மலேசிய இலக்கியத்தின் இன்றியமையாத சிறுகதை எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர், , முன்னாள் கெடா மாநில எழுத்தாளர் கழக தலைவர். கெடா மாநிலம் தந்த தமிழ்ச்சுடர் சுங்கைபட்டாணி க. பாக்கியம் விருதுகட்கு அப்பாற்பட்டவர்.பெண் எழுத்துக்களை மலேசிய வரலாற்றில் பதிவு செய்தே ஆகவேண்டும் என மூன்று தலைமுறை எழுத்தாளினிப் பெண்களை தேடித் தேடிக் கண்டடைந்தவர். வள்லலார் மண்டபம் எழுப்பிய பெருமைமிகு பெண்மணி. பெண்ணிலக்கியவாதிகளுக்காக இவர் வெளியீடு செய்த ஆய்விலக்கிய நூல் வரலாற்றில் இவர் பெயர் சொல்லும். வள்லலார் மண்டபம் எழுப்பிய பெருமைமிகு பெண்மணி. நேர்காணல்: கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர்) –
கேள்வி 1:மலேசிய பெண் படைப்பாளர்களில் முதன் முதலில் நூல் வெளீயீடு செய்தவர் என்ற பெருமையை பெற்றவர் நீங்கள். அந்த நெகிழ்ச்சியான தருணத்தை எங்களிடம் பகிர்ந்து கொள்ளலாமா?
மலேசியத் தமிழிலக்கியத் துறையில் தொடர்ச்சியான நூல் வெளியீடுகள் நடைபெற்ற காலகட்டம் 1970/1980பதுகள் எனலாம். மலேசியத் தமிழிலக்கிய வரலாற்றில் இலக்கியத் தரம் உச்சத்திலிருந்த காலகட்டம் அது. தரமிக்க இலக்கியவாதிகள் வரிசை பிடித்திருந்த காலம். பத்திரிகைத் துறையிலும் இலக்கியப் பரிச்சயமிக்க பத்திரிகை ஆசிரியர்கள் சூழ இருந்தனர். இலக்கிய போட்டிகளை அன்றைய தமிழ்ப் பத்திரிகைகள் முன்னெடுத்தன. சிங்கப்பூர் இலக்கிய களமும் தன் பங்குக்கு தரமிக்க இலக்கியத்தை அடையாளம் காட்ட முனைப்புடன் செயல்பட்டது.
மலேசிய சிங்கப்பூர் இலக்கியவாதிகளின் தரம் எவ்வித பாரபட்சமுமின்றி அடையாளம் காணப்பட்டு இலக்கிய வெளியில் பதிவு செய்யப்பட்டது. பத்திரிகைகள், இலக்கிய அமைப்புகள் என இலக்கியவாதிகளை உருவாக்கவும், அடையாளப் படுத்தவும் பெரிதும் முனைப்புக் கொண்டு செயல்பட்ட மிக உன்னதமிக்க அந்தக் காலகட்டத்தில் நூல் வெளியீடுகளும் ஆங்காங்கே பரபரப்பாக நிகழ்ந்து கொண்டிருந்தன. இலக்கியப் போட்டிகளில் வெற்றி கொள்ளும் முனைப்பும், தரத்தை உயர்த்திக் கொள்வதில் விளைந்த முயற்சிகளும் அக்காலகட்டம் மலேசிய இலக்கியவானில் உதயம் கொண்ட பொற்காலம்.
அக்காலகட்டத்தில் பெண்ணிலக்கியவாதிகளில் பலர் இலக்கிய உலகில் கோலோச்சிக் கொண்டிருந்தனர். ஆண் பெண் என்ற பேதமில்லாமல் தரத்தைப் பதிவு செய்வதில் உற்சாகத்தோடு செயல்பட்டிருந்தனர்.
அச்சூழலில், நூல் வெளியீடும் எண்ணம் என்னுள் துளிர் விடத் துவங்கியது. இலக்கியப் போட்டிகளில் வென்றதும் சிங்கப்பூர் இலக்கிய களத்தின் வழி அன்றைய பிரபல தமிழிலக்கியவாதிகளால் தேர்வு செய்யப்பட்டு பாராட்டுப் பெற்ற எனது சிறுகதைகள் என என்னுள் இலக்கியத் தாகம் ஊற்றெடுத்ததன் விளைவாக புத்தக வடிவில் பதிவு செய்வதில் முனைப்புக் கொண்டேன்.
சுங்கைபட்டாணி மகாத்மா காந்தி நினைவு மண்டபத்தில் நூல் வெளியீடு நடந்தது. ‘முரண்பாடுகள்’ எனும் எனது முதல் நூல் 1978-ல் வெளியீடு கண்டது. இலக்கிய வெளியில் என்னுடைய பெயர் பரவலாக அறிமுகமாகியிருந்த நிலையில் அரங்கம் நிறைந்த கூட்டம். மேடையில் நடுவில் நான் அமர்ந்திருக்க எனது இருபுறமும் அன்றைய பிரபல பெண்ணிலக்கியவாதிகள் அமர்ந்திருந்தனர். திருமதி கமலாட்சி ஆறுமுகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நூல் வெளியீட்டில், திருமதி வி,தீனரட்சகி நூலாய்வு செய்ய அனைத்து நிகழ்ச்சிகளிலும் பெண்கள் முன்னின்று பொறுப்பேற்று நடத்தினர். இலக்கிய வரலாற்றில் அன்றைய தினம் மட்டுமல்ல இன்று வரையில் முற்றிலும் பெண்களைக் கொண்டு ஒரு நூல் வெளியீடு நடந்ததில்லை என்பது வரலாறு. ஆனால், என்னுடைய நூல் வெளியீடுகள் மட்டுமே இதில் விதிவிலக்கு. 2013-ல் மீண்டுமொருமுறை ‘மலேசியத் தமிழிலக்கியத்தில் பெண்ணிலக்கியவாதிகள்’ எனும் நூல் வெளியீடு பெண்களைக் கொண்டே நடத்தப்பட்டது மலேசிய இலக்கியத் துறையின் பெருமிதமிக்க வரலாற்றுப் பதிவு
“நெகிழ்ச்சியான தருணம்” பற்றி வெளிப்படுத்தும் வார்த்தைகளை இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறேன்.
கேள்வி 2:: நூல் வெளியீட்டிலும் புதுமை செய்தவர் நீங்கள். முதல் நூல் பெறுனராக தோட்டப்புறத்தில் வாழ்ந்த ஒரு பாட்டாளிப் பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டுமென தோன்றிய அந்த முதல் வித்து விழுந்த நொடி என்னவாக இருந்தது.
எனது ஆசிரியர் தொழிலின் ஆரம்பமே தோட்டப்புறத் தமிழ் பள்ளியிலிருந்தே துவங்கியது. மிகவும் உட்புறத் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பணிபுரிய வாய்ப்பளிக்கபட்டது. தோட்டப்புற வாழ்க்கையைப் பற்றிய அனுபவமே முதன் முதலாக இங்கிருந்து தான் நான் பெற்றேன், லயத்திலிருந்து (வீட்டிலிருந்து) பள்ளிக்கு வரும் மாணவர்கள், அவர்களின் வறுமையான சூழல், பெற்றோர்களின் வாழ்க்கைப் போராட்டம் கடும் உழைப்பு, அடிமை வாழ்வு, இவற்றுக்கிடையே தோட்டப்புற தமிழ்ப் பள்ளிகள் மட்டுமே அன்றைய கால கட்டத்தில் தமிழ் மொழியை வளர்க்கும் களங்களாக விளங்கின. தோட்டத்தில் வளர்ந்த ரப்பர் மரங்கள் கூட தமிழ் மொழியை கேட்டு வளர்ந்த சூழல் அன்று. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என இன்று ஒலித்துக் கொண்டிருக்கும் நிலை, அன்று தோட்டப்புறச் சூழலில் இயல்பாகவே, நிகழ்ந்ததை நான் உணர வாய்ப்புக் கிடைத்தது. தாய்ப்பாலோடு தமிழ்ப்பாலையும் தமிழ் குழந்தைகளுக்கு உயிர் வளர்க்க மட்டுமல்ல உணர்விலும் பதிய தமிழ்த் தாலாட்டுப் பாடிய அன்னையர் என் மன வெளியில் பதிவு பெற்றனர்.
ஒரு பத்தாண்டுகள் காலம் மூன்று தோட்டப்புற சுயம் சார்ந்த தமிழ்ச் சூழலில் என் தமிழ்ப் போதனையோடு, என்னையும் தமிழ் வளர்த்தெடுத்தது. பின்னர் 29 ஆண்டுகள் நகர்ப்புறத் தேசிய மொழி ஆங்கில மொழி பள்ளிகளில் எனது தமிழ்மொழிப் போதனை தொடர்ந்த போது, முற்றிலும் வேறுபட்டதொரு சூழலில் எனது அனுபவம் தொடர்ந்தது.
எனினும் 10 ஆண்டுகள் கால தோட்டப்புறத் தமிழ் பள்ளிகளின் சூழல், அங்கு பயின்ற மாணவர்கள், பாட்டாளி மக்கள், அவர்களின் தமிழுணர்வு இன்றளவும் என் உள்ளுணர்வில் பதிவு பெற்றுள்ளது. மலேசியாவில் ஆரம்பத்தில் தமிழ் வளர்ந்ததும், வாழ்ந்ததும் தோட்டப்புறத்தில் என்பது தமிழ் மொழி வரலாற்றில் மறுக்க முடியாத பதிவு.
எனவே எனது முதல் நூல் வெளியீட்டில் இந்நாட்டில் தமிழ் வாழ முதல் வித்தூண்றிய அந்தப் பாட்டாளி மக்களுக்கு எனது நன்றிக் கடனாக ஒரு பாட்டாளிப் பெண்ணைத் தேர்வு செய்து அன்றைய நூலின் விலையான RM 2.00 கொடுத்து முதல் நூலைப் பெறும் வாய்ப்பினை மனங்கனிந்து அந்தக் தமிழ் வளர்த்த தாய்க்கு நான் வழங்கினேன்.
அன்றைய கால கட்டத்தில் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த நூல் வெளியீடுகளில் அதிகளவு பணம் கொடுத்து மேடையேறிய அரசியல்வாதிகள் தலைமை தாங்க இலக்கியம் விலை போய்க் கொண்டிருந்த நிலையில் முற்றிலும், பெண் இலக்கியவாதிகளை மேடையேற்றி அவர்களுக்கு முதன்மையும், முன்னுரிமையும் வழங்கியதை இலக்கிய உலகம் வியந்து பார்த்தது. தமிழ்ப் பத்திரிகைகள் பாராட்டின
கேள்வி 3:” ‘பெண்ணியம்’ உங்கள் பார்வை?
“பெண்ணுரிமை” ஆணை சார்ந்த நபராக இல்லாமல் பெண் தனி நபராக மதிக்கப்பட வேண்டும் என்றும் ஆணுக்கு இருக்கும் உரிமைகள் வாய்ப்புகள் எல்லாம் பெண்ணுக்கும் வேண்டும் என்றும் கோரும் நிலைப்பாடு ( Womens’ rights, Feminism).
‘பெண்ணியம்’ எனப்படும் பெண்ணுரிமைக்கு ‘கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ அளித்துள்ள விளக்கமே மேலே காணப்படும் வரிகள்.
இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டில் எப்போதும் இல்லாத அளவு பெண்ணியம் பற்றி உரத்துப் பேசப்படுகின்றது. ஆணுக்குரிய உரிமைகள் போன்று பெண்ணுக்கும் உரிமைகள் உண்டென்ற அடிப்படையில் கோரிக்கைகள் எழுப்படுகின்றன என்றாலும் போராடி பெறுகின்ற நிலை மாறி இன்றைய பெண்கள் தங்கள் உரிமைகளை தாங்களே ஆளுகின்ற கால நிலை நேர்ந்திருக்கின்றது.
இயற்கையில் விளைந்த அரிய உணர்வுகளால் சூழ்ந்த பெண்மைக்கு வசந்தமாக உலவி மனித உயிர்களை வாழ்விக்கும் அற்புதமான உணர்வு அமைந்துள்ளது என்றாலும் பெண்களுக்கு என்று இயல்பாகவே பிறப்புரிமைகள் (ஆணைப் போன்று) இயற்கையில் வகுக்கப்பட்டுள்ளது என்பதை மறுப்பதற்கான காரணங்கள் எதுவுமில்லை.
அவளுக்குரிய இயல்பான பிறப்புரிமைகள் மறுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு அவளுடைய உணர்வுகள் அடிமைப்படுத்தப்படும் போதே. அவளுடைய உரிமைக்குரல் உரத்து ஒலிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்த உரிமையினை ‘பெண்ணியம்’ என முத்திரையிட்டு உலகம் ஏற்றுக் கொண்டு விட்டது. இத்தகையதொரு நிலை உருவானது பெண்மைக்கு நேர்ந்த அவலம், அநீதி என்ற உணர்வை இந்த ‘பெண்ணிய உணர்வு’ உருவாக்கியுள்ளது. இந்த அவல நிலை ஏன் நேர்ந்தது?
உலகில் உறையும் அனைத்து உயிர்களின் இயல்பு நிலையில் மற்றவை குறுக்கீடு செய்வதில்லை. ஆனால். மானுடத்தில் விளைந்த பெண்ணுக்கு மட்டும் தனித்த உரிமைக் குரல் எழுப்பும் நிலை? இந்நிலை இன்று நேற்று ஏற்பட்டதல்ல.
உடல் வலிமை கொண்ட ஆண், பெண்ணை அடக்கியாள முற்பட்ட புராண காலம் தொட்டே உருவான அவல நிலை இது. கணவன் இறந்தால் மனைவியும் உடன் கட்டை ஏற வேண்டும் என்ற ‘சதி’யும் வல்லமை கொண்ட ஆணின் சுய நலத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே.
மானுடத்திற்கென வகுக்கப்பட்ட உயரிய அறநெறிகள் இயல்பாகவே மானுடத்தின் உள்ளுணர்வுகளில் விதைக்கப்பட்டே பிறப்பெடுக்கப்படுகிறது. புற வாழ்க்கைச் சூழலில் இவை அனைத்தும் கால வெளியில் கரைந்து போய் கீழ் நிலையில் உலக மானுடம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆண் என்றால் ஆள்பவன் பெண் என்றால் அடிமை என்ற தத்துவம் காலம் காலமாய் யுகம் யுகமாய் பெண்ணுணர்வில் விதைக்கப்பட்டு பெண் முற்றிலும் அடிமைத்தனத்தின் ஆழத்தில் புதையுண்டு போனது மானுடத்தின் கரைபடிந்த வரலாறு.
.பெண்ணியம் என்பது ஆணுக்கு நிகராக அறநெறி பிறழ்ந்து வாழ்வதல்ல. அறநெறி கோட்பாடுகள் சார்ந்த பிறப்புரிமைகளுடன் மேலாதிக்கத்துடன் உலகை வழி நடத்தும் திறனே பெண்ணியம்.
பெண்ணியம் எனும் புரிதலில் இன்று முரண்கள் இருப்பதை காண முடிகிறது. குடும்ப கட்டமைப்பில் ஆணுக்குரிய உரிமைகள் போன்று பெண்ணுக்குரிய உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும். இது வரையறைக்குப்பட்டதல்ல. புரிதலின் அடிப்படையில் உணர்வுகளுக்கு முன்னுரிமையும், மரியாதையும் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை முன்னெடுத்தல். பெண்ணின் சுயமரியாதை, தன்மானம் ஆகியவற்றுக்குரிய முன்னுரிமையும் பெண்ணியத்தின் உள்ளடக்கம்.
‘நடு இரவில் ஒரு பெண் நகைகள் அணிந்து எவ்வித இடர்களும் நேராமல் தன்னந் தனியே நடந்து செல்வது தான் உண்மையான சுதந்திரம் என்றார்’ காந்தியடிகள்.
‘ஆறு மாதக் குழந்தையிலிருந்து 60 வயது முதிய பெண்மணி வரையில் பாலியல் வன் கொடுமைகளுக்கு ஆளாகும் நிலை எப்போதும் இல்லாத அளவு இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரு பெண் பாலியல் தாக்குதலற்று தனித்து சுதந்திரமாக இயங்க முடியும் என்ற சூழலை உருவாக்குவதே உலகப் பெண்கள் முன்னெடுத்துள்ள ‘பெண்ணியம்’ என்ற உயர்ந்த உன்னத லட்சியத்தின் கோட்பாடாக நிலை பெறும் நாளே பெண் விடுதலை பெறும் நன்னாள்.
கேள்வி 4: மலேசிய பெண்ணிலக்கியவாதிகளுக்காக முதல் ஆய்வு மேடை அமைத்த வரலாற்றுக்கு சொந்தக்காரர் நீங்களாக இல்லாமலிருந்தால் பெண் படைப்பாளர்கள் பற்றிய இன்றைய கண்ணோட்டம் எப்படி அமைந்திருக்கும்?
பெண் எழுத்துக்கான ஆய்வு மேடை அமைத்ததற்கு முன்பும் பின்புமான என்னுடைய கண்ணோட்டத்தில் எவ்வித முரண்களும் இல்லை.
ஆய்வரங்கில் அரங்கேற்றப்பட்ட பெண் எழுத்தாளர்களின் படைப்புகளான சிறுகதை, நாவல், கட்டுரை, மரபுகவிதை, புதுக்கவிதை என ஒவ்வொரு துறை சார்ந்த படைப்புகளையும் வாசிக்கும் அற்புதமான வாய்ப்பு கிடைத்ததில் எம் பெண்களின் உழைப்பு என்னை பிரமிக்கச் செய்து பெருமிதம் கொள்ள வைத்தது.
ஆய்வரங்கம் அமைப்பதற்கு முன் ஓர் ஐம்பதாண்டுகள் கால பெண்களின் இலக்கியங்களை முழுமையாக வாசிக்கும் வாய்ப்பில்லை யெனினும், அவர்களின் இலக்கிய உழைப்பு, அதற்கான சூழல், இலக்கியத்தில் கொண்ட தணியாத தாகம் என பெண்களின் இலக்கிய முன்னெடுப்புகளை பெரிதும் மதிதத்தன் விளைவே பின்னாளில் (2011 – 2013) நான் எம் பெண்களுக்காக அமைத்த இலக்கிய ஆய்வரங்கம்.
அவ்வாய்வரங்கத்தில் படைக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும்
‘மலேசியத் தமிழிலக்கியத்தில் பெண்ணிலக்கியவாதிகள்’ புனைவிலக்கிய வரலாற்றுக் பதிவு எனும் தலைப்பில் நூலுருவம் பெற்று கடந்த 23-2-2013-ல் கடார மண்ணில் வெளியீடு செய்யப்பட்டது.
இன்று அந்த நூல் ஐந்து நாடுகளின் நூலகங்களில் இடம் பெற்றுள்ளதோடு, ஆய்வுகளுக்கும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நூல் எம் பெண்களின் இலக்கிய உழைப்பு காலங்கடந்தும் மலேசிய இலக்கிய வெளியில் மட்டுமல்ல அதனைக் கடந்தும் பயணித்து நிலைபெறும் என்பதே இம்முயற்சிக்கான எனது இலக்கு.
“எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண் இங்கே இளப்பில்லை காண்,,,!” எனும் பாரதியின் முழக்கம் மலேசிய பெண் எழுத்தின் வழி மெய்ப்பட்டுள்ளது.
கேள்வி 5: அண்மைய தங்களின் படைப்பான “இருட்டறையுள் போர்க்களம்” சிறுகதையை வாசிக்கும் வாய்ப்பில் அக்கதை என் மன வெளியை அதிர வைத்து நிரந்தரமாகிப் போனது. இதனை பெண்களுக்கு நேர்ந்த உட்ச பட்ச கொடுமை எனக் கொள்ளலாமா?
இன்று நேற்றல்ல பல நூற்றாண்டுகளாக பெண்களுக்கு இக்கொடுமை நேர்ந்து வருகிறது. திருமணமாகாமல் மரணமெய்தும் பெண்களை கன்னி கழிக்காமல் மண்ணில் புதைக்கக் கூடாது என்ற சம்பிரதாயம் இந்தியாவைச் சேர்ந்த ஓர் இனத்தாரிடையே நிலவி வருகிறது. இன்றளவும் ஒரு குறிப்பிட்ட இன மக்கள் இப்பழக்கத்தை தொடர்கின்றனர் என அண்மைய செய்தி ஒன்று வெளியானது. திருக்குறளில் இதற்கான ஆதாரம் உண்டு.
தமிழகத்தில் சில ஆன்மீக அறிஞர் பெருமக்களிடம் நான் ஆய்வு மேற்கொண்டபோது ‘இச்செயல் வழக்கத்தில் இருந்ததை அவர்கள் உறுதி செய்தனர்.
மண்ணில் புதைத்த பனிரெண்டு வயது சிறுமியின் உடலை தோண்டியெடுத்து அந்த பிணத்தோடு உறவு கொண்ட செயல் ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியில் நடந்தாக அண்மையில் வெளிவந்த செய்தியின் வழி அறிய முடிகிறது. வெளியுலகம் பரவலாக அறியாமல் இத்தகைய கொடுஞ் செயல் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
எல்லாவற்றுக்கும் உச்சமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த தமிழீழப் போர் வெளியில் படு கொலை செய்யப்பட்ட தமிழ்ப் பெண்களின் உயிரிழந்த உடல்களுக்கு நேர்ந்த கொடூரம் உலகளவில் வெளிச்சத்திற்கு வந்தது. இனவெறியின் உக்கிரத்தின் எல்லையே தமிழீழப் போரில் தமிழ்ப் பெண்களின் உயிரற்ற உடல்களுக்கு நேர்ந்த இத்தகைய வன்கொடுமை, அவமதிப்பு அவமானம். உலகத் தமிழரினம் தலை குனிந்த தருணம் இது. மானுடம் தனது இயல்பை முற்றிலும் தொலைத்து விட்டதற்கான ஆதாரமிது.
.
‘பாடையிலும் பெண்களுக்கு பழுதுண்டு’ என பத்துப் பனிரெண்டு வயதில் பாட்டிமார்கள் அடிக்கடி பெண் பிள்ளைகளுக்கு விடுக்கும் எச்சரிக்கை விளையாட்டுப் போக்கில் காதில் விழுந்ததுண்டு. ஆனால் அன்று “இது கிழவிகளின் கிண்டல்” என பாதி காதில் விழுந்தும் விழாத நிலையிலும் பொருள் புரியாத நிலையிலும் விளையாட்டில் கவனம் கொண்டிருந்தும் மனதின் ஏதோ ஒரு அடுக்ககத்தில் இச்சொல் சிறு பொறியாக நிலை கொண்டிருக்க வேண்டும்.
பின்னாளில் இந்த உண்மை எதிர் நின்ற போது கடந்த கால பாட்டிமார்களின் அந்த வார்த்தையாடலில் பொதிந்திருந்த பொருள் மனவெளியில் உருவம் கொண்டது. அதன் விளைவே இச்சிறுகதை. பன்னெடுங்காலமாக பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியின் உச்சமாக இன்று உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இயற்கைக்கு விரோதமான வக்கிரங்களை இக்கதை முன்னெடுக்கிறது. இக்கதை அப்பட்டமான உண்மையின் வெளிபாடு.
2012-ல் எழுதத் தொடங்கிய இக்கதை 2016 வரையில் என் உணர்வுகளை எழுத்துக்குள் அடக்க இயலாமல் கரமும் மனமும் வலுவற்றுப் போனது. ஒவ்வொரு வரியும் காலத்தை விழுங்கி விழுங்கி 2016 வரையில் நான்கு ஆண்டுகள் காலம் கரைந்து போனது.
‘ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தையே அழிப்போம்’ என்றான் பாரதி. ஆனால் எண்ணற்ற பெண்களுக்கு நேரும் இந்த வன்கொடுமைகளுக்கு இந்த ஜெகத்தை அழிக்கப் போவது யார்? அல்லது எது? காலம் பதில் சொல்லுமா?
கேள்வி 6: ஆன்மிகத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் தாங்கள். அதே நேரத்தில் அறச்சீற்றத்தை எழுத்தில் கொண்டவரும் கூட. ஆன்மிக ஈடுபாட்டின் பின் எழுதப்பட்ட படைப்புகளில் அதே கோபமும் வேகமும் இருப்பதாக உணர்கிறீர்களா?
ஆன்மிகத்தின் வழித் தடம் அறநெறிகள். அதன் உச்சமே அறச்சீற்றம்.
கேள்வி 7: பக்தி இலக்கியங்களில் தங்களின் பங்களிப்பு?
திருவருட் பிரகாசரின் சுத்த சன்மார்க்க நெறியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவள் நான். பாரதிக்கு முன்னரே பெண்களுக்கான சீர்திருத்தக் கருத்துகள் சுத்த சன்மார்க்கத்தில் முன் மொழியப்பட்டுள்ளதும் எனது ஈர்ப்புக்கான காரணங்களில் ஒன்று.
கணவன் இறந்தால் மனைவி தாலியை இழக்கவோ,அமங்கலக் கோலம் பூணவோ தேவையில்லை யெனவும், மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற புரட்சிக் கருத்தை முன்னிருத்தியவர் திருவருட் பிரகாச வள்ளலார். அதுமட்டுமின்றி கல்வி, யோகம், தவம் போன்ற கலைகளில் பெண்கள் ஈடுபட வேண்டும் என்பதும் சுத்த சன்மார்க்க நெறியாகும்.
200 ஆண்டுகளுக்கு முன்னர் திருவருட் பிரகாச வள்ளலார் நிறுவிய சுத்த சன்மார்க்க நெறியும், அதற்குப் பின் வந்த மகாகவி பாரதியாரின் பெண்ணுரிமையின் புரட்சிக் கருத்துக்களும் ஒன்றுபடுவதை ஆய்வறிஞர் பெருமக்கள் நிறுவியுள்ளனர். எனவே, சுத்த சன்மார்க்க நெறி சார்ந்த எனது கட்டுரைகள், சிறுகதைகள் தமிழக சன்மார்க்க ஏடுகளிலும், மாத இதழ்களிலும், மலேசிய பத்திரிகைகளிலும் இடம் பெற்று சன்மார்க்கப் பேரறிஞர்களின் பெரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்றுள்ளன என்பது பதிவுக்குரியது.
கேள்வி 8: பட்டங்களுக்கும் பட்டாடைகளுக்கும் என்றுமே வளையாத வணங்காமுடியென இன்று வரை வாழ்கிறீர்கள், ஏன்?
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்…. !” என பெண்கள் அடைய வேண்டிய இலக்கை, ஆளுமை மிக்க ஆற்றல்களை உலகுக்கு உரத்துச் சொன்னவன் பாரதி.
கல்வி சார்ந்த அறிவின் உச்சத்திற்கு வழங்கப்படுவது பட்டங்கள்.
உலக மாந்தரினம் உன்னத வாழ்வைப் பெற இயற்றப்படுவது சட்டங்கள்.
இவ்விரு ஆளுமைகளிலுமே மேலாதிக்கமிக்கவளாக பெண் விளங்க வேண்டுமென அறைகூவல் விடுத்தவன் பாரதி.
பட்டங்களும் (விருதுகள்) பட்டாடைகளும் ஒருவனின் ஆளுமைகளை நிர்ணயிக்கும் அளவுகோள் அல்ல என்பது என் நிலைப்பாடு.
கேள்வி 9: கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் தலைமை பொறுப்பில் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்கள்?
கடாரத்தின் (கெடா மாநிலம்) சிறந்த இலக்கியவாதிகளால் நாற்பதாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இயக்கத்தில் அன்று தொட்டு எனது பங்களிப்பு தொடர்கின்றது. இயக்கத்தின் தலைமைபீடம் தரமிக்க இலக்கியவாதிகளால் வழி நடத்தப்பட்டது. அதன் தொடர்பில் கடந்த 2010 – 2013 ஆம் ஆண்டு வரையில் அப்பொறுப்பினை நான் ஏற்கும் சூழல் ஏற்பட்டது.
குறிப்பாக தலைமைப் பொறுப்புக்கான போட்டிகள் எதுவும் இயக்கத்தில் நிகழ்ந்ததில்லை என்பது வரலாறு. தகுதியுடைவர்களுக்கு வழி விடுவது கடாரத் தமிழிலக்கியவாதிகளின் தனித்தன்மை பொருந்திய பெருமைமிகு பதிவு.
இச்சூழலில் தான் நான் தலைமைப் பொறுப்பேற்றேன். எனது நீண்ட கால கனவான பெண்களின் எழுத்துக்கான ஆய்வரங்கம் அதன் பதிவான நூல் வெளியீடு என மூன்றாண்டுகள் என் பணி முடித்து நான் அடுத்த தலைமைக்கு வழிவிட்டு பதவி நீங்கினேன்.
ஆனால் இம்மூன்றாண்டுகள் காலகட்டத்தில் ஒரு சில எழுத்தாளர்களால் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தேன். ஒரு பெண் எப்படி ஒரு இயக்கத் தலைமைப் பொறுப்பை வகிக்கலாம் எனவும் என் தலைமையில் கீழ் இயங்கிய செயலவையில் இடம் பெற்றிருந்த ஆண் எழுத்தாளர்கள் பதவி விலக வேண்டும் எனவும் பலவேறு இடையூறுகள் அளிக்கப்பட்டன. நூல் வெளியீட்டின் போது ஒரு இலக்கிய அமைப்பின் (இலக்கியவாதி அல்லாத ஒரு) தலைவர் பெண்களுக்கென ஓர் ஆய்வு நூலை எப்படி வெளியிடலாம், நாங்கள் ஆண் என்றும் பெண் என்றும் பிரித்துப் பார்க்காத நிலையில் என மேடையில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
என்னைப் பொறுத்தவரையில் இந்த எதிர்ப்புகள் விரல் நுனி தூசுகள். அதனை தட்டிவிட்டு என் பணியைத் தொடர்ந்து சாதித்தேன். மலேசிய இலக்கிய வெளியில் 50 ஆண்டுகள் கால வரலாற்றில் இரண்டு பெண்கள் மட்டுமே (பேரா , கெடா மாநிலம்) இலக்கிய களத்தின் தலைமைப் பொறுப்பேற்றுள்ளோம்.
மலேசிய இலக்கியத் துறையில் இலக்கியத் திறமையும், நிர்வாகத் திறமையுமிக்க எத்தனையோ பெண் எழுத்தாளர்கள் இயக்கத் தலைமைப் பொறுப்பு ஏற்கும் தகுதியிருந்தும் மலேசிய இலக்கிய உலகம் ஆணாதிக்கத்தில் சிக்குண்டு கிடப்பதால் பெண் படைப்பாளர்களுக்கு வாய்ப்பற்ற சூழலே நிலவுகின்றது.
வெறும் பேச்சளவிலும் எழுத்தளவிலும் முன்னெடுக்கப்படும் பெண்களின் திறமைகள் செயலளவில் இல்லை என்பதற்கு மலேசிய இலக்கிய உலகம் ஒரு முன்னுதாரணம். பெண் இலக்கியவாதிகளுக்கு இச்சூழல் பற்றிய சிந்தனை மாற்றம் ஏற்படும் வரையில் எந்தப் புரட்சியும் நிகழப் போவதில்லை. “வெட்கமில்லை இங்கு யாருக்கும் வெட்கமில்லை….!” என்ற பாரதியின் வீரியமிக்க குரல் இன்னும் எத்தனை காலம் தொடர்ந்திருக்குமோ? யானறியேன்.
கேள்வி 10: இன்று வரையில் முக்கிய இலக்கிய மேடைகளை அலங்கரிப்பவர்கள் தமிழக எழுத்தாளர்களாகவே இருக்கும் சுழல் குறித்து உங்கள் அதிர்வு?
எழுத்துச் சுதந்திரம் என்பது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. மலேசியாவில் எழுத்துச் சுதந்திரம் ஓர் எல்லைக்குட்பட்டது. அதன் எல்லை மீறப்படும் போது அதன் விளைவுகளை சம்பந்தப்பட்ட எழுத்தாளன் சந்திக்க நேரிடும்.
தமிழ்மொழிக் கல்வியின் சூழல், மொழிவளம், வாசிப்பு அனுபவம். இலக்கிய நூல்கள். வாசகர் வட்டம், நூல் வெளியீடுகளை மட்டுமே எதிர் பார்த்திராமல் புத்தக கடைகளை தேடிச் சென்று வாங்கிப் வாசிக்கும் ஆர்வம் என தமிழிலக்கிய களத்தின் அகண்ட பரப்பில் இயங்கும் தமிழக எழுத்தாளர்கள் இலக்கிய மேடைகளை அலங்கரிப்பதில் மன அதிர்வு கொள்ள ஏதுமில்லை.
ஆனால். தமிழகத்திற்கு வெளியே மலேசியா போன்ற நாடுகளில் இத்தகைய சூழலற்ற நிலையில் இலக்கியத்தை தன் ஆன்மாவில் பதித்து சுய முயற்சியாலும் கடின உழைப்பாலும் இலக்கியத்தை முன்னெடுத்துச் சாதிக்கும் இலக்கிய உலகம் பாராட்டுக்குரியது. இத்தகையதோர் இலக்கியச் சூழலில் அந்தந்த மண் சார்ந்த இலக்கியத் திறமுடையோர்க்கு இலக்கிய மேடைகளை அலங்கரிக்கும் ‘முதல் மரியாதையும் முன்னுரிமையும்’ வழங்கப்பட வேண்டும் என்பதில் தீவிரக் கருத்துடையவள் நான்.
கேள்வி 11: இன்றைய மலேசிய தமிழ் இலக்கியத்தின் நிலை?
அறுபதுகள் தொடங்கி எழுபது எண்பதுகளில் உச்சத்திலிருந்த மலேசிய தமிழ் இலக்கியத் துறை களைத்து ஓய்வெடுக்க ஒதுங்கிக் கொண்டுள்ளது என்பதில் தவறேதுமில்லை. இச்சூழலே மலேசிய தமிழ் இலக்கிய வெளியின் பொதுக்கருத்தாக முன் வைக்கப்படுகிறது.
இந்த தொய்வுக்கு மூத்த முன்னோடி படைப்பாளிகள் இலக்கிய களத்தை விட்டு மெல்ல விலகத் தொடங்கியதும், நேர்ந்து விட்ட சில மரணங்களும் இதற்கான காரணங்கள். அடுத்தக் கட்ட முயற்சியில் இன்றைய இளைய தலைமுறை படைப்பாளர்கள் ஆர்வத்தோடு இயங்கி வருகின்றனர். எனினும் இலக்கியத் தரத்தை முன்னெடுக்க அவர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ள சூழல் கணிக்கப்படுகிறது.
இலக்கியம் என்பது காலத்தோடு பயணிக்க வல்லது. அந்தந்த காலச் சூழலுக்கு ஏற்பவே மானுட வாழ்வாதாரம் இலக்கியத்தின் வழி பதிவு செய்யப்படுகிறது. மேலும் ஒவ்வொரு கால கட்டத்திலும் அதன் சூழலுக்கேற்ப இலக்கியம் தன்னை புதுப்பித்துக் கொண்டே நேற்று, இன்று. நாளை என அனைத்தையும் கடந்து செல்வது அதன் இலக்கு. மலேசிய தமிழ் இலக்கியமும் இதற்கு விதி விலக்கல்ல. கால நகர்ச்சிக்கு ஏற்ப, அது தன்னை புதுப் புதுத் தளங்களில் செதுக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் இன்றைய ஒரு சில புதுப்படைப்பாளர்கள் கடந்த கால மலேசிய தமிழ் இலக்கியத்தை தங்களின் அரை குறை இலக்கியப் புரிதலையே அளவு கோளாகக் கொண்டு விமர்சிப்பதும் தங்களின் முதிர்ச்சி பெறாத இலக்கிய அறிவிற்கும், அனுபவத்திற்கும் பக்க பலமாக சில தமிழக இலக்கியவாதிகளைக் கொண்டு இயங்கிக் கொண்டிருப்பதும் மூத்த முன்னோடி இலக்கியவாதிகள் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தங்கள் இலக்கில் பயணிப்பதும் இன்றைய நிலை.
கேள்வி 12: இலக்கியப் பயணத்தில் தங்களின் அடுத்த கட்ட இலக்கு?
எனது சிறுகதைத் தொகுப்பு நூல் ஒன்றும் ஆன்மிகக் கட்டுரை நூல் ஒன்றும் வெளீயீடு செய்வது எனது நோக்கம். கடார இலக்கியக் களத்தில் (கெடா மாநிலத்தில்) இளைய தலைமுறையைச் சார்ந்த தரமிக்க பெண் எழுத்தாளர்களை உருவாக்குதும் எனது இலக்குகளில் முக்கியமானதொன்று.
மலேசிய தமிழிலக்கியத் துறையில் கடந்த நாற்பதாண்டுகளாக கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம் தரமிக்க இலக்கியவாதிகளைக் கொண்டு முன்னணி வகித்து வருகின்றது.
எனவே, கெடா மாநிலம் தொடர்ந்து மலேசிய தமிழிலக்கிய வெளியில் தனது உச்சத்தைதொடர்ந்திருக்கவும், கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் தலைமை பீடத்தில் பெண் எழுத்தாளர்களை அமர்த்துவதும் எனது அடுத்தக் கட்ட இலக்காகும்.
நான் தலைமை பொறுப்பேற்றிருக்கும் ஆன்மிக இயக்கம் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக பெண்களைக் கொண்டே இயங்கி வருகின்றது. காலத் தொடர்ச்சியில் பெண்களே இச்சங்கத்திற்கு தலைமையேற்கும் சூழல் உருவாக்கப்பட்டு வருகின்றது.
நன்றி! வணக்கம்! கமலாதேவி அரவிந்தன்
நன்றி! வணக்கம்! பாக்கியம் சேச்சி!
kamaladeviaravind@hotmail.com