படித்தோம் சொல்கின்றோம்: அம்ரிதா ஏயெம்மின் கதைத் தொகுதி – விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள்

படித்தோம் சொல்கின்றோம்: அம்ரிதா ஏயெம்மின் கதைத் தொகுதி - விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள்கிளிநொச்சி அறிவியல் நகரில் நடைபெற்ற 49 ஆவது இலக்கியச் சந்திப்பிற்கு வடக்கு, கிழக்கு, தலைநகரத்திலிருந்தும் கனடா, லண்டன், மற்றும் தமிழ்நாட்டிலிருந்தும் பல கலை, இலக்கிய ஆளுமைகள் வந்திருந்தனர். நண்பர் கருணாகரனின் அழைப்பில் அங்கு சென்றிருந்தேன். அவுஸ்திரேலியா திரும்பியது முதல் பல்வேறு பணிகள் இருந்தமையால் அந்த இரண்டு நாள் சந்திப்பு குறித்து எந்தவொரு பதிவும் எழுதுவதற்கு கால அவகாசம் கிடைக்கவில்லை. ஆனால், அதற்கு வந்திருந்த பலரும் தத்தமது முகநூல் வழியாக படங்களையும் குறிப்புகளையும் வெளியிட்டிருந்ததாக அறிந்தேன். என்னிடம் முகநூல் கணக்கு இல்லையென்பதனால், வேறு எதுவும் தெரியவில்லை!

குறிப்பிட்ட 49 ஆவது இலக்கியச்சந்திப்பில் உரையாற்றிய இலக்கிய நண்பர் எஸ். எல். எம். ஹனீபா அவர்கள், அந்த சந்திப்புக்கு வருகை தந்திருந்த அம்ரிதா ஏயெம் எழுதிய விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள் என்ற கதைத்தொகுதி பற்றி ஒரு வரியில் சிலாகித்துச்சொன்னார். அன்றுதான் அம்ரிதா ஏயெம் அவர்களை முதல் முதலில் சந்திக்கின்றேன். அவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் விலங்கியல் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் எனவும் இயற்பெயர் ஏ.எம். றியாஸ் அகமட் எனவும் அறிந்துகொண்டடேன்.

அங்கு நின்ற இரண்டு நாட்களும் அவருடன் பழகியதனால், அவரது எளிமையான சுபாவங்களும் அதிர்ந்து பேசாத இயல்புகளும் என்னை பெரிதும் கவர்ந்தன. இலக்கிய சந்திப்பில் எஸ். எல். எம். ஹனீபா, இவரது கதைத் தொகுதி பற்றிச்சொல்லும்போது அதில் வரும் இரண்டு பாத்திரங்களின் பெயர்களைச் சொன்னதும் அரங்கம் சிரித்தது. ஒன்று ராஜபக்‌ஷ. மற்றது விக்னேஸ்வரன்.

மதிய உணவு இடைவேளையில், அம்ரிதா, எனக்கு தனது கதைத்தொகுதியை தந்தார். எனது புகலிட நாடு திரும்பியதும் படித்துவிட்டு எழுதுவேன் எனச்சொல்லியிருந்தாலும், ஏற்கனவே குறிப்பிட்ட பணிச்சுமைகளினால் எழுதுதற்கான நேரம்
கடந்துகொண்டேயிருந்தது.

படைப்பிலக்கியத்தில் சிறுகதைகள், நாவல்களை வாசிக்கும்போது பெறும் அனுபவம் சாதாரண வாசகனுக்கும் படைப்பிலக்கியவாதிக்கும் வேறுபடும். குறிப்பாக இலக்கிய விமர்சகர்களின் வாசிப்பு அனுபவம் முற்றாகவே வேறுபட்டிருக்கும். அம்ரிதா ஏயெம்மின் இச்சிறுகதைத் தொகுதியை தேர்ந்த வாசகரினால்தான் புரிந்துகொள்ளமுடியும். சாதாரண வாசகர்கள் கற்பனாவாத கதைகளையும் யதார்த்தப்பண்பு மிக்க கதைகளையுமே எளிதாகப்புரிந்துகொள்வார்கள். அவர்கள், அம்ரிதா ஏயெம்மின் கதைகளை புரிந்துகொள்வதற்கு நவீனத்துவம் – பின் நவீனத்துவம் – மாயாவாதம் முதலான அடிப்படை அறிவையும் பெற்றுக்கொள்ளவேண்டி வரலாம். சில வேளை அதுவே அவர்களது வாசிப்புக்கு தடையும் போட்டுவிடலாம்.

அம்ரிதா ஏயெம்மின் கதைகளை நேர்கோட்டில் வாசிக்க இயலாது. அவரும் அவ்வாறு எழுதவில்லை. தேர்ந்த வாசகர்களுக்கும் கூட சிலசமயங்களில் அயர்ச்சியை தந்துவிடலாம். சாதாரண வாசகர்கள், “ இவர் யாருக்காக எழுதுகிறார்..? இந்த எழுத்துக்களின் சமூகப்பயன்பாடு யாது ..? எனவும் கேள்வி கேட்கலாம். நேர்கோட்டில், யதார்த்தப்பண்புடன் இவர் தனது கதைகளை எழுதவேயில்லை என்பதைப்புரிந்துகொண்டே இவரது கதைகளுக்குள் உள்மன யாத்திரை மேற்கொள்ளவேண்டும்.

நான் இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில் புதுமைப்பித்தனையும் ஜெயகாந்தனையும் மௌனியையும் லா. ச. ராமாமிருதத்தையும் ஒரே காலகட்டத்தில் படித்தேன். எனினும் முதலிருவரது கதைகளையும் உடனடியாகவே எளிதாகப் புரிந்துகொள்ளமுடிந்தது.

படிப்படியாகத்தான் ஏனைய இருவரையும் படித்து புரிந்துகொண்டேன். 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பின்நவீனத்துவம், இருத்தலியல், மாயாவாதம் ( மெஜிக்கல் ரியலிஸம் ) உட்பட பல இஸங்கள் பேசுபொருளானதன் பின்னர், அதன்பாதிப்பில் பலர் எழுத ஆரம்பித்தனர்.

அம்ரிதா ஏயெமின் கதைகளை படித்தபோது, அவர் குறித்த தேடல்களும் எழுந்தன. இவர் விஞ்ஞான பீட விரிவுரையாளர் என்ற முகத்தை மாத்திரம் கொண்டவர் அல்ல. சுற்றுச்சூழல், காடுகளின் மீள் உருவாக்கம் முதலான ஆய்வுகளிலும் களப்பணிகளிலும் அயராமல் ஈடுபட்டு வருபவர். அந்தப்பணிகள் சார்ந்தும் நூல்கள் எழுதியிருப்பவர். இயற்கை விஞ்ஞானத்திலும், சமூக விஞ்ஞானத்திலும் ஆய்வுகளை மேற்கொண்டவாறு சிறுகதை இலக்கியமும் படைக்கின்றார். இவரது பாத்திரங்களாக மனிதர்களும் விலங்குகளும் பறவைகளும் மற்றும் நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்களும் வருகின்றன. சுற்றுச்சூழல் குறித்தும் அக்கறை கொண்டவர். வழக்கமான கதைசொல்லும் பாணியிலிருந்து விலகி ( முற்றாக விலகி எனவும் சொல்லலாம்) புதிய உத்தியோடு கதைகளை நகர்த்துகிறார்.

இந்தத் தொகுப்பிற்கு முன்னுரை வழங்கியிருக்கும் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான், “ பின்நவீனவாதிகள் இன்னும் தீவிரமாக யதார்த்தத்தை உருச்சிதைப்பதையே இக்காலத்திற்குரிய கலைக்கோட்பாடாக முன்வைக்கின்றனர். யதார்த்தத்தை அடையாளம் காணமுடியாத அளவிற்கு இந்த உருச்சிதைப்பு நிகழும்போது அவர்களது இலக்கியம், கலை என்ற நிலையில் இருந்து சொல் விளையாட்டு என்ற நிலைக்கு இடம்பெயர்ந்துவிடுகிறது. இளம்தலைமுறையைச் சேர்ந்த நவீன எழுத்தாளர் சிலர் இந்தச்சொல் விளையாட்டில் அதீத மோகம் கொண்டுள்ளனர். யதார்த்தத்தின் தீவிர உருச்சிதைப்பையே இவர்கள் தமது கலைவெளிப்பாட்டின் வெற்றியாக கருதுகின்றனர். அதிஷ்டவசமாக அம்ரிதா ஏயெம் இந்த மோகத்தின் மையத்துள் புகாமல் ஓரத்திலேயே நிற்கிறார் என்பதை அவரது பெரும்பாலான கதைகள் நமக்கு உணர்த்துகின்றன. “ எனச்சொல்கிறார்.

இந்த நூலின் முதலாவது பதிப்பினை வெளியிட்டிருக்கும் “மூன்றாவது மனிதன் “ பதிப்பகர் எம்.பௌஸர், இவ்வாறு எழுதியுள்ளார்:- “ அம்ரிதா ஏயெம் – ஈழத்து நவீன சிறுகதையின் மாற்றத்தின் விளைவு. நமது சிந்தனை, இலக்கிய வெளிப்பாட்டு முறைமை அனைத்தும் பழைய தடத்தில் இருந்து வேகமாக மாறிக்கொண்டே வருகிறது. இந்த மாற்றத்தின் தடத்தில் நவீன சிறுகதையின் வெளிப்பாட்டு முறையில் உத்தியில் தங்களை அதிகமாக ஈடுபடுத்தி எழுதிவருபவர்களில் ஈழத்தில் இருவர் உள்ளனர். ஒருவர் திசேரா. மற்றவர் அம்ரிதா ஏயெம் ( ஏ.எம். றியாஸ் அகமட்) “

பௌஸர் குறிப்பிடும் திசேராவின் கதைகளை இதுவரையில் நான் படிக்கவில்லை. எனினும், பேராசிரியர் நுஃமான், மற்றும் பௌஸர் சொல்லியிருப்பதுபோன்று, கதை சொல்லும் உத்தியிலும் படிமங்களின் ஊடாக சொல்லவரும் செய்தியை நகர்த்துவதிலும் அம்ரிதா ஏயெம் ஏனைய சிறுகதை படைப்பாளிகளிடமிருந்து முற்றாக வேறுபடுகிறார் என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது.

இத்தொகுப்பில் 16 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. முதலாவது கதை விலங்கு நடத்தைகள். கதைசொல்லி, குரங்குகளின் நடத்தையையும் , மனிதர்களின் இயல்புகளையும் படிம உத்தியில் சித்திரிக்கின்றார். அவை ஒன்றுக்கொன்று பொருத்தமாகிவிடுகின்றன.

“ வாழ்க்கை என்பதில் பரம்பிக்கிடப்பது வளைத்தலும் வளைதலும், மயங்குதலும் மயக்குதலும், துணையாதலும், துணையாக்குதலும்தானே.. “ எனச்சொல்கிறார்.

இவை மனிதர்களிலும் விலங்குகளிலும் நடக்கிறது. குரங்கிலிருந்து தோன்றிய மனிதகுலம் அதன் இயல்புகளையும் கொண்டிருக்கிறதோ என்பதை வாசகர்களின் தீர்மானத்திற்கு விட்டுச்செல்கிறார்.

காட்டில் வாழும் விலங்குகள், ஏன் நகரத்திற்கு இடம்பெயருகின்றன..? அதற்குக்காரணமானவர்கள் மனிதர்கள்தான் என்பதையும் கதைசொல்லி சுட்டிக்காண்பிக்கின்றார்.

காடழிப்பு , மணல்கொள்ளை என்பன எவ்வாறு சுற்றுச்சூழலை மோசமாக பாதிக்கிறது என்பதும் இவரது படைப்பு மொழிஆளுமையில் வெளிப்படுகிறது.

இத்தொகுப்பில் இடம்பெறும் மாயமான் என்ற கதை, இராமயணத்தில் வரும் கானகத்தை ஆளும் தடாகை பற்றியும் மானைப்பிடித்து தாருங்கள் என்று கணவன் இராமனிடம் கேட்கும் சீதை பற்றியும், சமகாலத்தில் கானகத்தில் வேட்டைக்குச்செல்லும் சிங்கம்மாமா, லால், காமினி மற்றும் கதை சொல்லி பற்றியும் பேசுகிறது.

அம்ரிதா ஏயெம், தனது என்னுரையில் இவ்வாறு சொல்கிறார்: “ மாயமான்களின் ஆரண்யங்கள் பல்வேறு காரணங்களின் நிமித்தம் அழிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. தொடருகின்றன. ஆண்டவனுக்கும் அடங்குபவனுக்குமான அல்லது சுரண்டுபவனுக்கும் சுரண்டப்படுபவனுக்குமான பிரச்சினைகள் முடிந்தபாடில்லை. “

பூமி வெப்பமடைதல் என்ற பேசுபொருள் இன்று சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தப்பின்னணியில், உயிரினங்கள் தொடர்பாக ஆய்வுசெய்துகொண்டே, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்திவரும் அம்ரிதா ஏயெம்,படைப்பிலக்கியவாதியாகவும் இயங்குவதனால், அவரது சமூகம் சார்ந்த தீவிர அக்கறை அவர் எழுதும் ஒவ்வொரு கதையிலும் வெளிப்பட்டிருக்கிறது.

அவர் தொடர்ந்தும் கதைகள் எழுதி சிறுகதை இலக்கியத்திற்கு மேலும் வளம் சேர்க்கவேண்டும் என வாழ்த்துகின்றோம்.

letchumananm@gmail.com