இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள் பற்றிய தகவல்களை ஒருங்கிணைத்து முனைவர் துரை.மணிகண்டன் இந்நூலை தொகுத்திருக்கிறார். தரவுத்தளங்களைப் பலரும் புரியும் வண்ணம், தரவுத்தளங்கள் என்றால் என்ன எனப் பட்டியலிட்டு இந்நூல் ஆக்கி வெளியிடுவதற்கு எனது பாரட்டுக்கள். தமிழில் தரவுத்தளங்கள் பற்றிய விளக்கங்கள் தந்திருப்பின் இடைக்கிடை தலைப்புகளுக்கு ஆங்கில தலைப்பும் கொடுத்திருப்பது விளங்கிக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கிறது. தமிழ் மொழி மிகத் தொன்மை வாய்ந்தது என்பது மிகத் தெளிவாக ஆதாரங்களுடன் இந்நூலில் கொடுத்துள்ளார். மேலும் அதற்கான இணைய தளங்களையும் அவ்வப்போது வரிசைப்படுத்தி வெளியிட்டிருப்பது பாராட்டுதற்குரியது. தமிழ்மொழி பிறமொழித் தாக்கமின்றி ஆரம்ப காலத்தில் இருந்தே இருந்ததையும், பிறமொழிக் கலப்பின்றி புதுச் சொல்லை உருவாக்க முடியும் என்பதையும் தெளிவாக நூலாசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார்.
பலரிடம் புழக்கத்தில் இருக்கும் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய முழு விபரத்தையும் தமிழ் மரபு அறக்கட்டளையையும் அதன் தமிழ்ப்பணியையும் தெளிவாக விளக்கியுள்ளார். இணையத்தில் மின்மொழிபெயர்ப்பு மற்றும் மின்குழுமம் ஆகியவற்றின் அவசியத்தையும் இந்நூலில் காணமுடிகிறது.
தமிழ் மின்னியல் நூலகம், மின் அகராதிகள், தமிழ் எழுத்துரு மாற்றிகள், மின் மொழிபெயர்ப்புகள் , தமிழ் மொழி வளர்ச்சிக்கு இன்று தமிழ் வலைப்பூக்கள் செய்துவரும் பங்களிப்பை தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்கள் என்ற தலைப்பிலும் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். இறுதியாக உத்தமம்- உலகத் தமிழர் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் செயல்பாட்டையும் குறிப்பிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
இந்த நூலை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழக மொழியியல் துறையும் உத்தமம் இணைந்து டிசம்பர் 2012 ல் நடத்திய 11 – வது தமிழ் இணையமாநாட்டில் வெளியிடப்பட்டது
மின்னஞ்சல் முகவரி: sivapillai@hotmail.com.