நேதாஜிதாசன் கவிதைகள்!

நேதாஜிதாசன் கவிதைகள் 5!1)  பயப்படுதல்

என் கவிதையை கண்டு பயப்படுகிறேன் .
அதில் பொய்களும் உண்மைகளும் கனவுகளும் கலந்திருக்கின்றன.
அதிலுள்ள பொய்கள் எனக்கு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகின்றன .
மேலும் அதிலுள்ள உண்மைகள் எனக்கு பெருமையை ஏற்படுத்துகின்றன.
அதிலுள்ள கனவுகள் எனக்கு மயக்கத்தை தருகின்றன.
சில நேரம் அந்த கவிதைகள் என்னை கேலியாக பார்க்கின்றன.
சில நேரம் அந்த கவிதைகள் என்னை அடையாளம் காட்டுகின்றன .
எனக்கு என் கவிதையை கண்டால் பயமாக இருக்கிறது.
அதனால் பிரார்த்திக்கிறேன் “தயவு செய்து என் கவிதைகள் காலத்தை தாண்டி நிற்க வேண்டாம்; ஏழைகளின் அருகில் நண்பனாக உட்கார்ந்திருந்தால் அது போதும்”

2)  ஆச்சரியப்படல்

என் கவிதையை கண்டால் எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
இந்த உலகம் என் கவிதைக்குள் மாட்டிக்கொண்டு என்னிடம் கேட்கிறது என்னை விடுவி.
அங்கு வெள்ளை மாளிகை, கிரெம்ளின் என அத்தனை அதிகார பீடங்களும் அடைபட்டு கிடக்கிறது.
என் கவிதையின் கொடி பறக்கிறது அனைத்து அதிகார பீடங்களிலும் .
என் கவிதையின் வார்த்தைகள் அதன் அருகில் உள்ள வார்த்தைகளுடன் பேசிக்கொள்கின்றன.
என் கவிதையின் வார்த்தைகள் காத்திருந்த வாசகனிடம் புதிரை கேட்காமல் பதிலை சொல்லி புதிரை சொல் என கேட்கிறது .
என் தாயை முதல்முறை பார்த்தது போல ஆச்சரியமாக உள்ளது என் கவிதையின் சாகசங்களை பார்க்கும்போது.
என் காகிதம் என்னை ஆச்சரிய குறியிடு என கெஞ்சுகிறது
அதே சமயம் என் பேனா என்னை மீறி ஆச்சரியக்குறியிட்டு மகிழ்கிறது .

3)  சந்தேகப்படல்

என் கவிதையை நான் சந்தேகப்படுகிறேன் .
நேற்று என் எதிரியின் வீட்டில் இருந்து வெளிப்பட்டது.
அதற்கு இரண்டு நாள் முன்பு என்னை சிறையில் அடைத்து வைத்திருந்த சர்வதிகாரியின் வீட்டிலிருந்து வெளிவந்தது.
அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு எனது அரசியல் நிலைபாட்டிற்கு எதிரான குழுவின் அலுவலகத்தில் இருந்து வெளிவந்தது.
அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு என் காகிதத்தில் கறுப்பு பூனைக் குட்டி போல அமைதியாக படுத்துகிடந்தது .
இப்போது என் எதிரி ஜெயித்துவிட்டான் .
இப்போது அந்த சர்வதிகாரி பக்கத்து நாட்டையும் பிடித்துக் கொண்டான்.
இப்போது எனது அரசியல் நிலைபாடு தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது என குற்றம் சாட்டுகிறார்கள் .
எனக்கு என் கவிதை மீது சந்தேகமாக இருக்கிறது.
அதில் இருக்கும் படிமங்கள் என்னிடம் வெளிப்படையாக நடந்து கொள்ளமாட்டேன் என்கிறது .
என் கவிதையை நான் சந்தேகப்படுகிறேன் .
அதேநேரத்தில் எனது காகிதத்தின் வெறுமையை வெறுக்கிறேன் .
யாரிடம் உதவி கேட்க ?

4) வெட்கப்படல்

என் கவிதையை சிரிக்க வைக்க முயன்று அது என்னை சிரிக்க வைத்தது தனது ஆடையை கழற்றி என் மீது வீசி.
என் கவிதையின் ஆடைகள் சுத்தமாக இருந்தது.
என் கவிதை “என் ஆடையை அழுக்காக்கி தா” என்றது.
அப்படியே செய்தேன்.
நிலவின் சிறுநீரிலும் இரவின் வியர்வையிலும் பூக்களின் எச்சிலும் தேய்த்து துர்நாற்றம் வீச அதனிடம் கொடுத்தேன்.
அது “கண்ணை மூடு,எனக்கு வெட்கமாக உள்ளது ” என திடீரென சொன்னது.
சரி என சொல்லிவிட்டு திருட்டுத்தனமாய் என் ஆண்மை விரைக்க கவிதை ஆடையணிவதை ரசித்தேன் .

5) அறிவிப்பு

எனக்கு கவிதையின் அத்தனைமரபுகளையும் மீறவேண்டும்
தயவு செய்து கவிஞன் என என்னைச்
சொல்லாதே.

எனக்கு ஒரு பெயர் உண்டு
எதிர்க்கவிஞன் கவிதையின்
கட்டுக்கதைகளை
உங்களிடம்
சொல்ல வந்தேன் .

படிமம் என்பார். உருவகம்
என்பார். ஏதோ
மேட்டுக்குடி சொத்து    போல
கொள்வார்.
அஞ்சாதே
நாங்கள்
வந்துவிட்டோம்
சிலியில்
இருந்து
அழுக்குச்சட்டையுடன்.

suryavn97@yahoo.com