நூல்: எங்கு செல்கிறோம்? தற்கால வரலாறும் சில பார்வைகளும்! | ஆசிரியர்: பி.ஏ.கிருட்டிணன்
வெளியீடு : தி இந்து தமிழ்த்திசை சென்னை – 2.
‘தி இந்து தமிழ்த்திசை’ நாளிதழில் பி.ஏ.கிருட்டிணன் அவர்கள் ‘இந்தியாவும் உலகமும்’ என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதி வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி வெளியிட்டுள்ளது தி இந்து குழுமம். அரசியல் மற்றும் பண்பாடு சார்ந்த கட்டுரைகள். படிப்பதற்கு மிக விறுவிறுப்பாகவும் காத்திரமான உண்மைகளையும் இக்கட்டுரைகள் பேசுகின்றன. இந்திய அரசியல், காசுமீர் பிரச்சினை, அமெரிக்க அரசியல் உள்ளிட்ட பல்வேறு கட்டுரைகளை அவரது பயண அனுபவத்தின் வழியே ஆதாரங்களோடு புனைவுகளற்ற இயல்பான மொழிநடையில் தந்திருக்கிறார். நான்கு பகுதிகளைக் கொண்ட இந்நூலில் அரசியல்தான் விரிவாகப் பேசப்பட்டாலும் முக்கியமான அரிய / பயனுள்ள தகவல்கள் பல கொட்டிக்கிடக்கின்றன. தனது பயண அனுபவத்தில் கண்டு பழகிய மக்களின் பண்பாடு நாகரிகம் மற்றும் பழக்கவழக்கங்கள் போன்றவற்றையும் கலந்தே இந்நூலில் தந்துள்ளார். அவரது மிளிர்ந்த நடையழகில் நாமும் பயணித்த உணர்வை இந்நூல் ஏற்படுத்துகிறது.
உலகிலேயே இயற்கை எழில் மிகுந்து, எண்ணற்ற வளங்கள் கொட்டிக்கிடக்கும் ஒரே இடம் காசுமீர். காமீர் பார்பதற்கு கொள்ளை அழகு. இங்கு நம் மனத்தை ஈர்க்கும் பச்சைப் பசும்புல்வெளிகள், கரும்பச்சைக் கூம்பு வடிவ பீர் மரங்கள், வெண்பனிப்பாறைகள், உயர்ந்த மலைச்சிகரங்கள், குதிரை வண்டிப்பயணம், குல்மார்கின் கேபிள் பயணம் என கொட்டிக்கிடக்கும் கொள்ளை அழகில் அவர் பயணித்ததோடு நம்மையும் பயணப்பட வைக்கிறார். காசுமீரில் நடப்பது என்ன என்பதையும் நமக்கு விவரிக்கிறார்.
காசுமீர் மக்கள் அமைதியானவர்கள் / அமைதியை விரும்புவர்கள். இங்கு முசுலிம்களே அதிகம். இப்பெண்கள் பர்தா அணிவதில்லை. கேலி, கிண்டல்களுக்கும் அஞ்சாதவர்கள். துணிச்சல் மிக்கவர்கள். காசுமீர்மக்கள் சுதந்திரமின்றி தவிக்கின்றனர். அவர்களைச்சுற்றிப் பாதுகாப்புப் படைகளும் மத்திய அமைதிப்படைகளும் சூழ்ந்துள்ளனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கும் இளைஞர்கள் பயங்கரவாதம் என்ற பெயரிலும் தாக்கப்படுகின்றனர். மனித உயிர்களுக்கு இங்கு மதிப்பில்லை. வேலைவாய்ப்பின்றி இளைஞர்கள் தவிக்கின்றனர். அரசாங்கமும் அரசு ஊழியர்களும் மக்களுக்கு ஆதரவாக இல்லை. பாகிசுதானையோ, இந்தியாவையோ அவர்கள் ஆதரிக்கவில்லை. காசுமீர் எங்களுக்குச் சொந்தமானது. பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழ விரும்புகின்றனர். வேலை வாய்ப்பு அதிகரித்தால் பயங்கரவாதம் குறையும். காஷ;மீர் விடுதலைக்கு 95 சதவீத மக்கள் ஆதரவாக உள்ளனர் என்பதோடு காசுமீர் மக்களுக்கான தீர்வையும் முன் வைக்கிறார்.
காசுமீர் குறித்து அவதூறு பரப்பும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதுகாப்புப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டு காவல் துறையின் கண்காணிப்பிற்குள் காஷமீர் வரவேண்டும். பிற மாநிலங்களிலிருந்து மக்கள் காசுமீருக்குச் சுற்றுலா மேற்கொள்ள வேண்டும். சுற்றுலாத்துறையால் காசுமீரின் பொருளாதாரம் வலுப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும். பயங்கரவாதம் தடுக்கப்படும். பயங்கரவாதம் என்ற பெயரில் அங்குநடக்கும் வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணமாக இருக்கின்றனர் என்கிறார்.
அடுத்து, அமெரிக்கப் பயணம். அமெரிக்கா உலக பணக்கார நாடுகளில் ஒன்று. அமெரிக்க அரசியல் சட்டம், மக்களுக்கான அடிப்படை உரிமைகளை எந்தத் தடையுமின்றி அமெரிக்கா ஆட்சி வழங்கியதையும், அவர்களின் தேர்தல் முறை குறித்தும், பெண்கள் வாக்குரிமை பெற்றதையும் நூல் விரிவாக எடுத்துரைக்கின்றது.
அமெரிக்க முதல் குடியரசுத் தலைவர் ஜார்ஜ் வாங்டன் காலத்தில் கொண்டுவந்த பேச்சு, எழுத்துச் சுதந்திரம் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. அமெரிக்கா ஏன் அனைவரையும் ஈர்க்கிறது? என்ற கேள்விக்குப் பதில் கூறுகிறார். பெண்கள் தனியாக இரவில் நடமாட முடியும், பத்திரமாக வீடு திரும்ப முடியும் என்றாலும் அங்கும் வன்முறைகளும் பாலியல் வன்புணர்வுகளும் கொலைகளும் நடக்கின்றன என்பதற்கான புள்ளி விவரங்களையும் தருகிறார். என்றாலும் அமெரிக்கா, மனிதரின் உழைப்பு, திறமை, துணிச்சல் இம்மூன்றையும் உண்மையாக மதிக்கும் தேசம் இதுவே மக்கள் விரும்பக் காரணம் என்பதை விளக்குகிறார்.
அமெரிக்கப் பொருளாதாரம் இன்று உலகஅளவில் உச்ச நிலையில் இருப்பதற்கு முக்கியமாக இயற்கை வளங்களைக் காப்பது, மக்கள்தொகை கட்டுப்பாடு, கடின உழைப்பு, உலகப் போரில் அமெரிக்கா சந்தித்த பாதிப்பு மிகக் குறைவு ஆகியவை. அமெரிக்காவில் உள்நாட்டுக் கடன் இருந்தாலும் உலகநாடுகள் அனைத்திற்கும் கடன் கொடுக்கும் நிலையில் இருந்தது. ஆனால் இன்று அமெரிக்காவில் அரசின் வருவாய் குறைந்து கடன் அதிகரித்துள்ளது. உலகிவேயே அதிக அளவில் நோபல் பரிசு பெற்றவர்கள் அமெரிக்கர்களாக இருந்தபோதிலும் உலகிற்கு முன்மாதியாக இல்லாமல் பெரும் கடன்சுமையில் மூழ்கி> பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
ட்ரம்ப் வெற்றியைப் பற்றிப் பேசுகிறார் ட்ரம்ப்ன் வெற்றி உலகமயமாக்கலுக்கும் சுதந்திரமான வர்த்தகத்துக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் என்கிறார். உலகப் பொருளாதாரம் எந்தத் திசை நோக்கி பயணிக்கும் என்பதே தெளிவாக இல்லாத நிலையில் இந்தியாவின் நிலை என்னவாக இருக்கப் போகிறது என்ற கேள்வியை எழுப்புகிறார். பலவண்ணம் நிறைந்த மனிதர்களால் பலஆண்டுகளாய் இணைந்த நாடு அமெரிக்கா. அடுத்து வரப்போகும் காலங்களில் ஒரே வண்ணமாக ட்ரம்பின் ஆட்சியில் மாறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கமுடியும் என்கிறார்.
மேலும் பிறகட்டுரைகளில் நேரு, அம்பேத்கர் கட்டுரைகள் வாசிப்பை விறுவிறுப்பாக மாற்றினாலும் அன்னைதெரசா பற்றிய கட்டுரை வியப்பையம் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றது. அரசியலின் மறுபக்கத்தை நமக்குக் காட்டியுள்ளார். படித்துப் பயன்பெற வேண்டிய நூல்.
jothimeenaav@gmail.com