சைனா நமக்கு ஒரு வேண்டாத ஆனால் விலக்க முடியாத அண்டை ராக்ஷஸன். அசோகன் காலத்திலிருந்து தொடங்கலாம் அத்துடனான நம் நட்புறவை என்று ஒரு ரொமாண்டிக் கனவு கொண்டவர்கள் சொல்லலாம். நேரு போல. ஆனால் அது எப்போதுமே ஏகாதிபத்ய கனவுகளையே தன் பாரம்பரியமாக தன் தேசீய உணர்வாகக் கொண்ட நாடு என்பதையும் வரலாற்றுப் பிரக்ஞை கொண்டவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். 1962-ல் சைனா எல்லை தாண்டி வந்து ஆக்கிரமித்த பின்பும் நேரு சொனார்: சைனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே 2000 வருஷங்களுக்கும் மேலாக எந்த சச்சரவும் இருந்ததில்லை என்று. நேருவுக்கும் தெரியும் சைனா ஒரு ஆக்கிரமிப்பு மனம் கொண்ட நாடு என்று. ஆனால் அவரது ரொமாண்டிக் கனவுகள் அவர் கண்களுக்குத் திரையிட்டு விட்டன. சைனா தான் அதை நமக்கு நினைவுறுத்தியது. அதிலிருந்து அதனுடன் வம்புக்குப் போகாது ஒதுங்கி பயந்தே இந்தியா வாழ்ந்து கொண்டிருக்கிறது. “ அவன் தான் மகா துஷ்டன்னு தெரியுமோல்யோடா, அவன் வம்பு பண்ணினா நீ பாட்டிலே பேசாமெ இருந்துடேண்டா” என்று நம் பாட்டிகள் பேரப்பிள்ளை களுக்குச் சொல்லும் அறிவுரை தான் சீனாவுடனான நம் வெளிநாட்டுக் கொள்கை. ஆனால் அதை நாம் இப்படி வெளிப்படையாகச் சொல்வதில்லை. என்னமோ சமாதான வார்த்தைகள் சொல்லி மூடி மறைத்து வருகிறோம். அதையே சிறந்த கொள்கையாக வழிமொழிய இரண்டு அரசியல் கட்சிகள் நம் மண்ணிலேயே வளர்ந்து வந்துள்ளன. நாட்டுப் பற்று உள்ளவர்களாக அவர்கள் என்றுமே தம்மைக் காட்டிக் கொண்டதில்லை.
ஆனாலும் நாம் கண்களை மூடிக்கொள்வதில் அர்த்தமில்லை. சைனாவுடன் ஒரு சின்ன தகராறு என்றால் கூட நமக்கு உதவ யாரும் இல்லை. சைனாவுடனான நமது தகராறு சைனாவுடனேயே நின்று விடாது. அது தான் சாக்கு என்று நம்மீது பாய சுற்றியுள்ள அனைத்து நாடுகளும் தயார் தான். இப்போது இலங்கையும் அந்தக் கூட்டணி முகாமில் கடைசியாகச் சேர்ந்துள்ளது. சைனா நம்மை ஒன்றும் விழுங்கி விடப்போவ தில்லை. அந்த மாதிரி பைத்தியக்காரத் தனத்தை அது செய்யாது. கொஞ்சம் முறைத்துப் பார்த்தாலே கால் நடுக்கங்கொள்ளும், முகம் வியர்க்கும் ஸ்திதியில் இந்தியாவை வைத்துக் கொண்டாலே அது போதும். சைனாவுக்கு. அதை வெற்றிகரமாகவே செய்து வருகிறது. ”தேஜ்பூர் போகாதே” என்றால் நாம் தில்லிக்குத் திரும்பிவிடுவோம். அது போதும் தர்மஸ்தலாவில் உள்ள திபெத்தியர்களை அடக்கி வை என்றால் நாம் மறுபேச்சு பேசப்போவதில்லை. 1962-லிருந்து . ஒவ்வொரு தில்லி அரசுக்கும் ”நம் காலத்துக்கு பயந்து நடுங்கி தகராறு ஏதும் இல்லாது சைனாவைக் கோபப் படுத்தாது அமைதியாகக் காலம் கழித்துவிடுவோம்” என்பதே தொடர்ந்துவரும் சைனா பாலிஸி. 1962-ல் எல்லை கடந்து வந்த சீனர்களைத் “துரத்தி விரட்டுங்கள்” என்று நேரு சொன்ன வார்த்தையின் விளைவுகள் இன்னொரு முறை நேராது.
இடையில் சைனா, ஏழ்மையிலும். 30 வருட உள்நாட்டுப் போரின் நாசத்திலும் மூழ்கியிருந்த போதிலும் தனக்கு இருந்த ஒரே துணையும் அப்போது ஒரு வல்லரசுமான ரஷ்யாவையே எதிர்த்து நின்றது. எவரது மிரட்டலுக்கும் அஞ்சாது திபெத்தைக் கபளீகரம் செய்தது. இப்போது சைனா தனக்குப் போட்டியாகக் கருதுவது அமெரிக்காவைத் தான். வேறு எந்த நாடும் அதற்கு லட்சியமில்லை. இந்தியா அதற்கு ஒரு லக்ஷியமே இல்லை. ஒரு மிரட்டல் போதும் இந்தியா வாலைச் சுருட்டிக்கொள்ள என்று தான் நினைக்கிறது. அப்படி நாம் அரை நூற்றாண்டு காலமாக நடந்துகொண்டு வந்துள்ளோம். காந்தியும் புத்தரும் அவதரித்த நாடாயிற்றே.
அறுபது வருட காலத்துக்குள் பல துறைகளில் இந்தியாவுக்குப் பின் தங்கியிருந்த நாடு தான் சைனா, இப்போது பொருளா தாரத்திலும், ராணுவ பலத்திலும் இந்தியா என்ன, பல முன்னேறிய நாடுகளையும் பின்னுக்குத் தள்ளி முன் சென்று விட்டது. அறுபது வருட கால உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. மாவோவின் கலாசாரப் புரட்சி வரை சைனா இன்னும் படு மோசமாக நாசமடைந்திருந்தது. ஆக சைனாவின் பயங்கர பாய்ச்சல் நடந்தது சுமார் இருபது வருடங்களுக்குள்ளாக.
காரணம், சைனாவின் அதிகார வர்க்கத்தின் யதேச்சாதிகாரம் மாத்திரமல்ல. அந்த யதேச்சாதிகாரம், அசாத்திய தன் முனைப்போடு, துணிச்சலோடு, செயல்பட்டது. அதன் சரித்திரத்திலேயே ஊறியிருக்கும் ஏகாதிபத்ய பெருமை உணர்வு.. உலகமே தன்னைச் சுற்றியிருப்பதாக தான் அதன் மத்தியில் வீற்றிருப்பதாகத் தான் அதன் வரலாற்றுப் பிரக்ஞை இருந்திருக்கிறது. தன்னை மத்திய நாடு சுங் க்கோ (Chung kuo) என்று தான் சொல்லிக்கொள்கிறது. 60 வருட காலமாக ஒரு வெறிபிடித்த யதேச்சாதிகாரத்துக்கு அடிமைப் பட்டு, வாழ்ந்தாலும், எந்த சீனனும் நாட்டுப் பற்று குறைந்தவனாகி விடவில்லை. தான் நன்றாக வாழ்வதாகவே நம்புகிறான். அப்படி நம்ப வைக்கப் பட்டிருக்கிறான் என்பதுடன் அவன் நாட்டுப் பற்றும் அதற்குக் காரணம். இன்றும் சைனாவுக்காக பரிந்து பேசும் நம் கம்யூனிஸ்ட் கட்சிகள் போல, சைனாவில் இந்தியாவுக்காகப் பரிந்து பேச யாரும் அதன் வரலாற்றில் இருந்ததில்லை. ரஷ்யா ஒரு வல்லரசாக இருந்த ஐம்பது அறுபதுகளில் கூட சைனா ரஷ்யாவை லக்ஷியம் செய்ததில்லை. மாவோ தன் போக்கில் தான் தன் போராட்டத்தைத் தொடர்ந்தார். ஸ்டாலினுக்கு மாவோ என்றும் தண்டனிட்டவரில்லை. அதன் வரலாறு முழுதும் சைனா தனக்குள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டாலும் அதன் ஏகாதிபத்ய பேராசைகள் என்றும் மங்கியதில்லை. சமயம் கிடைத்த போதெல்லாம் யாரை கபளீகரம் செய்யலாம் என்றே அதன் வரலாறு இருந்து வந்திருக்கிறது.
இப்போது உலக நாடுகள் பலவும் சைனாவுடன் தம் உறவுகளை வெகு ஜாக்கிரதை உணர்வுடன் சுமுகமாகத்தான் வைத்துக் கொள்ள விரும்புகின்றன. வல்லரசாக இன்னும் ஆகாத போதே ஒரு வல்லரசின் கெடுபிடிகளுடன் சைனா உலக அரங்கில் மிதப்புடன் நடந்து கொள்கிறது. எங்கும் யாருக்கும் அது தன் உரிமைகள் என தான் கருதுவதை கொஞ்சம் கூட விட்டுக் கொடுப்பதில்லை. மற்ற நாடுகள் தான், அவை வல்லரசாக இருந்த போதிலும், அதனோடு சமாதானமாகப் போக சமரசங்கள் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.
உலகம் முழுதும் இப்போது சைனா- இந்தியா என்றே ஒரு இடைக்கோடு போட்டு இரண்டு பெரிய நாடுகளையும் ஒப்பிட்டுப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தியாவுக்கு தான் இப்படிப் பேசப்படுவதில், சந்தடி சாக்கில் தனக்கும் ஒரு பொன்னாடை போர்த்தப்படும் சந்தோஷம். Basking in reflected glory என்பார்களே அப்படித்தான் இந்த ஒரே அடைப்புக்குறிக்குள் அடைபடும் ஜொலிப்புக்கும் மேல் அடிக்கடி நடக்கும் ஒப்பீடுகளில், சில விஷயங்கள் நமக்கு ஒரு கிறுகிறுப்பு தரம் விஷயங்களும் உள்ளன. சைனாவின் அதி வேக வளமும் பெருகி வரும் பலமும் வலிந்து திணிக்கப்பட்ட ஒன்று. மக்களைக் கொத்தடிமைகளாக்கி பெறப்படும் அதிவேக பாய்ச்சல். அந்த அதிவேகமும், பாய்ச்சலும் தொடர்ந்து நீடிக்கும் சாத்தியமில்லை. காரனங்கள், மக்களின் ஜனநாயக பங்களிப்பு இல்லாத போது ஒரு நாள் அடிமனக் கொந்தளிப்பு வெடிதெழும். இந்தியா அப்படி அல்ல. அதன் ஜனநாயக கட்டமைப்பு அத்தகைய திடீர் கொந்தளிப்புக்கள் இந்தியாவில் சாத்தியமில்லை. இந்தியா நிதானமாக, நிச்சயமாக முன்னேறி வருகிறது. ஆக இந்தியாவின் எதிர்காலம் நிச்சயம் என்றும் ஆனால் சைனா அதிகம் போனால் இன்னம் ஒரு பத்திருபது வருடங்களுக்கு மேல் இத்தகைய வேகத்தைத் தொடர முடியாது. திடீரென அதன் கால் முடங்கிவிடும் என்றும் ஜோதிடம் சொல்கிறார்கள். சைனா என்றாலேயே,, பயந்து நடுங்கிக் கொண்டு, வாய் பொத்தி இருக்கும் இந்திய அதிகார தலைமைகளுக்கு இந்த ஜோதிடங்கள் ஒரு வாறான ஆறுதல் அளிக்கின்றனதான். ”சரி, நம் காலம் ஒழுங்காக கடந்து விடும்” என்ற நிம்மதியோடு வாளா இருக்கும் நடவடிக்கை தான். சும்மா இருப்பதும் ஒரு நடவடிக்கை தான் என்று வேறு ஒரு மகத்தான ராஜதந்திர பிரகடனம். (Not taking any action is also an action) நமக்குப் பழக்கமானது.
நம்மால் நம் அதிகார தலைமைகளின் குணத்தை மாற்ற முடியாது. ஆனால் நாம் ஏகாதிபத்ய கனவுகளும், வரலாற்று ப்ரக்ஞையும், உலகிலேயே பலம் வாய்ந்த ஒரு மாபெரும் வல்லரசாக வேண்டும் என்ற அயராத முனைப்பும் அதை நோக்கிய நீண்டகால செயல் திட்டத்தோடு தளராது செயல்பட்டுவரும் ஒரு அண்டை நாட்டை, நம்மை அடக்கியே வைத்திருக்கவேண்டும் என்ற முனைப்பும் கொண்ட அந்த அண்டை நாட்டை நாம் சரிவர புரிந்துகொள்ளவும் வேண்டும். அத்தோடு நம் எதிர்காலத்தை பற்றியும் ஒரு திட்டமிட்ட செயல்பாடு நமக்கு வேண்டும். இது இரண்டும் நம் தலைமைகளுக்கு இல்லாத போது நாமாவது நமக்குள் இது பற்றி தீவிரமாக சிந்திக்கவேண்டும். அது பற்றி நம் அளவிலாவது கருத்துப் பரிமாறல்களும் சர்ச்சைகளும் எழச் செய்யவேண்டும். ஆனால் குடிமக்களாகிய நமக்கு made in China எலெச்ட்ரானிக்ஸ் சாதனங்களும் பொம்மைகளும் ரொமப் சீப் பாகக் கிடைக்கும் அர்ப்ப சந்தோஷத்தில் நம் கவலைகள் முடிந்து விடுவது, பயந்து பயந்து காலத்தை ஓட்டிவிடப் பார்க்கும் நம் அரசியல் தலைமகளுக்கேற்ற பிரஜைகள் தாம் நாமும் என்பதைத் தான் காட்டுகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் பல்லவி அய்யரின் சீனா – விலகும் திரை என்னும் புத்தகம் ஒரு முக்கியமான காலடி வைப்பு. நமக்கு இந்த காலடி வைப்பு இப்போதெல்லாம் ரஷ்யாவுக்குப் போய் ஆண்டையை பார்த்து தரிசனம் பாக்கியம் பெறுவது நின்று சைனாவுக்குப் போய் ஆண்டையப் பார்த்து தரிசன பாக்கியமும் உபதேசங்களும் பெற்று வரும் கம்யூனிஸ்டுகள் சொல்வதையோ, அல்லது நம் அரசியல் தலைமைகள் சொல்வதையோ(அல்லது சொல்லபயந்து வாய் மூடி இருப்பதையோ) கேட்டுப் பயன் இல்லை. இவர்களிடம் பெற நமக்கு ஏதும் இல்லை. நமக்குக் கொடுக்க அவர்களிடமும் ஏதும் இல்லை.
பல்லவி அய்யர் சைனாவில் ஐந்து வருட காலம் இருந்தவர். சீன ஒளி பரப்புத் துறையில் பணியாற்றச் சென்று பின்னர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் பத்திரிகைக் கல்வி படிப்பித்தவர். அங்கு சென்று சீன மொழி கற்றவர். அவரிடம் நாம் சந்தேகம் கொள்ளத் தூண்டும் ஒரே விஷயம் நம்ம ஊர் ஹிந்து பத்திரிகையுடன் அதுவும் உலகறிந்த சீனாவுக்குப் பல்லாண்டு பாடும் என். ராம் இருந்த காலத்திய தொடர்பு தான். ஆனால் அவர் புத்தகத்தைப் படித்த பின் அந்த சந்தேகங்களும் முற்றாக விலகின.
பல்லவி அய்யர் தில்லியில் வளர்ந்தவர். முஸ்லீம்கள் பெருவாரியாக வாழும் நிஜாமுதீன் பகுதியில் அவரது சிறு பிராயம்ம் கழிந்தது. கலாசார நோக்கில் தான் பாதி முஸ்லீம் என்று இந்த அய்யர் வித்தியாசமான அய்யர் என்று சொல்லும் பாவனையில் சொல்லிக் கொள்கிறார். தில்லி செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் படித்தவர். பின்னர். இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்-லும். இங்கிலாந்தில் இருந்த போது ஒரு ஸ்பானியரைக் காதலித்து மணந்தவர். பல்லவி ஜூலியோவாக தன்னை நாமகரணம் செய்துகொள்ளாது பல்லவி அய்யராகவே தன்னை அறியப்படுத்திக்கொள்பவர். சைனாவில் உணவு அவருக்குப் பிரசினயாக இருக்கவில்லை. சாப்பிடும் போது, ”இது என்ன நாய் மாமிசமா? என்று ஜோக் அடிப்பாராம். இந்த பின்னணி. போதும் அவருக்கு அனுபவங்களையும் பார்வையையும் எந்த சார்பும் முன் தீர்மானிக்கவில்லை என்பதைச் சொல்ல. ஆகவே அவருடைய ஹிந்து பத்திரிகைத் தொடர்பைப் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை. .
எனக்கு இது மிக சுவாரஸ்யமான, இந்த கால கட்டத்தில் மிகவும் தேவையான பல புதிய தகவல்களைப் பார்வைகளை அளித்த புத்தகமாக இருந்தது. ஐந்து வருடங்களில் (2002 லிருந்து 2007 வரை) ஐம்பதுகளில் படித்த Edgar Snow-வின் Red Star Over China –க்குப் பிறகு சைனாவில் நிகழும் பெரும் மாற்றங்களைப் பற்றிச் சொல்லும் புத்தகம். ஐந்து வருடங்களில் (2002 லிருந்து 2007 வரை) சைனாவில் ஒவ்வொரு துறையிலும் நிகழ்ந்த மாற்றங்கள். அவை.
ஏதோ ராணுவ படையெடுப்பு நடப்பது போலத்தான் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்களை உலகம் வியக்கும் வகையில் பிரமாண்ட மாக நிகழ்த்தி விடவேண்டும் என்ற தீவிர முனைப்பில் எதுவும் அரசுக்குத் தடையாக இருக்கவில்லை. பெய்ஜிங்கின் மூன்றில் ஒரு பகுதி, பழமையும் வரலாறும் தன்னுள் கொண்ட பகுதியை இடித்துத் தள்ள அவர்கள் தயங்க வில்லை. சாய் என்று இடிக்கப்பட வேண்டிய கட்டிட சுவர்களில் எழுதினால் போதும். எப்போது வேண்டுமானாலும் இடித்துக்கொள்ளலாம். இடிக்கப் பட்டன. அவ்விடத்தில் புதிய ராக்ஷஸ் கட்டிடங்கள் எழுந்துவிட்டன. உலகத்திலேயே பெரிய அணைக்கட்டுகள் அசுர செலவில், அசுர வேகத்தில் கட்டப் படுகின்றன. லக்ஷக் கணக்கில் மக்கள் குடிபெயர்க்கப் படுகின்றனர். லாஸா எக்ஸ்ப்ரெஸ், சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து திபேத் தலைநகர் லாஸாவுக்கு 4000 மைல் நீள ரயில் பாதை, மலைகளைக் குடைந்து, அமைக்கப்பட்ட ரயில் பாதை பிராணவாயு குறைந்துவிடும் மூச்சுத் திணறும் உச்சத்தில், திடீரென உறையும் பனி, திடீரென அது கரைந்து தண்ணீராகவும் பெருக்கெடுக்குமாம். வேடிக்கை தான். இவ்வளவு கஷ்டங்களையும் எதிர்கொண்டு ஐந்து வருட காலத்தில் முடிந்து விடுகிறது. நம் ஊரில் மாயவரம் கும்பகோணம் அகலப் பாதை இன்னமும் போக்குவரத்துக்கு தயாராக வில்லை எத்தனை வருடங்கள்? (இந்த அழகில் இந்தியாவும் சைனாவும் வல்லரசாகப் போகின்றனவாம்) பெய்ஜிங்கிலிருந்து லாஸாவுக்கு ஒரு வாரம் பிடிக்கும் பயணம் மிக சொகுசாக 2 நாட்களில் முடிகிறது. உலகம் வியக்கும் ரயில் பாதை அமைத்தது ராணுவத் தேவையை முன்னிட்டு என்று சொல்லலாம். உண்மை உண்டு. இந்தியாவிலும் ரயில் பாதை அமைத்தது பிரிட்டீஷ் அரசாங்கத்தின் ராணுவத் தேவைக்குத் தான் என்றார்கள். அந்த ரயிலில் தான் மகாத்மா காந்தி இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியா முழுதும் சுற்றுப் பயணம் செய்தார் சுதந்திரப் போராட்டத்துக்கு தன்னைத் தயார் செய்துகொள்ள. திபெத்தியர்கள் பயமும் அது தான். ஆனால் அது பயணிகளுக்கும் பொருளாதாரத் தேவைகளுக்கும் உல்லாச பயணிகளுக்கும் பயன் படும். பயன் படப் போவது சீனர்களுக்குத் தான் திபேத்தியர்களுக்கு அல்ல என்பதும் வாஸ்தவம் தான். ஆனால் ஐரோப்பிய நாடுகள் எல்லாம் சாத்தியமே இல்லை என்று கைவிரித்த காரியம் ஐந்து வருடங்களில் சாத்தியமாக்கிக் காட்டியுள்ளது சீன அரசு. இப்போது லாஸாவில் ஐந்து நக்ஷத்திர ஹோட்டல்கள், பெரிய மால்கள் காட்சி தருகின்றன. திபேத்தில் பல புதிய சாலைகள், நகரங்கள். புதிய வியாபார ஸ்தலங்கள்.
முன்னால் இடித்துத் தள்ளப்பட்ட பௌத்த கோயில்களும் லாமாக்களின் மடங்களும் இப்போது திரும்ப கட்டப்பட்டு வருகின்றன. காரணம் மாவோ காலத்தில் மதம் ஒரு அபினி. அழிக்கப்பட வேண்டியது. இப்போது அவரவர் மதம் சார்ந்த வாழ்க்கை அனுமதிக்கப்படுகிறது. காரணம் மறுபடியும் மக்களுக்கு ஒரளவு வாழும் சுதந்திரம் தந்து அவர்களை மகிழ்விக்க வேண்டும். அரசு அதிகாரத்தைக் கேள்வி கேட்கக் கூடாது. அரசு கட்டளைகளுக்கு அடி பணிய வேண்டும். திபெத்தில் தலாய் லாமா பெயரைக் கூட உச்சரிக்கக் கூடாது. அந்தந்த பிரதேச மொழிகளைக் கற்கலாம். ஆனால் மண்டாரின் (வடக்கு சைனாவில் பேசப்படும் சீன மொழி) கட்டாயம் கற்க வேண்டும். அதில் தான் அரசு பணிகள் அத்தனையும் நடக்கும்.
முன்னர் தடைபடுத்தப்பட்ட இடங்களில் கிறித்துவமும் இஸ்லாமும் இப்போது அரசு ஆதரவு பெறுகின்றன. நிறைய இடங்களில் தேவாலயங்கள், மசூதிகள் கட்டப் படுகின்றன. அரபு மொழி கற்க முகம்மதியர்கள் பெரும்பான்மையில் வாழும் மேற்கு எல்லையோர பிரதேசத்தில் அனுமதிக்கப்படுகிறது. காரணம், மறுபடியும் இப்போது சீன தலைவர் ஹு ஜிண்டாவின் சுருதி பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் என்று பிரகடனம் செய்யப்பட்ட தேசீய கொள்கை தான். அவ்வப்போது இப்படி ஏதோ ஒரு தேசிய கொள்கை பிரகடனப்படுத்தப் படும். நூறு பூக்கள் மலரட்டும் என்ற மாவின் கோஷத்தில் எத்தனையோ மாவோ கூட்டாளிகள் அவமானப்படுத்தப்பட்டார்கள் மக்கள் கொல்லப்பட்டார்கள் அல்லது சிறைவைக்கப்பட்டார்கள். அந்த மாதிரியான ஸ்லோகன் அல்ல இது. அவ்வப்போது அரசு வெளியிடும் கொள்கைகளை எதிர்க்கக் கூடாது. கொடுக்கப் பட்டுள்ள வேலிக்குள் யாரும் சுதந்திரமாக இருந்து கொள்ளலாம். திபெத்தில் தனக்கு திபெத்திய மொழி பெயர்ப்பாளனாக பல்லவி அய்யர் அமர்த்திக் கொண்டவன் சைனாவை உள்ளுக்குள்ளேயே குமைந்து குமைந்து எதிர்ப்பவன். எல்லா திபெத்தியர்களும் அப்படித்தான். 60 வருடகால கொடூர ஆக்கிரமிப்புக்குப் பின்னும் சீன எதிர்ப்பு அவர்கள் ரத்தத்தில் கொதித்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்த மொழிபெயர்ப்பாளன் தன் விசிட்டிங் கார்டை கொடுக்கிறான். மடித்த அந்த கார்டை சற்றே திறந்து அதில் தலாய் லாமா படம் அச்சிட்டிருப்பதைக் காட்டுகிறான் ரகசியமாக. தலாய் லாமா பெயரை உச்சரிப்பது கூட தடை செய்யப் பட்டுள்ள நிலையில் அவன் எதிர்ப்பு அது. இந்தியா திபேத்தியர் அனைவருக்கும் ஒரு யாத்திரை பூமி. தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு.
சைனா கொஞ்சம் கூட இடைவிடாது ராக்ஷஸ் வேகத்தில் தன்னை பலப்படுத்திக்கொண்டும் நாட்டை வளப்படுத்திக் கொண்டும் வருகிறது. பல்லவி அய்யர் சொல்கிறார்: 2006-ல் சீனாவில் ஏற்கனவே 86,000 அணைகள் இருந்தன இது உலகம் முழுதும் இருக்கும் அணைகளில் 46 சதவிகிதம். இதில் வீடிழந்தவர்கள் தொகை 1.6 கோடி பேர்.” அங்கு மேதா பட்கரோ அல்லது வேறு யாருக்குமோ இடமில்லை. தலைதூக்கிய அடுத்த நிமிடம் அவர்கள் மாவோ இருக்குமிடத்தை அடைவார்கள். ஒரு இடத்தில் அணைகட்ட சர்வே எல்லாம் நடந்து முடிந்து விடுகிறது. யாருக்கும் அங்கு வீடு இழக்கப் போகும் லக்ஷக்கணக்கிலானவர் எவருக்கும் அது பற்றி செய்தி இல்லை. ஒரு நாள அனைவரும் முன்னறிவிப்பு இன்றி வேறிடத்துக்கு அனுப்பப் படுவார்கள். அதிர்ஷடமுள்ளவருக்கு ஏதோ நஷ்ட ஈடு கிடைக்கும். தமிழ் நாட்டில் ஜனநாயகத்தில் நடப்பது அங்கு பெரும் அளவில் சர்வாதிகார ஆட்சியில் நடக்கிறது.
ஆனால் பல்லவி அய்யர் சொல்கிறார். கொழுத்த பணக் காரர்கள் இருக்கிறார்கள் தான். முன்னை விட இப்போது பணம் புரள்கிறது தான். முன்னைவிட மக்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள். மறுக்கப்பட்ட சுதந்திரம் பற்றி அவர்கள் கவலைப் படவில்லை. பொருளாதார சுதந்திரம் அவர்களை மகிழ்விக்கிறது. இந்தியாவில் காணுவது போல ஏழைகளை அங்கு காணவில்லை. சைனா பூராவும் எந்த மூலைக்கும் செல்ல அகலமான சாலைகள் கார் வழுக்கிக்கொண்டே விரைந்து செல்லும் சாலைகள் அமைக்கப் பட்டுள்ளன். இந்த வசதியே வெளிநாட்டவர்களை முதலீடு செய்ய அழைக்கின்றன. விரைவாகச் செயல்படுவதால் அரசின் முடிவுகளில் எங்கும் தாமதம் ஏற்படுவதில்லை.
மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும். அதற்கான எல்லா வசதிகளும் நாட்டில் ஏற்படவேண்டும். என்பதில் அரசு முனைப்பாக இருக்கிறது. அரசை எதிர்த்து மாத்திரம் மூச்சு விடக்கூடாது. இந்தியா போல் அசுத்தமும் குப்பைகளும் குண்டும் குழியுமான சாலைகளும் சைனாவில் இல்லை. வாஸ்தவம் அங்கும் லஞ்சம் உண்டு தான். ஆனால் காரியங்கள் நடக்கின்றன. 10 இருபது சதவிகிதம் பணத்தை அதிகாரிகளும் இன்னும் சம்பந்தப் பட்ட மற்றவர்களும் சுருட்டிக் கொண்டாலும், 80 சதவிகித வேலைகள் நடக்கின்றன. இந்தியாவிலோ வேலையே ஏதும் நடக்காமல் பணம் கொள்ளை போகின்றது. அது தான் இங்குள்ள லஞ்சத்துக்கும் அங்குள்ள லஞ்சத்துக்குமான வித்தியாசம். மேஸ்திரியிலிருந்து கவுன்சிலர் என்று ஒரு பெரிய வரிசை மந்திரி வரை லஞ்சப் பணம் நிர்ணயிக்கப்பட்ட சதவிகிதத்தில் வினியோகிக்கப்படுவது நடைமுறையானால், இந்த [ப்ராண்ட் ஜனநாயகத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய? சாய் என்று எழுதப்பட்டால் வீடு என்ன ஒரு குடியிருப்பு பகுதியே இடிக்கப்பட்டு விடும். அங்கு ஒரு அகல சாலையோ, அடுக்குமாடி குடியிருப்புகளோ, அல்லது ஒலிம்பிஸ் கட்டிடமோ எழும். எழும் கட்டாயம். 1970-லிருந்து பிரகடனப்படுத்தப்பட்ட கூவம் மணக்கும் கோஷம் இன்றும் 40 வருடங்களாக கோஷமாகவே ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஜனநாயகம் தான். ஐந்து வருஷத்துக்கு ஒரு முறை வோட்டு போடுகிறவர்களுக்கெல்லாம் ரூ ஆயிரமோ ஐய்யாயிரமோ கிடைத்துவிடுகிறது.
இந்த இரண்டு எக்ஸ்ட்ரீமுகளுக்கிடையே இடைப்புள்ளி எதுவுமே கிடையாதா? லஞ்சம் கொடுத்து, இலவசங்களை வாரி இறைத்து பெற்ற வோட்டுகள் அதிகாரம் செய்பவர்கள் தாம் நாம் இருப்பது ஜனநாயக நாட்டில். சர்வாதிகார ஆட்சியில் அல்ல என்பார்கள். இந்த வாதத்தின் ஆபாசத்தை என்ன சொல்ல?
சீனாவில் இப்போது யோகா ஆங்கிலம் ஹிந்தி, அரபி என்று எல்லா மொழிகளையும் கற்கும் வேகம் பற்றியிருக்கிறது. காரணம் அவை தான் வெளி உறவுக்கும் உலக வாணிப பெருக்கத்திற்கும் சீன பொருளாதார வளத்திற்கும் இட்டுச் செல்லும்.
2003-ல் பல்லவி அய்யரும் அவரது கணவர் ஜூலியோவும் ஒரு டாங்கோ வகுப்புக்குச் செல்ல அங்கு இருந்த ஒரு சீனப் பெண் “ஓம் சூர்யாய நமஹ” என்று வரவேற்கிறார். அந்தச் சீனப் பெண்ணுக்கு சைன அரசுக்கு இருக்கும் இந்தியப் பகைமை, மண்டாரினில் இதை எப்படி சொலவது என்று கேட்கவில்லை. நம்மூரில் தான் “ஞாயிறு போற்றுதும்” என்று சொல்லலாமா என்று கேட்கத் தோன்றுகிறது. யோகா மையம் நடத்தும் மோகன் அவரது சீன காதலி அழைப்பில் வந்தவர். வந்த இரண்டாவது மாதத்தில் மூன்று டஜன் மாணவர்கள் சேர்ந்தார்கள். மறுபடியும் பல்லவி அய்யர் சந்தித்த போது மோகனின் யோகா மையத்துக்கு 51 கிளைகள் பெய்ஜிங்கில் மாத்திரம் 3500 மாணவரகள். சீனா முழுதும் 10,000 மாணவர்கள். யோகா மீது ஏது இத்தனை மோகம்? யோகாவை நாடுபவர்கள் சைனாவின் செல்வந்தர்கள்.
2002-ல் இந்தியா பெற்ற அந்நிய முதலீடு 5.5 பில்லியன் டாலர். சரிதானா. அதேசமயம் கம்யூனிஸம் தழைத்தோங்குவதாகச் சொல்லப்படும் சைனாவில் 2005-ல் அந்நிய முதலீடு 72.4 பில்லியன் டாலர். இந்திய கம்யூனிஸ்டுகள் இது பற்றியெல்லாம் மூச்சு விடுவதில்லை. இந்தியாவை மாத்திரம் தாக்குவார்கள் அமெரிக்க முதலாளித்துவத்துக்கு அடிமையாகிவிட்டதாக. சைனா இந்தியாவை விட 15 மடங்கு அதிகம் அடிமையாகிவிட்டதே இந்தக் கணக்கில்!
இப்படி நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். இன்னம் ஒரே ஒரு காட்சியை மாத்திரம் சொல்லி, மேலும் அறிய பல்லவி அய்யரின் புத்தகத்துக்குச் செல்லுமாறு சொல்லி முடிக்கிறேன். அடுக்கு மாடி வீட்டை விட்டு பெய்ஜிங்கின் (ஹூடாங் என்று சொல்லப்படும்) பழம் வீடுகள் இருக்கும் பகுதிக்குக் குடிபோக நினைத்து கடைசியில் வீடு ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறார். பழங்கால வீடு. நவீன வசதிகளுடன் அதன் உள்கட்டமைப்பு மாற்றப் படுகிறது. பல்லவி அய்யர் சொன்ன மாற்றங்களுடன்
வீட்டுக்குச் சொந்தக்காரர் வூ எல்லா இடங்களையும் சுற்றிக் காண்பிக்கிறார். கழிப்பறையைக் காட்டி உபயோகித்துப் பாருங்கள் என்று. அதன் மகத்துவத்தில் பெருமை கொள்கிறார்.
வீடு சின்னதாக நன்றாக இருக்கிறது. வீட்டு நடுவில் ஒரு மரம். அழகாக அதன் அடியில் உட்கார்ந்து கொள்ளலாம்.
திடீரெனெ காலையில் தூங்கிக்கொண்டிருக்கும்போது கதவு தட்டப்படுகிறது. திறந்து பார்த்தால் வூ. குழாய் ரிபேர் சாமான்களுடன். கதவு திறந்ததும் அனுமதி கூட கேட்காமல் உள்ளே நுழைந்து டாய்லெட்டைக் கழுவுகிறார். குழாய்களை ரிபேர் செய்கிறார். மறும் ஒருமுறை வாசலில் துடைப்பத்துடன் நிற்கிறார். வழ்க்கம் போல உள்ளே நுழைந்து மரத்தடியிலும் சுற்றிலும் இருக்கும் குப்பைகளை அகற்றுகிறார்./ துடைப்பத்தை பல்லவி அய்யரிடம் கொடுக்க மறுக்கிறார்.
ஒரு நாள் தன் மனைவியை அழைத்து வருகிறார். இவர் வேலை செய்ய வூ தன் காரியத்தில் முனைப்பாக இருக்கிறார். சுற்றி யிருப்பவர்கள் எல்லாம் வெள்ளைக்காரனை மணந்த ஒரு கருப்பு இந்தியரைப் பார்க்கக் கூடுகிறார்கள்.
வூ ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற எஞ்சினீயர். அவருக்கு இது போல இன்னும் பல வீடுகள் ஹூடாங்கில் சொந்தம். அவர் ஒரு கோடீஸ்வரர். அவர் தன் வேலைகளுக்கு ஒரு மோபெட்டும், தன் மகனுக்கு ஒரு காரும் வாங்கிக் கொண்டிருக்கிறார். அவர் மகன் காரில் ஊர் சுற்றுவது தான் வேலை. அவர் தன் மகனுக்கு எங்காவது ஒரு டிரைவர் வேலை வாங்கிக்கொடுக்கும்படி பல்லவியையும் அவர் கணவரையும் கேட்கிறார்.
வூ ஆரம்பத்தில் இம்மாதிரி ஒரு பழைய வீட்டில் தான் இருந்தார். கலாசாரப் புரட்சியின் போது அவர் வீடு பறிபோயிற்று. அவர் எங்கோ தூரத்தில் அக்தியாக அனுப்பப் படுகிறார். அங்கு அவரைச்சீர்திருத்த கக்கூஸ் கழுவும் வேலை தரப்படுகிறது. பல வருஷ சிறைவாசத்துக்குப் பிறகு, டங் சியாவ் பிங் ஆட்சியில் அவர் ஊர் திரும்புகிறார். ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி ஒய்வு பெற்றுத் திரும்புகிறார். அந்தச் சமயம் அரசு கொள்கை மாறி யாரும் கொஞ்சம் நிலம் அரசு குத்தகையில் பயிர் செய்து கொள்ளலாம். வீடு வைத்துக்கொள்ளலாம் என்று மாறுகிறது. வூ முதலில் ஒரு வீடும் பின்னர் ஹூடாங்கில் அலைந்து இன்னும் பல வீடுகள் வாங்குகிறார். இப்போது அவர் கோடீஸ்வரர். சில வருஷங்கள் முன் மக்கள் விரோதி என குற்றம் சாட்டப்பட்டு எங்கோ கக்கூஸ் கழுவியவர். இப்பொதும் அவர் குழாய் ரிபேர், வீடு பெருக்குவது கக்கூஸ் சுத்தம் செயவது என பல வேலைகள் செய்பவர். முகம் சிணுங்காமல். சந்தோஷமாக. பல சமயம் பல்லவி அய்யரின் விருந்தினராவார்.
இன்னொரு காட்சி. படித்தவன். வேறுஏதோ வேலை செய்தவன். இப்போது ஹூடாங்கில் உள்ள கக்கூஸை கழுவி சுத்தம் செய்கிறான். இதில் பணமும் நிறையக் கிடைக்கிறது. வேலையும் சுலபம்.
சைனாவில் யாரும் எந்த வேலையும் செய்யும் மனப் பக்குவம் பெற்றவர்கள். உழைப்பில் கௌரவம் பார்ப்பதில்லை.
நம்மூரில் நம் வாழ்க்கையில் அனேக நம்பிக்கைகள் நம்மை அடக்கியாள்கின்றன. மூட நம்பிக்கையோ பகுத்தறிவோ என்னவோ வாக இருந்துவிட்டுப் போகட்டும்.
மார்க்ஸ் எங்கோ சொல்லியிருக்கிறாராம். ஏழு பேருக்கு மேல் ஒருத்தன் தன் கீழ் வேலைகமர்த்தினால் அவனிடம் முதலாளீய சுரண்டல் மனம் தோன்றிவிடுகிறது என. இந்த ஏழு கணக்கு எப்படி வந்ததோ. இருக்கட்டும். சைனாவில் யாரும் ஏழு பேருக்கு மேல் (மார்க்ஸ் சாஸ்திர்ப்படி) வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூடாது. ஆனால், புத்தி சாலி சீனர்கள். யாரும் யாருக்கும் கீழ் வேலை செய்வதில்லை. இது கூட்டுறவு அடிப்படையில் எல்லோரும் வேலையாட்கள். எல்லோரும் முதலாளிகள் தான் என்.று அரசு விதிகளின் கண்ணில் மிளகாய் தூவி பெரிய தொழில் சாலைகளை அமைத்துக் கொள்கிறார்களாம்.
சட்டத்துக்குச் சட்டமும் ஆயிற்று. தன் காரியத்துக்கும் தடையில்லை.
சுரீந்தர் சிங் என்று ஒரு சர்தார்ஜிக்கு ஒரு ஹோட்டலில் வேலை. கிடைத்தது. சுரீந்தர் சிங்கின் தலைப்பாகை வெளிநாட்டவரைக் கவரும் என்பது அவர்கள் எண்ணம்.. ஒரு நாள் சுரீந்தர் சிங் கிராப் வைத்துக் கொண்டான் ஹோட்டல் நிர்வாகம் கிராப் வைத்துக்கொண்டாலும் தலைப்பகையை விடக்கூடாது. இல்லையெனில் அவனுக்கு வேலை கிடையாது என்று சொன்னதாம். சீன அரசு போலவே ஹோட்டலுக்கும் தன் வியாபாரத்தில் தான் அக்கரை. சுரீந்தர் சிங்கின் மதம் பற்றி ஏதும் அக்கறை இல்லை.
சைனாவை ஒரு சமயம் சார்ஸ் அசுரத்தனமாகத் தாக்கியது. சீன அரசு அதை மறைத்தது. ஒப்புக்கொள்ள மறுத்தது. ஆனால் அது விஷவேகத்தில் பரவவே, இந்த மின் இணைய யுகத்தில் எதை மறைக்க முடியும்? உடனே சார்ஸ் தாக்குதலை ஒப்புக்கொண்டு அந்தத் தாக்குதலிலிருந்து மீண்டது அரசு தீவிரத்தையும் செயல் உத்வேகத்தையும் காட்டியது. ஆயிரம் படுக்கைகள் கொண்ட ஒரு பெரிய மருத்துவ மனை ஏழே நாளில், ஏப்ரல் 24லிருந்து 30க்குள் கட்டி முடிக்கப்பட்டது. அதில் 1200 டாக்டர்கள் நர்ஸுகள்.
ஒரு ஊரையே முதலாளிகளின் பங்களா வாசிகளாக மாற்றிய ஒரு தொழிலதிபர் கூறுகிறார்:” எங்களூர் மக்கள் கம்பெனி பங்குகள் வைத்திருக்கிறார்கள். நல்ல டிவிடெண்ட் வருகிறது. இது முதலாளித்துவம். எல்லோருக்கும் இலவசமாகக் கல்வி, மருத்துவ உதவி கிடைக்கிறது. இது கம்யூனிசம். மாதா மாதம் சம்பளம் போனஸ் எல்லாம் கிடைக்கிறது. இது சோஷலிசம். இப்படி எல்லாவற்றிலிருந்தும் நல்லதை எடுத்துக்கொள்கிறோம். கெட்டதைத் தள்ளி விடுகிறோம்”
இன்னொரு மேற்கோள்; ”ஆண்டாம் அடிமை என்ற நிலபிரபுத்துவ வேற்றுமை மறைந்தது அதற்குப் பதிலாக கட்சிக்காரன் மற்றவன் என்ற புதிய கோணத்தில் அதிகாரமும் சலுகைகளும் சிலருக்கு மாத்திரம் அமோகமாகக் கிடைத்தன” ( தமிழ் நாட்டைச் சொல்வதாக யாரும் நினைத்துக்கொள்ள வேண்டாம் அந்த நினைப்பு சரியென்றே தோன்றினாலும் சொல்லப்படுவது சைனாவைப்பற்றி.) .
கடைசியாக, “ஜனநாயக இந்தியாவை விட சர்வாதிகார சீனாவில் தான் குடிமக்கள் சுயமரியாதையுடன் வாழ்கிறார்கள்” இது பல்லவி அய்யர் ஒரு கட்டுரையில்.
சீனா: விலகும் திரை (பல்லவி அய்யர்) தமிழில் ராமன் ராஜா: கிழக்கு பதிப்பகம். 33/15 எல்டாம்ஸ் ரோட், ஆழ்வார் பேட்டை. சென்னை – 18 ப. 357 விலை ரூ 200