நூல் அறிமுகம்: வாழும் சுவடுகள்

நூல் அறிமுகம்: வாழும் சுவடுகள்எழுத்துத்துறையில் இயங்கிவரும் பலரும் தமிழில் ‘இளையோர் இலக்கியம் வளரவில்லை’ என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள். எந்தவோர் இலக்கியமும் வளர்வதற்கு அது சார்ந்த அடிப்படைத் தரவுகள், மேலதிகத் தகவல்கள் கிடைக்க வேண்டியது அவசியம். அவை பெரும்பாலும் அபுனைவு (Non-fiction) எழுத்துகளில்தான் நிரம்பிக்கிடக்கின்றன, அபுனைவு எழுத்திற்கும், புனைவுகளின் எண்ணிக்கைக்கும் உள்ளார்ந்த தொடர்பிருக்கிறது. உதாரணமாக, கடந்த நாற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ், தமிழ் அரசர்கள், அவர்களின் ஆட்சிமுறை குறித்த ஆய்வுசுள் பெருமளவு நடைபெற்றன. அந்த ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் கண்டறிந்த தகவல்களைப் படைப்புகளாகத் தொடர்ந்து வெளியிட்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாகவே கல்கியும், சாண்டில்யனும், பூவண்ணனும், ஏனைய பல முன்னோடிகளும் புனைவுகளை எழுதினர். இன்னொருபுறம் வெகுஜனத்தளத்தில் பண்டைய தமிழக வரலாற்றை அடிப்படையாகக்கொண்ட திரைப்படங்கள் வெளியாகி பெரும் வெற்றிபெற்றன.

ஏதோவொரு துறையின் ஆராய்ச்சித் தகவல்களால் சர்க்கப்படும் ஒருவர்தான் அதுபற்றிய புனைவை எழுத இயலும். கடந்த பல பதிற்றாண்டுகளாகத் தமிழில் துறைசார்ந்த அனுபவங்கள் பகிரப்படுவது குறைந்தது நமது துரதிர்ஷ்டமே. அறிவியலும் தொழில்நுட்பமும் வேறெப்போதும் இல்லாத அளவில் முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில் அவை சார்ந்த படைப்புகள் உருவாக வேண்டியது மிக அவசியம், ஆனால் ஒரு துறையில் அனுபவம் கொண்டவர் எழுதும் திறன் படைத்தவராக இருப்பதில்லை. அத்திறன் கொண்டோர் பல சட்டச்சிக்கல்கள், நடைமுறை பிரச்சினைகள் காரணமாகத் தங்கள் அனுபவங்களை எழுதுவதில்லை . இதில் அரசு, தனியார்துறை என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.

மேற்கத்திய நாடுகளில் குறைந்தபட்சம் அவரவர் துறையில் சந்தித்த சவால்களை மட்டுமாவது ஆவணப்படுத்தி வருகின்றனர். இது எதிர்காலத்தில் அதே வகையான பிரச்சினைகளைச் சந்திக்க நேரும் இளையோருக்குப் பயன்தருவதோடு, அவற்றில் இருக்கும் சுவாரஸ்யம் பல புதியவர்களை அத்துறைக்குள் இழுத்துவரச் செய்கிறது. தாங்கள் படித்த புத்தகத்தால் ஈர்க்கப்பட்டு ஒரு கலையை, அறிவியலை, தொழில்நுட்பத்தைக் கற்றுத் தேர்ந்து, பிறகு படைப்பாளியாகவும் மாறிய பலரை நாம் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

 

மேற்கண்ட வகையிலான எழுத்திற்கு மிகச்சிறந்த உதாரணமாக எழுத்தாளர் ஜேம்ஸ் ஹேரியட்டைக் கூறலாம். பிரிட்டனைச் சேர்ந்த அவர் ஒரு கால்நடை மருத்துவர். தனது பணியின்போது ஏற்பட்ட அனுபவங்களைத் தொடர்ந்து கதை வடிவில் எழுதினார். அப்புதிய வடிவமும், அவர் பகிர்ந்துகொண்ட அனுபவங்களும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. அவை தொகுக்கப்பட்டு All Creatures Great and Small, All Things Brighi and Beautiful, All Things Wise and Wonderful என்ற பெயர்களில் தொகுப்புகளாகக் கிடைக்கின்றன. இன்றும் அப்படைப்புகள் பல்லாயிரம் வாசகர்களால் விரும்பி வாசிக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் அவற்றை வாசிக்கும்போது இவைபோன்ற நூல்கள் தமிழில் இல்லையே என்ற ஏக்கம் நம்மைச் சூழ்வது. இயல்பு, இந்நிலையில்தான் நொயல் நடேசன் எழுதி காலச்சுவடு வெளியிட்டிருக்கும் வாழும் சுவடுகள் நூலை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜேம்ஸ் ஹேரியட் போலவே நடேசனும் கால்நடை மருத்துவர்தான். ஆனால் ஹேரியட் போல ஆங்கிலேயக் கனவானாக வாழும் வாழ்க்கை நடேசனுக்கு அமையவில்லை. போரால் துரத்தியடிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள், கிடைத்த நிலத்தில் தரையிறங்கி, தங்களுடைய வேர்களை அங்கேயே ஊன்றிக்கொள்வது நாமறிந்த கதைதான். அவர்களில் ஒருவரான நடேசனும் தனது அறுந்து போன வேர்களோடு சென்று சேர்ந்த நிலம் – ஆஸ்திரேலியா.

இப்புத்தகத்தில், தன்னிடம் சிகிச்சைக்காகக் கொண்டுவரப்படும் விலங்குகளைப் பற்றி மட்டுமல்லாது, அவற்றின் இனம் சார்ந்த குணம், அவற்றை வார்க்கும் மனிதர்களின் இயல்பு, அவர்களது பொருளாதார, உடல், மனநெருக்கடிகள் குறித்து நுணுக்கமான அவதானிப்புகளைப் பதிவு செய்துள்ளார். ஓரினச்சேர்க்கையாளராக இருக்கும் ஒரு பெண்ணிற்கு அந்தவொரு காரணத்திற்காகவே பணி வழங்க வேண்டாம் என்கிறான் நண்பன். ‘அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்’ என்று நினைக்கும் நடேசனோ அப் பெண்ணிற்கு மருத்துவர் பணி கிடைக்கப் பரிந்துரைக்கிறார். ‘மூன்றாம் உலக நாடு ஒன்றில் வாழ்ந்த, இனவாதத்தால் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மனிதன் வேறு என்ன மாதிரியான முடிவை எடுக்க முடியும்?’ என்று நமக்குத் தோன்றலாம். ஆனால், இந்தியாவில் இடப்பங்கீடு ஒழிக்கப்பட வேண்டும், கருவறைக்குள் நுழையக்கூடாது என்று கூறுவது, அமெரிக்கா சென்றாலும் சாதியைச் சுமப்பது என்றெல்லாம் ஒருசாரார் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில், நடேசனின் இந்த நடவடிக்கை சமத்துவம் குறித்த ஒரு பாடத்தை முன்வைக்கிறது.

யானை ஒன்றைக் கொன்ற குற்றவாளிகள் சிக்கிவிட்டார்கள் என்பதாலேயே அதைப் பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என்கிறது காவல்துறை. அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரு மாதத்திற்கு முன்னர் கொல்லப்பட்ட அந்த யானையின் உடலில் எஞ்சியிருப்பவை குவியலான எலும்புகள் மட்டுமே, மிக முக்கியமாக அதன் தலையைக் காணோம். இந்த நிலையில் இளம் மருத்துவர் நடேசன் அழைக்கப்படுகிறார் கோடாலியின் (???) உதவியுடன் யானையின் தலை ஆராயப்படுகிறது. இதே சூழல் ஒரு மேற்கத்திய மருத்துவருக்கு ஏற்பட்டிருந்தால் என்னவாகியிருக்கும் என்ற கேள்வி நமது மனதில் எழுகிறது. அநேகமாக வேலையை விட்டுச் சென்றிருப்பார். இல்லையா?

பக்தி என்ற பெயரில் மயில்களை ஓர் அறையில் அடைத்து வளர்ப்பதனால், அவற்றில் ஒன்று இறந்து போகிறது. கடவுள் வாகனம் இறந்தபிறகு வெட்டவெளியில் தூக்கியெறியப்படுவது எவ்வளவு அபத்தம் என்பதை நகைச்சுவையாக விவரிக்கிறார். அதற்குப்பதில் இந்துக்கடவுளின் வாகனத்தைக் கிறிஸ்தவ முறையைப் பின்பற்றி அடக்கமாவது (புதைப்பது) செய்திருக்கலாம் என்று அவரது நவீனத்துவ மனம் சிந்திக்கிறது. வேறென்ன செய்வது? – கருணைக்கொலையை ஒரு தீர்வாகப் பார்க்கும் மருத்துவர் நடேசன் தனது நாய்க்கு அத்தகைய முடிவை வழங்குவதற்கு மிகவும் யோசிக்கிறார். இப்படியாக மேலும் சில வாரங்களைக் கடத்துகிறார். குடும்ப உறுப்பினர்கள் அச்சூழலை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள், இறுதியில் அவர் என்னதான் முடிவெடுத்தார் என்று நிதானமாக விவரிக்கிறார். அதை வாசித்து முடிக்கும்போது, மனிதரோ, விலங்கோ தன்னிலை இழப்பதைவிட மரணத்தைத் தழுவுவதே மேலானது என்று நமக்குத் தோன்றுகிறது. இதிலிருக்கும் அனுபவங்கள் ஒவ்வொன்றும் சிறுசிறு கேள்விகளை நமக்குள் எழுப்பிச்செல்கின்றன.

பதின்பருவத்தில் வாசிக்கும் நூல்கள் மனிதர்களின் சிந்தனையில் நிலைத்த தாக்கத்தை ஏற்படுத்த வல்லவை. பொதுவாக நூல்களை வாசிக்கும் இளையோர் அவற்றில் சுவாரஸ்யமான தகவல்கள் நகைச்சுவையுடனும், விறுவிறுப்புடனும் கூறப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பு. அதேசமயம் அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது வாசித்த கதைகளிலிருந்த கற்பனை உலகிற்கு மாறாக நிற உலகம், வாழ்க்கைப் போராட்டங்கள் குறித்த காட்சிகளை முன்வைக்க வேண்டியது எழுத்தாளரின் கடமை.. அவ்வகையில் இந்நூல் விலங்குகளும், மனிதர்களும் நெருங்கி வாழும் ஒரு நடைமுறை உலகத்தின் வாசல்களை இளம் வாசகர்களுக்குத் திறந்துவைக்கிறது.

uthayam12@gmail.com