புரவலர் புத்தகப் பூங்காவின் 38 ஆவது வெளியீடாக மா. பாலசிங்கம் எழுதிய தழும்பு என்ற நாவல் வெளி வந்திருக்கிறது. இதுவரை ஒரு நூலைத் தானும் வெளியிடாத பல புதிய எழுத்தாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள புரவலர் புத்தகப் பூங்கா இதுவரை 38 எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டிருப்பது சாதனைக்குரிய விடயம். தன் தாய் மொழியாகத் தமிழைக் கொண்டில்லாதபோதும் நம் தாய் மொழித் தமிழுக்கு புரவலர் புத்தகப் பூங்காவின் நிறுவுனரான புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்கள் ஆற்றிவரும் சேவை மகத்தானது. போற்றப்பட வேண்டியது.
தழும்பு என்ற இந்நூலில் வீடு வந்த வசந்தம், தழும்பு ஆகிய இரண்டு நாவல்கள் உள்ளடக்கப்பட்டு 196 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. இந்நூலாசிரியரான மா. பாலசிங்கம் அவர்கள் ஈழத்து இலக்கியத் துறையில் என்றும் நினைவுகூரத்தக்கவர். நூல் விமர்னங்கள் பலதை எழுதி வருவதுடன், நூல் வெளியீடுகளுக்கு சமூகமளித்து அந்நூல் வெளியீடு பற்றிய அனைத்துத் தகவல்களையும் பத்திரிகையில் காத்திரமாக எழுதி வரும் ஒரு சமூகப் பொறுப்பு மிக்கவர். சற்றும் தளராது இலக்கியத்துக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு எழுத்தாளர்களை நாடறியச் செய்து கொண்டிருப்பவர். இவர் ஏற்கனவே இப்படியும் ஒருவன், எதிர்க்காற்று, மா.பா.சி. கேட்டவை ஆகிய மூன்று நூல்களை வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நூலில் காணப்படும் முதல் நாவலான வீடு வந்த வசந்தம் என்ற நாவலே எனது ரசனைக் குறிப்புக்காக இங்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
இலங்கைத் திருநாட்டில் ஏற்பட்டு யுத்தமும் அது தந்த வடுக்களும் அனுபவித்தவர்களுக்கு அதை வாழ்நாளிலேயே மறக்க முடியாது. நாடுவிட்டு நாடு ஓடி அகதிகளாக புகலிடங்களில் தஞ்சம் புகுந்து ஏராளம் துன்பங்களை அனுபவித்துள்ளார்கள் அந்த மக்களில் பலர். அந்நிய நாட்டிலிருந்துகொண்டு சொந்த நாடு பற்றிய ஏக்கங்களைச் சுமந்து பிறந்த மண்ணை மீண்டும் பார்ப்போமா என்றே தெரியாமல் வாழ்ந்து மடிந்தவர்களும் ஏராளம். அத்தகையதொரு சூழலைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலே வீடு வந்த வசந்தம் என்ற நாவலாகும்.
இந்நாவலின் பிரதான பாத்திரமான ஐங்கரன் இலங்கையைவிட்டு வெளிநாடு போய் பத்து வருடங்கள் கழித்து தன் சகோதரியைப் பார்ப்பதற்காக இலங்கை வருகின்றான். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த ஐங்கரனுக்கு அவனது அண்ணன் பாஸ்கரனுக்கும் தாயாக தந்தையாக இருந்தவர்களும் அவர்களது அக்காவான ஈஸ்வரமும் அவளது கணவன் பசுபதியும்தான்.
நாட்டில் நிலவிய பயங்கர சூழலில் தன் உடன்பிறப்பை இழந்துவிடக்கூடாது என்ற உந்துதலில் பசுபதியின் வற்புறுத்தலில் ஈஸ்வரம் தன் தாலிக்கொடியை அடகுவைத்து ஐங்கரனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கின்றாள். அத்தகைய அக்காவையும் அவளது கணவனையும் தன் பெற்றோரைப் போல எண்ணி மரியாதை செய்யும் ஐங்கரன் பத்து வருடங்கள் கழித்து நாட்டுக்கு வந்து தன் நண்பன் அழகேந்திரனின் உதவியோடு அக்காவைச் சந்திக்க முனைகின்றான்.
அக்காலத்தில் இருந்த சில வரைமுறைகளை மேற்கொண்டு அக்காவுக்காகக் காத்திருக்கும் அவன் தூரத்தே வெள்ளைப் புடவையணிந்து ஆடியாடி நடந்து வரும் பெண்ணைக் கண்டு மனதுக்குள் மிகவும் வேதனைப்படுகின்றான். இந்த யுத்தம் எத்தனைப் பேரின் வாழ்க்கையைச் சிதைத்துவிட்டது. அதில் எத்தனை விதவைகள், தபுதாரர்கள், அநாதைகள் என்றெல்லாம் எண்ணி வருந்தியவன் அருகே வந்த பெண், தன் அக்கா என்று அறிந்ததும் ஆடிப்போய் கதறி அழுகின்றான். அவளது கணவன் பசுபதி ஷெல்லடிபட்டு இறந்துவிட்ட செய்தியை அறிந்து பெருமூச்சு விட்டவாறு தங்கள் மாமாவான மாயவரை பார்க்க அழைத்துப் போகின்றார்.
மாயவரின் மகள் கனகாவைத்தான் ஐங்கரனின் அண்ணாவான பாஸ்கரனுக்குத் திருமணம் முடிக்க பேசியிருக்கின்றார்கள். ஆனால் அவனோ அடுத்த மாதம்.. அதற்கடுத்த மாதம்.. என்று காலத்தைக் கடத்தி சுமார் ஒரு வருடங்கள் கனகாவைக் காக்க வைக்கின்றான். பாஸ்கரன் கனகாவைத் திருமணம் செய்ய மாட்டேன் என்று ஐங்கரனுக்கு அறிவிக்க அவன் அதைத் தன் அக்கா ஈஸ்வரம் மூலம் மாயவருக்கு புரிய வைக்கின்றான். அத்தோடு தான் கனகாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறுகின்றான் ஐங்கரன்.
ஒருத்தரால் வஞ்சிக்கப்பட்ட கனகா அதே குடும்பத்தைச் சேர்ந்த இன்னொருவனுக்கு வாழ்க்கைப்பட விரும்பாமல் பிடிவாதம் பிடிக்க அந்தத் துயரம் தாங்காமல் மாயவர் இறந்து போகின்றார். வாழ்க்கையை இழந்த கனகா ஏமாற்றத்தோடு மனமுடைந்து காணப்படுகின்றாள்.
தன் சகோதரன் செய்த தவறுக்கு தான் பிராயச்சித்தம் தேடி கனகாவை மணமுடிக்க தயாரான ஐங்கரனுக்கு தற்போது என்ன செய்வது என்ற தெரியாத நிலையில் இருக்கின்றான்.
கனகாவின் தோழி மைதிலி. யுத்தத்தின்போது ஒரு காலை இழந்துவிட்டு தற்போது கொழும்பில் வேலைத் தேடிக் கொண்டிருக்கின்றாள். அழகேந்திரனின் வற்புறுத்தலாலும் மைதிலியின் அழகு, அறிவாலும் கவரப்பட்ட ஐங்கரன் அபலைப் பெண்ணுக்கு வாழ்வளிப்பதாய் எண்ணி மைதிலியை மணமுடிக்கச் சம்மதிக்கின்றான்.
யுத்தம் பலரது வாழ்வை சின்னாபின்னப்படுத்தியதற்கு உதாரணம் பாஸ்கரன் வெளிநாட்டில் வெள்ளைக்காரப் பெண்ணை மணமுடித்து குழந்தையும் இருக்கத்தக்க கனகாவை மணமுடிப்பதாக ஏன் பொய் சொல்ல வேண்டும்? தன்னால் முடியாது என்றும் தான் ஏற்கனவே திருமணம் முடித்தவன் என்றும் ஏற்கனவே பாஸ்கரன் சொல்லியிருந்தால் மாயவர் கனகாவுக்கு வேறு துணையைத் தேடியிருக்கக் கூடும்.
கனகாவின் வாழ்க்கை போல் எத்தனை பேதைப் பெண்கள் தமது வாழ்க்கையை இழந்திருப்பார்கள் என்று எண்ணுகையில் மனதில் துயர் மேகம் படர்கின்றது. அதுபோல உறவுகளை மறந்துவிடாமல் தன்னைக் கரையேற்றிய அக்காவைப் பார்க்க பத்து வருடங்கள் கழிந்த நிலையில் அதே பாசத்துடன் திரும்பி வந்த தம்பி ஐங்கரனால் நாவலின் துயரம் சற்று மட்டுப்படுத்தப்படுகின்றது. மைதிலிக்கும் வாழ்க்கை அமைந்துவிட்டமை சற்று ஆறுதலான விடயம்.
ஐங்கரனின் நண்பன் அழகேந்திரனின் உதவியால் ஈஸ்வரத்தின் மகனும் வெளிநாடு செல்லக் கூடிய நிலமை உருவாகியமை நட்பின் புனிதத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது.
இந்நாவலில் காணப்படும் ஒவ்வொரு பாத்திரமும் நெஞ்சில் நிலைத்துவிடுகின்றது. முன்னால் நடந்துகொண்ருக்கும் சம்பவத்தைப் பார்ப்பது போன்ற தத்ரூபத்தை நூலாசிரியரின் கதைசொல்லும் பாங்கு ஏற்படுத்துகின்றது. தெளிவான எழுத்தோட்டம். அலட்டல்களில்லாலத சொற்பிரயோகங்கள் நாவலை இறுதிவரை வாசிக்கத் தூண்டுகின்றது.
சிறுகதை, நாவல் துறைகளில் இன்னும் சிறப்பாக செயற்பட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென பிரார்த்தித்து நூலாசிரியர் மா. பாலசிங்கம் அவர்களை வாழ்த்துகிறேன்!!!
நூலின் பெயர் – தழும்பு
நூலின் வகை – நாவல்
நூலாசிரியர் – மா. பாலசிங்கம்
வெளியீடு – புரவலர் புத்தகப் பூங்கா
poetrimza@gmail.com