நூல் அறிமுகம்: வெளிவிட்ட ஏ.சீ. ஜரீனா முஸ்தபாவின் பொக்கிஷம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

நூல் அறிமுகம்: வெளிவிட்ட ஏ.சீ. ஜரீனா முஸ்தபாவின் பொக்கிஷம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம் - வெலிகம ரிம்ஸா முஹம்மத் -ஓர் அபலையின் டயரி, இது ஒரு ராட்சஷியின் கதை, 37 ஆம் நம்பர் வீடு, அவளுக்குத் தெரியாத ரகசியம் ஆகிய நான்கு நாவல்களைத் தொடராக வெளியிட்டு நாவல் துறையில் பிரபலமான ஒரு நாவலாசிரியராக மிளிர்ந்துகொண்டிருக்கும் திருமதி ஏ.சீ. ஜரீனா முஸ்தபா நாவல்கள் தவிர ரோஜாக் கூட்டம் என்ற சிறுவர் கதைத் தொகுதியையும், யதார்த்தங்கள், மீண்டும் ஒரு வசந்தம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். பொக்கிஷம் இவரது கவிதைத் தொகுதியாகும்.

இலக்கியத் துறையில் சுமார் 30 வருட காலம் அநுபவம் மிக்கவர், ஸ்ரீ ஜயவர்தனபுர பிட்டகோட்டையில் பிறந்து, கடுவெல வெளிவிட்டயில் தற்போது வசித்து வருகின்றார். தமிழ் மொழி மூலம் கற்காத இவர் சென்மேரீஸ் மத்திய கல்லூரியில் சிங்கள மொழியிலேயே கல்வி கற்றுள்ளார். தன்னார்வத்தோடு தமிழைக் கற்று தமிழ் மொழியிலேயே இலக்கியம் படைத்து வருகின்றார். 1985 – 1987 காலப்பகுதிகளிலேயே வெண்ணிலா, மதூகரம் போன்ற சஞ்சிகைகளுக்கு இணை ஆசிரியராக செயல்பட்டு வந்துள்ளார். அந்தக் காலங்களிலேயே இலங்கை வானொலிக்கு நாடகங்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி தனது திறமையை வெளிப்படுத்தி வந்துள்ளார். பிற்பட்ட காலங்களில் இவரது நாவல்கள் வீரகேசரி, மித்திரன் ஆகிய பத்திரிகைகளில் தொடராக பிரசுரமாகியுள்ளன.

பேனா வெளியீட்டகத்தின் மூலம் 80 பக்கங்களை உள்ளடக்கியதாக பொக்கிஷம் என்ற கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. இந்த நூலில் 38 கவிதைகள் இடம்பிடித்துள்ளன. அறிவுறை கூறும் வகையிலும், சமூக நோக்கிலும் எழுதப்பட்ட கவிதைகளே நூலெங்கும் விரவிக் காணப்படுகின்றன. இன்னும் சில படைத்துப் பரிபாலிக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்காகவும், இறைவனுடனான அன்பை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளன.

இந்த நூலுக்கு, ‘ஜரீனா முஸ்தபா தந்த பா பொக்கிஷம்’ என்ற தலைப்பில் கவிஞர் கிண்ணியா அமீர் அலி வாழ்த்துரையொன்றையும், தென்னிந்தியாவின் பிரபல எழுத்தாளர் நஸீர் அஹமட் (ஆலயம்பதி ராஜா) அவர்களின் மதிப்புரையொன்றையும் வழங்கியுள்ளார். நூலாசிரியர் தனதுரையில் 30 வருட காலம் இலக்கியம் படைத்து வந்தாலும் கவிதை நூலொன்றை வெளியிட முன்வராமல் தாமதித்து இருந்ததற்கான காரணத்தை முன்வைத்துள்ளார்.

இனி இவரது சில கவிதைகளைப் பார்ப்போம்.

நீதான் (பக்கம் 17) என்ற கவிதை இறைவனின் தயவை வேண்டி நிற்பதாக அமைந்திருக்கின்றது. மனிதனுக்கு துன்பங்கள் ஏற்படும் போது இறைவனின் உதவியை நாடுவதும் இன்பங்களின் போது இறைவனை மறப்பதும் மனித இயல்பாக மாறிவிட்டது. ஆனால் எல்லா சந்தர்ப்பங்களிலும் இறைவனின் கருணையை நாம் எதிர்பார்த்து அவனிடமே மீள வேண்டும் என்பதை இக்கவி வரிகள் நன்கு உணர்த்துகி;ன்றன. நீ தரும் சோதனைகளின் போதும் வேதனைகளின் போதும் எனதுள்ளத்தினைப் பலவீனப்படுத்தாதே.. என் ஏகனே பலப்படுத்து.. நீ தரும் துன்பங்களின் போதும் துயரங்களின் போதும் எனதெண்ணங்களைத் துருப்பிடிக்கச் செய்யாதே என் ஏகனே தூய்மைப்படுத்து.. காத்திருக்கிறேன் உன் சோதனைகளுக்காக.. அஞ்சவில்லை நீ தரும் வேதனைகளுக்காக.. திக்கற்ற இத்தரணியிலே தவிப்புற்று வாடவில்லை!!!

வேண்டாம் (பக்கம் 20) என்ற கவிதை விரோதம் வளர்ப்பவர்களுக்கு சாட்டையடியாக அமைந்திருக்கின்றது. உறவுகள் இன்று பேணப்படுவது அரிது. தானும் தன் குடும்பமும் என்று ஒதுங்கி வாழ்பவர்கள் சொந்த பந்தங்களை நண்பர்களை எல்லாம் மறந்து துறந்து வாழ்கின்றனர். சின்ன சின்ன மனஸ்தாபங்களுக்கு பகை பாராட்டித் திரிகின்றனர். என்றோ நடந்த தவறுகளுக்கு காலம் முழுவதும் தண்டனையை வழங்கி தானும் துயருருகின்றனர். இப்படியெல்லாம் இருந்துவிட்டு பின் ஒருவரின் மரணத்தின்போது அவரது வீட்டுக்குச் சென்று கவலைபப்படுகினறனர். இருக்கும்போது உறவில்லாமல் இருந்துவிட்டு இறந்தபின்பு உறவுகொண்டாடுவதில் எவ்விதப் பலனும் இல்லை என்பதை கீழுள்ள வரிகளில் நிதர்சனமாக உணரலாம்.

சுமந்து செல்லக் கூடும் ஒரு நாள் என்னை ஜனாஸாவாக.. இன்று பிணிகளுக்கும் துன்பங்களுக்கும் வராத நீ.. அன்றும்; வேண்டாம் வர.. போலிக் கண்ணீர் சிந்த.. உறவாடல்கள் யாவும் உயிரோடும் உணர்வோடும் வாழும் உறவுகளுக்கே.. உயிர் போனால் உடல் வெறும் கூடு.. அதனோடு ஓர் உறவு எதற்கு? வேண்டாம் போலிக் கண்ணீர்.. கருணை கரையும் வார்த்தைகள்  எதுவுமே.. உயிரோடு உறவாடாத உறவுகள் எதுவும் வேண்டாம் உயிருக்கும் பின்னாலும்!!!

மனசாட்சியே விடை சொல் (பக்கம் 26) என்ற கவிதையின் வரிகள் சிந்திக்கத்தக்கதாக அமைந்திருக்கின்றது. தீமைகளின் பால் விரைந்தோடிச் செல்லும் மனித மனம், நன்மைகளை செய்வதில் பொடுபோக்காகவும் அசமந்தமாகவும் தொழிற்படுகின்றது. நன்மைகள் செய்வதற்காக ஏவும்போது அதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இருக்கின்றதா என்று வாதாடுபவர்கள் தீமை செய்கையில் அதற்கு ஆதாரம் இருக்கின்றதா என்பதை எண்ண மறுக்கின்றார்கள். நன்மைகள் புரிவதற்கு ஓய்வுநேரம் இல்லை என்பவர்கள் வீண் பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதற்கு நேரம் ஒதுக்கிக்கொள்கின்றார்கள். அவர்;களுக்காக எழுதப்பட்டுள்ள கவிதை வரிகள் பின்வருமாறு,

தீமைகளை தடுக்கும் போதும் நன்மைகளை ஏவும் போதும் ஆதாரங்களை கேட்டு அடம்பிடிக்கின்ற மனிதனே.. தீமைகளைத் தூண்டும் போதும் பாவங்களைச் செய்யும் போதும் ஆதாரங்கள் தேட மறந்து போவதும் ஏனோ? அருள் மறையை ஓதுவதற்கும் ஹதீஸ்களை அறிவதற்கும் ஓய்வுகளில்லையெனப் புலம்புகின்ற மனிதனே.. தொல்லை தரும் தொலைக்காட்சியிலும் சீரழிக்கின்ற சினிமாவிலும் சீரியல்களிலும் சிதைந்துகொண்டிருக்கின்ற உன் சிந்தனைகள் சிதறிப் போவதும் ஏனோ? உனது மனசாட்சியிடமே தேடு ஆதாரத்தை நன்மைகளை வெறுக்கும் போதும்.. தீமைகளை நாடும் போதும்!!!

தூது செல் மேகமே (பக்கம் 39) என்ற கவிதையின் ஆரம்ப வரிகள் காதலனிடம் துது சொல்வதைப் போல இருப்பது ரசனைக்குரியதாகின்றது. எனினும் இறுதியில் இது இறைவனுக்காக எழுதப்பட்ட மிகச் சிறந்த கவிதையாக அமைந்திருக்கின்றமை கவிதையின் சிறப்பாகும்.

வான் மேகங்களே தூது செல்லுங்களேன்.. என் தலைவனிடம் சென்று சொல்லுங்களேன்.. அவனையே எண்ணி ஒரு ஜீவன் வாழுதென்று.. அல்லும் பகலும் உள்ளம் உருகுதென்று.. அவனைக் காணும் ஆவல் எல்லை மீறுதென்று.. இராப் பகல் ஏக்கம் கூடுதென்று.. உள்ளமும் உணர்வும் அவன் நிழல் தேடுதென்று.. அவனுக்காக மனம் மெழுகாய் உருகுதென்று..

மனிதம் தேடுது மனசு (பக்கம் 74) கவிஞரின் எதிர்பார்ப்புக்களை அள்ளித் தெளித்திருக்கின்றது. தூய நட்பு என்ற சொல்லுக்கான அர்த்தம் மருவி போலிகளே மேலோங்கியிருப்பது கண்கூடு. ஒருசிலர் நட்பை மதித்து காலங்காலமாக நட்புக்கு மதிப்பு கொடுத்தாலும் பல முகங்கள் பொய் முகங்களாகவே காணப்படுகின்றன. இதயங்கள் துருப்பிடித்து இரக்க குணத்தை இழந்து விட்டிருக்கின்றன. இவை இல்லாமலாகி இனிய நேசம், இனிய உறவுகள், துரோகம் நினைக்காத உறவுகள் வேண்டும் என்ற நூலாசிரியரின் ஆதங்கம் நியாயமானது.

தூய நட்பு வேண்டும் – மனம்
துறந்து பழக வேண்டும்
துன்யாவில் தேடுகிறேன்
துரோக இதயம் உண்டு
குரோத பழக்கம் உண்டு
துயரில் வாடி நின்றேன்

இனிய நேசம் வேண்டும்
இதமாய்ப் பழக வேண்டும்
இறைவனிடம் வேண்டி நின்றேன்
இனிக்க பழக்கம் கொண்டு
இடியாய் புழக்கம் கொள்ளும்
இதயமே காணுகின்றேன்..

சமூக சீர்திருத்தங்களை நோக்காகக் கொண்டே இந்த நூலாசிரியர் கவிதைகளை யாத்துள்ளார். இவர் காதல் கவிதைகளை எழுதவில்லை. காதல் தவிர்த்து இவரது கவிதைகளில் யதார்த்த விடயங்களே பரவலாகப் பேசப்பட்டுள்ளன. வெறும் பொழுது போக்கிற்காக எழுதப்பட்ட கவிதைகளாக இவற்றை பார்க்க முடியாது. சமூக சீர்திருத்தத்தை விரும்பும் நூலாசிரியர் ஏ.சீ. ஜரீனா முஸ்தபாவுக்கு வாழ்த்துக்கள்!!!

நூல் – பொக்கிஷம்
நூல் வகை – கவிதை
நூலாசிரியர் – ஏ.சீ. ஜரீனா முஸ்தபா
தொலைபேசி – 0115020936, 0115050983
வெளியீடு; – பேனா வெளியீட்டகம்
விலை – 250 ரூபாய்

poetrimza@gmail.com