நூல் அறிமுகம்: ஊழிக்காலம் – ஒரு பரிதவிக்கும் நாவல்

– எழுத்தாளர் சயந்தனின் ‘சயந்தன்’ இணையத்தளத்திலிருந்து ‘ஊழிக்காலம் – ஒரு பரிதவிக்கும் நாவல்’ என்னுமிக் கட்டுரை தமிழ்கவியின் ‘ஊழிக்காலம்’ அறிமுகத்துக்காக மீள்பிரசுரமாகின்றது. இணையத்தள முகவரி:  http://sayanthan.com/ – பதிவுகள் –

நூல் அறிமுகம்: ஊழிக்காலம் – ஒரு பரிதவிக்கும் நாவல்தமிழ்கவி அம்மாவிற்கு இப்பொழுது வயது 64. அவர் எனது சிறுவயதுகளில் புலிகளின் குரல் வானொலியூடாக குரல்வழியில் அறிமுகமாயிருந்தார். வானொலி நாடகங்களில் வட்டாரப்பேச்சு வழக்கில், ‘அப்பிடியாமோ’ ‘மெய்யாமோ’ என்ற அவரது வார்த்தைகள் நினைவில் நிற்கின்றன. நாட்டார் பாடல்கள் பற்றிய நிகழ்ச்சிகளும் செய்திருந்தார். தமிழ்கவி அம்மாவை இதுவரை நான் நேரிற் சந்தித்துப் பேசியதில்லை. ஒருமுறை நேரிற் கண்டிருக்கிறேன். 2005இல் கிளிநொச்சி திருநகரில் அமைந்திருந் த.தே.தொ அலுவலகத்திற்கு நானும் சோமிதரனும் ஒருதடவை போயிருந்தோம். தவபாலன், கருணாகரன் ஆகியோரோடுதான் உரையாடல். அப்பொழுது வீதி வாயிலில் மடித்த இரட்டைப்பின்னலோடும், புலிச் சீருடையோடும் மோட்டர்சைக்கிளிலிருந்து (MD 90?) இறங்கி வந்தார் தமிழ்கவி. அங்குநின்ற ஒன்றிரண்டு பெண்போராளிகளை “என்னடி பிள்ளைகள்..” என்று விளித்துச் சிரித்தபடி வந்ததாக நினைவு. (அப்பெண்போராளிகளில் இசைப்பிரியாவும் ஒருவராயிருந்தார் என்பது துயர நினைவு)

புலம்பெயர்ந்த பிறகு, தொலைக்காட்சிகளிலும் தமிழ்கவி அம்மாவைக் கண்டேன். அம்பலம் என்றொரு நிகழ்ச்சி செய்தார். வேலிக்கதியாலில் குழை பறித்துக்கொண்டோ, அல்லது கோடாரியால் விறகு கொத்திக்கொண்டோ.. “பின்ன உவன் மகிந்தவுக்கு உது தெரியாதாமோ” எனத்தொடங்குகிறமாதியான நாட்டு நடப்பு உரையாடல்கள் அந்நிகழ்ச்சியில் இடம்பெற்றன. அதன்பிறகு 2009 மார்ச்சில், இறுதிக்காலத்தில் யுத்தகளத்திலிருந்து வெளியான காணொளி ஒன்றில் அவர் பேசிக்கொண்டிருந்தார். அதன்பிறகு என்ன ஆனார் என்று தெரியவில்லை.

ஊழிக்காலம் நாவலை நான் படித்து முடித்தபோது, மிகச்சரியாகச் சொன்னால், ஓரிடத்தில் தரித்து நிற்கமுடியாமல், உயிர்ப் பயத்தோடு ஓடி அலைந்த ஒருவன் கடைசியாக சகல நம்பிக்கைகளையும் தின்னக்கொடுத்துவிட்டு நடப்பது நடக்கட்டும் என்ற மாதிரயான மனநிலையில் ஒரு மரநிழலில் குந்தியிருந்த்தைப்போல உணர்ந்தேன். அத்தனை அலைக்கழிவு நாவலில்..

ஊழிக்காலம் 2008இற்கும் 2009இற்கும் இடையிலான குறுகிய காலமொன்றில் நடந்த நீண்டபயணத்தின் கதை. அறுபது வயதில் உள்ள ஒரு தாய்/பேத்தியார் தனது பிள்ளைகளோடும் பேரப்பிள்ளைகளோடும், தெருவில் பொங்கி வழிந்து துரத்திய தீக்குழம்பின் முன்னால், அத் தீ நாக்குகளில் அகப்பட்டு  விடக்கூடாது என்ற பரிதவிப்போடு ஓடுகிற கதை. அப்படி ஓடுகிறவர், ஈழப்போரில் தன்னையும் ஒருவிதத்தில் இணைத்துக்கொண்டிருந்தார் என்பது மேலுமொரு அழுத்தமான பின்னணியாயிருந்த்து. நாவல் முழுவதிலும், பார்வதி என்ற மூதாட்டிக்குள் இருக்கின்ற ஒரு தாயின் மனதும், ஒரு போராளியின் மனதும், முரண்பட்டும், உடன்பட்டும் சமயங்களில் முரண்டுபிடித்தும் செல்கின்றன. வெகு நிச்சயமாக இது தமிழ்கவி அம்மாவின் கதை என்பதை படிக்கிற எவராலும் புரிந்துகொள்ள முடியும். அவரது முதல் நாவலான வானம் வெளிச்சிடும் எப்படியோ அப்படியே…

2009 இறுதி யுத்தநாட்கள் பற்றி அழுத்தமான கவிதைகளும் சிறுகதைகளும் வெளிவந்திருக்கின்றன. என்ன நடந்தது என்பதைச் சம்பவங்களாகப்பதிந்த கதைகளைத் தாண்டி அக்காலம் முழுதிலுமான மக்களுடைய உணர்வுகள், மனப் பிறழ்வுகள், சிறுவர் குழந்தைகளது வாழ்வு, சாவு நிச்சயமென்றான பிறகும் அதுவரைக்கு வாழவேண்டிய நிர்ப்பந்தம், பசி எனப் பலவற்றை அவை பேசின. யோ.கர்ணனின் அரிசி – என்ற சிறுகதை அந்த நிர்ப்பந்தத்தினையும் அத்துயரை அனுமதிக்கும் மனதையும் அழுத்தமாகப்பதிவு செய்த ஒரு கதை.

ஊழிக்காலம் நாவல் அப்படியான உணர்வுகளுக்கூடாகவே பயணிக்கிறது. மரணத்தை மிகச்சாதாரணமாக எதிர்கொள்ளப்பழகிய மனங்களை அது சொல்கிறது.

“இரணைப்பாலையால வெளிக்கிட்டாச்சா?” என்றாள் ராணி.

“ம்.. பிள்ளையள் சாமான்கள் எல்லாம் கொணந்திட்டம், நான் இப்ப கடைசியாக் கிடந்ததுகள கொண்டுபோறன்.”

“அங்கால நீங்க இருந்த பக்கம் ஷெல் வருகுதே..”

“பின்ன.. எங்கட பங்கருக்குள்ள ஒரு பிள்ளைக்கு பீஸ் அடிச்சிட்டுதெல்லே..”

“பிறகு..”

“பிறகென்ன.. அது செத்திட்டுது.”

“ஆரும் காயமே..”

“பங்கர் பிறத்தியில விழுந்தது. இந்தப் பிள்ளை தற்செயலா எட்டிப் பாத்திட்டுது. கழுத்தைச் சீவிக்கொண்டு போட்டுது. நீங்க அக்காவையளக் கண்டனீங்களா..?”

மரண வெளியின் நடுவில் நின்றுகொண்டும், தன் சாதி மதிப்பினைப் பேணுகின்ற, அதனை விட்டுக்கொடாத, ஆதிக்க மனங்கள் நாவலில் பல் இளிக்கின்றன.

“அம்மம்மா…! தண்ணிக்கு போகினமாம் வாறீங்களா எண்டு கேக்கினம்” அபிராமி சத்தமிட்டாள்.

“எங்க?”

“அங்க புதுக் குடியிருப்பு ரோட்டில, செந்தூரன் சிலையடிக்குக் கிட்ட குழாய்க் கிணறு இருக்காம்.”

வளவில் கிணறு ஒன்றும் இருந்தது. கட்டாத கிணறு. குளிக்க மட்டும் பாவிக்கலாம். அயலில் உள்ள வீடுகளில் கட்டுக் கிணறுகள் ஒன்றிரண்டு இருக்கத்தான் செய்தன. ஆனால் அவற்றின் வாயிற் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. பார்வதிக்குக் காரணம் புரிந்திருந்தது. “சாதி என்னவாக இருக்குமோ எண்டதுதான்..” என நினைத்துக்கொண்டாள்.

“கட்டையில போகும்போதும் திருந்த வாய்ப்பில்லை”

வாளியை எடுத்துக் கொண்டு அந்தச் சிறுவர்களுடன் பார்வதியும் புறப்பட்டாள். பின்னே வந்த சிறுவனொருவன் எதிரேயிருந்த வளவைக் காட்டினான். “அங்க நல்ல தண்ணி இருக்கு அள்ள விடமாட்டினம்” என்றான்.

சாவினை எதிர்கொண்டிருந்த காலத்திலும் கூட பதவியின் அதிகாரச் சுகத்தோடு மனிதர்களை எதிர்கொண்ட அலுவலர்களை இனங்காட்டுகிறது.

இருபது முப்பதுபேர் சாமான்களை வாங்கிச் சென்றிருப்பார்கள். பார்வதியின் முறை இன்னமும் வரவில்லை. பெயர் கூப்பிடுமட்டும் சற்றுத் தள்யிருந்தாள். “படீர் படீர்” என்று எறிகணைகள் விழத்தொடங்கின. கண்ணுக்கெட்டிய தூரத்தில் கரும்புகை மேலெழுந்தது.

நிவாரணத்திற்காக காத்திருந்த பெண்கள் “ஐயோ பிள்ளையள் தனிய” என்றவாறே புகை வந்த திசை நோக்கியோடினார்கள். பார்வதி அமைதியாயிருந்தாள். நிவாரணம் வாங்காமல் போறதில்லை.

கொஞ்ச நேரத்தில் மூன்று பேர் செத்திட்டினம். ஆறேழு பேர் காயமாம் என்ற செய்தி வந்தது. பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“ராமச்சந்திரன்! ராமச்சந்திரன்.. ஆரப்பா ராமச்சந்திரன்” மனேச்சர் சத்தமிட்டான். ஆளில்லை. அந்த மட்டையை ஓரமாக வைத்துவிட்டு அடுத்த மட்டையை எடுத்தான். “செல்வராசா! செல்வராசா! மட்டைய வச்சிட்டு வாய் பாக்கிறாங்கள் போல, செல்வராசா, ச்சிக்.. நாயளோட கத்திறதில தொண்டைத்தண்ணி வத்திப் போகுது. அங்கால போடு மற்றாள் வா..” மானேச்சர் கொதிதண்ணிர் குடித்தவன் போல சீறினான். “சாமான் எடுத்தாச்செல்லே. ஏன் இதில நிக்கிறாய்..”

“ஐயா எனக்கு ரெண்டு காட்டையா, பிள்ளையின்ரயும் கிடக்கு”

“பிள்ளைய வரச் சொல்லு போ..”

“ஐயா.. அவள் கால் ஏலாத பிள்ளை. இஞ்ச ஆக்களுக்கும் தெரியும், சொல்லுங்கவனப்பா” என்று அந்தத் தந்தை அருகிலுள்ளவர்களை சாட்சிக்கு அழைத்தான். “ஓமோம் அந்தப் பிள்ளை நடக்க மாட்டுது..” என்றனர்.

“பெரிய கரைச்சலப்பா உங்களோட மற்றவைய மனிசராக மதிக்கிறியளில்ல..”

பார்வதியின் முறை வந்தது. தன் சிட்டையை வாங்கிக் கொண்டு நகர, செல்வராசா, ராமச்சந்திரன் அட்டைகளுக்குரிய பெண்கள் வந்து சேர்ந்திருந்தார்கள்.

“உங்கள கூப்பிட்டவர். நீங்க முன்னுக்குப் போங்க” என்று பார்வதி அவர்களை மனேச்சரிடம் அனுப்பினாள்.

“கூப்பிடேக்க எங்க போனனீங்கள்?”

“ஷெல்லடிச்சது பிள்ளையள் தனிய.. பாக்க..” அவர்களில் ஒருத்தி வார்த்தையை முடிக்குமுன் மனேச்சர் கத்தினான்.

“அப்ப போய் செல்லைப்பாத்திட்டு ஆறுதலா வாங்க..”

“பிள்ளையள் தனிய ஐயா”

“இஞ்ச.. ஒண்டில் பிள்ளையளப் பார்.. இல்லாட்டி இதைப் பார். எங்கள என்ன விசர் எண்டே நினைச்சியள்…” இப்படிப் பேசினானேயொழிய அவர்களுடைய நிவாரணக் காட்டை அவன் எடுக்கவேயில்லை.

இரத்தச் சேற்றில் காதல்களும் மலர்ந்தன. உடல்களும் இயல்பான பசியாறப் பிரயத்தனப்பட்டன.

ஒரு நூறு மீற்றர் நடந்திருப்பாள். தெருவில் சனங்கள் இலையான்கள் போல மொய்த்திருந்தனர். திடீரென்று எறிகணையொன்று கூவி இரைந்து அருகிலெங்கோ வீழ்ந்து வெடித்தது. சத்தம் கடலலைபோல இரைந்தது. ‘குத்துற சத்தமும் கேக்காதாம், வெடிக்கிற சத்தமும் கேக்காதாம்’ எனப் புறுபுறுத்தவாறே தெருவோரத்தில் வெட்டியிருந்த ஒரு அகழியுள் குதித்தாள்.

அகழிக்கு முன்னால் ஒரு மினி பஸ் நின்றது. அதற்குள் ஒரு குடும்பம் வசிக்கின்றது போலும். பொருட்கள் தெரிந்தன. ஒரு இளம்பெண் அவளுக்கு பதினேழு பதினெட்டு வயதிருக்கும். பஸ் வாசலில் உட்கார்ந்து கிடங்கினுள் குதிக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக்கொண்டிருந்தாள். அவளுக்குப் பின்புறமாக ஒரு ஆணின் கை அவள் தோளைத் தொட்டு உள்ளே இழுத்தது. அவள் சிணுங்கினாள். அடுத்த எறிகணை அவர்களைக் கடந்தது.

“செல் வருது..” என்று அவள் சிணுங்கினாள். “இஞ்ச வராது.. நீ வா…” மறுபடியும் அவளை உள்ளே இழுத்தான் அவன். அவளது உடலில் கைகளால் அளையத்தொடங்கினான்.

மரணத்தின் வாசலில் மாலை மாற்றத் துடிக்கும் அந்த ஜோடியைப் பார்வதி வியப்போடு பார்த்தாள். அவளுக்கும் சிரிப்பு வந்தது. “இண்டைக்கோ, நாளைக்கோ ஆர் கண்டது. வாழ்ந்தனுபவிக்கட்டும்” என்று நினைத்துக் கொண்டாள்.

இறுதி யுத்தகாலத்தில், புலிகளால் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அத்துமீறல்களை இந்நாவலில் மிக நுணுக்கமாக இந்நாவலில் விபரித்திருப்பதானது தமிழ்கவி மீதும், இந்நாவல் மீதும் பலமான தாக்குதல்களை ஏற்படுத்தக் கூடும். நாவலின் போக்கில் குறுக்கிடுகின்ற சம்பவங்களாக அவை குறிப்பிடப்படுகின்றன. “வன்னியில் இவர்கள் சொல்வதுபோல எதுவும் நடக்கவில்லை” என்று இப்பொழுதும் நம்புகின்ற பலரைக் கொதிப்படையச் செய்யும் சம்பவங்களை நாவலாசிரியர் துயரம் ஒழுகும் எழுத்துக்களினால், விபரித்திருக்கிறார். நாவலின் பிரதான பாத்திரமான பார்வதி (இனி வானம் வெளிச்சிடும் நாவலின் பிரதான பாத்திரமும் பார்வதிதான்) சந்திக்கின்ற மனிதர்கள், போராளிகள், என்போருடனான உரையாடல்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பாலகுமாரனுடனான உரையாடல் ஒன்று இப்படிச் செல்கிறது.

ஆளுயரத்துக்கு ஆழமான, ஒரு ஆள் நீட்டி நிமிர்ந்து படுக்கக் கூடிய திறந்த பதுங்குகுழி. அதனுள் ஒரு நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்தார் பாலகுமாரன். எதிரில் ஒரு நாற்காலி போடப்பட்டிருந்தது. பார்வதிக்கு முன்பே வேறு யாரோ அவரை சந்தித்திருக்கிறார்கள் என்று தெரிந்தது.

பார்வதி “வணக்கம்” என்றவாறே படிகளில் இறங்கினாள்.

“ஓ.. வணக்கம், வாங்கோ, இருங்க..” காயமடைந்த இடது கையை மடக்கித் தொங்கவிட்டிருந்தார்.

“இப்ப..எப்படியிருக்குது கை…” என்றாள் பார்வதி.

“பரவாயில்லை. நேற்றே என்னை இவ கொண்டு வந்து தங்கட சொந்தக்கார வீடொண்டில் விட்டிருந்தா..

“இஞ்ச..?”

“இல்ல நான் மருத்துவமனையில தான் நிண்டனான்.. நேற்று முன் நாள் இரவு தான் வெளியால வந்தனான்..”

“பிறகு.. நேர இஞ்ச வந்திட்டியள்?….”

“இல்ல… அதான் சொன்னனே இரணைப்பாலைக்க ஒரு வீட்டில் விட்டவா..ச்ச..” என்றவர் கவலையுடன் முகத்தைச் சுழித்தார். அவரே பேசட்டும் என பார்வதி மௌனமாகவிருந்தாள்.

“காது குடுத்துக் கேக்கேலாது எனக்கு. முகங்குடுக்கேலாத கதையள், நாயள் பேயள், எண்டு.. ம்..விடுங்க. அதுகள இப்பயேன்? வேதனையளச் சுமக்கத் தயாரா இருக்கவேணும்” அமைதியானார்.

“வெண்டிருந்தால் இந்தக் கதை வராது” பார்வதி ஏதோ பேசவேண்டும் என்பதற்காகத்தான் பேசினாள்.

“வெற்றி எண்டது எது? அது சண்டையில எடுக்கிறதில்ல. யுத்தத்தில வெற்றி தோல்வி சகசம். ஆனால் மக்களை வென்றிருக்க வேணும். அதைச் செய்யாமல் விட்டிட்டாங்கள்.”

“மெய்தான் இப்ப என்ன நடக்குதெண்டே தெரியேல்ல.”

“இதில்ல, இன்னுமிருக்கு. கண்டாலும் கதைக்க மனமில்லாம . முகத்தத் திருப்பிக் கொண்டு போவாங்கள். ஒரு சொப்பிங் பாக்கோட ஓட வேண்டிவரும். ஆர் எவரெண்டில்ல, எல்லாரும் சமம் எண்டுவரும், அதிகாரம் போட்டி எல்லாம் அழியும். வல்லமை பேசினவை வாயடங்கிப் போவினம். மக்களக் காப்பாற்ற எடுத்த ஆயுதத்தை மக்களுக்கு எதிராகத் திருப்புவாங்கள். நண்பர்களக்கூட பாக்க மனமில்லாமப் போகும். கண்டாலும் தெரியாத மாதிரி போகிற நாள் வரும். உது நடக்கும்” நிறுத்தி நிறுத்தி மெதுவாகப் பேசினார்.

புலிகளது அத்துமீறல்களைப் பதிவு செய்கிற அதேநேரம், இச்சம்பவங்களால் இயக்கத்தின் ஆன்மா காயமுறுகிறது என நாவல் பரிதவிப்பதையும் வாசகனால் புரிந்துகொள்ள முடியும். புலிகள் அமைப்பிலிருந்த தன்னுடைய 2 மகன்களில் ஒருவனை துணுக்காயிலும் இன்னொருவனை ஆனையிறவிலும் இழந்த தமிழ்கவிக்கு, அதுமட்டுமன்றி ஒரு போராளியாகவே வாழ்ந்த தமிழ்கவிக்கு இயல்பாகவே எழக்கூடிய மேற்சொன்ன பரிதவிப்பு நாவல் முழுவதிலும் ஊடு பாவியிருக்கிறது. இதெல்லாம் ஆரைக்கேட்டு நடக்குது என்று கோபமாக, விரக்தியாக பல்வேறு பாத்திரங்கள் நாவலில் பேசிக்கொள்கின்றன. ஒரு கட்டத்தில் நம்மையும் கேட்க வைக்கின்றன.

நாவலில் பிரதான பாத்திரங்கள் தவிர்த்து மற்றயவர்கள் வந்த வேகத்தில் நகர்ந்து மறைகிறார்கள். கதை நிகழும் சூழலும் பிரதேசமும் ரயிலின் ஜன்னலோரத்தில் மறைந்து நகர்வதைப்போல மறைந்துகொள்கின்றன. புதிய களமொன்றிற்குள் புகும் வாசகன் அச்சூழலையும் மாந்தர்களையும் நின்று கிரகித்துக்கொள்வதற்குள், கிரகித்து உள்வாங்குவதற்குள் நிலங்கள் இழக்கப்பட்டு புதிய நிலங்களுக்குள் புகவேண்டியிருக்கிறது. மாந்தர்கள் சிலர் செத்துப்போக பலர் காணாமற்போய்விடுகிறார்கள். அவர்களில் பலர் நாவலில் மீள வரவே இல்லை. அவர்களது பின்னணித்தகவல்கள் பலமாக கட்டப்படவில்லை என்பது ஒரு பலவீனமாக கருதப்படுகிற நேரத்தில், மறுவளமாக இத்தகைய பண்புகள் வாசகனையும் ஓர் இடம்பெயர்ந்து ஓடுகிறவனாக உணரச் செய்துவிடுகின்றன.

தமயந்தி சிவசுந்தரலிங்கம் என்னும் இயற்பெயரைக் கொண்ட தமிழ்கவி 1949இல் வவுனியாவில் பிறந்தவர். ஈழ விடுதலைப் போரில் தன்னையும் இணைத்துக்கொண்ட ஒரு மூத்த பெண் எழுத்தாளர். போராளிகளாலும், மக்களாலும் மம்மீ, என்றும் அன்ரீ என்றும் அன்பாக அழைக்கப்படும் தமிழ்கவி புலிகள் அமைப்பில் இணைந்து, ஈழப்போரில் உயிரை ஈந்த இரண்டு மாவீரர்களின் தாய். இவரது முதலாவது நாவல் இனி வானம் வெளிச்சிடும் 2002 இல் ஈழத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

நன்றி: http://sayanthan.com/index.php/2014/02/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95/