– நோர்வேயில் வசிக்கும் இ. தியாகலிங்கம் புகலிடத் தமிழ் எழுத்தாளர். காரையூரான், காரைநகரான் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறார். நாளை, பரதேசி, திரிபு, எங்கே, ஒரு துளி நிழல், பராரிக்கூத்துக்கள் ஆகிய நாவல்களும், வரம் என்னும் குறுநாவற் தொகுதியும், துருவத் துளிகள் என்னும் கவிதைத் தொகுதியும் இதுவரை நூலுருப்பெற்றுள்ளன. இவரது ‘நாளை’ நாவல் பதிவுகளில் தொடராகப் பிரசுரமாக அனுமதியளித்துள்ள நூலாசிரியருக்கு நன்றி.. – பதிவுகள் –
அத்தியாயம் இரண்டு!
‘சிங்களம் மட்டுமே நாட்டின் ஏகமொழி’ என்று திணித்தார்கள். தமிழருடைய கல்வி முன்னேற்றத்திற்கு தடை விதிக்க, தரப்படுதல் புகுத்தப்பட்டது. வடகீழ் மாநிலங்களிலே பாரம்பரிய தமிழர் மண் சுவீகரிக்கப்பட்டு, சிங்களக் காடையர்களின் குடியேற்றங்கள் கொலுவிருக்கச் செய்தனர். கிழக்கில் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய நிலம் ‘மண் கொள்ளை’ செய்யப்பட்டு, இரண்டு சிங்களத் தொகுதிகள் உருவாக்கப்பட்டன. வடக்கினையும் கிழக்கினையும் ஒரே நிலப்பரப்பாக ஒன்றிணைக்கும் மணல் ஆறு பிரதேசம், வெலிஓயாவாக மறு நாமகரணமிடப்பட்டு, தென்வவுனியாவினை இணைத்து அடங்கா தமிழரின் மண்ணிலே ஒரு தொகுதி உருவாக்கத் திட்டடப்படுகின்றது. இவற்றை எல்லாம் கண்ணுற்றும், தமிழருடைய அரசியல் தலைவர்கள் ‘துப்பாக்கிக் குண்டு விளையாட்டுக் குண்டு’ ‘தூக்குமேடை பஞ்சுமெத்தை’ என்று வீரவசனங்கள் பேசுவதிலே காலவிரையம் செய்தார்கள். அவர்கள் சிங்களத் தலைவர்களுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள், அவற்றின் மை உலர்வதற்கு முன்னமே குப்பைத் தொட்டிகளிலே கடாசப்பட்டன! தமிழருடைய மண்ணைக் காக்கவும், தமிழ் இனத்தின் மானத்தைக் காக்கவும் இளைஞர்கள் ஆயுத பாணிகளாகக் களம் குதித்தல் வேண்டும். அஹ’ம்ஸையின் அர்த்தத்தினை மனிதர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்…ஆனால், சிங்களர்…
தேவகுருவுடன் கல்வி கற்றுக் கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் திடீர் என்று கல்லூரி வருவதை நிறுத்திக் கொண்டார்கள். விசாரித்தபொழுது, அவர்கள் இயக்கங்களிலே சேர்ந்து விட்டதாகச் சொன்னார்கள்.
இவை அனைத்துமே தேவகுருவின் மனசிலே பல ரசாயன மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருந்த காலத்திலே தான் அது நிகழ்ந்தது. சிவகாமி அம்மன் கோயிலடியில் டிவியில் தொடர்ந்து மூன்று படங்கள் காட்டுவதாக விளம்பரப்படுத்தி யிருந்தார்கள். தீ, தீர்ப்பு, தங்கப் பதக்கம் ஆகியன அப்படங்கள். தேவகுருவுக்கு அக்காலத்தில் சிவாஜி கணேசனின் நடிப்பு மிகவும் பிடிக்கும். அவரால் ‘தங்கப் பதக்கம்’ படத்தைத் தியேட்டரிலே திரையிட்டபொழுது, பார்க்க முடியவில்லை. தங்கப் பதக்கம் பார்க்கும் ஆசையிலேதான், அன்று டிவி ஷோவுக்குப் போனார். ஏழ மணிக்கு துவங்கிற்று…ஷோ முடிய மூன்று மணியாகிவிட்டது.
‘வீட்டிலே சரியான பாட்டுத்தான் கிடைக்கும்’ என்ற பதட்டத்துடன், வீடு நோக்கிச் சைக்கிளை விரைவாக மிதித்தார். தெரு விளக்குகள் சில மின்னி மின்னி எரிந்தன. அவை தமது கம்பங்களுக்கே வெளிச்சம் பாய்ச்சுகின்றனவோ என்கின்ற சந்தேகம். ‘ஜெமினி’கடையடிக்கு வந்துவிட்டார். அப்பொழுது திடீரென ஒளி வெள்ளம் ஒன்று அவரைச் சடுதியாகக் குளிப்பாட்டியது; கண்களை கூசச் செய்த ஒளியிலே அவரால் பார்க்கவும் முடியவில்லை. மறுகணம் வழியை மறித்து ‘நேவி’க்காறர் ஆயுதபாணிகளாக நிற்பதைக் கண்டார்.
‘சைக்கிளை விட்டு இறங்கடா!’ என்று கர்ஜனை கேட்டது. சைக்கிளைத் தரிப்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கிடையிலேயே, ஒருவன் திடீரென்று பாய்ந்து சைக்கிளை எட்டி உதைத்தான். சைக்கிள் ஓரிடமும், இவர் பிறிதோர் இடமுமாக ரோட்டிலே விழுந்தார்.
ஒருவன் ஓடிவந்து, சட்டைக் காலரிலே பிடித்துத் தூக்கி நிறுத்தி, ‘எங்கயடா போயிட்டு வாறது? எடு ஒண்ட Identity Card என்று கேட்டான். ஷோவுக்கு வரும் அவசரத்தில் தன் அடையாள அட்டையை எடுத்துவர மறந்ததை அப்பொழுதுதான் அவர் உணர்ந்தார். வேறு வழியில்லாது, பதிலும் சொல்லாமல், அவர் விழிக்கத் துவங்கினார். அவர் விழிப்பதைப் பார்த்து, துவக்குப் பிடியாலே அவர் வயிற்றிலே ஓங்கிக் குத்தினான். அந்தக் குத்து அவர் வயிற்றிலே ஏற்படுத்திய உக்கிரமான வலியைத் தாங்காது, ‘அம்மா!’ என்று அலறியபடி நிலத்திலே குந்தினார்.
கடற்படை வீரர்கள் இருவர் அவருடைய சட்டைக் காலரைக் கொத்தாக பிடித்து ‘கொற கொற’ வென ஜெமினி கடையோரம் இழுத்து வந்தனர். கடையருகே இருந்த சுவரிலே ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. அதனைக் காட்டி, ‘இது யார்டா ஒட்டினது?’ என்று இருவரும் ஏக காலத்தில் கேட்டனர்.
‘தெரியாது!’ — அதுதான் உண்மையும்.
‘பற தெமிழ!’ என்று கத்திய வண்ணம் ஒருவன், துவக்குப் பிடியால் மீண்டும் அவருடைய வயிற்றில் உக்கிரமான ஒரு குத்துவிட்டான். அந்தக் குத்து வயிற்றைத் துளைத்து முதுகுவழியே பீறிட்டது போன்ற வலியை எற்படுத்தியது. தாங்க முடியாத வலியுடன் றோட்டிலே புரண்டு துடித்தார்.
அப்பொழுது, அந்தக் குழுவுக்கு மேலதிகாரியாகச் செயற்பட்ட ஒருவன் அவருக்குச் சமீபமாக வந்தான். சமிக்ஞையாலே அடிப்பதை நிறுத்துச் செய்தான்.
‘இனி Identity card இல்லாமல் வந்தா, சுட்டுக் கடலிலே தான் வீசுவாங். பளயாங்…டோய் பளயாங்…’ எனக் கூறி விரட்டினான்.
தாங்க முடியாத வேதனையுடனும் அவமானத்துடனும் சைக்கிளை உருட்டிக் கொண்டே வீடு நோக்கி நடக்கலானார்.
அந்தக் கணமே, இயக்கத்திலே சேர்ந்து, ஆயுதபாணியாக காரைநகர் மண்ணிலே ஆதிக்கம் செலுத்தும். சிங்கள அரசு வன்முறையைச் சங்காரம் செய்தல் வேண்டும் என்கின்ற தீர்மானத்திற்கு வந்தார்.
அத்தியாயம் மூன்று!
நித்தியாயினி வேலைக்குப் போய்விட்டாள். மாலதி சிறிது நேரம் கணக்குச் செய்தாள். அதில் அவள் கெட்டிக்காரி என்பது தேவகுருவின் அபிப்பிராயம். வீட்டிலே ஓய்வு நேரங்களிலே, அவள் தமிழ் கற்க வேண்டும் என்பது அவர் விருப்பம். அவரும் நித்தியாவுமே அவளுக்குத் தமிழ் கற்பித்தார்கள். தமிழ் அடையாளங்களுடன் அவள் வளர்வதற்குத் தமிழ் அறிவு இன்றியமையாதது என்று அவர் வற்புறுத்தி வந்தார். தமிழர் கூட்டமைப்பும் வீட்டிலே பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதை வற்புறுத்தியே வந்தது. சில நாடுகளிலே தமிழர் கூட்டமைப்புகள் தமிழ்ச் சிறார்களுக்குத் தமிழ் கற்பித்தலைத் தமது பணிகளிலே தலையாயதாகக் கொண்டு செயற்படுவதை அறிந்து மகிழ்ந்தார். இங்கும் பாடசாலைகளிலே விரைவாக தமிழ்படிப்பிக்கத் துவங்கப் போகிறார்களாம். இது நல்ல ஆரம்பம்.
வீட்டு மொழியாகத் தமிழ்க் குடும்பங்கள் தமிழையே பயின்றன. தமிழ்ச் சொற்களை முறையாக உச்சரிப்பதிலே சிறுவர் இடர்பட்டனர். அவர்களுடைய ஆரம்பக் கலவி நொஸ்க் மொழியில் அமைந்திருந்ததினால், தமிழ்ச் சொற்களைத் திருத்தமாக உச்சரிப்பதிலே அவர்கள் சிரமப்பட்டார்கள். அன்றாட வாழ்க்கையில் தமிழ்க் குடும்பங்களிலே நொஸ்க் மொழிச் சொற்கள் சில கலந்து விடுதல் இயல்பு. இதனால், நொஸ்க் சொற்களுக்கும் தமிழ்ச் சொற்களுக்குமிடையில் உள்ள துல்லிய வேறுபாடுகளை இனம் காணுவதிலும் சில பிள்ளைகள் இடர்பட்டனர்.
தேவகுருவின் இடையறாத முயற்சியால், மாலதி தமிழ் எழுத்துக்களை இனம் காணவும், அவற்றைக் கூட்டிச் சொற்களாக உச்சரிக்கவும், ஓரளவு பயின்றிருந்தாள். ஆனாலும், தமிழ் வசனங்களை வாசிப்பதற்கு அவள் இன்னமும் எவ்வளவோ பயிற்சிபெற வேண்டியிருந்தது. அவளுக்குத் தமிழ் மொழி அறிவினை ஊட்டுவதற்காகப் புத்தகங்களை இந்தியாவிலிருந்தும், இலங்கையில் இருந்தும் வரவழைப்பதிலே தேவகுரு என்றுமே சலிப்படைந்ததில்லை. மாலதி தமிழ் கற்பதற்கு உதவக் கூடிய நூல்களை வாங்கி வரும்படி, இந்தியா செல்லும் நண்பர்களிடம் கேட்டுக் கொள்வது அவர் வழக்கம். இதனை அவர் செவிகளிலே விழாத வகையிலே கேலி செய்பவர்களும் உண்டு.
மாலதி சிறிது நேரத்தில் அவர் மடியிலே தூங்கிவிட்டாள். ‘இவளுக்கு இப்பொழுது எந்தக் கவலையும் இல்லை. நானும் அவள் தாயும் பிறந்த மண்ணை அறியாள். அவர்களுடைய நம்பிக்கைகளையும் சடங்கு சம்பிரதாயங்களையும் அறியாள். ஆனால், அறிய வேண்டும். அறிவது மட்டுமல்ல, அவற்றை நேசிக்கவும் மதிக்கவும் தக்க பக்குவம் வளரவேண்டும். அவற்றைச் சரியான முறையிலே ஊட்டத் தவறினால், நாம் நமது கடமைகளைச் செய்யத் தவறியவர்கள் ஆவோம். மீண்டும் பிறந்த மண்ணுக்குச் சென்று, அதனை நேசித்து வாழும் தமிழர்களாக இவர்களை வளர்த்தெடுப்பதுதான் புலம் பெயர்ந்த தமிழர் ஒவ்வொருவருடைய இலட்சியமாகவும் இருக்க வேண்டும். இந்த எண்ணங்கள் அவரை வளைத்துக் கொள்ள, அவள் தலையை பாசமுடன் கோதினார். அவளுடைய தூக்கத்தினைக் கலைத்து விடாத பக்குவத்தில், அவளைக் கட்டிலிலே வளர்த்தினார். மீண்டும் ஹோலுக்குள் வந்தார். டிவியை இயக்கி, சத்தத்தினைக் குறைத்து வைத்தார். நேரம் வாய்க்கும் பொழுதெல்லாம் செய்தி பார்க்க அவர் தவறுவதில்லை. உலகச் செய்திகளை அக்கறையுடன் அறிந்து வைத்தல் ஒருவனை முழுமனிதனாக்குகிறது என்பது அவர் அபிப்பிராயம். செய்திகளை டிவியில் பார்ப்பது வசதியானது. சம்பவங்களை நேரிலே கண்டிறிவது போன்ற அநுபவம் வாய்க்கும்.
‘NRK’ வில் (நோர்வே அரச ஒலி–ஒளிபரப்பு கூட்டுத் தாபனம்) செய்திகள் ஒழுங்கற்ற முறையிலே ஒளிபரப்பாகும். உள்நாட்டு செய்தி ஒன்றினைச் சொல்லி, திடீரென்று வெளிநாட்டு செய்தி ஒன்றுக்கும் பாய்வார்கள். வெளிநாட்டுச் செய்தியை கைவிட்டு உள்நாட்டு செய்திக்கு மீண்டும் வருவார்கள். இத்தகைய ஒரு குழம்பிய வரிசையை ஏன் கடைப் பிடிக்கிறார்கள் என்பது தேவகுருவுக்கு விளங்கவில்லை.
வெளிநாட்டுச் செய்தி ஒன்றிலிருந்து, மீண்டும் உள்நாட்டுச் செய்தி ஒன்றிற்குத் தாவிற்று. ‘ஒஸ்லோவில் நவநாஜிகள்’ என செய்தி தொடங்க, தேவகுரு நிமிர்ந்து உட்கார்ந்தார். நவநாஜிகள் வாழும் இடத்தைக் கண்டறிந்து, ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்தது. ‘நாஜிகளுக்கு எதிரான இளைஞர்கள் அணி’ (Antirasister) தான் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறது. கட்டடத்தின் உள்ளே வசித்த நவநாஜிகள், ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களைக் கற்களையும் மற்றும் உடற்சேதம் ஏற்படுத்தக்கூடிய பொருள்களையும் வீசித் தாக்கி இருக்கிறார்கள். இந்தக் காட்சி ஆரம்பத்திலே காட்டப்பட்டது. பின்னர், போலிஸார் வந்து, கட்டடத்தின் உள்ளே இருக்கும் நவநாஜிகள் வெளியே வருமாறு கட்டளை இட்டார்கள். உள்ளே இருந்தவர்கள் கட்டளைக்குப் பணியாது, போலிஸாரையும் கற்களும் கூரிய பொருள்களும் வீசித் தாக்கிக் கொண்டிருந்தார்கள். போலிஸார் கண்ர்ப் புகைக் குண்டுகளை வீசி, உள்ளே இருந்தவர்களை அடக்கி கைது செய்தார்கள். கைது செய்யப்பட்ட இளைஞர் பட்டாளத்திலே ஒரு பதின் மூன்று வயதுச் சிறுமியும் இருந்தாளாம்.
உள்ளே இருந்து துப்பாக்கி, கத்தி, கோடரி மற்றும் பல கூரிய ஆயுதங்கள், கணிப்பொறி ஒன்று, கோப்புகள் எனப் பல பொருள்களைப் போலிஸார் அள்ளிக் கொண்டு வந்தனர்.
நவநாஜியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சிறுமியைப் பற்றி அறிந்ததும், தேவகுருவுக்குத் தொடர்ந்து செய்தி பார்க்கும் சுவாரஸ்யம் இற்றுப் போனது.
‘பதின்மூன்று வயசுச் சிறுமி. அவளுக்கு என்ன விபரம் தெரியும்? வரலாற்று உண்மைகள் அத்தனையையும் சீர்தூக்கி, பகுப்பாய்வு செய்தா நவநாஜி இயக்கத்திலே சேர்ந்தாள்? ஹ’ட்லரும் முசோலினியும் சாதித்தவை என்ன? முசோலினி நாயைப் போல இத்தாலியர்களினாலேயே கொல்லப்பட்டான். அவனுடைய பிணத்தினை தலைகீழாக தொங்க விட்டு மகிழ்ந்தார்கள்! ஹ’ட்லர் உலகையே ஆரிய ஜெர்மனிய இனம் வெற்றி கொண்டு அடக்கி ஆளும் எனக் கொக்கரித்தான். யூத இனத்தினைப் பூண்டோடு அழிப்பேனெனச் சபதம் செய்தான். பூதர்களை மிருகங்களாக நடத்தினான். நக்சு வாயுக் கிடங்குகளில் ஆயிரக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்து பிணமலைகளை உண்டாக்கினான். ஈற்றிலே…வரலாற்றிலே மிகத் துக்ககரமான கறைகளை ஏற்படுத்திய இந்தப் பகுதியை நாகரிக உலகம் மறக்க முயலுகின்றது…இடையிலே இந்த நவநாஜிகளின் தோற்றம்…இவர்கள் மீதுள்ள யூதர்களை அழிக்கப் போகிறார்களா? அவர்களுக்கென்று இன்று ஒரு நாடே இருக்கும்பொழுது இது சாத்தியமா?…இல்லை…புதிதாகச் சுதந்திரம்பெற்ற, அந்தச் சுதந்திரம் மண்ணின் மைந்தர் அனைவருக்கும் கிடைப்பதை தடுக்கும் அரசியல்வாதிகளுடைய நரவேட்டைகளுக்குத் தப்பி, ஐரோப்பிய நாடுகளிலே குடியேறியுள்ள ஆசிய – ஆப்பிரிக்க மக்களை கொன்று குவிக்கப் போகிறார்களா?…விஞ்ஞானம் வளர வளர மனித குலத்தை அழிக்கும் ஆயுதங்களின் ஆற்றலும் வகைகளும் பெருகப் பெருக, மனிதனுடைய உள்ளங்கள் சிறுத்துச் சிறுத்துக் கடுகாகிக் கொண்டு வருகின்றனவா? ஆயுத உற்பத்தி செய்யும் குபேர நாடுகள் உள்நாட்டு யுத்தங்களை நெய்யூற்றி வளர்க்கின்றன. அந்த சக்திகளே இந்த நவநாஜிகள் போன்ற அழிவுச் சக்திகளையும் வளர்த்து வருகின்றவா? ஜனநாயகம் என்கின்ற பெயரிலே பண நாயகமே வளர்த்தெடுக்கப்படுகின்றது.
‘விஞ்ஞான வளர்ச்சியின் துணையினால் வசதிகள் பெருகும்பொழுது, இளைய சமுதாயத்தினை வளர்த்தெடுக்கும் கடமையை மனிதகுலம் மறந்துவிடுகின்றதா? கட்டுப்பாடற்ற சுதந்திரம் என்பது என்ன?…மீண்டும் இலை குழைகளை அணிந்து குகை வாழ்க்கையை மேற்கொள்வதா? உரிமையும் சுதந்திரமும் தமது உறவுகளைத் துண்டித்துக் கொண்டனவா?…நன்னீர் ஆற்றுடன் கலக்கும் சிற்றோடைகளும் புனித தீர்த்தமாக பிரவசித்து ஓடும். ஆனால் அந்தச் சிற்றோடைகள் சாக்கடைகளுடன் கலந்தால்?…
‘கடந்த இரண்டு உலக மகா யுத்தங்களினாலும் மனித குலம் எதாவது படிப்பினைகளைப் பெற்றிருக்கின்றதா?…பேரழிவுகளையும் அநர்த்தங்களையும் விளைவிக்கும் ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு பல்லாயிரம் கோடி பணத்தை ஏன் மனித குலம் ஆண்டு தோறும் செலவழிக்கின்றது? குபேர நாடுகள் மட்டுமா? கோடிக்கணக்கான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாடி வதங்கிக் கொண்டிருக்கும்பொழுது, இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள நாடுகளுக்கு அணு ஆயுதங்கள் தேவையா?…
தேவகுருவின் சிந்தனைகள் அறுந்தன. மகாத்மா காந்தி பிறந்த மண்ணிலே, ஜலவாயு குண்டுகளின் உற்பத்தி பற்றிய எக்காளம் அவர் நெஞ்சினை நோகடித்தது. நெஞ்சு வலித்தது. டிவியை நிறுத்தினார். பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருக்கும் அறைக்குள் சென்றார். தூங்கும் அவர்களைப் பார்த்தார். அந்தப் பிஞ்சுகளின் முகங்களிலே தெய்வீகக் களை வீசுவதாக அவருக்குத் தோன்றியது.
‘ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு உலகம்’ என்று சொல்லப்படுகின்றது. மனிதனின் தனித்துவம் உலகம் போன்று அகண்டது. இந்தத் தனித்துவங்கள் எத்தனை கோடி? இந்தத் தனித்துவங்களின் கூட்டுத் தொகைதானே மனித குலம்? தனித்துவத்தின் எல்லைக்கோடு எங்கே மங்கி மறைந்து, சமுதாய வாழ்க்கை எங்கே ஆரம்பிக்கின்றது….’
கோகிலாவை வாஞ்சையுடன் அணைத்தார்.
இத்தீவிலே, கடலை நோக்கித் தவம் செய்யும் கோலத்திலே, கடற்கரையில் ஒரு வீடு உண்டு. மற்றைய வீடுகளிலிருந்து ஒதுங்கியிருப்பது போல. தனிமை சுகிக்க வசதியானது. நீல நிறத்திலே குளிப்பாட்டி எடுத்தது போன்றது அதன் கோலம்.
அந்த வீட்டிற்குள் நால்வர் இருந்தார்கள். அவர்களுக்குத் தலைவனைப் போல செல் காணப்பட்டான். திருப்பதியான் மொட்டை போன்ற தலை. வெளிச்சத்திலே மின்னும் அந்த மொட்டைத் தலை அவனுக்கு ஒருவித பயங்கரத்தை அப்புவது போலவே அமைந்தது. அவன் முகத்திலே கொடூரம். அகங்காரத்தினாலும் விரோத வெறியாலும் அந்த குரூரம் அவன் வசமாகி இருக்கலாம்.
காறால்ட் தலைமயிர் இயல்பில் வெள்ளைநிறம். ஆனாலும் அந்த மயிருக்குப் பச்சை ‘டை’ போட்டிருந்தான். மனிதத் தலைமுடியின் இயற்கை நிறம் எதிலும் சேராத ஒரு தனித்துவ நிறத்திலே தன் தலைமயிர் தோன்றுதல் வேண்டும் என விரும்பினான். அவன் நெஞ்சிலே மனித விரோத ஜுவாலை கொழுந்து விட்டெரிந்தது. நால்வருள்ளும் இவனே குள்ளமானவனாகத் தோன்றினான்.
தலைமயிர் மூலம் அல்பிரேட் எந்தவிதமான தனித்துவ அடையாளத்தினையும் புனைந்து கொள்ளவில்லை. சாதாரண நொஸ்குகளின் தலையலங்காரத்தினை அவன் ஏற்றிருந்தான். இருப்பினும், அது பின் பக்கம் நீட்டாக வளர்ந்து, கழுத்திலே தொங்கிற்று. கிழிந்த ஆடைகளை அணிந்திருந்தான். பாவனையால் கிழிந்தன அல்ல. அந்த ஆடைகளின் தனித்துவ அடையாளங்களே அந்தக் கிழிசல்கள்தான்.
ஜோன் மட்டும் வெகு சாதாரணமானவனாகத் தோன்றினான். நொஸ்க்குகள் கூடியுள்ள கூட்டம் ஒன்றிலே, அடையாளம் காட்ட முடியாத அளவுக்குக் கரைந்து விடக்கூடிய மிக இயல்பான தோற்றம் அவனுடையது. இந்தச் சாதாரணம் என்கின்ற புனைவு அவன் வற்புறுத்தி ஏற்றுக் கொண்டது. நால்வரிலும் அவனே மிகப் பயங்கரமான இனவாதி. உலகில் வெள்ளைத்தோல் மனிதர்களுக்கு மட்டுமே சகல வளங்களையும் அநுபவித்து வாழும் உரிமை உண்டு என்கின்ற கடுமையான இனவாதி!
ஒவ்வொரு மனிதனும் தனித்தனி உலகமா? அப்படியானால், அந்த வீட்டிற்குள் நான்கு உலகங்கள் ஒன்று கூடி இருந்தன. ஆனாலும், அந்த நால்வரும் ஒரு கொள்கையிலே ஒத்த கருத்துடையவர்களாக இருந்ததினால் ஒரு குழுவாக இயங்க விரும்பினார்கள்.
நோர்வே மக்களையும் கோப்பியையும் பிரிக்க முடியாது. அந்த அளவில் அவர்கள் கோப்பிப் பிரியர்கள். அவர்கள் கோப்பிப் பிரியர்களாக மாறுவதற்கு கர்ண பரம்பரையான கதை ஒன்று உண்டு. அவர்களுடைய வீடுகளிலே கோப்பியின் இனிமையான ஒரு மணம் தொங்கிக் கொண்டு நிற்கும்! ஆனால், இந்த நீல வீட்டிற்குள் மது நெடியே சர்வ வியாபகமாகப் பரவியிருந்தது. அவர்கள் நால்வரும் அதிகமாகவே மது அருந்தியிருக்க வேண்டும். காலியான மதுப்போத்தல்கள் ஒரு மூலையோரமாகக் குவிந்து கிடந்தன.
அங்கு நிலவிய அமைதியை விரும்பாதவனைப் போல, ‘அன்றைக்கு அந்த இரண்டு பேருக்கும் நல்ல பாடம் படிப்பிச்சிருக்கிறம்…’ என்று செல் திடீரென்று சொன்னான்.
‘அவங்கள் சரியாப் பயந்து போனாங்கள். இனி, தனிய நடந்துவரச் சரியா யோசிப்பினம்’ என்று ஜோன் ஆமோதித்தான்.
‘ஒரு பக்கம் பார்க்கப் பாவமாகவும் இருந்தது.’
‘இந்த விஷயங்களில பாவ புண்ணியம் பார்க்க ஏலாது.’
‘இல்லை ஒரு கதைக்குச் சொல்லுறன்.’
‘இவங்களைச் சரியான இடத்திலை வைச்சிருக்க வேணும். இல்லாவிட்டால் பிறகு வில்லங்கம்.’
‘இப்ப அவை காரில திரியிற மாதிரி இருக்கு.’
‘இவங்கள் கொலைப் பயத்தில ஒவ்வொரு நாளும் நடுங்கிச் சாகோணும். அப்பதான் வழிக்கு வருவினம்.’
மீண்டும் ஒரு ரவுண்ட் மது அருந்தி முடித்தார்கள். கதை மாறியது.
‘நேற்று டிவியில் வந்த செய்தி தெரியுமா?’
‘எதைச் சொல்லுறாய்?’
‘ஜெர்மனியில் மூன்று தமிழரைக் கொளுத்திப் போட்டாங்களாம். இந்த நாய்களைக் கொளுத்தினால் தான் ஊருக்கு ஓடுங்கள். இல்லாவிட்டால் சரிவராது…’
‘எங்க திரும்பினாலும் கறுத்த நாய்களாகத்தான் கிடக்குது. அதுகளைக் கண்டவுடன் அடித்துக் கொல்லவேணும் என்பது போலத்தான் எனக்கு ஆத்திரம் வருகுது.’
‘இதுகளால பிரச்சனைகள் ஒன்றோ இரண்டோ? அவங்கட்ள படிக்கிற பள்ளிக்கூடத்தில ஒரே உள்ளி மணமாம்.’
‘இந்தப் பவிசுகளில அவங்களுக்கு டிஸ்கோ வேறை தேவைப் படுகுதாம்.’
‘சும்மா வந்தாங்கள். இப்ப அவங்களிட்ட கார் இருக்குது. வீடு இருக்குது. வங்கியில நிறைய காசு இருக்குது. நாங்கள் வேலை இல்லாமல் அலையிறம்.’
‘நாலுபேர் முதலில வந்தாங்கள். இப்ப இருநூறு முன்னூறு இருக்கும். போற போக்கில வார்டோவையே பிடிச்சிடுவாங்கள் போல இருக்குது.’
‘வேறை என்ன? ஒருவன் எத்தனையைப் பெத்து வைச்சிருக்கிறான் தெரியுமே? எங்கடை சனங்கள் ஒன்று; மிஞ்சினால் ரெண்டு. அவங்கள் ஐஞ்சாறெண்டு பெத்து பெருகிறாங்கள்…’
‘எல்லாம் எங்கடையளின்ர வரிப்பணத்தில வளருதுகள்.’
‘பிச்சைக்கார நாட்டிலே, இவை இருந்த இருப்புத் தெரியாதோ? இஞ்சை அசையின்ர கார்கள் என்ன? அவை ஓடுற ஓட்டம் என்ன?’
‘இவங்களை அடிக்க வேணும். இவங்களை அடிச்சுத்தான் எங்கட நாட்ட விட்டு ஓட்டவேணும்.’ நோர்வே நோர்வேக்காரனுக்குத்தான்; கண்ட நாய்களுக்கும் இல்லை. இந்தப் பன்றிக் கூட்டம் காட்டுக்கு ஓடவேண்டும்’ என்று இந்த உரையாடல் மத்தியில் ஜோன் குரல் எழுப்பிக் கத்தினான்.
‘ஜோன், கொல்லுறதிலும் பார்க்க, அவங்களை வீடடோட கொளுத்தி அழிச்சாலும் நல்லது என்று எனக்குப் படுகின்றது?’ எனச் செல் உற்சாகமாக கூறினான்.
‘இல்லை; அப்படி ஒன்றும் செய்யேலாது. இது சின்ன இடம். கரைச்சலில் மாட்டலாம். ஒவ்வொருத்தனாக பார்த்துப் பார்த்து இருட்டடி போட வேணும். பிரச்சனைகளிலே மாட்டிக் கொள்ளாது, தொடர்ந்து தொந்தரவு கொடுக்க வேணும்.’ என்று காறால்ட் திருத்தம் பிரேரித்தான்.
‘நாங்கள் எதாவது நோட்டீஸ் அடித்து விட்டால் என்ன? என்று அல்பிரேட் கேட்டான்.
‘ஓம் அடிக்கலாம் யாருக்கு எப்படி அடிக்கிறது?’
‘தமிழருக்குத்தான்!’
‘நோட்டீஸ் வாசகம் என்ன?’
‘பன்றிகளை நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டு, வெளியேறாவிட்டால் கொளுத்திப் பொசுக்குவோம் என்று எச்சரிக்கை விடுவோம்.’
‘இங்க செல்லிடம் கொம்யூட்டரும் ரைட்டரும் இருக்கிறது வசதியாய் போச்சுது.’
‘இது நல்ல யோசினை. என்ன எழுதுறது என்று தீர்மானித்தால், இப்பவே வேலையைத் துவங்கலாம்.’
‘நல்லா யோசிச்சு எழுத வேணும்.’
‘யாரும் காணாமல், இரவு ஒரு மணிக்குப் பிறகு கொண்டுபோய்ப் போட வேணும்…’
‘ஓ…போலிஸ் வில்லங்களுக்குள் மாட்டக் கூடாது.’
‘நல்ல முறையில கவனமாச் செய்யவேணும்.’
‘ஓகே. கதைச்சது போதும். இப்ப என்ன எழுதவேண்டும் என்று சொல்லுங்கோ….’
‘முதலில பேப்பரில எழுதுவம்.’
‘ம்…’
எல்லோரும் சிறிது மௌனமாயினர். செல் பேப்பரும் பேனாவும் எடுத்து வந்தான். ‘இவங்களுக்கு மரியாதை தேவையில்லை. காசுக்காக எதுவும் செய்யக் கூடிய பன்றிகள்…’ என்று ஜோன் மௌனத்தை உடைத்தான்.
‘அப்ப நீ சொல்லு…நான் எழுதுகிறேன்.’
இடையில் சில திருத்தங்களைச் செய்து நோட்டீஸ’ல் போடுவதற்கான வசனங்களை எழுதி முடித்தார்கள்:
பன்றிகளே வெளியேறுங்கள்!
இது எங்கள் நாடு. எங்கள் நாடு எங்களுக்கே. இங்கு உங்களுக்கு இடமில்லை. இது உங்களுக்கு முதல் எச்சரிக்கை. இதை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால், என்ன நடக்கும் தெரியுமா?
ஜேர்மனியில் நடப்பது போல உங்கள் வீடுகள் எரியும். அதற்குள் நீங்கள் பன்றிகளைப் போல வாட்டி எடுக்கப் படுவீர்கள்.
உங்களை எச்சரிக்கிறோம். எவ்வளவு விரைவாக வெளியேற முடியுமோ, அவ்வளவு விரைவாக எமது மண்ணை விட்டு வெளியேறுங்கள்.
நோர்வே நூர்மனுக்கே!
நோட்டீஸ’ன் வாசகங்களிலே நால்வரும் திருப்திப் பட்டார்கள். கம்ப்யூட்டரில் வாசகங்களை மீண்டும் வாசித்தார்கள். தலைப்பு முப்பது ‘பாயின்ற்’ பெருப்பத்தில் இருந்தது. உள்ளடக்கம் இருபதில் அமைந்தது. ‘நோர்வே நூர்மனுக்கே!’ என்பது இருப்பத்தைந்தில் வடிவமைக்கப்பட்டது. லேசர் றைட்டர் துணை செய்தது. மொத்தம் நூறு படிகள் பிறிண்ட் அவுட் எடுக்கப்பட்டது.
எல்லோர் முகத்திலும் சந்தோஷமும் ஒருவகைப் பரபரப்பும் காணப்பட்டது. மணி பன்னிரண்டு. மேலும் ஒரு மணிநேரம் காத்திருந்தனர். இருவர் கொண்ட கோஷ்டியாகச் செயற்பட வசதியாக நோட்டீஸை பங்கிட்டுக் கொண்டனர். அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறிய பொழுது இரவின் இருள் பரவி இருந்தது. எந்த நடமாட்டத்தையும் வீதியில் காணவில்லை.
அல்பிரேட்டும் ஜோனும் ஒரு திசையில் நடக்கத் துவங்கினர். செல்லும் காறால்ட்டும் மறுதிசையில் நடந்தனர்.
இலங்கையில் இருந்து ஏதாவது கடிதம் வருகிறதா என்று தினமும் தபால் பெட்டியைத் திறந்து பார்ப்பது தமிழருடைய வழக்கம். அன்று தபால்களைப் பார்த்த போது, இந்தத் துண்டுப் பிரசுரமும் அவர்களுடைய கைகளிலே கிடைத்தது.
நித்தியாயினிக்குத் துண்டுப் பிரசுரத்தை வாசித்ததும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கையில் ஆயுதம் இருந்தால், இதனை எழுதியவனைச் சுட்டுக் கொன்றால் மட்டுமே ஆத்திரம் அடங்கும் என்கின்ற வகையிலே ஆவேசப்பட்டான். இந்த முனிவின் உச்சம் ஒரு கணந்தான். பிறகு ஒருவகைத் துக்கமும் இயலாமையும் அவளை வளைத்துக் கொண்டன.
அவள் வேலைக்குப் புறப்பட்டு நின்றாள். தேவகுரு வீடு வந்ததும், அவள் புறப்பட்டுச் செல்வது வழக்கம். அவர் வந்ததும் ‘இந்த நோட்டீஸ’ல அந்த அறுவான்கள் என்ன எழுதியிருக்கிறாங்கள் என்டதை வாசிச்சுப் பாருங்கோ’ என்று நோட்டீஸைக் கொடுத்துவிட்டு, அவள் வேலைக்குப் புறப்பட்டாள். தேவகுரு நோட்டீஸை வாசித்த பின்னர், மிக அமைதியாக அதன் வாசகங்களை அசைபோட்டார்.
துண்டுப் பிரசுர வாசகத்திலே கோபம் இருந்தது. அறியாமையும் இருந்தது. குறுகிய எண்ணம் மட்டுமல்ல, வலோற்காரமான ஒரு கோட்பாடும் பின்னிப் பிணைந்திருந்தது. தமிழர்களை மரியாதைக் குறைவாக நடத்தி, அவர்களைப் பயமுறுத்தி அடிபணியச் செய்யும் குயுக்தி அந்த வாசகத்தின் மறைவில் பதுங்கியிருந்தது. இதற்குக் காரணமானவர்கள் யார் என்பதையும், அவர்களுடைய எண்ணிக்கைப் பலம் எத்தகையதாக இருக்கும் என்பதையும் அவரால் நிதானிக்க முடியவில்லை. ஆனாலும், இந்தத் துண்டுப்பிரசுரம் ஏற்படுத்தக் கூடிய பரப்பரப்பும் எதிர்வினையும் அவருக்கு கவலை அளித்தன.
தேவகுரு எதிர்பார்த்தது போலவே, அங்கு வேலை செய்த தமிழர்கள் மத்தியிலே அந்தத் துண்டுப் பிரசுரம் மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது. பலதரப்பட்ட கருத்துக்கள் அவர்கள் மத்தியிலே அடிபடுவதாகவும் அறிந்தார்.
‘இது அவன்ர நாடு. இதைத்தான் அவன் சொல்லுறான்.’
‘இது சில வம்புகள் செய்யிற கூத்து. நோட்டம் விட்டுப் பார்க்கிறாங்கள்.’
‘ஜெர்மனியில நடக்கிறதுபோல இங்கையும் நடந்தால்? இங்க இருந்து கிலிசகேடு படுறதைப் பார்க்கிலும் ஊருக்குப் போறதுதான் புத்தி…’
‘இந்த நாட்டுக்காரங்கள் அன்பானவர்கள். மனித நேயம் மிக்கவர்கள். சில குசும்பர் செய்யிற போக்கிரித்தனங்களுக்கு அவங்கள் செய்வாங்கள்?’
‘என்ன இருந்தாலும் இதை முளையில கிள்ளி எறிய வேணும். எதையும் வளரவிட்டால் ஆபத்துத்தான்.’
இத்தகைய பலதுபட்ட அபிப்பிராயங்கள் மத்தியிலே, தமிழர் கூட்டமைப்புக் கூட்டப்படவேண்டும் என்கின்ற கருத்து வலுவடைந்தது. இதனைச் செயற்படுத்தும் வகையிலே அதன் தலைவர் சற்குணம் சனி மாலை கூட்டமைப்பின் கூட்டம் ஒன்று நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்தார். அங்கு வாழும் எல்லாத் தமிழ்க் குடும்பங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவது போல நிறையப் பேர் கூடியிருந்தார்கள். பலரும் உணர்ச்சி வசப்பட்டவர்களாகக் காணப்பட்டார்கள். இளைஞர்கள் ஆத்திரத்தின் வசப்பட்டவர்களாக, ‘ஒரு கை பார்க்க வேணும்’ என்கின்ற மோஸ்தரில் வந்திருப்பதையும் அவர் அவதானிக்கத் தவறவில்லை. இந்தக் கூட்டம் அவர்களுக்கு ஒரு வடிகாலாக அமையலாம் என்று எண்ணினார். இருப்பினும், தமது இருப்பினை ஒரு புறத்தில் ஒதுங்கி அமர்ந்து கொண்டார்.
கூட்டம் துவங்கியது.
‘இன்றைய பிரச்சினைகளுக்கு தேவகுரு அவர்கள் தலைமை தாங்க வேண்டும் என நான் பிரேரிக்கிறேன்’ என்று யாரும் எதிர்பார்க்காத சடுதியில் சற்குணம் எழுந்து சொன்னார்.
‘நான் இதனை ஆமோதிக்கிறேன்’ என்று ரகு எழுந்து சொன்னான். தேவகுரு மிகவும் நிதானமானவர் எனப் பெயர் எடுத்திருந்தார். அத்துடன், அவர்கள் பிரச்சினைகளை ஆழமாகவும் நுட்பமாகவும் பார்க்கக் கூடியவர் என்று சற்குணம் நம்பினார்.
தேவகுருவுக்குச் சங்கடமாக இருந்தது. தயங்கினார்.
‘போங்கள் – போங்கள்’ என்று சபையோர் பலரும் உற்சாகமாகக் கத்தினார்கள். மக்கள் வைத்துள்ள மரியாதையையும் நம்பிக்கையையும் உதாசீனப்படுத்த விருப்பம் இல்லாதவராக, சற்குணரின் பக்கத்திலே காலியாக இருந்த ஆசனத்திலே சென்றமர்ந்தார்.
‘இந்தப் பிரச்சனைக்கு என்னைத் தலைமை தாங்கும்படி கேட்டுக் கொண்டமைக்கு நன்றி. நாங்கள் எல்லோரும் பாதிக்கப்பட்ட, மேலும் பாதிக்கக் கூடிய விஷயம் இது. உணர்ச்சிக்கு இடம் கொடுக்காது. அறிவுக்கும் நியாயத்துக்கும் முதலிடம் அளித்துப் பிரச்சனையை அணுகும்படி கேட்டுக் கொள்கிறேன். பகை சின்னதாகவும் இருக்கிறது. ஆரம்பக் கட்டத்திலும் இருக்கிறது. இதையும் நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்’ எனக் கூறித் தேவகுரு அமர்ந்தார்.
‘பகையில சின்னன் பெரிசு எண்டு இல்லை. இப்பிடித் தான் ஜெர்மனிலையும் எங்கட சனம் விட்டிட்டு இருந்தவை. பிறகு என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்’ என்ற அமுதன் எழுந்து நின்று வெடித்தான். அவன் எதிலும் அவசரக்காரன். தீவிரவாதி என்று பெயர் பெற்றிருந்தான்.
‘அமுதன் சொல்லுறது சரி. நாங்களும் எதாவது நடவடிக்கை எடுக்க வேணும். குனிஞ்சால் குட்டிக் கொண்டே இருப்பாங்கள். இதுதானே எங்கள் தாயக மண்ணிலே நடந்தது?’ என்று அர்ஜுன் சொன்னான். அவன் துணிந்தவன்; செயல்வீரன் என்று தமிழர் மத்தியிலே மதிப்புப் பெற்றிருந்தான்.
‘முதலிலை போலிஸ் நடவடிக்கை எடுத்தால் என்ன? எங்களுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடும் செயல் இது. எங்களுக்குப் பாதுகாப்புத் தருவது போலிஸாரின் கடமை’ என்று ரகு சொன்னான்.
‘ஓமோம், தாயக மண்ணிலும் எங்களுக்குப் போலிஸார் தாற பாதுகாப்பை நாங்கள் அறியாமலா இருக்கிறம்.’ என்று அமர்ந்தபடியே அர்ஜுன் நக்கலடித்தான். ஒழுங்கு மாறிப் பிரச்சினை வளர்வதை அறிந்து சற்குணம் எழுந்தார்.
‘தம்பி ரகு போலிஸ”க்குப் போகலாம் என்று நினைக்கிறார் போல. இந்த நோட்டீஸை அச்சிட்டு வெளியிட்டவங்கள் யார் என்று தெரியாது. இந்த நிலையில போலிஸ் என்ன செய்யும்? டயர் களவு போனது என்று முறைப்பாடு செய்தாலும், எடுத்தவன் யார் எண்டு தெரிஞ்சால் வந்து சொல் என்றான் போலிஸ். இந்த நோட்டீஸை போலிஸ’ல கொடுத்தால் என்ன சொல்லுவாங்கள்? இதைச் செய்தவன் யார் யார் எண்டு தெரிஞ்சால் வந்து சொல்லுங்கோ என்று சொல்லப் போறான். பிறகு? வீண் அலைச்சல்; பிரயோசனம் இருக்காது எண்டு நினைக்கிறன்’ என்று சொல்லிச் சற்குணம் அமர்ந்தார்.
இந்தப் பேச்சுக்குப் பின்னர் அமைதி நிலவியது. பிறகு சபையோர் மத்தியிலே குசுகுசு என்று தங்களுக்குள் கதைக்கும் பராக்குள் எழலாயின. இந்தச் சந்தர்ப்பத்தில் தேவகுரு எழுந்தார். மிக நிதானமாக ஒவ்வொரு சொல்லாக உச்சரித்துப் பேசத் தொடங்கினார்.
‘நாங்கள் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறம். முதலிலே எங்களுடைய மன இறுக்கங்களை இலகு படுத்திக் கொள்ளுவம். அதற்காக நான் ஒரு கதை சொல்லுறன். பாரதியார் என்கின்ற கவிஞரை எங்கள் எல்லோருக்கும் தெரியும். அவரைப்பற்றி ‘பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி’ என்று ஒரு புத்தகம் வந்திருக்கு. பாரதியார் நாட்டு விடுதலையை நேசித்து அதற்காக வாழ்ந்தவர். ‘ரௌத்திரம் பழகு’ எனப் புதிய ஆத்திச்சூடி எழுதியவர். அவர் வன்முறைக்கு எதிராளி அல்ல. ஒரு தடவை ஓர் ஆங்கில மாது பேசிக் கொண்டிருந்தார். அந்த மாது பாரதியாருக்குச் சொன்ன வசனங்கள் அப்படியே இப்பொழுது என் நினைவுக்கு வருகின்றன. ‘போர் ஒரு நாளும் நன்மை பயக்காது. ஒரு போர் இன்னொரு போருக்கு நியாயமாகிறது. தோல்வி கண்டவர் வெற்றி கொண்டவர் மீது வன்மம் பாராட்டுவார்கள். போரில்லாத அன்பு வழியே உலகில் அமைதியைக் கூட்டும். அகிம்ஸையும் அன்புமே அமைதிக்கு உகந்தவை. அன்பையும் அகிம்ஸையையும் தவிர ஆத்திரமும் போரும் அமைதிக்கு வழி இல்லை…’ நிறுத்தி சபையோரை நோட்டமிட்டார். குறிப்பாக அர்ஜுனையும் அமுதனையும் பார்த்தார். அமைதி நிலவவே தொடர்ந்து பேசினார். ‘நோட்டீஸை அடிச்சு எங்களுடைய தபால் பெட்டிகளிலே போட்டிருக்கிறாங்கள் என்று கோவப்படுவதில அர்த்தமில்லை. அவர்களுக்கு உள்ள பிரச்சினையை நாங்கள் முதலில் புரிஞ்சு கொள்ள வேண்டும்.
‘பகைவனின் மனநிலையைப் புரிஞ்சு நாங்கள் செயற்பட வேண்டும். எடுத்ததும் வன்மம் பராட்டினால் அது தொடர் கதையாக போயிடும். அது தேவையில்லை. வன்மம் பாராட்டினால், எங்களைத் துன்பங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறியளே?
‘நாங்கள் மனிசர்கள். எங்களுக்கும் நாகரிகமாக வாழத் தெரியும் என்கின்ற எண்ணத்தை இவர்களுக்கு ஊட்ட வேணும் என்பதுதான் முக்கியம். உங்களுக்குத் தெரிஞ்ச உதாரணத்தை நான் சொல்லுறன். நாய் எங்களைக் கடிச்சுப் போட்டுது என்பதற்காக, நாங்கள் படுத்துக் கிடந்து நாயைக் கடிக்க வேணுமே? அது எங்களைக் கடிக்கிறதுக்கு முன்னர் விலகிறதுதான் புத்தி. அதை இதை அதுக்குப் போட்டு, அதவாலாட்டச் செய்யிறது எங்கட கெட்டித்தனம். விளங்குதுல்லே?
‘நான் இந்தக் கூட்டத்தில உங்கள் சார்பாக ஒரு யோசினையை முன்வைக்கிறன். அந்த யோசினையை நீங்கள் பரிசீலனை செய்து பருங்கோ…நாங்கள் நோர்வேயின் நல்லிதயம் கொண்ட மக்களுடைய பார்வைக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதுவம். தாயகத்தில் நாங்கள் அடைந்த துன்பங்களையும், பிறந்த மண்ணிலே வாழக்கூட முடியாது இங்கு அகதிகளாக வந்து நிலைபரத்தினையும், சுருக்கமாக விளக்குவம். இங்கிருந்து மக்கள் கடந்த ஒரு காலப் பகுதியில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து சென்றார்கள். அவர்களுக்கு அங்கு வாழ்ந்த மற்றைய அமெரிக்கர் இம்சை செய்திருந்தால் அவர்களுடைய மனோநிலை எப்படி இருந்திருக்கும் என்று அவர்களுடைய மனிதாபிமானத்தினைக் கிளறும் வகையில் கேள்வி கேட்போம். எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள நிறபேதங்களுக்கு நாங்கள் காரணர் அல்லர். இதனை அவர்கள் உணருதல் வேண்டும்.
‘நாங்கள் இந்த நாட்டிற்கு அவர்களுடைய கருணா சுபாவத்தினை நம்பி விருந்தினர்களாக வந்திருக்கின்றோம். எங்களை இம்சைப் படுத்துவதும், அவமதிப்பதும் அவர்களுடைய பெருந்தன்மைக்கும் நாகரிகத்திற்கும் சற்றும் பொருந்தாது என விளங்கப்படுத்துவோம். நாங்கள் அடையும் துன்பங்களையும் அச்சங்களையும் அவர்களுடைய மனங்களைத் தொடும் வகையில் முன்வைக்க வேண்டும். நாங்கள் சிலபேர் ஒன்றாக அமர்ந்து, இப்படியான ஒரு நோட்டீஸைத் தயாரித்து விநியோகிப்பம். இதற்கு என்ன பயன் கிடைக்கிறது என்பதைப் பார்த்து, அடுத்த நடவடிக்கை பற்றி யோசிக்கலாம்…’
தேவகுரு அத்தோடு நிறுத்தி, சபையோரைப் பார்த்தார். சற்குணத்திற்கு மகாதிருப்தி. இப்படி ஒரு மணியான யோசனையை அவர் முன்வைக்கக்கூடும், என்பதை எதிர் பார்த்ததுதான் அவர் தேவகுருவைத் தலைமை தாங்கும்படி கேட்டுக் கொண்டார். பலர் அவருடைய யோசனையை ஏற்றுக் கொள்வது போலத் தலையை ஆட்டினார்கள்.
‘இது சரிவருமே? நாங்கள் இப்பிடிச் சின்னனாக விட்டா, அவங்கள் எங்களோட சேட்டை விடாங்களே?’ என்று அமுதன் சந்தேகம் கிளப்பினான்.
‘இதை முதலில செய்து பார்ப்பம். இதற்கு என்ன Reaction இருக்கிறது என்று கவனித்துப் பார்ப்போம்’ என்றார் சற்குணம்.
‘இந்த நோட்டீஸ”டன், அவங்கள் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தையும் சேர்த்து, ஒட்ட வேணும். அப்பதான் நொஸ்க்குகளுக்கு விளக்கமாகத் தெரியும்’ என்றான் அர்ஸ”ன். அந்த யோசினையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இஃது இளைஞர்களைத் திருப்திப் படுத்தியது.
தமிழர் கூட்டமைப்பு தயாரித்த நோட்டீஸ”கள் கடைகளிலும், ரெஸ்டொறண்டுகளிலும் தொங்க விடப்பட்டன. அதற்குக் கீழே அந்த நால்வர் அனுப்பிவைத்த எச்சரிக்கைக் கடிதங்களும் எல்லோர் பார்வைக்காகவும் வைக்கப்பட்டிருந்தன.
இவை பலராலும் வாசிக்கப்பட்டன. வாசித்தவர்கள் பெரும்பாலானோர் தமிழ் மக்கள்மீது அநுதாபப்பட்டனர். சிலர் இதனை வெளிப்படையாகவே சொன்னார்கள். வெளிப்பார்வைக்கு தேவகுரு முன்வைத்த யோசினை வெற்றி பெறுவதாகத் தோற்றம் அளித்தது.
[தொடரும்]