சிறுகதைக்கான களமுனைகள் தாராளமாக ஒரு நெறிப்படுத்தப்பட்ட செல்நெறியில் சென்றுகொண்டிருப்பதை உணர்கிறேன். கல்வி, கணினி வசதிகள், இனமுரண்பாட்டின் வன்மங்கள், வலிகள், வாழ்க்கை தந்து கொண்டிருக்கும் நோவுகள் பலரை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் சூழலில் பலர் தங்களின் இடப்பெயர்வு/புலப்பெயர்வு நகர்வுகளின் இருப்பில் இருந்துகொண்டு தங்களை/தங்கள் சிந்தனையை கட்டமைக்கப்பட்ட வடிவத்திற்குள் கொண்டுவருகின்றனர். அது எழுத்தாகவும், வேறு வடிவங்களாகவும் இருக்கலாம். அந்த வகையில் புலம் பெயர் வாழ்வின் இறுக்கத்திற்குள் இருந்துகொண்டு வனைகின்ற பல படைப்பாளர்கள் வரிசையில் இன்று சிறப்பாகத் தன்னை வடிவமைத்துக்கொண்ட படைப்பாளனாக நிமிர்ந்து வருகிறார் நம்மவர் திரு.ராஜாஜி ராஜகோபாலன். யாழ் புலோலி கிழக்கில் பிறந்து தன் கல்வி, சட்டத்துறை சார் தொழில் எனத் தன்னை நிறுத்திக்கொண்டாலும் எழுத்தின் மீதான தாகம் அதிகமாகவே அவ்வப்போது தினகரன், கவிஞன், வீரகேசரி, மல்லிகை, திண்ணை, காற்றுவெளி, சங்கப்பொழில், ஈழநாடு ஆகியவற்றில் எழுதினார். வேலைப்பளு அவரை குந்தியிருந்து எழுதுவதைத் தடுத்தது. ஆனால் அவரின் ஓய்வு தற்போது நிறையவே எழுதவைக்கிறது. அவரின் பாசையில் ‘ஊறப்போட்ட’ கற்பனைகள் வடிவம் பெறுகின்றன. தான் பார்த்த, கேட்ட அனுபவங்கள் நிதானமாகக், கவனத்துடன் எழுத முனையும் முயற்சி பாராட்டும்படி உள்ளது. எனக்குப் பிடித்த இன்னொரு விடயம் வழக்கு மொழி மீதான பற்று, அதனை தேவையான இடத்தில் பயன்படுத்தும் முறைமை அலாதியானது. ஒரு படைப்பு அது சார்ந்த களம், அந்தக் களத்தில் வாழுகின்ற பாத்திரங்கள், அப்பாத்திரங்களின் மொழி, அவற்றை வெளிப்படுத்தும் முறை கூர்ந்து கவனிக்கப்படாவிட்டால் படைப்பின் வீரியம் குறைந்துவிடும். இங்கு திரு.ராஜாஜி கோபாலனின் பார்வை கவனிப்புக்குரியது. கவிதையாயினும் சிறுகதையாயினும் அவர் தெர்ந்தெடுத்த பாத்திரங்கள் கதைக்களத்துடன் ஒத்துப்போவதாகவே அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது. எப்போதோ நிகழ்ந்த அனுபவத்தைப் பலவருடங்களாக அசைபோட்டு, மீட்டு எழுதுவது முடியாத காரியம்தான். எனினும் இவர் எழுதிருக்கிறார். அச்சம்பவத்தை அப்படியே எழுதுவதிலும் அபாரத் துணிவு வேண்டும். கதை, மொழி இரண்டும் சிதையாமல் வடிவமைப்பதில் சிரமம் இருக்கிறது. சொல்ல வந்ததைச் சொல்லாமல் திசை திருப்பிவிடும் அபாயமும் உள்ளது. கத்திமேல் நடக்கும் விளையாட்டு. மேலும், சம்பவக் கோர்வை கவனத்தில் மையம் கொள்கிறது.
நம்மிடையே இன்னும் வாழ்ந்துகொண்டுக்கும் பாத்திரங்கள் இவர் கதையில் உலவுவதால் உயிர்ப்பாய் இருக்கிறது. ஊரில் வாழும் சட்டத்தரணிகள், வங்கி ஊழியர்கள், அரசியல்வாதிகள்/அவர்களின் உதவியாள்ர்கள், இராணுவ எடுபிடிகள், இப்படிப் பலரை இன்னும் காண்கிறோம். அதனால்தான் எம்மையும் கதைகள் பாதிக்கின்றது. அவர்களிடம் சேர்கின்ற வசதிகள்/ வாய்ப்புக்கள் எல்லாவற்ரையும் அவர்களுக்கு இலகுவாக்கிவிடுகின்றன. அவை நிரந்தரமா என்று கூட நினைத்துப்பார்ப்பதில்லை.
என் கண்முன்னால் நேரடியாக பார்த்த, கேட்ட பாத்திரங்கள் கதையைப் படிக்கையில் அவர் இவர்தானோ என்கிற ஆவல் தோன்றுகிறது. படைப்பாளியின் வெற்றியும் இங்கு தான் இருக்கிறது.
வாசகனை வளைத்துப் போடுகின்ற கைங்கரியம் தெரிந்தவனே சிறப்பாக எழுதமுடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கவிதைகளாயினும், சிறுகதையாயினும் வாசகர் மனதுள் உறையும் வரை மீண்டும் படிக்கத் தூண்டுகிற ஜாலத்தை ஆசிரியர் கற்றுக்கொண்டிருக்கிறார். திரு.டொமினிக் ஜீவா, அமரர் டானியல், அமரர் டானியல் அன்டனி, நந்தினி செவியர், செ.யோகநாதன், அகஸ்தியர், கே.வி.நடராஜன், தெணியான், குப்பிளான் சண்முகம் போன்ற பலரின் சிறுகதைகள் இன்றும் பேசப்பட அவர்களின் கதைகளின் உயிரோட்டமே காரணம். இங்கு இவரின் கதைகளும் அப்படியே தான் வாசிக்கையில் எண்ணத் தோன்றுகிறது.
ஆயுள் சந்தா கட்டிப் பெற்ற செய்திச் சேவையாக மனைவியை நினைக்கையில் சிரிப்பே வந்தது.உண்மையும் அதுதான். ஊரில் வேலிகளுக்குப் பதிலாக தார்ப் பீப்பாக்களைத் தட்டை நிமிர்த்தி அடைப்பது சில இடங்களில் இருக்கிறது. அதுவும் சில இடங்களில் ‘தலை உயர வேலி உயரும்’ என்பது போல உயர்ந்த வேலியுமாகிவிடும். நல்ல அனுபவ முதிர்ச்சி படைப்பில் இருக்கிறது.
படைப்பாளிகளின் நெறிபிறழா வாழ்வும் வாசகர்களுக்கு நம்பிக்கைகளை ஊட்டும் என்பது எனது அனுபவம். நேர்மை, மனித குணம், நெறிபிறழா வாழ்வு அனைவரையும் நெருங்கவைக்கும் பண்பு படைப்பாளியை மேலே உயர்த்தும் காரணியாகும். எனக்குக் கதாசிரியர் உயர்ந்தே தெரிகிறார். ஒருவரின் மனைவியை (அன்னபூரணம் அக்கா) வைப்பார்ப்பதும், பின் பனங்கிழங்குக்காரியைக் காண்பதும், அன்னபூரணம் அக்கா லண்டன் போய்விட முன்னர் வைத்திருந்த பெண்ணை வாசகருக்கு அறிமுகம் செய்துவைக்கும் பாங்கு, ஊரில் ‘சோமசெற்’கார் வைத்திருக்கும் மணியண்னை நானும் தரிசித்த ஊர்க்காரர்கள்தான். அதனால் தான் கதைகளுள் ஒன்றிப்போக முடிந்தது.
மட்டக்களப்பில் அதிகமாக உச்சரிக்கப்படும் ‘மறுகி’ ‘கிறுகி’ அதுபோல் ‘புட்டுவம்’ (சிங்களத்திலிருந்து வந்திருக்கலாம்), குட்டித்தூக்கம், சுதியான, சரக்கு, சுண்டக்காய்ச்சிய பால், மதவு, சமுசியம், குமருகளைப்போல, கொறை இழுவையையாக, துமித்துவிட்டு, மலிவுச்சரக்கு, செந்தழிச்சமுகம், பிறக்கிறாசி, தார்த்தகரம், தயிர் (மட்டக்களப்பில் பேர் பெற்றது), பனக்கிழங்கு (யாழ்ப்பாணத்தில் பேர் பெற்றது), வீட்டுக்காரர், அப்பா, இவர், இஞ்சாருங்கோ, என்ட மனுசன், மெய்யேப்பா, இளந்தாரி, அந்தரி பொந்தரியில், சாய்மனைக் கட்டில் இப்படிப்பல சொற்கள் மண்ணின் மணமாக ஜொலிக்கிறது. கதையில் எங்கும் தொய்வு இல்லை.கதையின் அளவு பற்றி எங்கும் யாரும் வரைவிலக்கணம் தந்ததாகத் தெரியவில்லை. அதனால் கதையின் உயிரோட்டத்திற்கேற்ப வளர்த்துச் செல்வதில் தடையில்லை. கதையின் நீளத்தைவிட அதன் ஆழமே உற்று நோக்கத்தக்கது. பிலஹரி, மகரிஷி, மௌனி போன்றவர்களை உதாரணமாக பார்க்கலாம். புதுமைப்பித்தனின் கதைகளும் சற்று நீளமானவையே. இன்றும் அவைகள் பேசப்படுகின்றனவே. யாரலும் நிராகரிக்கப்படாமல் வாசிக்கப்படுமானால் கதை சிரமம் தராது என்பதே என் அபிப்பிராயம்.
சிவப்பிரகாசம், பிறக்கிறாசியர் என்னும் இரு பாத்திரங்களுடன் அன்னபூரணி, சிவப்பிரகாசத்தாரின் பெண் என உப பாத்திரங்களுடே கதை நகர்த்தும் பாணி பிடித்திருந்தது. உரையாடல்களின் மூலம் கதை நகர்த்துகையில் ஆசிரியரின் எழுத்தின் பயிற்சி வசீகரிக்கிறது.
அச்சுவேலி என்றதும் செம்பாட்டு மண், கறுத்தொழும்பான் மாம்பழம், பூமரங்கள் ஞாபம் வரும். அதனை அழகாக கதைக்குள் கொண்டுவருகிறார். ஊரில் இருக்கையில் சினிமாவில் சொல்வது போல பெண்னை ‘பிஹர்’ என்பதற்குப் பதிலாக சரக்கு என்கிறதும், பின் பல பேருடன் பழகுபவளை ‘சரக்கு’ என்றும் அழைப்பது நினைவில் வருகிறது.
சிவப்பிரகாசத்தார் தன் வேலை நிமித்தம் வருகின்ற வசதிகளை வாய்ப்பாக்கி சில தவறான அனுபவங்களை பெறும் போது (பெண் தொடர்பு) குடும்பத்துள் விரிசல் ஏற்படுவதும் யதார்த்தம். பிள்ளைகளிடம் மனைவி போய்விட அதை சாதகமாகப் பயன்படுத்தி முன்னர் பழகிய இளம் பெண்னை அழைத்து வீட்டில் வைத்திருப்பதும், அவள் மனைவியைவிட எல்லாவற்றிலும் உயர்ந்தவள் என்கிற தவறான கணிப்பை பிறக்கிறாசியார் போக்கிவிட கதை அப்பாடா என்று முடிகிறது. கதையின் சுவாரசியம் அதிகமாக படிக்கத் தூண்டுகிறது. நாவலுக்குரிய பண்பும் இருக்கிறது.
திரு.ராஜாஜி ராஜகோபாலன் அவர்களின் திறமை நாவலாசிரியருக்குரிய வெளிச்சத்தையும் காட்டி நிற்கிறது. செங்கையாழியானின் கதைகளும் அப்படியே. மல்லிகையில் அவர் எழுதிய கதைகள் அத்தகைய உணர்வை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியே ‘காட்டாறு’ எனும் அவரது நாவல். படித்தவர்களுக்குப் புரியும். இங்கு இவரின் சிறுகதைகளில் அத்தகைய பண்பு, குணாம்சம் தெரிகிறதால் எழுதிய சிறுகதைகளின் பாத்திரங்களை முழுமையாக்கி சிறந்த நாவலாக்க முயற்சிக்க வாழுத்துகிறேன்.