படித்தவற்றை என்னசெய்வது ?

எழுத்தாளர் முருகபூபதிமுன்னர்      அணிந்த       உடைகளை      என்ன     செய்வோம்?       என்பதற்கு  அவரவர்      தரப்பில்       பதில்கள்       இருக்கின்றன.      பொதுவாக  இல்லாதவர்களுக்கு       கொடுப்பார்கள்.       இலங்கையில்      ஒரு    காலத்தில்  பழைய     ஆடைகளை       கொடுத்துவிட்டு       புதிய     பாத்திரங்கள்  வாங்குவதை       சிறுவயதில்      பார்த்திருக்கிறேன். தற்பொழுதும்      இந்த     வழக்கம்     இலங்கையிலிருக்கிறதா?      என்பது  தெரியாது. சுனாமி  கடற்கோள்     பாதிப்புக்கு      உதவுமாறு      அவுஸ்திரேலியா  மெல்பனில்      அன்பர்களிடம்     வேண்டுகோள்      விடுத்தபொழுது –   பெட்டி  பெட்டியாக      பாவித்த      உடைகள்தான்      முதலில்      வந்து     குவிந்தன.  ஏனைய      நிவாரணப்பொருட்கள்      அதன்பிறகுதான்.       இரண்டு  கொள்கலன்களில்      அவற்றை      நிரப்பி       கப்பல்      மார்க்கமாக    இலங்கைக்கு     கொண்டு     சேர்த்ததும் –      பின்னர்      அவற்றை      கொழும்பு       துறைமுகத்திலிருந்து      வெளியே      எடுத்து  பாதிக்கப்பட்டவர்களுக்கு       விநியோகிக்க      பட்ட     கஷ்டங்களும்   நீண்டதொரு     கதை. வாசிக்கும்      பழக்கம்      உள்ளவர்களிடம்      நூல்கள்,      பத்திரிகைகள்,     வார- மாத     இதழ்கள்    குவிந்துவிடும்.       இவற்றில்      பத்திரிகைகள்      இதழ்கள்  இலங்கையில்      எடைபார்த்து      கிலோவுக்கு     இன்னவிலை     என்ற  நிர்ணயம்      இருக்கிறது.     பழைய     பேப்பர்கள்      வாங்கும்    கடைகள்  இலங்கையில்      இருக்கின்றன.

அவுஸ்திரேலியாவில்      வீடுகளில்     Recycling bin   இருக்கிறது.   மாநகர சபை  அவற்றை      நிலவரி       செலுத்தும்      ஒவ்வொரு      வீடுகளுக்கும்      வழங்கும்.   வாரத்திற்கு      ஒரு     தடவை      நகரசுத்தி     தொழிலாளர்கள்     வீட்டுக்கழிவு  குப்பைகளை      எடுத்துச்செல்லும்பொழுது     குறிப்பிட்ட  Recycling bin  களில்  கொட்டப்பட்டிருக்கும்       பழைய     பேப்பர்கள்       இதழ்கள்       காகிதாதிகள்  மற்றும்      பிளாஸ்ரிக்     போத்தல்கள் –    பொருட்களையும்  எடுத்துச்செல்வார்கள். அவை மீள்      உற்பத்திக்குப்பயன்படுகின்றன.

பொது     நூலகங்களில்     பெரும்பாலான     வாசகர்களினால்     படித்து  முடிக்கப்பட்ட    பழைய      நூல்கள்     ஒரு      டொலர்      அல்லது     ஐம்பது  சதத்திற்கு       விற்கப்படுகிறது.     கனடாவில்      எழுத்தாளர்       முத்துலிங்கம்  தெருவோரத்தில்       ஐம்பது     சதத்திற்கு      கிடைத்த      ஷேக்ஸ்பியரின்      நாடக        நூல்      ஒன்றை       வாங்கிவந்ததாக     ஒரு      பத்தியில்  சுவாரஸ்யமாகக்       குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையிலும்       தமிழ்நாட்டிலும்       அவுஸ்திரேலியாவிலும்      பழைய  நூல்கள்      இதழ்கள்      விற்பனை      செய்யப்படும்     கடைகளை  பார்த்திருக்கின்றேன்.     முன்னர்      படித்திராத   நூல்கள்      பலருக்கு      இங்கு  கிடைத்திருக்கலாம்.      அவ்வாறு      கிடைப்பது     அபூர்வமான  தருணங்கள்தான்.
ஜெர்மனியில்      ஒரு     வீதியில்      ஒரு     வீட்டின்     முன்னால்     ஏராளமான       நூல்கள்       வரிசையாக     அடுக்கிவைத்திருப்பதை  பார்த்துவிட்டு  –      எனது       உறவினரிடம்       அவை       பற்றிக்கேட்டேன்.     அந்த  வீட்டுக்காரர்கள்      படித்து      முடித்த      பழைய      நூல்கள்.     தெருவில்  செல்வோருக்கு       இலவசமாக      கொடுக்கிறார்கள்      என்ற     பதில்  கிடைத்தது. முன்னர்      பஸ்,    ரயில்,     விமானம் ,  ட்ராம்    முதலானவற்றில்      நூல்கள்  இதழ்கள்       வாசிப்பவர்களைத்தான்       அதிகமாகப்பார்த்திருக்கின்றேன்.  ஆனால்       கைத்தொலைபேசி      ஐபேர்ட்,      லெப்டொப்      ஆகியனவற்றின் அறிமுகமும்       பாவனையும்      அதிகரித்தபின்னர்        பெரும்பாலானவர்களின்  கைகளில்     நூல்கள்        இதழ்களுக்குப்பதிலாக        மேற்குறித்த      நவீன சாதனங்கள்தான்      தவழுகின்றன.      பயணங்களில்       எந்தப்பக்கம்  திரும்பினாலும்      யாராவது     ஒருவர்      கைத்தொலைபேசியில்     தகவல்  அனுப்பிக்கொண்டோ      அல்லது      தகவலைப்படித்துக்கொண்டோதான்  இருக்கிறார்கள்.

இலக்கியப்பிரவேசம்      செய்த      காலம்       முதல்     என்னிடமும்     ஏராளமான  நூல்கள்       இதழ்கள்       பத்திரிகைகள்       சேர்ந்துவிட்டன.       இலங்கையில்  1983  வன்செயல்       இடப்பெயர்வின்பொழுது        பல  பெட்டிகளில்     சேகரமாக  இருந்த      நூல்களை       அரியாலைக்கு       எடுத்துச்சென்று       ஒரு      வீட்டில்  பத்திரமாக       வைத்திருந்தேன்.

ஒருநாள்      நண்பர்       புதுவை ரத்தினதுரை      அவற்றை      தங்கள்  இயக்கத்தின்       நூலகத்திற்கு தருமாறு கேட்டார்.       கொடுக்க      சம்மதித்தேன்.  ஒரு     ஹைஏஸ்       வாகனத்தில்      அவற்றை      ஏற்றி     எடுத்துச்சென்றார்.  யாம்      பெற்ற      இன்பம்      பெறுக       அவ்வியக்கம்      என்ற     பெருமிதத்துடன்      ஊர்      திரும்பி –    பின்னர்      புலம்பெயர்ந்தும்  வந்துவிட்டேன். தற்பொழுது      அந்த      நூல்களும்     நண்பர்      புதுவையும்      எங்கே?   என்று  யோசித்துக்கொண்டிருக்கின்றேன்.

இலங்கை       வரும்பொழுதும்       எனக்கு      நூல்கள்       சேர்ந்துவிடும்.  முடிந்தவரையில்       புறப்படும்    முன்னர்       படித்துவிடுவேன்.  படிக்காதவற்றை        எடுத்துவருவேன்.      படித்தவை      அக்கா –  தங்கை  வீடுகளில்       பெட்டிகளில்       சேகரமாகிவிடும்.       மறு பயணத்தில்     மேலும்  நூல்கள்      சேர்ந்துவிடும்.      மீண்டும்      படிப்பு.      படிக்காதவற்றை  எடுத்துவருவது.      படித்தவற்றை      விட்டுவருவது.

ஒரு      பயணத்தின்போது –        படித்தவற்றை      எமது    ஊரில்   நான் முன்னர்      கல்விபயின்ற      இன்றைய       விஜயரத்தினம்     இந்து    மத்திய கல்லூரி      நூல்     நிலையத்திற்கும்      கிளிநொச்சி     மகா    வித்தியாலயம்  மற்றும்      முள்ளியாவளை       வித்தியானந்தா கல்லூரி      ஆகியனவற்றுக்கும்   கொடுத்துவிட்டேன்.

அவுஸ்திரேலியாவிலும்      நூற்றுக்கணக்கான     படித்த    நூல்களை  இதழ்களை      இங்குள்ள      இலக்கிய      நண்பர்களுக்கு      பெட்டி  பெட்டியாகக்கொடுத்துவிட்டேன்.      ஒரு      தமிழ்      அமைப்பு    நூலகம்  ஒன்றை      அமைப்பதற்கு     முன்வந்தவுடன்      அந்த      அமைப்பிற்கும்  கொடுத்தேன். என்சைக்கிளோபீடியா      தொகுப்புகள்      பல    இருந்தன.     தற்பொழுது  கூகுளில்     தேடினால்     எல்லாம்      கிடைக்குமே…  ஏன்     இவற்றை  வைத்திருக்கிறீர்கள்      என்று      பிள்ளைகள்     கேட்டார்கள். சரி     அவற்றுக்கும்      விடுதலை      கொடுத்துவிட்டேன்.     அவை     தற்பொழுது  முல்லைத்தீவில்       முள்ளியவளை     வித்தியானந்தா      கல்லூரி     நூலகத்தில்      வாசம்     செய்கின்றன. படித்தவற்றை      என்னதான்     செய்வது?

இந்தக்கேள்வி       என்னைப்போன்று       பல      எழுத்தாளர்களின்     மனதையும்       ஓயாமல்       குடைந்துகொண்டுதானிருக்கும்.      இதிலே மற்றுமொரு       சங்கடமும்     இருக்கிறது.      சக      எழுத்தாளர்கள்     தமது  வாழ்த்துக்குறிப்புடன்       ஒப்பமிட்டுத்தரும்      அவர்தம்     நூல்களை     வெளியே  கொடுப்பதற்கு      மனம்     இடம்தராது.       ஆனாலும்      பலருக்கு  அந்தமனத்தடையும்     இல்லை. அவுஸ்திரேலியா       சிட்னியில்     இயங்கும்     ஒரு     தமிழ் நூலகத்திற்குச்சென்றிருந்தேன்.       அங்கிருந்த     எனது  நூல்களைப்பார்த்துவிட்டு       அதிசயித்து       எடுத்துப்பார்த்தேன்.     ஒருவருக்கு  நான்      எனது     ஒப்பமும்     திகதியும்     இட்டு      அன்பளிப்பாக    வழங்கிய      நூல்கள்     அவை.      அந்த      அன்பர்      படித்தாரா?    படிக்காமலேயே      நூலகத்திற்கு      வழங்கினாரா?       என்பதற்கான     பதில்  தெரியாமலிருப்பது      நல்லதுதான்.

இங்கு     நான்     அடிக்கடி      பயணிக்கும்      ரயில்      மார்க்கத்தில்  அமைந்துள்ள      ரயில்      நிலையங்களில்      ஒரு    வழக்கத்தை  கடைப்பிடிக்கிறார்கள். ரயில்     நிலையங்களில்     ஒரு     வாசகம்     தென்படுகிறது. நீங்கள்     படித்து     முடித்த    பழைய      நூல்களைத்     தாருங்கள்.  மற்றவர்களுக்கு      பயன்படட்டும். என்னவென்று       விசாரித்துப்பார்த்தேன்.      ரயில்      வரும்வரையில்  காத்திருப்பவர்கள்      படிப்பதற்கு       வழங்குவதற்காக      அந்த    சேகரிப்புகள்  பயன்படுகின்றன      என்று   ரயில்     நிலைய    ஊழியர்     சொன்னார்.  அவ்வாறு     வாங்கிப்படித்துவிட்டு     மீண்டும்  திருப்பிக்கொடுத்து விட்டுச்செல்லும்      பயணிகளையும்      பார்த்திருக்கின்றேன்.      அவர்கள்      முதியவர்கள்.      இளம்      தலைமுறையினர்      கைத்தொலைபேசியிலும்      ஐபேர்டிலும்    தமது பயணத்தை      கரைத்துக்கொள்கிறார்கள். இலங்கையில்      ரயில்      நிலையங்களில்      இந்த      நடைமுறையை  பின்பற்றலாம்.      காங்கேசன்துறை     வரையில்     அடுத்த    ஆண்டு    ரயில்  ஓடப்போகிறதாம். ரயில்     வராத     அல்லது     தாமதிக்கும்     நேரங்களில்    ரயில்நிலையங்கள்  பெரும்பாலும்     வெறிச்சோடித்தான்      இருக்கின்றன.     பழைய    நூல்கள்  பத்திரிகைகளுக்காக      எவராவது      கடைவிரித்துப்பார்க்கலாம். இலங்கையில்        நண்பர்      மாத்தளை     கார்த்திகேசு      எனக்குச்   சொன்ன  சம்பவம்      வெகு  சுவாரஸ்யமானது.

அவர்      கொழும்பு      பம்பலப்பிட்டியில்     ஒரு     காலத்தில்  சைவஹோட்டல்      நடத்தியிருக்கிறார்.      அப்பொழுது      அங்கு     சாப்பிடவரும்       வாடிக்கையாளர்கள்    கைதுடைப்பதற்காக  பழையபேப்பர்களை        வாங்கிவருமாறு      ஹோட்டல்      ஊழியரை அனுப்பியிருக்கிறார்.       அந்த      ஊழியர்      கொண்டு     வந்த      பழைய  பேப்பர்களுடன்        ஒரு      முக்கியமான      எOத்தாளரின்    முதலாவது  சிறுகதைத்தொகுப்பின்       பிரதிகளும்      இருந்தனவாம்.

உடனே      மாத்தளை      கார்த்திகேசு      அந்த      பழையபேப்பர்கள்     விற்பனை  செய்யும்      கடைக்கு       விரைந்துசென்று       பார்த்திருக்கிறார்.       அங்கே  குறிப்பிட்ட        முக்கியமான       எழுத்தாளரின்    குறிப்பிட்ட       முதல்  கதைத்தொகுப்பின்      பல      பிரதிகளையும்       அவருடைய     ஒரு    பழைய  நாட்குறிப்பையும்       கண்டெடுத்திருக்கிறார்.

அந்த     நாட்குறிப்பில்    ஒரு   முக்கியமான      விமர்சகர்    (பேராசிரியர்) குறித்து       கடும்விமர்சனங்களும்        பதிவுசெய்யப்பட்டிருந்ததாம்.  பின்னாளில்      அந்தப்       பெறுமதியான       நாட்குறிப்பு       எங்கோ  தவறிவிட்டது      என்று       மாத்தளை      கார்த்திகேசு       கவலை     தெரிவித்தார். இந்தச்செய்தி       எனக்குள்      சிறைப்பட்டு       நீண்ட  நாட்களாக  யோசிக்கவைத்தபடி இருந்தது.      அதற்கு       விடுதலை கொடுக்கவிரும்பினேன்.

கதைத்தொகுப்பின்     கதை      என்ற     கதையை      எழுதினேன்.     அந்தக்கதை  கடந்த ஆண்டு    (2012)    வெளியான       ஜீவநதி     ஆண்டுமலரில்  வெளியாகியிருக்கிறது. யார்     அந்த    முக்கியமான    எழுத்தாளர்? அமரர்    செ. கதிர்காமநாதன்.      நூல் கொட்டும்பனி. யாரோ    படித்த –   யாரோ     ஒரு     பிரபலம்     எழுதிய     பெறுமதியான    நூல்கள்  வெளிநாடுகளில்     ஐம்பது     சதத்திற்கும்     தெருவோரத்தில்     கிடைக்கிறது. இலங்கையில்     பழைய      பேப்பர்      கடைகளிலும்     கிடைக்கிறது. எழுத்தாளர்களே      கவனம்.     நீங்கள்       இல்லாத      காலத்தில்      நீங்கள்  படித்த     நூல்களை      என்ன     செய்யவேண்டும்     என்று     முற்கூட்டியே  குடும்பத்தினருக்கு      சொல்லிவைத்துவிடுங்கள். இல்லையேல்     நீங்கள்      படித்த      நூல்கள்     மாத்திரமின்றி –  விற்பனையாகாமல்      தேங்கியிருக்கும்      உங்கள்     நூல்களும்     பழைய  பேப்பர்கடைகளுக்குச்சென்றாலும்      ஆச்சரியமில்லை.     படித்த     நூல்களை  மட்டுமன்றி      எழுதிவைத்திருக்கும்     நாட்குறிப்புகளுக்கும்     ஒரு    வழியை  கண்டுபிடித்துவிடுங்கள். அவை     ஏலம்     போனால்….    அந்தப்     பொற்காலத்தை     தரிசிக்காத  அபாக்கியவாதிகள்தான்      என்று        ஆறுதல்பட்டுக்கொள்ளுங்கள். படித்தவற்றை      என்ன செய்வது?      இன்னும்     யோசிப்போம்.

letchumananm@gmail.com