– ‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர் –
பதிவுகள் ஜூலை 2003 இதழ் 43
1. மய்யமுடைத்தல்
– தேவகாந்தன் (கொழும்பு) –
நான் இலங்கை வந்து ஏறக்குறைய ஒன்றரை மாதங்களாகி விட்டன.இக் காலத்தில் நிறையவே நாடளாவிய நண்பர்களையும் , பொதுமக்களையும் , அரசியல்வாதிகளையும் சந்தித்திருக்கிறேன். அவர்களின் அறிக்கைகளையும் பரவலாகவே வாசித்திருக்கிறேன். வெளியேயிருந்து ஒரு கருடப் பார்வையில் இலங்கையின் அரசியல் நிகழ்வுகளை அவதானித்துக்கொண்டிருந்து கருத்துகளை அடைவதைவிட ,இங்கிருந்தே – மக்களுடன் இந்த மண்ணில் நேரடியாகவிருந்தே – முடிவுகளுக்கு வந்தடைதல் சுலபமாகவேயுள்ளது. எனினும் பத்திரிகை / பத்திரிகை சாராத நண்பர்களுடனான ஒரு கலந்தாலோசிப்பினதும் விவாதத்தினதும் மேலேயே எனக்கு இக் கண்டடைதல்கள் சாத்தியமாயிற்று என்பதையும் இங்கு நான் கூறியாகவேண்டும்.
அண்மையில் நடந்து முடிந்த கொடையாளி நாடுகளின் ரோக்கியோ மாநாட்டிலிருந்து விஷயத்தைத் தொடங்கலாமென நினைக்கிறேன்.
இம்மாதம் 10ம் 11ம் தேதிகளில் நடைபெற்ற அன்னதான -மன்னிக்கவும்- அந்நியதான மகாநாட்டுக்கு எல்லா நாடுகளும் , நிறுவனங்களுமே வந்திருந்தன. நோர்வே மிகவும் சரியான நிலைப்பாடெடுத்து ஒதுங்கி இருந்திருக்கிறது.
4.5 பில்லியன் டொலர்களுக்கும் கூடுதலாகவே கட்டம்கட்டமான உதவி வழங்கலோடும் , இன்னும் ஒரு பெரிய தொகைக்கான ஆசை வார்த்தைகளோடும் , தமிழீழப் புலிகளின் முன் சில உறுக்காட்டியமான வார்த்தைகளோடும் சில வேண்டுதல்களோடும் மாநாடு முடிவடைந்திருக்கிறது.
மாநாடு காரணமாக நடந்த ஒரு சிறப்பு நிகழ்வுதான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட ஆசியநாயகன் விருது. நல்லவேளையாக இது ஆட்டநாயகன் விருதாக வழங்கப்படவில்லை. சோவியத் யூனியனின் சிதைவுக்கு முன் போலந்திலும் , கிழக்கு ஜேர்மனியிலும் கிளர்ச்சிகள் தோன்றிய காலத்தில் ‘கிளஸ்னோ’ கொள்கையைக் கடைப்பிடித்து அனைத்து அழிவுகளுக்கும் வித்தூன்றிய சோவியத் பிரதர் கோர்ப்பசேவிற்கு man of tha year கௌரவப் பட்டம் வழங்கியதும் இதே டைம்ஸ் நிறுவனம்தான்.
அதிலிருந்து நடந்த நிகழ்வுகள் …..அப்பப்பா…!உலகமே அறியும்!
ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்த சியநாயகன் விருது வழங்கப்பட்டமையை , அதுவும் டைம்ஸ் நிறுவனத்தாலேயே வழங்கப்பட்டமையை , நினைக்க எனக்கு மனதெல்லாம் திகில் வந்து பரவுகிறது.
அவர்கள் மிகவும்தான் தமது அவசரங்களைக் காட்டியிருந்தார்கள். மாநாட்டில் தத்தமது வியாபாரத்தை இலங்கையில் ஆரம்பிப்பதற்குத்தான். இந்த விஷயத்தில் மௌனமாய் , அதேவேளை உன்னிப்பாய்ச் சகலரின் செயற்பாடுகளையும் கவனித்துக்கொண்டிருந்த ஒரே நாடு இந்தியா மட்டுதான். இந்தோ- லங்கா எண்ணெய் நிறுவனத்தின் வியாபாரத்தை மாநாட்டுக்கு ஒரு வாரம்/ பத்து நாட்களுக்கு முன்னதாகவே திருகோணமலையில் ரம்பித்து வைத்துவிட்டிருந்ததே அதன் காரணம். இந்திய மத்திய அமைச்சர் ராம் நாயக்கே வந்து ஒரு வண்டிக்கு எண்ணெய் நிரப்பி கைவியள வியாபாரத்தை ரம்பித்து வைத்தார்.
ரோக்கியோ மாநாட்டின் முன்னதாகவே திரைமறைவில் பல உத்தரவாதங்களும் , பல உடன்படிக்கை நிறைவேற்றங்களும் நடந்தேறியிருக்கின்றன என இப்போது தெரிய வந்திருக்கிறது. நாளெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை போகவோ என்றுதான் குமுற வருகிறது.
Paradise is Lost! யுத்த காலத்திலல்ல, சமாதானம் …சமாதானம்… என்று குரலெடுக்கப்பட்ட இக் காலத்திலேயே என்பதுதான் இதிலுள்ள உண்மையான சோகம்.
தன் பிராந்திய நலன் காரணமாய் வெகு ராஜதந்திரத்தோடு கருமமாற்றவேண்டியது இந்தியா. ஆனால் அதுவோ மடி பார்க்கிற கிழட்டுப் பிராமணத்திபோல நடந்துகொண்டிருக்கிறது. ஆரம்பம் முதலே. அதனால்தான் இக் காலகட்டத்தில் காஷ்மீர் பிரச்சனையை பேச்சுவார்த்தைக்கு நகர்த்திவிட்டு , இந்தியாவின் முழுக் கவனமும் பாகிஸ்தான் பக்கம் இருக்கப் பார்த்துக்கொண்டு,மிகச் சாதுர்யமாய் தானே மொத்த முழு உருவத்தில் “மெரிக்கா ஈழப்பிரச்ச்னையில் நுழைந்திருக்கிறது. அது தன் ஆசிய அதிகாரத்துக்கும் , தன் வியாபாரத்துக்குமான ஆழமான அத்திவாரத்தை ரோக்கியோ மாநாட்டில் இட்டுவிட்டதென்பதே நிஜம். அதை இல்லையென்பது மகா அறிவுகெட்டதனம். ஈராக்கில் அது பட்டிருந்த ரத்தக்கறையைக் கழுவக்கூடவில்லை. இலங்கை அரசியலில் நுழைந்திருப்பதைப் பார்க்க எனக்குப் பயமாக இருக்கிறது. இதுதானாம் அமெரிக்காவின் ஜனநாயகப் பண்பு. இதுதானாம் அமெரிக்கா சொல்லும் சுதந்திரத்தின் மாண்பு. தான் சொல்வதும், தான் செய்வதும் மட்டுமே சரியென்றும், தன் லாபமே குறியாகச் செயலாற்றுவதுமே அமெரிக்க வகை ஜனநாயகமெனின் , அது எவருக்கும் வேண்டவே வேண்டாம்.
நாம் புது விளக்கம் கொடுப்போம். மக்கள் அனைவரும் சுபீட்சமாக வாழும் …சுதந்திரமாக வாழும் புதிய உலக அத்திவாரமாய் அதை நாம் கண்டெடுப்போம். அவ்வகையான சுதந்திரம் கொடுக்கப்படுவதில்லை, எடுக்கப்படுகிறது என்பதுதான் சரித்திரத்தில் உள்ள மகாசோகம். ] சமாதானம் வந்துவிடவில்லை; இப்போது இருப்பது யுத்த நிறுத்தமே. யார் சொன்னாலும் சொல்லா விட்டாலும் உண்மை இதுதான். வடக்கு -கிழக்கில் அதிகாரமுள்ள நிர்வாகக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதுபற்றிய விஷயத்தில் , தமிழீழ விடுதலைப் புலிகள் தெளிவாகவே இருந்திருக்கிறார்கள். இலங்கை அரசியற் சட்ட வரைவுக்கு வெளியே நின்றுதான் அதை அமைக்கக் கூடிய சாத்தியம்பற்றிக் கூறியே திட்டம் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அரசியல் சட்டம் ஒட்டுமொத்தமாய்ச் சிங்களவரினதும் பௌத்தத்தினதும் நலம் காக்கும் ஓர் அமைப்பே என்பது தெரியாத குழந்தையே தமிழரில் இல்லை. சமாதானம் வேண்டுமெனில், இந்த நாட்டிலுள்ள தமிழர் சிங்களவர் முஸ்லீம்கள் அனைவரும் சரிசமமான உரிமைகளுடனும் , நலங்களின் சரி சமமான பங்கீட்டுடனும் வாழ வேண்டுமெனின் அரசியல் சட்டம் என்கிற அந்த மய்யம் தகர்க்கப்படவேண்டும். அதனிடத்தில் புதிய யாப்பு நிறுவப்படவேண்டும். நடைமுறையிலுள்ள அரசியல் சட்டத்தின் இறுகியதும் வக்கிரமான தன்மையினாலும்தான் புலிகள் கேட்டபடி இடைக்கால நிர்வாகத்துக்கான கட்டமைப்பு ஒன்றினை தம்மால் வழங்க முடியாதுபோனது என அரசாங்கத்தால் சொல்லப்பட்டது. அது ஓரளவு மெய்தான்.
ஒருபொழுது , சகல எதிர்ப்புகளையும் உதாசீனப்படுத்திக்கொண்டு அரசு ஏதோ ஒரு யுக்தத்தில் அதைச் செய்துவிடும்போல் ஒரு தோற்றமே எழுந்தது. ஆனால் செயலதிகாரம் மிக்கவராக தான் அங்கிருப்பதைத் தெரிவிக்க ஜனாதிபதி முற்பட , பின்னர் ஒரே பிரச்சனையாகிப்போனது.
அரசு சுருண்டு பின்வாங்கியது.
பழைய அரசியல் சட்டத்தையே நொறுக்கிவிட்டு புதிய யாப்பொன்றை உருவாக்கும் தேவை இருக்கையில் , அச் சட்டத்துக்கு வெளியில் ஒரு கட்டமைப்பை உருவாக்க முடியாதுபோனது சாதாரணமான விஷயமில்லை. இந்த அரசை எப்படி மொத்தத்துக்கும் நம்புவது? சிங்கள அரசு எதுவும் தமிழர் உரிமையைக் கொடுக்க முன்வராது என்பது எப்போதும்போல் இந்த இடத்திலும் நிரூபணமாகியிருக்கிறது என்றுதான் கொள்ள முடிகிறது.
இனவாத ஜே.வி.பி.யே அரசியற் சட்ட வரம்பிற்குள் வே.பிரபாகரன் ஜனாதிபதியாக வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்கிறது.தந்திரமான பூனை தயிர் இருக்கச் சட்டியை நக்கியதாம்! தமிழருக்கு இந்த சிங்களத் தந்திரங்கள் எல்லாமே நன்கு தெரியும். மய்யம் தகர்க்கப்படாமல் , புதிய அரசியற் சட்ட உருவாக்கம் இல்லாமல் இந்த நாட்டில் நிரந்தர சமாதானம் விளங்கியிடாது.
இதைச் சிங்கள மக்கள் கூட ஏற்கக் கூடும். ஆனால் அவர்களில் சவாரிவிடும் சிங்கள உறுமய , ஜே.வி.பி. போன்ற கட்சிகளும், இன்னும் பொதுஜன ஐக்கிய முன்னணி என்ன, ஜனநாயக ஐக்கிய முன்னணி என்ன எதுவுமேதான் ஏற்றுக்கொண்டுவிடா. கட்சி நலன்களைக் கருத்திற்கொண்டு இந்த தேசிய பாரிய பிரச்சினை அணுகப்படின் , எவராலும்தான் எதையும் செய்துவிடமுடியாது என்பது நூற்றுக்கு நூறு உண்மை.
இன்றைய 13.06.03 வீரகேசரி பத்திரிகையில் அதிர்ச்சிதரும் செய்தியொன்று வெளியாகியுள்ளது. வடக்கு-கிழக்குக்கு நிர்வாகத்தைப் பரவலாக்கும் அரசியற் சட்ட திருத்தத்துக்கு பொ.ஐ.முன்னணி தயார் என்று ஜனாதிபதி தெரிவித்ததான கருத்தொன்று வெளியிடப்பட்டிருக்கிறது கதிர்காமரால்.
அவர்கள் திறமான அரசியல்வாதிகள்தான் .அவர்கள் இந்த மய்யத் தகர்ப்பின் அவசியத்தை தெரிந்தவர்கள்தான். ஆனால் அவர்களால் அதைச் செய்யமுடியாது. செய்ய மாட்டார்கள் என்றாலும் சரிதான்.
சில சிங்கள அரசியல்வாதிகளதும், மதவாதிகளதும் , ஆதிக்கவாதிகளதும் அச்சுறுக்கைக்கு எதிராக அவர்களால் ஒரு மயிரைக்கூடப் பிடுங்கிபோட முடியாது.உலக நாடுகளல்ல, அரசியற் சட்டம் மட்டுமே தமிழருக்கான பாதுகாப்பைத் தர வேண்டும்.
அப்ப்படிச் செய்ய முடிந்தால் …..சந்தோசம்தான். தமிழரும், சிங்களரும், முஸ்லீம்களும் இனிமேலாவது சகோதரத்துவத்துடன் வாழ இந்த மண்ணில் வழி பிறக்கும்.
இல்லையேல்…….??? ஒரு கோடி மக்களின் சமாதான ஆசை மண்ணாகும். மனிதம் இந்த மண்ணில் மரணிக்கும். அவ்வளவுதான்.
devakanthan@rediffmail.com
பதிவுகள் ஜூலை 2003 இதழ் 43
பதிவுகள் ஜூன் 2003 இதழ் 42 –
2. இரண்டாம் உலக இந்து மாநாடு குறித்து…….
– தேவகாந்தன் (கொழும்பிலிருந்து) –
இம் மாதம் இரண்டாம் தேதி தொடங்கி ஆறாம் தேதி வரை ஐந்து நாட்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டன உலக இந்து மகாநாட்டின் நிகழ்வுகள். முதல் நாள் ஆரம்ப நிகழ்வுகளில் ஜனாதிபதியும் , பிரதமரும் பங்கேற்றிருந்தனர். இரண்டாம் நாள் பகலில் ஆய்வு அமர்வுகள் நடைபெற பல இடங்களிலும் ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. மாலையில் கலை கலாச்சார நிகழ்வுகள் . ஞாயிறு மாலை ஆறு மணியிலிருந்து நள்ளிரவு வரை கலை கலாச்சார நிகழ்வுகளுக்கான மேடை காலிமுகத் திடலில் அமைக்கப்பட்டிருந்தது. கடல் போல் நிறைந்திருந்தது கூட்டம். சமுத்திர ஓங்கார ஓசையை அடக்கி எழுந்துகொண்டிருந்தன , சுவர் போல் அமைக்கப்பட்டிருந்த மேடையின் இருபுறத்து ஒலிபெருக்கிகளின் ஊடாக நிகழ்ச்சிகளின் ஒலிப்பு. இரு திரைகளில் தூர இருப்போருக்கான வீடியோ படப்பிடிப்பு நகர்ந்துகஒண்டிருந்தது. திங்கள் மாலை பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபம் சென்றேன். வெள்ளவத்தை , பம்பலப்பிட்டி எங்குமே ‘ஓம் நமசிவாய’ அன்ற ஐந்தெழுத்து மந்திரம் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. மனதை ஏதோ செய்து பரவசமாக்கிற்று.
மகாநாட்டின் பூரண வெற்றியை அறிவித்துக்கொண்டு சகல நிகழ்வுகளும் நேற்று ஓய்ந்தன.
இப்போது மாநாட்டு நோக்கத்தினது வெற்றி தோல்விகளை , உப விளைவுகளை பார்க்கத்தான் வேண்டும்.அவசியம்கூட.
இந்தியாவில் இத்தகையதொரு மாநாடு பலத்த சர்ச்சைகளைக் கிளர்த்தியிருக்கும். மத்தியில் ஆட்சிசெய்யும் கட்சியானது இந்துத்துவ முன்னெடுப்பு , மதம்சாரா மற்றைய கட்சிகளை ஓரணியில் திரளவைத்திருக்கின்றது. இந்தியாவில் தற்போதைய பிரச்னை பொருளாதாரம், கல்வி, பெருகிவரும் தேய்வுநோய் கூட அல்ல; இந்துத்துவம்தான். பாகிஸ்தானுடனான பிரச்சனைகளின் தொடர்ச்சியையும் இதே பின்னணியிலேயே பார்க்கப்படவேண்டும். காஷ்மீர் பிரச்னை அணுகப்படவேண்டிய வழியும்கூட இதுதான். இத்தகைய நிலையில் ஓர் உலக இந்து மாநாடு அங்கு பல நாச காரியங்களை மிக்க சலனமின்றி ஆற்றியிருக்கமுடியும்.
இலங்கையில் இத்தகைய விளைவுகளுக்கு அதன் சமூக அமமைப்பு இணக்கமாக இல்லை. இங்கே இந்து மதம்- குறிப்பாக சைவ மதம்- உண்டே தவிர இந்துத்துவம் இல்லை. எனினும் திக்கம், அகண்ட இந்து ராஜ்யக் கனவுகள் இல்லாவிடினும் , அர்த்தமளாவி அது அனர்த்தங்கள் சிலவற்றையேனும் இங்கு விளைக்காமல் விட்டுவிடவில்லை. இலங்கைத் தமிழ்ச் சமூகத்துக்கிடையேயுள்ள சாதிப்பாகுபாடு மதம் சார்ந்து விளைந்து வளர்ந்ததுதான்.
இப்போது நாம் ஒரு கேள்வி கேட்கலாம்.”இலங்கையில் நடைபெற்ற 2ம் உலக இந்து மாநாட்டின் மூலம் உண்மையில் ஏதாவது நன்மை அடையப்பட்டிருக்கிறதா?”
ஓம், இலங்கைத் தலைநகரில் தமிழர்களால் இப்படி ஒரு விழாவினை நடத்த முடிந்திருக்கிறதென்பதே நன்மையான விஷயம்தானே என்று யாரேனும் பதில்சொல்லக் கூடும்.
உண்மையில் மிகவும் ஆழமாக நிலைமைகளை ஆய்ந்து பார்த்துக் கூறுவதானால் , ஓரளவு மட்டுமே இது நன்மை கண்டிருப்பதாக என்னால் கூறமுடிகிறது.
இந்து சமயம் இலங்கைத் தமிளர்களது மதம் மட்டுமில்லை, அது இந்தியாவில் ….பூட்டானில்…நேப்பாளத்தில்….மோரிஷியஸ்ஸில் எல்லாம்கூட இருக்கிறது. அப்படியான நிலையில் ஓர் இந்து மாநாட்டை இங்கே கூட்டுவதில் என்ன கஷ்ரம் , யாருக்கு எற்பட்டுவிடப்போகிறது? அதுவும் அரசாங்கம் எடுத்த விழாவுக்கு? தனிநபர்கள் சிலர் பெரும் பங்காற்றினார்கள் என்பது மெய்யே. ஆக, இன நல்லிணக்கத்தைக் காண வேண்டின் தமிழ் விழா, குறைந்த பட்சம் தமிழாராய்ச்சி மாநாடு , இலங்கைத் தலைநகரில் நடக்க வேண்டும். சிங்கள உறுமய கட்சியும் , ஜே.வி.பி.யும் அதற்கு இசைந்து கொடுத்துவிடும் என்கிறீர்கள்? எதார்த்தத்தில் வாழப் பழகுவோம். அப்படியெல்லாம் நடப்பது சிரமமே. ஆனால் ஒன்று: அவற்றுக்கான ஓர் அடித்தளத்தை – ஆரம்பத்தை – இருபத்தோராண்டுகளின் பின் நடைபெற்ற இந்த இரண்டாம் உலக இந்து மாநாடு போட்டுவைத்திருக்கிறது. அவ்வளவுதான். ‘இந்து தர்மத்தின் மூலம் சமாதானம்’ என்பது மாதிரியான வெற்று வரிவடிவங்களெல்லாம் எழுப்பப்பட்டிருந்தன. அதெல்லாம் சுத்த ஹம்பக்! ஆனாலும் அதன் மூலம் சமாதானமெனின் வந்துவிட்டுப் போகட்டும். ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்’ என்பதே தமிழனின் ஒற்றுமை மந்திரம். அதை முன்னெடுக்கும் உரம் இப்போதைக்கு யாருக்குமில்லைத்தான்.
பதிவுகள் மே 2003 இதழ் 41
3. இரண்டாம் புலப் பெயர்ச்சி
– தேவகாந்தன் (கொழும்பிலிருந்து) –
சமுத்திரம்…
சென்ற மாதம் சு.சமுத்திரமவர்கள் ஒரு கார் விபத்தில் காலமானார் என்ற செய்தி எனக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. ஓர் இழப்பின் பாரிய தாக்கம். ‘கடிதோச்சி மெல்ல எறி’கிற நண்பராக இருந்தார் அவர். அவர் எழுத்தாளராகவும் இருந்தார். அவருடனான என் அறிமுகம் ஒரு கலகத்திலேதான் ஆரம்பித்தது. எழுத்தாளர் வல்லிக்கண்ணனின் வைரவிழா நிகழ்வில் அவரது நாவல்கள் பற்றி மதிப்பிட்டு கட்டுரை வாசித்த நான் , இடதுசாரி எழுத்தாளர்களின் நூல்களை என் தேர்வில் சேர்த்துக்கொள்ளவில்லையென ஓங்கிக் குரலெடுத்தார் அவர். சேர்ப்பதும் சேர்க்காததும் என் வாசிப்புச் சார்ந்த சுதந்திரங்களென நான் வாதாட அடங்கி என் நண்பரானவர். ‘தேவகாந்தனுக்கும் எனக்கும் இடையிலான நட்பு சண்டையில் ஆரம்பித்தது’ என்று எல்லோரிடமும்லொரு குழந்தைபோல் சொல்லிக்கொண்டிருந்தார். உயர்ந்த , சற்று தடித்த, உடல்ரீதியான தாக்குதலுக்கும் தயங்காதவர்போல் எப்போதும் நிமிர்ந்தே திரிந்த அவர் இப்போது இல்லை. ஓர் வீறு தமிழிலக்கையத்தில் எங்கோ அழிந்துபோனதுபோல் உணர்கிறேன். கொடிது கொடிது , மரணம் கொடிது.
2
மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கிக்கொண்டு அகதியாய் ஓடியவர்கள்தாம் நாம். ஆனாலும் அந்த மண் இந்த வேர்களுக்கும் ஒத்துப் போக அங்கு பெரிய பிரச்சனைகளற்ற ஒரு வாழ்வு எங்களுக்குச் சித்தித்தது.
யுத்தமும் மேற்குலகும் சம ஈர்ப்புச் செய்த வேளையில் ஒரு போராட்டமே நடத்தி எங்குமில்லாமல் இந்திய மண்ணிலேயே தங்க முடிந்தது. அதில் நிறைய காயங்கள் பட்டிருந்தேன். தழும்புகளை விழுப்புண்களாய் நிச்சயமாக நான் மட்டுமாவது மதிக்கவே செய்வேன்.சைவலைப்பட்டு சில காரியங்களை நான் மட்டுமாவது செய்யாமலிருக்கவேண்டும்தான்.
இரண்டு தசாப்தங்கள் எப்படிக் கடந்தன?ஒரு தீவிர வாசகனாகவும் , ஒரு தீவிர படைப்பாளியாகவும் நான் இந்திய மண்ணில் எப்படிப் பரிணமித்தேன்? என் படைப்பின் உந்து விசைகள் என்னை அங்கு அடையாளப்படுத்தின. அந்த படைப்பாற்றல் இன்னும் க்ஷ£ணமடையவில்லை. என் சாதனைகள் குறித்து எப்போதும் எனக்கு கரிசனமுண்டு. காலம் நாளை அதைச் செய்யும்போது புறவுலகம் அறியட்டும்.
எவ்வளவு இலக்கிய நண்பர்கள் !எவ்வளவு இலக்கிய ஆர்வலர்கள் !எவ்வளவு வாசகர்கள் !தாயகத்திலிருந்து ஓடியபோதுகூட பெரிய வலி தெரியவில்லை என்பது சத்தியமான வார்த்தை. பின்னர் மெல்ல வலி செய்த கணங்கள் ஏற்பட்டன. ஆனாலும் சாதனைகளின் வீறுகளில் அவற்றை அடக்கி வைக்க முடிந்திருந்தது. அங்கிருந்து தாயகம் திரும்ப தயாரானபோது……?ஒரு பக்கம் தாயகம் திரும்புகையின் மகிழ்ச்சி ரேகைகள் எறிபட்டுக்கொண்டிருந்தாலும் அந்த மண்ணை நீங்க மனம் ஏன் அத்தனை அவலம் பட்டது? அது என்னளவில் ஓர் இரண்டாம் புலப்பெயர்ச்சி. முந்திய புலப்பெயர்வினைவிட வலிகூடிய பெயர்வு. யிற்று. மீண்டும் என் மண் மிதிதேன் கண் கலங்க ….. மெய் விதிர்க்க.
மீண்டும் என் மண் மிதித்தேன்….வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதையாய் உருவாகி நின்றேன்.
ஏப்ரில் 2003 இதழ் 40
4. கண் மறைத்த யாகப் புகையும், பிறவும்
தேவகாந்தன் (சென்னையிலிருந்து)
ஒன்று
‘எதிர்ப்புக் குரல்கள்’ என்ற தலைப்பில் நான் பெப்ரவரி 03 இல் எழுதிய விஷயங்கள் குறித்து , காலச் சுவடு (மார்ச்-ஏப். 03 , 46ம்) இதழிலும் , இந்தியா டுடே (மார்ச் 26) இதழிலும் இப்போதுதான் சற்று நோவோடு எழுதியிருக்கிறார்கள். வெட்ட வெட்ட மீண்டும் தழைத்துக்கொண்டு இருப்பதுபோல்தான் இது நடக்கும். ஏனெனில் எதிர்க்குரலாளர்களின் தேவைகள் நிஜம்.
30/03/03 அன்று ஞாயிறில் மீண்டும் அது போன்ற ஒரு நிகழ்வு நடந்துள்ளது. நானே நேரில் அதில் கலந்தும் கொண்டேன். ‘நானென்பது வேறொருவன்’ என்கிற அய்யப்பமாதவனின் கவிதைத் தொகுப்பு வெளியீடும் , அதன்மேலான விமர்சனம் மதிப்புரை எதிர்ப்புரை பாராட்டுரை எல்லாமும் நடந்தன. பிரதியை விக்கிரமாதித்தன் வெளியிட நான் பெற்றுக் கொண்டேன். மேலே விவாதம் ‘தண்ணீர்’ எல்லாம். பெருக்கெடுத்தது விவாதம் மட்டுமே.
ஒரு பதினைந்து பேர்வரையில் ‘அகம்’ அமைப்பு இயங்கும் அறையில் மிக அன்யோன்யமான சூழ்நிலையில் இப் பிரதிபற்றிச் சிலரும் , கவிதை பற்றிப் பொதுவாகப் பலரும் பேசினர். சங்கர், ராஜமார்த்தாண்டன், சி.மோகன் விக்கிரமாதித்யன் ஆகியோர் சூடான விவாதங்களைக் கிளர்த்தினார்கள். ‘பிரதியிலுள்ள பல கவிதைகளும் வாசிக்கக் கேட்க நன்றாகவிருக்கின்றன. நல்ல வரிகளால் அமைந்துமுள்ளன. இருந்தும் இவை சிறந்த கவிதையாகாமல் ஏன் போயின? ‘ என்று விக்ரமாதித்தன் முன்னெடுத்த விவாதம் முக்கியமானது. கவிதை , செய்யுள் என்ற வரையறைபற்றிய பிரஸ்தாபமும் எழுந்தது. மௌனி, புதுமைப்பித்தன் பலங்கள் ஆயப்பட்டன. கு.ப.ரா. , கலாப்பிரியா, கல்யாண்ஜி, பிரம்மராஜன் , சுகுமாரன் , தேவதேவன் என்று பலரது கவித் திறன்களும் ஆய்வுக்கும் கேள்விக்கும் உள்ளாகின.
பதினொரு மணியிலிருந்து மாலை ஐந்து மணிவரை ஒரு ஆறு மணி நேரம் மிகவும் பாயனுள்ள விதமாக இந்த புதுமையான அரங்கு அமைந்தது பாராட்டப்பட வேண்டியது. மேலைநாடுகளில் போன நூற்றாண்டில் நடைபெற்ற விசயங்கள் தமிழ்ச் சூழலில் இப்போதுதான் பரவலாகத் துவங்கியுள்ளன. தமிழ்க் கவிஞர் எழுத்தாளர் ஆய்வாளர்கள் சந்திக்கவும் பேசவும் விவாதிக்கவும் ஏற்ற இடங்கள் அமைவது படைப்புச் சூழலின் மிக முக்கியமான அம்சமாக ஆகிக்கொண்டிருக்கிறது. படைப்பின் கூட்டு முயற்சிபற்றி சங்கர் குறிப்பிட்டதை முக்கியமான அம்சமாக நான் எடுத்துக் கொள்கிறேன். அந்த ஆறு மணி நேரத்தில் அதுவே பேசப்பட்ட பிரதான அம்சமாக எனக்குத் தெரிகிறது. இங்கே ஒரு உண்மை மிக இயல்பாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. இது மிக முக்கியம். ‘நானென்பது வேறொருவன்’ பிரதி குறித்து இன்னொருமுறை பார்க்கலாம்.
இரண்டு
இந்திய கிரிக்கெட் அணி நாடு திரும்பியிருக்கிறது. உலகக் கோப்பைக் கதையும் பழைய கதையாகிவிட்டது. இந்திய அணிக்கான வரவேற்புகள் பற்றி சில நாட்களாக பத்திரிகைகள் எழுதித் தள்ளிக்கொண்டிருந்தன. இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுவரை எல்லாருக்குமே பயங்கரமான சந்தோசம். சுஜாதா உலகக் கோப்பைபற்றி முன்னரே கூறியிருந்தார், இந்திய அணி சுப்பர் சிக்ஷ¤க்கு முன்னேறினாலே தான் சந்தோசப் படுவார் என்பதாக . ஆம், விபரம் தெரிந்த யாருக்கும் இது பெரிய ஏமாற்றமில்லைத்தான். உண்மையில் ஏமாறியவர்கள் இறுதிப்போட்டியின் முதல் நாள் இரவு , இந்திய அணி வெற்றிபெற வேண்டுமென்று யாகங்கள் நடத்தியோர்தான். அவர்கள் இங்கே வளர்த்த யாகத்தீ புகைதான் தென்னாபிரிக்காவின் மேலே போய்ப் படர்ந்து போட்டி நாளன்று மைதானத்தில் மெல்ல இறங்கி பந்துவீச்சின்போது ஸ்டம்புகளையும் , மட்டை எடுத்து ஆடியபோது ஸ்டம்புகளைநோக்கி வந்த பந்துகளையும் இந்திய வீரர்கள் காணாதபடி கண்ணை மறைத்து விட்டதோ? திசையைமட்டும் தெரிந்துகொண்டு உத்தேசமாக பந்து வீசியோ , மட்டையெடுத்து பந்து வரும் திசையைமட்டும் உத்தேசமாகத் தெரிந்துகொண்டு அடித்தோ வென்றுவிட முடியாது என்று நோவோடு ஒரு யோசனைவந்தது.
இந்திய அணி வென்றிருந்தால் மகிழ்ச்சியாயிருந்திருக்கும் போலத்தான் யாக நிகழ்வுகளைப்பற்றிக் கேள்விப்படுவதன் முன் மன நிலை இருந்தது. தோற்றது நல்லது என்று இப்போது நினைக்கவேண்டியுள்ளது. விளையாட்டில் வெற்றி பெற யாகங்கள் , பரீட்சையில் சித்திபெற யாகங்கள் ….எல்லாம் எனடாப்பா? எங்கே போய்க்கொண்டிருக்கிறீர்கள் ?
மூன்று
Iraq Warஇதை எழுதிக்கொண்டிருக்கையில் பதினேழாம் நாள் யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது ஈராக்கில். உலக மக்கள் பெரும்பாலானவர்களின் எதிர்ப்பையெல்லாம் மீறிய , ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் பெருமளவற்றின் தடுப்பு எதிர்ப்பு நடவடிக்கைகள் எல்லாவற்றையும் மீறிய இந்த யுத்தத்தில் உண்மையில் என்னதான் நடக்கிறது? தெரியவில்லை . அவர்களது செய்தி ஊடகங்களூடாய் வரும் தகவல்களை அப்படியே நம்பிவிட முடியாது. அச் செய்தியாளரிடமிருந்து ஒரு பலகீனமான தருணத்தில் அப்போர் நிலைமையின் உண்மையை வெளிப்படுத்தக்கூடிய ஒரு காட்சி , ஒரு சொல்லுக்காய்க் நான் காத்திருக்கிறேன்.
1) ஈரான் மீதான அமெரிக்கத் தலைமையிலான கூட்டு ஆக்கிரமிப்புப் படையின் தாக்குதலால் ஈராக்கிலுள்ள ஜனநாயகமல்ல , அதற்கு வெளியேயுள்ள ஜனநாயகம்தான் மரணித்துக்கொண்டிருக்கிறதென்பதே நிஜம்.
2) ஒரு நீண்டகால யுத்தத்துக்கான ஆயத்தங்களுடன் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் சென்றிருக்கவில்லையென்று தெரிகிறது. ஆனாலும் போரில் இது பெரிய மாற்றமெதையும் ஏற்படுத்திவிட்டாது.
3) பாலைவனப் போர்ப் பயிற்சியின்றி பாலைவனத்தில் போராடிவிடமுடியாது. போர்ப் பயிற்சிபற்றித் தெரிந்துகொள்வது வேறு, போராடுவது வேறு. ஆனால் இதனாலும்கூட யுத்த நிலவரத்தில் பெரிதான மாற்றமெதையும் ஏற்படுத்திவிடமுடியாது. ஒரு சிறிய தடைமட்டுமே ஏற்படமுடியும். ஐரோப்பாவிலுள்ள நாடுதான் பிரான்ஸ். பிரான்ஸ¤க்கு குளிர் தெரியும். னாலும் ரஷ்யாவின் குளிர் தெரியாது. அதனால்தான் மாவீரன் நெப்போலியனே ரஷ்யாவில் தோல்விகண்டான். எனினும் இது கூட ஒரு பழைய உதாரணம்தான்.
4)ஈராக்காலும் நெடுங்காலத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாது. ஈராக்கின் தோல்வி பெருத்த மனித அழிவு, கலை கலாச்சார சின்னங்களின் அழிவுடன் நிகழும். இந்த வகையில் தலிபான்கள் புத்த மத சின்னங்களை அழித்தது மாதிரியான செயலை அமெரிக்காவும் செய்ததாகும்.
5)இந்தியா ஈராக் யுத்தத்தை கடுமையாக எதிர்ப்பதாக ஒரு கதை வந்திருக்கிறது. இங்கேதான் யுத்தம் தொடங்கிய மறு நாளே , ஈராக்கின் புனரமைப்புப் பணியில் இந்தியா அழைக்கப்பட்டால் அது மகிழ்ச்சியுடன் பங்கு பற்றும் என்று பாரதத்தின் பிரதமர் பிரகடனம் செய்தார். அட பிணம் தின்னிகளே! ஈராக்கின் ரத்தத்தை உறிஞ்ச அமெரிக்கா , பிரிட்டன், இஸ்ரேல் மட்டுமல்ல, அண்டைநாடுகள் மட்டுமில்லை , தூர தூர இருக்கின்ற நாடுகள் கூட போட்டியிடுகின்றனவே.
6) ஈராக் உல சரித்திரத்தில் முக்கியமான ஒரு நிலப் பரப்பு. இரண்டாவது அதிக எண்ணெய் வள நாடு. அராபிய நாடுகள் எண்ணெயையே தங்கள் பொருளாதாரத்தின் மூலமாகக் கொண்டுள்ளனபோலவே ஈராக்கும் கொண்டிருக்கிறது. 1957 இல் சூயஸ் கால்வாயை எகிப்திய அரசு தேசவுடைமையாக்கியது. பிரான்ஸ், இங்கிலாந்து ,இஸ்ரேல் கிய முத்தரப்பும் போர் துவக்கின. ஐ.நா.சபை உறுதியாக எதிர்த்து போரை நிறுத்தியது. 1961 இல் குவாட்டமாலா, வெனிசுவேலா ஆகிய நாடுகள் தமது எல்லைக்குள் கியூபா புரட்சியைத் தூண்டிவிடுவதாகக் கூக்குரலெடுத்ததை அடுத்து அமெரிக்க வல்லரசு தன் கடற் படையை கரிபியன் கடலுக்கு நகர்த்தியது. பின்னால் அதே விசையில் விரைந்தது சோவியத்தின் கடற் படை. அமெரிக்க முயற்சிக்கு தொடக்கத்திலேயே முற்றுப்புள்ளி விழுந்தது. இவையெல்லாம் எவற்றின் அடையாளங்கள்? எதிர்க் கடையை அழித்து விட்டு இப்போது கீரை வியாபாரம் செய்ய வருகிறான் ஒரு கீரைக்கடைக்காரன். புரிந்து கொள்ளவேண்டும் இவற்றை.
உலக சரித்திரத்தில் இருபத்தோராம் நூற்றாண்டுக்கான சரித்திரப் பாதகம் நடந்தாயிற்று. அமெரிக்கா வெற்றி பெறும் , ஒரு பெரும் காவு கொடுத்து. இதை அது வெளியே சொல்லவும் மாட்டாது. இறந்த உயிர்களுக்காக ஒருநாள் கொளுத்திய மெழுகுதிரியை ஏந்தி நின்று அஞ்சலி செய்தால் எல்லாம் சரியாகிவிடும். ஈராக் , மீட்சியே சந்தேகப்படும்படிக்கு அழித்தொழிக்கப்பட்டு இருக்கும். இது இன்னொரு நாட்டை அழித்தொழிப்பதற்கான அனுபவமாய் அமெரிக்காவிடம் சேகரமாகியிருக்கும். நாம் எதிர்க் கடையை அழித்ததுபற்றிக் கொண்டிருந்த அபிப்பிராயத்தைப் புனர்விசாரணை செய்தாக வேண்டிய நேரம் வந்தாயிற்று.
பெப்ருவரி 2003 இதழ் 38
5. எதிர்க் குரல்கள்
தேவகாந்தன் (சென்னையிலிருந்து)
காலகாலத்துக்குமான உண்மையென்று எதுவுமில்லையெனச் சொல்லப்படுகிறது. அதை இப்படி நான் புரிந்துகொண்டிருக்கிறேன்: சாசுவத உண்மைகள்மீது தீவிரமாக எழுப்பப்பட்ட சந்தேகத்தில் , அவை தம்மை வெளியுலகின் நியாயத்துக்கு தக தம் இருத்தலை நெகிழ்வித்து/ மாற்றி வந்திருக்கின்றன என்பதுதான் அது. அதன் பரிமாணத்தின் மாற்றங்கள் ஓர் எதிர்வின் விளைவாகவே சாத்தியமாக இருந்திருக்கின்றன.
கலகக் குரல்கள் இடைனிலையில் தரிப்புக்கொண்டுவிடா. அவை தம் ஆகக்கூடிய உச்சத்தை அடைந்து நின்றே குரல் எடுக்கும். அதை அடைவதுவரை அவை ஓய்வதுமில்லை. ஒவ்வொரு கட்ட சமூக காலத்திலும் அவை வெவ்வேறு தளங்களிலிருந்து வந்திருக்கும். ஆனாலும் தீவிரங்கள் ஒரே மாதிரியே இருந்திருக்கின்றன. அவ்வக்கால சமூகம் வேறு எந்த மாதிரியில் வந்தாலும் அக்குரல்களை கவனத்தில் எடுத்துக்கொண்டிராது. ஒரு காலகட்டத்தின் கலகக் குரல் நிச்சயமாகவே தத்துவப் பின்புலமற்றது. அது தன் கலகத்தை நியாயப்படுத்தும் தர்க்கத்தை மட்டுமே சொல்லும். பின்- நவீனத்துவம் தனக்கான அமைப்பு விதிகளைச் சொல்லாமை இங்கிருந்தே புரிந்துகொள்ளப் படவேண்டும். மாற்றை அது எப்போதும் சொல்லாது. கலகக் குரலின் மூர்க்கத்தில்தான் சமூகங்கள் நகர்ந்திருக்கின்றன. சாசுவத உண்மைகள் காலத்துகுத் தகவாய் மாறி வந்தமைதான் மனு நாகரிகத்தின் வரலாறு. மாறி வந்தன என்று சொல்கிற சுலபத்தில் அவை மாறிவரவில்லையென்பதையும் நாம் கவனத்தில் எடுக்கவேண்டும். பெரும் போராட்டங்கள், உயிர்த் தியாகங்கள், ரத்தச் சொரிவுகள், வாழ்வு அர்ப்பணங்கள் இல்லாமல் எதுவும் நடந்ததில்லையென்பதை சரித்திரம் சொல்லி நிற்கிறது.
இலக்கிய உலகின் கலகக் குரல்களெல்லாமேகூட இந்த நியதியில் வைத்துப் பார்க்கப்படவேண்டியவைதான். தமிழ்ச் சூழலில் இலக்கியத்திலே முதல் கலகக் குரல் எழுந்த இடம் வனம். அதைச் சித்தர் குரலாய்க் காலம் பதிவுசெய்து வைத்திருக்கிறது.மேலை நாடுகளில் விசித்திரமான இடங்களிலெல்லாம் கலகக் குரல்கள் ஒலித்திருக்கின்றன. குறிப்பாக பிரான்ஸில் avant-guarde களும் surrialist களும் மலசலகூடங்களுக்கு அண்மையில் தம் படைப்பு , கருத்து பரிமாற்றங்களைச் செய்யும் மேடைகளை அமைத்து வந்திருக்கிறார்கள். மஹாராஷ்டிரத்தில் 1969 இல் தலித் இலக்கியம் என்ற சொல்லாடல் பாவனை பெறமுன்பு, பொது மலசல கூடங்களுக்கு அருகே எதிப்பிலக்கிய வெளிப்படுத்துகைகள் நடைபெற்றிருக்கின்றன.இத்தகைய பின்புலத்தில் கடந்த ஓரிரு மாதங்களுக்கிடையில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளைப் பார்க்க நினைக்கின்றேன்.
கடந்த 04. 12. 2002 இல் ஒரு காலை நேர சென்னை கடற்கரை-மயிலை பறக்கும் ரயில் தடத்தில் இயங்கிய ரயிலில் ‘மூன்றாவது அறை நண்பனின் காதல் கதை’ என்ற அஜயன் பாலாவின் சிறிய சிறுகதைத் தொகுப்பொன்று வெளியிடப்பட்டிருக்கிறது. ரயில் இப்போதெல்லாம் இலக்கியவாதிகளின் கவனத்தைக் கவர்ந்த அம்சமாகியிருப்பது ஏனென்று தெரியவில்லை. ரயிலின் நீட்சியும், ஒரே தாள கதியில் இயங்கும் அதன் இயக்கத்தை இடையிடை ஊடறுத்துச் சிதைக்கும் லய பேதமும் ஒரு சுவையை எற்படுத்தியிருக்கலமோ? சில மாதங்களின் முன் ஓடும் ரயிலில் பயணிகளூக்கு மத்தியில் ஒரு கவிஞர் கூட்டம் கவியரங்கொன்றை நடத்தியிருக்கிறது.அதற்கு முன்னால் கோணங்கி போன்றவர்கள் இலக்கியச் சந்திப்புக்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆகவே இது பெரிய அதிசயமில்லை. அங்கு நூல் வெளியீடு செய்யப்பட்ட விதம்தான் புதுமையானது-அதீதமானது. புத்தக வெளியீடு , ஓடும் ரயிலில் இருந்து வெளியிடுபவரால் வெளியே வீசி எறிவதன் மூலம் நடத்தப்பட்டிருக்கிறது.இதில் கலந்துகொண்டவர்களும் தமிழ் இலக்கியப் பரப்பில் முகம் தெரிந்த இலக்கியவாதிகளே. குறிப்பாக ‘புதுப் புனல்’ ஆசிரியர் சி.மோகன், ‘வெளி’ ரங்கரஜன் போன்றோர்.
இன்னொரு நிகழ்வு , பிரமிளின் கவிதைகள்பற்றிய கருத்தரங்கு. இது மதுக் கடை ஒன்றின் bar இல் நடந்திருக்கிறது. குடிப்பதற்கு வந்த பலரில் ஆச்சரியங்களை விளைவித்துக்கொண்டு இந்த அரங்கு நடந்து முடிந்த பின்னால் சண்டையும் நடந்திருக்கிறது. ‘பல்லோடு உதடு பறந்து சிதறுண்டு/ சில்லென்று செந்நீர் தெறித்து/ நிலம் சிவந்து / மல்லொன்று நேர்ந்து..’என்று நம்மூர் மஹாகவி பாடியது அப்போது எனக்கு ஞாபகம் வந்தது. இதில் கலந்துகொண்டவர்களும் சாரு நிவேதிதா, விக்ரமாதித்யன் போன்ற இலக்கியவாதிகளே.
இவையெல்லாம் உள் கொதிது எழும் உணர்வு உச்சமடைகிற வேளைகளிலேயே நடக்கின்றன என்பதுதான் நிஜம். இவை ஒரு சமூகத்தின் கலகக் குரல்கள். இவையே நியாயமில்லைத்தான். ஆனால் இவை சமூகத்தை மாற்றும் அவசியத்தை வற்புறுத்துவன.இன்னும் இவை மாற்றவும் செய்யும். ஓரளவேனும்.
‘தலித் அழகியல் என்ற சொற்றொடரும் , தலித் கலகப் பண்பாடு என்ற சொற்றொடரும் ஒரே அர்த்தம் பெறும் சொற்றொடர்கள் என்ற அதிரடிக் கருத்தும் இக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது’ என்று வேறு ஒரு கருத்தரங்கு பற்றி எஸ். சுவாமிநாதன் என்பவர் இம்மாத (பெப்.2003) கணையாழியில் எழுதியிருக்கிறார்.
இது ஆரம்பம்தான். இனிவரும் காலங்கள் மிக்க கடுமையானதாக இருக்கப்போகின்றன. தலித் குரல்களோ, அமைப்பாகிவிட்ட குடும்பம், பெண்ணடிமை, மரபு போன்றவற்றுக்கு எதிரான குரல்களோ விழிக்கிறவர்களூடையதாய் இருப்பதால் மிகக் கடூரமாகத்தான் இருக்கும். சுகனும் ஷோபாசக்தியும் தொகுத்த ‘கறுப்பு’ நூல் வெளியீடு அ.மார்க்ஸ் தலைமையில் 30. 01. 2003 இல் நடந்தது. தொகுப்புப்பற்றி ராஜேந்திரன் என்ற இளைஞர் சாரத்துடன் மேடை வந்து பேசினார். இந்த நண்பர் போன ஆண்டு நிறப்பிரிகை நடத்திய ஷோபாசக்தியின் ‘கொரில்லா’ நாவல் விமர்சனக் கூட்டத்திலும் இம்மாதிரியே வந்து உரை நிகழ்த்தினார். செய்யட்டுமேன். எவ்வளவு காலம்தான் சொல்லிக்கொண்டே இருப்பது? இந்த அதீத நடைமுறைகளெல்லாம் உள்ளெழும் நெருப்பின் ஓசைகள்.சமூகம் மாறியாகவேண்டும். வேறுவழி இல்லை.
பதிவுகள் பெப்ருவரி 2003 இதழ் 38 –
6. ஒரு நாடக விமர்சனம்
– தேவகாந்தன் (சென்னையிலிருந்து)
23-01-2003 இன் முன் மாலை, சென்னைப் பல்கலை மரீனா வளாகத்தில் உள்ள பவள விழா நினைவுக் கருத்தரங்க மண்டபத்தில் அ.மங்கையின் நெறியாள்கையில் உருவான தனி நபர் நாடகமான ‘பனித் தீ’ நிகழ்த்திக் காட்டப்பட்டது. மகாபரதத்திலுள்ள உப கதையொன்றின் மறுவாசிப்பே இது. மறுவாசிப்பு என்ற பதத்துக்கான அகல ஆழ்வுகளூடு இதிகாச கால பெண்ணின் கொடுமைகள் காட்சியாக்கப் பட்டதோடு , தான் அடக்கப்படும்போதும், கொடுமைகள் புரியப்பெறும்போதும் பெண்ணுள்ளிருந்து வீறிட்டுக் கிளம்பும் வெறி கோபம் ஆகிய உணர்வுகள் ‘பனித் தீ’யாய் உணரவைக்கப்பட்டுள்ளன.
இதற்குப் பொருத்தமான பாத்திரம்தான் சிகண்டி. பீஷ்மரைக் கொல்வதற்காகவே பால் பேதங்கடந்து பிறந்த பிறவி. அம்புப் படுக்கையில் குரு§க்ஷத்திரப் போர்முனையில் வீழ்ந்து கிடக்கிறார் பிஷ்மர்.இந்த அம்புகள் அர்ச்சுனனுடையவைதானே என்று முணுமுணுக்கிறார். அது அறிந்து சிகண்டி ஏளனம் பொங்கச் சிரிப்பதுடன் காட்சிகள் விரிவு பெறுகின்றன. சிகண்டி பீஷ்மரைக் கொவதற்கென்றே பிறந்த ஜென்மம்.பிறவி பெண்ணாகக் காணப்பட , பால் நிலை கடந்து ஆணாக வளர்வது ஒரு வைராக்கியத்தில் நிகழ்கிறது. அஸ்திரப் பயிற்சி , வலிமை, அடங்கா வெறி ஆகியன ஒரு பெண்ணுள்ளிருந்து கிளர்தலே இங்கு குவிமையப்படுத்தப்படுகிறது.
பின்னால் ஆணுடை களைந்து பெண்ணான தோற்றம் அம்பாவின் பெயரில் தொடரும். பிறகுதான் தன் சகோதரர்களுக்காக அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று ராஜகுமாரிகளை பீஷ்மர் வில்முனையில் கடத்திச் செல்லப்படும் நிகழ்வு விவரிக்கப்படுகிறது. அஸ்தினாபுரம் கொண்டு செல்லப்பட்ட அம்பா , தான் சால்வன் என்ற அரசனைக் காதலிப்பதாக சொல்ல பீஷ்மர் பின் அவளைப் போக விடுகிறார். ஆனால் சால்வனும் அவளை ஏற்க மறுத்து விடுகிற கொடுமையைச் சுமத்தவே திரும்ப அஸ்தினாபுரம் போகிறாள். அங்கே சத்யவதியைக் கண்டு தான் தன்னைக் கவர்ந்து வந்த பீஷ்மரையே திருமணம் செய்யப்போவதாகச் சொல்ல , அவரது பிரமச்சாரிய விரதம் அவளுக்குச் சொல்லப்படுகிறது. மறுபடி அங்கிருந்து எங்கே செல்வதெனத் தெரியாமல் அம்பா வெளியேறி நதியாகிறாள்.
ஓரங்க ஒரு நபர்க் காட்சிக்கான உத்திகள் மூலம் எழுப்பப்படும் அரங்க அமைப்பு முறைமை வெகுவாய்ச் சிலாகிக்க வைக்கின்றன. ஆண் அணிகலன்களைக் களைந்து பெண் நகைகளை அணிவதன் சம நேரத்தில் கதை விவரிப்பும் சேர்ந்து மொழித் தேவைகளைச் சுருக்குதலென்று மேடையுத்திகளின் சாத்தியமான அளவு பயன் பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய விடயம் ஆளப்பட்ட மொழி. அது சிருஷ்டிகர தன்மையுடன் நாடகத்தில் தொழிலாற்றியதைச் சொல்லவே வேண்டும். நாடகக் கலைஞர் எஸ்.உஷாராணியின் நடிப்பு அற்புதமானது. ஒரு மணி நேரம் க்ரமித்திருந்தார் மேடையை. அவ்வப் பாத்திரங்களாய் மாறியதாகவே நான் உண்ர்ந்தேன். அஸ்தினாபுரம் விட்டு இறுதியில் வெளியேறும் அம்பா, நதியாய் மாறி நிற்கையில் நாடகம் நிறைகிறது.
இதன் பாதிப்பு பெரிது. புனைவின் அதிகபட்ச சாத்தியம் அடையப்பட்ட அண்மைக்காலத்தின் சிறந்த நாடகப் பிரதியாக இதனைக் கொள்ள முடியும்.
இது பதிவு அல்ல, பாதிப்பின் விவரிப்பு.
ஒரு சினிமா விமர்சனம்: பாப்கார்ன்
Popcornஇது உண்மையில் ஒரு சினிமா விமர்சனமில்லை. அண்மையில் நான் பார்த்த ‘பாப் கார்ன்’சினிமா என்னைப் பாதித்ததின் பதிவுகளே இவையும். ஒரு தமிழ்ச்சினிமா வேறுமாதிரி இங்கே உருவாக்கிவிட முடியாதது. தொழில் திறமைகளால் கட்டியமைக்கப்பட்ட இயங்கு தளங்கள் இங்கே . இதற்குள்ளிருந்து தமிழ்ச் சினிமாவின் தலையெழுத்தை மாற்றும் ஒரு திரையுலகப் படைப்பாளி மிகுந்த சிரமங்களைச் சந்திக்க நேர்கிறது. நாசர், மோகன் லால் , சிம்ரன், எஸ். ராமகிருஷ்ணன் கூட்டில் வெளிவந்திருக்கிற இந்த சினிமா , ஆரோக்கியமாய் இருக்கிறதென்பதை விடவும் , தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றும் முயற்சிகளிலொன்றாக வந்திருக்கிறதென்பதுதான் சரியானது. அதனாலேயே இது அக் கூட்டின் வெற்றியாகவும் ஆகிறது.
ஒரு இசைக் கலைஞனின் உருவம் மோகன் லாலுக்கு அற்புதமாய்ப் பொருந்தி வந்திருக்கிறது. உணர்ச்சியை எந்த இடத்திலும் தேவையான அளவுக்கு மீறிக் காட்டிவிடாத அவரது நடிப்பு குறிப்பிட்டாகவேண்டியது. மலையாள சினிமாவின் கொடை இது என்று நினைக்கிறேன். அவரது பேச்சு முறைகூட முதல் சில நிமிடங்களுக்கு தமிழ்ச் சினிமாவுக்கு பழக்கப்பட்ட மனதுக்கு ஒட்டிவர சிரமப்படுகிறது. பின் இசைவாகி , சினிமா முடிகிறவரையில் பிடித்துப் போகிறது; பாத்திரத்துக்கு இயைந்த பேச்சு முறையென்பதை மனம் அங்கீகரிக்கிறது.
சிம்ரனுக்கு இதுவரை ஏற்றிராத தாய் பாத்திரம். பாசத்தைப் பொழியும் பாத்திரமாக அது இல்லை. ஒரு ஆளுமைமிக்க கலைஞரின் தனித்துவம், வெறித்தனம், அன்பு, அது பறிபோய்விடுமோ என்ற பயம், பாசம் …. என்று பல உணர்வுகளையும் வெளிப்படுத்தும் பாத்திரம். அதனை அநாயாசமாக நடித்துக் காட்டுகிறார் சிம்ரன். அவர் நெற்றியின் அந்தவளவான பொட்டும் , புகழ் பெற்ற ஒரு இந்திய நடன கலைஞரை நினைவூட்டி சில படிமங்களைச் சிறப்பாகவும், சரியாகவும் உருவாகவே வைத்திருக்கிறது எனல் வேண்டும். இவ்வாறான கலைத்துவம் மிக்க இரு பாத்திரங்கள் எப்படிப் பேச முடியுமோ அப்படிப் பேச வைத்து, வசனத்தை உருவாக்கியிருக்கிறார்கள் நாசரும், எஸ்.ராமகிருஷ்ணனும். சில இடங்களில் உணர்வின் வலு, சொல்லாளுமைகளாலும் நேர்ந்ததை சுட்டிக்காட்டவே வேண்டும். ‘ஸ்பரிசம்’ சமஸ்கிருதச் சொல். மலையாளத்தில் மிகு புழக்கத்திலுண்டு. அதை ‘முதல் ஸ்பரிசம்’ என்று குறிப்பதன் மூலம் ‘முதல் உறவு’ குறிக்கப்படுகிறது இங்கே. முதல் உறவென்பதில் வரும் கொச்சைத்தனம் , முதல் ஸ்பரிசத்தில் இருக்கவே இருக்காது.
மோகன் லாலை விக்ரமாவாய் , சிம்ரனை யமுனாவாய் அழிய வைத்திருப்பதின்மூலம் நாசரின் வெற்றி அடையப்பட்டிருக்கிறது. மகளாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவரின் நடிப்பும் தம் மூத்த கலைஞர்களுக்கு குறைந்ததில்லை.நாசரின் வெற்றியது சூட்சுமத்தின் ஒரு கதவு, பாத்திரங்களுக்குப் பொருத்தமான கலைஞர் தேர்வு. சுமார் இரண்டு மணிநேரப் படம். ஒரு இலக்கியப் பிரதியை வாசித்த மனப் பதிவையும் பாதிப்பையும் இது ஏற்படுத்தியது எனக்குள். முதல் வரும் பத்து நிமிடங்கள் , படத்தின் வலு குறைந்த பகுதி. விக்ரமாவின் தங்கை பாத்திரம் பலஹீனம். அதன் உரையாடலும் நடவடிக்கைகளும் தமிழ்ச் சினிமாவின் மரபார்ந்த உறைவுகள்.
இன்னுமொன்று சொல்ல மறந்தது. யுவன்சங்கர் ராஜாவின் இசை. வார்த்தைகளாலின்றி , இசையாலுமின்றி , உணர்வு அடையும் பரவசத்தால் மட்டும் நெஞ்சி¢ல் இருக்க வைத்த இசை அது. கடைசிக் கட்டத்தில் கலைஞர்களோடு சேர்ந்து இசையும் நடிக்கிறது. சினிமாவின் தரத்தைஉயர்த்தியதில் அதற்கும் பெரும் பங்கு. முதல் பத்து நிமிஷங்களில் அதுவும்தான் தோல்வி. தொழில் நுட்பக் குறைபாடுகளும் அந்த பத்து நிமிடங்களில் கவனத்தை இடிக்கின்றன. மீதி நிமிடங்களின் அனுபவம் நெஞ்சை நிறைக்கிறது.
பதிவுகள் மார்ச் 2003 இதழ் 39
7. துக்கத்தின் வடிவம்
தேவகாந்தன் (சென்னையிலிருந்து)
இதுவரை இருந்த ஈழத்தின் யுத்த நிறுத்தமும் சமாதானப் பேச்சு வார்த்தைகளும் சம்பந்தமான பத்திரிகைப் பரபரப்புகள் ஓரளவு இங்கே – இந்தியாவில்- ஓய்ந்துவிட்டிருக்கின்றனபோல்தான் தெரிகின்றன. ஈழ அரசியலைவிட கிரிக்கெட் நல்ல வியாபாரம்தான். இந்துத்துவாவுக்கான அபரிமித ஆளும் வர்க்கத்தின் ஊக்குவிப்பு , எதிர்காலத்தில் மத நல்லிணக்கத்துக்கும், மனித நேயத்துக்குமே ஆப்பு வைப்பதாய் அமையக் கூடுமென்ற பயம் மனிதாயத நலம்விரும்பிகள் அனைவரிடமும் எழுந்துள்ளது. இதுவும் பத்திரிகைகளுக்கு இரண்டாம் பட்சம்தான்.
முன்பெல்லாம் , ‘தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்’ என்கிற வாதம் மேற்கொள்ளப்படும். பிறரின் சரிகளை – அதாவது பெரும்பான்மையின் சரிகளை – ஒப்புக்கொள்ள மறுக்கும் விவாதம் அது. ‘தான் பிடித்த முயலுக்குத்தான் நான்கு கால்கள்’ என்பதே இப்போது கவனமாகிற விவாதம். ஆட்சியாளர்கள் இதையே செய்கிறார்கள். அமெரிக்காவிலும் இந்தியாவிலும் இலங்கையிலும் இஸ்ரேலிலும் , ஏன் , ஆப்கானத்திலும் ஈராக்கிலும்கூட ஆட்சியாளர்கள் ‘தாம் பிடித்த முயலுக்குத்தான் நான்கு கால்கள் ‘ என்ற மாதிரியிலேயே சொல்லிக்கொள்கிறார்கள். இது இன்றைய கால கொயபல்ஸ் பிரச்சாரமுறை . இது தான் சொல்வதே சரியென்ற , சரியென்பதால் பெரும்பான்மையாகி அதுவே நியாயம் என்கிற விவாதம்.
இந்த வார ‘இந்தியா டுடே’ (12.03.03 ) யில் விருந்தினர் பக்கத்துக்கு ரவிக்குமார் எழுதிய ‘ தமிழ் பிராண்டு மதவாதம் ‘ என்கிற கட்டுரை முக்கியமானது. இது ஏற்கனவே வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு விதமாய் வெவ்வேறு பேரால் சொல்லப்பட்டதுதான் என்றாலும், நிறுதிஆட்டமாய் அதைத் திரட்டி பின்விளைவுகள் குறித்த அதிக எச்சரிக்கை செய்து காட்டியிருப்பது விஷேசம். ஆனாலும் , ‘தமிழ் சினிமா ஏற்படுத்தியுள்ள மந்தை மனோபாவம் ‘ என்று அவர் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. மந்தை மனோபாவத்தை தமிழ்ச் சினிமா பாவித்துக்கொள்கிறது என்பதுதான் சரி. சங்க காலம் தவிர்ந்து பிற காலங்களினூடாகப் பார்த்தாலே , தமிழன் மனத்தில் வளரத்தொடங்கிய வழிபாட்டு மனப்பான்மையை சுலபமாக ஒருவரால் புரிந்துகொள்ள முடியும். சோழர் காலத்தில் இருந்த அதே ராஜ பக்தி , பல்லவர் காலத்திலும் இருந்தது. பக்தி இலக்கிய காலமொன்று உருவாக்கம்பெற்றதை அங்கிருந்துதான் காணவேண்டும். பின்னால் விஜய நகர மன்னரின் அரசாட்சிக் காலத்திலும் நிகழ்ந்தது அதுவே. தனக்கு எஜமானன் இல்லாமல் , இந்த சாடிஸ்ட் மனோபாவமின்றி , தமிழனால் வாழ முடியாதென்கிற நிலை இன்று உருவாகியிருக்கிறது. இக் கருத்து சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்த தமிழனின் அரிப்புக்கு தமிழ் சினிமா தீனி போடுகிறது ; அவ்வளவுதான். இது ரவிக்குமார் எழுதியுள்ளதுபோல் ‘தமிழ் பிராண்டு’ தான். அதுவே இன்றைய சூழலில் ‘தமிழ் பிராண்டு மதவாத’ மாகிறது. இது உள்ளிருந்து எழும் எரிசக்தியில் எரியப்போகிறது. அதனால் பாதிப்புக்களும் பயங்கரமாகவே இருக்கும். அணைப்பதை நினைத்துப் பார்க்கவே முடியாதிருக்கப்போகிறது.
இப்போது வலு வீச்சாகியிருக்கும் அயோத்திப் பிரச்னை அடங்க , மறுபடி ஈழப் பிரச்னை இங்கே கவனமாகலாம். ஆனால் நாம் கவனியாது விட்டுவிட முடியாதல்லவா? தனக்குத் தனக்கென்றால் சுளகு படக்குப் படக்கென்று அடிக்குமாம். அது சரிதான். அவரவருக்கும் அவரவர் துக்கத்தின் வடிவம்தானே பெரிதாயிருக்கும்? அங்கே கட்சி அரசியலினதும் , தலைமையின் கர்வங்களினதும் ஒரு பாரிய பாதிப்பை இப்போது ஈழ சமாதான முயற்சிகள் சந்தித்துக்கொண்டிருக்கின்றன எனத் தெரிகிறது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடனான ஜனதா விமுக்தி பெரமுனவின் அண்மைய கூட்டெதிர்ப்பு முடிவு அபாயத்தின் அறிகுறி. ஆனாலும் செய்ய எதுவுமில்லை. மக்களை நம்புவதுதான் ஒரே வழி. தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் நாட்டை இன்னுமின்னும் யுத்த அழிவுக்குட்படுத்துவதில்லையெனவும், அதற்கான எந்த நடவடிக்கையையும் எதிர்ப்போமெனவும் உறுதி பூணாதவரை , அழிவை எப்படித் தடுக்க முடியும்?
நல்ல சூழ்நிலை வருவதாய்க் கருதி பல்வேறிடங்களில் புலம்பெயர்ந்திருந்த என் உறவினர் சிலரும் , நண்பர்கள் சிலரும் வடபகுதியிலுள்ள தத்தம் வீடுகளுக்குத் திரும்பியிருக்கிறார்கள். கடிதமெழுதினார்கள். பதிலெழுதினேன். இரண்டு மாதங்களுக்கு மேலே ஆயிற்று. பதிலுக்குப் பதில் வரவேயில்லை. மறுபடி எழுதிய கடிதத்துக்கும் பதிலில்லை. அங்கிருந்து பல்வேறு முகாந்திரங்களில் போய் வருகிறவர்களிடம்தான் ஓடியோடிப்போய் விசாரித்தேன். ‘ யுத்த நிறுத்தம் தொடர்கிறதுதான். ஆனாலும் மனதில் ஒரு நிம்மதியின்மை. சமாதான வழிக்கான எதிர்ப்புகளின் குரல் வலுப்படும்போதெல்லாம் பயம் எழவே செய்கிறது. அதுவும் யுத்த காலத்தைவிட அதிகமாயும், ஒரு பூடகத்திலாயும் எழுவதுதான் பெரிய துக்கம் ‘ என்று சலித்தார் ஒரு நண்பர்.
நான் மனிதனாய் இருக்கிறபடியால் தமிழனாகவும், அதனூடாய் இலங்கையனாகவும் உணர்ந்து கொள்கிறேன். இது இருக்கும்வரை என் நண்பர்களின் உறவினர்களின் என் மக்களின் அவலத்தை என்னால் உணரமுடியும்தான். இவை எனக்கு மிக்க கரிசனமானவை.
உறக்கம் வராது இந் நினைவுகள் எழுந்து அலைக்கழித்த ஒரு இரவில் என் துக்கம் இப்படி வடிந்தது:
எனினும்
இருந்துகொண்டுதான் இருக்கிறது
இன்னும் ஓர் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்
எங்கோ ஓர் மூலையில்
வாழ்வு குறித்து.
கொஞ்சம் அமைதிக்கும்
கொஞ்சம் நிம்மதிக்கும்
கொஞ்சம் உணர்விறுக்கம் தளர்ந்து வாழ்வதற்கும்
ஆசைகளின் பெருந்தவிப்பு.
ஆனாலும்
மீறி எழுகிறது
மனவெளியில் பய நிழல்களின்
கருமூட்டம்.
முந்திய காலங்களில்
மரணம் புதைந்திருந்த குழிகள்
எங்கே இருந்தன என்றாவது தெரிந்திருந்தது.
ஆனால் இப்போது…?
அதிர்வுகள் பரபரப்புக்கள் கூக்குரல்கள்
எதுவுமற்ற இந்தப் போரின்
மவுனமும் நிச்சலனமுமே
பயங்கரம் விளைக்கின்றன.
எங்கே வெடித்துச் சிதறும்
எங்கே அவலம் குலைந்தெழும் என்று
தெரியாதிருப்பதே பெரும் பதைப்பாய் இருக்கிறது.
மரணத்தின் திசைவழி தெரிந்திருத்தல்
மரண பயத்தின் பாதியைத் தின்றுவிடுகிறது.
இப்போதெல்லாம்
தூக்கம் அறுந்த இரவுகளும்
ஏக்கம் நிறைந்த பகல்களுமாயே
காலத்தின் நகர்ச்சி இருக்கிறது.
அதிர்வுகள் பரபரப்புக்கள் கூக்குரல்கள்
எதுவுமற்ற இந்தப் போரின்
மவுனமும் நிச்சலனமுமே
பயங்கரம் விளைக்கின்றன.
devakanthan@rediffmail.com