அறிஞர் அ.ந.கந்தசாமி நினைவு தினம் பெப்ருவரி 14!
எழுத்தாளர் சில்லையூர் செல்வராசனும் (தான்தோன்றிக் கவிராயர்), அறிஞர் அ.ந.கந்தசாமியும் நீண்ட கால நண்பர்கள். இள வயதிலேயே கொழும்புக்கு வாழ்க்கையில் நீச்சலடிக்க வந்தவர்கள் இவர்கள். அ.ந.க.வுடனான் தனது அனுபவங்களைச் சில்லையூர் செல்வராசன் அவர்கள் ‘கந்தனுடன் உள்ளம் கலந்த சுவைக் கணங்கள்!’ என்னுமிக் கவிதையில் பதிவு செய்துள்ளார். வீரகேசரி, 16-2-1986 பதிப்பில் வெளியான இக்கவிதை அவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. அ.ந.க.வின் புகழ்பெற்ற நாவலான ‘மனக்கண்’ நாவலைச் சில்லையூர் இலங்கை வானொலியில் வானொலி நாடகமாக்கி வெளியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருமுறை பண்டிதர் ஒருவர் சில்லையூர் செல்வராசனின் கவிதைகளை வெற்றுச் செய்யுள் என்று விமர்சித்தபோது அதற்கெதிராகச் சில்லையூர் செல்வராசனின் கவிதைச் சிறப்பை வெளிப்படுத்தும் ‘தான்தோன்றியார் கவிதைகள் Blank verse ஆ?’ என்றொரு ஆய்வுச்சிறப்பு மிக்க கட்டுரையினை எழுதியவர் அ.ந.க என்பது குறிப்பிடத்தக்கது.
கவிதை; கந்தனுடன் உள்ளம் கலந்த சுவைக் கணங்கள்! – சில்லையூர் செல்வராசன் –
நேற்றுத் தான் போல் என் நினைவில் தெரிகிறது…
சோற்றுக் கவலை, துணிக்கவலை, அன்றாட
வீட்டுக் கவலை, கல்விவித்தை தொடர வழி
காட்டித்துணை செய்து கொடுக்க யாரேனும்
இல்லாக் கவலை, இவற்றைச் சுமந்த சிறு
பிள்ளையாய், இந்தப் பெரிய கொழும்பு நகர்க்
கோட்டையிலே வந்திறங்கி குறுகி மனம் பேதலித்து,
வேட்டி, சட்டையோடு வெளிக்கிட்டுத், தட்டார
வீதியில் என்றன்று விலாசம் இடப்பட்ட
சேதித்தாள்க் கந்தோரைச் சென்றடைந்த அந்த நாள்..
நேற்றுத் தான் போல் என் நினைவில் தெரிகிறது…
மாற்றில் உயர்ந்து மதிப்புக்குரித்தான
நல்ல சிறுகதையை நான் எழுதிப் போட்டியிலே
வெல்ல முதற்பரிசை விடலைப் பருவத்திற்
சித்தித்த வெற்றிக்கென் சிந்தை பலியாக
தித்திப்பை ஊட்டிய அத்திக்கில் தொடர்ந்து மனம்
போக்கி, எழுத்தே என் போக்கிடமாய் கொள்வதெனும்
ஊக்கம் மிகுதுறவே, ஒரு கோடி கற்பனைகள்
பேதைக் கனாக்கள் பிடித்தாட்டும் மொய்வெறிபோற்
போதையுடன் புறப்பட்டு மூ பத்து ஐ
வருடங்களின் முன்னால் வந்து, கொழும்பில் இளம்
பருவத்திற் போய் அந்தப் பத்திரிகைக் கந்தோரின்
‘கேற்றை’த் திறக்க கிடைத்த வரவேற்பு,
நேற்றுத் தான் போல் என் நினைவில் தெரிகிறது…
‘நீங்களா?’ என்று நிமிர்ந் தென்றன் சிற்றுருவம்
தாங்கா வியப்பைத் தனக்களித்த சங்கதியைச்
சொன்னான் ஒருவன்; அந்தச் சொல் ஒன்றினை குழைவாய்
கண்ணியமாய்,கச்சிதமாய்,கனமாய், நிதானமுமாய்
வெட்டியளந்து விறுத்தமாய், கனிவூற
ஒட்டுறவாய், பிறரை உருவு கண்டு எள்ளாத
பண்போடு மரியாதைப் பன்மை விகுதியிட்டுச்
சொன்ன விதத்தில், அதைச் சொன்னவனின் ஆளுமை என்
சின்ன மனதிற் செறிந்து பதிந்துறையப்,
பின்னர் அவனுடன் பின்னிப் பிணைந்தெனது
வாழ்வின் செம்பாதி வளைந்து நடக்கின்ற
சூழ்வுற்ற தென்று நான் சுதாரித்த அந்த நொடி,
நேற்றுத் தான் போல் என் நினைவில் தெரிகிறது…
கூற்றுப் பிரித்து அவனைக் கொண்டோடிப் போய்விட்ட
ஈற்று வருடம் வரை பின் நிகழ்ந்ததெல்லாம்
நேற்றுத் தான் போல் என் நினைவில் தெரிகிறது..
‘சப் எடிட்டர்’ப் பட்டம், அனுபவங்கள் தந்த தழும்பு
ஏறித் தழும்பேறி எழுதுகோல் கொண்டு மனத்து
ஊறிக் குதிர்ந்த உணர்வு அறிவு மாக்கடலை
மத்துக் கடைந்து, மதுரக்கலை அமுதைப்
பொத்தி எடுத்துப் புதுமை விருந்து படைத்து,
‘ஆ’னா வரிசை அடைந்து எழுத்தர் முன்னணியிற்
பேனா நிமிர்த்திப் பிடிக்கின்ற வல்லமையைத்
தானும் பெறுகின்ற தருணத்தில், தன்னோடு
நானும் பெறுமாறு நல்வழிகள் காட்டியவன்
‘கந்தன்’ எனச் செல்லக்கனிவுப் பெயர் கொண்டு
பந்தமுடன் நான் அழைத்த பரிவு மனமுடையான்.
எந்தக் கணமும் இலக்கியத்துக்கே உயிரைச்
சொந்தம் கொடுத்துச் சுகம் அழித்துக் கொண்டமகன்!
வாழ்வு முழுவதையும் வைத்தான் கலைக்கென்றே!
தாழ்வென்று மற்றோர்கள் தள்ளும் பழக்கங்கள்
ஒழுக்க வழக்கங்கள் என்கின்ற வேறுபாடான நெறித்
தடங்கள் அவன் சிந்தனைக்குத் தடங்கல் புரிந்ததில்லை!
சடங்கு முறையான சம்பிரதாயங்கள் எல்லாம்
தூக்கியெறிந்து, துணிந்து,புதுவேக
நோக்கும், நடப்பும், நுணுகிப் பொருள் ஆய்ந்து
பார்த்துச் ‘சரி இந்தப் பார் உயர’ என்றுணர்ந்த
நேர்த்திக் கருத்தை, நின்று நெற்றிக்கு நேராக
ஓங்கி எறிந்து அடித்தே உறைப்பாகச் சொல்திறனும்
ஆங்காரம் இன்றி உண்மை அறிவு நெறிமாணவனாய்
எந்தக் கணமும் இருக்கின்ற தன்னிறைவும்
நிந்தை கலவாமல் நேர்மையுடன் கண்டிப்புச்
செய்கின்ற போதும் திகழ்கின்ற கண்ணியமும்
வைகின்ற பேர்களையும் வாசாலகமாக
வாதாடி நா மடங்க வைக்கின்ற வல்லமையும்
தீதாடிச் சமூகத்தில் திரியும் பிற்போக்குகளைக்
கண்டால், உளம் உயிர் மெய்க் கரணங்கள் அத்தனையும்
விண்டு ஆடிப்போனது போல் வெந்து வெந்து போராடும்
உண்மை உளக்கலப்பும் ஒருங்கே திரண்ட பெரும்
திண்மை, அவன் ‘நடத்தை’- கலைச்சிருஷ்டி இரண்டினிலும்
தோய்ந்திருக்கக் காணக்கொடுத்து வைத்த பாக்கியன் நான்.
ஓய்ந்திருக்கான். வாடி, உடல் நோயில் ஆழ்ந்திருந்த
வேளையிலும் நோய்க்கட்டில் மீதிருந்து கால் மீது
தாளை வைத்து நூலெழுதித் , தாழாதுஎம் நாட்டெழுத்து
மேன்மை விளங்க விடாமல் உழைத்தவன்! செந்
தேன் போற் கருத்துத் தெறிக்கும் அவன் படைப்பில்!
‘ஸோலா’வின் ‘நானா’ சுவைத் தமிழில் தந்தநாள்;
மேலானதென்று ஈ.வே.ரா.பெரியார் பாராட்டி,
‘விடுதலை’யிலே தொடராய் வெளியிட்ட ஆய்வு சுடர்
விடும் ‘சிலம்புக் கட்டுரைகள் விநோதப் புனை நாமம்
பண்டிதர் திருமலைராயர் என்று பூண்டெழுதிக்
கண்டாய் அளித்திட்ட காலம்; திருச்சியிலே
வானொலியில் இலக்கண வரம்பு முறை பற்றித்
தேனொலிகள் செய்த தினம்; என்றிவ்வாறாக
‘எதிர்காலச் சித்தன்’ எனும் பாடல்; சிந்தனைகள்
முதிரக் கடவுளையே முந்த முந்தத் தன்னுடைய
‘சோர நாயகன்’ என்று சொல்கின்ற தீம்பனுவல்;
வேறதிக மேதகைமை மிளிரும் படைப்புகளும்,
‘மனக்கண்’, ‘களனிவெள்ளம்’; மற்றும் வெளியாகாப்
புனைப்புகள் பற்பலவும் புத்தறிவு போதிக்கும்
‘வெற்றியின் இரகசியங்கள்’ விளக்கும் நூல் ‘மதமாற்றம்’
முற்றிலும் நாடகத்துறை முதிர்விக்கக் கூர்தமிழில்
செய்தளித்துச் சென்ற திருக்கலைஞன் கந்தனது
மெய்யாம் திறமைகளை மிகவும் தெரிந்தவன் நான்.
பந்தமுடன் ஒன்றாய்ப் பணியாற்றிப் பல்லாண்டு
சிந்தைகலந்து ஒரே வீட்டிற் சேர்ந்திருந்தும் வந்ததனால்
கந்தன் எழுதாத காவியங்கள் நானறிவேன்!
சிந்தையுடன் கொண்டு சென்ற செய்திகளும் நானறிவேன்.
முற்போக்கா, பிற்போக்கா, முதுதமிழா ஊர்வழக்குத்
தற்காலப் பேச்சு நடைதானா தகுந்ததென்றும்
,கலை கலைக்கா, மக்களுக்கா கதை முன்பிருந்ததுண்டா,
தொலை நாட்டுப் பண்புகளும் தொல்தமிழுக்கேற்றதுவா
உருவமா உள்ளடக்கம் தானா உயர்ந்ததென்றும்
‘அரிவரி மாணாக்கர்களுக்கான வெறும் ஆரம்பச்
சில்லறை வாதங்களிலே சிக்கித் தடுமாறி
செல்லரிசி விட்டு வெறும் நெற்பதரைச் சோறாக்கிக்
கொண்டிருக்கும் எங்கள் குறுமதி சூழ் கூட்டத்தார்க்கு
எண்டிசையும் போற்றவல்ல எண்ணங்கள் ஏற்காதென்று
எண்ணிச் சிறிதளவே எடுத்தும் படைத்துத், தன்
எண்ணக் கலத்துள்ளே எத்தனையோ அற்புதங்கள்
கொண்டு சென்றான் கந்தன்! அவன் கூடக் கலந்துஅறிவு
மண்டும் அரியமதி விருந்து சாப்பிட்ட
நூற்றுக் கணக்கான நொடிகள்-சுவைக் கணங்கள்
நேற்றுத் தான் போல் என் நினைவில் தெரிகிறது.
வீரகேசரி, 16-2-1986