[‘பதிவுகளில் அன்று’ பகுதியில் ‘பதிவுகள்’ இணைய இதழில் அன்றைய காலகட்டத்தில் வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது மீள்பதிவு செய்யப்படும். ]
அண்மைக் காலமாக தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும் , கொல்லப்படுவதும் உபகண்ட அரசியலை அவதானித்து வருபவர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்து வருகின்றது. உலக அரங்கில் இராணுவ மற்றும் பொருளியல்ரீதியில் பலம் பொருந்திய வல்லரசுகளிலொன்றாகப் பரிணமித்துவரும் பாரதம் எதனால் தனது மண்ணின் முக்கியமானதோரினத்தின் கடற்றொழிலாளர்கள் மீது , அதுவும் அன்றாட வாழ்வே கேள்விக்குறியாக ஆழியினுள் அலைக்கழிந்து, வாழ்க்கையினையோட்டிச் செல்லும் வறிய தொழிலாளர்கள் மீது நடாத்தப்படும் இத்தகைய தாக்குதல்களை உறுதியாகத் தட்டிக் கேட்காமலிருந்து வருகின்றது என்னும் கேள்வி அரசியல் அவதானிகள், தமிழ் மக்கள், தமிழ் மக்கள் மத்தியில் இயங்கும் அரசியல் அமைப்புகள், மற்றும் மனித உரிமை அமைப்புகள் மத்தியில் எழுவது நியாயமானதுதான். ஒருவரா, இருவரா … கடந்த பல வருடங்களாக இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும் வந்த தமிழக மீனவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமானதாகும். இந்திய மத்திய அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்போக்கு இன்றைய அரசியல் சூழலில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு மிகவும் அபாயகரமானதொரு சமிக்ஞை. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டபோதெல்லாம் காட்டிய கண்டிப்பையும், தீவிரத்தையும் ஏன் இந்திய மத்திய அரசு தமிழக மீனவர்கள் விடயத்தில் காட்டவில்லை என்ற கேள்வி நியாயமானதே.
எழுபதுகளில் இலங்கைத் தமிழர்கள் இருந்த நிலையில் இன்று தமிழகத்தில் தமிழர்கள் இருக்கின்றார்கள். எழுபதுகளில் இலங்கைத் தமிழர்களை எவ்விதம் அன்றைய அரசியற் சூழல் மிதவாதப் போக்கிலிருந்து ஆயுதப் போக்கிற்குத் தள்ளிவிட்டதோ அத்தகையதொரு சூழலினைத்தான் இன்றைய நிலையில் தமிழகத் தமிழர்கள் மத்தியில் காண முடிகின்றது. நடக்கும் கொடுமைகளைக் கண்டு, ஒன்றும் செய்ய முடியாது இருக்க வேண்டியிருக்கின்றோமே என்ற விரக்தியான மனப்போக்கு ஆயுதத்தைக் கைகளிலேந்திட வைக்கின்றது. 2009இல் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமிடையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, கண்களுக்கு முன்னால் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில், கோடிக்கணக்கான தமிழர்கள் இக்கரையிலிருந்தும் வெறும் பார்வையாளர்களாகவே இருக்க வேண்டியதையிட்டு கோடிக்கணக்கிலில்லையென்றாலும், இலட்சக்கணக்கிலாவது தமிழகத் தமிழர்கள் மனம் வெதும்பியிருப்பார்கள். அதன் விளைவுதான் தீக்குளிப்புகளும், ஆர்ப்பாட்டங்களும். இவ்வளவு நடந்தும், தமிழக இந்திய நடுவண் அரசுகளின் இலங்கை அரசுடனான , உறுதியற்ற பலவீனமானதொரு போக்கு, உணர்ச்சியில் கொதித்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களை நிச்சயம் வேதனையிலும், விரக்தியிலும் தள்ளியிருக்கும். அதன் விளைவுதான் சீமானின் ‘நாம் தமிழர்’ போன்ற அரசியல் அமைப்புகளும், தற்போது தமிழகமெங்கும் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது பல்வேறு சமூக, அரசியல் அமைப்புகள் போன்றவற்றால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களும், அறிக்கைகளும்.
இலங்கையில் ஆயுதப் போராட்டம் மிகக்கடூரமாக ஒடுக்கப்பட்டிருக்கும் தற்போதுள்ள சூழலில் , இலங்கையில் தமது ஆதிக்கத்தை நிறுவுவதற்கு வளர்ந்து வரும் பொருளாதார சக்திகளின் மையங்களாக விளங்கும் இந்தியாவும், சீனாவும் இலங்கையில் போட்டாபோட்டியில் இறங்கியிருக்கின்றன. அதே சமயம் இன்றும் உலகப் பொலிஸ்காரனாக விளங்க முயற்சிக்கும் அமெரிக்காவும் தன் பங்கிற்கு மூக்கை நுழைப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றது. பாகிஸ்தானும் தீவிரமாக இயங்கி வருகின்றது. இந்திய கடற்படையின் உயர் அதிகாரி இலங்கைக்கு விஜயம் செய்தால், அடுத்த நாளே தன் உயர் அதிகாரியை அனுப்பித் தானும் களத்திலிருப்பதை அது உறுதி செய்கின்றது.
இந்நிலையில் மீண்டும் ஆரம்ப வினாவிற்கே வருவோம். எதற்காக தன் நாட்டுக் குடிமக்கள்மீது தாக்குதல் நடாத்தும் சின்னஞ்சிறு நாடான இலங்கை அரசின் மீது , நியாயமாகப் பயன்படுத்த வேண்டிய தனது கண்டிப்பைக் காட்டாமால் இந்தியா இருக்கிறது?
இதற்கொரு காரணம், உறுதியற்ற இந்திய அரசு. வளர்ந்து வரும் வல்லரசான இந்தியாவிற்கு உறுதியான தலைமை மிக அவசியம். அது தற்போது இல்லை. பிரதமர் மன்மோகன்சிங் வெறும் அரசியல் பொம்மை மட்டுமே. அதிகார மையம் திரை மறைவிலிருக்கும் இத்தாலியப் பெண்மணியிடமிருக்கிறது. காந்தி என்ற அவரது பெயருக்குப் பின்னாலிருக்கும் பெயர் இந்தியர்களைக் குறிப்பாக வட இந்தியர்களைக் கட்டிப்போட்டு வைத்துள்ளது. போதாதற்கு அரசில் அங்கம் வகிக்கும் பிராந்தியக் கட்சிகளும், குறிப்பாக உறுதியாகத் தட்டிக் கேட்க வேண்டிய கடமைப்பாடுள்ள தி.மு.க போன்ற கட்சிகளும், தங்களது சுய ஆதாயத்தை மையமாகவே வைத்து இயங்குகின்றன. அதற்கே இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையையும் கையாளுகின்றன. இல்லாவிட்டால் இலங்கைத் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டபோது காட்டாத தீவிரத்தை, அமைச்சரவை அங்கத்துவ எண்ணிக்கையினை அதிகரிக்க எதற்காக தி.மு.க காட்டியது?
அதே நேரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளைப் புறக்கணித்து தொடர்ந்தும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்களையும் , படுகொலைகளையும் நடாத்துவதால் இலங்கை அரசுக்கு ஏதாவது அரசியல் ஆதாயங்கள் இருக்கக் கூடுமா? பலம் பொருந்திய பாரதத்துடன் சீண்டுவது மிகவும் அபாயகரமானதென்பது அனைவருக்கும் தெரிந்ததொரு விடயமே. இருந்தும் தொடர்ந்து இந்தியக் குடிமக்களைக் கொல்வது அபாயகரமானதென்று தெரிந்தும், எதற்காக இலங்கைக் கடற்படை இந்த விளையாட்டில் இறங்கியிருக்கின்றது?
சீனாவையும் பாகிஸ்தானையும் காட்டி இந்தியாவைத் தன் கைகளுக்குள் வைத்திருக்க இலங்கை ஆடும் தந்திரமான தொட்டிலையும் ஆட்டி, பிள்ளையையும் கிள்ளிவிடும் அரசியல் ஆட்டத்தில், வளர்ந்துவரும் இந்தியாவைத் துண்டாட முனையும் சக்திகளுக்கு மறைமுகமாக உதவினால், மீண்டும் இந்தியா இலங்கையில் தலையிடாமலிருப்பதற்கு அதுவொரு வாய்ப்பாகவிருக்குமென்று இலங்கை அரசின் பாதுகாப்பு வல்லுனர்கள் கருதக்கூடும் போன்றதொரு எண்ணத்திற்கு வருவதற்கும் காரணமிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் நிச்சயமாக இலங்கையில் தமிழர்களுக்குத் தனிநாடொன்று அமைவதை ஆதரிக்கப்போவதில்லை. மிகவும் பலமானதொன்றாகத் திகழ்ந்த ஆயுதப்போரினையே நிர்மூலமாக்கிய நாடு அது. இலங்கை அரசினைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் மக்கள் இலங்கைத் தமிழர்களுக்காகக் கிளர்ந்தெழுவதால் பல நன்மைகளுள்ளன. நிச்சயமாக தமிழக எதிர்ப்பு ஒரு நிலைக்குமேல் அரசியல் பரிணாமம் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி காலத்தில் அடைந்ததுபோல் அடையப் போவதில்லை. சீனாவையும், பாகிஸ்தானையும், அமெரிக்காவையும் காட்டி அதனைத் தடுத்துவிட முடியும். ஆனால் அதே நேரத்தில் தமிழக மீனவர்கள் மேல் தொடுக்கப்படும் தாக்குதல்கள் போன்றவற்றிற்கு இந்திய அரசால் தீவிரமாக இலங்கை அரசின் மீது நடவடிக்கைகளை எடுக்க முடியாது. அவ்விதம் எடுக்க முனைந்தால் , எவ்விதம் மேற்கு நாடுகளின் நிர்ப்பந்தத்தை தனது விடுதலைப் புலிகள் மீதான மே 2009 காலகட்டத்துத் தாக்குதல்களின்போது இந்தியா, சீனாவுடன் கைகோர்த்துக் கொண்டு இலங்கை அரசு முறியடித்ததோ, அவ்விதமே இப்போதும் இந்தியாவின் நிர்ப்பந்தத்தினை சீனா மற்றும் அமெரிக்காவுடன் கை கோர்த்துக் கொண்டு இலங்கை அரசு முறியடிக்கும். ஆனால் அதே சமயம் நிச்சயம் இலங்கைக் கடற்படையினரின் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் அவ்வப்போது தொடரத்தான் போகிறது.
இன்னுமொரு இலங்கை அரசின் அணுகுமுறையும் தமிழகத் தமிழர்களின் ஈழத்தமிழர்கள் மீதான போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை அதிகரிக்கச் செய்யும். தொடர்ந்தும் ஈழத்தமிழர்களின் மீது இராணுவ அடக்குமுறைகளைப் பிரயோகித்துக் கொண்டு. நீதியான அரசியல் தீர்வொன்றினைத் தராமல் இழுத்தடிப்பது. இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக இந்திய நடுவண் அரசு ஒருபோதுமே இலங்கை அரசுக்கெதிராகச் செயற்படபோவதில்லை. ஏனெனில் அதற்கு ஈழத்தமிழர்களை விட, அதன் தேசிய நலனும், பாதுகாப்புமே முக்கியம். இதனால் தொடர்ந்தும் ஈழத்தமிழர்கள் விடயத்தில் தனது கையாலத்தனத்தைக் காட்டிக்கொண்டே இருக்கவேண்டிய சூழ்நிலையில் அதுவிருக்கும். இதன் மூலம் தமிழகத்தில் வெடிக்கும் ‘நாம் தமிழர்’ போன்ற அமைப்புகளின் வளர்ச்சி எதிர்காலத்தில் தமிழகத்தை இன்னுமொரு காஷ்மீராக மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இத்தகைய சூழலிலிருந்து இந்தியா தப்பவேண்டுமானால் அதற்கு முன்னாலுள்ள ஒரேயொரு வழி இதுதான்: இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் இந்தியா மிகவும் கண்டிப்புடனும், உறுதியாகவும் செயற்பட வேண்டும். இலங்கையில் தமிழ் மக்கள் விடயத்தில் அனைவராலும் ஏற்கப்படத்தக்க நியாயமான அரசியற் தீர்வொன்றினை ஏற்படுத்த இந்தியா முனைய வேண்டும். இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும், தேசிய நலன்களுக்கும் ஈழத்தமிழர்களின் பிரச்சினையானது தீர்க்கப்படுவது மிகவும் அவசியம். ஈழத்தமிழர்கள் பிரச்சினையினைக் காரணம் காட்டி, இலங்கைக்குள் பிற உபகண்ட , சர்வதேச சக்திகள் நுழைவதை ஒருபோதும் இந்தியா அனுமதிக்காதென்பதை உறுதியாகத் தெரிவித்து, இலங்கையின் அனைத்து இன மக்களும் ஏற்கத்தக்கதொரு தீர்வினை அடைவதற்கு , காலகட்டமொன்றினை நிர்ணயித்து இந்தியா செயற்பட வேண்டும். இதன் மூலம் இந்திய அரசானது அடையும் நன்மைகளுள் முக்கியமான சில: ஈழத்தமிழர்களுக்கு இலங்கை மக்கள அனைவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதான தீர்வொன்று கிட்டுகிறது; ஏனைய சக்திகள் இனியும் ஈழத்தமிழர்கள் பிரச்சினையைக் காரணம் காட்டி இல்ங்கையினுள் மூக்கை நுழைக்க முடியாது. அடுத்தது, தமிழகத்தில் தமிழக மக்களால் இந்திய அரசுக்கெதிராக ஏற்படவிருந்த போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் இல்லாமல் போகின்றது. இதன் மூலம் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஏற்படவிருந்த ஆபத்து நீங்குகின்றது. இனியாவது இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இந்தியாவின் ஒருமைப்பாட்டினை மையமாக வைத்து , நடைமுறைச் சாத்தியமான கொள்கைகளை வகுப்பார்களா? அல்லது தொடர்ந்தும் தான்தோன்றித்தனமாக, இந்திய ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் வகையிலேயே செயற்படுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மூலம்: பதிவுகள் பெப்ருவரி 2011 இதழ் 134