அறிவுரையாக அல்லது வலிகளின் வெளிப்பாடாக இக்கவிதை அமைந்திருக்கின்றது. அடிமையாக வாழ்ந்தே பழக்கப்பட்டுப் போன மலையக மக்கள் இனிமேலாவது தமது எதிர்கால சந்ததிகளை சுதந்திரப் பிரஜைகளாக வளர்க்க வேண்டும் என்பதை தயானி இக்கவிதையினூடே உணர்த்தியிருப்பது சிறப்புக்குரியது. கொழுந்து கொய்து
கொழுந்து கொய்து
வெடித்துப் போன – என்
விரல் இடுக்கைப் பாராதே..
கங்காணி திட்டுவதைப் பாராதே
கணக்குப்பிள்ளை
கடிவதைப் பாராதே..
தேயிலைக்குள் மாண்ட
தலைமுறை என்னோடு முடங்கட்டும்
கலாம் சொன்னதைப் போல
காத்திருக்கிறது உலகம்
அக்கினியாய் வெளியே வா
என் அக்கினிக் குஞ்சேநான் அநாதையா? (பக்கம் 17) என்ற கவிதை வித்தியாசமான முறையில் அமைந்திருக்கின்றது. எதுவும் இல்லாதவன் அநாதை என்று சொல்லப்படுவதை எதிர்த்து, எனக்கு நான் இருக்கும் வரை அநாதை இல்லை என்ற மனப்பான்மையை தோற்றுவிக்கின்றது இந்தக் கவிதை.
குப்பைக்குழி உண்ட
எச்ச உணவை
என் குடல் நிரப்பும்
கொக்கு குடித்து வளரும்
குளத்து நீர்
என் தாகம் தீர்க்கும்
அழுக்குத் துணிகள்
என் அந்தரங்கம் மறைக்கும்
என் இலக்குகளை
நித்திரைக்குள் தள்ளிவிடாதீர்கள்
ஊனப் பார்வை பார்த்து
என் உள்ளததை
ஊனமாக்கி விடாதீர்கள்
கானல் நீர் (பக்கம் 25) என்ற சிறிய கவிதை அழகிய உவமானங்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. பருவ கால மழையை காதலுக்கு உவமித்திருக்கும் விதம் ரசிக்கத்தக்கதாக இருக்கின்றது.
தொடர் மழையாய் வந்த
உன் காதல் மழை
பருவ மழையாகி பின்
பார்த்துவிட்டுப் போகும் மழையானது
இப்போது பாலைவன
மழையாகக்கூட இல்லையே
பாலைவனக் கானல் நீரைப் போல
உன் காதலும் என்னை ஏமாற்றுகிறது
லயம் பார்க்க வாருங்கள் (பக்கம் 55) கவிதையில் மலையகத் தோட்டத் தொழிலாளிகளின் ஒட்டு மொத்த வாழ்க்கை முறையும் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. ஒரே அறைக்குள் ஏழெட்டு ஜீவன்கள், ஆடு, மாடு, கோழிகளோடு வாழ்ந்திடும் வாழ்க்கை, அடிப்படை சுகாதார வசதிகளற்ற நிலைமை போன்றவை கவிதையை வாசிக்கையில் மனக் கண்ணில் நிழலாடி மனதை கனக்கச் செய்கிறது.
வீட்டெரு கூட்டெரு மாட்டெரு மனித எரு
எல்லாவற்றையும் ஒன்றாய்ப் பார்க்க வேண்டுமா?
குருவிக் கூடு கோழிக்கூடு ஆட்டுப்பட்டி பாட்டிப்பட்டி
ஆதங்க அழுகைப்பட்டி பார்க்க வேண்டுமா?
ஐந்து பேர் ஆறு பேர் ஏழு பேர் எட்டு பேர்
ஒன்றாய் ஓரிரு அறையில்
மூன்று சகாப்தமாய்
முடங்கி வாழ்வதைப் பார்க்க வேண்டுமா
லயித்து வாழ்ந்தவர்களே
முகம் சுளித்துப் பார்க்க லயம் பார்க்க வாருங்கள்
தன் கவிதைகளுக்கூடாக சமூக எழுச்சியை ஏற்படுத்த நினைக்கும் நூலாசிரியர் தயானியிக்கு என்; வாழ்த்துக்கள்!!!
நூல் – அக்கினியாய் வெளியே வா
நூலின் வகை – கவிதை
நூலாசிரியர் – இராகலை தயானி
வெளியீடு – புரவலர் புத்தகப் பூங்கா
விலை – 150 ரூபாய்
poetrimza@gmail.com