– இந்நிகழ்வு பற்றிய அறிவித்தலைத்தவறவிட்டுவிட்டோம். வருந்துகின்றோம். ஒரு பதிவுக்காக இங்கே பிரசுரமாகின்றது. -பதிவுகள் –
நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி பழையமாணவர் மன்றம் ஏற்பாடு செய்துள்ள நெய்தல் நூல் வெளியீட்டு அரங்கு எதிர்வரும் 28-02-2015 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு கல்லூரி மண்டபத்தில் நடைபெறும். மன்றத்தின் தலைவரும் நீர்கொழும்பு மாநகராட்சி மன்ற பிரதிநிதியுமான திரு. சதிஸ் மோகன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த அரங்கில் வெளியிடப்படும் நெய்தல் நூல் நீர்கொழும்பின் வாழ்வையும் வளத்தையும் விரிவாகப்பதிவுசெய்துள்ளது. இக்கல்லூரியின் வைரவிழாவை முன்னிட்டு கல்லூரியின் முதல் மாணவரும் படைப்பிலக்கியவாதியுமான திரு. லெ. முருகபூபதி இந்நூலை தொகுத்துள்ளார்.
வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் கல்லூரியின் பழையமாணவர்கள் எழுதியிருக்கும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், விமர்சனங்கள், ஆய்வுகளை உள்ளடக்கியது இந்நூல். சங்க இலக்கியத்தில் இடம்பெறும் கடலும் கடல் சார்ந்த பிரதேசமுமான நெய்தல் நிலப்பரப்பின் மகிமையை பதிவுசெய்யும் வகையில் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ள இந்நூலில் அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, கனடா, துபாய், மற்றும் இலங்கையில் வதியும் பலர் எழுதியுள்ளனர்.
நீர்கொழும்பு வரலாற்றுப்பின்னணிகளைக்கொண்டதும் வெளிநாடுகளிலிருந்து வருகைதரும் உல்லாசப்பயணிகளை பெரிதும் கவரும் காட்சிகளைக்கொண்டதுமான கடல்வளம் மிக்க மாநகராகும்.
1954 ஆம் ஆண்டு 32 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட விவேகானந்த வித்தியாலயமே அதன் ஸ்தாபகரும் நீர்கொழும்பின் முதலாவது தமிழ் நகரபிதாவுமான விஜயரத்தினம் அவர்களின் பெயரில் கம்பஹா மாவட்டத்தில் இயங்கும் இந்து மத்திய கல்லூரியாகும். இங்கு பயின்ற பல மாணவர்கள் தற்பொழுது பல நாடுகளில் படைப்பிலக்கியவாதிகளாகவும் கலைஞர்களாகவும் குறும்பட இயக்குநர்களாகவும் ஆய்வாளர்களாகவும் இயங்குகின்றனர்.
நிகழ்ச்சிகள்
நெய்தல் நூல் வெளியீட்டு அரங்கில் முதல் நிகழ்வாக முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் பெற்றோர்கள் , மாணவர்கள் கல்லூரி வாயிலில் வரவேற்கப்படுவர்.
கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கல்லூரி ஸ்தாபகர் அமரர் எஸ்.கே. விஜயரத்தினம் அவர்களின் உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு கல்லூரி ஆவணக்காட்சியகம் திறந்துவைக்கப்படும்.
அரங்கின் பிரதம அதிதிகள் மங்கள விழக்கேற்றி நிகழ்ச்சிகளை தொடக்கிவைப்பர்.
மறைந்த அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழையமாணவர்களுக்கான மௌன அஞ்சலியைத்தொடர்ந்து கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம்பெறும்.
வரவேற்புரையை எழுத்தாளர் திரு. முத்துலிங்கம் ஜெயகாந்தன் நிகழ்த்துவார்.
கல்லூரி பழைய மாணவர் மன்றத்தின் தலைவர் திரு. சதீஸ்மோகன் தலைமையுரையும் திருமதி திலகமணி தில்லைநாதன் ( முன்னாள் ஆசிரியர்) திரு. நா. புவனேஸ்வரராஜா. (தற்போதைய அதிபர்) திரு. நடராஜா , திரு. ந. கணேசலிங்கம் { முன்னாள் அதிபரகள்) ஆகியோர் வாழ்த்துரைகளையும் நிகழ்த்துவர்.
திரு. வீ. தனபாலசிங்கம் ( பிரதம ஆசிரியர் – தினக்குரல்) திருமதி அன்னலட்சுமி இராஜதுரை ( ஆசிரியர் – கலைக்கேசரி ) மல்லிகை ஜீவா ஆகியோரின் சிறப்புரையும் இடம்பெறும்.
கனடாவிலிருந்து வருகை தந்துள்ள கல்லூரியின் முன்னாள் மாணவர் கவிஞர் நீர்கொழும்பு ந. தருமலிங்கம் வாழ்த்துப்பா வழங்குவார்.
நெய்தல் நூல் நயப்புரைகளை படைப்பாளி, ஊடகவியலாளர் திரு. கருணாகரன் – கொழும்பு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள அதிகாரி திருமதி தேவகுமாரி ஹரன் – மூத்த படைப்பாளி தெளிவத்தை ஜோசப் , கவிஞர் மேமன்கவி, மூத்த எழுத்தாளர் ஜனாப் மு. பஷீர் ஆகியோர் நிகழ்த்துவர்.
நெய்தல் நூலை தொகுத்திருக்கும் மூத்த எழுத்தாளர் திரு. லெ. முருகபூபதி ஏற்புரையையும் பழைய மாணவர் மன்றத்தின் செயலாளர் திரு. ஆர். அரவிந்தன் நன்றியுரையையும் நிகழ்த்துவர்.
விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் பயிலும் ஆறு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் இந்த அரங்கில் இடம்பெறும். குறித்த புலமைப்பரிசில்களை அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் வழங்குகிறது. பழைய மாணவரும் கல்லூரியில் தற்பொழுது ஆசிரியராக பணியாற்றுபவருமான திரு. சுதாகரன் நிழ்ச்சிகளை தொகுத்து அறிவிப்பார்.